பிரதாப முதலியார் சரித்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 8, 2024
பார்வையிட்டோர்: 2,040 
 
 

(1879ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். அதுவரை செய்யுள் வடிவ புனைகதை இலக்கியங்களே இருந்துகொண்டிருந்த தமிழிற்கு உரைநடை வடிவிலான புனைகதை இலக்கிய வகை இந்நூல் வழியாக அறிமுகமானது. அவ்வகையில் இது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

அதிகாரம் 16-20 | அதிகாரம் 21-25 | அதிகாரம் 26-30

21-ஆம் அதிகாரம் 

துஷ்டப் புருஷனைத் திருத்தும் விதம் 

அடங்காப் பாரியையை அடக்கும் வகை 

நான் ஞானாம்பாளைப் பார்த்து, ‘உனக்கு ஒரு துஷ்டப் புருஷன் வந்து வாய்த்தால், நீ என்ன செய்வாய்?’ என்று கேட்க, அவள் என்னை நோக்கி, ‘இதற்கு முன் ஒரு புண்ணியவதி நடந்து வழி காட்டி யிருக்கிறாள்; நானும் அந்தப் பிரகாரம் நடப்பேன்’ என்றாள். அது என்ன? வென்று கேட்க, ஞானாம்பாள் சொல்லுகிறாள்: 

“ஒரு தனவானும், அவனுடைய பத்தினியும், ஒரு. உயிரும் இரண்டு உடலும் போல ஒருவருக் கொருவர் அதிக நேசமாகவும், பிரியமாகவும், நடந்து வந்தார்கள். கலியாணமாகிப் பத்து வருஷம் வரைக்கும், இவர்களைப் போல ஸ்திரீ புருஷர்கள் உண்டா வென்று யாவரும் சொல்லும் படியாக, அவ்வளவு அந்நியோந்நியமாகவும் மைத்திர மாகவும் வாழ்ந்தார்கள். பிற்பாடு, சில துஷ்டர்களுடைய சகவாசத்தால். அந்தத் தனவானுடைய புத்தி மாறி, ஒரு சோர ஸ்திரீயினிடத்தில் சிநேகம் செய்ய ஆரம்பித்தான். அவளுடைய சிநேகம் அதிகரிக்க. அதிகரிக்க, பத்தினியினிடத்தில் அவனுக் கிருந்த பிரியம் குறையத் தலைப்பட்டது. அவன் போஜனத்துக்கு மட்டும் வீட்டுக்கு வருகிறதே தவிர, மற்ற நேர மெல்லாம். வைப்பாட்டி வீடே அவனுக்கு வாச ஸ்தலமாய் விட்டது. ‘வேண்டாப் பெண்சாதி கால் பட்டாற் குற்றம், கை பட்டாற் குற்றம் என்பது போல வைப்பாட்டியி னுடைய கோளைக் கேட்டுக் கொண்டு, சொந்தப் பெண்சாதியைத் தாறு மாறாக நடத்தவும் ஆரம்பித்தான். அவன் என்ன கொடுமை செய்தாலும், அதை யெல்லாம் சகித்துக் கொண்டு, அவனுடைய பிரியத்தைப் பொறுமையினாலும் வணக்கத்தினாலும் மறுபடியும் சம்பாதிக்க, அவளாற் கூடிய மட்டும் பிரயாசைப் பட்டும் அநுகூல சித்தியாக வில்லை. பிற்பாடு, அந்த உத்தமி, கடவுளே கதி யென்று அவரிடத்திலே சகல நம்பிக்கையும் வைத்து, புருஷன் வரும்போது அவனுடைய பணிவிடைகளில் ஒரு குறைவும் இல்லாமல், சர்வ ஜாக்கிரதையாய் நடந்து வந்தாள். 

“புருஷனுக்கும் பெண்சாதிக்கும் ஒரு சம்பந்தமு மில்லாமற் செய்துவிட வேண்டு மென்று அவனுடைய வைப்பாட்டி கருதி, அவள் மேலே இல்லாத தோஷங்களை யெல்லாம் உண்டுபண்ணிச் சொன்னதும் தவிர, அந்தப் பதிவிரதையினுடைய கற்புக்கும் பழுது சொல்ல ஆரம் பித்தாள். அதை அவன் நம்பவில்லை யென்று கண்டு, அவனுக்கு நம்பிக்கை உண்டாகும் படியாக, அந்தச் சோர ஸ்திரீ, ஒரு அபாண்டமான கற்பனை செய்யத் தொடுத்தாள். எப்படியென்றால், அந்த உத்தமி கள்ளப் புருஷர்களுக்குக் கடிதம் எழுதி அவர்கள் அதற்குப் பதில் எழுதினது போல, அந்தச் சோர ஸ்திரீ, இரண்டு கடிதங் களை உற்பத்தி செய்து, அதை அந்த உத்தமியினுடைய வேலைக்காரி கையிற் கொடுத்து, அவளுடைய மேசைக் குள்ளாக வைத்து விடும்படி ஜாக்கிரதை செய்தாள். அந்த வேலைக்காரி, தன் னுடைய எஜமானிச்சிக்குத் துரோகம் செய்ய மாட்டே னென்று முந்தி ஆக்ஷேபித்தாலும், பின்பு பணப் பிசாசின் ஏவுதலால், அந்தக் கடிதங்களைத் தன் னுடைய தலைவியின் பெட்டியில், ஒருவருக்கும் தெரியாமல் வைத்து விட்டாள். இது நடந்த பிற்பாடு, அந்தச் சோர ஸ்திரீ, அந்தத் தனவானைப் பார்த்து, ‘உங்களுடைய பெண்சாதி மேலே தோஷம் சொன்னால், நீங்கள் நம்புகிறதில்லை. உங்கள் கௌரவத்துக்குக் குறைவு வரக் கூடாதென்று நான் சொல்லுகிறேனே தவிர, எனக்கு ஏதாவது இலாபமுண்டா? உங்கள் பத்தினியும், அவளுடைய சோர நாயகனும், ஒருவர்க் கொருவர் அடிக்கடி கடிதம் எழுதிக் கொள்வதாகவும் கேள்விப் படுகிறேன். அவளுடைய பெட்டி முதலானவைகளைச் சோதித்தால், கடிதங்கள் அகப்பட்டாலும் அகப்படலாம். நீங்கள் எப்படியாவது உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்றாள், உடனே அந்தத் தனவாள், ‘நீ யார் மூலமாகக் கேள்விப் பட்டாய்?’ என், அந்தத் துஷ்டை, ‘நான் அவர்களை இப்போது காட்டிக் கொடுக்க மாட்டேன். நீங்கள் உங்கள் வீட்டைப் பரிசோதித்துப் பாருங்கள்’ என்றாள். 

“அவன் இதையும் நம்பாமல், போஜனத்துக்காகத் தன் வீட்டுக்குப் போனான். அவன் போஜனம் செய்த பிற்பாடு, அவனுடைய பத்தினி வந்து, உள்ளூரி லிருக்கிற தன்னுடைய தகப்பனார் வியாதியா யிருப்ப தாகத் தான் கேள்விப் பட்டதாகவும், அவரைப் போய்ப் பார்த்துக் கொண்டு, உடனே திரும்பி வருவதாகவும் சொல்லி, உத்தரவு கேட்டாள். அவன் நிராடங்கமாய் உடனே உத்தரவு கொடுத்தான். அவள் போன பிற்பாடு, அவளுடைய பெட்டியைச் சோதிக்கும் படி வைப்பாட்டி சொன்னது ஞாபகத்துக்கு வந்து, அவன் உடனே பெட்டியைத் திறந்து பார்வை யிட்டான். அதில் அந்த இரண்டு கற்பனைக் கடிதங்களும் அகப்பட்டன. அவைகளை அவன் படித்துப் பார்த்த வுடனே, பெண்சாதி மேலே கோபாக் கினி மூண்டு விட்டது. அவள் அந்தச் சமயத்தில் இருந் திருப்பாளானால், தப்பாமற் பிராணாபாயம் சம்பவித் திருக்கும். அந்தக் கடிதங்களில் ஒன்றில், அன்றையத் தினம் இராத்திரி பத்து மணிக்குக் கள்ளப் புருஷன் தன் பெண்சாதி யிடத்துக்கு வருவதாக எழுதியிருந்த படியால், அவனும் வந்த பிற்பாடு இருவரையும் ஒரே முகூர்த்தத் திலே கொன்று விடுகிற தென்று நிர்ணயித்து, தன்னுடைய கோபத்தையும், அடக்கிக் கொண்டிருந்தான். தகப்பனாரைப் பார்க்கப் போயிருந்த அவனுடைய பாரி, அஸ்தமிக்கிற சமயத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். அவளை அவன் வாயில் வந்தபடி நிஷ்காரணமாய்த் தூஷித்துக்கொண்டிருந்தான். சில நாளாய் தூஷிப்பது அவனுக்கு வழக்கமாயிருந்த படியால், அவள் எதிர் வார்த்தை ஒன்றும் சொல்லாமல் மௌனமாயிருந்தாள். அவன் இராப் போசனம் செய்த பிற்பாடு, வழக்கப்படி, வைப்பாட்டி வீட்டுக்குப் போகிறவன் போலப் புறப்பட்டு, வெளியே போய், சற்று நேரம் கண் மறைவாயிருந்து, ஒன்பது மணி நேரத்துக்கு, ஒருவருக்கும் தெரியாமல் தன் வீட்டுத் தோட்டத்துக் குள்ளாக வந்து, படுக்கை அறைப் பலகணி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பண்டிக் குள்ளாக நுழைந்து, ஆயுத பாணியாய் உட்கார்ந் திருந்தான். அந்த இடம், எந்தப் பக்கத்தி லிருந்து யார் வந்தாலும் தெரியக் கூடிய தாகவும், அறைக்குள்ளாக என்ன நடந்தாலும் பார்க்கக் கூடியதாகவும் இருந்தது. அந்த அறையிலிருந்த கடிகாரம், பத்து மணி அடித்தத்தை இவன் கேட்ட வுடனே, கள்ளப் புருஷன் வருவா னென்று, நாலு பக்கத்திலும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண் டிருந்தான். ஒருவரும் வர வில்லை. அந்தக் கடிகாரம் பதினொரு மணியும் அடித்தது. அப்போதும் ஆண்பிள்ளை யென்கிற காற்றுக் கூட வீசவில்லை. அவனுடைய பத்தினியோ வென்றால், அவன் வெளியே போன நிமிஷ முதல், அந்தப் படுக்கை அறைக்குள், அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய்க் கடவுளை நோக்கி ஜபித்துக் கொண் டிருந்தாள். அவள் இருந்த கோலத்தைப் பார்த்தால், தெய்வ பக்தி மேலிட்டு, தேக பரவசமாக இருந்தாளே தவிர, கள்ள புருஷ னுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவ ளாகக் காணப்படவில்லை. 

அவள் நெடு நேரம் தியான நிஷ்டையில் இருந்த பின்பு, நித்திரை செய்து கொண் டிருந்த தன் பிள்ளையை எழுப்பிச் சாதம் ஊட்ட ஆரம்பித்தாள். அந்தப் பிள்ளை சாப்பிடும்போது, ‘ஏன், அம்மா, அழுகிறீர்கள்?’ என்று கேட்க, அவள் ஒன்றும் சொல்லாமலே சாதம் ஊட்டினாள். அந்தப் பிள்ளை மறுபடியும் சும்மா இராமல், ‘ஐயா போய் விட்டார்க ளென்றோ அழுகிறீர்கள்? அவர்கள் தான் உங்களை அடிக்கடி திட்டுகிறார்களே! அவர்கள் போனால் போகட்டுமே! நம்மை இரக்ஷிக்கிறதற்கு என் பாட்டனா ராகிய உங்கள் ஐயா இல்லையா? மாமா இல்லையா?’ என்றது. அவள் உடனே பிள்ளையைப் பார்த்து, ‘அப்படி எல்லாம் பேசாதே; உன்னுடைய ஐயா போய் விட்டால், நம்மை ஒருவரும் தாங்கமாட்டார்கள்; உன்னுடைய ஐயா. ஒரு குறைவுமில்லாமல் க்ஷேமமாயிருக்க வேண்டு மென்று, சுவாமியைப் பார்த்துப் பிரார்த்தனை செய்’ என்றாள். இதைக் கேட்ட வுடனே. பண்டியிலிருந்தவ னுடைய மனம் இளகவும், அவனுடைய கண்ணில் ஜலம் பெருகவும், ஆரம் பித்தன. அந்தப் பிள்ளை சாப்பிட்டு முடிந்த வுடனே, வேலைக்காரி அந்த அறைக் குள்ளாக ஏதோ காரிய வந்து நுழைந்தாள். அவளைக் கண்ட வுடனே, அந்தப் பிள்ளை தன் தாயாரைப் பார்த்து, ‘இவள் நேற்றையத் தினம், உங்களுடைய பெட்டியைத் திறந்தாள்’ நான் வெளியே இருந்து சன்னல் வழியாய்ப் பார்த்தேன், என்றது. அவள், ‘நான் பெட்டியைத் திறக்கவே யில்லை’ என்றாள். உடனே அந்தப் பிள்ளை, ‘பெட்டியைத் திறக்க வில்லையா? ஏதோ சில கடிதங்களை அந்தப் பெட்டிக்குள் வைக்க வில்லையா?’ என்றது. இதைக் கேட்ட வுடனே அவ ளுடைய மனோ சாட்சியும் குற்றம் சாட்ட ஆரம்பித்தபடி. யால், முன்னுக்குப் பின் விரோதமாக வாயில் வந்தபடி உளறினாள். அவளுடைய தலைவிக்குக் கடித விஷய மொன்றும் தெரியா தான படியால், காசு திருடத் திறந் திருப்பாளென்று நினைத்து, இனிமேல் நீ பெட்டியைத் திறந்தால், உன்னுடைய வேலையை இழந்து போவாய்! ஜாக்கிரதையா யிரு’ என்று கண்டித்தாள். கொலைக்கு ஆயத்தமாகப் பண்டியிலிருந்த தலைவன், இந்த சம்பாஷணை களெல்லாம் கேட்ட வுடனே, அவனுடைய சந்தேகம் ஓடவும், அவனுடைய கத்தி உறைக்குள் நுழையவும் ஆரம் பித்தது. ஆயினும், உண்மையை நன்றாக அறிய வேண்டு மென்று, அவன் சப்தப் படாமல் பண்டியை விட்டுக் கீழே குதித்து, அந்தத் தோட்டத்தில் ஒரு மூலையிலே தனிமையா யிருந்த வேலைக்காரி வீட்டுக்குப் போனான். அவள் அப் போது தான் உள்ளே நுழைந்து, அந்தப் பிள்ளையால் வெளி யான தன்னுடைய துன்மார்க்கத்தை நினைத்து நினைத்து, பெருமூச்சுவிட்டுக் கொண் டிருந்தாள். எசமான் அவளைக் கண்ட விடனே, கத்தியை உருவிக் கொண்டு, ‘நீ ஏன் என் பெண்சாதி பெட்டியைத் திறந்தாய்? உண்மைய்யைச் சொல்லாவிட்டால், இந்தக் கத்திக்கு இரை யாவாய்! என்று பயமுறுத்தினான். அவள் உடனே கீழே விழுந்து அவனுடைய இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு, அவனுடைய வைப்பாட்டி இரண்டு கடிதங்களைக் கொடுத்துதாகவும், அவைகளைத் தான் தன்னுடைய தலைவியின் பெட்டியில் வைத்த தாகவும் ஒப்புக் கொண்டாள். இதைக் கேட்டவுடனே அவனுடைய சந்தேகம் நிவாரண மாகி, பத்தினி யிடம் போய், அவளைக் கட்டித் தழுவிக் கொண்டு, நடந்த காரியங்களையும், தான் அவளைக் கொல்ல நினைத்ததையும், சொன்னான். உடனே ஸ்திரீ புருஷர்கள் சமாதான மாகி, முன்னிருந்ததைக் காட்டிலும் அதிகப் பிரீதியாய் வாழ்ந்தார்கள். அன்று முதல், அந்தத் தன வான், சோர நாயகியி னுடைய சிநேகத்தை விட்டு விட்டான். அந்தப் பதிவிரதா சிரோமணியைப் போல நற்குணங்களாலும், தெய்வ பக்தியினாலும், புருஷனுடைய பிரியத்தைச் சம்பாதிக்கப் பிரயாசைப் படுவதே உத்தமம்” என்றாள். 

பிறகு ஞானாம்பாள் என்னைப் பார்த்து, “உங்களுக்கு ஒரு கெட்ட பெண்சாதி வாய்த்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டாள். “அவளை, என்னாலே கூடிய வரையில் சாந்தமாகவும், நயமாகவும் பேசி, திருத்தப் பிரயாசைப்படுவேன். அவள் திருந்தாமல், முரட்டுத் தனம் செய்வாளானால், அரபி தேசத்து ஆயிரம் இராத்திரிக் கதைகளில், ஒன்றிற் சொல்லுகிற பிரகாரம் செய்வேன்’ என்றேன். அந்தக் கதையின் சுருக்கத்தைச் சொல்ல வேண்டு மென்று ஞானாம்பாள் கேட்க, நான் சொல்லத் தொடங்கினேன். 

”ஒரு ஆஸ்திவந்தனான வியாபாரிக்கு, நாட்டுப் புறத்தில் அனேக வீடுகளும், கால்நடைகளும் இருந்தன. அவன் குடும்ப சகிதமாக ஒரு கிராமத்துக்குப் போய், அவ்விடத்திலே சில நாள் வசித்தான். அவனுக்கு மிருகங்களின் பாஷை நன்றாகத் தெரியும். ஆனால் அதை வெளிப்படுத்தினால் அவன் இறந்து போவா னென்கிற ஒரு சந்தேகமூ மிருந்தது. ஒரு நாள், ஒரு காளை மாடும் கழுதையும் கட்டப்பட்டிருந்த கொட்டத்துக்குச் சமீபத்தில், அந்த வியாபாரி உட்கார்ந் திருந்தான். அப்போது, அந்தக் காளை மாடு கழுதையைப் பார்த்து, ‘என்னைப் பகல் முழுதும் ஏரிலே கட்டிக் கொல்லுகிறார்கள்; நீ அதிர்ஷ்டசாலி யானதால், சௌக்கியத்தை அனுபவிக்கிறாய் என்று முறையிட்டது. ‘இனிமேல் என்னை ஏரிலே கட்ட வந்தால், கழுத்தைக் கொடாமல் முட்டித் தள்ளு’ என்று மாட்டுக்குக் கழுதை துர்ப் போதனை செய்தது. அந்தப் படி, மறு நாட் காலையில் மாடு வசப் படாமல் முரட்டுத்தனம் செய்த படியால், அதைப் பற்றி வேலைக்காரன் எசமானுக்குத் தெரிவித்தான். 

முந்தின நாள், கழுதை செய்த உபதேசம் எசமானுக்குத் தெரியுமானதால், மாட்டுக்குப் பதிலாக கழுதையை ஏரிலே கட்டி உழும்படி ஆக்ஞாபித்தான். அந்தப் படி கழுதை அன்றைய தினம் ஏரிலே கட்டப்பட்டு, அது பட்டபாடு சாமானியமல்ல கழுதை பாதிப் பிராணனுடன், அஸ்தமனத்துக்குக் கொட்டத்துக்கு வந்தவுடன், மாட்டைப் பார்த்துப் பெரு மூச்சு விட்டு, ‘நாளைத் தினம் நீ என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்க, ‘இன்றையத் தினம் செய்தது போலவே, நாளையத் தினமும் செய்யப் போகிறேன்’ என்று மாடு சொல்ல, உடனே கழுதை, ‘அப்படிச் செய்யாதே; ஏனென்றால், எசமான் நீ வியாதியா யிருப்பதாக நினைத்து, உன்னைக் கொன்று விடும்படி ஆளுக்கு உத்தரவு கொடுத்ததை நான் காதினாலே கேட்டேன். நாளைத் தினம் உன்னை ஏரிலே கட்டும் போது, நீ முரட்டுத் தனம் செய்யாம லிருந்தால், பிழைத்தாய்; அப்படியில்லாமல், சண்டித்தனம் செய்வா யானால், உன் பிராணன் உனக்குச் சொந்தம் அல்ல’ என்றது. 

இதை வியாபாரி கேட்டுக் கொண்டிருந்ததால், அவனுக்குப் பெரும் சிரிப்பு வத்து விட்டது. அப்போது கூட இருந்த அவன் பத்தினி, ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்க, ‘மாடும் கழுதையும் செய்து கொண்ட சம்பாஷணையைக் கேட்டுச் சிரித்தேன். அதை உனக்குச் சொன்னால், என் பிராணன் போய் விடும்’ என்றான். அவள், நீங்கள் அதைச் சொல்லாவிட்டால், என் பிராணன் போய் விடும் என்று சொல்லி, அன்னம் ஆகாரமில்லாமல், ஒரு அறைக்குள்ளே போய்ப் படுத்துக் கொண்டு அழுதாள். புருஷன் என்ன நியாயம் சொல்லியும், அவள் கேட்கவில்லை. அவளுடைய தாய் தகப்பன் முதலானவர்கள் வந்து, அவர்களாலே கூடிய வரையில் புத்தி சொல்லியும், அவள் கேளாமற் பிடிவாதம் செய்தாள். அப்போது, அந்த வீட்டிலிருந்த ஒரு சேவலும் ஐம்பது பெட்டைக் கோழிகளும், கூடிக் கொஞ்சிக் குலாவிக் கொண்டு திரிவதை! பிரமாணிக்கமுள்ள ஒரு நாய் பார்த்து, ‘சேவலே. சேவலே!! நம்முடைய எசமானும் எசமானிச்சியும் மனஸ்தாபப் பட்டுக் கொண்டு வருத்தப் படுகிற காலத்தில், நீ உன் பெண்சாதிகளுடனே கூடிக் கொண்டு கொட்டம் அடிக்கிறாயே! இது அழகா?’ என்று கேட்க, அந்தச் சேவல் நாயைப் பார்த்து, ‘நம்முடைய எசமான் முழு மூடன். ஒரு பெண்சாதியை அடக்கி ஆள அவனுக்குத் திறமை யில்லை. நான் ஐம்பது பெண்சாதிகளை அடக்கி ஆள வில்லையா? எசமான் செய்ய வேண்டியது என்ன வென்றால், ஒரு கழியை எடுத்துக் கொண்டு, பெண் சாதிக்குத் தகுந்தபடி பூசை கொடுத்தால், அவள் உடனே அடங்குவாள் என்று சொல்லிற்று. அதைக் கேட்டுக் கொண்டிருந்த எசமான், நல்ல உபாய மென் றெண்ணி ஒரு பெரிய கழியை எடுத்துக் கொண்டு, பெண்சாதி படுத்துக் கொண்டிருந்த அறைக்குள்ளே போய், கதவை மூடிக் கொண்டு, மர்த்தனம் செய்ய ஆரம்பித்தான். அடி மேல் அடி அடித்தால், அம்மியும் நகரும் என்பது போல் உடனே பெண்சாதிக்குப் புத்தி வந்தது; அவளுடைய பிடிவாதமான துர்குணத்தை விட்டு விட்டாள்” என்றேன். 

இந்தக் கதையைக் கேட்டவுடனே, ஞானாம்பாள் சிரித்த சிரிப்பை இப்போது நினைத்தாலும், எனக்கும் சிரிப்பு வருகிறது. 

22-ஆம் அதிகாரம் 

பிறவாக் குழந்தையை ஸ்வீகாரம் கேட்டுப் பிரமாதம் விளைதல் 

முந்தின அதிகாரத்திற் சொல்லிய படி, ஞான சல்லா பங்களிலும், கிருகஸ் தாச்சிரம தர்மங்களிலும், சந்தோஷமாகக் காலம் போக்கிக் கொண்டு வந்தோம். கலியாணத்துக்கு முன்பு, பிடரியைப் பிடித்துத் தள்ளினாலும் போகாம லிருந்த காலம். இப்போது வாயு வேகம் மனோ வேக மாக ஓடத் தலைப்பட்டது. கலியாணத்துக்குப் பின்பு, ஒன்றரை வருஷம் ஒன்றரை நிமிஷம் போற் பறந்து விட்டது. நாங்கள், இரண்டாவது தடவை, சம்பந்தி முதலியார் வீட்டில் இருக்க வேண்டிய ஆறு மாசமும் கடந்து போய் விட்டதால், ஞானாம்பாளை என் வீட்டுக்கு வரும்படி உத்தரவு செய்து, நான் முந்திப் போய் விட்டேன். அதற்குச் சற்று நேரத்திற்குப் பின்பு, சம்பந்தி முதலியார் என் தகப்பனா ரிடத்திற்கு வந்து, ‘ஞானாம்பாள் கர்ப்பவதியா யிருப்பதாக அவளுடைய தாயார் சொல்லுகிறாள். அவளுக்கு முதற் பிரசவத்தில் ஆண் குழத்தை பிறக்கு மென்று, அவளுடைய ஜாதகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அந்தப் பிள்ளையை எனக்கு நீர் ஸ்வீகாரம் கொடுக்க வேண்டும்; அதற்கென்ன சொல்லுகிறீர்?” என்றார். என் தகப்பனார் சிரித்துக் கொண்டு, “கர்ப்பமே நிச்சய மென்று தெரியவில்லை; அது நிச்சயமா யிருந்தாலும், ஆண் பிள்ளைதான் பிறக்குமென்று எப்படி நிச்சயிக்கக் கூடும்? பின்னும், ஜேஷ்ட புத்திர ஸ்வீகாரமும், புத்திரிகா புத்திர ஸ்வீகாரமும் செல்லாதென்று, தர்ம சாஸ்திர வசனமும் இருக்கிறதே’ என்றார். சம்பந்தி முதலியார் என் தகப்பனாரைம் பார்த்து,”உம்மை நான் தர்ம சாஸ்திரம் கேட்க வில்லை. நீர் அந்தப் பிள்ளையை ஸ்வீகாரம் கொடுப்பீரா? மாட்டீரா? இரண்டிலொன்று சொல்லும்” என்றார். உடனே என் தகப்பனார், ”எனக்குப் பௌத்திரன் வேண்டாமா! உமக் கெப்படி ஸ்வீகாரம் கொடுப்பேன்?” என்றார். இதைக் கேட்ட வுடனே சம்பந்தி முதலியாருக்கு ஆக்கிரகம் உண்டாகி, அவர் வீட்டுக்குப் போய், ஞானாம்பாளைக் கூப்பிட்டு, “உனக்கு, நான் வேண்டுமா? புருஷன் வேண்டுமா?” என்று கேட்க, அவள், “இருவரும் தான் வேண்டும்” என்றாளாம். “இருவரிலும் யார் விசேஷம்?” என்று அவர் மறுபடியும் கேட்க, அவள் புருஷன் தான் விசேஷ மென்று நேரே உத்தரவு சொன்னால், தகப்பனாருக்குக் கோபம் வருமென்று நினைத்து, “என் தாயாருக்குத் தன் தகப்பனைப் பார்க்கிலும், நீங்கள் விசேஷமல்லவா?” என்று விநயமாகவும், மறை பொருளாகவும். மறுமொழி சொன்னாள். அதற்குச் சற்று நேரம் அவருக்குப் பயன் தெரியாம லிருந்து, பிற்பாடு தெரிந்து கொண்டு, ஞானாம்பாளை வாயில் வந்த படி தூஷித்து, ”இனிமேல் நீ உன் புருஷன் வீட்டிற்குப் போகிறதைப் பார்க்கலாம்; அவனும் இங்கே வருவதைப் பார்க்கலாம்” என்று சொன்னாராம். தூஷணையான வார்த்தைகளை அவள் ஒரு நாளும் கேளாதவளான படியால், அவளுக்கு உடனே நடுக்கலும் சுரமும் கண்டு, கர்பத்துக்கு அபாயம் வந்து விட்டது. 

இந்தச் செய்திகளெல்லாம், என் தகப்பனார் கேள்விப் பட்டு, அவர் என்னை அழைத்து, “உனக்குத் தகப்பன் வேண்டுமா? பெண்சாதி வேண்டுமா?” என், நான் “இருவரும் தான் வேண்டும்” என்றேன். அவர், ”அது கூடாது; நான் வேண்டுமானால், உன் பாரியைத் தள்ளி விடவேண்டும்” என்றார். நான், என தகப்பனாரைப் பார்த்து, “பிதுர் வாக்கியம் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் ஒத்திருக்கிற பக்ஷத்தில், நான் அந்தப் படி நடக்க வேண்டியது தான். சகல சாஸ்திரங்களுக்கும் வேத வாக்கியங்களுக்கும் விரோதமாகவும், நிஷ்காரணமாக வும், என் பாரியைத் தள்ளி விடும்படி சொல்லுகிறீர்கள். அந்த உத்தரவை, எப்படி நான் அநுஷ்டிக்கக் கூடும்?” என்றேன். உடனே அவருக்குக் காலாக்கினி போல் கடும் கோபமுண்டாகி, “அடா! பயலே! இதற்குத் தானா உன்னை நான் பெற்றேன்? வளர்த்தேன்? நேற்று வந்தவளைப் பொருளா யெண்ணி, என்னை அலக்ஷியம் செய்தாயே. இனிமேல் அவளும் இங்கே வரக் கூடாது. நீயும் அங்கே போகக் கூடாது. இனி நீ அவளிடத்தில் பேசினால், எனக்கு நீ பிள்ளையு மல்ல, நான் உனக்குத் தகப்பனு மல்ல, என்னுடைய ஆஸ்தியும் உனக்கு நாஸ்தி தான்” என்றார். இதைக் கேட்ட வுடனே எனக்கு எவ்வளவு துயர முண்டா யிருக்கு மென்பதை, இதை வாசிக்கிறவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமே யல்லாது, அதை விவரிக்க நான் சக்தி யுள்ளவனல்ல. இப்படிப்பட்ட வார்த்தைகளை இதற்கு முன் ஒரு நாளும் நான் கேட்டதில்லை யானதால், அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் பாணம் போல் என் இருதயத்தைப் பிளந்தது. சம்பந்தி முதலியார் வீட்டுக்கு நானும் போகக் கூடாது, என் வீட்டுக்கு ஞானாம்பாளும் வரக் கூடாதென்று, சம்பந்தி முதலியாரும் என் தகப்பனாரும் ஆணையிட்டு மறித்த பிற்பாடு ‘இனிமேல் அவளை எப்போது காணப் போகிறோ மென்று, நான் துக்காக் கிராந்தனா யிருக்கும்போது, என் தாயார் பரிதாப முகத்துடன் என்னிடம் வந்தார்கள். 

அவர்களைக் கண்டவுடனே, ‘அம்மா! நடந்த சங்கதி களை எல்லாம் கேள்விப் பட்டீர்களா?” என்று சொல்லி அழுதேன். அவர்களும் சற்று நேரம் என்னுடன் கூட விசனப்பட்ட பிற்பாடு, என் கண்ணீரைத் துடைத்துச் சொல்லுகிறார்கள்: “அப்பா! நீ கிலேசப் பட வேண் டாம். பெரியோர்களா யிருக்கிறவர்களுக்கு, ஒவ்வொரு சமயத்தில் கோபம் வருகிறதும், பிற்பாடு தணிகிறதும் வழக்கந்தான். இப்போது உன் தந்தையார் ஏதோ சொன்னார்களென்று நீ துக்கிக்க வேண்டாம். நீ பிறந் தது முதல் இந்நாள் மட்டும் உன்னை உயிருக் குயிராய் வளர்த்த வர்கள். இப்போது கோபமாய் ஒரு வார்த்தை சொன்னால், அதற்காக மனஸ்தாபப் படலாமா? அதற்கு முன் அவர்கள் செய்த நன்மையை மறந்து விடலாமா? அவர்கள் கோபத்திலே சொன்ன வார்த்தைகளை யெல் லாம் நீச மென்று நினைத்து, நீ மனம் வருந்தாதே. ஞானாம் பாளை நீ சீக்கிரத்திலே பார்ப்பாய் என்று பல விதமாக என் தாயார் எனக்குத் திடம் சொன்னார்கள். அவர்கள் என்னுடன் கூட இருந்த வரையில், எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக விருந்தது; அவர்கள் போன வுடனே அந்த ஆறுதலும் போய் விட்டது. என்னுடைய வியாகு லத்தை அதிகப் படுத்துவதற்கு, இன்னொரு காரணமும் கூடச் சேர்ந்தது. அஃது என்ன வென்றால், சம்பந்தி முதலியாருக்கும் என் தகப்பனாருக்கும் உண்டான சண்டை நிமித்தம், ஞானாம்பாளுக்கு வியாதி அதிகரித்து, அவளுடைய கர்ப்பமும் அழிந்து போனதாக நான் கேள்விப் பட்டு, வேல் தொளைத்த புண்ணிலே கொள்ளிக் கட்டையைச் சொருகினது போல் பெரும் துயரத்தை அடைந்தேன். அந்தச் சண்டைக்கு காரணமா யிருந்த கர்ப்பம் அழிந்து போயும், அதனால் விளைந்த கலகம் தீரவில்லை. குதிரை கீழே தூக்கிப் போட்டது மல்லாமல் மேலே ஏறியும் மிதித்தது போல், என் தகப்பனார் மறுபடியும் சும்மா இராமல், எனக்கு வேறே பெண் விசாரித்து கலியாணம் செய்விக்க வேண்டுமென்று எண்ணம் கொண்டதாக நான் கேள்விப்பட்டு, இப்படிப்  பட்டவர்களுடைய முகத்தில் விழிக்காமல், ஞானாம்பாளையும் அழைத்துக் கொண்டு, எங்கே யாவது போய் விடலா மென்கிற எண்ணம் உண்டாயிற்று. ஆனால் ஞானாம்பாள் வியாதியா யிருப்பதினாலே, அவளை அழைத்துக் கொண்டு போவது தகுதி யல்ல வென்றும், நான் முந்திப் போய் ஒரு இடத்தில் நிலைத்திருந்து கொண்டு, பிற்பாடு அவளை அழைத்துக் கொள்ளலா மென்றும், எனக் குள்ளே தீர் மானித்துக் கொண்டேன். ஆனால், அவளுக்கு தெரிவிக் காமற் போனால், அவளுடைய வியாதி அதிகரிக்கு மென்று பயந்து சகல விவரங்களையும் ஒரு அந்தரங்க கடித மூலமாக அவளுக்குத் தெரிவித்தேன். அதற்கு உடனே மறு மொழி அனுப்பினாள். அதில், நான் தேசாந்தரம் போகக் கூடாதென்றும், சில விசை நான் தேசாந்தரம் போகிற பக்ஷத்தில், தன்னையும் அழைத்துக் கொண்டு போக வேணுமென்றும் எழுதியிருந்தாள். நான் அவளை அழைத்துக்கொண்டு போவதற்குள்ள அசந்தர்ப்பங்களை விவரித்து, இரண்டாவது கடிதம் அனுப்பினேன். அதற்கு ஒரு பதிலும் வராதபடியால் நான் சொன்ன நியாயங்களை அவள் ஏற்றுக் கொண்டாளென்று ஊகித்துக் கொண்டேன். அவளுக்கு நான் புறப்படப் போகிற தினத்தையும் தெரிவிக்க வில்லை. 

23-ஆம் அதிகாரம் 

பிரதாப முதலியார் பிரயாணம்-பிரிந்தவர் கூடல்-இரண்டு தாரக்காரன் பட்டபாடு 

ஒரு நாள் இராத்திரி எல்லாரும் தூங்குகிற சமயத் தில், எனக்கு விசுவாச முள்ள இரண்டு வேலைக்காரர்களையும் கூட்டிக் கொண்டு, வழிக்கு வேண்டிய சாமான்களையும் எடுத்துக் கொண்டு, எங்களுக்குச் சொந்தமான ஒரு யாத்திரை வண்டியின்மே லேறிக் கொண்டு, கிழக்கு. இரஸ்தா வழியாகப் பிரயாணம் புறப்பட்டேன். எல்லா ரும், தாங்கள் போகிற ஊரை நிச்சயித்துக் கொண்டு, அந்த ஊருக்குப் போகிற மார்க்கமாய்ப் போவார்கள். தான் இன்ன ஊருக்குப் போகிற தென்கிற நிச்சய மில்லா மல், கிழக்கு இரஸ்தாவைப் பிடித்துக்கொண்டு, அதி துரித மாய்ப் போனேன்; நான் போகும் போது, என்னுடைய தேக மட்டும் கூட வந்ததே தவிர, என் மனம் கூட வராமல், என் தாயா ரிடத்திலும், ஞானாம்பா ளிடத்திலும், தங்கி விட்டது; வழியில் என்ன அதிசய மென்று யாராவது கேட்டால், எனக்கு இன்ன தென்று தெரியாது மறுநாள் மத்தியானம், எங்கே தங்கி யிருந்தோம், என்ன ஆகாரம் செய்தோ மென்பதை, என் வேலைகாரர்களைக் கேட்க வேண்டுமே தவிர, எனக்கு யாதொன்றும் தெரி யாது; என் பிராணன், மனம் முதலியவைகளை யெல்லாம் சத்தியபுரியிலே வைத்து விட்டு. நான் ஒரு சஞ்சாரப் பிரே தம் போல் சென்றேன். அன்றையத்தினம் ஐந்து காத. வழி நடந்து, இராத்திரிப் பத்து மணிக்கு. நல்லூர் என் னும் கிராமத்தை அடைந்தோம். அந்த ஊர்ச் சததிரத் தில், ஒரு தனிமையான இடத்தில், பஞ்சணையை விரித்துப் படுத்துக் கொண்டேன். என்னுடைய வேலைக்காரர்கள் சமையல் செய்வதற்காகப் போய் விட்டார்கள். நான் முக மறைய முக்கா டிட்டுப் படுத்துக் கொண்டு, இனி மேல் ஞானாம்பாளைப் பார்க்கும் படியா யிருக்குமோ, அல்லது அவளைப் பார்க்கக் கூடா தென்று என் பிதா சொன்ன வாக்கியமே நிறைவேறிப் போகுமோ என்று மனங் கலங்கி, எண்ணாத தெல்லாம் எண்ணிக் கொண்டு படுத்தி, ருந்தேன். நான் படுத்த சற்று நேரத்திற்குப் பின்பு யாரோ வந்து, என்னைத் தட்டினார்கள். நான் உடனே என் முக்காட்டைத் திறந்து பார்க்க, ஞானாம்பாள் வந்து நிற்பது போலத் தோன்றிற்று. இது கனவோ அல்லது உரு வெளித் தோற்றமோ என்று நான் மயங்கிக் கொண் டிருக்கையில், அவளுடைய கண்ணிப் பிரவாகம் என் முகத்தின் மேல் விழுந்து, என் மயக்கத்தைத் தெளிவித் தது. உடனே அவள் என்னைத் தழுவிக் கொண்டு, “நான் உங்களுக்கு என்ன அபராதம் செய்தேன்? என் முகத்தில் விழிக்காமல் வந்து விட்டீர்களே” என்று கண்ணீர் விட்டுப் பொருமினாள். நானும், சற்று நேரம் கண் கலங்கின பிற்பாடு, அவளைப் பார்த்து, ”நான் இன்றையத்தினம் புறப்படுகிறே னென்பதும், இந்த வழியாய்ப் போகிறே னென்பதும், உனக் கெப்படித் தெரியும்? நீ இவ்வளவு தூரம் எப்படி வந்தாய்?” என்று கேட்க, அவள் சொல்லு கிறாள்: “நீங்கள் பிரயாணம் புறப்படுகிறது நிச்சய மென்று, உங்கள் கடிதங்களால் அறிந்து கொண்டேன். நீங்கள் எங்கே போனாலும், உங்களுக்குப் பிரியமான ஊழியக்காரர்க ளாகிய கந்தசாமி, வினைதீர்த்தான் இவர் களைக் கூட அழைத்துக்கொண்டு போவீர்களென்பதும், எனக்குத் தெரியும். அவர்களுடைய பெண்சாதிகள் எனக்குத் தாதிக ளானதினாலே, அவர்களுடைய புருஷர் களை விசாரித்து, நீங்கள் புறப்படுகிற நிச்சய மான தினத்தை அறியும் படி சொல்லி யிருந்தேன். நீங்கள் உங்களுடைய பெண்சாதிக்கு உண்மையை மறைத்தா லும், உங்களுடைய வேலைக்காரர்கள் அவர்களுடைய பெண்சாதிகளுக்கு உண்மையை மறைக்க வில்லை. ஆகை யால் அவர்கள் மூலமாக, நீங்கள் புறப்படுகிற தினத்தைத் தெரிந்து கொண்டு, நானும் புறப்படுகிறதற்கு முஸ்திப்பா யிருந்தேன். என்னுடைய தாதிகளும், தங்கள் புருஷர் களைப் பிரிந்திருக்க மன மில்லாதவர்களாய், தங்களை அழைத்துக் கொண்டு போகும்படி பிரார்த்தித்தார்கள். அவர்களும், நானும், நீங்கள் புறப்பட்டுச் சற்று நேரத்துக் சூப் பின்பு, ஒருவருக்குந் தெரியாமல், ஒரு பண்டியின் மேலே ஏறிக் கொண்டு, உங்களுடைய கண்ணிலே படா மல், கொஞ்ச தூரம் பின்னிட்டு, உங்களுடைய பண்டி யைத் தொடர்ந்து கொண்டு வந்து சேர்ந்தோம்” என்றாள். 

ஞானாம்பாளைக் கண்டவுடனே, சூரியனைக் கண்ட யனி போல, என்னுடைய துக்க மெல்லாம் விலகி விட்டது. ஆனால், அவள் வியாதிப் பட்டு மெலிந் திருந்தபடியால், “இப்படிப்பட்ட பலவீனமான ஸ்திதியில், நீ யாத்திரை செய்யக் கூடுமா?” என்று கேட்டேன். அவள் தனக்கு பூரண சௌக்கியமாய் விட்டதால், யாத்திரை செய்யலா மென்று சொன்னாள். நான் அவளைப் பார்த்து, “என்னை நீ கலியாணம் செய்த நிமித்தம், உன் னுடைய உற்றார் பெற்றா ரையும், சகல சுகங்களையும் இழந்து, வனாந்தரத்தில் சஞ்சரிக் கும் படி நேரிட்டதே!” என்றேன். அவள் என்னைப் பார்த்து நான் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்கிறீர்கள்! என்னாலேதான், உங்களுக்கு இப்படிப்பட்ட கதி வாய்த்தது. பின்னும், நீங்கள் இல்லாத இடம் நாடா யிருந்தாலும் அது தான் காடு. உங்களுடன் கூடி யிருக்கிற காடே எனக்கு நாடு” என்று சீதை இராமருக்குச் சொன்னது போல், எனக்குச் சொன்னாள். அவள் மறுபடியும் என்னைப் பார்த்து, “எனக்குத் தங்கை எப்போது வருவாள்?” என்று கேட் டாள். அதற்கு, நான் அர்த்தம் தெரியாமல் மயங்கினேன். அவள் சிரித்துக் கொண்டு, ”என்னுடைய மாமா, உங்க ளுக்கு வேறே பெண் தேடி, விவாகம் செய்ய யோசித்திருப்ப தாக, நான் கேள்விப் பட்டேன்” என்றாள். அதற்கு நான் “என்னுடைய சிநேகன் ஒருவன், இரண்டு தாரம் கலியாணம் செய்து பட்ட பாடுகளை நினைக்கும்போது, எனக்குத் தலை நடுக்கமா யிருக்கின்றது; நான், சந்திர சூரியர் தெற்கு வடக் கானாலும், இரண்டு தாரம் கொள்ளச் சம்மதியேன்” என்றேன். அவள், “உங்களுடைய சிநேகிதர் என்ன பாடுகள் பட்டார்?” என்று கேட்டாள். அதற்கு நான் சொன்னதாவது:- 

“இரண்டு தாரம் கொண்ட ஒருவன் என்னிடத்திலே பேசும் போது தூங்கித் தூங்கி விழுந்து கொண்டு பேசி னான். நான், “ஏன் தூங்கி விழுகிறாய்?” என்று கேட்க, அவன் என்னைப் பார்த்து, ‘எனக்கு இரா முழுவதும் தூக்கமே யில்லை. என்னுடைய இரண்டு தாரங்களில் ஒருத் தியை ஒரு பக்கத்திலும், மற்றொருத்தியை மற்றொரு பக் கத்திலும் படுக்க வைத்து. நான் நடுவே படுத்துக் கொள் கிறது வழக்கம், அவன் பக்கத்தில் நான் திரும்பினால் இவள் திட்டுகிறாள்; இவள் பக்கத்திலே திரும்பினால் அவள் திட்டுகிறாள். ஒருத்தியையும் பராாமல் மல்லாக் காய்ப் படுத்துக் கொண்டால், இருவரும் திட்டுகிறார்கள். பின்னும், இருவரும் கூடி, என் தலையை மொட்டை யாக்கி விட்டார்கள். எப்படி யென்றால், அவளுடைய பக்கத்தில் நான் திரும்பியிருக்கும் போது இவளும், இவள் பக்கத்தில் திரும்பி யிருக்கும் போது அவளும், கோபத்தினால் தனித் தனியே என் தலை மயிரைக் கத்தரித்து, முண்டிதம் ஆக்கி விட்டார்கள், என்று சொல்லி, தன்னுடைய மொட்டைத் தலையைச் சாஷி காட்டினான்” என்றேன். இவ்வகையாக விநோத சல்லாபத்தில் நானும் ஞானாம்பாளும் அந்த இரவைப் போக்கினோம். 

24-ஆம் அதிகாரம் 

சோர பயம், களவருக்கும் உளவருக்கும் நடந்த சண்டை – புண்ணிய கோடி செட்டி சரித்திரம் 

மறு நாள் விடியு முன் எழுந்து,மறுபடியும் பிரயாணம் ஆரம்பித்தோம். பகல் முழுவதும் யாத்திரை செய்கிறதும், இரவில் எந்த ஊர் நேருகிறதோ அந்த ஊரில் தங்குகிறதும், இவ் வகையாக நாங்கள் பயணம் செய்து கொண்டு போகும் போது, ஒரு நாள், அஸ்தமிக்கிற வரையில், நாங்கள் தங்கும் படியாகச் சத்திரமாவது ஊராவது தென்படவில்லை. அன்றையத்தினம் அமாவாசை இருட் டானதால், எங்கே தங்கலா மென்று யோசித்துக் கொண்டு போகையில், வழிக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு சாவடி காணப் பட்டது. அந்தச் சாவடியில் தங்க லாமா வென்று, அவ்விடத்தில் நின்று கொண் டிருந்த ஆட்களை விசாரித்தோம். அவர்கள், அது தகுதியான இடமென்று சொன்னதினால், நாங்கள் பண்டியை நிறுத்தி, அந்தச் சாவடியில் தங்கி, நானும் ஞானாம்பாளும் வழியில் வந்த களையினால் முன் னேரத்தில் படுத்துத் தூங்கினோம். வேலைக்காரர்கள் சுயம்பாகம் செய்து, எங்களை எழுப்பி, அன்னம் படைத்தார்கள். 

போஜனம் முடிந்த வுடனே, எங்கள் வேலைக்காரர் களில் ஒருவன் எங்களைப் பார்த்து, “ஐயா! நான் ஜலம் கொண்டு வரக் குளத்துக்குப் போன போது, ஒரு மனுஷன் என்னைக் கண்டு, இந்த இடம் கள்ளர்கள் வசிக்கிற இட மென்றும், இந்தச் சாவடியில் அநேகம் விசை கொள்ளையும் கொலையும் நடந்திருப்பதாகவும், சொன்னான். அந்தச் சாவடி தங்குவதற்குத் தகுந்த இடமென்று சில ஆள்கள் சொன்னதை நம்பி, நாங்கள் தங்கினோ மென்று, நாள் தரிவித்தேன். அப்படி யாராவது உங்களுக்குத் தெரிவித் திருந்தால், அவர்கள் திருடர்களாகவே இருப்பார்கள். நீங்கள் சர்வ ஜாக்கிரதையாயிருக்க வேண்டும் என்று, அந்த மனுஷன் எச்சரிக்கை செய்து போய் விட்டான்” என்றான். இதைக் கேட்ட வுடனே, எனக்கு அடி வயிற்றில் இடி விழுந்தது போலிருந்தது. ஞானாம்பா வில்லாமலிருந்தால், நான் பயப்பட மாட்டேன். அவள் கூட இருப்பதால், என்ன அவமானம் நேரிடுமோ வென்கிற பயம் அதிகரித்தது. அவளை எங்கே யாவது ஒளித்து வைக்கலா மென்று பார்த்தால், எங்கும் வெட்டார வெளியா யிருந்ததால், தகுந்த இடம் அகப்பட வில்லை. அவள் பயந்து நடுங்குவதைக் கண்டு, ‘ஞானாம்பாள் ! நீ ஒன்றுக்கும் பயப்படாதே. நானும் வேலைக்காரர்களும் பண்டிக்காரர்களும் உட்பட ஆறு பேர்கள் இருக்கிறோம். நமக்கு வேண்டிய ஆயுதங்களும் இருக்கின்றன. திருடர் கள் எத்தனை பேர்கள் வந்தாலும், ஒரு கை பார்க்கிறோம்” என்று, ஞானாம்பாளுக்குப் பயம் நீங்கும் படியான வார்த் தைகள் சொன்னேன். அவள் என்னைப் பார்த்து, “நான் பயப்படுகிற தெல்லாம் கூடி, திருடர்கள் வந்தால் நீங்கள் சும்மா இருக்க மாட்டீர்கள்; அவர்களை எதிர்த்துச் சண்டை செய்வீர்கள். அப்போது, என்ன அபாயம் நேரி டுமோ வென்று தான் அஞ்சுகிறேன். என் பயத்தை உங் களுடைய வார்த்தை ஸ்திரப்படுத்துகிறது. நம்முடைய பலத்தையும், எதிரியி னுடைய பலத்தையும், இடம், காலம் முதலிய பலாபலங்களையும் யோசிக்காமல், யுத்தத்துக்குப் புறப்படுவது உசித மல்ல. சொத்துக்களைத் திருடுவதற் காகவே திருடர்கள் வருகிறார்கள். அவர்களுடைய எண்ணத்துக்கு யாதொரு விக்கினம் நேரிட்டால். அவர்கள் கொலை பாதகத்துக்கு அஞ்சுவார்களா? அடியாளுக்குத் தோன்றுகிற தெல்லாம் கூடி, கள்ளர்களுடைய கூட்டம் அதிகமா யிருக்கிற பக்ஷத்தில், அவர்களை எதிர்க்காபல் நம்முடைய கையில் உள்ள சொத்துக்களை அவர்க ளிடத்தில் கொடுத்து, மரியாதையையும் பிராணளையும் காப்பாற்றிக் கொள்வதே விவேக மென்று தோன்று கிறது. பின்னும், இந்தச் சமயத்தில், கடவுளைத் தவிர வேறு துணை இல்லாத படியால், அவரை நம்பினால் கை விடமாட்டார்” என்றாள். 

இவ்வாறாக நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, மேற்குத் திசையில் வெடிச் சப்தம் கேட்டு, நான் சாவ டித் திண்ணையை விட்டுக் கீழே குதித்து, அந்தத் திசை யைப் பார்த்தேன். சிறிது தூரத்தில் வெளிச்சங்களுடனே திருடர்கள் பெருங் கூட்டமாய் வருகிறதைக் கண்டு, திண்ணைமே லேறி நாங்கள் வைத்திருந்த தீபம் வெளியிலே தெரியாதபடி மறைவாக வைத்து விட்டு, சுவாமிமேலே சகல பாரத்தையும் போட்டு விட்டு, திருடர் கள் வந்த வுடனே அவர்களிடத்தில் கொடுக்க வேண்டியதற்காகப் பணப்பெட்டியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு, மரணத்தை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர் கள் போல, பயந்து, நடுநடுங்கிக் கொண்டு, இருந்தோம். ஞானாம்பாள் ஒரு மூலையிலே, கண்ணீர்ப் பிரவாகத் துடனே, கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தாள். 

மேற்கே யிருந்து வந்த திருடர்கள் இரஸ்தாவில் வந்து சேர்ந்து, நாங்கள் இருந்த சாவடிக்கு நேரே திரும்பி வந்தார்கள். அவர்கள் வரும் போது, அவர் களுக்கு நேரே கிழக்கே யிருந்து ஒரு பெரும் கூட்டம் வந்து, அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஆரடா?” என்று வினாவ, அவர்கள் “நீங்கள் ஆரடா?” என்று எதிர்த்துக் கேட்டார்கள். உடனே, கிழக்கே யிருந்து வந்தவர்களுக் குக் கோபம் உண்டாகி, மேற்கே யிருந்து வந்தவர்கள் மேலே விழுந்து, கத்திகளாலும், கழிகளாலும் யுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் அடித்துக் கொள்ளுகிற அடிகள் எங்கள் தலைமேலே அடிக்கிறது போலே கேட்டு, நாங்கள் விடவிடென்று நடுங்கிக் கொண் டிருந் தோம். அவர்கள் சண்டை செய்கிற காரணம் இன்ன தென்று தெரிய வில்லை. ஆனால், எனக்குத் தோன்றின தெல்லாம் கூடி, அன்றையத்தினம் திருட வேண்டிய முறை இன்னா ருடைய தென்று ஸ்தாபித்துக் கொள்வதற்காக அவர்கள் சண்டை செய்வ தாக அனுமானித்தேன். அந்த இரு பக்ஷத்தாரும் சமான கக்ஷியா யிருந்தமையால், ஒரு கக்ஷிக்காவது தோற்பு கெலிப்பு இல்லாமல், நெடுநேரம் சண்டை செய்தார்கள். ஆனால், கிழக்கே யிருந்து வந்த கூட்டத்தாருக்கு மறுபடியும் மறுபடியும் உபபலம் சேர்ந்து கொண் டிருந்த படியால், அவர்கள் பக்ஷத்தில் ஐயம் உண் டாகி, மேற்குத் திசையார் ஓட ஆரம்பித்தார்கள். அவர் களைக் கிழக்குத் திசையார் வெகுதூரம்வரையில் தொடர்ந்து போய், பிற்பாடு. நாங்கள் இருந்த சாவடியை நோக்கித் திரும்பினார்கள். அவர்கள் வருவதைப் பார்த்த வுடனே, எங்களிடத்தில் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த அற்பப் பிராணனும், மேற்குத் திசையார் போல ஓட ஆரம்பித்தது. 

அந்தக் கூட்டத்தார். சிறிது தூரம் வந்து, பிறகு நின்று விட்டார்கள். அவர்களில் இரண்டு பேர் மட்டும் எங்களை நோக்கி வந்தார்கள். அவர்களை யம தூதர்களாகவே எண் ணினோம். அவர்கள் தூரத்தில் வரும் போதே, என் பெய ரைச் சொல்லி மரியாதையாய்க் கூப்பிட்டுச் சொல்லுகிறார் கள்:- “ஐயா! பிரதாப முதலியாரே! திருடர்கள் ஓடிப் போய் விட்டார்கள்; இனி மேல் நீங்கள் அஞ்ச வேண்டாம். நாங்கள் உங்களுக்குச் சகாயமாக வந்தவர்களே தவிர, நாய் கள் திருடர்கள் அல்ல” என்று சொல்லிக் கொண்டு எங்களை நெருங்கி வந்தார்கள். அவர்களில் ஒருவரை எங்கள் வேலைக்காரன் பார்த்து, “ஐயா நான் குளத்துக்கு ஜலம் கொள்ள வந்த போது, நாங்கள் ஜாக்கிரதையா யிருக்க வேண்டு மென்று சொன்னவர்கள் நீங்கள் தானா?” என்று வினாவ, அவர் ஆம் என்று சொல்லிக் கொண்டு, என்னிடம் வந்து, நமஸ்காரம் செய்தார். அவருடைய முகக் குறியால் அவர் யோக்கியரென்று தெரிந்து கொண்டு நானும் அவருக்கு நமஸ்காரம் சொல்லி ஆசனத்தி லிருத்தி, “நீங்கள் யார்?” என் று வினாவ, அவர் சொல்லுகிறார்:- 

”நான் இதற்கு இரண்டு நாழிகை வழி தூரத்திலிருக்கிற பொன்னூரில் வசிக்கிறவன், என் பெயர் புண்ணியகோடி செடடி. என் தகப்பனா ராகிய ஞானி செட்டி, சத்தியபுரியில், தங்கள் தகப்பனா ரிடத்தில், அநேக வருஷ காலம் காரியம் பார்த்து வந்து, நான் அதி பால்லியமா யிருக்கும் போது இறந்து போனார். அது முதல், என்னையும் என் தாயாரையும், தங்களுடைய தாயாரும், தகப்பனாரும் அன்ன வஸ்திரம் கொடுத்து ஆத ரித்தது மல்லாமல், எனக்கு வித்தயாப்பியாசமும் செய்து வைத்தார்கள். இது, நீங்கள் பிறக்கிறதற்குச் சில காலத் துக்கு முன் நிகழ்ந்த சங்கதி யான தால், தாங்கள் அறிய மாட்டீர்கள். சத்தியபுரியில் தங்களுக்குச் சொந்த மான ஒரு வீட்டில், நானும் என் தாயாரும் குடி யிருந்து கொண்டு, மேற் சொன்ன படி தங்களுடைய தாய் தந்தையார்களால் சம்ரக்ஷிக்கப்பட்டு வந்தோம். எனக்குப் பன்னிரண்டு வயது நடக்கும்போது, ஒரு நாள் அந்த வீட்டுக் கொல்லையில் மரம் வைக்க வேண்டியதற் காக, ஒரு சிறிய மண் வெட்டியால் பள்ளம் பறித்துக் கொண் டிருந்தோம் அந்தப் பள்ளத்தில் மண் வெட்டி பட்டு, வெண்கல ஓசை போல் கணீரென்று சப்தங் கேட்டது. அது என்ன வென்று மறுபடியும் தோண்டிப் பார்க்க, தோலினால் வாய் மூடப்பட்ட ஒரு வெண்கலத் தோண்டி விருந்து அகப் பட்டது. அதை என் தாயார், வீட்டுக் நள்ளே கொண்டு போய், தெருக் கதவை மூடி விட்டு, வெண்கலத் தோண்டியைத் திறந்து பார்க்க, அறுநூறு பூவராகனும் அநேக இரத்தினாபரணங்களும் அடக்கஞ் செய்யப்பட்டிருந்தன. அவ்வளவு பொருளை நாங்கள் ஒரு தாளும் பாராதவர்களான படியால், அந்தச் சங்கதியை வெளிப்படுத்தவேண்டாமென்று, என் தாயார் எனக்குச் சொன்னாள். நான் உடனே என் தாயாரைப் பார்த்து. இந்த வீடுங் கொல்லையும் நம்மை இரட்சிக்கிற கனகாசல முதலியாருக்குச் சொந்த மானதால், அதில் அகப் பட்ட நி க்ஷபமும் அவருக்குத் தானே சொந்தம். இந்தச் சங்கதியை அவருக்குச் சொல்லாம லிருப்பது கிரமமா?” என்று சொல்லிக் கொண்டு கதவைத் திறந்தேன். உடனே என் தாயார் நான் வெளியிலே போகாதபடி, என்னைக் கட்டிப் பிடித்தாள். நான் திமிறிக் கொண்டு, உங்கள் வீட்டுக்குப் போவதற் காக வெளியே ஓடினேன். என் தாயாரும் கதவைப் பூட்டி விட்டு, வெகு தூரம் வரையில் என்னைத் துரத்திக் கொண்டு, ஓடி வந்தாள். நான் அகப்படாமல் ஓடி வந்து, உங்கள் வீட்டுக் குள்ளே நுழைந்து விட்டேன். என் தாயார், இனிமேல் காரிய மில்லை யென்று வீட்டுக்குத் திரும்பிப் போய் விட்டாள். நான் ஓடி வந்த ஓட்டத்தினால் மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டுக் கொண்டு, உள்ளே வந்து நுழைந்ததைத் தங்கள் தாய் தந்தையர் கண்டு, ‘ஏன் அப்பா இப்படி ஓடி வந்தாய்?” என்று கேட்டார்கள். நான் ஓடி வந்த சிரமம் நீங்கினவுடனே, புதையல் அகப்பட்ட விவரமும், மற்றச் சங்கதி களும், அவர்களுக்கு விக்ஞாபித்தேன். அவர்கள், ‘உன்னைப் போல் நல்ல பிள்ளைகள் உண்டா?’ என்று என்னைப் புகழ்ந்து கொண் டிருக்கும் போது, என் தாயார் இனிமேல் மறைக்கக் கூடாதென்று நினைத்து, வெண்கலத் தோண்டி யுடனே வந்து, புதையல் அகப்பட்ட விவரத்தை உண்மையாகவே தெரிவித்தாள். அவள் முந்தி மறைக்க யத்தனப் பட்டதை உங்கள் தாய் தந்தையர்கள் காட்டிக் கொள்ளாமலே, அவளையும் புகழ்ந்தார்கள். 

பிற்பாடு, உங்கள் தாய் தந்தைமார்கள் அறைக்குள்ளே போய், சற்று நேரம் ஆலோசித்துக் கொண்டு, வெளியே வந்து, என்னைப் பார்த்து, ‘பொய்யும், சூதும், வஞ்சனையும் நிறைந்த இந்த உலகத்தில், உன்னைப் போல யோக்கியமான பிள்ளை அகப்படுவது அருமையானதால். உன்னுடைய நற்குணத்திற்குத் தகுந்த சம்மான மாக. அந்தப் புதையலைக் கடவுள் வெளிப்படுத்தி யிருக்கிறார். அந்தத் திரவியத்தை நீயே வைத்துக் கொண்டு சுகமாயிரு என்றார்கள். இதைக் கேட்ட வுடனே, நானும் என் தாயாரும் ஆனந்த பாஷ்பஞ் சொரிந்து கொண்டு, அவர் களுடைய பாதங்களில் விழுந்து விழுந்து, அநேகந் தரம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தோம். அவர்கள் நாங்கள் மறுபடியும் விழாதபடி. எங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். இப்போது நான் வசிக்கிற பொன் னூர்க் கிராமத்தை, அவர்களே என் பெயரால் கிரயம் வாங்கி, எனக்குத் தகுந்த பிராயம் வருகிற வரையில், என் தாயுடன் பிறந்த அம்மானைக் காரிய துரந்தரனாக நிய மித்து, என்னைக் குடும்ப பிரதிஷ்டை செய்தார்கள். நான் இப்போது சாப்பிடுகிறது உங்களுடைய அன்னந்தான்; எரிகிறது உங்க ளுடைய விளக்குத்தான். தண்ணீர்த் துறையில் உங்க ளுடைய வேலைக்காரனைப் பார்த்த போது, நீங்கள் வந்திருக்கிற சமாசாரம் தெரிந்து கொண் டேன். திருடர்களே உங்களை ஏமாற்றி இந்தச் சாவடியில் தங்கும்படி செய்த தாக எனக்குத் தோன்றின படியால் அந்த ஆபத்தைத் தீர்க்க என்ன உபாயஞ் செய்யலா மென்று நான் பல வகையில் யோசித்தேன். என்னுடைய கிராமத்துக்கு உங்களை அழைத்துக் கொண்டு போகலா மென்றால், பண்டி போகும் படியான மார்க்கமில்லை. நீங்கள் வயல் வழியாக நடக்கமாட்டீர்க ளானதால், நானே என் கிராமத்துக்குப் போய், ஆட்களைக் சேர்த்துக் கொண்டு வருவது நல மென்று நினைத்து, அந்தப் படி ஆட்களைக் கூட்டிக் கொண்டு, அதி சீக்கிர மாக வந்தேன். நாங்கள் வந்த சமயமும், திருடர்கள் வந்த சமயமும், ஒத்துக் கொண்டபடியால், திருடர்கள் உங்களைக் கிட்டாத படி அவர்களை அடித்துத் துரத்தி விட்டோம்: அதோ அங்கே நிற்கிற கூட்டம் நம்முடைய கூட்டந்தான். அவர் கள் எல்லாரும் இங்கே வந்தால், திருடர்களென்று நினைத்து நீங்கள் பயப்படுவீர்க ளென்று கருதி, நாங்கள் இருவர் மட்டும் வந்து உங்களைக் கண்டோம்; கண் குளிர்ந் தோம். நாங்கள் செய்த பூஜா பலம் இப்போது தான் எங்களுக்குப் பிராப்த மாயிற்று. உங்க ளுடைய தர்ம பத்தினியின் உத்தம குணங்களை இதற்கு முன் கேட்டு, நாங்கள் சுரோத்திராநந்த மடைந்தோம். இப்போது அந்த உத்தமியை தரிசித்து, நேத்திராநந்தத்தை அடை கிறோம். எங்களுடைய கண்ணுக்கும் காதுக்கும் இருந்த விவாதம் இன்றோடே தீர்ந்துவிட்டது” என்றார். நான் அவரைப் பார்த்து,”என் தாய் தந்தையர் உங்களுக்குச் செய்த உபகாரம் ஒரு பாக்காகவும், நீங்கள் எங்களுக்குச் செய்த உபகாரம் தேர்ப்பாகவு மாகி விட்டது. நீங்கள் சமயத்தில் வந்து எங்களை இரக்ஷிக்கா விட்டால், எங்களுடைய யாத்திரை பரலோக யாத்திரை யாக. முடிந்திருக்கும். 

‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது.’ 

சமயத்தில் செய்த ஒரு சிறு உதவி பூமியினும் மிகப் பெரி தென்று திருவள்ளுவர் சொல்லுகிறார். அப்படியானால், நீங்கள் சமயத்தில் செய்த பேருதவிக்கு யாதை ஒப்பிடுவேன்?” என்று பலவகையாக என்னுடைய நன்றி யறிதலை வெளிப்படுத்தினேன் அவர், பொழுது விடிந்த வுடனே தம்முடைய ஊருக்கு வர வேண்டு மென்று பிரார்த்தித்தார். நாங்கள் திரும்பி வரும் போது அகத் தியம் வருவ தாகச் சொல்லி, விடை பெற்றுக் கொண்டு, மறுபடியும் பிரயாணம் ஆரம்பித்தோம். 

25-ஆம் அதிகாரம் 

புலி யென்னுங் கிலி-அழையா விருந்து – பிரயாண முடிவு 

ஒரு நாள் மத்தியானத்தில், இரண்டு பக்கமும் மலைகள் அடர்ந்த கானகத்தின் வழி யாக நாங்கள் யாத்திரை செய்து கொண்டிருக்கையில், திடீரென்று வானம் இருண்டு, பெருங் காற்றுடனே மழையும் துவங்கிற்று. நாங்கள் இருந்த வண்டியில், நாலு பக்கமும் தூவானம் அடித்து, நாங்கள் நனையும் படியான ஸ்திதியும் இருந்த படியால், மழை விடுகிற வரையில் மலைக் குகைக் குள்ளே, இருக்கலா மென்று நினைத்து, வண்டியினின்று கீழே இறங்கி,நானும் ஞானாம்பாளும் வேலைக்காரர்களும் அவர் களுடைய பெண்சாதிகளும் மலை அடிவாரத்துக்குப் போனோம். வண்டிக்காரர்கள் வண்டிகளுக்குக் காவலாக இருந்தார்கள். நாங்கள். மலை அடிவாரத்தில் இருள் அடர்ந்த ஒரு கெபியைக் கண்டு, அதற் குள்ளே நுழைந்து, வாசற்படி யோரத்தில் உட்கார்ந்தோம். மழை நின்று, கொஞ்சம் வெளிச்சம் கண்ட வுடனே, அந்த கெபிக் குள்ளாகப் பார்த்தோம். எங்களுக்குக் கொஞ்ச தூரத்தில், அந்தக் குகையில், இரண்டு புலிகளைக் கண்டு, நாங்கள் திகிலடைந்து, ஒருவர் மேல் ஒருவர் விழுந்து ஓட ஆரம்பித்தோம். எங்கள் வேலைக்காரர்கள் எங்களை யும் அவர்களுடைய பெண்சாதிகளையும் விட்டு விட்டு, ஒரு நிமிஷத்தில், போன இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொண்டார்கள். நான், ஞானாம்பாளையும், வேலைக்காரிகளையும் முன்னே ஓடச் சொல்லி, பின்னே ஓடினேன் ஓடச் சக்தியில்லாமல், அந்த ஸ்திரீகளும் நானும் சேற் றிலே சறுக்கி விழுந்து கொண்டு, தள்ளாடித் தள்ளாடி ஓடும் பொழுது, பின்னே திரும்பிப் பார்த்தேன். அந்தப் புலிகள் குகையை விட்டு ஓடி வருகிறதைக் கண்டு, அந்த திரீகளைப் பார்த்து, “புலிகள் தொடர்ந்து வருகிற படி யால் சீக்கிரமாய் ஓடுங்கள்!” என்றேன். இதைக் கேட்ட வுடனே, அந்த வேலைக்காரிகள் கிவி பிடித்து, கீழே விழுந்து, உதைத்துக் கொண்டார்கள். அவர்களை அந்த ஸ்திதியில் விட்டு விட்டு எப்படிப் போகிற தென்று, தானும் ஞானாம்பாளும் மலைத்து நின்றோம். புலிகள் சமீபித்தவுடனே, அவைகளைச் சுடலா மென்று, என கையிருந்த துப்பாக்கியில் குண்டு போட்டுக் கெட்டிக்க ஆரம்பித்தேன். 

ஞானாம்பாள் சற்று நேரம் அந்தப் புலிகளை உற்றுப் பார்த்து, “அவைகள் நாலு காற் புலிகளா யிராமல், இரண்டு காற் புலிகளாய்க் காணப் படுகின்றன; அவைகளை நன்றாய்ப் பாருங்கள்” என்றாள். நான் திரும்பிப் பார்க்க ஆரம்பித்த உடனே, அந்தப் புலிகளிடத்தினின்று ஒரு வாக்கியம் புறப்பட்டது. என்ன வென்றால் “ஐயா! எங்களைச் சுட வேண்டாம். நாங்கள் புலிகள் அல்ல; நாங்கள் வேஷக்காரர்கள்” என்பது தான். சற்று நேரத்தில் நெருங்கி வந்து, எங்களைப் பார்த்து, “நாங்கள் அல்லாப் பண்டிகைக்காகப் புலி வேஷம் போட்டுக் கொண்டு, பல ஊர்களுக்குப் போய், யாசகம் வாங்குகிறதற்காகப் புறப்பட்டோம்; மழையினால் எங்களுடைய வேஷம் கலைந்து போ மென்று நினைத்து அந்தக் குகைக் குள்ளாக உங்களுக்கு முன்பாக வந்து உட்கார்ந் திருந் தோம். இதுதான் நடந்த வாஸ்தவம்” என்றார்கள். அவர்கள் புலி அல்ல வென்றும், வேஷக்காரர்க ளென்றும், எங்களுக்குப் பிரத்தியட்சமாய்த் தெரிந்தவுடனே. எங் களுடைய பயம் நீங்கி விட்டது. கீழே விழுந்து கிடந்த அந்த வேலைக்காரிகளுடைய நடுக்கம் தீரவேயில்லை. அவர்கள் எழுந்திருக்கும் படியாக நாங்கள் பட்ட பாடு கொஞ்சமல்ல. அவர்களுடைய புருஷர்கள் போன வழி தெரியாமையால், அவர்களை நாலு பக்கமும் தேட ஆரம் பித்தோம். சற்று நேரத்துக்குப் பின்பு, சாமான் வண்டிக் குள்ளாகச் சத்தம் கேட்டு, சாமான்களை விலக்கிப் பார்த்தோம். அந்த வேலைக்காரர்கள் சாமான் வண்டிக்குள் நுழைந்து, சாமான்களை வாரி மேலே போட்டு மறைத்துக் கொண்டு, படுத்திருந்தார்கள். அவர்களை எழுப்பி வெளியே விட்டு, ‘ஆபத்து வரும் போது, நாங் கள் முன்னின்று தலை கொடுப்போம் என்று சொல்லி வந்த நீங்கள், இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டேன். அவர்கள் என்னைப் பார்த்து ‘சுவாமி! எங்கள் மேலே தோஷமில்லை. ஆபத்து இல்லாத காலத்தில், நாங்கள் பூரண தைரியசாலிகளா யிருக்கிறோம். ஆபத்தைக் கண்டவுடனே எங்களுடைய கால் நிலை கொள்ளாமல், எங்களையும் இழுத்துக் கொண்டு ஓடுகின்றன; நாங்கள் என்ன செய்வோம்?’ என்றார்கள். இப்படிப்பட்ட சுத்த வீரர்களைக் கோபிப்பதில் பிரயோசனம் என்ன? அவர்களுடைய பெண்சாதிகளை ஆபத்து வேளையில் கைவிட்டு ஓடினதற் காக, அவர்களே புருஷாகளைக் கோபிப்பார்க ளென்று நினைத்து,நாள் சும்மா இருந்து விட்டேன். அந்த மூடப் பெண்சாதிகள் புருஷர்களைக் கோபிப்பதற்குப் பதிலாய், அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஓடும் போது உங்கள் பாதங்களில் கல்லும் முள்ளும் தைத்திருக்குமே! சாமான்களைத் தூக்கி மேலே போட்டுக் கொண்ட போது தேகத்தில் காயம் பட்டிருக்குமே!” என்று அனுதாபப் பட்டார்கள். பக்ஷத்துக்குக் கண் இல்லை என்பது அப் போது தான் எனக்குத் தெரிந்தது. 

இவ் வகையாகச் சில நாள் யாத்திரை செய்த பின்பு ஒரு நாள், எங்களுக்கு நேரே ஒரு நகரம் குறுக்கிட்டது. அது என்ன ஊரென்று விசாரிக்க, தேவராஜப் பிள்ளையி னுடைய ஊராகிய ஆதியூ ரென்று கேள்விப் பட்டோம். உடனே எங்களுக்குப் பெரிய ஆச்சரியம் உண்டாகி ஒளி யப் போயும் தலையாரி வீட்டில் ஒளிந்தது போல் நாம் ஒருவரும் காணாத படி தூர தேசத்துக்குப் போக உத்தே சித்துப் போகும் போது இந்த ஊர் வந்து குறுக்கிட் டதே! இந்த ஊருக்கு வருகிற தென்றும் நாம் நினைக்கவே இல்லையே! நாம் இவ்வளவு சமீபத்தில் வந்தும், அவர் களைப் பார்க்காமல் போனால், பிற்பாடு அவர்களுக்கு உண்மை தெரியும் போது மனஸ்தாபப் படுவார்களே! இந்தத் தரும் சங்கடத்துக்கு என்ன செய்கிற தென்று நானும் ஞானாம்பாளும் வண்டியை நிறுத்தி ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது, இரஸ்தாவில் எங்களுக்கெதிரே நாலு குதிரைகள் கட்டின இரண்டு இரதங்கள் ஓடி ந்தன. முன்னே வந்த இரதத்தில் யார் இருக்கிறார் களென்று எட்டிப் பார்த்தேன். அதில் தேவராஜப் பிள்ளையும் அவருடைய மகன் கனகசபையும் கனகசபையும் இருந்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்தவுடனே இரதத்தை  நிறுத்தி, கீழே குதித்தார்கள்: நானும் கீழே குதித்தேன். அவர்கள் முக மலர்ச்சியோடும் அக மகிழ்ச்சியோடும் என்னைக் கட்டிக் கொண்டு, ‘நீங்கள் வர இந்த ஊர் என்ன தவம் செய்ததோ? நாங்கள் செய்த புண்ணிய பலன் இன்றைக்குத்தான் எங்களுக்குக் கிடைத்தது என்று பல வாறாக உபசரித்தார்கள். மற்றொரு இர தத்தி லிருந்து, தேவராஜப் பிள்ளை பத்தினியும் அவ ருடைய தங்கையும் கீழே இறங்கி, ஞானாம்பாளைத் தழுவிக் கொண்டு பல வகையான முகமன் கூறினார்கள். தேவராஜப் பிள்ளையும், கனகசபையும் ஞானாம்பாளுக்குத் தக்கபடி இனிய வசனம் கூறி அவளை அந்த ஸ்திரீகள் வந்த இரதத்தில் ஏற்றுவித்து, என்னைத் தங்களுடைய இரதத்தில் ஏற்றிக் கொண்டு ஊருக்குத் திரும்பினார்கள். 

நாங்கள் வழியிலே போகும் போது தேவராஜப் பிள்ளை என்னை நோக்கி “இன்றையத் தினம் உங்கள் தற் தையா ரிடத்தி லிருந்து தபால் மார்க்கமாக வந்த கடிதத் தில். நீங்கள் ஒருவருக்கும் சொல்லாமல் ஊரை விட்டுப் போய்விட்ட தாகவும், இன்ன ஊருக்குப் போனீர்களென்று தெரிய வில்லை யென்றும், தாங்கள் பல ஊர்க ளுக்கு னுஷர்களும் கடிதங்களும், அனுப்பி இருப்பதாகவும், நீங்கள் இந்த ஊருக்கு வந்தால் உடனே தெரிவிக்க வேண்டு மென்றும், எழுதப்பட் டிருந்தது. நீங்கள் இந்த ஊருக்கு வராமல் வேறே எங்கே போகிறீர்களோ என்று, நாங்கள் மிகவும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தோம். உங்களை எங்கள் தெய்வந்தான் கொண்டு வந்து விட்டது; நாங்கள் கிருதார்த்தர்களானோம்” என்று சொல்லி பின்னும் என்னைப் பார்த்து, “நீங்கள் ஒருவருக்கும் சொல்லாமல் ஏழைகளைப் போல ஊரை விட்டு வெளிப் பட்டதற்குக் காரணம் என்ன?” வென்று வினவினார். என் தகப்பனா ருடையவும் மாமனாருடையவும் வீணான சண்டையை வெளிப் படுத்த எனக்கு மன மில்லாமவிருந்தாலும், பொய்யான காரணத்தைச் சொல்லக் கூடா தென்று நினைத்து, ஞானாம்பாளுக்குக் கர்ட்பச் சின் னங்கள் தோன்றினதும், அந்தக் கர்ப்பக் குழந்தையை என் மாமனார் ஸ்வீகாரம் கொடுக்கும் படி கேட்டு, அது மூலமாகச் சண்டை விளைந்ததும், நான் சங்க்ஷேப மாகத் தெரிவித்தேன். அதைக் கேட்ட வுடனே, அவருக்கு உண் டான பெருஞ் சிரிப்பு எப்படிப் பட்ட தென்றால், அவர் அவ் வகையாக இன்னும் சற்று நேரம் சிரித்திருப்பா ரானால், அவர் மரித்திருப்பா ரென்பதும், கனகசபை தகப் பன் இல்லாப் பிள்ளை யாகி இருப்பான் என்பதும் நிச்சயமே. பிறகு, எனக்கு வருத்தமா யிருக்கு மென்று, அவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்லுகிறார்:- 

“தாய் தகப்பன்மார்களுடைய சண்டைக ளெல்லாம். பிள்ளைகளின் மேல் இருக்கிற பக்ஷத்தினால் விளைகின் றனவே அல்லாமல்,மற்றப்படி அல்ல. உம்முடைய மாம னார், தம்முடைய மகள் பிள்ளை தமக்குப் பிள்ளையாயிருக்க வேணுமென்று அபேக்ஷித்து, அந்தப் பிள்ளையைத் தமக்கு ஸ்வீகாரம் கொடுக்கும்படி கேட்டார். உமது தகப்பனார், தம்முடைய பேரப் பிள்ளையைப் பிரிய இஷ்டமில்லாமல், ஆக்ஷேபித்தார். ஆகையால், உங்கள் மேலும் உங்கள் சந்ததி களின் மேலும் அவர்களுக்கு உண்டாயிருக்கிற பக்ஷத்தினால், அந்தச் சண்டை விளைந்த தென்பது நிதரிசனமா யிருக் கின் றது. அனேக சமயங்களில், பொல்லாங்கிலிருந்து சுவாமி நன்மையை விளைவிப்பது போல. இந்த சண்டையினால் எனக்கு ஒரு நன்மையைச் செய்திருக்கிறார். இந்தச் சண்டை நேரா விட்டால், உங்களை இப்போது தரிசிக்கும் படியான பாக்கியம், எங்களுக்குக் கிடைத்திருக்குமா?” என்றார். இவ் வகையாகச் சல்லாபித்துக் கொண்டு, அவருடைய அரண் மனையிலே போய்ச் சேர்ந்தோம். அங்கே எங்களுக்கு நடந்த உபசாரங்களும் மரியாதைகளும் இப்படிப் பட்டவை யென்று விவரிப்பது எளிதல்ல. தேவராஜப் பிள்ளையும் கனக சபையும் என்னை விட்டு ஒரு நிமிஷமாவது பிரிகிற தில்லை. அவருடைய பத்தினியும், தங்கையும், தங்கை மகளும், ஞானாம்பாளை விட்டுச் சற்றும் பிரிகிற தில்லை. இராஜோபசாரங்களும், விருந்துகளும், வேடிக்கை விநோ தங்களும் செய்து, எங்களைச் சந்தோக்ஷிப்பித்தார்கள். 

– தொடரும்…

– மாயூரம் மாஜி டிஸ்டிரிக்ட் முன்சீப் ச.வேதநாயகம் பிள்ளையவர்கள் (1826-1889) இயற்றியது, முதற் பதிப்பு: 1879.

– பிரதாப முதலியார் சரித்திரம், நூற்றாண்டு விழா புதிய பதிப்பு: அக்டோபர் 1979, வே.ஞா.ச.இருதயநாதன் (வேதநாயகம் பிள்ளை மகன் பேரர்), ஆவடி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *