“பால் வீதியில் உள்ள கோடானு கோடி சூரியன்களில் ஒன்றான ஒரு சின்னச் சூரியனின் சின்னக்குடும்பத்தில் மூன்றாவதாக உள்ள பூமி என்னும் கிரகத்தில் சில நூறு சதுர அடிகளை கிரயம் செய்துகொண்ட ஒரே காரணத்தால், அதன் ஓனர்கள் என்னும் வீணர்கள் கத்தும் கணக்கென்ன பராபரமே…!” இந்த நவீன சித்தர் பாடலை பாடியவர் செந்தில். பாடப்பட்டவர் ஏகாம்பரம். செந்திலை இப்படி நெஞ்சோடு புலம்ப வைத்த ஏகாம்பரத்தின் வீட்டில்தான் செந்தில் தன் மனைவியோடும், மகனோடும், மகளோடும் மேற்கண்ட அவஸ்தை வரிகளை எழுதத் தோன்றும் அளவிற்கு வாழ்ந்து வந்தான்.
ஏகாம்பரம் மென்மையானவர்தான். ஆனால், அவர் மனைவி வாடகை வாசிகளின் மன நிம்மதியைக் குலைப்பதில் விசேஷ ஆற்றல் பெற்றிருந்தாள். மின் விளக்கு சிக்கனம் பற்றிப் பேசி விளக்கை அணைக்கச் சொல்லுவாள். அதை நம்பி இருட்டை அளித்தால் “எப்படி ஸ்ரீதேவி வருவா…?” என்று மகாலட்சுமிக்கு வழிகாட்டுபவளாக விளங்கினாள். இதேபோல தண்ணீர் பயன்பாடுகள், துணிகளைக் கொடியில் போடும்போது தள்ளி விடுதல், விருந்தினர் வந்தால் பதற்ற நிலையை உருவாக்குதல்… என்று நன்னடத்தை விதிமுறைகளை மீறி வந்தாள்.
எப்போது வேண்டுமென்றாலும் முறையான யுத்தம் துவங்கலாம் என்ற நிலை. பிரபஞ்சத்தில் சில நூறு சதுர அடிகளுக்குச் சொந்தக்காரர்களை புதிதாகத் தேட வேண்டும். செந்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்த ஹோட்டலுக்கு சாப்பிட வந்தபோது கதிரேசன் அறிமுகமானார். அவர் தனது ஓய்வு காலம் நெருங்குகிறது என்பதைக் குறிப்பிட்டு, வயதான காலத்தில் என்னை சொந்த ஊரில் இருக்க விடுங்கள்; வயதான என் அம்மா தனியே இருக்கிறாள்; அவளைக் கவனிக்கவும் ஆள் இல்லை என்று யாரை எல்லாமோ பிடித்து சென்னைக்கே வந்திருந்தார். நான்கைந்து மாத பரஸ்பரப் புன்னகைகளுக்குப் பிறகு அவரிடம் செந்திலுக்கு தன் பிரச்னைகளைப் புலம்பும் அளவிற்கு நட்பு வளர்ந்திருந்தது.
குறிப்பாக வாடகை வீட்டுப் பிரச்னைகள். ஒருநாள் கணக்குப் போட்டுப் பார்த்தபோது இதுவரை சிறுவன் செந்திலாக 11 வீடுகளையும், இளைஞனாக 9 சிற்றறை மற்றும் 6 கூரை போர்த்திய சுவர்களையும், கணவனாக 12 தங்கும் இடங்களையும் காலி செய்திருக்கிறான். அதாவது இந்த முப்பது வயதில் 38 இருப்பிடங்கள்..! இதில் எல்லாம் கின்னஸ் ரிக்கார்டுகள் இருக்குமா, என்ன..? வெறும் செங்கல்லால் கட்டப்பட்ட அமைப்புகள்; சிந்து சமவெளி நாகரிகம் அழியும் போது ‘‘இது மட்டும் எப்படித் தப்பியது..?” என்று நினைக்கத் தோன்றும் குகைகள்; கொசுக்கள் உருவாக்கிய சாக்கடைக் காலனிகளுக்கு அருகில் உள்ள வீடுகள்… தரகர் ஏமாற்றிய வீடுகள், கண்களை ஏமாற்றிய கட்டடங்கள், புலன்களை ஏமாற்றிய வீடுகள்… ஆத்மாக்கள் காலி செய்யாத வீடுகளும் இருந்தன.
அவற்றைவிட அவை பற்றிய கதைகள் சொன்ன ஆட்கள் கிளப்பிய பீதியால் காலி செய்த வீடுகள்… ‘‘தங்கமான டைப் ஆத்மாங்க… கணவனும், மனைவியும் செக்ஸ் வச்சுக்கறப்ப ஆனந்தமா கூரை மேல இருந்து பாத்துக்கிட்டு இருக்கும்…” நல்ல வீடுகளும், நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களது வீடுகளில் அதிகநாள் தங்க கொடுப்பினை இருப்பதில்லை. “தப்பா நினைச்சுக்காதீங்க. மகன் வர்றான்… வீடு தேவைப்படுது…” இதுவரை ஏற்பட்ட அனுபவத்தில் வசிப்பிடம் என்பது கூரையின் கீழுள்ள பகுதியாகவும், இயற்கை உபாதைகளையும், வாழ்நாளையும் கழிக்கும் இடமாகவுமே இருந்து வந்திருக்கிறது.
ஆனால், வீடு என்பது இவற்றை மட்டும் நிறைவேற்றும் இடம் அல்லவே… அவனது கனவு வீடு காற்றும், வெளிச்சமும் கோபிக்காத இடமாக எளிமையாக இருந்தது. அதன் சுவர்கள்கூட வாழ்வின் ஒரு பாத்திரமாக இருந்தது. பூவுலகின் அகண்ட வெளியில் அவனும் மேற்கூரை இல்லாத சில நூறு சதுர அடிகளை வாங்கிப் போட்டிருக்கிறான். அவனது கமிட்மென்ட்டுகள் எப்படியும் கி.பி 2115ல் சிறிது குறைய வாய்ப்பிருப்பதாலும், அதற்குள் அவன் வாங்கிப் போட்ட இடத்தில் மனித சஞ்சாரம் ஏற்பட்டிருக்கும் என்பதாலும்… அந்தக் கனவு வீடு கிடைக்காவிட்டாலும்கூட குறைந்த பட்சம் ஒரே வீட்டில் இரண்டு வருடங்கள் இருக்கும்படியான வீடு அமைந்தால், அவனை விட சந்தோஷமான மனிதன் உலகில் இருக்க முடியாது.
அப்போதுதான் கதிரேசன் “எனக்குச் சொந்தமான வீடு ஒண்ணு காலியாகுது… வேணும்னா பாருங்க…” என்று ஏகாம்பரத்தின் இடர்ப்பாடுகளிலிருந்து அவனை மீட்டெடுத்தார். வீடு சுமார்தான். ஆனால், வேறு வழியில்லை. கதிரேசனின் முன்னோர்கள் தங்களின் மற்றும் பிறரின் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, நான்கு வீடுகளை நகரின் பிரதான இடத்தில் கொடுத்து விட்டு காலஞ் சென்றிருந்தார்கள். நான்கு வீடுகளில் ஒன்றில் செந்தில். பிறிதொன்றில் வேறொரு வந்தேறி. இன்னொன்றில் கதிரேசனின் குடும்பம். எஞ்சிய ஒன்றில் கதிரேசனின் அம்மா. ஒருநாள் பேச்சுவாக்கில் “வாங்க, அம்மாவைப் பாத்துட்டு வரலாம்…” என்று அவனையும் அழைத்துச் சென்றார் கதிரேசன்.
எப்படிப் பார்த்தாலும் ஒரு தனி மனுஷிக்கு அது அரண்மனை. பெரிய ஜன்னல்கள், உயரமான கூரைகள், தரையில் டைல்ஸ், சுவர்களில் தொங்கும் முன்னோர்கள், காந்தியடிகள், நேரு என 1950களில் வீடு இருந்தது. அம்மாவிற்கு நைட்டி அணிய விருப்பமில்லைதானாம். ஆனால், தினந்தோறும் பார்த்துச் செல்லும் நர்ஸ் வசதிக்காக அணிவித்திருக்கிறாள். எல்லாமே படுக்கையில்தான். அருகிலுள்ள செட்டியார் மெஸ்ஸில் இருந்து ஆகாரம். அம்மாவை சிரமப்பட்டு எழுப்பி உட்கார வைத்தார் கதிரேசன். அறிமுகப்படுத்தி வைத்தார். மூத்திர நாற்றம், கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம், கண்ணுக்கு ஆபரேஷன் செய்ததால் மாட்டி விடப்பட்டிருக்கும் கறுப்புக் கண்ணாடி என்று முதலில் அவளைப் பார்த்து எழுந்த பரிதாபம் கொஞ்ச நேரத்தில் பொறாமையாக மாறியது.
அவள்… அவள்… ஒரே வீட்டில் 75 வருடங்களாக இருப்பவள்! இதுவரை குடியிருந்த எல்லா வீடுகளிலிருந்தும் ஒரே நேரத்தில் கழுத்தைப் பிடித்துத் தள்ளப்பட்டது மாதிரியான அதிர்ச்சி. பெட்டி, படுக்கையைத் தூக்காமல், பொட்டலம் கட்டாமல்… ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மா! அலைகள் வரும்போது குழந்தைகள் கட்டிய வீடுகளை ஜென்மஜென்மமாய்ப் பாதுகாத்தவள்..! வீடுகளை காலி செய்ய டெம்போ டிரைவர்களின் தொலைபேசி எண்களை அறியாதவள்; பழைய அட்டைப்பெட்டி மற்றும் கயிறுகளைப் பத்திரப்படுத்தும் தேவை இல்லாதவள்! அந்த அம்மாவிற்கு அந்தக்கால வழக்கப்படி சின்ன வயதிலேயே கல்யாணம். 13 வயதில் இந்த வீட்டிற்கு வந்தவள். அன்றிலிருந்து இதே தெரு, இதே வீடுதான்.
கதிரேசன் பிறந்த ஓரிரு வருடங்களில் அப்பாவும் இறந்துவிட, அவள் கதிரேசனை அதே வீட்டில்தான் வளர்த்திருக்கிறாள். பிற்பாடு கதிரேசன் கல்யாணம், வேலை காரணமாக தனிக்குடித்தனம், வெளியூர் என்று சென்றுவிட்டாலும் கூட அவள் பிடிவாதமாய் இதே வீட்டில் தொடர்கிறாள். கதிரேசன் தன்னுடன் வந்து இருக்கச் சொல்லி வற்புறுத்தியும், அவள் தன் கணவன் வாழ்ந்த வீட்டிலேயே இறுதிவரை இருந்து விடுவதாகச் சொல்லிவிட்டாள். ‘‘அப்பா மேல அம்மாவுக்கு அவ்வளவு அன்பு…” என்றார் கதிரேசன். “இப்படிச் சொன்னா என்ன செய்யறது சொல்லுங்க? பிறகு நானும் விட்டுட்டேன்…” அவர் சொன்னது எதுவும் செந்திலின் காதில் விழவே இல்லை.
ஒரே வீடு. 75 வருடங்களாய் ஒரே வீடு. ஆசீர்வதிக்கப்பட்டவள், அவளது கணவன் இறந்த பிறகு அவனது நினைவுகளில் ஆழ்ந்து இருவரும் சேகரித்த சந்தோஷங்களை அங்கேயே விட்டு வர மனமின்றி அவற்றுக்குக் காவல் காக்கும் ஒரு காதல் தேவதையும் கூட. அவள் அங்கிருந்து வெளியே வந்தால் அங்கேயே மிதந்து கொண்டிருக்கும் குரல், புன்னகை, நினைவுகள்… எல்லாம் அவளைத் தேடி பாவம், இறந்தே போகும். ஒரு முதியவளைப் பார்த்து பொறாமை கொள்ளும் அளவு அவன் தரம் தாழ்ந்தவனில்லை என்று அவன் தன்னை நம்பியிருந்தான். ஆனால், பொறாமை நோய் தாக்கியதை அவன் ஒப்புக்கொண்டான்.
அவள் வாழ்வில் நல்லது, கெட்டது எல்லாவற்றையும் பார்த்து யாவும் ஒன்றே என்று கருதும் அனுபவங்களை தன் முகத்தில் சுருக்கங்களாகக் கொண்ட, சற்று வேகத்துடன் காற்றடித்தால் பறந்து போகிற நிலையில் இருக்கும் பரிதாபப் பெண்மணி. மயானத் தூதுவர்களின் அழைப்பு மணியை எதிர் நோக்கி இருக்கும் அவளைப் பார்த்தா, தான் பொறாமை கொள்ள வேண்டும்..? செந்திலுக்கு அவமானமாக இருந்தது. கதிரேசனுக்கு தனது இந்தப் பொறாமை தெரிந்து விடாமல் இருக்க அவன் படாத பாடு பட்டான். அதில் அவன் வெற்றி பெற்றாலும், தனது பொறாமை தன் மனசாட்சிக்குத் தெரிந்த அவமானத்தில் குறுகிப்போனான்.
கதிரேசனுக்குத் தன் அம்மாவைப் பற்றி பெருமையை அதிகரிக்கும் அதே வேகத்தில் செந்திலின் – ஒரே இடத்தில் 75 வருடங்கள் – என்ற பொறாமை அதிகமாகிக் கொண்டே இருந்தது. தெருவின் பெயர் விளங்கக் காரணமாய் கோயிலில் வீற்றிருக்கும் விநாயகர், தன் தெரு பிரஜைகளைப் பற்றி ஏதாவது சந்தேகம் என்றால் இவளிடம் கேட்டால் கூட ஆச்சரியம் ஏதுமில்லை. ஏறக்குறைய அந்தத் தெருவின் மழை, காற்று, வெயில், பனி கூட இவளுக்குப் பரிச்சயமாகி இருக்கும்… ஒரே வீடு. ஒரே வீட்டில் 75 வருடங்கள்… உயிரற்ற அந்த வீட்டை உயிருள்ள பாத்திரமாய் மாற்றி, அதனுடன் பேசிக் கொண்டிருப்பவள். கண்டிப்பாக அந்த வீட்டின் செங்கற்கள், ஜன்னல் கம்பிகள், தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ்களின் ரேகையைக் கூட அவள் அறிந்திருப்பாள்.
கொடுத்து வைத்தவள்..! வீட்டை மாற்றுவது என்பது இன்னொரு உலகத்தைப் புதிதாக உருவாக்குவதைப் போன்றது என்பதால் அந்த வேதனையை அறியாதவள். அங்கு சுவாசம் கொண்டு புழங்க கேஸ் இணைப்பை மாற்றி, கேபிளுக்குச் சொல்லி, பேப்பர்காரனுக்குச் சொல்லி, பால்காரரைத் தேடி, வாக்காளர் அட்டை மாற்றி, சில நேரம் பள்ளிக்கூடம் தேடி, சிகரம் வைத்தாற்போல் ரேஷன் கார்டை மாற்றி… இன்னபிற வசதிகளையும் இடம் மாற்றி, நோகும் சாபம் பெறாதவள்… பேறு பெற்றவள்..! அப்போது ஒலித்த தன் செல்லை எடுத்துக்கொண்டு கதிரேசன் நகரவும் செந்தில் தனியே இனிய வரங்கள் வாங்கி வந்த முதிய தேவதையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இவளது சுவாசத்தின் அருகாமை கூட தன் மோசமான ஊழை மாற்றலாம். அவள் தன் கண்களிலிருந்து வடிந்த நீரைத் துணியால் துடைத்துவிட்டு ‘‘கதிர் உன் ஃப்ரண்டா…?’’ என்றாள். முதலில் அவளது முதுமைமொழி புரியவில்லை. ‘‘ம்ம்…’’ ‘‘நீயாவது அவனுக்கு புத்தி சொல்லக்கூடாதா… பெத்த அம்மாவை இப்படி தனியா போட்டுட்டு இருக்கறான்…!’’ என்றாள் சிரமத்துடன். செந்திலின் வார்த்தைகள் உலகம் வற்றியது. ‘‘அவர் கூப்பிட்டாராமே… நீங்கதான் போகலியாம்…” “ம்…” கூப்பிட்டான். ஏதோ ஒப்புக்கு.
“நானும் ஏதோ நெனைப்புல என் மாப்ளை வாழ்ந்த வீட்ல இருப்பேன்னு எப்பவோ சொல்லியிருப்பேன்… அதுக்காக அப்படியே விட்டுடறதா… வாம்மான்னு நாலு திட்டு திட்டி வலுக்கட்டாயமா கூட்டிட்டுப் போயிருக்க வேண்டாம்…?”
“…”
“எப்ப சொன்னேன்னே நினைவில்லியே? அப்படியே சொல்லியிருந்தாலும் அத இத்தனை வருசமா சொல்லிக்கிட்டு, அதையே பிடிச்சுக்கிட்டு இருந்தா எப்படிப்பா..? அதை சாக்கா வச்சுக்கிட்டு மாப்ளையும், பொண்டாட்டியும் என்னை பேசவிடாமப் பண்ணினா எப்படிப்பா? வெறும் கல்லையும், மண்ணையும் வச்சுக்கிட்டு நான் மட்டும் இங்க தனியே இந்த வீட்டுல என்ன பண்றது, சொல்லு… இந்த வீட்டு சுவர்களை யாராலயும் இடிக்க முடியாது… இத்தனை வருஷமா என் கண்ணீர் பட்டுபட்டு அது ரொம்ப ஸ்ட்ராங் ஆகியிருக்கும்… இந்த வீடே எனக்குப் பிடிக்கலை… இது இல்லாம இருந்திருந்தா, என் மகனோடவே நான் இருந்திருப்பேனே!” செந்தில் தளர்ந்து போய் அவளது கட்டிலைப் பிடித்துக்கொண்ட கணத்தில், பிரபஞ்சத்தில் சில நூறு சதுர அடிகளும், அவளும் சுற்றத் துவங்கினார்கள். தனியே…
– Apr 2018