பிரதாப முதலியார் சரித்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2024
பார்வையிட்டோர்: 1,375 
 
 

(1879ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். அதுவரை செய்யுள் வடிவ புனைகதை இலக்கியங்களே இருந்துகொண்டிருந்த தமிழிற்கு உரைநடை வடிவிலான புனைகதை இலக்கிய வகை இந்நூல் வழியாக அறிமுகமானது. அவ்வகையில் இது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் முதலாவதாக இடம்பெற்ற நாவல்.

அதிகாரம் 26-30 | அதிகாரம் 31-35 | அதிகாரம் 36-40

31-ஆம் அதிகாரம்

கனகசபையின் கலியாணம் – கலியாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்து விட்டது

முந்தின அதிகாரத்தில் சொல்லிய படி தீர்மானம் செய்த பிறகு, கவர்னர் எங்களை நோக்கிச் சொல்லுகிறார்:- இப்போது விசாரணை யான சங்கதியில் அசம்பாவித மென்று நினைக்கும் படி யான சில விஷயங்கள் கலந் திருந்தாலும், அந்த விஷயங்க ளெல்லாம் வாஸ்தவ மென்றும், பாளையதார் கக்ஷி உண்மையான தென்றும், நிர்த்தாரணம் செய்திருக்கிறோம். பாளையதார் பிள்ளை இறவாம லிருக்க, அந்தப் பிள்ளை இறந்தது போல அவரு டைய சகோதரன் மாமாலம் பண்ணி, அந்தப் பிள்ளைக்கு பதிலாகப் பாற்காரி பிள்ளையை அடக்கம் செய்ததும், அந்த மாறுபாடு பாளையதார் குடும்பத்தில் ஒருவருக்கும் தெரியாமற் போனதும், பாளையதார் தம்பி கொலை செய் வதற் காக முத்து வீரனிடத்திற் கொடுத்த பிள்ளையை, அவன் கொலை செய்யாமல் சாந்தலிங்கம் பிள்ளை வசத்தில் ஒப்புவித்து, சாந்தலிங்கம் பிள்ளை தன் சொந்தப் பிள்ளை யைப் போல் வளர்த்ததும், அந்த இரகசியம் அநேக வருஷ காலம் பாளையதார் முதலானவர்களுக்குத் தெரியாம லிருந்ததும், சாதாரணமாய் நடக்கக் கூடுமான காரியங்கள் அல்ல. ஆயினும், அவைக ளெல்லாம் வாஸ்தவ மென்று உங்க ளுடைய பத்தினிகளின் ஊக்கமான முயற்சி யினால், நாம் கண்டு பிடித்துக் கொண்டோம். முக்கிய மாகச் சத்தியபுரிச் சுந்தரத்தண்ணிக்கு நீங்கள் எல்லாரும் கிருதக்ஞர்களா யிருக்க வேண்டும். வசன சாதுரிய மாயும், மாதுரியமாயும், மிருது பாஷிதமாயும், சார சங்கிர மாயும் சுந்தரத்தண்ணி நியாயங்களை எடுத்து காட்டின படியால், நாம் உண்மையைக் கண்டு கொள்வது அதி சுலபமா யிருந்தது. இப்படிப் பட்ட நியாயவாதினி உங்களுக்குக் கிடைத்தது, உங்க ளுடைய அதிர்ஷ்ட விசேஷந்தான். ஐரோப்பாவிற் கூடச் சுந்தரத்தண்ணியைப் போல் ஆயிரத்தில் ஒரு ஸ்திரீ அகப்படுவது அருமை. சுந் தரத்தண்ணியைத் தாரமாகப் பெற்ற புருஷன், புருஷனே யல்லாமல், மற்ற ஆண் மக்க ளெல்லாரும் வீண் மக்கள் தான். அழகும் துக்கமும் உருவெடுத்து வந்தது போல, உங்க ளுடைய ஸ்திரீகள், குழந்தைகள் சகிதமாய் நம் மிடத்தில் வந்து, அபயப் பிரதானம் கேட்டதும், அவர் களின் மத்தியில் சுந்தரத்தண்ணி எழுந்து நின்று கொண்டு நியாயவாதம் செய்ததும், நம் முடைய புத்தியிலும், அப்போது கூட இருந்தவர்க ளுடைய புத்தியிலும், நன்றாய்ப் பதிந்துப்போ யிருக்கிறது. அந்தப் பிரகாரம் ஒரு படம் எழுதும்படி உத்தரவு செய்திருக்கிறோம். அது முடிந்த வுடனே, உங்களுக்கும் சில படங்கள் கொடுக்கப் படும்” என்றார். பிறகு அவர் தேவராஜப் பிள்ளையை நோக்கி, “உம்முடைய புத்திரன் கலியாணத்தை இனி நீர் தாழ்க்காமல் உடனே நிறைவேற்ற வேண்டிய கிருக்ஷி செய்யலாம்” என்று உத்தரவு கொடுத்து விட்டு, சென்னை நகரத்துக்குப் போய் விட்டார். 

கவர்னர் போன பின்பு, விடுதலையான எல்லாப் பிரபுக்களும், அவர்களுடைய குடும்பங்களும்,ஆதியூரிலும் சுற்றுக் கிராமங்களிலும் வசிக்கிறவர்களும், சமுத்திரம் கரை புரண்டு வருவது போல், கூட்டம் கூட்டமாய்த்  ே தேவராஜப் பிள்ளை வீட்டுக்கு வந்து, சந்தோஷம் கொண் டாடினார்கள். அவர்க ளுடைய கொண்டாட்டமே ஒரு பெரிய திருவிழா வாகவும், அந்தத் திருவிழா வுக்குத் தேவராஜப் பிள்ளை கிருகமே ஆலய மாகவும், அந்த ஆல யத்துக்கு என் தாயாரே தெய்வ மாகவும் இருந்தாற்போல, சகலரும் என் தாயாரை வாழ்த்தி, வணங்கினார்கள். அந்நிய புருஷர்களுக்கு என் தாயா ருடைய தரிசனம் கிடைக்காமையினால், அவர்கள் எல்லாரும், என் னுடைய தாயா ருடைய ஸ்தானத்தில் என்னையும் என் தகப்பனா ரையும் வைத்து, எங்களை அபரிமிதமாகப் புகழ்ந்தார்கள். தேவராஜப் பிள்ளையும் மற்றவர்களும் செய்த ஸ்தோத்திரங் களினால், என் தாயாருக்குச் சலிப்பும் சங்கோசமும் ண்டாகி, தேவராஜப் பிள்ளையைப் பார்த்துச் சொல்லு கிறார்கள்:- 

“ஐயா! நமக்கு இன்பம் வந்தாலும், துன்பம் வந் தாலும், சகலமும் கடவுளது செயலே யன்றி, நம் முடைய செயல் ஒன்று மில்லை. மேகத்தி லிருந்து விழுகிற மழைத் துளிகள் இத்தனை யென்றும், பூமியிலும் ஆகாயத்திலும் ருக்கிற அணுக்கள் இத்தனை யென்றும், அவர் கணக்கு வைத்திருக்கிறார். அவருக்குச் சித்தமானால், அணுவை மலை யாக்குவார்; மலையை அணு வாக்குவார். அவ ருடைய கிருபா கடாக்ஷம் இல்லாமல், நமக்கு யாதொரு அநுகூலம் உண்டாகக் கூடுமா? நானும், மற்ற ஸ்திரீ களும், கடவுள் கொடுத்த வாக்கைக் கொண்டும், அவர் கொடுத்த புத்தியைக் கொண்டும், ஏதோ சில முயற்சிகள் செய்தோம். உங்கள் பக்ஷத்தில் நியாயம் இல்லாமலும், தெய்வானுக்கிரகம் இல்லாமலும் இருக்கிற பக்ஷத்தில், நமக்கு ஜெயமுண்டாகுமா? ஆகையால், கடவுளே ஸ்தோத் திரத்துக்குப் பாத்திரரா யிருக்கிறார். அந்த ஸ்தோத்திரத்தை நான் பெற்றுக் கொண்டால், கடவுளுக் குரிய ஸ்தோத்திரத்தை நான் கவர்ந்து கொண்டது போல் ஆகு மல்லவா? அன்றியும், எனக்குப் பலரும் சொல்லுகிற புகழ்ச்சியானது. என் னிடத்தில் ஆணவத்தையும், இறுமாப்பையும், ஆத்ம ஸ்தளத்தியத்தையும் விளைவிக்கு யென்று பயப்படுகிறேன். ஆகையால், எனக்குப் பிதா ஸ்தான மாகிய நீங்கள், கிருபை கூர்ந்து, இனி என்னை ஒருவரும் புகழாத படி செய்ய வேண்டு மென்று பிரார்த் திக்கிறேன்” என்றார்கள். உடனே, தேவராஜப் பிள்ளை என் தாயாரை நோக்கி, “அம்மா! நீங்கள் சொல்லுகிற படி, எல்லாம் கடவுள் செயல்தான். அவர் அசையாமல் அணுவும் அசையா தென்பது நிச்சயமே. ஆனால், கடவுள் அநேக நன்மைகளை மனுஷர்களைக் கொண்டு செய்விக்கிற படியால், அவர்களுக்கும் நன்றி யறிந்த ஸ்தோத்திரம் செய்ய வேண்டியது முக்கியம். ஆனால், அந்த ஸ்தோத்தி ரம் தங்களுக்கு அப்பிரியமா யிருக்கிற படியால், இனிமேல் எங்க ளுடைய நன்றியறிதலை வாயினால் வெளிப்படுத்தாமல், மனதுக் குள்ளே வைத்துக் கொள்வோம்’ என்றார். அவர் என்ன சொல்லியும், இதர ஜனங்கள் கேளாமல், அநேக நாள் அளவும் அவர் வீட்டுக்கு வருகிறதும், என் தாயாரைப் பரோக்ஷமாயும் அபரோக்ஷமாயும் வாழ்த்து கிறதுமே, மணியமா யிருந்தார்கள். 

கனகசபையின் கலியாண விஷயத்தில் நேரிட்ட சகல விக்கினங்களும் நிவாரணம் ஆகி விட்டதால், அந்தக் கலி யாணத்துக்கு வேண்டிய கிருஷிக ளெல்லாம் செய்து, அது வும் நிறைவேறிற்று. எப்படியெனில், ஊர் முழுவதும் மகர தோரணங்கள் கட்டி, வாழை, கமுகுகள் நாட்டி, பந்தல் அலங்கரித்து, மணமகனையும் மணமகளையும் சுகந்த பனி நீரால் திருமஞ்சனம் ஆட்டி, திவ்யமான வஸ்திராபரணம் கள் பூட்டி, ஸ்வர்ண மய மாயும் நவ ரத்தின கஜித மாயும் அலங்கரிக்கப்பட்ட கலியாண மண்டபத்தில், கோடி சூரி யர்கள் போல தீப கோடிகள் பிரகாசிக்க, சமுத்திர கோஷம் போல் நானா பேத மங்கல வாத்தியங்கள் முழங்க மயிற் கூட்டங்கள் போல் நாட்டியப் பெண்கள் நடனம் செய்ய, குயிற் கூட்டங்கள் போற் பாடினிகள் சுப சோப னம் பாட,கோ தாளம் பூ தானம் முதலிய மா தானங்க ளுடன், கனகசபையின் கலியாணம் நடந்தேறியது. நாங் கள் செய்ய வேண்டிய சீர் வரிசைக ளெல்லாம் ஏராள மாகச் செய்தோம். 

தேவராஜப் பிள்ளை கிருகத்தில், கனகசபையின் கவி யாணத் துடன், இன்னும் மூன்று கலியாணங்கள் நடந் தன. அந்த நாலு கலியாணங்களும் ஒரே முகூர்த்தத்தில் நடந்த படியால், புரோகிதப் பிராமணர் நாலு மங்கிலி யங்களையும் வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாக எடுத்து, அபிமந்திரித்து, ஆசீர்வதித்து, மாப்பிள்ளைகள் கொடுக்க, அவர்கள் வாங்கி, பெண்கள் கழுத்திலே கட்டி கையில் னார்கள். இந்தப் பிரகாரம், கனகசபை உட்பட மூன்று மாப்பிள்ளைகள் மங்கிலியம் சூட்டினார்கள். ஒரு மாப்பிள் ளையினுடைய மங்கிலியத்தைப் புரோகிதர் மடியிலே வைத்துக் கொண்டு மறந்து போய் விட்டதால், அந்த மாப்பிள்ளை தாலி கட்ட வில்லை. அதை, அந்த மாப்பிள்ளை யாவது, பெண் ணாவது, மற்றவர்க ளாவது, கவனிக்க வில்லை. இராமுகூர்த்தம் ஆன தால், எல்லாக் காரியங்க ளும் சரியாய் நடந் திருக்கு மென்று நினைத்துக் கொண் டார்கள். அன்றைக்கு நடக்க வேண்டிய கலியாணச் சடங்குக ளெல்லாம் முடிந்து, புரோகிதர் வீட்டுக்குப் போன பிறகு, ஒரு மங்கலியம் தன்னுடைய மடியி லிருப் பது அவருக்குந் தெரிந்து, அவர் உடனே திடுக்கிட்டு “ஐயையோ! இந்த விஷயம் விடிந்த உடனே கலியாணக் காரர்களுக்குத் தெரிவித்தால், அவர்கள் என்னைச் சும்மா விட மாட்டார்களே! நான் என்ன செய்வேன்!” என்று அவர் ஆலோசித்து, கடைசியாய்க் கலியாண வீட்டுக்குப் போய்த் தாமும் படுத்திருந்து, நடுச்சாமத்தில், எல்லாரும் உறங்குகிற சமயத்தில், அந்தத் தாலியைப் பெண் கழுத் திற் கட்டி விடுகிறதென்று, நிர்த்தாரணம் செய்து கொண் டார். அவர் வீட்டில் இராப்போஜனம் செய்த பிறகு புறப் பட்டு முகூர்த்த வீட்டுக்குப் போய், தாமும் ஒரு பக்கத் திலே படுத்துக் கொண்டார். அவர் அர்த்த சாமத்தில் நிசப்த மாக எழுந்து, கலியாணப் பெண்கள் படுத்துத் தூங்குகிற அறைக்குள் நுழைந்து, யாருடைய கழுத்தில் தாலி யில்லாமல் வெறும் கழுத்தா யிருக்கிற தென்று நிச்ச யிக்கும் பொருட்டு, எல்லாப் பெண்களுடைய கழுத்து களையும் ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்துக் கொண்டு வந்தார். அந்தப் பெண்களுடனே கூட விதந்துவாய்ப் போன ஒரு பெண்ணும் படுத்துத் தூங்கினாள். அவள் கழுத்தில் தாலி யில்லாம லிருந்ததால், அவள்தான் அந்தக் கலியாணப் பெண் ணென்று புரோகிதர் நிச்சயித்துக் கொண்டு, அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்டி, அமங் கலையைச் சுமங்கலை யாக்கி விட்டார். விடிந்த உடனே, கலியாணப் விதந்து கழுத்தில் தாலி யிருப்பதையும், பெண் கழுத்துத் தாலி யில்லாமல் வெறுமையா யிருப்ப தையும், எல்லாரும் பார்த்து, ஆச்சரியம் அடைந்து, இது வெளி யானால் வெட்கக் கேடு என்று நினைத்து, சில பெண் கள், அந்த விதந்து கழுத்தி லிருந்த தாலியை அவிழ்த்து, மணப் பெண் கழுத்திலே கட்டி விட்டார்கள். புரோகிதர் செய்த மாறுபாட்டை அவர் என் னிடத்தில் ஒப்புக் மட்டும் கொண்ட படியால், அந்த இரகசியம் எனக்கு தெரியும்; வேறொருவருக்கும் தெரியாது. இந்த விஷயத்தில், எனக்கு இரண்டு சாஸ்திர சங்கைகள் இருக்கின்றன. முதலாவது, சாஸ்திரப் படிக்கும், தேசாசாரப் படிக்கும், பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்ட வேண்டியது அதி வாரிய மான படியால், அந்தப் படி தாலி கட்டப் படாத மேற்படி கலியாணம் செல்லுமா செல்லாதா? அது செல்லாம லிருக்கிற பட்சத்தில், அநேக புத்திர பௌத்திரர்களைப் பெற்றுக் கொண்டு, இப்போது க்ஷேமமாய் வாழ்ந்து கொண் டிருக்கிற அந்த ஸ்திரீயையும், புருஷனையும், அவர்க ளுடைய சந்ததிகளையும், இனிமேல் என்ன செய் கிறது? இரண்டாவது, அந்தப் புரோகிதர் விதந்து கழுத்தில் தாலி கட்டின படியால், அது பிரம சமாஜத்தார் பிரசங்கித்து வருகிற புநர் விவாகம் ஆகுமா? இந்தக் கேள்விகளுக்கு, தர்ம சாஸ்திர பண்டிதர்கள் தக்க விடை கூறுவார்க ளென்று நம்புகிறேன். 

கனகசபையின் சுயம் வரம் முடிந்து, சில நாட் சென்ற பின்பு, என் தந்தையாரும் மாமனாரும் ஊருக்குப் போக உத்தரவு கேட்டார்கள். உடனே, தேவராஜப் பிள்ளை அவர்களைப் பார்த்து, “ஐயா! நீங்கள் இங்கே யிருந்தது எங்களுக்குப் பெரிய அரணும் கவசமும் போல் இருந்தது. உங்களுடைய பிரிவை நினைக்கும் போது, எனக்கு மனசு பகீ ரென்கிறது. அந்த விசாரணைக் கர்த் தர்கள் அநியாயத் தீர்மானம் செய்த காலத்தில், நீங்களும் சுந்தரத் தண்ணியாரும் இவ்விடத்தில் இல்லாம லிருந் தால், எங்களுடைய கதி எப்படி முடிந்திருக்கும்? நீங்கள் போன பிற்பாடு, நாங்கள் காவல் இல்லாத நகரம் போலவும், இறகில்லாத பக்ஷிகள் போலவும், மனம் வருந் துவோம்” என்றார். உடனே, என் தகப்பனார் அவரை நோக்கி, “இனிமேல், கடவுள் உங்களுக்கு ஒரு ஆபத்தும் வர ஒட்டார். நாங்கள் எங்கள் ஊரை விட்டு வந்து வெகு நாள் ஆகிற படியால், தாங்கள் கிருபை செய்து, உத்தரவு கொடுக்க வேண்டும்” என்றார். உடனே கனகசபை எழுந்து, என் தகப்பனார் பாதத்தில் விழுந்து, “ஐயா! நீங்கள் இங்கே விஜயம் செய்த பிற்பாடு, நான் இரண்டு ஆட்டில் ஊட்டின குட்டி போல, எவ்வளவோ மன மகிழ்ச் சியா யிருந்தேன். இப்போது, நீங்கள் எல்லாரும் ஒரு மிக்கப் போய் விட்டால், நான் எப்படிச் சகிப்பேன்? அண்ணனும் அண்ணியு மாவது, இன்னும் சில நாள் இவ் விடத்தில் இருக்கும் படி உத்தரவு செய்ய வேண்டும். ஒரு மாசத்துக்குள் நாங்கள் எல்லாரும் சத்தியபுரிக்கு வந்து உங்களைக் கண்டு கொள்ளுகிறோம்” என்றான். தேவராஜப் பிள்ளையும், அந்தப் படி வேண்டிக் கொண்ட படியால், அவர்க ளுடைய பிரார்த்தனையை நிராகரிக்க மாட்டாமல், நானும் ஞானாம்பாளும் இன்னும் ஒரு மாசம் வரைக்கும் ஆதியூரில் இருக்கும் படி நிரம்மியமாக உத்தரவு கொடுத்து விட்டு, என் தாய் தகப்பனார், மாமனார் மாமியார் முதலானவர்கள், சத்தியபுரிக்குப் போய்விட்டார்கள். 

32-ஆம் அதிகாரம்

இராக் கொள்ளைக்காரன் பகற் கொள்ளைக்காரர்களை வெளிப்படுத்தியது 

ஒரு நாள், இரவில், ஒரு தையற்காரன் அவனுடைய மேல் வேஷ்டியில் ஒரு ரூபாயை முடிந்து, தோளிற் போட்டுக் கொண்டு, தெரு வீதி வழியாகப் போனான். அதை நிலா வெளிச்சத்தில் ஒரு திருடன் கண்டு, அந்தத் தையற் காரனைப் பின் தொடர்ந்து சென்றான். திருடன் தொடர்ந்து வருவதைத் தையற்காரன் கடைக் கண்ணாற் கண்டும், காணாதது போல் நடந்தான். திருடன் அரவம் செய்யாமற் கிட்ட நெருங்கி, அந்த முடிச்சைக் கத்திரிக் கோலினாற் கத்தரித்தான். உடனே, தையற்காரன் திரும்பி, அவன் கையி லிருந்த கத்திரியினால் திருடன் காதைக் கத்தரித்துவிட்டான். அந்த உபத்திரவம் பொறுக்க மாட்டாமல் திருடன் ”கூ! கூ! கொலை! கொலை!” என்றான். உடனே, தையற்காரன், “”fa! on! கொள்ளை! கொள்ளை!!” என்றான். பிறகு, கள்ளன் தையற்காரனைப் பார்த்து, “இந்தா உன் பணம்” என்று அவன் முன்பாக விட்டெறிந்தான். உடனே தையற் காரன், “இந்தா உன் காது” என்று விட்டெறிந்தான். பிறகு அந்தத் தையற்காரன் திருடனைப் பிடித்துக் கொண்டு வந்து, தேவராஜப் பிள்ளை முன்பாக விட்டான். திருடன் தேவராஜப் பிள்ளை முன்பாகக் குற்றத்தை ஒப்புக் கொண்டு, சொல்லுகிறான்:- 

“ஐயா! நான் ஒரு பெரிய குடும்பி; எனக்கு ஒரு பெண்சாதியும், பல பிள்ளைகளும், அதிக விருத்தாப்பிய மான தாய் தந்தைகளும், விதந்துவாய்ப் போன இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள். அவர்களைச் சம்ரக்ஷிப்ப தற்கு, என்னைத் தவிர, வேறே நாதன் இல்லை. நான் தேகப் பிரயாசைப்பட்டு, அவர்களை ஆதரித்து வந்தேன். இப்போது பஞ்ச காலமானதால், எனக்கு எங்கும் வேலை அகப்படவில்லை. யாசகம் கொடுப்பாரும் இல்லை. நான் ஒருவன் மட்டும் பட்டினியா யிருந்தால், எப்படி யாவது சகித்துக் கொள்வேன். அதி விருத்தர்களான என் தாய் தந்தையர்களும், சிறு பிள்ளைகளும், மற்றவர்களும், பல நாட் பட்டினியா யிருப்பதைப் பார்த்துச் சகிக்க மாட்டா மல், நான் இந்தத் திருட்டுத் தொழிலிற் பிரவேசித்தேன். ஆனால், பெண்டுகளிடத்திலும், பிள்ளைகளிடத்திலும், நல் லவர்க ளிடத்திலும் திருடுகிற தில்லை யென்றும், உலோபி களிடத்திலும், பாவிக ளிடத்திலும் மட்டும் திருடுகிற தென்றும், நான் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறேன். 

இப்போது நான் ஒரு ரூபா திருடின தற்காக என்னைத் தண்டிக்கப் போகிறீர்கள். நான் அந்தத் தையற்கார னிடத்தில் ஒரு ரூபா கடன் வாங்கிக் கொண்டு, பிறகு அதைக் கொடாமல் மோசம் செய்திருப்பே னானால், என்னைத் தண்டிப்பீர்களா? பிரதி தினமும் ஆயிரம் பதினா யிரம் இலக்ஷம் பொன் கடன் வாங்கிக் கொண்டு, அந்தக் கடளைக் கொடாமல் மாறுபாடு செய்கிறவர்களுக்குக் கணக் குண்டா? இவர்கள் எல்லாரும், எங்களுக்கு அண்ணன் மார்கள் அல்லவா? எங்க ளுடைய திருட்டுக்கும் அவர்களுடைய திருட்டுக்கும் பேதம் என்ன வென்றால், நாங்கள் பொய்யும் புரட்டும் பேசாமல், எங்கள் கையில் அகப் பட்டதைக் கவர்ந்து கொள்ளுகிறோம். அவர்கள் ஆயிரம் பொய் சொல்லிக் கடன் வாங்கிக் கொண்டு,பிறகு அதைக் கொடாமல் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, எத் தனையோ சூதுகளும், வாதுகளும், பொய்ச் சத்தியங்களும் செய்கிறார்கள். அவர்க ளுடைய திருட்டில், பொய்யும் புரட்டும், நம்பிக்கைத் துரோகமும், ருண பாதகமும் கலந் திருக்கின்றன. எங்களுடைய திருட்டில், அப்படிப்பட்ட தோஷங்கள் கலக்க வில்லை, ஒரு ரூபா திருடின என்னை ஒரு மாசம் காவலி லிருக்கும்படி நீங்கள் தீர்மானித்தால், பெரும் கொள்ளைக்காரர்களாகிய அந்த ருண பாதகர்களை, யாவத் ஜீவ பரியந்தம் தண்டிக்க வேண்டாமா? 

நான் திருட ஆரம்பித்ததற்கு என்னுடை தரித்தி ரத்தைக் காரணமாகச் சொல்லி யிருக்கிறேன் அல்லவா? அப்படிப்பட்ட யாதொரு காரணமும் இல்லாமல், அநேக அரசர்கள், அந்நிய இராஜாக்க ளுடன் யுத்தத்துக்குப் புறப்பட்டு, வழிகளி லிருக்கிற கோட்டை கொத்தளங்கள் மாளிகைகளையெல்லாம் இடித்து, கோடானு கோடி ஜனங் களை மாய்த்து, அகப்பட்ட பொருள்களையெல்லாம் சர்வ கொள்ளை அடிக்கிறார்களே! அந்த அரசர்களும் எங்களுடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவா? அலெக்சான்றர் (Alexander) முதலிய சில சுத்த வீரர்கள், தாங்கள் பிடித்த தேசங்களை மறுபடியும் கொடுத்துவிட்டதாக, அவர்களுக்குப் புகழ்ச்சியாகச் சரித்திரக்காரர்கள் சொல்லுகிறார்கள். புரு ஷர்களையெல்லாம் கொலை செய்து, அவர்களுடைய மாட மாளிகைகளை யெல்லாம் இடித்து நாசம் செய்து, ஆஸ்தி பாஸ்திகளை யெல்லாம் கொள்ளையிட்ட பிறகு, நிராதரவான கைம்பெண் சாதிகளும் சிறு பிள்ளைகளும் நிறைந்த தேசத்தை மறுபடியும் பழைய அரசனுக்குக் கொடுப்பதினால், என்ன பிரயோசனம்? அப்படிக் கொடுப்பது பெருமையா யிருக்குமானால், நானும் திருடின ஒரு ரூபாயை மறுபடியும் அந்தத் தையற்காரன் முன்பாக எறிந்து விடவில்லையா? அலெக்சான்றார் முதலிய சுத்த வீரர்கள், தங்கள் சத்துருக்க ளுடைய பெண்சாதி பிள்ளைகளை உபத்திரவம் செய்த தில்லை யென்று, சரிதாசிரியர்கள் சொல்லுகிறார்கள். பெண்டுகளை யும் பிள்ளைகளையும் திருடுகிற தில்லை யென்று, நானும் பிரதிக் ஞை செய்து கொள்ள வில்லையா? ஒரு கொலை செய்தவ னுக்கு, மரண தண்டனை விதிக்கிறீர்கள். அப்படியானால், இலக்ஷாதி லக்ஷம் கொலைகளும் கொள்ளைகளும் செய்கிற அந்த அரசர்களுக்கு, எப்படிப் பட்ட தண்டனை விதிக்க வேண்டும்? பின்னும், ஜனங்கள் தாங்கக் கூடாத பல வரி களைச் சுமத்திக் கொடுமை செய்கிற அரசர்களும், பெரும் கொள்ளைக் காரர்கள்தானே ? ஒரு கொடுங்கோல் மன்னன் அநியாய வரிகள் வாங்கினபடியால், ஒரு எளியவன் தனக்கு வரி கொடுக்க நிர்வாகமில்லையென்று, அரசனுக்கு அறிவித் தான். அரசன், “நீ வரி கொடாவிட்டால், நம்முடைய தேசத்திலிருக்கக் கூடாது” என்றான். எளியவன், “நான் எங்கே போவேன்!” என்று சொல்ல, அரசன், “சீரங்கப் பட்டணத்துக்குப் போ” என்றான். எளியவன், “சீரங்கப் பட்டணத்தை உம்முடைய அண்ணன் ஆளுகிற படியால், நான் அங்கே போக மாட்டேன்” என்றான். அரசன், “தஞ்சாவூருக்குப் போ’ என, எளியவன், “அங்கேயும் உம் முடைய சிற்றப்பன் ஆளுகிறானே!” என்றான். “அப்படியானால், நரகத்துக்குப் போ” என்று அரசன் கோபத்தோடு சொல்ல, “அங்கே உம்முடைய தகப்பன், பாட்டன் முதலானவர்கள் நிலை பெற் றிருப்பதால், நான் அங்கேயும் போக மாட்டேன்” என்று எளியவன் மறுத்து விட்டான். இப்படிப்பட்ட கொடுங்கோல் மன்னர்களைப் பார்க்கிலும், நாங்கள் பொல்லாதவர்களா? 

நியாயாதிபதிகள் முதலிய அதிகாரிகள் பரிதானத்தை அபேக்ஷிக்காத படி. அவர்களுக்குத் துரைத் தனத்தார் போதுமான சம்பளங்களை ஏற்படுத்தி யிருக்கி றார்கள். அப்படியிருந்தும், அந்த அதிகாரிகள், பிரதி வழக்கிலும், உபய வர்திக ளிடத்திலும், கைலஞ்சம் வாங்கிக் கொண்டு, அதைச் சீரணிப்பிக்கும் பொருட்டு, இரு பக்ஷத்தாருக்கும் சிறிது சாதகமும், சிறிது பாதகமும், பண்ணுகிறார்கள். ஒருவனுக்கு முழுதும் சாதகம் செய்யக் கூடாத பக்ஷத்தில், அவனிடத்தில் வாங்கின இலஞ்சத்தைத் திருப்பிக் கொடாமல், இனிமேல் வரும் வழக்குக்கு அச்சார மாக வைத்துக் கொள்ளுகிறார்கள். அன்றியும், அவர் களுக்கும், அவர்க ளுடைய குடும்பங்களுக்கும், வருஷத் துக்கு வேண்டிய வஸ்திரங்களை வஸ்திர வியாபாரிகள் கொடுக்கிறார்கள். தானிய தவசங்களைப் பூபாலர்கள் கொடுக்கிறார்கள். அப்படியே, உப்பு முதற் கற்பூரம் வரை யில் உள்ள பல சரக்குகளையும், பல வியாபாரிகள் இலவச மாகக் கொடுக்கிறார்கள். நாங்கள் அமாவாசையில் மட்டும் திருடப் போகிறோம். அந்த அதிகாரிகள், அகோ ராத்திரங் கொள்ளை யடிக்கிற படியால், அவர்களுடைய கொள்ளைகளுக்கு எங்களுடைய  கொள்ளைகள் உறை போடக் காணுமா? நாங்கள் திருடப் போன இடத்தில் அகப்பட்டுக் கொண்டு, அந்த அதிகாரிகள் முன்பாக விசா ரணைக்கு வரும்போது, “குயவனுக்குப் பல நாள் வேலை, தடியடிக்காரனுக்கு ஒரு நிமிஷ வேலை” என்பது போல் நாங்கள் வெகு காலம் பிரயாசைப்பட்டுத் திருடி வைத்த பொருள்களை, அவர்கள் ஒரு நிமிஷத்தில் தட்டிப் பறித் துக் கொள்ளுகிறார்கள். திருடர்கள் இடத்திலும் திருடு கிற திருடர்கள், எப்படிப் பட்ட திருடர்களா யிருக்க வேண்டும்? சில புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய் வதினால் தோஷ பரிகாரம் ஆவ தாகச் சில சமயிகள் சொல்லுகிறார்கள். ஆனால், அதை நாம் திருஷ்டாந்த மாகக் கண்டதில்லை. இந்த அதிகாரிகளுக்கு யார் கொடுக் கிறார்களோ, அவர்கள் பெரும் குற்றவாளிகளா யிருந்தா லும், குற்ற நிவர்த்தி அடைகிறார்கள். அவர்களுக்குக் கொடாதவர்கள், மாசற்றவர்களா யிருந்தாலும், குற்ற வாளிகள் போலத் தண்டிக்கப் படுகிறார்கள். சில அதி காரிகள், ஒவ்வொரு வழக்கிலும் இலஞ்சம் வாங்கினால் பெயர் கெட்டுப் போகு மென்று பயந்து, தங்கள் கிருகங் களில், நடக்கிற சுபா சுப முதலான விசேஷ தினங்களில், சகல பொருள்களையும் வாங்கிக் கொள்ளுகிறார்கள். அவர்க ளுடைய கிருகங்களில் அடிக்கடி கலியாணங்களும், ருது சாந்திகளும், உபநயனங்களும், பிதுர் சிராத்தங் களும் வருகிற வழக்கம். ஒவ்வொரு அதிகாரியினுடைய குடும்பத்திலும் நூறு பெயர்க ளிருந்தால் எத்தனை சுபா சுபங்கள் நடக்குமோ, அத்தனை சுபா சுபங்கள் ஒவ்வொ ருத்த ருடைய வீட்டிலும் நடக்கின்றன. இதற்குக் கார ணம் வருமானமே யன்றி வேறல்ல. அதிகாரியா யிருந்தா லும், யாரா யிருந்தாலும், ஒவ்வொருத்தனுக்கு ஒரு தகப் பன் மட்டும் இருந்து, இறந்து போ யிருக்க வேண்டும். அப்படி யிருக்க, ஒவ்வொரு வருஷத்திலும் தகப்பனுக்குப் பல சிராத்தங்கள் வருகிறது எவ்வளவு ஆச்சரியம்! 

இரண்டு பூனைகளின் வியாஜியத்தை குரங்கு எப்படித் தீர்த்து விட்டதோ அப்படியே சில நியாயாதிபதிகள் தீர்த்து விடுகிறார்கள். ஒரு பணியாரத்தைப் பிரித்துக் கொள்ளுகிற விஷயத்தில், இரண்டு பூனைகளுக்குள் விவா தம் நேரிட்டு, அதைச் சம பாக மாகப் பிரித்துக் கொடுக் கும்படி, அந்தப் பூனைகள் ஒரு குரங்கை வேண்டிக் கொண் டன. அந்தக் குரங்கு அந்தப் பணியாரத்தை இரண்டாகப் பிட்டு, ஒரு தராசில் வைத்து நிறுத்தது. ஒரு பக்கத்துத் தட்டுக் கனமா யிருந்த படியால், அதைச் சமன் செய் வதற் காக, அந்தத் தட்டி லிருந்த பணியாரத்தில் ஒரு துண்டைக் குரங்கு வாயினாற் கவ்வி விழுங்கி விட்டது. பிறகு, மற்றொரு தட்டுக் கீழே இழுத்த படியால், அதிலும் ஒரு துண்டை குரங்கு வாயினாற் கவ்வித் தின்று விட்டது. இதைப் பார்த்த உடனே பூனைகளுக்குப் பயம் உண்டாகி, ”ஐயா! நீங்கள் நிறுத்தது போதும்! நாங்கள் திருப்தி ஆகி விட்டோம்! எங்க ளுடைய பாகங்களை எங்களுக்குக் கொடுங்கள்!” என்று பிரார்த்தித்துக் கொண்டன. உடனே, குரங்கு பூனைகளைப் பார்த்து, “நீங்கள் திருப்தி அடைந்தாலும், ‘நாம் திருப்தி அடைய வில்லை. இப்படிப் பட்ட சிக்கலான வியாச்சியத்தை ஆய்ந் தோய்ந்து பாரா மல், அவசர மாகத் தீர்மானிக்கக் கூடாது” என்று சொல்லிக் கொண்டு, தராசைத் தூக்கி, நிறுத்து நிறுத்து,பக்ஷ ணத்தைக் துண்டு துண்டாகக் கடித்துக் கடித்து, பக்ஷிக்க ஆரம்பித்தது. பூனைகள் குரங்கை நோக்கி, “ஓ நியா யாதிபதியே! இனிமேல் நீங்கள் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டாம். சேஷமா யிருக்கிற பணியாரத்தை யாவது, எங்களுக்குக் கொடுத்து விடுங்கள்” என்றன. உடனே, குரங்கு, “நான் பட்ட சிரமத்துக்குக் கூலி வேண் டாமா? சம்பளம் இல்லாமல், யாராவது உத்தியோகம் செய்வார்களா?” என்று சொல்லி, மிச்சப் பணியாரத் தையும் பக்ஷித்து விட்டது. அந்தக் குரங்கு செய்தது போல், விவாதப் படுகிற சொத்தைத் தாங்கள் அபகரித்துக் கொண்டு, வழக்காளிகளுக்கு ஒன்றும் கொடாமல் துரத்தி விடுகிற நியாயாதிபதிகளும் உலகத்தில் இருக்கிறார்களே! 

கல்லுளிச் சித்தன் போன வழி, காடு மேடெல். லாம் தவிடு பொடி என்பது போல், மாமிச பக்ஷணிகளான சில பெரிய அதிகாரிகள், அவர்களுடைய அதிகார எல்லைக் குள் ஒரு ஊரி லிருந்து மற்றொரு ஊருக்குப் போகும் போது, அக்கம் பக்கங்களில் உள்ள ஆடு மாடு முதலிய மிருகங்களும், கோழி கொக்கு முதலிய பக்ஷிகளும், அத மாய் விடுகின்றன. நூறு புலிகள் புறப்பட்டாலும், அத்தனை பிராணிகளை அவ்வளவு சீக்கிரத்தில் பக்ஷியா. நவதானியங்களும், வைக்கோல், புல், விறகு முதலியவை களும், பல கிராமங்களி லிருந்து சுமை சுமையாய் வரு கின்றன. அந்தப் பெரிய அதிகாரிகளுக்கு உபயோக மான சாமான்கள் போக, மீந்தவைகளைச் சில்லரை அதிகாரி களாகிய துர்த் தேவதைகள் பங்கிட்டுக் கொள்ளுகிறார்கள். பின்னும், அவர்களுக் காகப் பந்தல் அலங்கரிக்கவும் தோரணங்கள் கட்டவும், வாழை, கமுகு,தென்னை முதலிய விருஷங்க ளெல்லாம் வெட்டப் படுகின்றன. அவர்க ளுடைய சாமான்களைக் கொண்டு போவதற் காக, ஊரில் உள்ள சகல வண்டிகளும் பலவந்தமாய்ப் பிடிக்கப் படு கின்றன. மேற் சொல்லிய தானியம் முதலியவைகளின் கிரயமும், பண்டி வாடகையும் உடையவர்களுக்குக் கிடைக்கின்றனவா அல்லவா வென்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம். 

பசுவுக்குப் புலியையும், கிளிக்குப் பூனையையும் காவல் வைத்தது போல், ஜனங்களுக்குப் பாதுகாவலாகச் சில உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட் டிருக்கிறார்கள். அவர் களுடைய அந்நியாயார் ஜிதங்கள் வாசா மகோசரமா யிருக்கின்றன. ஆனால், அவர்க ளுடைய செய்கைகளைத் திருடர்க ளாகிய நாங்கள் வெளிப்படுத்தினால், எங்களைப் போல நன்றி கெட்டவர்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள். ஏனென்றால், அவர்க ளுடைய சகாயத்தால் நாங்கள் ஜீவிக்கிறோம்; எங்களால் அவர்கள் ஜீவிக்கிறார்கள். அவர்களுக்கு நாங்களே துணை; எங்களுக்கு அவர்களே துணை. எங்க ளுடைய அந்தரங்கங்களை யெல்லாம் அவர்கள் அறிவார்கள்; அவர்க ளுடைய அந்தரங்கங்களை யெல்லாம், நாங்கள் அறிவோம். எங்களுடைய இரகசி யங்களை அவர்களும் வெளியிடார்கள்; அவர்க ளுடைய இரகசியங்களை நாங்களும் பிரசித்தம் செய்யோம். அவர்க ளுடைய கிருபை இல்லா விட்டால், எங்களில் அநேகர் தூக்கு மரத்தில் மாண்டுபோ யிருப்பார்கள். அநேகர் காவற் கூட வாசிகளா யிருப்பார்கள். நாங்கள் திருடுகிற சொத்தில், அவர்களுக்கும் பங்கு கொடுக்கிற படியால், அவர்கள் ஒரு நாளும் எங்களைக் காட்டிக் கொடார்கள். குற்றம் அற்றவர்களையும், தங்களுக்குக் கொடாதவர்களை யும், அவர்கள் பிடிக்கிறதே யன்றி, எங்கள் சோலிக்கு வருகிற தில்லை. ஆகையால், அவர்க ளுடைய செய்கைகளை வெளிப்படுத்தாமல், ஆகாயத்தைப் படல் கொண்டு மறைப்பது போல், மறைத்து விடுகிறேன். 

வஸ்திர வியாபாரிக ளுடைய புரட்டுகள் சர்வ லோகப் பிரசித்த மானதால், அவைகளை நான் விவரிக்க வேண்டுவ தில்லை.அவர்க ஞடைய வஸ்திரங்களின் இழைகளை எண்ணி னாலும், அவர்கள் செய்யும் குத்திரங்களை எண்ணுவது அசாத்தியம். அவர்கள் பழைய ஆடையைப் புதி தாக்கி, வெள்ளையைக் கறுப்பாக்கி, கறுப்பைச் சிவப் பாக்கி, இந்திர ஜால வித்தை செய்கிறார்கள். நல்ல வஸ்திரத்தைக் காட்டி, அதற்குத் தக்க விலை வாங்கிக் கொண்டு, மட்ட வஸ்திரத்தைக் கொடுக்கிறார்கள். ஒரு வஸ்திரத்தை வைத்துக் கொண்டு, கோடி வஸ்திரம் என் கிறார்கள். ஒரு ரூபாய்க்கு வாங்கின துணியைப் பத்து ரூபாய்க்கு வாங்கின தாகப் பட்டோலை காட்டுகிறார்கள். அவர்களுடைய மோசத்துக்குப் பயந்து கொண்டே, ஆடு, மாடு முதலிய மிருகங்களும், பக்ஷிகளும்,நிர்வஸ்திரமா யிருக்கின்றன. ஜைன விக்கிரகம் நிர்வாணமா யிருப்ப தற்கும், சிவன் புலித் தோலையும், யானைத் தோலையும் தரித் துக் கொண்டதற்கும், அதுதான் காரணம். 

இரத்தின வியாபாரிகள் செய்யும் மாறுபாடுகள் அபா ரம் அல்லவா? செங் கல்லை மாணிக்க மென்றும், வெண் கல்லை வயிர மென்றும், பசுங் கல்லை மரகத மென்றும் சொல்லி, அவர்கள் சகலரையும் ஏமாற்றவில்லையா? அந் தக் கற்களுக்கு மாற்று, உரை, நிறை இல்லாத படியால், “கடல் மீனுக்கு நுளைய னிட்டதே சட்டம்” என்பது போல அந்த வியாபாரிகள் வாய் கொண்ட மட்டும் விலை கூறி எத்திப் பறிக்க வில்லையா? சில பொடிகளைக் கையில் வைத்துக் கொண்டு, கோடி பொடிக ளென்று, கோடி பொய் சொல்லுகிறார்கள். அந்தக் கற்கள் பிரகாசியா விட்டால், பாடவேளை யில்லை யென்கிறார்கள். அவைகள் ஸ்வயம் பிரகாசம் உள்ளவைகளா யிருந்தால், எந்த வேளை யிலும் பிரகாசியாம லிருப்பதற்குக் காரணம் என்ன? பல வியாபாரிகள் கூடி விலை மதிக்கும் போது, அவர்கள் சகலரும் அறிய வாயினாற் பேசிக் கொள்ளாமல், கைகளைத் துணிகளால் மறைத்துக் கொண்டு கைகளாற் பேசுகிறார் கள். அன்றியும், அவர்கள் பேசுவது பரிபாஷையே யல் லாமல், சரியான பாஷையிற் பேசுகிற தில்லை. அந்தக் கற்கள் உலகத்தில் இல்லாமற் போனால் யாருக்கு என்ன நஷ்டம் சம்பவிக்கக் கூடும்? அந்தச் செங்கல், வெண்கல், பசுங் கல்லைப் பார்க்கிலும் வீடு கட்டுவதற்கு உதவுகிற செங்கல், வெண்கல், கருங்கல் உலகத்துக்கு முக்கியம் அல் லவா? நிருபயோக மான அந்த இரத்தினக் கற்களுக்கு ஜனங்களுடைய அறியாமையினால் மகிமை உண்டானதே யன்றி மற்றப் படி அல்லவே! 

தட்டார்க ளுடைய புரட்டுகளைச் சொல்ல எட்டாறு வாய்கள் இருந்தாலும் போதுமா? ஆயிரம் பேர் கண்ணை விழித்துப் பார்த்துக் கொண் டிருந்தாலும், அத்தனை பெயர்க ளுடைய கண்களையும் கட்டி விட்டு அரை வராக னெடைப் பொன்னில் கால்வராக னெடைப் பொன்னைத் திருடிக் கொண்டு, செம்பைக் கலந்து விடுகிறார்கள். இரும்பு முதலிய உலோகங்களைத் தங்கம் ஆக்குகிற வாதிக ளிருப்ப தாக உலகத்தார் சொல்லுகிறார்கள். அவர்கள் இந்தத் தட்டார்களே யன்றி வேறொருவரையும் நாம் பிரத்தியக்ஷ மாகக் கண்ட தில்லை. அவர்கள் திருடித் திருடி எவ்வளவு கைபழகி யிருக்கிறார்க ளென்றால், அவர் கள் சொந்த உபயோகத்துக் காக நகை செய்தாலும் கூட அதிலும் சிறிது பொன்னைத் திருடிக் கொள்வார்கள். நாம் மலை யளவு பொன் கொடுத்தாலும், அதை கடுகு அளவாக நிறுத்துக் காட்டுவார்கள். அவர்கள் கடுகு அளவு பொன் கொடுத்தாலும் அதை மலை யளவாக நிறுததுக் காட்டு வார்கள். அவர்கள் கையி லிருக்கிற பொன ஆறு மாற்றா யிருந்தாலும், பத்து மாற்றாகக் காட்டுவார்கள் நம்மு டைய கையிலிருக்கிற பொன பத்து மாற்றா யிருந்தாலும், ஆறு மாற்றாக மாற்றுவார்கள் அவர்கள் கையி லிருக் கிற இரும்பையும் தங்க மாக்கிக் கொடுப்பார்கள். நம் முடைய கையி லிருக்கிற தங்கத்தையும் இரும்பாக்கிக் கொடுப்பார்கள். ஆபரணம் செய்கிற விஷயததில் தட் டார்கள் செய்யும் கரவடங்களுக்குப் பயந் த சிவன் சர்ப் பாபரணந் தரித்துக் கொடை தாக, ஒரு புலவர் பாடி யிருக்கிறார்:- 

கட்டளைக் கலித்துறை 

ஒட்டாக வொட்டியுங் காற்பொன்னின் மாப்பொன் 
னுபாயபதாத் 
தட்டா திரான்பணி செய்யா திரான்செம்பொன் 
மேருவினைக் 
கட்டாகக் கட்டிக் கடுகள வாநிறை காட்டவல்ல
தட்டானுக் கஞ்சியல் லோவணிந் தான்சிவன் 
சர்ப்பத்தையே. 

தட்டார்கள் எட்டு நாளையில் ஒரு நகை செய்து கொடுப்ப தாக ஒப்புக் கொண்டால், எட்டு வருஷத்திலும் கொடார்கள். அவர்கள் சொல்லும் சாக்குகளும் போக்கு களும் ஜாலங்களும் தெரியும் பொருட்டு, பூர்வீக சங்கரா சாரியார் காலத்தில் நடந்த ஒரு விசேஷத்தைத் தெரி விக்கிறேன். சகல சாஸ்திரங்களிலும் வித்தைகளிலும் தொழில்களிலும் நிபுண ரான அந்தச் சங்கராசாரியார் பல் தொழிலாளிகளும் வந்து, தம்மைப் பரீக்ஷிக்கும் படி விளம்பரம் செய்தார். அந்தப் பிரகாரம் பலரும் வந்து, அவரைப் பரீக்ஷித்தது மன்றி. தட்டாரும் அவரைச் சோதிக்க வந்தார்கள். அவர் தட்டார்களைப் பார்த்து, எட்டு நாளைக்குப் பிறகு வரும் படி ஆக்ஞாபித்தார். அவர் கள் அந்தப் படி, வந்தார்கள். நாலு நாளைக்குப் பிறகு வரும் படி, மறுபடியும் உத்தரவு செய்தார். அவர்கள் அந்தப் பிரகாரமும் வந்தார்கள். இரண்டு நாளைக்குப் பிறகு வரும் படி உத்தரவு செய்து, அவர்கள் அந்தப் படிக்கும் வந்து அலைந்தார்கள். பிறகு. நாளைக்கு வாருங்கள், நாளைக்கு வாருங்கள்” என்று, அநேக மாசக் காலம் அவர்களை அலைக்கழித்தார். இந்தப் பிரகாரம் இழுத்து விடுவது கம்மாளர்க ளுடைய வழக்கமானதால், அவர்கள் சங்கராசாரியாரைப் பார்த்து, “ஸ்வாமி! எங் களுடைய வித்தை உங்களுக்குப் பூரணமாய் வந்துவிட்டது. இனிமேல் உங்களைப் பரீக்ஷிக்க வேண்டுவ தில்லை” என்று சொல்லி, யோக்கியதா பத்திரிகை கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். வஸ்திர வியாபாரமும், இரத்தின வியாபாரமும், தட்டார் தொழிலும் உலகத்தில் நடப்பது, ஸ்திரீகள் பொருட்டாகவே யல்லாமல், மற்றப் படி அல்ல. உலகத்தில் ஸ்திரீகள் இல்லாம லிருந்தால், அந்த வியா பாரிக ளுடைய தொழில் நடக்குமா? அந்த வியாபாரிகள் இல்லாமற் போனால், ஸ்திரீக ளுடைய ஜபம் நடக்குமா? 

அரசர்கள் தேசங்களைத் திருடுகிறது போல, பெரிய மிராசுதார்கள் தங்களுக்கு அடுத்த சின்ன மிராசுதார் களுடைய நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் திருடி, சேர்த்துக் கொள்ளுகிறார்களே! இந்த ஸ்தாவரத் திருட்டைப் பார்க்கிலும், எங்க ளுடைய ஜங்கமத் திருட்டு மீசரமா? 

நான் இது வரையில் மனுஷர்க ளுடைய சொத்தைத் திருடுகிற திருடர்களைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். தெய்வ சொத்தைத் திருடுகிற திருடர்கள் எத்தனையோ பெயர்கள் இருக்கிறார்கள். தேவாலயம், தர்ம சத்திரம் முதலியவை களின் விசாரணைக் கர்த்தர்களும், மற்ற உத்தியோகஸ் தர் களும், தினந்தோறும் அடிக்கிற கொள்ளைகள் எண்ணத் தொலையுமா? ஏட்டில் அடங்குமா? இப்படியாக, உலகத்தில் எண்ணிக்கை யில்லாத பகற் கொள்ளைக்காரர் களிருக்க, அவர்களை யெல்லாம் தண்டிக்காமல் விட்டுவிட்டு, தரித்திரத்தின் கொடுமையினால் திருடப் புகுந்த என் மேலே, தாங்கள் குற்றம் பாரிப்பது தருமமா ?” என்றான். இதைக் கேட்ட வுடனே, தேவராஜப் பிள்ளை அந்தத் திருடனுடைய குடும்ப ஸ்திதியைப் பற்றியும், அவனு டைய யோக்கியதைப் பற்றியும் பல பெயர்களை விசாரித் தார். அவனுடைய குடும்ப விஷயத்தைப் பற்றி அவன் சொன்ன தெல்லாம் வாஸ்தவ மென்றும், அவன் அதற்கு முன் நன்னடக்கை யுள்ளவ னென்றும் தெரிந்து கொண்டு, அவனைப் பார்த்துச் சொல்லுகிறார்:- ” நீ குற்றத்தை ஒப்புக் கொள்ளுகிற படியால், உன்னைத் தண்டிக்காமல் விடுவது நியாயப் பிரமாணத்துக்குச் சரியா யிராது. ஆயினும், நீ செய்த குற்றத்தின் பளுவைக் குறைக்கும் படி யான சில சாதகங்கள் உன் பக்ஷத்தில் இருக்கிற படி யால் ஒரு மாச மட்டும் நீ வெறுங் காவலி லிருக்கும் படி அற்ப மாகத் தீர்மானிக்கிறோம். “பல நாளைத் திருடன் ஒரு நாள் அகப்படுவான் ” என்கிற பழமொழிப் படி, நீ சொன்ன பகற் கொள்ளைக்காரர்கள் ஒரு நாள் அகப்பட் டுத் தண்டிக்கப் படுவார்கள். அவர்க ளுடைய தண்டனை உன் னுடைய தண்டனையைப் போல அற்பமா யிராது” என்றார். அந்தத் திருடன் காவற் கூடத்தி லிருந்து விடு தலை யான உடனே, தேவராஜப் பிள்ளை அவனுக்கு ஒரு கிராமச் சேவகம் செய்து கொடுத்து, அவன் பிரமாணிக்க மாய் வேலை பார்த்து வருகிறான். அந்தத் திருடனுக்கு முடிவில் நல்ல கதி வாய்த்தது போல், அவன் சொன்ன பகற் கொள்ளைக்காரர்களுக்கும் முடிவில் நல்ல கதி வாய்க் குமா மென்பது சந்தே காஸ்பதமா யிருக்கிறது. 

33-ஆம் அதிகாரம்

குணபூஷணி சரித்திரம்- மூத்தாள் மகளை இளையாள் கொடுமை செய்தது திருட்டுக் கலியாணம்

ஆதியூரில் அருமைநா தபிள்ளை என்பவன் ஒருவன் இருந்தான். அவன் சனியனை விலைக்கு வாங்குவது போல், ஏக காலத்தில் இரண்டு தாரங்களை மணம் செய்து கொண்டான். அந்தத் தாரங்கள் இருவரும் சகோதரிகள். கலியாணம் நடந்த மறு வருஷத்தில், மூத்தவள் ஒரு பெண் குழந்தை பெற்றாள். அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாசத்துக்குப் பின்பு, இளைய தாரமும் ஒரு புத்திரிகையைப் பெற்றாள். மூத்த தாரத்தின் மகள் பேர் குணபூஷணி. இளைய தாரத்தின் மகள் பேர் மோகன மாலை. அந்தப் பெண்களுக்குப் பத்து வயசு நடக்கும் போது, மூத்த தாரம் இறந்து, அவளுடைய முன்னோர்கள் போன இடத்துக்குப் போய் விட்டாள். அவள் இறந்து போன பிறகு, அவளுடைய மகளான குண பூஷணி இடத்தில், கஷ்ட காலம் வந்து இஷ்டம் செய்ய ஆரம்பித்தது. சிட்டுக் குருவி மேல் பாரதந் தொடுத்தது போல், சிறிய தாயாரும், அவருடைய மகளும் குண பூஷ ணியை எப்போதும் சிறுமைப் படுத்தினார்கள். மோகன மாலை கட்டிக் கழித்த பழந் துணிகளைக் கட்டிக் கொள்ளு கிறதே யல்லாது, குணபூஷணி நல்ல வஸ்திரங்களைக் கட்டி அறியாள். எல்லாரும் சாப்பிட்டு மிஞ்சின உச்சிட் டத்தை உண்கிறதே தவிர நல்ல சாதம் அருந்தி அறி யாள். வருஷத்துக்கு ஒரு தரம், தீபாவளியில், அவள் தேகத்தில் எண்ணெய் பட்டிருக்குமோ என்னவோ அது வும் சந்தேகம். சிட்டுக் குருவியின் தலை மேலே பனங் காயைக் கட்டினது போல, வீட்டு வேலைகளை யெல்லாம் அவளே செய்யும்படி அவள் மேலே சுமத்தினார்கள். சிறிய தாயாருக்கும் அவளுடைய மகளுக்கும் வேலை யென்ன வென்றால், குணபூஷணியைத் திட்டுகிறதும், அடிக்கிற தும், கொடுமை செய்கிறதுமே யன்றி, வேறொரு வேலையும் இல்லை. அவர்கள் என்ன கொடுமை செய்தாலும் வாயைத் திறவாமலும், மறு வார்த்தை சொல்லாமலும் பொறு மையை அநுசரித்து வந்தாள். அவளுடைய தகப்பன் இளைய தாரத்தி னுடைய கோளைக் கேட்டுக் கொண்டு மக ளுக்கு நடக்கிற அதியாயங்களை விசாரிக்காமற் பரா முகமா யிருந்து விட்டான். அதனால் அருமைநாத பிஸ் ளைக்கு எருமைகாத பிள்ளை யென்கிற பட்டப் பெயர் கிடைத்தது. 

புஷ்பத்தை மறைத்து வைத்தாலும் அதினுடைய வாசனை காட்டி விடுவது போல, குணபூஷணி குளிக்கா மலும், முழுகாமலும், நல்ல ஆடையாபரணங்களைத் தரியா மலும் இருந்தபோதிலும், அவளுடைய அழகும் குணமும் ரெங்கும் பிரகாசித்த படியால், அவளை மணம் செய்ய விரும்பாதவர்கள் இல்லை. விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சங் கட்டினதுபோல, மோகன மாலை சர்வாபரண பூஷி தையா யிருந்தாலும், அவளுடைய துர்க்குணம் யாவருக் கும் பிரசித்த மான படியால், அவளை மணம் செய்ய விரும்பு வார்களும் இல்லை. அதனால், அவளுடைய தாயாருக்கு அதிக பொறாமையும் மாற்சரியமும் உண்டாகி, குணபூஷணி மேலே, இல்லாத தோஷங்களைக் கற்பித்து, அவளை ஒருவரும் கொள்ளாத படி விகாதம் செய்து வந்தாள். நாகப் பட்டணத்தி லிருக்கும் நல்லதம்பி பிள்ளையென்று பெயர் கொண்ட ஒரு கனவானுக்குப் பெண் விசாரிக்கிற தற்காக, சில ஸ்திரீகள், ஆதியூருக்கு வந்தார்கள். அவர் கள். அருமைநாத பிள்ளைக்கு இரண்டு புத்திரிகள் இருப்ப தாகக் கேள்விப்பட்டு, அந்தப் பெண்க ளுடைய குணத் தைத் தாங்களே நேராக அறிந்து கொள்ளும் பொருட்டு, சில நாள் வரைக்கும் அருமைநாத பிள்ளை வீட்டிலே தங்கி யிருந்தார்கள். அவர்கள் குணபூஷணியே போக்கிய மான பெண் ணென்று அதி சீக்கிரத்திற் கண்டு பிடித்துக் கொண்டார்கள். அவர்க ளுடைய அபிப்பிராயத்தைக் கெடுக்கும் பொருட்டு, அவள் குணபூஷணி மேலே, பிர மாண்ட மான திருட்டுக் குற்றத்தைச் சுமத்த ஆரம் பித்தாள். பெண் பார்க்க வந்திருக்கிற அந்த ஸ்திரீ களுடைய பணப் பையைச் சிறிய தாயார் திருடி, ஒருவருக் கும் தெரியாமல், குணபூஷணியி னுடைய பெட்டியில் வைத்து மறைத்து விட்டாள். அந்த ஸ்திரீகள் பணப் பையைக் காணோ மென்று தேடின போது, எல்லா ருடைய பெட்டிகளையும் சோதிக்கும்படி சிறிய தாயாரே அவர்களைத் தூண்டி விட்டாள். ஒரு வருடைய பெட்டியிலும் பணப் பை அகப்படாமல், குணபூஷணியின் பெட்டியில் அகப்பட்டபோது, அவள் திடுக்கிட்டு, நடுநடுங்கி, தான் திருடவே யில்லை யென்று சொல்லி அழுதாள். உடனே அவளுடைய சிறிய தாயார் அவளைப் பார்த்து, “நீலிக்குக் கண்ணீர் நிமையிலே என்பது போல், ஏன் கள்ள அழுகை. அழுகிறாய்? நீ திருடா விட்டால், அந்தப் பை உன் பெட்டியில் எப்படி வந்திருக்கக் கூடும்? கையும் களவு மாசு அகப்பட்டுக் கொண்ட பிறகு கூட, ஏன் பாசாங்கு பண்ணு கிறாய்? நீ எப்போதும் பசப்புக் கள்ளி யென்பது எனக்குத் தெரியாதா?” என்றாள். சிறிய தாயா ருடைய வார்த்தையை மறுத்துப் பேசத் துணியாமல், குணபூஷணி அழுது கொண்டு மௌனமா யிருந்தாள். அவளுடைய முகத் தோற்றத்தினாலும், நிஷ்கபட மான வார்த்தை. களாலும், அவள் மாசற்றவ ளென்று ஊரி லிருந்து வந்த ஸ்திரீகள் அபிப்பிராயப் பட்டாலும், அவளுடைய சிறிய தாயாரே அவள் மேலே தோஷாரோபணம் பண்ணின படியால், அவள் தோஷகிரஸ்தி யென்று அவர்களும் நினைக்கும் படியா யிருந்தது. ஆகையால் அவர்கள் ஆதியிற் கொண்ட கருத்தை மாற்றி, மோகனமாலையைக் கன்னிகா தானம் செய்து கொடுக்க வேண்டு மென்று, அவளுடைய தாய் தந்தையரைப் பிரார்த்தித்தார்கள். அதற்கு அவர்கள் நிராக்ஷேபமாகச் சம்மதித்தார்கள். மணமக னுடைய ஊர் தூரமான தால், ஒரு மாசத்துக்குப் பிறகு விவாகம் செய்கிற தென்று முகூர்த்த தினமும் குறிக்கப் பட்டது. அந்த ஸ்திரீகள் நாகப்பட்டணத்துக்குப் போய், மணமகன் முதலானவர்களை அழைத்துக் கொண்டு. முகூர்த்த நாளைக்கு முன் வந்து சேர்வதாகச் சொல்லி, செலவு பெற்றுக் கொண்டு, போய் விட்டார்கள். கலியாணத்துக்கு வேண்டிய ஆடை யாபரணங்கள், சாமக்கிரியைகள் முதலியவைகளை யெல்லாம் சேகரம் செய்து கொண்டு, மாப்பிள்ளை முதலானவர்கள் நாகப்பட் டணத்தை விட்டுப் புறப்பட்டார்கள். அவர்கள் சில நாள் யாத்திரை செய்த பின்பு, ஒரு நாள் ஒரு காட்டின் மத்தி யிற் போகும் போது, திருடர்கள் வந்து வளைத்துக் கொண்டு, அவர்கள் கையி லிருந்த சகல சொத்துக்களை யும் பறித்துக் கொண்டு,ஓடிப் போய் விட்டார்கள். மாப் பிள்ளை முதலானவர்களுக்கு இடுப்பிற் கட்டிக் கொள்வ தற்குக் கூட வஸ்திர மில்லாமற் சகல சொத்துக்களையும் இழந்து, கோவணாண்டிக ளாகி விட்டதால், அந்தக் கோலத்தோடு கலியாண வீட்டுக்குப் போக வெட்கப் பட்டுக் கொண்டு, அவர்கள் நாகப்பட்டணத்துக்குத் திரும்பிப் போய் விட்டார்கள். கள்ளர்களோ என்றால். அவர்கள் கொள்ளை யடித்த ஆஸ்திகளைப் பிதுரார்ஜிதம் போல் பாகித்துக் கொண்டார்கள். மாப்பிள்ளையி னுடைய வேலைக்காரனே திருடர்களுக்கு உளவனா யிருந்து திருடும் படி செய்வித்ததால், அவன் மூலமாகப் பெண் வீட்டுக் காரர்க ளுடைய ஊர், பெயர் முதலான சககல விவரங்களை யும், திருடர்கள் அறிந்து கொண்டார்கள். அவர்களில் “அஞ்சாத சிங்கம்’ என்று பெயர் கொண்ட ஒரு சோரன் மற்றவர்களைப் பார்த்துச் சொல்லுகிறான்: 

“அண்ணன்மார்களே! கலியாணக்காரர்க ளிடத்தில் அடிக்கிற கொள்ளை கொள்ளையே யல்லாமல், மற்றக் கொள்ளைக ளெல்லாம் சொள்ளையே. இந்த ஒரு திருட்டில் நமக்கு எவ்வளவோ திரவியங்கள் கிடைத்தன. நாம் பத்து மாசக் காலம் வரைக்கும் ஓயாமல் திருடினாலும். இவ்வளவு சொத்துக்கள் நமக்குக் கிடைக்குமா? நாம் மாப்பிள்ளை வீட்டுக்காரர்க ளிடத்தில் திருடிக் கொண்ட தால், இனிமேல் பெண் வீட்டுக்காரர்க ளிடத்திலும் திருடுவது நியாயமா யிருக்கின்றது. பெண் வீட்டுக் காரர்களுடைய ஊர் பெயர் முதலான சகல விவரங்களும், முகூர்த்த தினமும், உளவன் மூலமாக நாம் அறிந்து கொண்டோம். அவர்களுக்கும் மாப்பிள்ளை வீட்டுக்கார ருக்கும் இதற்கு முன் பரிசயமில்லை யென்பதும் நன்றாய் விளங்குகிறது. ஆகையால், நாம் பெண் வீட்டுக்குப் போய், நாமே நாகப்பட்டணத்தி லிருந்து வந்த மாப்பிள்ளை முதலானவர்க ளென்று பாசாங்கு பண்ணி, அந்தப் பெண்ணுக்கும் தாலி கட்டி, ஒரு இராத்திரி மட்டும் அங்கே தங்கி யிருந்து, அகப்பட்ட சொத்துக்களை யெல்லாம் கவர்ந்து கொண்டு, ஓடி வந்து விடலா மென்று யோசிக்கிறேன்” என்றான். இதைக் கேட்ட வுடனே. மற்றவர்கள் அவனைப் பார்த்து, “தம்பீ! உன்னுடைய சாமர்த்தியமே சாமர்த்தியம்! இராஜரீக தந்திர நிபுணர் களுக்குக் கூட உன் னுடைய புத்தியும் யுக்தியும் வருமா? அஞ்சாத சிங்கம் என்கிற பெயர் உனக்கே தகும்! நீ சொல்லுகிற காரியம் நிறைவேறி, நம்முடைய எண்ணம் முற்றினால், இராமாயணம், பாரதம் முதலிய மகா காவியங் கள் போல, உன் சரித்திரத்தையும் வித்வான்களைக் கொண்டு பாடுவித்து, உன்னைத் தெய்வீகம் ஆக்கி விடச் சித்தமா யிருக்கிறோம்” என்றார்கள். ஆனால்,சில திருடர் கள் அஞ்சாத சிங்கத்தின் அபிப்பிராயத்தை அங்கீகரி யாமல், அவர்க ளுடைய பாக சொத்துக்களை வாங்கிக் கொண்டு, தங்கள் தங்கள் ஊருக்குப் போய் விட்டார்கள். அஞ்சாத சிங்கம் உட்பட ஆறு திருடர்கள் மட்டும், பெண் வீட்டுக்குப் போகவும், நினைத்த காரியத்தை முடிக்கவும், துணிந்தார்கள். 

அஞ்சாத சிங்கம் முக வசீகரம் உள்ளவனாகவும், பராக்கிரமசாலி யாகவும் இருந்த படியால், அவன் மண மகன் போல வேஷம் பூண்டு கொண்டான். மற்றவர்கள் எல்லாரும் அவனுடன் கூடக் கலியாணத்துக்கு வந்த பந்துக்கள் போலப் புருஷீகரித்தார்கள். அவர்கள் எல்லாரும் புறப்பட்டு, முகூர்த்த தினத்துக்கு முந்தின நாள் இரவில், பெண் வீட்டிற் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் யாரென்று அருமைநாத பிள்ளையும் அவனுடைய மனைவியும் வினவ, அவர்களைப் பார்த்து அஞ்சாத சிங்கம் சொல்லுகிறான்? “நாகப்பட்டணத்தி லிருக்கும் நல்ல தம்பி பிள்ளை நான்தான்; உங்களுடைய பெண்ணுக்காக நிச்சயிக்கப் பட்ட மணமகனும் நான்தான். உங்களுடைய உத்தரவுப்படி,புருஷர்களும் ஸ்திரீகளும் உட்பட நாங்கள் இருபது பெயர் புறப்பட்டு வழியில் வரும் போது, திருடர்கள் வந்து வளைத்துக் கொண்டு, எங்கள் கைவசமா யிருந்த சகல சொத்துக்களையும் கொள்ளை யடித்துக் கொண்டு போய் விட்டார்கள். என்னுடைய இடுப்பி லிருக்கிற கோடி வஸ்திரம் தவிர, மற்ற வஸ்திராபரணங்க ளெல்லாம் கொள்ளை போய் விட்டன. எங்களுடன் கூட வந்த மற்றப் புருஷர்களும், ஸ்திரீ ஜனங்களும், இடுப்பிற் கட்டிக் கொள்ளக் கூடத் தகுந்த வஸ்திரம் இல்லாமை யினால் கலியாண வீட்டுக்கு வர வெட்கப்பட்டு, நாகப்பட் டணத்துக்குத் திரும்பிப் போய் விட்டார்கள். நீங்கள் குறித்த முகூர்த்தம் தவறிப் போகாம லிருக்க வேண்டிய தற்காக. நாங்கள் ஆறு பேர் மட்டும் ஊருக்குத் திரும்பா மல், உங்களிடம் வந்து சேர்ந்தோம்” என்றான். இதைக் கேட்டவுடனே, அருமைநாத பிள்ளையும், மற்றவர்களும், அவன் உண்மையான மாப்பிள்ளை யென்றும், அவள் சொன்னதெல்லாம் யதார்த்த மென்றும், நம்பிக்கை கொண்டார்கள். மாப்பிள்ளையைப் பார்த்து உடனே, மாமனாருக்கு ஒரு புஜம் இரு புஜ மாகவும், இரு புஜம் இருபத்து நாலு புஜமாகவும் ஆயின. மாமியார் ஒரு மூலையி லிருந்து கொண்டு, மருமகளை எட்டி எட்டிப் பார்த்து, மனம் பூரித்தாள். மணமகள் அடுத்த அறையி லிருந்து கொண்டு, மணமக னுடைய இனிமையான குர லைக் கேட்டுக் கேட்டு, மன மகிழ்ந்தாள். அருமைநாத பிள்ளை அந்தத் திருட்டு மாப்பிள்ளையை நோக்கிச் சொல் லுகிறான்:- என்னுடைய அருமையான மாப்பிள்ளைத் துரையே! உம்மைக் கண்டேன்; கண் குளிர்ந்தேன். உம் மைத் தரிசித்தது எனக்கு நேத்திரோற்சவம் செய்தது போ லிருக்கின்றது. என்னுடைய மகளுடைய பாக்கி யமே பாக்கியம்! இரதிக்கு மன்மதன் வாய்த்தது போல வும், இந்திராணிக்கு இந்திரன் வாய்ந்தது போலவும். என்னுடைய மகளுக்கு மணவாளனாக வந்து வாய்த்தீர்! இப்படிப்பட்ட லோகாத்தர மான மாப்பிள்ளை யாருக்கா வது கிடைக்குமா? திருடர்களிடத்திலே பறி கொடுத்ததைப் யற்றி, நீர் எவ்வளவும் சிந்திக்க வேண்டாம். இந்த நிமிஷ முதல், என்னுடைய கிருகமும், திரவியங்களும், என் னுடைய மகளும், உம்முடைய ஆதீனந்தான்” என்று சொல்லிச் சொல்லி, நடுச் சாமம் வரைக்கும் மாப்பிள்ளை யைப் புகழ்ந்து கொண் டிருந்தான். மறு நாள் உதய முகூர்த்த மானதால், நடுச் சாமம் துவக்கி மணமகனையும் மணமகளையும் அலங்காரம் செய்தார்கள். விடிந்த உடனே, மணமகன் மணக் கோலத்துடன் கலியாண பீடத்தில் உட்கார்ந்து, பெண்ணுக்குத் திருமங்கிலியமும் சூட்டினான். வேத விதிப் படி நடக்க வேண்டிய மற்ற கிரியா சாரங்களும், கிரமப்படி நடந்தன. இவ்வாறாக, திருட்டு மாப்பிள்ளைக்கும் மோகனமாலைக்கும் விவாகம் நிறை வேறிய பின்பு, நாகபட்டினத்தி லிருந்து உண்மையான மாப்பிள்ளை யாகிய நல்லதம்பி பிள்ளையும், அவனுக்குச் சொந்தமான சில புருஷர்களும் வந்து, கலியாண வீட்டுக் குள் நுழைந்தார்கள். அவர்கள் ஒருவருக்கும் முகப்பழக்க மில்லாதவர்க ளான படியால், அவர்கள் யாரென்று அருமைநாத பிள்ளை வினாவினான். உடனே, நல்ல தம்பி பிள்ளை, தான் இன்னா னென்று தெரிவித்ததும் தவிர, தானும் மற்றவர்களும் புறப்பட்டு மார்க்கத்தில் வரும் போது கொள்ளை நடந்ததும், தாங்கள் ஊருக்குத் திரும்பிப் போய்ச் சாமான்கள் சேகரித்துக் கொண்டு வந்ததும் முதலான எல்லா விவரங்களையும் தெரிவித்தான். இதைக் கேட்ட வுடனே, அங்கே யிருந்தவர்க ளெல்லாரும் பிர மித்து, மயங்கி, நின்றார்கள். உடனே திருட்டு மாப்பிள்ளை யாகிய அஞ்சாத சிங்கம், அந்த உண்மை யான மாப் பிள்ளையைப் பார்த்து, “அட! சண்டாளா! என் தகப்பனை உன் தகப்ப னென்றும், என் பெயரை உன் பெய ரென்றும், சுத்த அபாண்ட மான பொய்யைச் சொல்லுகிறாயே” உன் தலை மேலே இடி விழாதா? நீயும் இப்போது வந்தி ருப்பவர்களும் தானே எங்களை வழிப்பறி செய்தீர்கள். அது போதா தென்று, மாப்பிள்ளை வேஷம் போட்டுக் கொண்டு, இங்கும் திருட வந்து விட்டீர்களா? இப்போது. நீங்கள் தரித்திருக்கிற ஆடையாபரணங்கள் எங்கள் உடமைகள் அல்லவா? அவைகளுக்கு வாயிருந்தால். அவைகளே எங்களுக்காகச் சாக்ஷி சொல்லுமே!” என்று, வெண்கலக் கடையில் மத யானை புகுந்தது போல மட மட வென்று மூச்சு விடாமல் நெடு நேரம் பேசினான்* இதைக் கேட்டவர்கள், உண்மையான மாப்பிள்ளையைத் திருட னென்றும், கிராஹியம் செய்தார்கள். அஞ்சாத சிங்கமே தாலி கட்டிக் கலியாணம் முடிந்து போய் விட்டதால் எல்லாரும் அவன் பக்ஷத்தி லிருந்தார்கள். உண்மை யான மாப்பிள்ளை யானவன் நெடு நேரம் மலைத்துப்போ யிருந்து, பிறகு சொல்லுகிறான்:- “கலி யாணம் நிறைவேறிக் காரியம் முடிந்து போய் விட்டதால், இனிமேல் நான் இன்னா னென்று நிரூபணம் செய்வதினால் ஒரு இலாபமு மில்லை.ஆயினும், என்னை அவன் திருட னென்று சொல்லுகிற படியால், அவன் திருடனா நான் திருடனா வென்று. ஒரு நிமிஷத்தில் மெய்ப்பிக்கிறேன். இந்த ஊரிலும் எனக்கு அறிமுகமான சில கனவான்களிருக்கிற படியால், அவர்களை அழைத்து வந்து, உங் களுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறேன்” என்று கூட அவனும், அவனுடன் சொல்லி, வந்தவர்களும், வெளியே புறப்பட்டுப் போய் விட்டார்கள். அவர்கள் வீண் போக்குச் சொல்லிப் போய் விட்டதாகவும், இனி மேல் திரும்பி வர மாட்டார்க ளென்றும், பெண் வீட்டுக் காரர்கள் எண்ணிக் கொண்டார்கள் ஆனால், அஞ்சா த சிங்கம் மட்டும் அஞ்சுகிற சிங்கம் ஆனான். “தன் நெஞ்சு அறியாத பொய் இல்லை, தாய் அறியாத சூல் இல்லை” என்பது போல், தான் செய்த காரியம் தனக்கே தெரியு மானதால், அந்த உண்மை யான மாப்பிள்ளை தகுந்த மனுஷர்களைக் கொண்டு வந்து உண்மையை ருசிப்பித்தால் என்ன செய்கிற தென்கிற பயங்கரம் அஞ்சாத சிங்கத்தைப் பிடித்துக் கொண்டது. கலியாண வீட்டில் எல்லாரும் பல பல வேலைகளிற் பிரவேசித்துப் பராக்கா யிருக்கும் போது, அஞ்சாத சிங்கமும், அவனைச் சேர்ந்தவர்களும்,. அவர்கள் மேலே தரித் திருந்த விலை மதிக்கக் கூடாத வஸ்திர பூசணாதிக ளுடன், அற்ப சங்கைக்குப் போகிற வர்கள் போற் கொல்லைத் தொட்டத்துக்குள் நுழைந்து, சுவரேறிக் குதித்து, சமீபத்திலி ருக்கிற மலைகள் சூழ்ந்த காட்டுக் குள்ளே நுழைந்து, ஒளிந்து கொண்டார்கள். 

சாக்ஷி கொண்டுவரப் போன நல்லதம்பி பிள்ளை, சில பெரிய மனுஷர்களை அழைத்துக் கொண்டு, கலியாண வீட் டுக்கு வந்தான். அவர்கள் அருமைநாத பிள்ளைக்கு உண் மையைத் தெரிவித்ததும் தவிர, “மணமகளுக்குத் தாலி கட்டின மாப்பிள்ளை எங்கே?” என்றும் வினாவினார்கள். உடனே மாப்பிள்ளையைத் தேட ஆரம்பித்தார்கள். அநுமார் இலங்கையிலே சீதையைத் தேடினது போல், கோட்டைகள், கொத்தளங்கள், மூலைகள், முடுக்குகள், சந்துகள், பொந்துகள், கோயில்கள், குளங்கள், தெருக்கள், திண்ணைகள், தோட்டங்கள், துரவுகள் எங்கும் தேடி, சல்லடை போட்டுச் சலித்தார்கள். மாப்பிள்ளையும் அகப்படவில்லை; மாப்பிள்ளையைச் சேர்ந்தவர்களும் அகப் படவில்லை “சந்தையில் அடித்ததற்குச் சாக்ஷியா?” என்பது போல், அவர்கள் திருடர்க ளென்பதற்கு, அவர் கள் தரித்திருந்த ஆடை யாபரணங்களுடன் ஓடிப் போய் விட்டதே பிரத்தியக்ஷ நிதரிசன மான தால், அந்தச் சுப வீடு அசுப வீடாகி, அருமைநாத பிள்ளையும் அவன் பெண் சாதி முதலானவர்களும் ஒருவரை யொருவர் கட்டிக் கொண்டு, குய்யோ முறையோ வென்று கதறி அழுதார்கள். இந்தச் சமாசாரங்க ளெல்லாம் தேவ ராஜ பிள்ளை கேள்விப் பட்டு, அவர் என்னையும் கனகசபையையும் அழைத்துக் கொண்டு கலியாண வீட்டுக்குப் போனார். நாங்கள் போகும் போது, அருமைநாத பிள்ளை மனைவி பெரும் சப்தத்துடன் ஒப்பாரி சொல்லி, அழுது கொண் டிருந்தாள். அந்த ஒப்பாரியில், ”அக்காள் மகளை அநி யாயஞ் செய்தேனே! பையை யெடுத்தேனே பழியவள் மேற் போட்டேனே! ஐயையோ! தெய்வமே! அத்தனை யும் வீணாச்சே!” என்று சொல்லி அழுதாள். 

தேவராஜ பிள்ளை அங்கே யிருந்தவர்களைப் பார்த்து ‘அந்த ஸ்திரீ அவ்வகையாக ஒப்பாரி சொல்லி அழ வேண் டிய காரணம் என்ன?’ என்று விசாரித்தார். உடனே, அவர்கள், அக்காள் மகளுக்கு அவள் செய்த கொடுமை களைத் தேவராஜ பிள்ளைக்கு இரகசியமாகத் தெரிவித்தார் கள். “பையை யெடுத்தேனே, பழி யவள்மேற் போட் டேனே!” என்றதற்குப் பயன் என்ன வென்று மறுபடி யுந் தேவராஜ பிள்ளை வினவினார். உடனே, நாகப்பட்ட ணத்தி லிருந்து வந்த நல்லதம்பி பிள்ளை தேவராஜ பிள் ளையை நோக்கிச் சொல்லுகிறான்:- “ஐயா! போன மாசத் துவக்கத்தில், எனக்குப் பெண் விசாரிக்கிறதற் காக என் தாய் முதலான சில ஸ்திரீகள் இந்த ஊருக்கு வந்த போது, இந்த வீட்டில் இரண்டு பெண்க ளிருப்பதா கக் கேள்விப்பட்டு, அந்தப் பெண்களுடைய குணங்களை அனுபவ சித்தி யாக அறியும் பொருட்டு இந்த வீட்டில். சில நாள் தங்கியிருந்தார்கள். குணபூஷணி யென்கிற பெண்ணே அவர்க ளுடைய கருத்துக்கு இசைந்ததா யிருந்ததால், அந்தப் பெண்ணை எனக்காகக் கேட்கிற தென்று எண்ணங் கொண்டிருக்கையில், அவர்களுடைய பணப் பை அகஸ்மாத்தாய்க் காணாமற் போய் விட்டது. எல்லா ருடைய பெட்டிகளையுஞ் சோதித்த போது குண பூஷணியின் பெட்டியி லிருந்த அந்தப் பணப் பை அகப் பட்டது. அந்தப் பெண் மேலே என் தாயாருக்கு எவ்வ ளவுஞ் சந்தேக மில்லா திருந்த போதிலும், அவளுடைய சிறிய தாயாரே அவள் மேலே குற்றஞ் சாட்டின படியால், என் தாயார் ஆதியிற் கொண்ட கருத்தை மாற்றி, மோகன மாலை என்கிற பெண்ணை எனக் காகக் கேட்டு, நிச்சயதார்த் தஞ்செய்து வந்தார்கள். இந்தச் சங்கதிகளெல்லாம் என் தாயார் மூலமாக நான் கேள்விப் பட்டேன். இப்போது, அந்த ஒப்பாரியின் கருத்தை யோசிக்கு மிடத்தில், சிறிய தாயாரே பையைத் திருடி, குணபூஷணியின் பெட்டியில் வைத்து, அவள் மேலே பழி போட்ட தாகத் தோன்று, கிறது” என்றான். தேவராஜ பிள்ளைக்கும், எனக்கும், மற்றவர்களுக்கும், அப்படியே அபிப்பிராயம் ஆயிற்று. தேவராஜ பிள்ளை யாதொரு அக்கிரமத்தைப் பற்றிக் கேள் விப் பட்டால், உடனே அதற்குப் பரிகாரஞ் செய்ய வேண்டு மென்ற கவலை யுள்ளவ ரானதால், குணபூஷணிக் கும், நாகப்பட்டணத்திலிருந்து வந்த மாப்பிள்ளைக்கும், விவாகஞ் செய்விக்க வேண்டு மென்கிற இச்சை யுடைய வரானார். அவருடைய கருத்துக்கு எல்லாரும் இசைந்த படியால், அவருங் கூட இருந்து, அந்தப் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சம்பிரமமாகக் கலியாணம் நடப்பித் தார். குணபூஷணி, அந்தக் கலியாணத்தில் சந்தோஷ மா யிராமல், தன்னுடைய தங்கைக்கு நேரிட்ட அவமா னத்தை நினைத்து நினைத்துப் பொருமிக் கொண் டிருந் தாள். இதுவும் அவளுடைய கீர்த்திப் பிரதாபத்தை மேன் மேலும் விளங்கச் செய்தது. திருடன் அவகடமாய் வந்து மோகனமாலைக்குத் தாலி கட்டினது செல்லா தென்றும். அவளை வேறே யாருக் காவது பாணிக்கிரகணஞ் செய்து கொடுக்கத் தடை யில்லை யென்றும், சாஸ்திரந் தெரிந்த பிராமணோத்தமர்கள் வியாக்கியானஞ் செய்த போதிலும், அவளுக்குத் திருடன் தாலி கட்டினா னென்கிற அபக் கியாதி ஊரெங்கும் பிரசித்த மான படியால், அவளை ஒரு வரும் வதுவை செய்யத் துணிய வில்லை. குணபூஷணியி னுடைய ஓயா முயற்சியினால், நாகப்பட்டணத்தில் மோகனமாலைக்கும் ஒரு புருஷன் கிடைத்து, விவாகம் நிறைவேறி, எல்லாரும் க்ஷேமமா யிருக்கிறார்கள். 

34-ஆம் அதிகாரம்

வேட்டை பார்க்கப் போய் வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டது-அநீத வழக்குகள் 

ஆதியூருக்கு வடக்கே, இரு காத வழி தூரத்துக்கு அப்பால், எல்லை காணக் கூடாத விஸ்தீரண மான காடு களும், மலைகளும் இருந்தன. அவைகளில் யானை, புலி, கரடி முதலிய துஷ்ட மிருகங்கள் பெருகி, அடுத்த கிராமம் களிலிருக்கிற ஜனங்களுக்கும், ஆடு, மாடு முதலியவை களுக்கும் சேதத்தை உண்டு பண்ணின படியால், அந்த மிருகங்களை நாசஞ் செய்யும் படி வேட்டைக்காரர்களுக்கு உத்தரவு கொடுக்க வேண்டு மென்று, பல கிராமத்தார் வந்து, தேவராஜ பிள்ளை யிடத்தில் முறையிட்டுக் கொண்டார்கள். உடனே, அவர் வேட்டைக்காரர்களை அழைப்பித்து, மிருக வேட்டை யாடும்படி உத்தரவு கொடுத்தார். நானும் கனகசபையும் வேட்டை பார்க்க விரும்பினமையால், தேவராஜ பிள்ளை அவருடைய பெரிய பட்டத்து யானையைச் சிங்காரித்து, வேட்டை யாடுகிற கானகத்திலே கொண்டு போய்ச் சித்தமாய் வைத்திருக் ம் படி, உத்தரவு செய்தார்.நானும் கனகசபையும், குதிரைகளின் மேலேறிக் கொண்டு, கானகத்துக்குப் போனோம். என்னுடைய குதிரை யானை நின்ற இடத்துக்கு முந்திப் போய் விட்டதால், நான் குதிரையினின் றிழிந்து, யானை மேல் ஏறி, அம்பாரியில் உட்கார்ந்து கொண்டேன். யானைப் பாகன் கனகசபை யைக் காணாமையினால், வழியைப் பார்த்துக் கொண்டு, யானைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். வேடர்களாற் கலைக்கப் பட்டு ஒரு பெரும் புதரிற் பதுங்கிக் கொண் டிருந்த ஒரு புலி யானது. அந்தப் பாகன் மேலே பாய்ந்து, அவளைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம் பித்தது.உடனே, நான், என் கையி லிருந்த துப்பாக்கி யிற் குண்டு போட்டுக் கெட்டித்து, புலியின் மேலே பிரயோகித்தேன். அந்தக் குண்டுகளையும் புலி இலக்ஷியம் செய்யாமல், பாகனைத் தூக்கிக் கொண்டு ஓடிற்று.யானை தன் முதுகின் மேலே வெடிச் சத்தங் கேட்ட உடனே வீரிட்டுக் கொண்டு, அந்தப் புலியைத் தொடர்ந்து சென்றது.புலி வெகு தூரம் வரையில் ஓடி, யானை நுழையக் கூடாத ஒரு மலைக் குகைக் குள்ளாக நுழைந்து விட்டது. ஒரு பர்வதம் மலை யருவி களுடன் நடந்து போவது போல. அந்த மத யானை மத ஜலங்களை ஒழுக விட்டுக் கொண்டு, குறுக்கே யிருக்கிற மரங்கள் செடிகளை முறித்துத் தள்ளி, இடி முழக்கம் போலச் சப்தித்துக் கொண்டு,கன வேகத்துடன் கானகத்துக் குள்ளாக நடந்து போவதைப் பார்த்த மற்ற யானைகள், புலி, கரடி முதலியவைகள் அஞ்சி, நடுநடுங்கி, அங்கும் இங்கும் ஓடிப் பதுங்கிக் கொண்டன. இவ் வகை யாக, அந்த யானை, பல நாள் வரைக்கும் என்னையும் சுமந்து கொண்டு, அநேக கான் யாறு, மலைக ளெல்லாம் தாண்டி, வட திசையை நோக்கி ஓடிற்று. அதை வசப் படுத்தித் திருப்ப, நான் செய்த பிரயத்தனங்க ளெல்லாம் வியர்த்தமாய்ப் போய்விட்டன. நான் புலி வாயில் அகப்பட்ட மான் போலவும், பூனை வாயில் அகப்பட்ட கிளி போலவும், யமன் கையில் அகப்பட்ட உயிர் போலவும் தத்தளித்துத் தடுமாறித் தயங்கினேன். எனக்காகவும் கனகசபைக்காகவும் பல பாத்திரங்களில் அநேக வகையான பக்ஷணங்களும் பல காரங்களும், ஜலமும் அம்பாரிக்குள் வைக்கப்பட்டிருந் தாலும். நான் மனக் கலக்கத்தினால் மூன்று நாள் வரைக் கும் ஆகாரத்தை நினைக்கவேயில்லை. பிறகு, நான் அந்தப் பக்ஷணங்களையும், ஜலத்தையும் அருந்தி, ஒருவாறு பசி தீர்த்துக் கொண்டேன். பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையானது, அந்த ஸ்திதியில் தானும் ஒரு ஆகாரத்தை அபேக்ஷித்தால் எப்படியோ, அப்படிப் போல், அந்த மத யானையிடத்தில் அகப்பட்டுக் கொண்டு பரிதபிக்கிற நானும் ஆகாரம் செய்தேன். அந்த மத யானை ஒரு இடத்திலும் நில்லாமல், அல்லும் பகலுமாக அநேக நாள் ஓடின பிறகு, ஒரு பெரிய மலை யருகில் வந்து சேர்ந்தது. அந்த மலைச் சாரலில் எண்ணிறந்த யானைகள், கூட்டம் கூட்டமாய்ச் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. அந்த யானைகளில் ஒன்றாவது இந்த யானையைப் போலப் பெரும் காத்திர முள்ள தாயிருக்க வில்லை. மாமிச பர்வதம் போலவும், இடி முழக்கத்துடன் மேகம் கர்ச்சித்துக் கொண்டு வருவது போலவும், அந்த யானை ஓடி வருவ தைக் கண்ட மற்ற யானைகள் கர்ப்பம் கலங்கி, கிடுகிடாய், விட்டன. அந்த மானமாய், அங்குமிங்கும் ஓடிப்போய் யானை எங்கும் நில்லாமல் ஒரே ஒட்டமாய் அந்த மலைச் சார்பை நாடி வந்ததை யோசிக்கு மிடத்தில், ஆதியில், இந்த இடம், அந்த யானை வசித்த இடமாயிருந்திருக்கலா மென்று தோன்றிற்று. யானை மலை யோரத்திற் சென்று தாண்டித் தாண்டி, தன் மேலிருந்த அம்பாரியை மலையுடன் சேர்த்து மோதிற்று. உடனே அந்த அம்பாரி சுக்குச் சுக்காக உடைந்து, அதிலிருந்த நாள் வெளிப் பட்டு மலை மேலே தொத்திக் கொண்டேன். நான் அம்பாரியிற் கழற்றி வைத்திருந்த என் தலை முண்டாசு, சட்டை முதலியவைகள், அந்த மலையில் எனக்கு எட்டாத இடத் தில் மாட்டிக் கொண்டன. பிறகு அந்த யானை என் கண் ணுக்கு மறைவாய்ப் போய் விட்டதால், அதன் செய்தி. யாதொன்றும் எனக்குத் தெரியாது. 

யானைகளுடைய பயத்தினால் நான் கீழே இறங்கக் கூடாமலும், மேலே போவதற்கு மார்க்கம் இல்லாமலும்.. திரிசங்கு ஸ்வர்க்கம் போல, நான் அந்தரத்தில் அகப்பட் டுக் கொண்டேன். அந்த மலை செங்குத்தாயிராமல், சாய் வாகவும் கரடு முரடாகவும் இருந்த படியால், நான் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே ஏற ஆரம்பித்தேன். நான் போகிற வழியிலுள்ள மரங்களில், என் பெயரை ஒரு ஆணியினால் வரைந்து கொண்டு போனேன். நான் மலை விருக்ஷங்களின் கனிகளை யுண்டு, பசி தீர்த்துக் கொண்டு, மலை மேல் ஏற, இரண்டு நாட்கள் சென்றன. நான் மலை முகட்டிற் சேர்ந்த உடனே, அந்தப் பக்கத்தில் இறங்குவதற்கு வழியிருக்கிறதோ வென்று ஆராய்ந்தேன். மலைக்கு வட புரத்தில் மனுஷர்கள் ஏறும் படியாகவும், இறங்கும் படி யாகவும் படிகள் வெட்டப்பட்டிருந்தன. அவைகளைப் பார்த்த உடனே எனக்குச் சந்தோஷம் உண்டாகி, அந்தப் படிகளின் வழியாக இறங்க ஆரம்பித்தேன். நான் ஒரு நாட் பகலும் இரவும் மெள்ள மெள்ள இறங்கி, மறுநாட் காலையில் அடிவாரத்தில் வந்து சேர்ந்தேன். அந்த மலை எவ்வளவு உயரமோ, அவ்வளவு உயர மான மதிளும், நாக லோகம் வரையிற் செல்லா நின்ற அகழியும் உடைய ஒரு பெரிய நகரம், அந்த மலையடிவாரத்திலிருந்தது. நான் கோட்டை வாசலைக் கடந்து, தெருவீதி வழியாய்ப் போகும் போது, ஒரு சக்கிலியன் இரண்டு ஜோடுகளைக் கையில் வைத்துக் கொண்டு, விலை கூறிக் கொண்டு எதிரே வந்தான். அப் போது வெயில் அதிகரித்து, பூமியிற் கால் வைக்கக் கூடாம லிருந்த படியால், அந்த ஜோடுகளை வாங்கி, என் காலில் மாட்டிப் பார்த்தேன். அவைகள் என் காலுக்குச் சரியா யிருந்த படியால், நான் அந்த சக்கிலியனைப் பார்த்து, ”உன்னை நான் சந்தோஷப் படுத்துகிறேன்; இந்த ஜோடு களை விலைக்குக் கொடு” என்றேன். அவன் நல்ல தென்று சம்மதித்தான். அந்த ஜோடுகள் அரை வராகன் பெறு மானதால், அந்தத் தொகையைச் சக்கிலியன் கையிற் கொடுத்தேன். அவன், “எனக்குச் சந்தோஷம் வர வில்லை” என்றான். நான் மறுபடியும் கால் வராகன் கொடுத்தேன். அவன் அதையும் வாங்கிக் கொண்டு, சந் தோஷம் வரவில்லை யென்றான். நான் பின்னும் சில தொகை கொடுத்தேன். அவன் நான் கொடுப்பதை யெல்லாம் வாங்கிக் கொண்டு, “சந்தோஷம் இல்லை! சந் தோஷம் இல்லை!!” என்றான். நான் அவனைப் பார்த்து “உன்னுடைய ஜோடு எனக்கு வேண்டாம். என்னுடைய பணத்தைக் கொடு” என்று கேட்டேன். அவன் உடனே என்னைப் பிடித்துக் கொண்டு, ”என்னைச் சந்தோஷப் படுத்துவ தாக ஒப்புக் கொண்ட நீ, அப்படிச் செய்யத் தவறிப் போய் விட்டதால், உன்னை நான் சும்மா விடு ‘வேனோ? என்னுடைய ஜோட்டை நீ காலில் மாட்டிப் பார்த்த பிறகு, அவைகளை நீ கொடுத்தால், நான் வாங்கு வேனா? நியாய சபைக்குப் போவோம், வா” என்று என்னைப் பற்றி இழுத்துக் கொண்டு போனான். அவன் கையைத் திமிறிக் கொண்டு நான் தப்பித்துக் கொள்வது எளிதா யிருந்தாலும், “தன்னூருக்கு யானை. அயலூருக்குப் பூனை” என்பது போல், நான் என்னுடைய ஸ்வரூபத்தைக் காட்டா மல், அடக்கிக் கொண்டு போனேன். 

போகும்போது, சக்கிலிய னிடத்தில் உத்தரவு பெற்றுக் கொண்டு, நிழலுக் காகச் சற்று நேரம் ஒரு திண்ணையில்’ உட்கார்ந்தேன். அந்தத் திண்ணையிலே சிலர் சூது விளையாடிக் கொண்டி ருந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து, “பந்தயம் என்ன?” என்று கேட்டேன். அவர்கள், “சும்மா” என்றார்கள். நான் பந்தயமில்லை யென்று நினைத்து, அவர்களுடன் கூடி, ஒரு ஆட்டம் ஆடித் தோற் றுப் போனேன். சக்கிலியன் எனக்கு உத்தரவு கொடுத்த நேரம் கடந்து போய் விட்டதால், நான் அவனுடன் போவதற் காகத் திண்ணையை விட்டு எழுந்தேன்.உடனே அந்தச் சூதாடிகள், “சும்மாவைக் கொடு” என்று என் மடி யைப் பிடித்துக் கொண்டார்கள். நான் ஒன்றும் தோன்றா மல், மேலும் கீழுமாக விழித்தேன், அவர்கள் என்னைப் பார்த்து, “தீ பந்தயம் என்ன வென்று எங்களைக் கேட்ட போது, நாங்கள் சும்மா என்றோம். அதற்கு நீ சம்மதித்துத் தானே, எங்களுடன் விளையாடினாய், நீ தோற்றுப் போன தால், நீ ஒப்புக் கொண்ட படி சும்மாவைக் கொடுக்க வேண்டும்” என்றார்கள். நான், ‘சும்மா வென்பது யாது?’ என்றேன். உடனே, “நியாய சபைக்கு வா” என்று, அவர்கள் ஒரு பக்கத்தில் என்னைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்தார்கள். 

நாங்கள் போகும் போது ஒற்றைக் கண் குருடன் ஒருவன் எங்களுக்கு எதிரே வந்தான். அவன் என்னைக் கண்ட உடனே ஓடி வந்து,”அடா திருடா! நீ போன வருஷத்தில் திரு நாளுக்குப் போவதற் காக, உன்னு டைய குருட்டுக் கண்ணை எனக்குக் கொடுத்து விட்டு, என்னுடைய நல்ல கண்ணை இரவல் வாங்கிக்கொண்டு போனாயே! கெடுத் தப்பி இத்தனை நாளாகியும் ஏன் என் கண்ணைக் கொடுக்கவில்லை?” என்று அவன் ஒரு பக்கத்தில் என்னைப் பிடித்துக் கொண்டான். 

பிறகு, ஒற்றைக் கால் நொண்டி யான ஒருவன் வந்து என்னைப் பார்த்து, “என்னுடைய நல்ல காலை இரவல் வாங்கிக் கொண்டு நொண்டிக் காலைக் கொடுத்து விட்டுப் போன நீ இந்நாள் வரையில் அகப்படாமல் மறைந் திருந் தாயே! நியாய சபைக்கு வா என்று” அவனும் என்னைக் கைப்பற்றிக் கொண்டான். 

நாங்கள் போகிற மார்க்கத்தில், தேசாந்திரிகளுக்குச் சமையல் செய்து விற்கிற பாக சாலை ஒன்று இருந்தது சமையல் செய்கிற இடத்தி லிருந்து கமகம் வென் று பரிமள வாசனை வந்த படியால், நான் சற்று நேரம் சன்ன லுக்கு நேரே நின்று, அந்த வாசனையை மூக்கினால் இழுத்தேன். உடனே, பாக சாலைக்காரன் ஓடி வந்து, என்னைப் பார்த்து, “பாகம் செய்யப் பட்ட பதார்த்தங் களின் வாசனையை நீ மூக்கினால் கிரகித்துச் சாப்பிட்ட படியால், அந்தப் பதார்த்தங்களுக்கு நீ விலை கொடுக்க வேண்டும்” என்று, அவனும் பிடித்துக் கொண்டான். 

நான் மறுபடியும் செல்லும் பொழுது, என்னுடைய நிழல், வழியில் நின்று கொண் டிருந்த ஒரு தாசியின் மேலே பட்ட வுடனே, அவள் ஓடி வந்து, “நீ என்னை லிங்கனம் செய்தபடியால், அந்த ஆலிங்கனத்துக்குக்காக ஆயிரம் வராகன் கொடுக்க வேண்டும்” என்று, அவளும் என்னைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டாள். 

விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக் கொண்ட போல், நான் மத யானைக்குத் தப்பிப் பிழைத்து, இந்தக் கொடியர்க ளிடத்தில் அகப்பட்டுக் கொண்டு, பட்ட பாடுகள், ஜன்ம ஜன்மத்துக்கும் போதும். என்னுடைய கழுத்திலும், காதுகளிலும், கைகளிலும் நான் பல ஆபரணங்களைத் தரித்துக் கொண் டிருந்தேன். அந்த ஆபரணங்களை இச்சித்தே, அவர்கள் என்னை அநியாயம் செய்ததாக எனக்கு ஸ்பஷ்டமாய் விளங்கிற்று. அந்த அநியாயக்காரர்களுக்கு நகைகளைக் கொடுத்துத் தயவு சம்பாதிப்பதைப் பார்க்கிலும், நியாயாதிபதிகள் செய்யும் தீர்மானத்துக்கு உட்படுவது நலமென்று நினைத்து, நியாய சபைக்குப் போனேன். நாங்கள் போவதற்கு முந்தி நியாய சபை கலைந்து போய்விட்டதால், அன்றைக்கு விசாரணை நடக்க வில்லை. அந்தத் துஷ்டர்கள் என்னைக் காவற் கிடங்கில் ஒப்புவிப்பதற் காகக் கொண்டு போனார்கள். என்னுடைய நகைகளை நானே ஸ்வேச்சையாய்க் கொடுத்து விடுவே னென்று அவர்கள் எதிர்பார்த்தும், நான் கொடுக்கவில்லை. அவர்களும் விடாத கண்டகர்கள்; நானும் கொடாத கண்டக னானதால், அவர்கள் என்னை வழிப்பறி செய்ய ஆரம்பித்தார்கள். எப்படி யென்றால், மாலைக் காலம் வந்து இருட்டின உடனே, அவர் களுள் ஒருவன் என் பின்னே வந்து, என் கண்களைப் பொத்திக் கொண்டான். இருவர்கள் என்னுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டார்கள். மற்ற வர்கள் எல்லோரும், என்மே லிருந்த ஆபரணங்களைக் கழற்றி ஆளுக்கொரு ஆபரண மாகத் தரித்துக் கொண்டார்கள். உடனே நான், “கூ, கூ, கொள்ளையடிக்கிறார்கள்” என்று கூவினேன். அந்தச் சப்தம் கேட்டுக் காவற் சேவகர்கள் வந்து வளைத்துக் கொண்டு, நடந்த சங்கதியை விசாரித் தார்கள். நான், “என்னுடைய ஆபரணங்களை அந்தப் படு பாவிகள் கழற்றிக் கொண்டார்கள்” என்று முறை யிட்டேன். அவர்கள் என் சொல்லை மறுத்து, “அந்த ஆபரணங்கள் தங்களுக்குச் சொந்தம்” என்று சாதித்தார்கள். அந்தக் காவற் சேவகர்கள் என்னைப் பார்த்து, ”அந்த நகைகள் உனக்குச் சொந்தமல்ல வென்று அவர்கள் சொல்லுகிறார்கள்; அவர்களுக்குச் சொந்த மல்ல வென்று நீ சொல்லுகிறாய். ஆகையால், நீங்கள் இரு திறத்தாரும் அந்த நகைகளுக்குச் சுதந்தரவாளிகள் அல்ல வென் பதற்கு, உங்களுடைய வாய்ப் பிறப்பே போதுமான தாயிருக்கிறது. நாதன் இல்லாச் சொத்துக்கு நாங்கள் பாத்தியஸ்தர்க ளானதால், அந்த நகைகள் எங்களுக்குத்தான் சொந்தம்” என்று சொல்லி, நகைகளைப் பறித்துக் கொண்டார்கள். பிறகு அந்தச் சக்கிலியன் முதலிய துர் வழக்காளிகள் என் மேலே குற்றம் சாட்டி, என்னைக் காவலில் வைக்கும்படி வேண்டிக் கொண்டார்கள். அந்தப் பிரகாரம், சேவகர்கள் என்னைப் பிடித்து, கை விலங்கு, கால் விலங்கு மாட்டி, திரௌ பதியைத் துகிலுரிந்ததுபோல், என்னுடைய வஸ்திரங் களையும் பிடுங்கிக் கொண்டு, கௌபீனத்துடன் என்னைக் காவலில் வைத்துக் கொண்டார்கள். வேலியே பயிரை மேய்ந்தது போல அந்தக் காவற் சேவர்களுடைய செய்கையே அப்படியிருக்குமானால். என்னைப் பிடித்துக் கொண்டு வந்த சக்கிலியன் முதலானவர்கள் மேலே குறை சொல்ல எனக்கு வாயும் உண்டா? 

35-ஆம் அதிகாரம்

காவற் சேவகர்களின் குமார்க்கம்-விக்கிரம புரியின் விருத்தாந்தம்–குடியர சென்னுங் கொடிய அரசு

தாடி பற்றி எரியும்போது சுருட்டுக்கு நெருப்புக் கேட்டது போல், அந்தக் காவல் வீரர்கள் என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்:- “இந்த ஊரிலே சிலஆஸ்திவந்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு ஒன்றுங் கொடுக்கிறது மில்லை; குற்றஞ் செய்கிறது மில்லை. அவர்கள் உன்னிடத்திலே திருடினது போற் குற்றஞ் சாட்டி, சில தடையங்களை அவர்களுடைய வீட்டிற் போட்டு எடுத்து, அவர்களை விசாரணைக்குக் கொண்டு வர யோசித் திருக்கிறோம். நீ அந்தத் திருட்டுக் குற்றம் வாஸ்தவந்தா னென்று சாக்ஷி சொன்னால், எங்களுக்குக் கிடைக்கிற தொகையில் உனக்கு நாங்கள் பங்கு கொடுக்கிறது மல்லாமல், உன் மேலே இப்போது வந்திருக்கிற குற்றங் களையும் நிவர்த்தி செய்து விடுகிறோம்” என்றார்கள். அவர்கள் சொன்ன ஆசை வார்த்தைகள் எப்படிப் பட்டவர் களுடைய புத்தியையும் மயக்கக் கூடியவைகளா யிருந்தா லும், என்னுடைய தாய் தகப்பன்மார்கள் எனக்குச் செய்த பால போதத்தினால், நான் துர்ப்புத்திக்கு இடங் கொடாமல், அந்தக் காவற் சேவகர்களை நோக்கி, “நீங்கள் சொல்லுகிறபடி பொய்ச் சாக்ஷி சொல்ல நான் அருக னல்ல. நான் ஒரு குற்றமுஞ் செய்யாம லிருக்கும் போதே கடவுள் என்னை இந்த நிலைமையில் விட்டிருக்கிறார். நான் பொய்ச் சாக்ஷி சொல்லவும் வேண்டுமா?” என்றேன். அவர்கள், மறுபடியும் என்னை நோக்கி, “நீ பொய்ச் சாக்ஷி சொல்ல அஞ்சுகிற படியால், வேறொரு காரியம் சொல்லு கிறோம். அதையாவது நீ செய்ய வேண்டும். எங்களுக்கு வெகு காலமாக உத்தியோகம் உயரவில்லை. ஏனென்றால், நாங்கள் மானத்தைப் பார்க்கிலும் பிராணனைப் பெரிதாக எண்ணுகிற சூரர்களான படியால், ஒரு வீட்டில் திருடர் கள் பிரவேசித்துத் திருடும் போதாவது, அல்லது வேறு குற்றங்கள் நடக்கும் போதாவது, நாங்கள் போய்க் கலந்து கொள்ளுகிறதில்லை. திருடர்கள் சொத்துக்களை யெல்லாம் வாரிக்கொண்டு ஓடின பிற்பாடு, நாங்கள் திருட்டு நடந்த இடத்துக்குப் போய் விசாரிக்கிறது வழக்கம். நாங்கள் குற்றம் நடக்கும்போது பிரவேசித்துத் தடுக்காமலும், திருடர்களைக் கையுங் களவுமாய்ப் பிடிக்காமலு மிருப்பதால், எங்களை உத்தியோகத்தில் உயர்த்த மாட்டோமென்று மேலான அதிகாரிகள் சொல்லுகிறார்கள். ஆகையால், நாங்களே சில திருடர்களைச் சேர்த்து, ஒரு வீட்டில் திருடும்படி செய்து, அவர்களைக் கையுமெய்யு மாய்ப் பிடித்தது போற் பாவனை செய்ய யோசித்திருக் கிறோம். அவர்களைக் காட்டிக் கொடுக்கிறதில்லை யென்று நாங்கள் வாக்குறுதி செய்தால், அவர்கள் எங்களுடைய வார்த்தையை நம்பி, அகத்தியம் திருடச் சம்மதிப்பார்கள். அவர்கள் திருடின பிற்பாடு, அவர்களைக் காட்டிக் கொடுத்தால், தோஷம் என்ன? அவர்கள் திருடுகிற சொத்தை நாங்கள் கைப்பற்றிக் கொள்வது மன்றி, எங் களுக்கு உத்தியோகம் உயரவும் ஹேதுவா யிருப்பதால், இரண்டு விதமான அநுகூலங்கள் இருக்கின்றன. சில திருடர்கள் தங்களுடைய கிருகங்களைப் பார்க்கிலும். காராக் கிருகத்தைச் சிரேஷ்டமாக எண்ணி, அவ்விடத் துக்கு எப்போது போவோமோ என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பட்ட திருடர்களை ஒரு வீட்டில் திருடும் படி ஏவி, பிறகு அவர்களைக் காட்டிக் கொடுப்பதினால், அவர்களுக்கு நாங்கள் உபகாரம் செய்கிறோமே யன்றித் தீங்கு செய்ய வில்லை.நீயும் அந்தத் திருடர்களுடன் சேர்ந்து திருடினால், உன்னை மட்டும் நாங்கள் ஒருநாளும் காட்டிக் கொடோம். உன்னைத் தகப்பனாக வைத்துக் கொண்டு, நாங்கள் நினைத்த காரி யத்தை முடிக்கிறோம்” என்றார்கள். இந்த வார்த்தைகளை கேட்ட உடனே நான் இரண்டு காதுகளையும் பொத்திக் கொண்டு, இப்படிப் பட்ட அயோக்கியர்களுடன் சகவாசம் செய்யும் படி லபித்ததே யென்று நினைத்து தினைத்து, நெடு நேரம் பெருமூச் செறிந்தேன். அந்த ஊர் தவிர, வேறெந்த ஊரிலாவது அப்படிப்பட்ட வார்த்தைகளை யாராவது சொல்லியிருந்தால், அவர்களுடைய தாவு உடனே அறுபட்டிருக்கும். அவர்களுடைய முப்பத்திரண்டு பல்லும் உடைபட்டிருக்கும். ஆயிரம் பாம்பு களுக்குள் ஒரு தேரையைப் போல அகப்பட்டுக் கொண்டு தவிக்கிற நான் என்ன செய்யக் கூடும்? நான் அவர்களைப் பார்த்து, “நீங்கள் சொல்லுகிற காரியத்தை நிறைவேற்ற நான் சமர்த்தன் அல்ல. அதற்குத் தகுந்த பக்குவசாலிகள் உங்களுக்கு யதேஷ்டமாக அகப்படுவார் கள். ஆகையால், என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்றேன். இதைக் கேட்டவுடனே, அந்த பாபிஷ்டர்கள் கோபிஷ்டர்களாகி, என் மேலே ஏற்பட்டிருக்கிற குற்றங் களைப் பலப்படுத்தவும், அந்தக் குற்றங்களை அவர்கள் முன் பாக நான் ஒப்புக் கொண்டது போலப்படு முடிச்சு முடிய வும். ஆரம்பித்தார்கள். அவர்கள் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்ப்பது யாருக்கும் அசாத்திய மாகையால் நான் வலையில் அகப்பட்ட மான் போலவும், தூண்டியில் அகப்பட்ட மீன் போலவும், துடித்துப் பதைத்துத் தடு மாறினேன். 

என்னோடு கூடக் காவற் கூடத்தில் இருந்தவர்களில் ஒருவன் சுமுகனாயும் சரசியாயும் காணப்பட்ட படியால், நான் அவனைப் பிரத்தியேகமாக அழைத்து, இந்த ஊர்ப் பெயரும், அரசன் பெயரும் என்னவென்றும் இராஜரீக தர்மமும், நியாய பரிபாலமும், எப்படியென்றும் விசாரித்தேன். அவன் என்னைப் பார்த்து, “நீர் அன்னிய தேசத்தார் போற் காணப் படுகின்றது. இந்த ஊருக்கு ‘விக்கிரமபுரி’ என்று பெயர். பல நாடுகளுக்கு இது இராஜ நகரமா யிருக்கின்றது. இதை ஆண்ட அரசன், இதற்கு இரண்டு வருஷத்துக்கு முன்பு, புருஷப் பிரஜை யில்லாமல் இறந்து போனான். அது முதல், இந்த ஊர் அரச னில்லாமல் பிரஜாதிபத்தியமா யிருக்கிறது.ஒவ் வொருவனும் தான்தான் பெரியவ னென்று. தலைக்குத் தலை மூப்பாய்,தறிதலையாய்த் திரிகிறபடியால், இந்த நாடு தலை யில்லாத சரீரம் போலத் தத்தளித்துக் கொண் டிருக்கின்றது. சூரியன் போன பிற்பாடு துஷ்ட மிருகங் போன கள் வெளிபட்டுச் சஞ்சரிப்பது போல, அரசன் பிற்பாடு அக்கிரமக்காரர்கள் கிளம்பி ஊரைப் பாழாக்கி விட்டார்கள். சாதுக்கள் எல்லாரும் ஒடுங்கிப் போனார்கள். வெளியே போனால் மறுபடியும் வீட்டுக்குத் திரும்பி வருவோமென்கிற நம்பிக்கையில்லை. நம்முடைய பொருளை நாமே சுதந்தரமாக அநுபவிப்போ மென்கிற நிச்சய மில்லை. ”பாமூருக்கு நரி இராஜா” என்பது போல், துஷ்டர்களே சர்வ வியாபகமாயிருக்கிற படியால், இலக்ஷாதிபதியாயிருக்கிறவன். ஒரு நிமிஷத்தில் பிக்ஷாதி பதி யாகிறான்; பிக்ஷாதிபதியாயிருக்கிறவன் இலக்ஷாதி பதி யாகிறான். இந்த ஊருக்கு விக்கிரமபுரி யென்ற பெயர் போய், அக்கிரமபுரி யென்கிற பெயர் வந்து விட் டது. பெரிய அரண்போல மலைகளும் சமுத்திரங்களும் சூழ்ந் திருப்பதால் இந்த ஊருக்கு வெளிச் சத்துருக்கள் ஒருவரு மில்லை. உட்சத்துருக்க ளுடைய போராட்டமே பெரிதா யிருக்கின்றது. குடியரசு கொடிய அரசாகி விட்டதால், சீக்கிரத்தில் ஒரு அரசனை நியமிக்க வேண்டு மென்பது சாதுக்களுடைய மனோ பாவமா யிருக்கின்றது அப்படிப்பட்ட நல்ல காலம் எப்போது வருமோ தெரிய வில்லை” என்றான். 

நான் அந்த மனுஷனைப் பார்த்து, “இப்போது அரச னில்லாத படியால் நம்முடைய சங்கதிகளை யார் விசாரிப் பார்கள்?” என்று கேட்டேன். அவன் என்னைப் பார்த் துச் சொல்லுகிறான்:- “அரசனால் நியமிக்கப்பட்ட ஒரு நியாயாதிபதி யிருக்கிறான்; அவன்தான் நம்முடைய சங்கதிகளை விசாரிப்பான. அவன் அரசன் உள்ள வரை யில் உருத்திராக்ஷப் பூனை வேஷம் போட்டுக் கொண்டு வந்தான். அரசன் இறந்த பிறகு, அவனுடைய யதார்த்த சொரூபத்தைக் காட்டி விட்டான். இயமனுக்குத் தர்ம ராஜா என்கிற பெயர் வாய்த்தது போல இவனுக்கு நியா யாதிபதி என்கிற பெயர் கிடைத் திருக்கின்றது. அவன் சிஷ்ட நிக்கிரகமும் துஷ்டாநுக்கிரகமும் செய்கிறதே யன்றி, துஷ்ட நிக்கிரகமும் சிஷ்டா நுக்கிரகமும் செய்கிற தில்லை. அவன், ஒரு மாசத்தில் ஒரு தரம் அல்லது இரண்டு தரம் தான் நியாய சபைக்கு வருகிற வழக்கம். அந்த ஒரு நாளையிற் கெடுகிற குடிகள் ஆயிரத்துக்கு அதி கமா யிருக்கலாம். அவன் நியாயா நியாயங்களைப் பார்த் துத் தீர்மானிக்காமல் குருட்டு நியாய மாக ஆறு மாசம் வரையில் வாதிகள் பக்ஷத்திலும், ஆறு மாசம் வரை யிற் பிரதிவாதிகள் பக்ஷத்திலும் தீர்மானிக்கிற வழக் கம். இப்போது வாதிகள் பக்ஷந் தீர்மானிக்கிற கால படியால் நம்மேல் வந்திருக்கிற வழக்குகளை நமக் பிரதிகூலமாகவும் வாதிகளுக்கு அனுகூல மாகவும் தீர்ப்பா னென்கிறதற்குச் சந்தேகமில்லை. நாம் பிராண னுடன் வீட்டுக்குத் திரும்பிப் போய் நம்முடைய பெண் ஜாதி பிள்ளைகள் முகத்தில் விழிப்போ மென்கிற நம்பிக் பிக்கையைக் கட்டோடே விட்டுவிட வேண்டியது தான்” என்றான். இதைக் கேட்ட உடனே, எனக்கு உண்டான துயரம் எப்படிப் பட்ட தென்றால், அதற்கு முன் ஒரு நாளும், அப்படிப் பட்ட துயரத்தை நான் அனுபவித்த தில்லை. தேவராஜ பிள்ளைக்குச் சாக்ஷி சொன்ன தற்காக, விசாரணைக் கர்த்தர்கள் விதித்த தண்டனைக்குந் தப்பி, ஊரிலே மதயானைக்குந் தப்பி, இந்தப் பாவிக ளுடைய இறக்கவா வந்தோ மென்று நினைத்து, நினைத்து நெஞ்சம் புண்ணாகிக் கலங்கினேன். 

“கண் குருடானாலும் நித்திரைக்குக் குறைவில்லை” என்பது போல, நியாயாதிபதி தினந்தோறும் நியாய சபைக்கு வராவிட்டாலும், அவன் என்றைக்கு வருவா னென்கிற நிச்சயந்தெரியாமையினால், நாங்கள் தினந் தோறும் நியாய ஸ்தலத்துக்குப் போய் அலைந்துகொண்டு வந்தோம். அவன், இருபது நாளைக்குப் பிறகு, ஒரு நாள் நியாய ஸ்தலத்துக்கு வந்து, என்னுடைய சங்கதிகளை முந்தி விசாரிக்க ஆரம்பித்தான். சக்கிலிய னுடைய வழக்கு முதல் வழக் கானதால், நியாயாதிபதி னுடைய வாதத்தையும், என் னுடைய வாதத்தையுங் கேட்டுக் கொண்டு, தீர்மானஞ் சொல்லத் தொடங்கினான். நியாயாதிபதி என்னைப் பார்த்து, ”சக்கிலியளை சந்தோஷப்படுத்துவதாக நீ ஒப்புக் கொண்ட படியால்,நாளைத் தினம் அருணோதயத்துக்கு முன், அவனை நீ எப்படி யாவது சந்தோஷப் படுத்த வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், நாளைத் தினம் விடிந்த உடனே, அவன் உன் பிராணனைக் கேட்டாலும்,நீ கொடுக்க வேண்டியது தான்” என்றான். இதைக் கேட்ட உடனே, இடி யோசையைக் கேட்ட நாகம் போல, நடுநடுங்கி, வேர்த்து, விறுவிறுத்துப் போனேன். 

“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல, இந்த ஒரு வழக்கின் தீர்மானத்தைக் கொண்டு, மற்ற வழக்குகள் எப்படித் தீரு மென்பதை நான் அறிந்து கொண்ட படியால், இனிமேல் என் பிராணன் எனக்குச் சொந்த மல்ல வென்று நிச்சயித்துக் கொண்டேன். பிராணனை இழப்பது நிச்சயமா யிருந் தாலும், அந்த விபத்தைத் தடுக்கும் பொருட்டு என்ன உபாயஞ் செய்யலா மென்று ஆலோசித்தேன். எனக்கு அண்ட சாஸ்திரந் தெரியுமானதால், மறுநாள் சூரிய கிரகண மென்றும், அது பாதாள கிரகண மானதால், நெடு நேரம் வரையில் சூரியன் ஒருவருக்குந் தோன்றா தென்றும், நான் சாஸ்திரத்தினால் அறிந்து கொண்டதுந் தவிர, அந்த ஊராருக்குக் கிரகணங் கணிக்கிற முறையே தெரியா தென்றும் தெரிந்து கொண்டேன். நான் அந்த நியாயாதி பதியைப் பார்த்து,”நாளைத் தினம் பொழுது விடிகிறதற்கு முன் நான் சக்கிலியனைச் சந்தோஷப் படுத்த வேண்டு மென்று அந்த மாகத் தீர்மானஞ் செய் திருக்கிறீர்கள். நாளைத் தினம் பொழுது விடியா விட்டால், என்ன செய் வீர்கள்?” என்றேன். அவன், “நாளைக்குப் பொழுது விடியாதபடி செய்ய உன்னால் ஆகுமா?” என்றான். “என்னால் ஆகு மென்பதும், ஆகா தென்பதும் நாளைத் தினம் பார்த்துக் கொள்ளலாம் என்றேன். அவன் L டனே கோபாவேசத்துடன் என்னை நோக்கி, “நீ பொழுது விடியாத படி செய்தால், நீ சமர்த்தன் தான். நாளைக்கு வழக்கப் படி பொழுது விடிந்தால், உனக்கு: இறுதி உண்டாகு மென்பது உறுதி தான். இவ் விரண்டில் ஒன்று தெரிந்த பிறகு தான், மற்ற வழக்குகள் விசாரிக்கப்படும்” என்று சொல்லி, மூர்க்காவேசத் துடன் வீட்டுக்குப் போய் விட்டான். 

அங்கே இருந்தவர்கள் எல்லாரும் என்னைப் பார்த்து, “யானை தன் தலை மேலே, தானே மண்ணைப் போட்டுக் கொள்வது போல, நீயே உனக்குத் தீங்கைத் தேடிக் கொண்டாயே! பொழுது விடியாத படி செய்ய உன்னாற் கூடுமா?” என்று என்னைத் தூஷித்தார்கள். அநேகர் நான் சொன்ன படி நடந்தாலும் நடக்கு மென்று பயந்து கொண்டு, அன்று இரா முழுதும் தூங்காம லிருந்த தாகக் கேள்விப் பட்டேன். நானும், அந்த இரா முழுதும் நித்திரை செய்யாமல், மந்திர தந்திரங்கள் செய்வது போல மாமாலம் பண்ணினதும் தவிர, ஒரு வெண்பாவும் பாடிப் பிரசுரம் செய்தேன்:- 

முடியரசன் போனபின்பு மூர்க்கரெல்லாங் கூடிக்
குடியரசென் றோர்பெயரைக் கூறி – நெடிய 
பழுதே புரியுமிந்தப் பாழூ ரதனிற்
பொழுதே விடியாமற் போ. 

மறு நாள் கிரகணம் பிடித்துக் கொண்ட படியால், வெகு நேரம் வரையிற் பொழுது விடியவே யில்லை, இதைப் பார்த்த உடனே, பட்டணம் கிடுகிடுத்துப் போய் விட்டது. அந்த நியாயாதிபதி பொழுது விடிய வில்லை யென்று தெரிந்த உடனே புறப்பட்டுக் காவற் கூடத்துக்கு ஓடி வந்தான். அவனைக் கண்ட உடனே ஜனங்கள் மண்ணை வாரி இறைத்து, ‘அட பாவி! சண்டாளா! அந்தப் புண்ணியவானுக்கு விரோதமாகத் தீர்மானஞ் செய்து, பொழுது விடியாத படி பண்ணி விட்டாயே!” என்று வாயில் வந்த படி அவனைத் தூஷித்தார்கள். அவன் என்னிடத்தில் வந்து, நமஸ்காரஞ் செய்து, ”சுவாமி! உங் களுடைய மகிமையை அறியாமல் அபசாரஞ் செய்து விட்டேன். சக்கிலியன் பக்ஷத்தில் நான் தீர்மானத்தை இப்போதே மாற்றி விடுகிறேன். பொழுது விடியும்படி கிருபை செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தான். மற்ற ஜனங்களும், “அந்தப்படி கிருபை செய்யவேண்டும்” என்று, என் காலில் விழுந்து, விழுந்து கும்பிட்டார்கள். நான் ஜனங்களைப் பார்த்து, “பொழுது விடிந்த உடனே, நீங்கள் குடி யரசை நீக்கி, ஒரு அரசனை நியமித்துக் கொள்வ தாக எனக்கு வாக்குத் தத்தஞ் செய்தால், நான் பொழுது விடியும் படி செய்வேன்” என்றேன். அவர்கள் அந்தப் படி வாக்குத் தத்தஞ் செய்தார்கள். கிரகணம் விடுகிற சமயம் நெருங்கி விட்டதால், இனிமேல் நான் தாமதஞ் செய்தால், என்னை யல்லாமற் பொழுது விடிந்து போகுமென்று பயந்து கொண்டு, நான் உடனே ஒரு வெண்பாப் பாடினேன்:- 

வாடு பயிர்க்குவரு மாமழைபோ னைந்துருகி
நாடுமக வுக்குதவு நற்றாய்போல்-நாடு
முழுதே யழுதேங்க மூடுமிரு ணீங்கப் 
பொழுதே விடி வாயிப் போது, 

என் பாட்டு முடிந்த உடனே, கிரகணங் கொஞ்சங் கொஞ்சமாய் விலகி, வெளிச்சங் காண ஆரம்பித்தது. அப்போது மேகக் கூட்டங்கள் சூரியனை மறைத்துக் கொண்ட படியால், கிரகணம் விடுகிற சமாசாரம் ஜனங் களுக்குத் தெரியாது. கிரகணம் முழுதும் நீங்கின உடனே, சூரியன் ஜக ஜோதியாய்ப் பிரகாசிக்க ஆரம்பித்தது. உடனே ஜனங்களுக்கு உண்டான சந்தோஷத்தையும், அவர்கள் எனக்குச் செய்த ஸ்தோத்திரங்களையும், நான் விவரிக்கவும் வேண்டுமா? அவர்கள் என்னை மட்டு மித மில்லாமற் புகழ்ந்த பிற்பாடு, என்னைப் பார்த்து, “ஸ்வாமி! உங்களுடைய ;உத்தரவுப் படி, நாங்கள் இன் றையத் தினமே ஒரு அரசனைத் தெரிந்து கொள்ளப்) போகிறோம். நாங்கள் தேவாலயத்துக்குப் போய்ப் பிரார்த் தளை செய்து கொண்டு, பட்டத்து யானையைச் சிங்காரித்து, அதன் கையிலே பூமாலையைக் கொடுத்து அனுப்புவோம். அந்த யானை யார் கழுத்திலே பூமாலை போட்டுத் தன் முதுகின்மேல் தூக்கி வைத்துக் கொள்ளுகிறதோ. அவரை அரசனாக நாங்கள் அங்கீகரித்துக் கொள்வது வழக்க மாயிருக்கிறது. ஆகையால், அந்தப் படி செய்ய உத்தரவு கொடுக்க வேண்டும்” என்று சொல்லி, என்னிடத்தில் செலவு பெற்றுக் கொண்டு போய் விட்டார்கள். 

– தொடரும்…

– மாயூரம் மாஜி டிஸ்டிரிக்ட் முன்சீப் ச.வேதநாயகம் பிள்ளையவர்கள் (1826-1889) இயற்றியது, முதற் பதிப்பு: 1879.

– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் முதலாவதாக இடம்பெற்ற நாவல்.

– பிரதாப முதலியார் சரித்திரம், நூற்றாண்டு விழா புதிய பதிப்பு: அக்டோபர் 1979, வே.ஞா.ச.இருதயநாதன் (வேதநாயகம் பிள்ளை மகன் பேரர்), ஆவடி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *