பிரதாப முதலியார் சரித்திரம்

3
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 2,258 
 
 

(1879ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். அதுவரை செய்யுள் வடிவ புனைகதை இலக்கியங்களே இருந்துகொண்டிருந்த தமிழிற்கு உரைநடை வடிவிலான புனைகதை இலக்கிய வகை இந்நூல் வழியாக அறிமுகமானது. அவ்வகையில் இது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

அதிகாரம் 6-10 | அதிகாரம் 11-15 | அதிகாரம் 16-20

11-ஆம் அதிகாரம் 

ஒன்பது விக்கிரகங்களின் கதை

தற்குண்ப் பெண்டீரே பெருஞ் செல்வம் 

ஒரு நாள் என் தாயார் என்னிடத்தில் வந்து, “ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்து உன்னிடத்திலே பேச வந்திருக்கிறேன். அந்த விஷயம் எவ்வளவு முக்கியமான தென்று நீ தெரிந்து கொள்ளும் பொருட்டு, உனக்கு ஒரு சிறிய கதை சொல்லுகிறேன்” என்று சொல்லத் தொடங்கினார்கள்: 

ஒரு தேசத்தை ஆண்டு வந்த அரசன் இறந்து போன பிற்பாடு, அவனுடைய ஏக குமாரனுக்குப் பட்டாபிஷேக மாகி அரசாட்சி செய்து வந்தான். அவனுடைய திரவி யங்களை எல்லாம் துர் விஷயங்களில் செலவழித்து விட்டு அவன் மனோ வியாகுலத்தோடு கூடப் படுத்துத் தூங்கும் போது ஒரு விருத்தாப்பியன் அவன் முன்பாகத் தோனறி, “உன் தகப்பனாருடைய பொக்கிஷ சாலைக்குக் கீழே வெட்டிப் பார். உனக்குத் திரவியம் அகப்படும் என்று சொன்ன தாக ஒரு சொப்பனம் கண்டு விழித்துக் கொண்டு, அந்தப் பிரகாரம் அவன் வெட்டிப் பார்க்க, பளிங்கினால் கட்டப் பட்ட இரண்டு நில அறைகளைக் கண்டான். அந்த அறை களில் ஒன்றில் தங்க நாணயங்கள் நிறைந்திருந்தன. மற்றொன்றில் ஒன்பது தங்கப் பீடங்களும், அவைகளுள் எட்டுப் பீடங்களில் எட்டு வயிர விக்கிரகங்களும் இருந்தன. அந்த ஒவ்வொரு விக்கிரகமும் ஒரே வயிரத்தினாலே செய்யப் பட்டதா யிருந்தது. ஒன்பதாவது பீடத்தில் ஒன்றுமில்லாமல் வெறுமையாயிருந்தது. அதில் அடியிற் கண்டபடி அவன் தசப்பனால் எழுதப்பட்டிருந்தது:- ”மகனே! அந்த எட்டு வயிர விக்கிரகங்களையும் வெகு கஷ்டப்பட்டுச் சம்பாதித்தேன். உலகத்தில் ஒன்பதாவது விகிரகம் ஒன்று இருக்கின்றது. அது அந்த எட்டு விக்கிர கங்களைப் பார்க்கிலும் ஆயிரம் பங்கு சிரேஷ்டமானது. அது உனக்கு வேண்டுமானால், கேரோ பட்டணத்துக்குப் போய், அவ்விடத்திலிருக்கிற என்னுடைய ஊழியக்காரனைக் கண் டால், அவன் அந்த ஒன்பதாவது விக்கிரகம் கிடைப்பதற்குத் தகுந்த மார்க்கத்தைச் சொல்லுவான்” என்று எழுதப்பட்டிருந்தது. அந்தப் பிரகாரம் அந்த ராஜ குமாரன் கேரோ பட்டணத்துக்குச் சென்று ஊழியக்காரனைக் கண்டு, அவன் மூலமாக ஒரு வேதாளத்தினுடைய தயவைச் சம்பாதித்தான். அந்த வேதாளத்தைப் பார்த்து, “ஒன்பதாவது விக்கிரகம் தனக்குக் கிடைக்கவேண்டும்” என்று பிரார்த்தித்தான். அந்த வேதாளம் அவனைப் பார்த்து, ”பதினைந்து வயதுள்ளவளாகவும் அதிரூபலாவண்ணியமும் நிர்த்தோஷமும் உள்ளவளாயும் ஒரு பெண்ணை, எனக்கு நீ சம்பாதித்துக் கொடுத்தால், உனக்கு ஒன்பதாவது விக்கிரகம் கிடைக்கும். நீ பெண்களுடைய குணத்தை அறியும் பொருட்டு, ஒரு கண்ணாடி கொடுக்கிறேன். ஒரு பெண்ணைப் பார்த்த உடனே, அந்தக் கண்ணாடியைப் பார். அவள் களங்கம் உள்ளவளாயிருந்தால், அந்தக் கண்ணாடியிலும் களங்கம் தோன்றும். அவள் நிஷ்களங்கமா யிருந்தால், கண்ணாடியும் நிஷ்களங்கமா யிருக்கும்” என்று சொல்லி, ஒரு கண்ணாடியையும் அவன் கையில் கொடுத்தது. அவன் பல ஊர்களுக்குப் போய்ப் பல பெண்களைப் பார்த்து, வேதாளம் சொன்ன குணம் குறிகளின்படி, ஒரு மந்திரி மகளைச் சம்பாதித்தான். அந்தப் பெண்ணைப் பார்த்த உடனே, அவனுக்கே இச்சை உண்டானபோதிலும், அந்த இச்சையை நிக்கிரகம் செய்து, அந்தப் பெண்ணை வேதாளத்தின் முன்பாகக் கொண்டுபோய் விட்டான். வேதாளத்துக்கு அதிக சந்தோஷ முண்டாகி, அந்த ராஜகுமாரனைப் பார்த்து, “நீ உன் ஊருக்குப் போய், நில அறையைத் திறந்து பார். அங்கே, ஒன்பதாவது விக்கிரகத்தைக் காண்பாய்” என்றது. அவன், அந்தப் பெண்ணை இழந்து விட்டோமே என்கிற துக்கத்துடன், ஊருக்குப் புறப் பட்டுப் போய், நில அறையைத் திறந்து பார்த்தான். ஒன்பதாவது பீடத்தில், ஜக ஜோதியாக ஒரு விக்கிரகம் இருந்தது. அதை நெருங்கிப் பார்க்க, இவன் வேதாளத் துக்குச் சம்பாதித்துக் கொடுத்த பெண்ணா யிருந்தது. உடனே அந்த வேதாளமும் ஆகாச மார்க்கமாய் வந்து, ”அந்தப் பெண்தான் ஒன்பதாவது விக்கிரகம். அவளை நீ விவாகம் செய்து கொண்டு சுகமாக வாழ்” என்று சொல்லி, மறைந்து போய்விட்டது. அவன் பரம சந்தோஷம் அடைந்து, அந்த ஸ்திரீயை விவாகம் செய்து கொண்டு க்ஷேமமாயிருந்தான். 

“அந்தக் கதையில் சொல்லிய பிரகாரம் ஒருவனுக்கு உத்தம குணமுள்ள பாரி வாய்ப்பாளானால், அதற்குச் சமானமான செல்வம் வேறொன்று மில்லை. ஞானாம்பாளை அந்த ஒன்பதாவது விக்கிரகமென்றே சொல்லலாம். அவளை உனக்கு விவாகம் செய்யும்படி சம்பந்தி முதலி யாரைக் கேட்க யோசித்திருக்கிறோம். உன்னுடைய அபிப்பிராயம் என்ன?” என்று என் தாயார் கேட்டார்கள். இதைக் கேட்டவுடனே, என் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கி, கண் வழியாய்ப் புறப்பட்டு, முகத்திற் பரவிற்று. நான் உடனே என் தாயாரைப் பார்த்து, “ஞானாம்பாளைக் கொள்ள எனக்கு ஆக்ஷேப மில்லை. நீங்கள் இந்தக் கதையை ஒன்பது விக்கிரகங்களோடே முடித்து விட்டது ஒரு குறைவா யிருக்கின்றது. அந்த ஒன்பது விக்கிரகங்களுக்கும் ஆயிரம் பங்கு மேலாகப் பத்தாவது விக்கிரகம் ஒன்று இருக்கிறது. அதையும் கூடச் சேர்த்து விட்டால், அந்தக் கதை பூரணமாகும்” என்றேன். நான் யாரைக் குறிப்பிட்டுப் பேசினே னென்று என் தாயார் அறிந்து கொண்டு, அந்த ஸ்தோத்திரத்தைக் கேட்க இஷ்டமில்லாமல், போய் விட்டார்கள். நான் சொன்ன பத்தாவது விக்கிரகம் யாரென்றால், என்னுடைய தாயார் தான். 

12-ஆம் அதிகாரம் 

விவாகம் பேசல்-சம்பந்திகளின் சம்வாதம்;

குலத்தினும் தனத்தினும் குணமே விசேடம் 

காந்தர்வ விவாக கண்டனம் 

என்னுடைய சம்மதத்தை என் தாயார் என் தகப்ப னாருக்குத் தெரிவித்த வுடனே, என் தகப்பனார் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போய் ஞானாம்பாளை எனக்குக் கன்னிகா தானம் செய்ய வேண்டு மென்று கிரமப்படி கேட்டார். அதற்குச் சம்மந்தி முதலியார் யாதொரு ஆக்ஷேபமும் சொல்லாமல், உடனே சம்மதித்தார். பிற் பாடு நிச்சய தாம்பூலம் மாற்றுவதற்காக, பந்துக்கள் இஷ்ட மித்திரர்களுக் கெல்லாம் தாம்பூலம் அனுப்பி, அவர்கள் எல்லாரும் சம்பந்தி முதலியார் வீட்டில் வந்து கூடினார்கள். நிச்சய தாம்பூலம் மாற்றுவதற்கு முன், சம்பந்தி முதலியார் என் பிதாவை நோக்கி, ‘கலியாணத் துக்குப் பின்பு மாப்பிள்ளையும் பெண்ணும் ஆர் வீட்டில் இருக்கிறது?” என்று கேட்டார். உடனே என் தகப்ப னார் ‘இந்த விஷயத்தில் உமக்கென்ன சந்தேகம் வந்தது? மாடு மேய்க்கிறவன்கூட மாமனார் வீட்டில் இருக்க மாட் டானே! என் பிள்ளை உம்முடைய வீட்டில் இருப்பானா?’ என்றார். “அப்படியானால், பெண் கொடுக்கச் சம்மத மில்லை”யென்று, சம்பந்தி முதலியார் சொன்னார். “என் பிள்ளைக்குப் பெண் பஞ்சமா? உன் பெண் வேண்டிய தில்லை” என்று, என் பிதா மொழிந்தார். சம்பந்தி முதலி யார் அவர் பாட்டன் கால முதற் பிரபுவாகவும், என் தகப்பனார் அவருடைய தகப்பன் கால முதற் பிரபுவாக வும் இருந்தபடியால், சம்பந்தி முதலியார் தம்மை ஒரு படி உயர்ந்தவராக எண்ணிக் கொண்டு, என் தகப்பனாரைப் பார்த்து, “உன் பூர்வோத்தரம் தெரியாதா? உன் தகப்பனுடைய நாள் முதற்றானே நீ பிரபு; அதற்கு முன் உனக்கு ஜாதி யேது? குலம் ஏது?” என்று தூஷித்தார். அவரை என் தகப்பனார், “நீ அம்பட்டன் கோத்திரம் அல்லவா?” என்றார். இவரை அவர், ”நீ வண்ணான் கோத்திரம் அல்லவா?” என்றார். இப்படியாக, “அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிர்” என்பது போல், இவருடைய சம்வாதத்தால், மறைந்து கிடந்த எங்கள் பூர்வோத்தரங்க ளெல்லாம் வெளியாகி விட்டன. 

அப்போது எங்கள் பந்துக்களில் ஒரு விருத்தர் கூட இருந்தார். அவர் யதார்த்த வாதி; அவர் தகப்பன் பாட்டன் காலத்தில் ஒன்று மில்லாமல் இருந்து, தன் காலத்திலே பிரபுவானவர். என் தகப்பனாரும், சம்பந்தி முதலியாரும், தகப்பனார் பாட்டனார் காலத்துப் பிரபுத் துவத்தைப் பற்றி பேசிக் கொண்டபோது, அந்தக் கிழவ னாருக்குக் கோபம் அதிகரித்து, அவர்களை நோக்கிச் சொல்லுகிறார்: ” நீங்கள் இருவரும் பிரபுக்கள் அல்ல. நான்தான் பிரபு. எவன் பிரபுத்துவத்தைத் தானே சம் பாதிக்கிறானோ, அவன் பெரியவனே யல்லாமல், தகப்பன் பாட்டனிடத்திலிருந்து பிரபுத்துவத்தைச் சுதந்தரிக் கிறவன் எப்படிப் பிரபு ஆவான்? எவன் சுத்த வீரனோ அப்பன் பாட்டன் அவனுக்குப் பெருமையேயல்லாது, சுத்த வீரர்களா யிருந்ததைக் கொண்டு ஒரு பேடிக்குப் பெருமை உண்டாகுமா? எவன் வித்வானே அவனுக்கு மகிமையேயல்லாமல் அவன் பிள்ளை மூடனாயிருந்தால். அவனுக்கு வித்வான் என்கிற பட்டம் கிடைக்குமா? உங்கள் விட்டால், ஒரு பாட்டனார் சம்பாதித்த ஆஸ்தி போய் விட்டால், ஒரு காசு முதலாய்ச் சம்பாதிக்க உங்களுக்குத் திறமை யுண்டா? வித்தையும் புத்தியும் குணமும் உள்ளவன் உயர்ந்தவனே தவிர, அத்தன்மை யில்லாதவன், தன்னை உயர்ந்தவனென்று சொல்லிக் கொள்வது எப்படியென்றால், தூக்குண்ணும்படி தீர்மானிக்கப்பட்ட ஒரு கொலைக்காரன் தூக்கு மரத்தின் மேல் நின்று கொண்டு, தான் எல்லாரிலும் உயர்ந்தவனென்று சொல்வதற்குச் சமானம்” என்று, அந்தக் கிழவனார் ஒரு பக்கத்தில் குறுக்கே யிறங்கிப் பேசத் தலைப்பட்டார். சம்பந்திகள் இருவரும், மரியாதைப் பன்மை போய், அவமரியாதைக்குரிய ஒருமையிலும், டகரப் பிரயோகங்களிலும், வாய்ச் சண்டையி லிருந்து கைச் சண்டையிலும், பிரவேசித்தார்கள். கைச் சண்டையிலிருந்து கத்திச் சண்டையில் பிரவேசிக்க யத்தனமாயிருந்த போது, கூடியிருந்த பந்துக்கள் நயமான வார்த்தைகளைச் சொல்லி, விலக்கி விட்டார்கள். கடைசி யில், சம்பந்தி முதலியார். “என் மகளை ஒரு நாய்க்குக் கொடுத்தாலும் கொடுப்பேனே யல்லாது, உன் மகனுக்குக் கொடுக்கிறதில்லை” என்று சபதம் கூறினார். என் தகப் பனார், “என் மகனுக்கு ஒரு கழுதையைக் கொண்டாலும் கொள்ளுவேனே யன்றி, உன் மகளைக் கொள்ளுகிற தில்லை” என்று மார்பு தட்டிக் கொண்டு வந்து விட்டார். இவ்வகையாக, எங்களுடைய கலியாணம், நாய்ச் சம்பந்தத் திலும் கழுதைச் சம்பந்தத்திலும் முடிந்தது. 

அன்று முதல், சம்பந்தி முதலியாருக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாமற் போய்விட்டது- அவர்கள் வீட்டுக்கு நாங்கள் போகிறது மில்லை.எங்கள் வீட்டுக்கும் அவர்கள் வருகிறது மில்லை. அவர்களுடைய சிநேகிதர்கள் எங்களுக்கு விரோதிகள். அவர்களுடைய பகைவர் எங்களுக்கு இஷ்டர்கள். அவர்களுடைய வேலைக் காரர்களுக்கும் எங்கள் வேலைக்காரர்களுக்கும் பகை அவர்களுடைய ஆடு மாடுகளுக்கும் எங்களுடைய ஆடு மாடுகளுக்கும் பகை. இப்படிப் பிரமாதமாகக் கலகம் மூண்டு விட்டது. ஆனால், இந்தக் கலகத்தில் நானும், ஞானாம்பாளும், என் தாயாரும், அவள் தாயாரும், இந்த நாலு பேர் மட்டும் சம்பந்தப்பட வில்லை.எங்கள் தாய் மார்கள், தங்கள் கணவர்களைச் சமாதானப்படுத்தக் கூடிய வரையில் முயன்றும், பயன்படவில்லை. 

சம்பந்தி முதலியார், தம்முடைய சபதத்தை நிறை வேற்றும் பொருட்டு, பல ஊர்களுக்கும் கடிதம் அனுப்பி, தன் மகளுக்கு மாப்பிள்ளை விசாரிக்க ஆரம்பித்தார். அதைக் கேட்டு என் தகப்பனாரும், பல ஊர்களுக்குக் கடிதம் போக்கி, எனக்குப் பெண் விசாரிக்கத் தொடங்கினார். ஞானாம்பாளைத் தவிர, வேறே தேவ ஸ்திரீயாயிருந்தாலும் விவாகம் செய்கிறதில்லையென்றும், என் தகப்பனாருடைய பிரயத்தனங்களுக்கு இடம் கொடுக்கிறதில்லையென்றும், எனக்குள்ளே நிச்சயித்துக் கொண்டேன். ஆனால் ஞானாம்பாள், ஸ்திரீ ஜாதி ஆனதால், அவளுடைய தகப்பனார் அவளுக்கு வேறே புருஷனைத் தேடி பலவந்த மாய்க் கலியாணம் செய்து விட்டால் என்ன செய்கிற தென்கிற கவலை என்னை வாதித்தபடியால் அவளை இரகசி யத்தில் எங்கேயாவது அழைத்துக் கொண்டு போய் விவாகம் செய்து கொண்டு திரும்பி வருகிறதென்று தீர் மானித்துக் கொண்டு, இந்தத் தீர்மானத்தை அவளுக்குக் கடித மூலமாகத் தெரிவித்தேன். நான் எங்கே கூப்பிட் டாலும், அவள் சந்தோஷமாய் வருவாளென்றும், யாதொரு ஆக்ஷேபமும் சொல்ல மாட்டாளென்றும் நம்பி, இந்தக் கடிதத்தை அனுப்பினேன். ஆனால் அவளுடைய மொழியைப் பார்த்த உடனே என்னுடைய ஆசை நிராசையாய்ப் போய் விட்டது. அந்த மறுமொழி வருமாறு: 

என் பிரியமான அத்தான் 

தாங்கள் அனுப்பிய கடிதத்தை வாசித்துப் பார்த்து துக்க சாகரத்தில் முழுகினேன். தாங்கள் எனக்கு எழுதிய கடிதம் போல், ஒரு தாசிக்குக்கூட ஒருவரும் எழுதத் துணியார்கள். என்னிடத்தில் என்ன துன்மார்க்கத்தைக் கண்டு, அப்படிப்பட்ட கடிதத்தை எனக்கு எழுதினீர்கள்? நாம் இருவரும் எங்கேயாவது போய், அந்தரங்கத்தில் கலியாணத்தை முடித்துக் கொள்ளலாமென்று எழுதி இருக்கிறீர்கள். விவாகம் இல்லாத ஒரு கன்னிகையும், பிரமசாரியும் சேர்ந்து கொண்டு வெளிப்படுவதினால் உண் டாகிற அவமானமும், அபவாதமும், உலகமுள்ள வரையில் நீங்குமா? என்னை இந்த அவமானத்துக்கு உட்படுத்த, நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? இந்த விஷயத்தில் புருஷ்ர்களுக் குண்டாகிற அபவாதத்தைப் பார்க்கிலும், ஸ்திரீகளுக் குண்டாகிற அபவாதம் நூறு பங்கு பெரிதென்று, தாங்கள் ஏன் யோசிக்க வில்லை? ஐரோப்பியர்களுக் குள்ளே நடக்கிற காந்தர்வ விவா கத்தைப் புகழ்ந்து பேசுகிறீர்கள். அவர்களுக்குள்ளே பெண்ணுக்கும் புருஷனுக்கும் வயது முதிர்ந்த பின்பு விவாகம் நடப்பதும் தவிர, விவாகத்துக்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் அந்தரங்கத்தில் சந்திப்பதும், சம்பாஷிப் பதும், வழக்கமாயிருக்கின்றது. ஸ்திரீ புருஷர்கள் ஒருவரை ஒருவர் பாராமலே, அதி பால்யத்தில் கலியாணம் நடக்கிற வழக்க முள்ள இத்தேசத்துக்குக் காந்தர்வ விவாகம் தகுதி யாகுமா? விவாகத்துக்கு முன்பு ஸ்திரீ புருஷர்களுக்குள் நடக்கிற அந்தரங்க சல்லாபத்தினால் விளைகிற தீமைகளைக் குறித்து, ஐரோப்பியர்களே முறையிடுகிறதும் தவிர, நியாயஸ்தலங்களில் வரும் வழக்குகளி னாலும், அந்தத் தீமைகள் இன்னவை யென்று, நாம் அறிகிறோமல்லவா? அந்தத் தூர் வழக்கத்தை இத்தேசத்துக்குக் கொண்டு வர யாராவது முயற்சி செய்வார்களே யானால், அவர்கள் தேசாபிமானிகள் அல்ல வென்பது ஸ்பஷ்டம். பெரும்பாலும், தாய் தந்தைமார்கள், தங்க ளுடைய பிள்ளைகளின் நலத்தையே கருதுவார்கள். ஆகை யால், தாய் தகப்பன்மார்களுடைய அபிப்பிராயப்படி நடப்பது உசிதமா யிருக்கின்றது. ஆனால்,ஆடு,மாடு களுடைய சம்மதத்தைக் கேளாமல், அவைகளை விலைகூறு வது போல், தகுந்த வயது உள்ள பிள்ளைகளுடைய இஷ்டப் படி இஷ்டத்தை எவ்வளவும் மதியாமல், தாய் தந்தை மார்கள் தங்கள் நடத்த முயலுவார்களானால், அப்படிப் பட்ட விவாகத்துக்குச் சம்மதிக்காமல் நிராகரிக்கப் பிள்ளை களுக்கும் பூரண சுதந்தரம் உண்டாயிருக்கின்றது. தங்க ளுக்குக் கன்னியாகிய நான் கடிதம் எழுதுவது அநு சிதமாயிருந்தாலும், என்னுடைய அபிப்பிராயம் தெரியும் பொருட்டு, இந்த ஒரு கடிதமட்டும் எழுதினேன். இனி மேல் எழுத மாட்டேன். தாங்கள் ஒரு தரம் எனக்குச் செய்த உபகாரத்தையும் மறவேன். 

இங்ஙனம்
தங்கள் விதேயை
ஞானாம்பாள் 

இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடனே, என்னுடைய புத்தி எந்த ஸ்திதியில் இருந்திருக்குமென்று, நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். இந்தக் கடிதத்தை திருப்பித் திருப்பி ஆயிரம் தரம் படித்தேன். நான் என்னுடைய கடிதத்தை எவ்வளவு நம்பிக்கையோடுகூட எழுதியிருந் தேனோ, அவ்வளவுக்கு அவளுடைய மறுமொழி முழுதும் பிரதிகூலமாயிருந்தது. என்னை விவாகம் செய்து கொள்ள அவள் சம்மதம் உள்ளவ ளென்பது கூடச் சந்தேகத்தில் வந்து விட்டது. ஆனால், தகுந்த பிராய முள்ள பிள்ளைகளுடைய இஷ்டத்தைத் தாய் தகப்பன்மார்கள் எவ்வளவும் கவனிக்காவிட்டால், அப்படிப்பட்ட விவாகத்தைப் பிள்ளைகள் நிராகரிக்கலா மென்று அவள் எழுதிய ஒரு வாக்கிய மட்டும், கொஞ்சம் நம்பிக்கைக்கு ஆஸ்பதமாயிருந்தது. தண்ணீரில் வீழ்ந்து தத்தளிக்கிற வர்கள் ஒரு துரும்பு அகப்பட்டாலும் அதைப் பிடிப்பது போல, நான் அந்த அற்ப நம்பிக்கையைக் கொண்டு, என் மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். அவளுடைய கடிதத்தின் முதற் பாகங்கள் கோப மயமாயிருந்தாலும், “நீங்கள் செய்த உபகாரத்தை மறவேன்” என்கிற கடைசி வாக்கியத்தைக்கொண்டு, அவள் கோபம் தணிந்துவிட்ட தாக, நிச்சயித்துக் கொண்டேன். 

13-ஆம் அதிகாரம் 

நினையாக் கலியாணம் 

ஞானாம்பாள் என்னைத் தவிர வேறொருவருக்கு மாலை சூட்டச் சம்மதியாளென்று, நான் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும்போது, சம்பந்தி முதலியார் ஒரே பிடி 

விசாரித்து வாதமாய்ப் பல இடங்களில் மாப்பிள்ளை முடிவில் தன் மகளைத் திருநெல்வேலியிலிருக்கும் வீரப்பு முதலியார் குமாரன் சந்திரசேகர முதலிக்கு விவாகம் செய்யத் தீர்மானித்தார். அதைக் கேள்விப்பட்ட உடனே, என் தகப்பனாருக்கு ஆக்கிரகம் உண்டாகி, எனக்குக் கோயமுத்தூரிலிருக்கும் சொக்கலிங்க முதலியார் மகள் பூங்காவனத்தை மணம் செய்கிற தென்று நிச்சயித்தார். சித்திரை மாசம் இருபத் தெட்டாம் தேதி காலை ஆறு மணிக்குச் சுப முகூர்த்தம் செய்கிறதென்று. சம்பந்தி முதலியார் நிர்ணயித்தார். அதைக் கேள்விப்பட்ட என் தகப்பனாரும், அந்தத் தினத்தில், அந்த முகூர்த்தத்தில், என்னுடைய விவாகத்தை நிறைவேற்றுகிற தென்று நிர்ண யித்தார். அந்தக் கலியாணத்தைத் தடுக்க, என் தாயார் கூடிய வரையில் பிரயாசைப் பட்டார்கள். சம் பந்தி முதலியாருடைய வைராக்கியத்தினாலே, என் தகப் பனாருடைய வைராக்கியமு முற்றி, என் தாயார் வார்த் தையை நிராகரித்து விட்டார்கள். என் தாயாரைச் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போக வேண்டாமென்று என் தகப்பனார் கட்டுப்பாடு செய்துவிட்ட படியால், என் தாயார் தம்முடைய தமையனாராகிய சம்பந்தி முதலியா ரைச் சமாதானப்படுத்தவும் சந்தர்ப்பம் இல்லாமல் போய் விட்டது. 

எங்கள் ஊருக்கு, நாலு காத வழி தூரத்தில், சம்பந்தி முதலியாருக்கும் எங்களுக்கும் பொதுவாக, பூங்காவூ. ரென்கிற பெயருள்ள ஒரு கிராமம் இருக்கின்றது. அந்தக் கிராமத்தில் இருக்கிற பெரிய மெத்தை வீட்டின் தென்பா அவருக்கும், வட பாதி எங்களுக்கும் சொந்தம். சம்பந்தி முதலியார் ஆரம்பித்த கலியாணத்திற்குப் பெண்டுகள் விகாதம் செய்வதால், உள்ளூரிலே கலியாணம் செய்யக் கூடாதென்றும், மேற்படி பூங்காவூர்க் கிராமத்தில் தம் முடைய பெண்சாதி வீட்டில் கலியாணம் செய்கிற தென் றும், நிச்சயித்து, அந்தக் கிராமத்துக்கே நேராய் வந்து சேரும்படி, திருநெல்வேலி வீரப்ப முதலியாருக்குச் சம்பந்தி முதலியார் கடிதம் அனுப்பினார். அந்தச் சமாச்சாரம் என் தகப்பனார் கேள்விப்பட்டு, அவரும், அந்தக் கிராமத்தில் எங் களுடைய வடபாதி வீட்டில் என்னுடைய கலியாணத்தை நிறைவேற்றுகிறதென்று சங்கற்பித்துக்கொண்டு, அந்தக் கிராமத்துக்கே பெண் வீட்டுக்காரர்கள் நேராய் வரும்படி, கோயமுத்தூருக்குக் கடிதம் அனுப்பினார். சம்பந்தி முதலி யார், கலியாணத்துக்கு வேண்டிய சில சாமான்கள் சேகரம் செய்து, அந்தக் கிராமத்துக்கு அனுப்பினார். என் தகப்ப னாரும், முக்கியமான தளபாட சாமான்களையும். அரிசி, பருப்பு, நெய் முதலிய புசிகரணங்களையும் அனுப்பினார். இருவரும் அந்தக் கிராமத்து வீட்டில், அவரவர்கள் பாதி யில் பந்தல் போடும்படி திட்டம் செய்து, அதுவும் முடிந்தது. இந்தக் கலியாண ஆடம்பரங்களையெல்லாம் பார்த்த உடனே, ஞானாம்பாளை இழந்து விட்டோமென்கிற துக்கம் அதிகரித்து, ஒரு தரித்திரன் நெடுங்காலம் தவம் செய்து பெற்றுக் கொண்ட திரவியத்தை மறுபடியும் இழந்து விட்டாற் போல, அளவற்ற துயரம் உடையவன் ஆனேன். இவ்வகையாக நான் மனம் கலங்கிக்கொண் டிருக்கும் போது, தெய்வாதீனமாக அந்தக் கலியாணத் துக்கு ஒரு இடையூறு சம்பவித்தது. அஃதென்னவெனில், கலியாணத்துக்கு எட்டுத் தினங்களுக்கு முந்தி, சம்பந்தி முதலியார் வீட்டில், அவர் தாயாதிகளில் ஒருவர் இறந்து போய், துக்கம் நேரிட்டு, அதினால் அந்தக் கலியாணத்தைத் தாமதப்படுத்தும்படி சம்பவித்ததால், மாப்பிள்ளை வீட்டார் இப்போது வர வேண்டாமென்றும், மறு மாசத்தில் வேறு முகூர்த்தம் நிச்சயித்துத் தெரிவிப்பதாகவும், சம் பந்தி முதலியார் திருநெல்வேலிக்கு உடனே கடிதம் அனுப்பி, கலியாணத்தை நிறுத்தி விட்டார். எங்களுக்கும் அந்த துக்கம் உண்டானதால், அந்த விவரத்தைக் கண்டு, என் தகப்பனாரும் கோயமுத்தூருக்குக் கடிதம் அனுப்பி, தற் காலம் கலியாணத்தை நிறுத்தி விட்டு நிச்சிந்தையாயிருந் தார். கலியாணத்துக்கு முஸ்திப்புச் செய்யப் பூங்காவூருக்குப் போயிருந்த எங்கள் காரியஸ்தர்களும், துக்கம் விசாரிப்பதற் காகச் சத்தியபுரிக்கு திரும்பி வந்து விட்டார்கள். 

கலியாணம் நிறுத்தலாய்ப் போன விஷயத்தைப் பற்றிக் கோயமுத்தூருக்கு எழுதிய கடிதம் போய்ச் சேர்ந் திருக்குமென்றும், பெண் வீட்டுக்காரர்கள் பயணத்தை நிறுத்தியிருப்பார்களென்றும், நாங்கள் நினைத்துக்கொண் டிருந்தோம். அப்படியிருக்க,எங்களுடைய முந்தின கடிதப் படி, பெண் வீட்டுக்காரர்களும், மாப்பிள்ளை வீட்டுக்காரர் களும் பூங்காவூருக்கு வந்து, அந்த முகூர்த்தத்தில் ஏதோ ஒரு கலியாணம் நடப்பிப்பதாக, எங்கே பார்த்தாலும் ஏகப் பிரஸ்தாபமாகப் பேசிக் கொண்டார்கள். நானாவது, ஞானாம்பாளாவது, அந்த ஊருக்குப் போகாமலிருக்க கலியாணம் எப்படி நடக்கக் கூடுமென்று நாங்கள் ஐயுறவுப் பட்டுக்கொண்டிருக்கும் போது, எனக்குக் குறிக்கப்பட்ட பெண்ணில் தகப்பனாராகிய சொக்கலிங்க முதலியார், முந்திக் குறிக்கப்பட்ட முகூர்த்தத் தினத்திற்கு மூன்று நாளைக்குப் பின்பு, எங்கள் வீட்டுக்குத் துக்க முகத்தோடு வந்தார். அவர் ஒருவருக்கும் அறிமுகமில்லாதவரான படி யால், அவரை “யார்?” என்று என் தகப்பனார் வினவ, அவர், “நான்தான் கோயமுத்தூர் சொக்கலிங்க முதலி; பெரிய வீடென்று பிக்ஷைக்குப் போனால் கரியை அரைத்து மூஞ்சியில் தடவுவது போல், என்னை மோசம் செய்ய லாமா?” என்று மிகவும் பரிதாபமாகச் சொன்னார். அதற்கு என் தகப்பனார்,”ஒரு துக்க நிமித்தம் கலியாணம் நின்று போன விஷயத்தைப் பற்றி உமக்குக் கடிதம் எழுதி யிருந்தேன்; அது வந்து சேர வில்லையா?” என்றார். அதற்கு அவர், “அந்தக் கடிதம் வந்து சேரவில்லை. உங்க ளுடைய முந்தினக் கடிதப் பிரகாரம், நானும் பெண் முத லானவர்களும் புறப்பட்டு, முகூர்த்த நேரத்திற்குச் சற்று நேரத்திற்கு முன், பூங்காவூருக்கு வந்து சேர்ந்தோம். அப் போது தான், திருநெல்வேலி வீரப்ப முதலியாரும், மற்றவர் களும் வந்து சேர்ந்தார்கள். அவர்களை எங்களுக்குத் தெரி யாது; எங்களை அவர்களும் அறிய மாட்டார்கள். அந்தக் கிராமத்திலிருக்கிற வீடு உங்களுக்கும் சம்பந்தி முதலியா ருக்கும் பொது வென்பதும், நீங்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு, அந்த வீட்டில் ஒரே முகூர்த்தத்தில், இரண்டு கலியாணம் செய்ய யோசித்திருப்பதும், எங்களுக் குத் தெரியாது. மாப்பிள்ளையும் பெண்ணும் வந்து சேர்ந்த வுடனே, அந்த மாப்பிள்ளைதான் என் பெண்ணுக்குக் குறிக் கப்பட்ட உங்கள் மகனென்று நான் எண்ணிக்கொண்டேன். என் பெண்ணைச் சம்பந்தி முதலியாருடைய பெண்ணென்று. மேற்படி வீரப்ப முதலியாரும் எண்ணிக்கொண்டார். எங்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்த, அவ்விடத்தில் வேறே மனுஷர்களுமில்லை. அந்த வீட்டில் கலியாணப் பந்தல் முதலிய சிறப்புகள் செய்யப்பட்டிருந்தது மன்றி, போஜன பதார்த்தங்களும் சித்தமாயிருந்த படியால், அந்தத் தினத்தில் முகூர்த்தம் நிச்சயந்தானென்று நினைக்கும் படியாய் யிருந்தது. உங்களுடைய அந்தஸ்துக்குத் தக்க அலங்காரம் இல்லாதிருந்த போதிலும், பெண்டுகளுக் குள்ளே கலகமென்று நீங்கள் எழுதியிருந்தமையால், அந்தக் கலகமே அலங்காரக் குறைவுக்குக் காரணமென்று நினைத்துக் கொண்டோம். முகூர்த்த நேரம் வந்து விட்டதால் இனித் தாமதிக்கக் கூடாதென்று, எங்களுடன் கூட வந்த புரோகித பிராமணர்கள் ஒரு பக்கத்தில் அலப்பினார்கள். உங்க ளுடைய சம்பந்தம் கிடைப்பது அரிதாகையால், ‘அவசரக் காரனுக்குப் புத்தி மட்டு’ என்பதுபோல், நாங்கள் உடனே கலியாணத்தை ஆரம்பித்து, அந்த மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் அந்த முகூர்த்தத்திலே விவாகம் நிறை வேற்றி, மாங்கல்லிய தாரணமும் ஆய்விட்டது. பிற்பாடு, நானும் அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் கலந்து யோக க்ஷேமங்களைப்பற்றி சம்பாஷிக்கத் தொடங்கினபோது. அந்த மாப்பிள்ளை இந்த ஊர்ச் சம்பந்தி முதலியார் பெண்ணுக்கு உத்தேசிக்கப்பட்ட மாப்பிள்ளையென்று எனக்கும், என் பெண் உங்களுடைய மகனுக்காகக் குறிக்கப் பட்ட பெண்ணென்று திருநெல்வேலி வீரப்ப முதலியாருக் கும் தெரிந்து, நாங்கள் பட்ட கிலேசம் கடவுளுக்குத்தான் தெரியும். கலியாண வீடு துக்க வீடாகி, நாங்கள் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழும்படியான ஸ்திதியில் வந்து விட்டோம். ஏனென்றால், ‘அஷ்ட தரித்திரம் ஆத்தாள் வீடு, அதிலும் தரித்திரம் மாமியார் வீடு’ என்பது போல நானும் அந்த வீரப்ப முதலியாரும் பரம ஏழைகள். உங்களுடைய சம்பந்தத்தைப் பெரிதாக எண்ணி நான் வந்தது போலவே, இந்த ஊர்ச் சம்பந்தி முதலியாருடைய சம்பந்தத்தை விரும்பியே, வீரப்ப முதலியாரும் ஆவலுடன் வந்தார். நாங்கள் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்துவிட்டது. இனி என்ன செய்வோம்!” என்று சொக்கலிங்க முதலியார் துக்க லிங்க முதலியாராய்ப் புலம்பி அழுதார். 

இந்த வர்த்தமானங்களைக் கேட்டவுடனே, மரண தண்டனை அடையும்படி தீர்மானிக்கப்பட்ட ஒருவனுக்கு, அந்தத் தண்டனை நிவர்த்தியானால் எவ்வளவு சந்தோஷம் உண்டாகுமோ, அவ்வளவு சந்தோஷத்தை அடைந்தேன். என் தந்தையாருக்குப் பெரிய ஆச்சரியமும் விசனமும் உண்டாயிற்று. என் தாயாருக்கு ஒரு பக்கத்தில் இரக்க மும், ஒரு பக்கத்தில் சந்தோஷமும் ஜனித்தன.உடனே, என் தாயார் சொக்கலிங்க முதலியாரைப் பார்த்து, காரியம் முடிந்த பிற்பாடு இனி என்ன செய்யலாம்; நீங்கள் விசனப்பட வேண்டாம். நீங்கள் எங்களை நம்பிக் கோயமுத்தூரிலிருந்து இவ்வளவு தூரம் வந்துவிட்ட படி யால் உங்களுக்கு நேரிட்ட வழிச் செலவு முதலியவைகளை ஒத்துக் கொள்ளுகிறோம்” என்று சொல்லி என் தகப்ப னாருடன் ஆலோசித்து ஆயிரம் வராகன் சொக்கலிங்க முதலியாருக்குக் கொடுத்தார்கள். உடனே அவர் திருப்தி யாகி விட்டார். அப்படியே வீரப்ப முதலியாரும் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போய்க் காரியங்களைச் சொல்லி முறையிட்டுக் கொண்டதினால் அவருக்கும் ஆயிரம் வராகன் கிடைத்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம். இவ்வகை யாக எனக்குக் குறித்த பெண்ணாகிய பூங்காவனத்துக்கும், ஞானாம்பாளுக்குக் குறித்த மாப்பிள்ளையாகிய சந்திர சேகர முதலியாருக்கும் முகூர்த்தம் நிறைவேறி நானும் ஞானாம்பாளும் எங்கள் பூர்வ ஸ்திதிக்குக் குறைவில்லாம விருந்தோம். என்னுடைய பிரமசாரித்துவமும் நீங்க வில்லை. ஞானாம்பாளுடைய கன்னிமையும் கழியவில்லை. எங்களுக்கு நெடுங்கால அநுபந்தம் உள்ள சம்பந்தி முதலியாருடைய சம்பந்தத்தை நீக்கி அந்நிய சம்பந்தம் செய்ய ஆரம்பித்தது, தெய்வத்துக்குச் சம்மதம் இல்லாதபடியால் அது தவறிப் போய் விட்டதாக என் தாயார் என் தகப்பனாருக்கு அடிக்கடி சொல்லி வந்தபடி யால், என் தகப்பனார், மறுபடியும் பக்கத்திலே பெண் விசாரிக்காமல் ஆலசியமா யிருந்து விட்டார். ஞானாம் பாளைக் கன்னிகா தானம் செய்யும்படி சம்பந்தி முதலியா ருக்குப் பல ஊர்களிலிருந்து கடிதங்கள் வந்தும், அவர் வீட்டுப் பெண்டுகளுடைய இடைவிடாத முயற்சியினால். அவர் அந்தக் கடிதங்களுக்கு யாதொரு மறுமொழியும் அனுப்பாமல் அசிரத்தையாய் இருந்துவிட்டதாகக் கேள்விப்பட்டோம். 

14-ஆம் அதிகாரம் 

ஞானாம்பாள் சிறையில் அகப்பட்டுத் தப்புதல் 

சிறை யெடுத்தவன் சீவனை இழந்தது 

கோடை நாட்களிலே, குடும்ப சகிதமாய்க் கிராமாந் தரம் போய்ச் சில நாள் வசிப்பது, எங்கள் வழக்கமா யிருந்தது. அந்த வழக்கப்படி, அந்த வருஷம், நாங்கள் எங்கும் போக வில்லை. சம்பந்தி முதலியார், எங்கள் ஊருக்கு வடபுறத்தில் இரு காத வழி தூரத்திலிருக்கிற அவருக்குச் சொந்தமான பணம்பள்ளிக் கிராமத்துக்குக் தடும்ப சகிதமாய்ப் புறப்பட்டு, அநேகம் பண்டிகள், குதிரைகள், பல்லக்குகளுடன் போனார். அங்கே சிலநாள்ளவு தங்கி யிருந்து, ஒரு நாள் விடியற் காலத்தில் அந்தக் ராமத்தை விட்டுப் புறப்பட்டு, அவர்கள் எல்லாரும் சத்திய புரியில் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்து சேர்ந்து சற்று நேரத்திற்குப் பின்பு, அவர்கள் வீட்டிலிருந்து ஜனங்கள் அங்கு மிங்கும் ஓடுவதும்,கூக்குரலு விட்டு வெளியே மாக இருந்தது. நான் என் வீட்டை புறப்பட்டு, என்ன சப்தமென்று விசாரித்தேன். பனம் பள்ளிக் கிராமத்துக்குப் போன எல்லோரும் திரும்பி வந்து விட்டதாகவும், ஞானாம்பாளும் பல்லக்கில் வருவ தாக எல்லோரும் எண்ணிக்கொண் டிருந்த தாகவும், ஊருக்கு வந்த பிற்பாடு, ஒரு பல்லக்கிலாவது ஞானாம் பாள் இல்லை யென்றும், அவள் காணாமற் போயிருக்கிற காரணம் தெரியாமையினால், அவளைத் தேடுவதற்காகப் பல இடங்களுக்கும் ஆட்கள் ஓடுவ தாகவும்,நான் கேள்வி யுற்று, அப்படியே திகைத்துத் திடுக்கிடச் சற்று நேரம் மதி மயங்கி யிருந்தேன். பிற்பாடு, என் தேகம் நிலை கொள்ளாமல், எழுந்து, நானும் என்னுடைய இஷ்டர் ஒருவரும், இரண்டு பெரிய குதிரைகளின் மேலே ஏறிக் கொண்டு, ஆயுதபாணிகளாய் வடக்கே நோக்கிப் புறப் பட்டோம். ஞானாம்பாளைத் தொடர்ந்து கொண்டு என் மனம் முன்னே ஓட, அந்த மனதைத் தொடர்ந்து கொண்டு ஓடுவது போல் அதி வேகமாகச் சென்று, பல இடங்களிலும் தேடி ஆராய்ந்து கொண்டு, பனம்பள்ளிக் கிராமத்துக்குப் போய் விசாரித்தோம். அங்கும் ஞானாம் பாள் இல்லையென்று தெரிந்து, உடனே புறப்பட்டு வடக்கு ரஸ்தா வழியே போனோம். அந்தக் கிராமத்துக்குத் காத வழி தூரத்தில், அஸ்தமிக்கிற சமயத்தில், ஒரு சிறிய சக டம் இரஸ்தாவில் கொஞ்ச தூரத்தில் எங்களுக்கு நேரே வந்தது. அந்த வண்டியை நாலு பேர் வளைததுக் கொண்டு, தெற்கே வருகிற வண்டியைப் பலவந்தமாய் வடக்கே திருப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் இரண்டு பேர் குதிரையின் மேலும், இரண்டு பேர் பாதசாரி களாயும், இருந்தார்கள். அவர்கள் வண்டியைத் திருப் பும் போது, அந்த வண்டியி லிருந்து, பெண்டுகளுடைய கூக்குரல் ஒலி கிளம்பிற்று. அந்த துஷ்டர்கள், நாங்கள் வருவதைப் பார்த்த வுடனே, குதிரையின் மேலிருந்த. இருவர்களும் கத்திகளை உருவிக் கொண்டு, எங்களை வெட்டுவதற்காக ஓடி வந்தார்கள். அவர்கள் எங்கள் சமீபத்தில் வருவதற்கு முன், குண்டுகள் போட்டுக் கெட் டிக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை அவர்கள் மேலே பிரயோகித்தோம். குதிரையின் மேலிருந்த இருவர் தேகங்களிலும் குண்டுகள் பட்டுக் கீழே விழுந்து விட்டார்கள். பாதசாரிகளான இருவரும், உடனே ஓட்டம் பிடித்தார்கள். அவர்களைப் போய் வளைக்கும்படி என்னுடைய நேசருக்குச் சொல்லிய பின்பு, வண்டியி லிருக்கிற ஸ்திரீ கள் இன்னாரென்று அறியும் பொருட்டு, நான் குதிரையை விட்டுக் கீழே குதித்து, வண்டிக்குப் பின் புறத்திலே போனேன். அந்த வண்டியி லிருந்த இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி, என்னைக் கண்ட வுடனே பெரும் சப்தமாய்க் கூவிக் கொண்டு, வண்டியை விட்டு என் முன்பாகக் கீழே விழுந்தாள். அந்தச் சத்தம் ஞானாம்பாளுடைய குரலா யிருந்ததால், அவளை என் கையாலே தூக்கி நிறுத்தி, முகத்தை உற்றுப் பார்த்தேன். அவள் தேகத்தில் ஒரு ஆபரணமு மில்லாமல். ஆண்டிச்சிகள் போலக் காவி வஸ் திரம் தரித்துக் கொண்டு, முகத்தில் எதையோ பூசிக் கொண்டு, அழுக்குப் படிந்த தங்கப் பிரதிமைபோல் உருமாறி யிருந்தாள். அவளைப் பார்த்து, ”ஞானாம்பாள், ஏனிப்படியிருக்கிறாய்?” என்று கேட்டேன் அவள் தேம்பித் தேம்பி அழுது கொண்டு, “என்னைச் சீக்கிரத்தில் பனம்பள்ளிக் கிராமத்துக்குக் கொண்டு போய்ச் சேருங்கள். சகல காரியங்களையும் பிற்பாடு தெரிவிக்கிறேன்,” என்று நடுநடுங்கிக்கொண்டு சொன்னாள். அவளை உடனே தூக்கி, வண்டியில் உட்கார வைத்து, வண்டியைச் சீக்கிரமாக விடும்படி வண்டிக்காரனுக்கு உத்தரவு கொடுத்து, நான் குதிரைமே லேறிக் கொண்டு, நானும் என்னுடைய சிநேகிதரும் வண்டிக்கு முன்னும் பின்னுமாகப் போனோம். குண்டு பட்டு மாண்டு போனவர்க ளுடன், பாதசாரியாய் வந்த இருவர்களையும் பின்கட்டு கூடக் கொண்டு முறையாகக் கட்டி, அவர்களையும் போனோம். அன்று இராத்திரி எட்டு மணிக்குச் சம்பந்தி முதலியா ருடைய பனம்பள்ளிக் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அவ்விடத்திலே சம்பந்தி முதலியாரும் பின்னும் அநேகரும் ஏகமாய்க் கூட்டம் கூடி, மூலைக்கு மூலை ஆள் அனுப்பியும் ஒரு செய்தியும் தெரியா மல், அழுது பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள். ஞானாம்பாளைக் கண்ட மாத்திரத்தில், அவளைக் கட்டிக் கொண்டு, சம்பந்தி முதலியாரும், அவர் பத்தினி முத லானவர்களும், பட்ட துயரமும், அழுத அழுகையும், இவ் வள வென்று சொல்லி முடியாது. அவள் உரு மாற்ற மாய், அப்போ திருந்த கோலத்தைப் பார்த்தவர்கள் யார் தான் மனம் இளகாம லிருப்பார்கள்? அவள் அன்றையத் தின முழுதும் அன்ன பானாதிகள் இல்லாமற் பசிக் களையா யிருப்பதாகத் தெரிந்து, உடனே அவளையும்,அவ ளுடன் கூட வந்த ஆண்டிச்சி யம்மாளையும் ஸ்நானம் செய்யும்படி சொல்லி, அவர்கள் போஜனம் செய்த பிற் பாடு, அன்றையத் தினம் நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லும்படி, நாங்கள் கேட்க, ஞானாம்பாள் சொல்லத் தொடங்கினாள்: 

“இன்றையத் தினம், விடியற்காலம் நாலு மணிக்கு, இந்தக் கிராமத்திலிருந்து எல்லாரும் நம்முடைய ஊருக் குப் பிரயாண மாகும்போது, நானும் எழுந்து, வெளியே வந்து, எந்தப் பல்லக்கிலே ஏறிக் கொள்ளலா மென்று பார்த்து வருகையில், சில சிவிகையார் ஒரு பல்லக்கை எனக்குக் காட்டி, “இதில் ஏறிக் கொள்ளுங்கள், அம்மா” என்றார்கள். நான் உடனே அந்தப் பல்லக்கில் ஏறிக் கொண்டு, அப்போது அதிக இருட்டா யிருந்ததனால், கதவை மூடிக்கொண்டு, பல்லக்கிலே படுத்துக் கொண் டேன். பல்லக்குத் தூக்குகிறவர்கள் வழக்கப்படி சப்த மிட்டுக் கொண்டு, என் பல்லக்கையும், மற்றப் பல்லக்கு களையும் தூக்கிக் கொண்டு, ஓடினார்கள். நான் உடனே கண்ணை மூடிக் கொண்டு, நித்திரை போய் விட்டேன். பிற்பாடு சூரியோதய நேரத்தில் நான் விழித்து பல்லக் கின் கதவைத் திறந்து பார்த்த போது தெற்கு முகமாய்ப் போக வேண்டிய பல்லக்கு, வடக்கு முகமாய் ஓடிக் கொண்டிருப்ப தாகத் தெரிந்தது. மற்றப் பல்லக்கு. களும், பண்டி, குதிரை, முதலிய வாகனங்களும் கூட வரு கின்றனவா வென்று, அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் எட்டி எட்டிப் பார்த்தேன். என் பல்லக்கைத் தவிர, வேறே ஒரு வாகனத்தை யாவது, சொந்த மனுஷர்களை யாவது நான் பாராத படியால், எனக்குச் சந்தேக முண் டாகி, சிவிகையாரைக் கூப்பிட்டு, பல்லக்கு வடக்கே போவதற்குக் காரணம் என்னவென்றும், மற்ற வாகனங்க ளெல்லாம் எங்கே யென்றும், கேட்டேன். அவர்கள் மாறுத்தரம் சொல்லாமல், பல்லக்கைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். வழியில் யாராவது வந்தால் அவர்களை விசாரிக்கலா மென்று, இரு பக்கமும் பார்த்துக் கொண்டு போனேன். வெகு தூரம் வரையிலும் ஒருவரும் வர வில்லை. இன்னது செய்கிற தென்று தெரியாமல், நான் திகைத்துப் போயிருக்கும் போது, சிவிகையார், இரஸ்தா வுக்கு மேற்கே கொஞ்ச தூரத்தில் ஒரு கள்ளுக் கடையைக் கண்டு, கள்ளுக் குடிப்பதற்காகப் பல்லக்கை இரஸ்தாவில் நிறுத்தி விட்டு, கள்ளுக் கடைக்குப் போய் விட்டார்கள். தப்புகிறதற்குச் சமயம் இதுதானென்றும், இது தப்பினால் வேறு சமயம் வாய்க்கா தென்றும் எண்ணி, உடனே நான் கீழ்ப் புறத்துக் கதவைத் திறந்து கொண்டு, கீழே குதித்து, அந்தக் கதவை மூடிவிட்டு, பல்லக்கின் மறைவிலே போய், இரஸ்தாவுக்குக் கீழ்ப்புற மிருகிற காட்டுக்குள் நுழைந்து விட்டேன். அது அடர்ந்த காடானதால், அதற்குள்ளே இருக்கிறவர்களை ஒருவரும் கண்டு பிடிக்க முடியாது. என்னுடைய காலில் இருந்த பாதசரம், தண்டை முதலியவைகள் சப்திக்காதபடி அவைகளைக் கழற்றி மடியில் வைத்துக் கொண்டு, முள்ளி லும் கல்லிலும் விழுந்து ஓட ஆரம்பித்தேன். அந்தக் காட்டில் மனுஷருடைய கால் அடியே இல்லாத படி யால், நான் குறுக்கே விழுந்து எனக்குச் சக்தி உள்ள மட்டும் ஓடினேன். மரக் கொம்புகள் என் மயிரைப் பிடித்திழுக்க, செடிகளெல்லாம் சேலையைக் கிழிக்க, முன்னேயிருக்கிற மரம் முட்டித் தள்ள, பின்னேயிருக்கிற மரம் பிடித்துத் தள்ள, பக்கத்து மரங்கள் பாய்ந்து தாக்க, இவ்வகையாக நான் வெகு தூரம் ஓடின பிற்பாடு கொஞ்ச தூரத்தில் ஒரு சிறிய மண்டபத்தைக் கண்டு, அதற்கு நேரே ஓடினேன். அந்த மண்டபத்தில் இந்த ஆண்டிச்சி அம்மாளைத் தவிர வேறொருவருமில்லை. இந்த அம்மாள் என்னைக் கண்ட உடனே, “நீ ஆர் அம்மா! உன்னைப் பார்த்தால் பரதேவதை போலிருக்கிறதே! நான் பூசை செய்து வந்த தெய்வம் பெண் வடிவங் கொண்டு பிரத்தியக்ஷமாய் வந்தது போல இருக்கிறதே!” என்று என்னை ஸ்தோத்திரம் செய்தார்கள். நான் அந்த அம்மாளுக்கு நமஸ்காரம் செய்து, “நான் தெய்வம் அல்ல மனுஷி தான்” என்று நடத்த காரியங்களெல்லாம் தெரிவித்து, என்னை இரக்ஷிக்க வேண்டு மென்று பிரார்த்தித்தேன். அவர்கள் மன மிரங்கி, “என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். “எப்படியாவது என்னைப் பனம்பள்ளிக் கிராமத்துக்குக் கொண்டு போய் விடவேண்டும்” என்று விண்ணப்பம் செய்தேன். அந்தத் துஷ்டர் கள் துரத்திக் கொண்டு வந்தால், என்னைக் கண்டு பிடிக் காதபடி, ஆபரணங்களை யெல்லாம் கழற்றி, ஒரு துணி யில் முடிந்து கொண்டு, ஒரு காவி வஸ்திரத்தைக் எனக்குத் தரிப்பித்து, என்னை உரு மாற்றி, அழைத்துக்கொண்டு புறப்பட்டார்கள். நாங்கள் தெற்கு முகமாய்ப் போகிற ஓரடிப் பாதை வழியாய், வெகு தூரம் நடந்த பிற்பாடு, இரஸ்தாவில் வந்து சேர்ந்தோம். அந்த இரஸ்தாவில் நடக்க எனக்கு மனமே இல்லை. ஆயினும், வேறே மார்க்கம் இல்லாத படியாலும், எனக்குக் கால் நடக்கக் கூடாமல் வீக்கமா யிருந்த படியாலும், வழியில் ஒரு பாய் வண்டியை வாடகைக்கு அமர்த்தி, அதன் மேலே நாங்கள் இருவரும் ஏறிக்கொண்டு, அதிக நடுக்கத்துடன் செல் லும் பொழுது, அஸ்தமிக்கிற சமயத்தில், வடக்கே இருந்து இரண்டு குதிரைக்காரர்களும், இரண்டு காலாட்களும் ஓடி வந்தார்கள். அவர்களைப் பார்த்த உடனே, புலியைக் கண்ட யசுப் போல், நாங்கள் பயந்து பாதிப் பிராணனாய்ப் போய் விட்டோம். அவர்கள் பண்டிக்குப் பின்னே வந்து, என்னை உற்றுப் பார்த்து, எப்படியோ நான்தானென்று கண்டு பிடித்துக் கொண்டு, பண்டியை வடக்கே திருப்பச் சொல்லி, பண்டிக்காரனை அடித்தார்கள். அந்த சமயத்தில், அத்தா னும், அவருடைய சிநேகிதரும், குதிரைமேல் ஏறிக்கொண்டு தெற்கே இருந்து ஓடி வந்தார்கள். அவர்களை வெட்டுவதற் காக வடக்கே இருந்து வந்த இரண்டு குதிரைக்காரர்களும் கத்தியை உருவிக் கொண்டு நெருங்கினார்கள். உடளே அவர்கள் மேலே அத்தான் பிரயோகித்த குண்டுகள் பட்டு, அவர்கள் கீழே விழுந்து விட்டார்கள். பிற்பாடு நடந்த சங்கதிகளெல்லாம் அத்தானைக் கேட்டால் தெரியும். அந்தச் சமயத்தில் அத்தான் வந்து உதவாவிட்டால், என்னை மறுபடியும் நீங்கள் காணமாட்டீர்கள்” என்று ஞானாம்பாள் சொல்லி முடித்தாள். 

15-ஆம் அதிகாரம் 

ஞானாம்பாளைச் சிறை யெடுத்தவன் வரலாறு 

ஞானாம்பாள் என்னைப் பற்றிப் பிரஸ்தாபிக்கிற வரை யில், என்னை ஒருவரும் கவனிப்பார் இல்லை. அவள் பிரஸ்தாபித்த மாத்திரத்தில், எல்லாருடைய கண்களாகிய வண்டுகள் என்னுடைய முகத் தாமரை மேலே மொய்க்க ஆரம்பித்தன. சப்பந்தி முதலியார் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டு செய்த ஸ்தோத்திரங்களுக்கு அளவு சங்கியையில்லை, அவர் சந்தோஷத்தினால் என்னை எவ்வளவு இறுகக் கட்டிப் பிடித்தாரென்றால், நான் மூச்சு விட இடம் இல்லாமல் திக்குமுக்காட ஆரம்பித்தேன். நான் அவர் பிடித்த பிடியைத் திமிறிக் கொண்டு, அவரைப் பார்த்து, “ஞானாம்பாளைக் கொண்டு போனவர்கள் இன்னா ரென்று தெரியவில்லை! வடக்கே இருந்து வந்த இரஸ்தாவில் ஞானாம்பாளை வளைத்துக் கொண்ட நாலு பேர்களில் குண்டு பட்டு விழுந்து விட்டவர்கள் போக, மற்ற இரண்டு பேர்களையும் பிடித்துக் கட்டிக்கொண்டு வந்திருக்கிறோம். அவர்களை விசாரித்தால் உண்மை தெரியலாம்’ என் சொன்னேன். எல்லாரும் நான் சொன்னது சரிதான் என்று ஒப்புக்கொண்டு, அந்த இருவரையும் விசாரிக்கத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவன் எங்களைப் பார்த்துச் சொல்லுகிறான்: ‘நாங்களிருவரும் பூங்காவூர் தாலுக்கா தாசில்தாருடைய சேவர்கள். அவர் இந்த அம்மணியினுடைய அழகையும் குணாதிசயங்களையும் கேள்விப்பட்டு, தான் மணம் செய்து கொள்ள வேண்டு மென்று விருப்பமானார். அதைக் குறித்துத் தங்களுக்குப் பல கடிதங்கள் அனுப்பியும், தங்கள் அனுகூலமான மறு மொழி அனுப்பாமையால், எப்படியாவது இந்தப் பெண்ணரசியைக் கொண்டு போய் விவாகம் செய்கிற தென்று நிச்சயித்து, அதற்குத் தகுந்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தார். நீங்கள் இந்த கிராமத்துக்கு வந்திருந்து, மறுபடியும் உங்கள் ஊருக்கு நடுச் சாமத்திலே போகிறீர்கள் என்று இவர் கேள்வியுற்று, எங்களையும் ஒரு பல்லக்கையும் அதி ரகசியமாய் அனுப்பி, எவ்விதத்திலும் இந்த மனோன்மணியைக் கொண்டு வரும்படி உத்தரவு கொடுத்தார். அந்தப்படி, நாங்கள் நேற்றைத் தினம் பாதி சாமத்தில் வந்து சேர்ந்து, இந்த வீட்டிற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த அநேகம் பல்லக்குகளின் மத்தியில், நாங்கள் கொண்டு வந்த பல்லக்கையும் வைத்து விட்டு, மற்றவர்களைப் போல் நாங்களும் படுத்துத் தூங்கினோம். விடிந்து போனால் எங்களுடைய மோசம் வெளியாகு மென்று நினைத்து, இருட்டிலே பயணம் புறப்படும்படி நாங்களே மற்றவர்களை யெழுப்பி விட்டோம். உங்கள் வீட்டு அம்மாமார்கள் எல்லாரும் தனித் தனியே ஒவ்வொரு பல்லக்கின் மேலே ஏறிக் கொண்டார்கள். இந்த அம்மணி வீட்டுக் குள்ளிருந்து, வெளியே வந்தவுடனே, எங்களுடைய பல்லக்கின கதவை திறந்து, அதில் ஏறிக் கொள்ளும்படி சொனனோம். இந்த அம்மணி கபடம் இல்லாமல் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டு, தூங்கி விட்டார்கள். அந்தப் பல்லகைச் சிவிகையார் தூக்கிக்கொண்டு ஓடும் போது, நாங்கள் இருவரும் பின் தொடர்ந்து போனோம். நாங்கள் மற்றப் பல்லக்குகளுடன் எங்களுடைய பல்லக்கையும் கொண்டு போவது போல் மாரீசம் பண்ணி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் வாங்கினோம். மற்ற வாக னங்களும் ஆட்களும் கண் மறைகிற வரையில், மெல்ல மெல்லக் கொண்டுபோய், இருட்டில் ஒருவருக்கும் தெரியாமல் எங்களுடைய பல்லக்கைத திருப்பி, அதிவேகமாய்க் கொண்டு போனோம். 

நாங்கள் இருவரும் வெகு தூரம் பல்லக்குடன் சென்று, பிற்பாடு தாசில்தாருக்குச் சந்தோஷ சமாசாரம் சொல்லுவதற்காக நாங்கள் முந்திப் போய், பல்லக்கில் அம்மா வருகிற சமாசாரத்தை அவருக்குத் தெரிவித்தோம். அவர் ஒரு வீட்டிலே தனிமையாய் இருந்து கொண்டு, சந்திரோதயத்துக்காகக் காத்திருக்கும் சாதக பக்ஷி போல், அக மகிழ்ச்சியுடன் வழியை வழியைப் பார்த்துக் கொண்டிருந்தார். மத்தியானம் பதினைந்து நாழிகைக்குப் பல்லக்கு வந்து சேர்ந்தது. உடனே சிவிகையார். தாசில் தாரிடத்தில் வந்து, “எசமானகள் விரும்பின மாதரசியைப் பல்லக்குடன் கொண்டு வந்து விட்டோம்; நாங்கள் பட்ட பிரயாசைக்குத் தகுந்த சம்மானம் செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள்.உடனே தாசில்தார் எழுந்து ஓடி, அதிக ஆவலுடன் பல்லக்கைத் திறந்து பார்க்க, உள்ளே ஒருவருமில்லாமல் சுத்த சூனியமா யிருந்தது. அவரும் நாங்களும் பல்லக்கின் மூலை முடுக்குகளெல்லாம் தேடிப் பார்த்தோம். இந்த அம்மணியை எங்கும் காணோம். பஞ்சரத்தில் இருந்த கிளி பறந்து போன பிற்பாடு, பஞ்சரம் வெறுமையாயிருப்பதுபோல், பல்லக்கும் வெறுமையா யிருந்தது. தாசில்தாருடைய அப்பனும் பாட்டனும் தேடி வைத்த பொக்கிஷத்தை நாங்கள் அபகரித்துக் கொண்டது போல, எங்கள் மேலே ரௌத்ராகாரமாய்க் கோபிக்க ஆரம்பித்தார். அவர் அடிப்பார் என்று பயந்து கொண்டு நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்த் தூர விலகினோம். எங்களை அடிக்க அவர் கையில் ஒரு ஆயுதமும் இல்லாமல் இருந்ததால், நாங்கள் தெருவிலே கழற்றி வைத்திருந்த எங்களுடைய செருப்பை, அவர் கையிலே தூக்கிக் கொண்டு துரத்தினார். நாங்கள் அகப்படாமல் சிட்டாய்ப் பறந்தோம். நாங்கள் ஓட, அவர் ஓட இவ்வகையாக, வெகு தூரம் துரத்தி வந்த பிற்பாடு, அவர் கையிலிருந்த செருப்பை எங்கள் மேலே எறிந்தார். அந்தச் செருப்பு, ஒரு மரத்தின் மேலே பட்டு, மறுபடியும் திரும்பித் தாசில்தாருடைய முகத்திலே மோதிற்று. ஒளஷதப் பிரயோகத்தினால் விஷம் இறங்குவது போல், செருப்படி பட்ட பிற்பாடு, தாசில்தாருக்குக் கோபம் தணிந்து, எங்களை நயமாய்க் கூப்பிட்டுக் காரியங்களை விசாரிக்க ஆரம்பித்தார். போகிகள், “நடு வழியில் ஒரு இடத்தில் கள்ளு குடிக்கிறதற்காகப் பல்லக்கை நிறுத்தினோம்” என்று ஒப்புக்கொண்டபடியால், அந்த இடத்தில் இந்த அம்மணி தப்பிப் போயிருக்கலாம் என்று உத்தேசித்து, உடனே தாசில்தாரும் அவருடைய நேசனும் இரண்டு குதிரைகளின் மேல் ஏறிக்கொண்டு, எங்கள் இருவரையும் கூட அழைத்துக் கொண்டு, புறப்பட்டார்கள். 

நாங்கள் காடு மேடுகளெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு, சூரியாஸ்தமன சமயத்தில், இந்த அம்மணி ஏறிக் கொண்டு வந்த வண்டியைக் கண்டு மறித்தோம். அப்போது நடந்த யுத்தத்தில், தாசில்தாரும் அவருடைய நேசனும் குண்டுகள் பட்டுக் கீழே விழுந்துவிட்டார்கள். இந்த மனோன்மணி, அப்போது மாறு வேஷம் தரித்திருந்த போதிலும், மேகத்துக்குள் மறைந்திருக்கிற சந்திர சூரியர்களை அவைகளின் பிரபை காட்டி விடுவது போல், இந்த உத்தமியை அவளுடைய முகக் காந்தி காட்டி விட்டது. மற்றச் சங்கதிகளெல்லாம், அப்போது கூட இருந்த உங்களுடைய மனுஷருக்குத் தெரியுமானதால், நான்சொல்ல வேண்டுவதில்லை’ என்றான். இதைக் கேட்ட உடனே, சம்பந்தி முதலியார் மறுபடியும் என்னைத் தழுவிக் கொண்டு, சொல்லுகிறார்:- “நீ செய்த உபகாரத்தை நான் ஒருக்காலும் மறப்பேனா? என் புத்திரிகை காணாமற்போன உடனே, உன் மேலும் சந்தேகம் நினைத்தேன். பிற்பாடு, பல காரணங்களால், அந்தச் சந்தேகம் நிவர்த்தியாகிவிட்டது. என் மகளுக்கும் எங்களுக்கும் பிராண பிக்ஷை கொடுத்துக் காப்பாற்றினாய். உனக்குத் திரிலோகங்களையும் கொடுத்தாலும் தகும். ஆகிலும், நீ அங்கீகரிக்கும்படியான ஒரு சம்மானத்தை உனக்குச் செய்ய யோசித்திருக்கிறேன்” என்றார். அவரும், மற்றவர்களும், எனக்குச் செய்த ஸ்தோத்திரங்களையெல்லாம், ஞானாம்பாளுடைய ஒரு மந்தஹாசத்துக்குச் சமானமாக நான் நினைக்க வில்லை. 

– தொடரும்…

– மாயூரம் மாஜி டிஸ்டிரிக்ட் முன்சீப் ச.வேதநாயகம் பிள்ளையவர்கள் (1826-1889) இயற்றியது, முதற் பதிப்பு: 1879.

– பிரதாப முதலியார் சரித்திரம், நூற்றாண்டு விழா புதிய பதிப்பு: அக்டோபர் 1979, வே.ஞா.ச.இருதயநாதன் (வேதநாயகம் பிள்ளை மகன் பேரர்), ஆவடி, சென்னை.

Print Friendly, PDF & Email

3 thoughts on “பிரதாப முதலியார் சரித்திரம்

  1. 🙏🏼Thx

    உங்களது வலைத்தளம், சிறுகதைகளி ன் பொக்கிஷம்.
    Dr. Umesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *