பிரதாப முதலியார் சரித்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 1,454 
 
 

(1879ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். அதுவரை செய்யுள் வடிவ புனைகதை இலக்கியங்களே இருந்துகொண்டிருந்த தமிழிற்கு உரைநடை வடிவிலான புனைகதை இலக்கிய வகை இந்நூல் வழியாக அறிமுகமானது. அவ்வகையில் இது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

அதிகாரம் 11-15 | அதிகாரம் 16-20 | அதிகாரம் 21-25

16-ஆம் அதிகாரம்

ஆண்டிச்சியம்மாள் சரித்திரம் 

மாமி நாத்திகளின் கொடுமை 

என்னுடைய ஸ்தோத்திரம் முடிந்த வுடனே, ஞானாம்பாளுக்குத் துணையாக வந்த ஆண்டிச்சி அம்மாளை எல்லாரும் புகழ் ஆரம்பித்தார்கள். அந்த அம்மையை நோக்கி, “அம்மா நீங்கள் செய்தது பெரிய உபகாரம்; ஒருவரும் இப்படிப்பட்ட உபகாரம் செய்ய மாட்டார்கள். உலக நடை தெரியாத சிறு பெண்ணான, ஞானாம்பாள் நடுக்காட்டில் உங்களிடத்தில் அடைக்கலம் புகுந்தது போல, வேறே யாரிடத்திலாவது அடைக்கலம் புகுந்திருந்தால், அவர்கள் அவளுடைய ஆபரணங்களை இச்சித்து, அவளை ஜீவ வதை செய்திருப்பார்கள்; அல்லது அந்தத் தாசில்தா ரிடத்தில் அவளை ஒப்பித்திருந்தாலும், அவன் தகுந்த வெகுமானம் செய்திருப்பான். அப்படிப்பட்ட ஆபத்துக்கள் இல்லாமல், ஞானாம்பாளை எங்களிடத்தில் நீங்கள் கொண்டு வந்து ஒப்புவித்தது பெரிய உபகாரம். இதற்கு நாங்கள் என்ன பிரதி உபகாரம் செய்யப் போகிறோம்?” என்று வாழ்த்தினார்கள். அந்த ஆண்டிச்சி அம்மாள், நல்ல அந்தஸ்தி லிருந்து மெலிந்து போனதாகச் சில. குறிப்புகளால் தெரிய வந்த படியால், அவருடைய சரித் திரத்தைச் சொல்லும்படி வேண்டிக் கொண்டோம். அவர் கள் எங்களைப் பார்த்து, “என்னுடைய சரித்திரம் மகா துயரத்துக் குரியது. நீங்கள் சந்தோஷமா யிருக்கிற இந்தச் சமயத்தில், என்னுடைய சரித்திரத்தைச் சொல்லி, உங்களைத் துன்பத்துக்குட்படுத்த எனக்கு மன மில்லை. ஆயினும், உங்கள் வேண்டுகோளின் படி, என்னுடைய சரித்திரத்தைச் சொல்லுகிறேன்” என்று சொல்லத் தொடங்கினார்கள். 

“நான் ஒரு தனவான் வீட்டிலே பிறந்து, தனவான் வீட்டிலே வாழ்க்கைப் பட்டேன். நான் பிறந்த இடம் புதுவை மாநகர் புகுந்த இடம் பொன்னகரி, என் தாயார் இறந்த பிற்பாடு, என் தகப்பனார், இதற்குப் பதி னாறு வருஷத்திற்கு முன் இராணுவ வகுப்பில் தளகர்த்தராயிருந்த என்னுடைய அத்தை மகனுக்கு, என்னைப் பாணிக்கிரகணம் செய்து கொடுத்தார். எனக்குக் கலியாணமாகி, நான் புருஷன் வீட்டிற்குப் போன உடனே, தூர தேசத்தில் வாழ்க்கைப் பட்டிருந்த என்னுடைய நாத்தனார் புருஷன் பிராண வியோகம் ஆனதாகச் சமாசாரம் வந்த படியால், என் மாமியார் அந்த ஊருக்குப் போய் விட்டாள். அவள் திரும்பி வரப் பத்து மாதம் சென்றது. அந்தப் பத்து மாத காலமும், நானும் என்னுடைய பர்த்தாவும், தேகமும் சீவனும் போலவும், கரும்பும் இரசமும் போலவும், அதிகப் பிரீதியாக வாழ்ந்தோம். எங்களுடைய சந்தோஷம் நீடித்திருந்தால், இந்த உலகமே சதமென்று நாங்கள் எண்ணி விடுவோம் என்றோ, அல்லது வேறென்ன காரணமோ, எங்களுடைய சந்தோஷத்தைக் கடவுள் மாற்றி விட்டார். எப்படியென்றால், பத்து மாதத்திற்குப் பிறகு, என்னுடைய மாமியும், அமங்கலியாய்ப் போன அவளுடைய மகளும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் எங்களுடைய கிருகத்தில் வந்து பிரவேசித்தது, கிரசுசாரமே வந்து பிரவேசித்தது போல் ஆயிற்று. அவர்கள் வந்து நுழைந்த போது, நானும் என் பர்த்தாவும் அதிக நேசமாகச் சல்லாபித்துக் கொண்டிருந்தோம். அதைக் கண்டவுடனே, அவர்களுக்குக் கோபம் பொங்கி, அவர்கள் எங்களைப் பார்த்த கடூரமான பார்வை, ஆயிரங் கத்தி வெட்டுக்குச் சமானமாயிருந்தது. அந்தப் பார்வையில் நாங்கள் பட்டுப் போகாமற் பிழைத்தது, யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை. நான் அவர்களைக் கண்டவுடனே, அவர்களுக்கு நமஸ்காரம் செய்து, அப்பாலே போய் விட்டேன். என் மாமியார் என் பர்த்தாவை நோக்கி, “நான் உன் தகப்பனாரை விவாகம் செய்து, இருபது வருஷம் வரைக்கும் மங்கிலிய ஸ்திரியாயிருந்தேன். அந்த இருபது வருஷ காலத்திலும், இரண்டு வார்த்தைகூட என்னுடைய நாயகரிடத்தில் நான் பேசி அறியேன். புருஷன் வீட்டில் வந்து அடி வைத்த உடனே, நாத்தனார் புருஷனைத் தின்று விட்டவள் இடத்தில், உனக்குப் பேச்சா?” என்றாள். உடனே என் பர்த்தா, “நாத்தனார் புருஷன் இறந்து போனால், என் பெண்சாதி என்ன செய்வாள்? நான் என் பெண்சாதி இடத்தில் பேசினேனே தவிர, அந்நிய ஸ்திரீயிடத்தில் பேச வில்லையே” என்றார். இதைக் கேட்ட உடனே, “அந்தச் சிறுக்கி, உனக்கு இவ்வளவு பேசக் கற்றுக் கொடுத்து விட்டாளா?” என்று, என் மாமி குதித்த குதிப்பும், ஆடின ஆட்டமும், சதுருக்கு விட்ட தேவடியாள் கூட ஆடமாட்டாள். என்னுடைய நாயகர் மானி ஆனதால், ஊர் சிரிக்கும் என்று பயந்து, ஒன்றும் பேசாமல் இருந்து விட்டார். அன்று முதல் பல நாள் வரைக்கும், என் மாமியார் வாயும், நாத்தனார் வாயும், ஓயவேயில்லை. அவர்கள் என்னுடைய கொட்டத்தை அடக்க வேண்டுமென்று தீட்சித்துக் கொண்டு, வேலைக்காரர்களை யெல்லாம் தள்ளி விட்டு, சகல வேலைகளையும் நான் செய்யும்படி, என் தலை மேலே சுமத்தினார்கள். என் பர்த்தாவுக்கு அமுது படைத்தல், தாம்பூலம் கொடுத்தல் முதலிய வேலைகளையும் நான் செய்கிறதா யிருந்தால், என்னுடைய சிரமங்ளுக்கு ஒரு பரிகாரமா யிருக்கும். அந்த வேலைகளை எல்லாம் அவர்கள் வகித்துக் கொண்டு, கஷ்டமான வேலைகளை எல்லாம் என் பங்கில் வைத்து விட்டார்கள். எல்லாரும் சாப்பிட்ட பிறகு, அவர்களுடைய உச்சிட்டத்துக்காக நான் காத்திருக்க வேண்டுமே அல்லாது. பசித்த போது நான் சாப்பிடக் கூடாது. அந்த உச்சிட்ட எனக்குப் மும்பாதி வயிற்றுக்குக் கூடப் பற்றுகிறதில்லை. என் மாமியும் நாத்தியும் வந்த நாள் முதல், நானும் என் புருஷனும் பேசுவது, குதிரைக் கொம்பாகி விட்டது. நான், ஒரு பக்கத்திலும் அவர் ஒரு பக்கத்திலும் இருப்பதால், நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாமலும், நயன பாஷைக்குக் கூட இடமில்லாமலும். போய் விட்டது. இராக் காலங்களில் என்னுடைய பர்த்தாவின் படுக்கை அறைக்குள் நான் பிரவேசிக்காதபடி அந்த அறையின் வாசற்படி ஓரத்தில் தாயும் மகளும் படுத்துக் கொண்டு, ஒருவர்மாற்றி ஒருவர் பாராக்கொடுக்கத் தலைப்பட்டார்கள். 

“இவ்வளவு துன்மார்க்கங்களுக்கும் இடம் கொடுத்துக் கொண்டு என் கணவர் உபேக்ஷையா யிருப்பது எனக்கு மன வேதனையா யிருந்தாலும், அவர் மானத்துக்குப் பயந்து மௌனமா யிருக்கிறா ரென்றும், அவருக்கு என்னிடத்திலிருக்கிற அன்பு குறையா தென்றும் எண்ணி, நான் சகல கஷ்ட நிஷ்டூரங்களையும் பொறுமையுடன் சகித்தேன். அப்படியிருக்க, என் மாமியும் நாத்தியும் சில வியபிசாரிகளை அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்கும் என் பர்த்தாவுக்கும் சிநேகத்தை உண்டு பண்ணச் சர்வ பிரயத்னம் செய்தார்கள். என்னுடைய கணவர் சொந்த ஸ்திரீயினிடத்திலே பேசக் கூடாதென்று விலக்கி, அந்நிய ஸ்திரீகளுடன் சகவாசம் செய்யும்படி முயற்சி செய்த என்னுடைய மாமியும் நாத்தியும், எப்படிப் பட்ட பொல்லாதவர்களா யிருக்க வேண்டு மென்று நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். இந்தக் கொடுமைகளை எல்லாம் தூர தேசத்திலிருக்கிற என் தகப்பனாருக்கு நான் கடித மூலமாகத் தெரிவித்தால், உடனே எனக்குப் பரிகாரம் கிடைத்திருக்கு மென்பதில் சந்தேகமில்லை. என் பாட்டனார் இறந்த பிறகு, என் தகப்பனாரே அவருடைய தங்கையாகிய என் மாமியை வளர்த்து, விவாகம் செய்து கொடுத்ததும் தவிர, அவள் விதந்துவான பிறகும், அவரே அவளையும் அவள் பிள்ளையாகிய என் பர்த்தாவையும் நெடுங்காலம் ஆதரித்து வந்த படியாலும், அவர் துஷ்ட கண்டகர் ஆன படியாலும், அவரைக் கண்டால், கருடனைக் கண்ட பாம்பு போல், என்னுடைய மாமியும் நாத்தியும் அடங்குவார்களென்பது நிச்சயமே. ஆயினும், புருஷன் வீட்டில் நடக்கிற கொடுமைகளைத் தகப்பனுக்குத் தெரிவிப்பது, பதிவிரதைகளுக்குத் தகுதி அல்ல வென்றும், கலகத்துக்கு ஆஸ்பதம் ஆகு மென்றும் நினைத்து, நான் என் தகப்பனாருக்குக் கடிதம் எழுதாமல் இருந்து விட்டேன். என்னுடைய வருத்தங்களை எல்லாம், என் புருஷனுக்கு எவ்வகையிலாவது தெரிவிக்கிற தென்று நிச்சயித்துக் கொண்டு, ஒரு நாள் நடுச்சாமத்தில், எல்லாரும் தூங்கின பிற்பாடு, நான எழுந்து சத்தம் செய்யாமல் என் பர்த்தாவின படுக்கை அறைக்கு நேரே போனேன். அந்த அறையின் வாசற்படி ஓரத்தில் இரண்டு காவற்காரிகளும் படுத்திருந்தார்கள். அவர்களுடைய காவலைக் கடந்து உள்ளே போகிறதற்காக, அவர்கள் இருவரையும், ஒரே தாண்டாய்த் தாண்டினேன். உடனே என் சேலை தடுக்கி, அடியற்ற மரம் போல, அவர்கள் மேலே விழுந்து விட்டேன். அப்போது இருட்டா யிருந்ததால் அவர்கள் என்னைக் கையாலே தடவிப் பார்த்து, நான் தான் என்று கண்டு பிடித்துக் கொண்டு, என்னை அடிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் என்னைப் பிடித்த பிடியை விடாமல் அடித்த படியால், நான் அடி பொறுக்க மாட்டாமல், நகத்தால் அவர்களைக் கீறினேன். அவர்கள், தங்களுடைய நகங்களால் தங்களைத் தாங்களே அதிகமாகக் கீறி விட்டுக் கொண்டு, ”கூ! கூ! எங்களை வந்து கொல்லுகிறாள்!” என்று கூவினார்கள். உடனே என் கணவர் விழித்துக் கொண்டு, தீபத்துடன் எங்களிடம் ஓடி வந்தார். என்னைப் பார்த்தவுடனே, “உன்னுடைய அறையை விட்டு இங்கே நீ ஏன் வந்தாய்?” என்று கேட்டார். நான் உண்மையான காரணத்தைச் சொல்ல வெட்கப் பட்டுக் கொண்டு, கள்ளப் புருஷன் வீட்டுக்குப் போய் அகப்பட்டுக் கொண்டவள் போல விழித்தேன். அந்த நீலிகள் இருவரும், அவர்களுடைய காயங்களை புருஷனுக்குக் காட்டி, என்னைப் பேய் பிடித்திருக்கிற தென்றும், அல்லது பயித்தியமாவது என்னைப் பிடித்திருக்க வேண்டு மென்றும், சாதித்தார்கள். என் கணவரும் அப்படியே அபிப்பிராயப்பட்டு, என்னைத் தள்ளி கொண்டு போய், எனனுடைய அறைக்குள்ளாக விட்டுக் கதவை இழுத்துச் சாத்தி, வெளிப் பக்கத்தில் நாதாங்கி போட்டு விட்டார். நான் புருஷனைப் பார்க்கப் போய் இப்படி வந்து சம்பவித்ததே என்று நினைத்து, அந்த இரா முழுவதும் நான் அழுத் கண்ணீர், அறை முழுதும் நிறைந்துவிட்டது. மறு நாள் விடிந்த உடனே, வைத்தியர்களும், மந்திரவாதிகளும் வந்து, கூடி விட்டார்கள். வைத்தியர்கள் எல்லாரும், எனக்குப் பைத்திய மென்று சாதித்தார்கள். மந்திரவாதிகள் எல்லாரும், எனக்குப் பேய் பிடித்திருக்கிறதென்று வாதித்தார்கள். அவர்களில் ஒருவன் என்னை நூற்றெட்டுப் பேய் பிடித்திருக்கிற தென்று சொன்னான். அதைக் கேட்ட உடனே என்னை அறியாமலே எனக்குக் கோபம் ஜனித்து, அவ்விடத்திற் கிடந்த ஒரு கல்லை எடுத்து, அவன் மேலே எறிந்தேன். என்னைப் பேய் பிடித்திருக்கிற தென்பதற்கு, இது பிரத்தியட்சமான ருசு ஆகி விட்டது. உடனே என்னைப் பிடித்து, கை விலங்கு கால் விலங்கு போட்டு, என் தலைலயச் சிரைத்து வைத்தியர்கள் ஒரு பக்கத்திலும், மந்திரவாதிகள் ஒரு பக்கத்திலும், எனக்குச் செய்த சித்திராக் கினைகளை விவரிக்க என்னுடைய ஒரு வாய் போதாது. நான் அவர்களைப் பார்த்து, “ஒரு உயிருக்கு இத்தனை எமன்கள் வேண்டுமா? எனக்குப் பைத்தியமுமில்லை. பேயு மில்லை. என்னை வீணாக ஏன் வாதிக்கிறீர்கள்?” என்று, அவர்களுக்கு இரக்கம் உண்டாகும் படி, நான் கற்ற வித்தைகளை எல்லாம் காட்டினேன். நான் சொல்வதெல்லாம் எனக்குப் பிரதிகூலமாய் முடிந்ததே தவிர, யாதொரு அனுகூலத்தையும் செய்யவில்லை. 

நான் புருஷனோடு கூடியிருந்த காலத்தில் எனக்குக் கர்ப்பம் உண்டாகி, அப்போது எனக்குத் தெரியாமலிருந்து இப்போது சில கர்ப்பச் சின்னங்கள் தோன்றின படியால், “கர்ப்பிணியா யிருக்கிற எனக்கு மருந்துகள் கொடுப்பது சரியல்ல” வென்று, வைத்தியர்களுக்குத் தெரிவித்தேன். நான் கர்ப்பிணி யென்று தெரிந்த மாத்திரத்தில், என்னுடைய மாமியும், நாத்தியும், அவர்களுடைய புருஷர்கள் அன்றைக்குத் தான் இறந்தது போற் கரை காணாத துக்க சாகரத்தில் அமிழ்ந்தி, முன்னையைப் பார்க்கிலும் நூறு மடங்கு அதிகமாக என்னைப் பகைக்க ஆரம்பித்தார்கள். என்னுடைய கர்ப்பம் அழியத் தக்க ஒளஷதப் பிரயோகம் செய்ய அவர்கள் யத்தனமா யிருக்கையில், ‘இராக்ஷதனுக்கும் ஒரு புரோக்ஷதன் உண்டு’ என்பது போல என்னுடைய மாமியாரை அடக்கத் தக்க சாமியார் ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் யாரென்றால், என்னுடைய தகப்பனார் தான். அவர் என்னுடைய அலங்கோலத்தைப் பார்த்த உடனே, உள்ளங்கலங்கி, என்னைக் கட்டிக் கொண்டு கதறினார். பிற்பாடு, எனக்குப் பைத்தியமா அல்லவா வென்று நிச்சயிக்கும் பொருட்டு, என்னைப் பார்த்துப் பல கேள்விகள் கேட்டார். அவைகளுக்கு நாள் தகுதியான மறுமொழி சொன்னதும் தவிர, நடந்த காரியங்களை எல்லாம் சுருக்கமாக அவருக்குத் தெரிவித்தேன். என் மாமி நாத்திகளின் மேல் அதிகமாக ஒன்றும் சொல்லாமல், தர்மக் கோளாக, அவர்கள் செய்த இரண்டொரு காரியங்களை வெளிப்படுத்தினேன். எனக்குப் பைத்தியமுமில்லை, பேயுமில்லை என்று என் தகப்பனார் கண்டு பிடித்துக் கொண்டு, என் கை விலங்கு கால் விலங்குகளை வெட்டி விட ஆரம்பித்தார். உடனே என் மாமியார் ஓடி வந்து, ‘அண்ணா, நீங்கள் செய்வதை யோசித்துச் செய்யுங்கள். விலங்கை நிவர்த்தி செய் தால், அவள் யாரை யாவது உபத்திரவம் செய்வாளே!’ என்றாள். இதைக் கேட்ட உடனே என் தகப்பனார் கோபாதிக்கராய், என் மாமியாரை எட்டி உதைத்தார். அவள் எட்டுக் குட்டிக் கரணம் போட்டுக் கொண்டு, கீழே விழுந்தாள். நான் உடனே என் தகப்பனாருடைய காலைப் பிடித்துக்கொண்டு, ‘எய்தவனை நோகாமல் அம்மை நோவது போல்’ எல்லாம் கடவுள் செயலாயிருக்க, என் மாமியாரைக் கோபித்துப் பிரயோசனம் என்ன? நான் ஏதோ துஷ்கிருத்தியம் செய்ததற்காகக் கடவுள் என்னைத் தண்டித்தார். என்னுடைய அத்தையை மொத்தவேண்டாம்’ என்று பிரார்த்தித்தேன். அவர் உடனே என்னை நோக்கி, ‘அவள் ஆதியில் பெண் கேட்டபோது, அவளுடைய துர்க்குணங்களைப் பற்றியே, பெண் கொடுக்க நிராகரித்தேன். அவள் மறுபடியும் ஆயிரம் தரம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதினாலும், சகோதர பக்ஷத்தினாலும் கிளியை வளர்த்துப் பூனை கையிலே கொடுத்ததுபோல உன்னை விவாகம் செய்து கொடுத்தேன். அதறகு வந்த இலாபம் இதுதான்’ என்றார். அந்தச் சமயத்தில், என் கணவர் வந்து, என் தகப்பனாருக்கு நமஸ்காரம் செய்தார். அவரை என் தகப்பனார் பார்த்து, “நீ செளரியவா னென்று. பெயர் வைத்துக் கொண்டு, உன் வீட்டுப் பெண்டுகளை அடக்கத் திறமை யில்லாமல், என்னை வரும்படி பல கடிதங்கள் அனுப்பினாய். இரண்டு துர்ப்பலமுள்ள ஸ்திரீகளை அடக்கச் சக்தி இல்லாத நீ, யுத்தரங்கத்தில் உன்னுடைய சத்துருக்களை எப்படிச் செயிப்பாய்?” என்று பரிகாசம் செய்தார். என் புருஷன் என் தகப்பனாருக்குக் கடிதம் எழுதி வரவழைத்ததாக, என் தகப்பனாருடைய வார்த்தைகளால் வெளிப்பட்ட படியால், என் புருஷன் மீது எனக்குண்டாயிருந்த மனஸ்தாபங்களெல்லாம் ஒரு நிமிஷத்தில் பறந்து விட்டன. என் தகப்பனாரும், பர்த்தாவும், விலங்குகளைத் தறித்து, என் மாமியார் எனக்கு நியமித்திருந்த காராக்கிருகத்தினின்று என்னை விடுதலை செய்தார்கள். உடனே வைத்தியமும் தொலைந்தது, பைத்தியமும் தொலைந்தது பேயும் பறந்தது, நோயும் பறந்தது. நான் பழையபடி, என் பர்த்தாவை அடிக்கடி சந்திக்கவும். அவருடன் சம்பாஷிக்கவும் ஆரம்பித்தேன். இராக் காலங்களில் என் பர்த்தாவினுடைய பள்ளி அறைக்கு என் மாமியும் நாத்தியும் செய்து வந்த காவலும் ஒழிந்தது; என்னுடைய ஆவலும் ஒழிந்தது. அவர்களிருவரும் என் பிதா வந்தது முதல் பெட்டிப் பாம்பு போல் அடங்கினார்கள். என்னுடைய கர்ப்பம் நாள் தோறும் முதிர்ந்து, பத்தா மாதத்தில், பால சூரியன் போல ஒரு பாலனைப் பெற்றேன். இவ்வகையாக, புத்திர பாக்கியம், புருஷ பாக்கியம், பிதுர் பாக்கியம் முதலிய பாக்கியங்க ளெல்லாம் பெற்று, நான் மனோ ரம்மியமா யிருக்கும் போது, மறுபடியும் ஒரு தௌர்ப் பாக்கியம் எனக்கு நேரிட்டது. அஃதென்ன வெனில், இராஜாங்கத்தாருக்கும் அவர்களுடைய சத்துருக்களுக்கும் தூர தேசத்தில் யுத்தம் நேரிட்டதால், அந்த யுத்தத்துக்கு உடனே போகும்படி என் பர்த்தாவுக்கு உத்தரவு வந்தது. தண்டிலே போனால் இரண்டிலே ஒன்றாதலால், அந்த உத்தரவைக் கண்டவுடனே, எங்களுக் கெல்லாம் பெரிய இடி விழுந்தது போல இருந்தது. என்னுடைய பர்த்தா சண்டைக்குப் போய்த் திரும்பி வருகிற வரையில், என்னையும் என் பிள்ளையையும் என் தகப்பனார் தம்முடைய ஊருக்கு அழைத்துக் கொண்டு போய்ச் சம்ரக்ஷிப்பதாகச் சொன்னார். அதற்கு என் புருஷன் சம்மதித்து, அவரும் எங்களோடு கூடப் பிரயாணப்பட்டு, என்னையும் என் பிள்ளையையும் என் தகப்பனார் வசத்தில் ஒப்புவித்து விட்டு, எங்களிடத்தில் விடை பெற்றுக் கொண்டு யுத்தத்துக்குப் போனார். அவர் போன பிற்பாடு, சில காலம் வரையில் அவரிடத்திலிருந்து எங்களுக்குக் கடிதங்கள் வந்து பிற்பாடு என்ன காரணத்தைப் பற்றியோ கடிதம் வராமல் நின்று போய் விட்டது. எனக்குப் பிள்ளை மட்டும் இல்லாம லிருக்கு மானால், என் பர்த்தா பிரிந்த உடனே, என் பிராணனும் பிரிந்துபோயிருக்கும். புத்திர வாஞ்சையே என் பிராணன் போகாத படி தடுத்து விட்டது. என் பிள்ளை என் பர்த்தாவினுடைய சாயலாக இருந்த படியால். பிள்ளை முகத்தைப் பார்த்துப் பார்த்து, புருஷனைப் பிரிந்த சோகத்தை ஒருவாறு மாற்றினேன். என் தகப்பனாருக்குப் புருஷப் பிரஜை இல்லாத படியால், என் பிள்ளையை அவர் பிள்ளை போல அதிக பட்சமாக வளர்த்து, இளமைப் பருவத்திலே வித்தியாப்பியாசம் செய்வித்தார். அந்தப் பிள்ளைக்குப் பத்து வயது நடக்கும் போது, அநேக ஆபரணங்களைத் தரித்துக் கொண்டு, ஒரு நாள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை, வீட்டுக்குத் திரும்பி வர வில்லை. உடனே, என் தகப்பனாரும், வேலைக்காரர் முதலானவர்களும், வீதி வீதியாக ஓடிப் பிள்ளையைத் தேடினார்கள். பிள்ளையும் அகப்படவில்லை; பிள்ளையைத் தேடிப் போன என் தகப்பனாரும் வரவில்லை. வேலைக்காரர்கள், பல நாள் வரையில் பல இடங்களில் தேடிப் பார்த்தும், என் பிள்ளையும் தகப்பனாரும் அகப்படவில்லை. நான் பிள்ளையை யும் இழந்து பிதாவையும் இழந்து, தாமரை இலைத் தண்ணீர் போல் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது என் புருஷனும் சண்டையில் காயப்பட்டு இறந்து போனதாகச் சமாசாரம் வந்தது. நான் உடனே நெருப்பில் விழுந்த புழுப் போல் துடிந்துக் கீழே விழுந்து புலம்பி அழுதேன். அன்று முதல் நெடுநாள் மட்டும் நான் சித்த ஸ்வாதீன மில்லாமலிருந்து பிறகு என் பந்துக்களுடைய முயற்சியால் சித்தப் பிரமை தீர்ந்து, பிழைத்துக் கொண்டேன். நான் என்னுடைய புருஷனைப் பிரிந்து, இப்போது பதினைந்து வருஷமாகிறது. என் பிள்ளையையும் பிதாவையும் பிரிந்து ஐந்து வருஷமாகிறது, எனக்குப் பிராண பதமான அந்த மூவரும் இறந்து போயும், இறவாம லிருக்கிற என்னுடைய உயிர், எவ்வளவு வல்லுயிரா யிருக்க வேண்டும்? நானே என்னை மாய்த்துக் கொள்ளலா மென்று பல சமயங்களில் நினைத்தேன். ஆனால், தற்கொலை செய்வது பரம பாதகமென்றும், அதைச் செய்கிறவர்களுக்கு நரகம் பிராப்தி யென்றும் பெரியோர்கள் சொல்லுகிற படியால், நான் என் பிராணனை விடாமல், தாங்கிக் கொண்டு திரிகிறேன். என் மாதா பிதாக்களும், புருஷனும், பிள்ளையும் தர்மிஷ்டர்களானதால், அவர்கள் மோக்ஷ சாம்பிராச்சியம் அடைந்திருபபார்களென்பது நிச்சயமே. அந்த இடத்துக்கு நானும் போய்க் சேர. வேண்டு மென்று, சார்வதா கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். உலகத்தில் எனக்கு ஒரு க்ஷையும் இல்லாத படியால் என்னையும் ஒருவரும் விரும் பாதபடி ஆண்டிச்சி போல் வேஷம் பூண்டு கொண்டு, இதற்குப் பத்து நாழிகை வழி தூரமான என் சிறிய. தாயார் வீட்டில் வந்திருக்கிறேன். அதற்குச் சமீபமான ஒரு தனி மண்டபத்தில், நான் கடவுளை நோக்கித் தியானம் பண்ணிக் கொண்டிருக்கும் போது, மாதர் சிரோமணியாகிய ஞானாம்பாள் வந்து அடைக்கலம் புகுந்தாள். இது தான் என சரித்திரம்” என்றார். 

ஆண்டிச்சி யம்மாளுடைய சரித்திரத்தைக் கேட்டு அநுதாபப் படாதவாகள் ஒருவருமில்லை. 

17-ஆம் அதிகாரம் 

போர் வீரர்களின் வரவு-குற்ற விசாரணை 

ஆண்டிச்சியம்மாள் ஆர்வலனைக் காணுதல் 

ஞானாம்பாள் தப்பி வந்த சமாசாரம் என்னுடைய தாய் தந்தையர் கேள்விப்பட்டு, அவளைப் பார்க்கும் பொருட்டு, மறுநாள் உதய நேரத்துக்குப் பனம்பள்ளிக் கிராமத்துக்கு வந்தார்கள். அவர்களைக் கண்ட உடனே சம்பந்தி முதலியார், சத்தோஷ சித்தராய்ச் சொல்லுகிறார்: “உங்களுடைய புத்திர சிரோமணியால் எங்களுடைய அருமைக் குமாரத்தியை நாங்கள் மறுபடியும் கண்டோம். அவளை இன்னும் இரண்டு நாள் வரைக்கும் காணாம் லிருப்போ மானால், எங்களுடைய உயிரைக் காண மாட்டோம். நாங்கள் குடும்பத்துடன் மாண்டுபோ. யிருப்போம். உங்கள் குமாரனே எங்களுக்குக் குடும்பப் பிரதிஷ்டை செய்வித்தான். ஞானாம்பாளுடைய சரீரம் அவனால் இரக்ஷிக்கப் பட்ட படியால், அந்த சரீரத்தை அவனுக்கே தத்தம் செய்ய யோசித்திருக்கிறேன். இதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். “உங்களுடைய இஷ்டப்படி நடக்கக் காத்திருக் கிறோம்” என்று என்னுடைய தாய் தந்தைகள் சொன்னார் கள். கலியாணத்தை இனித் தாமதப் படுத்தக் கூடா தென்றும் சீக்கிரத்தில் நிறைவேற்ற வேண்டு மென்றும், பேசிக்கொண்டார்கள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, வீட்டுக்கு வெளியில் யுத்தம் நடப்பது போல், பெரிய இரைச்சலும் சப்தமும் கேட்டு, நாங்கள் உடனே வெளியே ஓடிப் பார்த்தோம். அனேக சிப்பாய் களும், சேவகர்களும், உருவின கத்தி முதலிய ஆயுதங் களுடனே வந்து எங்கள் வீட்டை வளைத்துக் கொண்டார் கள். அவர்களுடன் கூட ஒரு பெரிய குதிரையின் மேல் ஏறிக் கொண்டு வந்த சுதேசியான ஒரு உத்தியோகஸ்தர், அதிக கோபத்துடன், பிரதாப முதலி யென்பவன் யாரென்று கேட்க, நான்தா னென்று அவருக்கு எதிரே போனேன். என்னைப் பிடித்துக் கட்டும்படி உத்தரவு கொடுத்தார். உடனே என் தகப்பனாரும். சம்பந்தி முதலியாரும் ஓடி வந்து, “அந்தப் பிள்ளையைக் கட்ட வேண்டிய காரணம் என்ன? அவன் என்ன குற்றம் செய்தான்?” என்று கேட்டார்கள். உடனே, எங்கள் பந்துக்கள் வேலைக்காரர்கள், அந்தக் கிராமத்துக் குடிகள், முதலான இருநூறு ஜனங்கள் கூட் டம் கூடினதை, அந்த உத்தியோகஸ்தர் கண்டு பயந்து, என்னைக் கட்ட வேண்டாமென்று உத்தரவு கொடுத்து, தெருத் திண்ணை மேல் உட்கார்ந்து கொண்டு, என்னைப் பார்த்து “ஒரு பெரிய உத்தியோகஸ்த னாகிய தாசில் தாரை நிஷ்காரணமாய் நீர் கொலை செய்து விட்டதால் அதைப் பற்றி விசாரிக்க வத்திருக்கிறோம். நீர் என்ன சொல்லுகிறீர்?” என்று கேட்டார். இதைக் கேட்ட உடனே எனக்குத் தைரியம் உண்டாகி, ஞானாம்பாள் விஷயத்தில் அந்தத் தாசில்தார் செய்த அக்கிரமங்களை எல்லாம், ஆதியோடந்த மாகத் தெரிவித்தேன்.உடனே அவர், “நீர் சொல்வதற்குச் சாட்சிகள் உண்டா?” என்று வினவினார். சாக்ஷிகள் இருக்கிறார்க ளென்று சொல்லி, நான் பிடித்து வைத்திருந்த இரண்டு சேவகர்களையும் அவர் முன்னே கொண்டு வந்து விட்டேன். அவர்கள் ஒரு காரியத்தையும் மறைக்காமல், சகல சங்கதிகளையும் விபரமாய்ச் சொல்லி, வாக்குமூலம் எழுதி வைத்தார்கள். பிற்பாடு, ஞானாம்பாளைத் திரை மறைவில் இருக்கச் சொல்லி, அவளையும். அவளுடன் கூட வந்த ஆண்டிச்சி அம்மாளையும், விசாரித்தார். கடைசியாய். அவர் உண்மை யைத் தெரிந்து கொண்டு, என்னை நோக்கிச் சொல்லு கிறார்:- “தாசில்தாரையும், அவருடைவ நேசளையும், நீர் நிர் நிமித்தியமாய்க் கொலை செய்ததாக மட்டும் பிரஸ்தா பமே தவிர, தாசில்தார் செய்த அக்கிரமங்களை ஒருவரும் தெரிவிக்க வில்லை. இப்போது தான், உண்மை வெளியாயிற்று. தகுந்த அந்தஸ்துள்ள ஒரு கன்னிப் பெண்ணை. அந்தத் தாசில்தார் பலவந்தமாய்க் கொண்டு போனதும், பிற்பாடு, அந்தப் பெண் தப்பி ஓடும் பொழுது, மறுபடியும் அவன் தொடர்ந்து.பலாத்காரம் செய்ய யத்தனப் பட்டதும், பெரிய அக்கிரமம். அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டு போன உம்மை, அவனும் அவனுடைய நேசனும் கத்து உருவி வெட்ட வந்த படியால், உமது பிராணனை அரக்ஷித்துக் கொள்ளும் பொருட்டு, அந்தத் துஷ் டர்களைக் கொலை செய்ய வேண்டியது அகத்தியமா யிருந் தது. ஆகையால், இந்த விஷயத்தில் உம்மிடத்தில் யாதொரு குற்றமு மில்லை. ஜனங்களுடைய க்ஷேமத்துக் காகத் தாசிலாக நியமிக்கப்பட்ட அந்தக் கொடியன் அவ விடைய அதிகாரத்தைத் துர்விஷயத்தில் உபயோகப் படுத்தின படியால், அவன் இராஜ தண்டனைக்கும், தெய்வ தண்டனைக்கும் பாத்திரனா இருக்கிறான். தெய்வ தண்டனை முந்திக் கொண்டபடியால், இராஜ தண்டனைக்குடமில்லாமற் போயிற்று. ஆகையால், நீர் நிர்த்தோஷி யென்று மேலான அதிகாரிகளுக்கு விஞ்ஞாபிக்கப்படும்” என்றார். இதைக் கேட்டவுடனே, எங்களுக் கெல்லாம், தேகத்தை விட்டுப் பிரிந்து போன உயிர் திரும்பி மறுபடியும் வந்தது போல், ஆனந்தம் உண்டாயிற்று உடனே, அந்தக் கனவான், விசாரணை யான விவரங்களைக் கண்டு, ஒரு விஞ்ஞாபனப் பத்திரிகை யெழுதி, அதைச் சில சேவகர் கையிலே கொடுத்து, கலெக்டரிடத்திற் கொடுக் கும்படி அனுப்பினார். 

அதற்குப் பிறகு, அந்தக் கனவான், அவருடன் வந்த போர் வீரர்களை நோக்கி, “நீங்கள் போய்க் கூடாரத்தில் இருங்கள்; நான் சீக்கிரத்தில் வருகிறேன்” என்று சொல்லி, அவர்களை அனுப்பி விட்டார். அவர்கள் போன பிற்பாடு, அவர் ஏதோ பெரும் துயரத்தைக் கொண்டிருப் பதாக அவருடைய முகக் குறியினால் விளங்கிற்று. அவர் எங்களைப் பார்த்து, “திரை மறைவில் விசாரிக்கப் பட்ட இந்த வீட்டு அம்மாமார்களை நான் கண்ணாலே பார்க்க வேண்டியது முக்கியமா யிருக்கிறது; அவர்களை நான் பார்க்கலாமா?” என்று கேட்டார். உடனே சம்பந்தி முதலியார் அவரை நோக்கி, “உங்களைப் பார்த்தால் மகா உத்தம புருஷராகக் காணப்படுகின்றது. நீங்கள் எங்க ளுடைய பெண்டுகளைப் பார்க்கத் தடையில்லை” என்று சொல்லி, ஞானாம்பாளையும் ஆண்டிச்சி அம்மாளையும் அழைத்துக் கொண்டு வந்து, அவர் முன்பாக விட்டார். அவர் ஞானாம்பாளை அதிகமாய்க் கவனிக்கவில்லை. ஆண்டிச்சி அம்மாளை மட்டும் அதிக கவனமாக உற்றுப் பார்த் தார். அந்த அம்மாளும் அவரைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து, “ஆ! என் பிராண நாயகரே!!” என்று அல றிக் கொண்டு, அவருடைய பாதத்தில் விழுந்தார். உடனே அவர் அவரை வாரித் தூக்கி, “இந்தப் பஞ்சைக் கோலத்தோடு, உன்னைப் பார்க்கவா வந்தேன்!” என்று கண்ணீர் மழை சொரிந்தார். அவர்களுடைய துக்கம் சிறிது மாறின பிற்பாடு, அவர் எங்களைப் பார்த்து, “இவள் என்னுடைய பத்தினி; இவளை நான் திரை மறை வில் விசாரித்த போது, என் பெண் சாதியினுடைய குரலாயிருந்த படியால், அவளை நான் பார்க்க வேணு மென்று கேட்டுக் கொண்டேன். இவள் என் பெண்சாதி யென்பது நிச்சயந்தான்; எங்களுடைய சரித்திரத்தைக் கேள்விப் பட்டீர்களா?” என்றார். நாங்கள் கேள்விப் பட்டோம் என்றோம். அவர் எங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்:- “நான் இவளைப் பிரிந்த பிறகு, பல தேசங்களுக்குப் போய், சத்துருக்களுடன் யுத்தம் செய்தேன். ஆரம்பத் திலே கொஞ்சம் அபஜயம் நேரிட்டாலும், அந்தத்தில் விஜயலட்சுமி எங்கள் பங்கில் இருந்தாள். நான் சில நாள் வரைக்கும் இவளுக்குக் கடிதங்கள் அனுப்பிக் கொண்டு வந்தேன். மத்தியில், நான் குண்டு பட்டு, நெடு நாள் வைத்திய சாலையில் இருந்த படியால், கடிதம் எழுதத் தப்பிப் போய் விட்டேன். அப்போது, நான் பிழைப்பே னென்று ஒருவரும் எதிர்பார்க்க வில்லை; நான் இறந்து போன தாகவும் எங்கும் பிரஸ்தாப மாகி விட்டது; நான் அந்தத் தடவை பிழைத்தது புநர் ஜன்மம் தான். நான் சண்டை முடிந்து திரும்பி வந்த வுடனே, கவர்ன்மெண்டார் என்னுடைய சௌகரியத்தை மெச்சிக் கொண்டு, எனக்குச் சேனாதிபதி உத்தியோகம் கொடுத்தார்கள். என்னுடைய பெண்சாதி பிள்ளைகளைப் பார்க்கும் பொருட்டு நான் உத்தரவு பெற்றுக் கொண்டு, புதுச்சேரிக்குப் போனேன். அங்கே என் பிள்ளை காணா மற் போன தாகவும், அவனைத் தேடிக்கொண்டு போன என்னுடைய மாமனாரும். திரும்பி வர வில்லை யென்றும், அந்தச் சமயத்தில் நான் இறந்து போனதாகச் சமாசாரம் வந்த படியால், இவள் சித்தம் பேதித்து, நெடுநாள் வியா தியா யிருந்த தாகவும், பிற்பாடு இவள் போன இடம் தெரிய வில்லை யென்றும் கேள்விப் பட்டு, நான் பட்ட துய ரம் இவ்வள வென்று சொல்லி முடியாது. நான் சண்டை யில் மாண்டு போகாமல் இந்தத் துக்கங்களை அனுபவிக் கவா வந்தேனென்று புலம்பிக் கொண்டு, பல ஊர்களைத் தேடிப் பார்த்து வரும் போது, வழியில் எனக்கு இஷ்ட மான ஒரு கலெக்டரைப் பார்க்கப் போனேன். அவர் தம் முடைய தாசில்தாரை நீங்கள் கொலை செய்துவிட்ட தாக வும், நீங்கள் பலவான்களானதால், அனேகம் போர் வீரர் கள் சகிதமாய்ப் போய், உங்களைப் பிடித்து விசாரித்துச் சங்கதிகளைத் தெரிவிக்கும் படியாகவும், உத்தரவு கொடுத்தார். அதற்காக நான் வந்த இடத்தில், தேடிப் போன மருந்து காலில் அகப்பட்டது போல், என் பெண்சாதி அகப்பட்டாள். அவள் அகப்படுவதற்கு முன், யார் போனாலும் போகட்டும், பெண்சாதி அகப்பட்டால் போது மென்று நினைத்தேன். அவள் அகப்பட்ட பிறகு, பிள்ளையும் மாமனாரும் அகப்படவில்லையே என்கிற ஏக்கம் பெரிதாயிருக்கிறது. மனுஷனுடைய புத்தி, ஒன்றிலும் திருப்தி அடைகிற தில்லை என்பதற்கு நானே சாக்ஷியா யிருக்கிறேன்” என்றார். 

18-ஆம் அதிகாரம்

ஆண்டிச்சி யம்மாளுக்கு அதிர்ஷ்டத்தின் மேல் அதிர்ஷ்டம் சம்பவித்தல்

ஆண்டிச்சி யம்மாளுடைய புருஷனும் நாங்களும் பேசிக்கொண் டிருக்கும் போது, ஒரு பெரியவரும். ஒரு யௌவனமான குமாரனும், உள்ளே வந்து நுழைந்தார்கள். அவர்கள் யாரென்றால், ஆண்டிச்சி அம்மாளுடைடய தகப்பனாரும், பிள்ளையும்தான். அந்த நால்வரும் சந்தித்த உடனே, அவர்கள் பட்ட கிலேசழும், ஆனந்தமும், இப்படிப்பட்ட தென்று விவரிக்க ஒருவராலும் கூடாது. இதுவரையில் பிரிந்திருந்த துக்கமும், பிறகு எப்படியாவது சந்தித்தோமே என்கிற ஆனந்தமும் கூடி, ஒரு வீட்டில், ஒரு காலத்தில், துக்கமும் கலியாணமும் நடப்பது போல் ஆயிற்று. நாங்கள் அவர்கள் அழும் போது அழுகிறதும், அவர்கள் சந்தோஷிக்கும் போது சந்தோ ஷிக்கிறதுமாய் இருந்தோமே தவிர, வேறு செயல் அற்ற வர்களாயிருந்தோம். அந்த ஆதாளி அடங்கின பிற்பாடு நாங்கள் அந்தப் பெரியவரைப் பார்த்து, “ஐயா! நீங்கள் பிள்ளையைத் தேடிக் கொண்டு போன பிற்பாடு நடந்த காரியம் என்ன?” என்று வினவ, அவர் சொல்கிறார்:- 

“நான் என்னுடைய ஊரிலே பிள்ளையைத் தேடிக் கொண்டு போன போது ஒருவன் என்னைக் கண்டு, ‘கட லோரத்தில் ஒரு பிள்ளையை ஒருவன் கப்பலுக்கு வரும் படி இழுத்துக் கொண்டிருந்தான். அந்தப் பிள்ளை போக மாட்டே னென்று அழுது கொண்டிருந்தது” என்று எனக்குத் தெரிவித்தான். நான் உடனே சமுத்திரக் கரைக்கு ஓடினேன். அவ்விடத்திலே பிள்ளையைக் காணா மையினால் ஒரு தோணியில் ஏறிப் போய்க் கப்பல் மேலே ஏறினேன். அங்கே இவன் என்னைப் பார்த்த உடனே, ஓடி வந்து, என்னைக் கட்டிக்கொண்டு அழுதான். அந்தக் கப்பல் திருட்டுக் கப்பலென்று பல அனுமானங்களால் நிதானித்துக் கொண்டேன். கப்பலில் இருந்தவர்களைப் பார்த்து, ‘இந்தப் பிள்ளையை ஏன் கொண்டு வந்தீர்கள்? என்று நான் கேட்க, அவர்கள் நேரான மறுமொழி சொல் லாமல், என்னை நிராகரித்துப் பேசினார்கள். நான் அவர் களைப் பார்த்து, ‘இந்தப் பிள்ளை தரித்திருக்கிற ஆபரணங்களையெல்லாம், எடுத்துக் கொள்ளுங்கள்; பிள்ளையை மட்டும் என் வசத்தில் விட்டு விடுங்கள்’ என்று தொழு தேன். என் பேச்சு முடிவதற்கு முன்னமே, கப்பல் ஓட ஆரம்பித்தது. உடனே அந்தக் கப்பலின் கேப்டனிடத்தில் ஓடி அழுதேன். அந்தப் பாவிக்கும் இரக்கம் வர வில்லை. அந்தக் கப்பலில் இன்னும் அநேகர் பலவந்தமாக ஏற்றப்பட் டிருந்தார்கள். நாங்கள் அழுத கண்ணீர்ச் சமுத்திரம், அந்தத் தண்ணீர்ச் சமுத்திரத்தை ஒத்தது. அவர்கள் பிள்ளை மேல் இருந்த ஆபரணங்களைக் கழற்றிக் கொண்டு, பல தீவாந்தரங்களுக்குப் போய், கடைசியாய், அமெரிக்காவில் எங்களை அடிமைகளாக விற்றுப் போட்டார்கள். அவ்விடத்தில் நாங்கள் பல பேர்களுக்கு அடிமை களாகி, நாங்கள் பட்ட கஷ்டங்களை நீங்கள் கேள்விப் பட்டால், அழாமல் இருக்க மாட்டீர்கள். கடைசியாய் ஒரு ஐரோப்பிய துரையை அநுசரித்து, அவருடைய உத்தியோக சாலையில் நான் ஒரு தகுந்த உத்தியோகத்தில் அமர்ந்து, இந்தப் பிள்ளையையும் சமரக்ஷித்து, அவனுக்கு வித்தியாப்பியாசமும் செய்வித்தேன். அந்தத் துரையி னுடைய தயவினாலே, நாங்கள் மறுபடியும் கப்பலேறி, புதுச்சேரித் துறைமுகத்தில் இறங்கி, வீட்டுக்குப் போனோம். அங்கே என் மகளைக் காணாமையால், நாங் கள் உடனே புறப்பட்டுப் பல ஊர்களிலே தேடிக் கொண்டு, அவளுடைய சிறிய. தாயாருடைய வீட்டுக்கு வந்தோம். என்னுடைய மகள், உங்களுடைய பெண்ணை அழைத்துக் கொண்டு, இந்த ஊருக்கு வந்திருப்பதாகக் கேள்விப் பட்டு,நாங்களும் இவ்விடம் வந்தோம். யுத்தத்துக்குப் போன என் மருமகன் திரும்பி வந்து விட்டதாக நாங்கள் கேள்விப்பட் டிருந்தாலும், இங்கே அவரைக் காண்போம் என்று நாங்கள் நினைத்து வரவேயில்லை;  கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல், என்னுடைய மகளையும் மருமகனையும் உங்களுடைய வீட்டிலே பார்க்கும் படி லபித்ததால், என்னைப் போல பாக்கியசாலிகள் ஒருவரும் இருக்கமாட்டார்கள்” என்றார். உடனே அவருடைய மருமகன், குதூகலிப்புடனே எங்களைப் பார்த்து, “ஐயா! என் மாமனார் மீது எனக்கு ஒரு வழக்கு இருக்கின்றது. அது என்ன வெனில், அதிக ரூபமும் யௌவனமு முடைய ஒரு ஸ்திரீயையும், பால் குடிக்கிற பருவமுள்ள அருமையான ஒரு சிசுவையும், என் மாமனார் வசத்தில் நான் ஒப்புவித்துப் டோயிருக்க, அவர் ஒரு ஆண்டிச்சியையும், ஒரு பெரிய பிள்ளையையும் எனக்குக் கொடுக்க வைத்திருக்கிறார்; இது தர்மமா? என்று சிரித்தார். இவ்வகையாக அவர் மாமனாரைப் பரிகாசம் பண்ணிக் கொண்டிருக்கும் போது, ஆண்டிச்சி அம்மாளை என் தாயார் கூப்பிடுவதாக ஒரு தாதி வந்து அழைத்துக் கொண்டு போனாள். உடனே, என் தாயாரும், ஞானாம்பாள் முதலான ஸ்திரீகளும், ஆண்டிச்சி அம்மாளைப் பல வந்தமாய் ஸ்நான கட்டத்துக்குக் கொண்டு போய்க் குளிப்பாட்டி, பரிமள திரவியங்களைப் பூசி, திவ்யமான ஆடை ஆபரணங்களைத் தரிப்பித்து, புருஷன் முன்பாகப் போகும்படி, அவரை உள்ளே யிருந்து தள்ளி விட்டார்கள். அவருக்கு முன் போல அழகு உண்டாகி விட்ட படியால், அவர் இன்னாரென்று ஒருவருக்கும் அடையாளம் தெரிய வில்லை. அந்த விருத்தர் மட்டும் தம்முடைய மகள் தான் என்று கண்டு பிடித்துக் கொண்டார். அவருடைய மருமகன் எங்களைப் பார்த்து, “இந்த அம்மா யார்?” என்று வினவினார். உடனே அந்தக் கிழவனார், “என் மாப்பிள்ளை வெட்கமில்லாமல் தன் பெண்சாதியை அம்மா என்கிறார்” என்று கைகொட்டிச் சிரித்துப் பரிகாசம் செய்தார். பிற்பாடு, அவர் எழுந்து, தம்முடைய மகள் கையைப் பிடித்து, மருமகன் கையில் வைத்து, ‘இப் போது இந்தப் பெண் உமக்குச் சம்மதமா? இல்லையா?” என்றார், அவருடைய மருமகன் “பூரண சம்மதம்! பூரண சம்மதம்!” என்று பெண்சாதி கையைப் பற்றிக் கொண்டார். இவ்வகையாக, ஒரு கலியாண மகோற்சவம் போற் கொண்டாடிச் சந்தோஷித்தார்கள். அவர்களுக்கு நாங்கள் அன்றையத் தினம் அறுசுவை பதார்த்தங்க ளுடனே விருந்து முதலிய உபசரணைகள் செய்து, அவர்களுடைய சிநேகத்தையும் சம்பாதித்துக் கொண்டோம். அந்த விருத்தரும், அவருடைய மருமகனும் எங்களை நோக்கி, “நீங்கள் மகா புண்ணிய சிலர்களாகையால், உங்களுடைய வீட்டில் நாங்கள் நுழைந்த உடனே, எங்களுடைய துக்கங்க ளெல்லாம் நீங்கி, நாங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் படியான அதிர்ஷ்டசாலிகள் ஆனோம். நாங்கள் கப்பலை விட்டு இறங்கின உடனே, எங்கள் வீட் டுக் காரியங்களைப் பற்றி யாதொரு ஒழுங்கும் செய்யாமல். ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டு சடுதியில் புறப்பட்டு வந்து விட்டதால், எங்களுடைய காரியங்கள் எல்லாம் அலங்கோலமா யிருக்கின்றன. நாங்கள் ஊருக்குப் போய் சகல காரியங்களையும் சீர்ப்படுத்திக் கொண்டு கூடுமானால் மறுபடி ஒரு பயணம் வந்து, உங்களைத் தரிசிக்க அபேக்ஷிக்கிறோம்” என்று சொல்லி, எங்களிடத்தில் விடை பெற்றுக் கொண்டு போய் விட்டார்கள்.

19-ஆம் அதிகாரம்

பிரதாப முதலியின் விவாக மகோற்சவம்

குணரத்தினம் என்னும் பெண்ணின் சரித்திரம்

அவர்கள் போன பிற்பாடு, எனக்கும் ஞானாம்பாளுக் கும் அதி சீக்கிரத்தில் விவாகம் முடிக்க வேண்டு மென்று சம்பந்தி முதலியார் அவசரப் பட்டார். அவருடைய துரி தத்தைப் பார்த்தால், அன்றையத் தினமே கலியாணம் முடிந்தாலும் அவருக்குக் சந்தோஷமா யிருக்கு மென்று தோன்றிற்று. என்னுடைய மனோபீஷ்டமும் அப்படியே இருந்தது. ஆனால் என் தாய் தந்தைமார்கள், தூரத்தி லிருக்கிற பந்து ஜனங்களும், தேவராஜப் பிள்ளை, கனகசபை முதலானவர்களும், கலியாணத்துக்கு வரும் படி யான சாவகாசத்தை யோசித்து முகூர்த்தம் நியமித்ததி விட்டது. னால், கலியாணம் இருபது நாள் பிந்திப் போய் அந்த இருபது நாளும் இருபது யுகங்களைப் போல் இருந் தன. அந்தக் காலத்தைத் தொலைக்க என்னாலே கூடிய வரையில் பிரயாசைப் பட்டும் தொலைய வில்லை. தன்னு டைய இஷ்டப்படி கண்ட இட மெல்லாம் ஓடித் திரிகிற துஷ்டக் காளை, பண்டியிற் கட்டின உடனே படுத்துக் கொள்வது போல, அதற்கு முன் அதி துரிதமாக ஓடிக் கொண்டிருந்த காலமானது, இப்போது சுத்தமாய் அசையாமல் நின்று விட்டது. கடைசியாய், அந்தக் காலமும் முடிந்தது. அந்தக் கலியாண மகோற்சவ வைபவத்தைப் பிறர் சொல்ல வேண்டுமே அல்லாது. நான் சொல்லிக் கொள்வது தற்புகழ்ச்சியாய் .முடியும். அன்றியும், ஞானாம் பாளை நான் மாலை சூட்டப் பெற்ற பாக்கியத்தைப் பார்க் கிலும், மற்றக் கலியாண சம்பிரமங்கள் விசேஷ மல்லா ஆகையால், அவைகளை விவரிக்காமல் விட்டு விடுகிறேன். தேவராஜப் பிள்ளையும், கனகசபை முதலானவர்களும், என் கலியாணத்திற்குக் கூட வந்திருந்து, எண்ணிக்கை இல்லாத ஆடை ஆபரணங்களும், பாத்திர சாமான்களும், சம்மானம் செய்தார்கள் நாங்கள் அவர்களுக்குப் பதில் மரியாதையும் செய்தோம். நாங்கள் செய்தது அணுவா கவும், அவர்கள் எங்களுக்குச் செய்தது மலையாகவும். போய் விட்டது; அதனால், எங்களுக்கு வெட்க முண்டாகி; அவர்கள் செய்ததற்கு இரட்டிப் பாகக் கனகசபை கலியா ணத்தில் மரியாதை செய்கிற தென்று சங்கற்பித்துக் கொண்டோம். கனகசபைக்கு எப்போது விவாகமென் றும், எங்கே பெண் பார்த்திருக்கிறீர்க ளென்றும், தேவ ராஜப் பிள்ளையை என் தகப்பனார் கேட்க, அவர் சொல்லுகிறார்:- 

என் தங்கை பெண்ணைக் கனகசபைக்கு மணம் செய்கிற தென்று நிச்சயித் திருக்கிறோம். அந்தப் பெண் பெயர் குணரத்தினம். அந்தப் பெண்ணுடைய சரித்தி ரம், கனகசபை சரித்திரம் போல், ஆச்சரியப்படத் தக் கதா யிருக்கின்றது. என் தங்கை புருஷன் மாணிக்கம் பிள்ளை பெரிய தனவான். எங்கள் ஊருக்கு நாற் காத வழி தூரத்திலிருக்கிற சிங்கனூர் அவருடைய வாசஸ்த லம். குணரத்தினத்தைத் தவிர வேறே பிள்ளை இல்லாத படியால், அந்தப் பெண்ணைக் கண்ணுக்குக் கண்ணாகவும், உயிருக்கு உயிராகவும், வளர்த்தார்கள். அந்தப் பெண் சிறு குழந்தையா யிருக்கும் போது, ஒரு அமாவாசை இராத்திரியில், அனேக இரத்திநாபரணங்களுடன் தொட்டி லிலே படுத்துத் தூங்கிற்று. ஒரு திருடன் நடுச் சாமத் தில் எவ் வகையாகவோ உள்ளே நுழைந்து, அந்தப் பெண் தரித்திருந்த நகைகளைக் கழற்றப் பிரயாசைப்பட்டும் கூடாம லிருந்ததால், வெளியிலே கொண்டு போய் நகை களைப் பறித்துக் கொள்ளலா மென்று நினைத்து, அந்தப் பிள்ளையை மிருதுவாய்த் தூக்கிக் கொண்டு, தெருக் கதவைத் திறந்து வெளியே ஓட ஆரம்பித்தான். அந்த அரவங்கேட்டு, என் மைத்துனரும், மற்றவர்களும் விழித் துக் கொண்டு, தொட்டிலில் பிள்ளையைக் காணாமையால், உடனே திருடனைத் தொடர்ந்து கொண்டு ஓடினார்கள். அந்தத் திருடன் வெகு தூர முன்னும், இவர்கள் பின்னு மாக ஓடும் போது, அந்தத் திருடன் பயந்து கொண்டு, சமீபத்தி லிருந்த ஐயனார் கோவிலுக் குள்ளே நுழைந்து பிள்ளையை விக்கிரகத்தின் பாதத்தில் வைத்து விட்டு அந்த விக்கிரகத்தின் பின்னாலே மறைந்து கொண்டான். என் மைத்துனர் முதலானவர்கள் நக்ஷத்திர வெளிச்சத் தில் ஒருவன் கோயிலுக்குள் நுழைந்ததைப் பார்த்த படியால் அவர்களும் கோயிலுக் குள்ளே புகுந்தார்கள். அந் தத் திருடன் ‘இனிமேல் எப்படியும் அகப்பட்டுக் கொள் ளுவோம்; ஆயினும் ஒரு உபாயம் செய்து பார்ப்போம்’ என்று நினைத்து அந்த ஐயனார் பேசுவது போல் தன் குரலை வேறு படுத்திக் கொண்டு சொல்லுகிறான்: ‘ஓகோ! துஷ்டர்களே!! இந்தப் பிள்ளைமேல் நமக்குக் கிருபை உண்டாகி அதை ஆசீர்வதித்துச் சகல வரப் பிரசாதங் களையும் கொடுத்து அனுப்பலாமென்று யோசித்து. நான் அந்தப் பிள்ளையைப் கொண்டு வந்திருக்க, அந்த உபகா ரத்தை நீங்கள் எவ்வளவும் யோசிக்காமலும், தேக சுத்தி, இருதய சுத்தி இல்லாமலும், என்னுடைய ஆலயத்தில் வந்து பிரவேசித்தீர்களே! ஒரு நிமிஷத்தில் உங்கள் குடலைப் பிடுங்கி மாலையாய்ப் போட்டுக் கொள்ளுவேன்! ஆனால், அந்தப் பிள்ளைமே லிருக்கிற கருணையால் உங்கள் குற்றத்தை க்ஷமிக்கிறேன். அந்தப் பிள்ளையை, இந்த இராத்திரி மட்டும் நீங்கள் விட்டு விட்டுப் போவீர்களானால் அதற்குச் சகல அனுக்கிரமும் செய்து வைத்திருக்கி றேன்; நீங்கள் பிராதக் காலத்தில் வந்து, பிள்ளையை எடுத்துக் கொண்டு போகலாம். இதற்கு நீங்கள் சம்ம திக்காவிட்டால், அந்தப் பிள்ளையையும் கொன்று, உங்க ளையும் குல நாசம் செய்வேன்’ என்றான். என் மைத்து னர் மூட பக்தி யுள்ளவ ரானதால், அந்தத் திருடன் சொன்னதை தெய்வ வாக்காக எண்ணி, அந்த விக்கிரகத் தைக் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணி, சுவாமி, தங்கள் சித்தப் பிரகாரம் அந்தக் குழந்தைக்கு அனுக்கிரகம் செய்தருள வேண்டும்’ என்று மொழிந்து, தனனுடைய ஆட்களையும் அழைத்துக் கொண்டு, போய்விட்டார். 

“அவர்கள் போன பிற்பாடு, அந்தத் திருடன், நகை களையெல்லாம் ஒவ்வொன்றாகக் கழற்றிக் கொண்டு, குழந் கதையைக் கோவிலில் வைத்துவிட்டு, வெளியே ஓடினான். அந்தச் சமயத்தில், அந்தக் கோயிற் பூசாரி, வழக்கப்படி விடியற் காலத்திலே கோயிலுக்கு வந்து, யாரோ திருடன் ஓடுகிறா னென்று துரத்தினான். அந்தத் திருடன் பெரிய கற்களை எடுத்து வீசின படியால், அந்தக் கல்லடி பட்டுப் பூசாரி வேசாறி நின்று போனான். பிற்பாடு, கோயிலுக் குள் அழுகிற குழந்தையைப் பார்த்து, இது யாருடைய குழந்தையோ வென்று பூசாரி ஆலோசித்துக் கொண்டிருக் கையில், என் மைத்துனர் முதலானவர்கள், குழந் தைக்கு இது வரையில் அனுக்கிரகமா யிருக்கு மென்று நினைத்துக் கோயிலுக்கு வந்து, பூசாரியைக் கண்டு, இராத் திரி ஐயனார் திருவாய் மலர்ந் தருளியதைச் சொன்னார்கள், இதைக் கேட்ட வுடனே, ‘கோயிற் பூனை தேவர்க் கஞ்சாது’ என்பது போல், அந்தப் பூசாரிக்கு அடக்கக் கூடாத பெரும் சிரிப்பு வந்துவிட்டது. அவன் சிரிப்பு முடிந்த பிற்பாடு, என் மைத்துனரைப் பார்த்து, தான் வரும்போது கோயிலுக்குள் ளிருந்து திருடன் வெளியே ஓடினதும், தான் துரத்திக் கொண்டு போனதும், அவன் கல்லால் வீசித் தன்னைக் காயப்படுத்தினதும், பரிஷ்பார மாய்த் தெரியப்படுத்தி, பின்னும் பூசாரி சொல்லுகிறான்:- 

“உங்களைப் போலவே நானும் சில காலத்துக்கு முன் மோசம் போனேன். ஒரு நாள், சுவாமிக்கு படைத்த அன்னம், பழம், தேங்காய் முதலான பிரசாதங்களை வழக் கப் படி எடுத்துக் கட்டிக் கொண்டு நான் வீட்டுக்குப் போக யத்தனப் பட்டபோது, ஐயனார் விக்கிரகத்தி னின்று ஒரு அசாரி வாக்குப் புறப்பட்டது. அதென்ன வெனில், – அடா! பாதகா!! தினம் தோறும், எனக்குக் கொஞ்ச மாவது வையாமல், பிரசாதங்கள் முழுவதும் நீ கொண்டு போய் விடுகின்றாயே! நான் எத்தனை நாளைக்குப் பசி பொறுப்பேன்? இனி, நீ பிரசாதங்களைக் கொண்டு போவாயானால், உன்னையே எடுத்துப் புசித்து விடுவேன்- என்றது. நான் இதை தெய்வ வாக்காக நினைத்து, அன்று முதல் பிரசாதங்களைக் கொண்டு போகாமல் சுவாமி முன்பாக வைத்து விட்டுப் போகிறது வழக்கம். மறு நாட் காலையில் அந்தப் பிரசாதம் இல்லாம லிருந்ததால், ஐயனார் புசித்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருபிச்சைக்காரன் விக்கிரகத்துக்குப் பின்னே இருந்து கொண்டு, ஐயனார் பேசுவது போற் பேசி, பிரசாதங்களையும் தினந்தோறும் சாப்பிட்டு வந்த தாகச் சில நாளைக்குப் பிறகு தெரிந்து, அவனையும் பிடித்துத் தகுந்த சிட்சையும் செய்தோம். அப்படியே, ஒரு திருடன் உங்களையும் மோசம் செய்திருக்கிறான்’ என்று பூசாரி சொன்ன பிற்பாடு, என் மைத்துனருக்குப் புத்தி வந்தது. இந்தச் சமாசாரங்க ளெல்லாம் பிற்பாடு நான் கேள்விப்பட்டேன். அந்தக் குழந்தை, வெகு நேரமாய்ப் பால் குடியாம லிருந்ததால், மிகுந்த பசி உண்டாகிக் களைத்துப் போய்விட்டது. அந்தக் குழந்தைக்குப் பால் கொடுத்து அது பிழைப்பதே அரிதாய்விட்டது இதற் குச் சில வருஷங்களுக்குப் பின்பு, என் மைத்துனர் இறந்து போனார். என் தங்கைக்குப் புருஷ காபந்து இல் லாததினாலே, அவள் கையிலிருந்த சொத்துக்களுடன், அவளும், அவளுடைய பெண்ணும், என் கிரஹத்துக்கு வந்து விட்டார்கள். அவளுடைய பூஸ்திகளை எல்லாம் நானே பராமரித்து வருகிறேன். கனகசபை ஜீவித்திருப் பது எனக்குத் தெரியாமலிருந்த காலத்தில், அந்தப் பெண்ணுக்குத் தகுந்த வரன் தேடி, விவாகம் செய்ய நினைத்திருந்தேன். செங்கற்பட்டு ஜில்லாக் கலெக்டர் கச்சேரி சிரெஸ்தார், அந்தப் பெண்ணைக் கொள்ள விரும்பி, எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். நான், யோசித்து முடிவு சொல்லுகிறே னென்று, மறுமொழி எழுதினேன். காணாமற்போன திரவியம் அகப்பட்டதுபோல், கனகசபை என்னிடம் வந்து சேர்ந்த பிற்பாடு, அவனுக்கே அந்தப் பெண்ணைச் சுயவரம் செய்கிறதென்று நினைத்திருக்கிறேன். கனகசபையினுடைய கருத்தும், அந்தப் பெண்ணி னுடைய கருத்தும், அப்படியே இருப்பதாகப் பல குறிப்புகளாலே தெரிந்து கொண்டேன். இந்த விவரங்க ளெல்லாம் கண்டு மேற்படி சிரெஸதாருக்கு கடிதம் அனுப்பினேன். அவனுக் குப் பெண் கொடுக்க வில்லை யென்கிற கோபத்தினால், அவன் எனக்கு எவ் வகையி லாவது தீங்கு செய்ய வேண்டு மென்று நினைத்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். எனக்கு ஒரு புத்திரன் பிறந்து இறந்து போனதாகவும், வேறே பிள்ளை இல்லை யென்றும், நான் சந்ததி இல்லாமல் இறந்து போனால், என் பாளையப்பட்டைக் கவர்ன்மெண்டார் கட்டிக் கொள்வார்க ளென்று பயந்து, ஒரு பிள்ளை காணாமற்போ யிருந்து அகப்பட்டது போல நான் மாறுபாடு பண்ணுவ தாகவும், அந்தச் சிரெஸ்தார் கலெக்டருக்குப் போதித்து, என்னுடைய பாளையப்பட்டை ஜப்தியில் வைக்கப் பிரயா சைப்படுகிறானாம். இதற் கெல்லாம் நான் எவ்வளவும் பயப் படவில்லை. நியாயமும் சத்தியமும் நம்முடைய பக்ஷத்தி லிருக்கும் போது, நமக்கு யார் என்ன செய்யக் கூடும்? நான் சீக்கிரத்தில் கனகசபைக்கு முகூர்த்தம் பார்த்துத் தெரிவிக் கிறேன். நீங்கள் விஜயம் செய்து, தம்பதிகளை ஆசிர்வதிக்க வேண்டும்” என்று சொல்லி, கனகசபை தகப்பனாரும், மற்ற வர்களும், விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். 

20-ஆம் அதிகாரம்

இல்லறம்-குண அழகு அழகேயன்றி முக அழகு அழ கல்ல

கெட்ட ஸ்திரீகளும், நல்ல ஸ்திரீகளும்

விக்கிரமாதித்தன், காட்டில் ஆறு மாதமும் நாட்டில் ஆறு மாதமும் வசித்தது போல, நானும், ஞானாம்பாளும், அவள் தகப்பனார் கிரஹத்தில் ஆறு மாதமும், என் கிர ஹத்தில் ஆறு மாதமும், மாறி மாறி வசிக்கிற தென்று, என் தகப்பனாரும், ஞானாம்பாள் தகப்பனாரும் நிபந்தனை செய்து கொண்டார்கள். அந்தப் பிரகாரம், நாங்கள் முந் தின ஆறு மாதம் சம்பந்தி முதலியார் வீட்டிலும், பிந்தின ஆறு மாதம் என் தகப்பனார் வீட்டிலு மிருந்து வந்தோம். என் தாயாரும், ஞானாம்பாளும், தாயும் மகளும் போல அதிக நேசமும் பிரியமு மாக ஒத்து வாழ்ந்தார்கள். ஞானாம்பாள் வருகிறதற்கு முன், என் தாயார் தங்களு டைய தேக சௌக்கியத்துக் கடுத்த காரியங்களைக் கவ னிப்பதற்குக் கூட நேரமில்லாமல், குடும்ப யோக க்ஷேம காரியங்களை ஏக தேசத்திற் பார்த்துப் பரிசிரமப் பட்டார் கள். ஞானாம்பாள் வந்தது முதல்,அவளும் கிருக கிருத் தியங்களை வகித்துப் பார்த்து வந்ததும் தவிர, என் தாயா ருடைய தேக போஷணைக் கடுத்த காரியங்களையும் அவ ளுடைய கையாலே செய்து வந்த படியால், என் தாயா ருக்குப் பெரிய ஆறுதலும், சிரம பரிகாரமுமா யிருந்தது. அன்றியும், எனக்கு வேலை செய்யப் பல வேலைக்காரர்சு ளிருந்தாலும், கலியாணத்துக்குப் பிற்பாடு, என்னுடைய வேலைகளையும் ஞானாம்பாளே செய்து வருவாள். நான் ஒரு நாள் அவளைப் பார்த்து, “நாமென்ன ஏழைகளா? நமக்கு வேலை செய்ய ஊழியக்காரர்கள் இல்லையா? நீ உன் கையாலே வேலை செய்வது எனக்குத் திருப்தியில்லை” யென, அவள் சொல்லுகிறாள் : – “எளிய ஸ்திரீகள் கைப் பாடு பட்டு, ஜீவனத்துக்கு வேண்டிய காரியங்களையும் சம்பாதித்துக் கொண்டு, சமையல் முதலிய வீட்டு வேலை களையும் செய்து வருகிறார்கள், எனக்கு அப்படிப் பட்ட வேலைகள் யாதொன்று மில்லை. உங்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை யாவது, நான் செய்யக் கூடாதா?” என்றாள். “இதற்கு முன் ஒரு நாளும் நீ வேலை செய்வதை நான் பார்த்ததில்லையே. இப்போது இந்த வேலைகளை யெல்லாம் எப்படிக் கற்றுக் கொண் டாய்?” என்று நான் கேட்க, அவள், ‘பக்ஷிகளுக்குப் பறக்கவும், மீன்களுக்கு நீந்தவும், யார் கற்பித்தார்கள்? அப்படியே, நானும் வேலை செய்யப் பயின்றேன் என்றாள். 

ஞானாம்பாள் வேலை செய்கிற நேரம் போக, மற்ற நேரங்களில், நானும் அவளும் பல விஷயங்களைப் பற்றிச் சம்பாஷிக்கிறது வழக்கம். ஒரு நாள் அழகைப் பற்றிப் பிரஸ்தாபம் வந்த போது, அவள் சொல்லுகிறாள்:- “குண அழகும், புத்தியின் அழகும், அழகே யல்லாமல், முக அழகு அழகல்ல. ஒரு ஸ்திரீயினுடைய அழகை யாவது, புருஷனுடைய அழகை யாவது, அழகென்று எல்லாரும் ஒப்புக் கொள்ளுகிறார்களா? ஒருவனுடைய முகம் அழ கென்று சிலர் ஒப்புக் கொண்டாலும், அநேகர் அதை விகார மென்று சொல்லுகிறார்கள். ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது போல், அவரவர்க ளுடைய பிரியத்துக்குத் தகுந்த படி, அவலக்ஷணத்தை யும் இலஷண மென்று சொல்லுகிறார்கள். குணத்தை யும் புத்தியையும் சிலாகிக்காதவர்கள் யார்? ஒருவன் குணவானாயும் கல்விமானாயும் இருப்பானானால், அவனால் உலகத்துக்கு எவ்வளவோ பிரயோஜன முண்டு அழகி னால் யாருக்கு என்ன பிரயோஜனம்? யௌவன காலத்தில் அழகுக்கு விசேஷமே தவிர, வயது செல்லச் செல்ல அழகும் குறைந்து போகின்றது. மேலும், அம்மை முத லிய பல வியாதிகளால், அழகு விகாரமாய் மாறி விடு கின்றது. குணமும், விவேகமும், எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், மாறாமல், ஒரே தன்மையா யிருக் கின்றது. புலி அழகா யிருந்தும் அதன் செய்கை கொடுமை யாயிருக்கின்றது. அழகில்லாத ஆடு மாடுகள் உலகத்துக்கு உபகாரிகளா யிருக்கின்றன. காஞ்சிரங் கனி அழகா யிருந்தும் காரியமென்ன? அழகை மின்னலுக்குச் சமான மாக வித்வான்கள் வர்ணிக்கிறார்கள். மின்னல் இடியை உண்டு பண்ணுகிறது போல், அழகும் காமவிகார முதலான பல தீமைகளை விளைவிக்கின்றது” என்று பிரசங்கித்தாள். 

என் தாயாரையும், ஞானாம்பாளையும், அவளுடைய தாயாரையும் தவிர, வேறே ஸ்திரீகளை நான் அறியாதபடியால் ஸ்திரீகளெல்லாரும் நல்லவர்க ளென்று பூசிக்கிறதும், புருஷர்களெல்லாரும் துஷ்டர்களென்று தூஷிக்கிறதும், எனக்கு வழக்கமா யிருந்தது, ஒரு நாள், ஞானாம்பாள் என்னை நோக்கி “ஸ்திரீகளில் நல்லவர்களும் இருக் கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அப்படியே, புருஷர்களிலும், சிஷ்டர்களும் துஷ்டர்களு மிருக்கிறார்கள். 

மில்டன் (Milton) என்னும் இங்கிலீஷ் மகா வித்து வான், அந்தகனான பிற்பாடு விவாகம் செய்த பெண்சாதி, எவ்வளவோ கொடுமை யுள்ளவ ளென்று அந்த வித்து வானே முறையிடுகிறார். அவளை, ஒரு பெரிய பிரபு ரோசாப் புஷ்ப மென்று வர்ணித்த போது, அந்த மகா வித்துவான் அவரை நோக்கி, ‘நான் குருட னான தால் அவள் அழகினுடைய சமாசாரம் எனக்குத் தெரியாது; ஆனால், என் மேலே படுகிற தெல்லாம் முட்கள்தான் என்றார். 

சோக்கிராட்டிஸ் (Socrates) என்னும் ஞான சாவி திரிக்கு வாய்ந்த பெண்சாதி,எவ்வளவு பொல்லாதவளன்று சகலருக்கும் தெரிந்த காரியமே. அவள் செய்த கொடுமைகளை யெல்லாம் அவர் எவ்வளவோ பொறுமை யுடன் சகித்தார். ஒரு நாள் அவள் சொன்ன தூஷணங் களைச் சகிக்க மாட்டாமல்அவர் வெளியே யோய், வாசற் படிக்கு முன்பாக உட்கார்ந்தார். அவள், கோபாவேசத் துடன், மேல் மெத்தை மேல் ஓடி, அங்கே விருந்த அசுத்த நீர் நிறைந்த பாளையை எடுத்து, அவர் தலைமேலே கவிழ்த் தாள். அவர் சிரித்துக் கொண்டு முன்னே இடி இடித் தது, இப்போது மழை பெய்கிறது” என்று சொல்லிப் பொறுமையா யிருந்தார். 

ஒரு புருஷன் வடை தின்ன ஆசைகொண்டு, உழுந்து வாங்கி, பெண்சாதி யிடத்திலே கொடுத்து வடை சுடும் படி ஆக்ஞாபிக்க, அவன் நூறு வடை சுட்டு, தொண்ணூற் றொன்பது வடைகளையும் அவளே தின்றுவிட்டு, ஒரு வடை மட்டும் புருஷனுக்கு வைத்தாள். அவன் ‘அத்தனை வடைகளையும் எப்படித் தின்றாய்? என்று கேட்க. அவள், ‘இப்படித் தான் தின்றேன்’ என்று அந்த ஒரு வடையையும் எடுத்துத் தின்று விட்டாள். இவள் எப்படிப் பட்ட அரக்கியா யிருக்க வேண்டும்? 

பின்னும், ஒரு பெண்சாதிக்கும் புருஷனுக்கும் வாக் குவாத முண்டாகி, அவன் பெண்சாதியைப் பழிவாங்கு வேனென்று சொல்ல, அவள், “என்ன பழி வாங்குவாய்?” என்று கேட்ஈ, ‘கொல்லையி லிருக்கிற குளத்தில் விழுந்து விடுவேன்’ என்று புருஷன் சொல்ல, அவள், ‘நீ விழுகி றதை நான் கண்ணாலே பார்க்க வேண்டும், வா’ என்று திட்டி, மடியைப் பிடித்து இழுக்க, அவன் குளத்தில் விழு கிறதற்காக ஒரே ஓட்டமாக ஓடினவன், பிற்பாடு யந்து கொண்டு, குளத்து ஓரத்தில் நின்று விட்டான். உடனே, அவனை அவன் பெண்சாதி வாயில் வந்தபடி தூஷித்து வெட்கம் கெட்டவனே, ஏன் குளத்தில் விழவில்லை?’ என்று கேட்க, அவன், ‘எனக்கு மனம் துணிய வில்லை. பின்னும், எனக்கு நீச்சுத் தெரியு மான தால் நான் தப்பி வந்தாலும் வந்து விடுவேன். நான் தப்பி வராதபடி, என் னுடைய இரண்டு கைகளையும் நீ பினகட்டு முறையாய்க் கட்டிவிட்டு. தூரத்திலிருந்து ஓடிவந்து, என்னைக் குளத் திலே தள்ளி விடு’ என்று சொல்லி, குளத்து ஓரத்தில் நின்றான். அந்தப் பிரகாரம் பெண் சாதி பர்த்தாவி னுடைய இரு கைகளையும் பின்புறமாய்க் கட்டி விட்டு, அவள் வெகு தூரம் பின்னிட்டுப் போய், அவனைத் தள்ளு வதற்காக அதிக வேகமாக ஓடி வந்தாள். அவள் தனக்குச் சமீபத்தில் வரும் போது, அவன் திடீரென்று அப்பால் விலகி விட்டான். அவள் ஓடி வந்த விசையினால் அவளே ஒரு நிமிடத்தில் குளத்தில் விழுந்து விட்டாள். உடனே தன்னைத் தூக்கி விடும்படி கத்தினாள், நீயே என் கைகளைக் கட்டி விட்டாயே! நான் எனன செய்வேன்?’ என்று புருஷன் சும்மா இருந்து விட்டான். அவள் ஸ்வயங்கிருத அபராதத்தால், தண்ணீரில் மூழ்கி, இறந்து போனாள்” என்றாள். 

மேற்படி திருஷ்டாந்தங்களை ஞானாம்பாள் சொன்ன வுடனே, ஸ்கிரீகள் நல்லவர்க ளென்பதற்கு, நானும் சிலக திருஷ்டாந்தங்கள் சொன்னேன்:- 

”கொன்ராட் (Conrad) என்னும் சக்கரவர்த்தி ஒரு பட்டணத்தைப் பிடித்த போது அதி லிருந்த புருஷர்களை யெல்லாம் வெட்டிப் போடும்படி யாகவும், ஸ்திரீகளை யெல் லாம் அவர்கள் தூக்கக் கூடுமான ஆஸ்திகளை எடுத்துக் கொண்டு பட்டணத்தை விட்டுப் போய் விடும்படி யாக வும், உத்தரவு கொடுத்தார். அநேக ஸ்திரீகள் தங்க ளுடைய புருஷர்களை முதுகின் மேலே தூக்கிக் கொண்டு நகரத்துக்கு வெளியே போவதை அந்தச் சக்கரவர்த்தி பார்த்து, ‘ஆஸ்திகளை எடுத்துக் கொண்டு போகும்படி நாம் உத்தரவு கொடுத்திருக்க, புருஷர்களை ஏன் கொண்டு போகிறீர்கள்?’ என்று கேட்க, ‘புருஷர்கள் தான் எங்க ளுக்கு ஆஸ்தி’ என்று அந்த ஸ்திரீகள் சொல்ல, அந்தச் சக்கரவாத்திக்கு இரக்க முண்டாகி, அந்த நகரத்துப் புருஷர்களை யெல்லாம் கொலை செய்ய வேண்டா மென்று உத்தரவு கொடுத்தார். 

இராணுவ வகுப்பைச் சேர்ந்த ஒரு உத்தியோகஸ்தர், அழகும் மேன் குலமு முள்ள ஒரு ஸ்திரீயை விவாகம் செய்கிற தென்று நிச்சயித்த பிற்பாடு, அவர் திடீரென்று யுத்தத்துக்குப் போகும்படி நேரிட்டது. அவர் திரும்பி வந்த பிற்பாடு கலியாணம் செய்வதாக வாக்குத் தத்தம் செய்து, யுத்தத்துக்குப் போய் விட்டார். அந்தச் சண்டை யில் அவர் குண்டு பட்டு நொண்டியாய்ப் போனதும் தவிர, தேகத்தில் காயங்க ளுண்டாகி, அவர் சர்வ விகாரமாய்ப் போனார். இப்படிப் பட்ட ஸ்திதியில் அந்த ரூபவதி தன்னைக் கலியாணம் செய்யச் சம்மதியா ளென்று. அவர் மிகவும் துயரத்தை அடைந்திருந்தார். அவர் ஊருக்குத் திரும்பி வந்தவுடனே, அந்த ஸ்திரீயைப் பார்க்கிறதற்குக்கூட வெட்கப் பட்டுக்கொண்டிருந்து, பிற்பாடு ஒருநாள் அவளிடம் போய், தன்னை அந்த ஸ்திதியிற் கலியாணம் செய்யச் சம்மதமா வென்று கேட்க, அவள் அவரைப் பார்த்து, ‘ஆடவர்களுக்குச் சௌரியமே அழகு. நீங்கள் சுத்த வீரர் என்பதற்கு உங்களுடைய காயங்களே சாக்ஷிகளா யிருப்பதால், உங்களை விவாகம் செய்ய ஒரு தடையுமில்லை’ என்று உடனே சம்மதித்தாள். 

ஒரு திரவியவந்தர், நெடு நாள் வியாதியா யிருந்து, எழுந்திருக்கக் கூடாமல் அசக்தியா யிருந்த காலத்தில், அவருக்கு விரோதிக ளான அநேக திருடர்கள், அவரைக் கொலை செய்யவும், சொத்துக்களைத் திருடவும் எண்ணம் கொண்டு, ஒரு நாள் நடுச் சாமத்திற் பெரும் கூட்டமாய் வந்து, அவர் வீட்டுத் தெரு வாசற் கதவுகளைக் கோடாலி யாற் பிளந்தார்கள். அவர்கள் திருடர்க ளென்று அவரு டைய பெண்சாதி தெரிந்துகொண்டு, புருஷன் படுத்திருக் கிற இடம் தெரியாமல் மறைத்து விட்டு, புருஷனுடைய உடுப்புகளைத் தான் தரித்து ரூப மாறிக்கொண்டு, திருடர் களுக் கெதிரே போய், ‘உங்களுக்குப் புதையல் இருக்கிற இடத்தைக் காட்டி விடுகிறேன்; என்னை உபத்திரவம் செய்ய வேண்டாம்’ என்று சொல்ல, அவர்கள் ‘புதைய லைக் காட்டு! காட்டு!!’ என்று பின் தொடர்ந்தார்கள். அவள் அவர்களை வெகுதூரம் அழைத்துக் கொண்டு போய், ஒரு பெரிய அறைக்குள் நுழைந்து, அதில் விரித் திருந்த இரத்தினக் கம்பளத்தைத் தூக்கி, அதற்கடியில் தரையோடு தரையாகப் பூட்டப்பட்டிருந்த ஒரு இரும் புக் கதவைக் காட்டி, அதைத் தூக்கி நிமிர்த்தும்படி யாகச் சொன்னாள். திருடர்கள் பல பேர் கூடி, அந்த இரும்புக் கதவைத் தூக்கி நிறுத்தினார்கள். அதற்கு அடியி லிருந்த படிகளின் வழியாய் அந்த ஸ்திரீயை முன்னே இறங்கச் சொல்லி, திருடர்கள் தீபங்களுடன் பின் தொடர்ந்து போனார்கள். அந்த நில அறையில் பூட் டப்பட்டிருந்த அநேகம் இரும்புப் பெட்டிகளைக் காட்டி, அவைகளுக்குள்ளாகத் திரவியங்க ளெல்லாம் இருப்பதாகத் தெரிவித்தாள். அவர்கள் ‘திறவுகோல் எங்கே?” என்று கேட்க, அவள் ‘இதோ ஒரு நொடியிற் கொண்டு வருகிறேன்’ என்று சொல்லி, மான் ஓடுவது போல் அதி வேகமாய்ப் படிகளில் ஏறி, வெளியே வந்து, நிறுத்தப்பட் டிருந்த அந்த இரும்புக் கதவைக் காலாலே எட்டி உதைத் தாள். உடனே அந்தக் கதவு படீரென்று கீழே விழுந்து மூடிக் கொண்டது. அதன் பூட்டை ஒரு நிமிஷத்திலே பூட்டி விட்டாள். திருடர்களெல்லோரும், நில அறைக்குள்ளே அகப்பட்டுக் கொண்டார்கள். அவள் உடனே வீட்டுக்கு வெளியே ஓடிவந்து, திருடர்களாலே கட்டப் பட்டிருந்த தன்னுடைய வேலைக்காரர்களை அவிழ்த்து விட்டு, கொஞ்ச தூரத்தில் குடியிருந்த தன் குடியானவர் களை அழைத்து வரும்படி ஆக்ஞாபித்தாள். அந்தப் பிர காரம் இருநூறு குடியானவர்கள் வந்து, திருடர்களைப் பிடித்துக் கட்டி, தட்டையில் அடித்தார்கள். பிறகு அவர்களுக்குத் தகுந்த சிக்ஷையும் கிடைத்தது. அந்த ஸ்திரீ அவ்வளவு சாமர்த்தியம் செய்யா விட்டால், திருடர்கள் அவளுடைய புருஷனையும் கொன்று, சர்வ கொள்ளை அடித்திருப்பார்கள். 

இன்னும் அநேக ஸ்திரீகள், அந்நிய புருஷர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டு, தப்புகிறதற்கு வேறே மார்க்கம் இல்லாமையினால், தங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டும், கிணற்றில் விழுந்தும், கத்திகளாற் கழுத்தை அரிந்து கொண்டும், இவ்வகையாகப் பிராணனைக் கொடுத்துக் கற்பைக் காப்பாற்றினார்களே! புருஷர்களோடு கூட உடன்கட்டை ஏறி மாண்டு போன பதிவிரதைகளுக்குக் கணக்குண்டா?” என்றேன்.

– தொடரும்…

– மாயூரம் மாஜி டிஸ்டிரிக்ட் முன்சீப் ச.வேதநாயகம் பிள்ளையவர்கள் (1826-1889) இயற்றியது, முதற் பதிப்பு: 1879.

– பிரதாப முதலியார் சரித்திரம், நூற்றாண்டு விழா புதிய பதிப்பு: அக்டோபர் 1979, வே.ஞா.ச.இருதயநாதன் (வேதநாயகம் பிள்ளை மகன் பேரர்), ஆவடி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *