பிரதாப முதலியார் சரித்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 1,282 
 
 

(1879ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். அதுவரை செய்யுள் வடிவ புனைகதை இலக்கியங்களே இருந்துகொண்டிருந்த தமிழிற்கு உரைநடை வடிவிலான புனைகதை இலக்கிய வகை இந்நூல் வழியாக அறிமுகமானது. அவ்வகையில் இது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

அதிகாரம் 1-5 | அதிகாரம் 6-10 | அதிகாரம் 11-15

6-ஆம் அதிகாரம் 

அநாதப் பிள்ளைக்கு அன்னையும் பிதாவும் கிடைத்தல் 

தேவராஜப் பிள்ளை சரித்திரம் – ஒரு கெட்ட சகோதரன் 

இவ்வாறு சிலநாள் கழிந்தபின்பு, ஒருநாள் நானும் ஞானாம்பாளும் கனகசபையும் தெருத் திண்ணையில் வாசித் துக்கொண்டிருந்தோம். அப்போது அனேக ஆனைகளும் குதிரைகளும், பண்டிகளும், கொடிகளும், குடைகளும், காலாட்களும், நானாவித வாத்திய முழக்கத்துடன், தெருவில் வந்து, எங்கள் வீட்டுக்கு எதிரே நின்றன. அவைகளின் மத்தியில், நாலு குதிரைகள் கட்டின சொர்ணமயமான ரதத்திலிருந்து, ராஜவடிவான ஒரு புருஷனும், ஸ்திரீயும் இறங்கினார்கள். தடாகத்தில் விழுந்தபோது கனகசபையைக் கரையேற்றிவிட்ட சந்நியாசியாரும், அவர்களுக்கு முன்னே வந்து, கனகசபையைக் கையாலே தொட்டுக் காட்டினார். உடனே மேற்படி ரதத்திலிருந்து இறங்கின அந்த மகா புருஷன், கனகசபையைத் தழுவி, மார்போடு அணைத்துக்கொண்டு, “என் மகனே! என் கண்மணியே!! என் குல திலகமே!!! இந்நாள் வரைக்கும் உன்னைப் பார்க்கக் கொடுத்து வைக்காமற் போனேனே! என்ன பாவமோ உன்னைப் பிரிந்திருந்தேன்! இப்போதாவது உன்னைக் கண்ணாலே கண்டேனே! இனிமேல் என்னைப்போலே பாக்கியசாலிகள் உண்டா?” என்று சொல்லி, தேக பரவசமாய், ஆநந்தக் கண்ணீர் சொரிந்தார்; அவருடன் வந்த ஸ்திரீயும் கனகசபையைக் கட்டித் தழுவிக் கொண்டு, “மகனே! மகனே!!” என்று பிரலாபித்தாள். பிற்பாடு அந்த மகா புருஷன், ஞானாம்பாளை நோக்கி “ஓ! பாக்கியவதியே! ஸ்திரீ ரத்னமே!! குணபூசஷணியே!!! நீயே தர்மாவதாரம்! உனக்குச் சமானமான குணவதிகள் இந்த உலகத்தில் இருப்பார்களா? தடாகத்தில் விழுந்த என் புத்திரனை நீ அல்லவோ ரக்ஷித்தாய்? உன்னால் அல்லவோ அவனைக் காணும்படியான பாக்கியம் பெற்றேன்?” என்று சொல்லித் துதித்தார். 

இப்படியாக நிகழ்ந்த அதிசயங்களைக் கேள்விப்பட்டு, எங்கள் தாய் தந்தைமார்கள். சுற்றத்தார், யாவரும் வந்து சூழ்ந்துகொண்டு, அவருக்கும், அவருடைய பத்தினிக்கும் தகுந்த ஆசனங்கள் கொடுத்து, வீற்றிருக்கச் செய்தார்கள். அவர்கள் இன்னாரென்றும், அவர்களிடத்தில் இன்னது பேசுகிறதென்றும் தெரியாமல், பிரமித்துப்போய், உட் கார்ந்திருந்தோம். அவர் எங்களை நோக்கி “ஓ புண்ணிய வான்களே! புண்ணியவதிகளே! நீங்கள் இந்நாள் மட்டும் என் மகனுக்குச் செய்துவந்த உபகாரங்களுக்கு, நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? நான் இன்னானென்றும், இந்தப் பிள்ளையை நான் பிரிந்திருந்த காரணத்தையும், நீங்கள் அறிய விரும்புவீர்களானதால் அதைப்பற்றி உங்களுக்குத் தெரிவிக்கிறேன்; தயவுசெய்து கேளுங்கள்” என்று சொல்லத் தொடங்கினார்: “அதிக செல்வமும் சிறப்பும் பொருந்திய ஆதியூர் பாளையப் பட்டுக்கு நான் அதிபதி. நாங்கள், பூர்வீக அரசர்களுக்கு முடியெடுத்து வைக்கிற வேளாளர்களானதால், எங்களுக்கு அனேக கிராமங்களும், பூமிகளும் தானமாய்க் கிடைத்து சர்வ சுதந்தரமாக அநுபவித்து வருகிறோம். என்னுடைய தகப்பனார் ஆதிமூலம் பிள்ளைக்கு நானும் என் தம்பியாகிய தெய்வநாயகம் பிள்ளையும் புத்திரர்கள்; என் பேர் தேவராஜப் பிள்ளை. எங்கள் குடும்பத்தில் ஜேஷ்ட புத்திரர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும் பட்டம் ஆகிறதே தவிர, கனிஷ்டர்களுக்குப் பட்டம் ஆகிறதில்லை, ஆனால், ஜேஷ்டர்களுக்குச் சந்ததி இல்லாவிட்டால் கனிஷ்டர்களுக்குப் பாத்தியம் உண்டாகும்; நாள் மூத்தவன். ஆனதால், எனக்குப் பட்டாபிஷேகம் ஆகி, என் தம்பி என்னுடைய சம்ரக்ஷிணையிலிருந்து வந்தான். இதற்குப் பன்னிரண்டு வருஷத்துக்குமுன், இந்தக் குழந்தையை என் பத்தினி பிரசவித்தாள்; இவன் ஆறு மாசத்துக் குழந்தையாயிருக்கும்போது, எனக்குக் கடூரமான ஒரு வியாதி கண்டு, எங்கள் குடும்ப வைத்தியர்கள் பல ஒளஷதம் கொடுத்தும், சௌக்கியப்படவில்லை; இங்கிலீஷ் டாக்டர்கள் மருந்து கொடுத்துக் கொஞ்சம் சௌக்கியமான உடனே, நான் தேசயாத்திரை செய்தால், எனக்கு முழுதும் சௌக்கியமாகு மென்று வற்புறுத்திச் சொன்னார்கள்; இந்தக் குழந்தை, அதிபால்லியமா யிருந்ததால், அதை நாங்கள் கூடக் கொண்டுபோகாமல் என் தம்பி வசத்தில் ஒப்புவித்து, பாளையத்தைச் சேர்ந்த காரியங்களையும் அவனே பார்க்கும்படி திட்டம் செய்து,  நானும் என் பெண்சாதியும், பரிவாரங்களும் தேசயாத்திரை செய்யப் புறப்பட்டோம். பங்காளம், பம்பாய் முதலான இடங்களெல்லாம் சுற்றிக்கொண்டு, நாங்கள் திரும்பிவர ஆறு மாசம் சென்றது; நாங்கள் பங்களாத்தில் இருக்கும்போது, என் தம்பியிடத்திலிருந்து வந்த கடிதத்தில், எங்கள் பிள்ளை சுழிமாந்தம் கண்டு இறந்து போனதாக எழுதியிருந்த படியால், நானும் என் பத்தினியும் பட்ட துயரம் இவ்வளவென்று சொல்லி முடியாது. என் பாரியாள் மட்டும், பிள்ளை விஷயத்தில் ஏதாவது மோசம் நடந்திருக்குமென்று சந்தேகித்தாள். எனக்கு என் தம்பி யிடத்தில் இருந்த விசுவாசத்தினால், அவள் சந்தேகப் பட்டது சரியல்ல வென்று கண்டித்தேன்; நாங்கள் ஊருக்கு வந்த பிறகு, பிள்ளை இறந்தது வாஸ்தவமென்று சகலரும் பிரஸ்தாபித்து வந்தபடியால், என் மனையாளுடைய சந்தேகமும் நிவர்த்தியாய்விட்டது. 

பிற்பாடு சீமா மூல காரியங்களை நானே வகித்துப் பார்த்துக்கொண்டு வந்தேன். என் தம்பி சிலநாள் வியாதி யாயிருந்து, ஒரு மாசத்துக்கு முன் தேகவியோக மானான். அவன் இறந்த விசனத்தில், அவன் பிரேதத்தின்மேல் விழுந்து புலம்பி அழுதேன். அப்போது அவன் இடுப்பி லிருந்து ஒரு கடிதம் வெளிப்பட்டது; அது என்பேரால் மேல் விவாசம் எழுதப்பட்டு, முத்திரிக்கப்பட்டிருந்தபடியால், நான் தனிமையாக ஒரு அறைக்குள்ளே போய், அதை வாசிக்கத் தொடங்கினேன்; அது வருமாறு: 

”ஐயோ! அண்ணா! நான் உங்களுக்குப் பரமசத்துருவே தவிர தம்பியல்ல; தாங்கள் பங்களாத்திலிருந்த போது தங்கள் பிள்ளை வியாதியினால் இறந்து போனதாக நான் தங்களுக்கு எழுதினது, சுத்த அபத்தம்: தங்களுக்குப் பிறகு எனக்குப் பட்டம் நிலைக்க வேண்டியதற்காக, தாங்கள் ஊரில் இல்லாத காலத்தில், தங்களுடைய பிள்ளையை எப்படியாவது தொலைத்துவிட வேணுமென்று என் பிரிய நேசனாகிய முத்தவீரனுக்குச் சொன்னேன்; அவன் அப்படிச் செய்யக்கூடாதென்று, எனக்குப் பல வகையில் புத்தி போதித்தான்; நான் மறுபடியும் பிடிவாதம் செய்ததனால் அவன் பிள்ளையை வாங்கிக்கொண்டு,ன் மனதுபடி செய் கிறேன் என்று சொல்லிப் போய்விட்டான்; அந்தச் சமயத் தில் அந்தப் பிள்ளைக்கு பால் கொடுத்தவளுடைய பிள்ளை சுழி மாந்தத்தினால் இறந்து போனதனால், அவளைப் பொருள் மூலமாக ஸ்வாதீனப் படுத்திக்கொண்டு, அவள் பிள்ளையைத் தங்கள் பிள்ளையென்று பேர் பண்ணி, சகலரும் அறிய, இராக்காலத்தில், அந்தப் பிள்ளையைப் பிரேத ஆலயத்தில் ஆடம்பரமாக அடக்கம் செய்தோம்: இந்த இரகசியம், எனக்கும் அந்தப் பாற்காரிக்கும், அவளுடைய புருஷனுக்கும் மட்டும் தெரியும்; தங்களுடைய புத்திரனைக் கொண்டுபோன முத்துவீரனை வெகுகாலமாக நான் பார்க்கவில்லை. அவன் உலகத்தைத் துறந்து சந்நியாசியாய்ப் போனதாகக் கேள்விப்பட்டேன்; அவன் தங்கள் பிள்ளையைக் கொலை செய்திருப்பானென்னே JD எண்ணியிருந்தேன். முந்தாநாள் வந்த அந்தச் சந்நியாசி, தங்கள் பிள்ளையைக் கொலை செய்ய வில்லையென்றும், சத்தியபுரியில், சாந்தலிங்கம் பிள்ளை வீட்டில், அந்தப் பாலன் வளருவதாகவும் சொன்னான்; அந்தச் சந்நியாசியை இங்கே இருக்கும்படி சொல்லியிருக் கிறேன்; அவனை விசாரித்தால், ஆதியோடு அந்தமாகச் சகல சங்கதிகளும் விசதமாகும்; தங்களுக்கு நான் செய்த துரோகத்துக்காக, என் மனச்சாக்ஷி எனக்குச் செய்த தண்டனை சாமானியம் அல்ல; என் வியாதிக்கும், மரணத்துக் கும் காரணம், என் மனச்சாக்ஷியேயன்றி வேறல்ல; இனி எழுத எனக்குச் சக்தி இல்லை; சாகப்போகிற என் மேலே கோபம் வைக்க வேண்டாம்” என்று எழுதப்பட்டிருந்தது 

அந்தக் கடிதத்தை நான் வாசித்த உடனே, ஒரு பக்கததில் பெரிய ஆச்சரியமும், ஒரு பக்கத்தில் என் கனிஷ்டன் மேலே பிரமாதமான கோபமும் ஜனித்து, இன்னது செய்கிறதென்று தெரியாமல், சற்று நேரம் சித்திரம்போல் அசைவற்றிருந்தேன். பிறகு, பிள்ளை ஜீவந்தனாயிருக்கிறானே, அவனைக் காணலாமென்கிற சந்தோஷம் மேலிட்டு, சந்நியாசியார் வந்திருக்கிறாரா வென்று விசாரித்தேன்; அவர் வந்திருக்கிறதாகக் கேள்விப் பட்டு, அவரை ரகசியமாக அழைத்து, அவர் மூலமாகச் சகல சங்கதிகளையும் பரிஷ்காரமாக அறிந்து கொண்டேன்; என் தம்பியினுடைய உத்தரக்கிரியைகளெல்லாம் முடித்துக் கொண்டு, நானும் என் பத்தினியும், பரிவாரங்களும் புறப் பட்டு வந்து, என் பிள்ளையையும், உங்களையும் கண்டேன். ஆநந்தம் கொண்டேன். இப்படிப்பட்ட பிரமானந்தத்தை, நான் அநுபவித்ததில்லை; பிறந்தது முதல் ஒரு நாளும் ஆனால், இதுவெல்லாம் மெய்தானோ, அல்லது கனவோ என்கிற சந்தேகம் ஒன்று, மத்தியில் போராடுகிறது; முந்தி தாம் பார்த்த காரியங்களைக் கனவில் காணுகிறதேயல்லா மல். பாராத காரியங்களைக் கனவில் காணக் கூடுமா? இந்த ஊரையும், ராஜ கிருகங்களுக்குச் சமானமாகிய உங்கள் கிருகங்களையும், அவைகளின் நானாவித அலங்காரங்களையும், மகா புண்ணியாத்து மாக்களான உங்களையும், இதற்கு முன் நான் ஒரு நாளும் பாராதிருக்க, இப்போது நான் பார்க்கிற படியால், இவ்வளவும் கனவல்ல, உண்மையென்றே நிச்சயிக்கிறேன்” என்றார். பிறகு, கனகசபையைச் சிறுபிள்ளை முதல் வளர்த்தவர் எங்கே என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு, அவரை நோக்கி, “ஐயா! உம்மைப்போல நல்லவர்கள் உண்டா? நாங்கள் பிள்ளையைப் பெற்ற கடமையேயல்லா மல், அவனுக்கு நாங்கள் ஒரு நன்மையும் செய்ததில்லை. நீர் எவ்வளவோ பாடுபட்டு, அவளை அருமை பெருமையாக வளர்த்து, அவனை மனுஷனாக்கிவிட்டீரே! என் கூடப்பிறந்த தம்பி, என் பிள்ளையைக் கொலை செய்ய நினைத்தானே! ஒரு சம்பந்தமும் இல்லாத நீர், சொந்தப் பிள்ளையைப் பார்க்கி லும், நூறு பங்கு அதிகமாகப் பிள்ளையை வளர்த்தீரே! உமக்கு இந்த உலக முழுமையும் கொடுத்தாலும், நீர் செய்த உபகாரத்துக்குத் தகுந்த பிரதிப் பிரயோஜனம் ஆகுமா?” என்று சொல்லி, பிறகு என் தாயார், தகப்பனார், பந்துக்கள் முதலிய ஒவ்வொருவரையும் பார்த்துத் தனித் தனியே ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினார். அவர் செய்கிறதைப் பார்த்தால், உலக முடிகிறவரையில், உபசாரத்தை நிறுத்தமாட்டாரென்று தோன்றிற்று. என் தகப்பனாரும் ஞானாம்பாள் தகப்பனாரும் எழுந்து, “போஜனத்துக்கு நேரமாகிறதே, கிருபை செய்ய வேண்டும்,” என்று பிரார்த்தித்தார்கள். அவரும். அவருடைய பத்தினியாரும், “எங்களால் எல்லாரும் பசியா யிருக்கிறீர்களே” என் று சொல்லி, உடனே எழுந்து ஸ்நானம் ஜப முதலிய நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு, ஞானாம்பாள் வீட்டில் அன்று போஜனம் செய் தார்கள். நாங்களும் அவர்களுடன் கூடஇருந்து, ஒரே பந்தியாய் இஷ்டான்ன போஜனம் செய்தோம். மறுநாள் முதல் எங்கள் கிருகத்தில் அவர்களை வரவழைத்து வைத்துக் கொண்டு, பத்து நாள் வரையில் அவர்களுக்குச் சோட சோபசாரங்களும் செய்தோம். துரும்புபோல் இளைத்துப் போயிருந்த கனகசபை, தாய் தகப்பனைக் கண்ட சந்தோஷத் தினால் பாரித்துப் பூரித்து, அவர்களுடன் வந்த யானைகளில் ஒன்றுபோல் ஆனான். 

எங்களைக் கூட அழைத்துக்கொண்டுபோய்த் தகுந்த மரியாதைகள் செய்தனுப்ப வேண்டுமென்பது, கனகசபை யின் தகப்பனாருடைய அபேக்ஷையாயிருந்தாலும், நாங்கள் அதற்கு சம்மதிக்கமாட்டோ மென்று தெரிந்து கொண்டு, அவர் எங்களைப் பார்த்து “நீங்கள் ஒன்றிலும் குறைவில்லாத பாக்கியசாலிகளாயிருக்கிறீர்கள்! நீங்கள் செய்த பேருப. காரத்துக்குக் கடவுள் கிருபை செய்ய வேண்டுமேயல்லாமல், என்னாலே செய்யக்கூடியது யாதொன்றுமில்லை; உங்களுக்குப் பிரதி உபகாரம் செய்ய வேண்டுமென்று நான் நினைத்தால், என்னைப்போல நன்றி கெட்டவர்கள், வேறொருவரும் இருக்க மாட்டார்கள்; ஏனென்றால், உங்களுக்கு ஒரு துன்பம் வந்த காலத்தில் அல்லவோ, நான் உங்களுக்குச் சகாயம் செய்யவேண்டும்; ஆகையால், உங்களுக்குப் பிரதி உபகாரம் செய்ய நினைப்பது, உங்களுக்குத் துன்பம் வரவேண்டு மென்று பிரார்த்திப்பதுபோலாகு மானதால், நான் பிரதி உபகாரம் செய்ய நினைக்கவே மாட்டேன்” என்றார். அவர் பயணப்படுமுன்னுக்கு எங்கள் பாட்டியார் வந்து, “ஐயா! உங்கள் பிள்ளை என்னால் வெகுவாக அடிபட்டான்; அதை நினைக்கும்போது, எனக்கு வருத்தமாயிருக்கிறது” என்றார்கள். உடனே அவர் என் பாட்டியாரை நோக்கி, “அவன் அடிபட்டது, அவனுக்குப் பெரிய அநுகூலம். துன்பம் ஞானத்தின் பாடசாலை; துன்பப் படாதவன் ராஜாங்கத்துக்கு யோக்கியனாக மாட்டான்; தான் அடி படாதவனாயிருந்தால், அடியினால் உண்டாகிற உபத்திரவம் இன்னதென்று தெரியாமல், தன்னுடைய பிரஜைகளைக் கண்டபடி அடிக்கச் சொல்லுவான்; துன்பப்படாதவனுக்கு ஏழைகளுடைய வருத்தம் எப்படித் தெரியும்?” என்றார். அப்போதுதான், அடியினால் உண்டாகிற பிரயோஜனம் ன்னதென்று எனக்குத் தெரிந்தது. பிற்பாடு அவரும் அவருடைய பத்தினியாரும், கனகசபையையும் அவனை வளர்த்த தந்தை தாய்மார்களையும் அழைத்துக்கொண்டு, எங்களிடத்தில் தனித்தனியே விடைபெற்றுக்கொண்டு, பரிவாரங்களுடன் சென்று விட்டார்கள். கூடப்பிறந்த ஒரு அன்புள்ள சகோதரன் போலே நெடுங்காலம் என்னுடன் கூடி இருந்து, சகல சுகதுக்கங்களுக்கும் உடந்தையாயிருந்த கனகசபையைப் பிரிந்தது, எனக்குப் பெரிய மனோதுக்கமும் வியாசங்கமுமாயிருந்தது. அவனுக்கு அதிபால்யத்தில் நேரிட்ட ஆபத்துக்களை நீக்கி, அவனை அற்புதமாக வளர்ப் பித்த கடவுளது திருவருட் செயலை வியந்து ஸ்தோத் தரித்தேன். 

7-ம் அதிகாரம்

சோதிடப் பைத்தியம்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்;
ஞானாம்பாளுக்குச் சம்பவித்த பிராணாபாய நிவர்த்தி. 

நானும் ஞானாம்பாளும், ஒருநாள் காலையில், வெளித் திண்ணையில் படித்துக்கொண்டிருக்கும்போது, எனக்குப் பழக்கமான ஒரு சோதிட சாஸ்திரியார் வந்து, ‘செலவுக்கு ஒன்றும் இல்லாமல் வருத்தப்படுகிறேன்; ஏதாவது கொடுக்கவேண்டும்” என்று கேட்டார். அப்போது கூட இருந்த எங்கள் உபாத்தியாயர், அவரைப் பார்த்து, “சகலருக்கும் சாஸ்திரம் சொல்லி, பாக்கியத்தைக் கொடுக்கிற உமக்கும் கஷ்டமுண்டா?” என்றார். உடனே சாஸ்திரியாருக்கு ஆக்குரோஷம் உண்டாகிச் சொல்லு கிறார்: “நாங்கள் உலகத்தை இரட்சிக்கும் பொருட்டு, தரித்திர வேஷம் பூண்டுகொண்டு திரிகிறோமேயல்லாமல், எங்களுக்கும் ஒரு கஷ்டமுண்டா? நாங்கள் கற்பக விருட்சத்தை வரச்சொன்னால் வராதா? காமதேனுவைக். கூப்பிட்டால், அது வந்து நாங்கள் சொன்னபடி கேளாதா? மகமேருகிரி எங்கள் ஸ்வாதீனமல்லவா?’ என்றார். அப்போது, அவ்விடத்திலே கட்டியிருந்த ஒரு வேட்டை நாய், சாஸ்திரியாரைப் பார்த்துக் குலைத்துக்கொண் டிருந்தது. அவர் அந்த நாயைப் பார்த்து, “கரடி, புலி முதலிய துஷ்ட மிருகங்களின் வாய்களை மந்திரத்தினாலே கட்டிவிடுகிற நான், இந்த நாயின் வாயைக் கட்டி,அ குலைக்காமலும், கடிக்காமலும் செய்ய மாட்டேனோ?” என்று கையை நீட்டிக்கொண்டும், தலையை ஆட்டிக் கொண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். உடனே, அந்த நாய்க்குக் கோபமுண்டாகி, கட்டியிருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு, ஒரே பாய்ச்சலாய் சாஸ்திரியார் மேலே பாய்ந்து, அவர் தேகத்தைப் பக்ஷணம் செய்ய ஆரம் பித்தது. சாஸ்திரியார்: “ஐயையோ! போனேனே! போனேனே!” என்று கூவத் தலைப்பட்டார்: உடனே எங்கள் உபாத்தியாயர் ஒரு கழியை எடுத்துக்கொண்டு, நாயைத் துரத்திச் சாஸ்திரியாரை விடுவித்து, ‘மந்திரத் தினால் அந்த நாயின் வாயைக் கட்டிவிடக் கூடாதா?” என்று சாஸ்திரியாரைக் கேட்டார். அவர், “ஐயா, நாய் கடித்த உபத்திரவம் பெரிதாயிருக்கிறது; அதற்குத் தகுந்த பரிகாரம் செய்தால், உண்மையைச் சொல்லுகிறேன்” என்றார். உடனே, எங்கள் ஆசிரியர், தகுந்த பக்குவம் செய்து வலியைச் சாந்தப்படுத்தினார். 

சாஸ்திரியாருக்குச் சந்தோஷம் உண்டாகிச் சொல்லு கிறார்: “எங்கள் வித்தையெல்லாம் சுத்தப் பொய், உலகத் தில் உதர நிமித்தம், பல பேர் பல வேஷங்கள் பூண்டு கொண்டு ஜீவிக்கிறார்கள்; அப்படியே நானும் இந்த வேஷம் போட்டுக்கொண்டு திரிகிறேன்; என்னுடைய சொந்த விஷயத்தில் சாஸ்திரம் பலிக்காமலிருக்கும் போது, அன்னியர்கள் விஷயத்தில் கேட்கவும் வேண் டுமா? எனக்கு நாலு புத்திரிகைகள்; சாஸ்திர சகுனங்கள் பார்த்து, சாதகங்கள் பார்த்து, பொருத்த நிமித்தங்கள் பார்த்து, அவர்களைக் கலியாணம் செய்து கொடுத்தேன். அந்த நாலுபேரும், அமங்கலியாய் விட்டார்கள். ‘மந்திரங் கால் மதி முக்கால்’ என்பதுபோல, என்னுடைய புத்தி யைக்கொண்டு பிழைக்கிறேனே யல்லாது, சாஸ்திரத தைக் கொண்டு பிழைக்க வில்லை; சகலருக்கும் சுகமும் துக்கமும் கலந்து வருகிறபடியால், நானும் சுகத்தையும் துக்கத்தையும் கலந்து, சகலருக்கும் சாஸ்திரம் சொல்லிக் கொண்டு வருகிறேன்; ஆனால், சுகத்தையே யாவரும் விரும்புகிறபடியால், சுகத்தையே அதிகமாகச் சொல்லி யாவரையும் நான் சந்தோஷப் படுத்துவது வழக்கம்; இப் போது காலம் விபரீதமாய்ப் போய்விட்டது; நான் ஒருவனுக்கு யோகம் வருமென்று சொன்னால், அவனுக்குக் கஷ் டம் சம்பவிக்கின்றது; சுபிக்ஷ காலமென்று சொன்னால், துர்பிக்ஷ காலமாய் முடிகின்றது; ஒரு கர்ப்ப ஸ்திரீயைப் பார்த்து, அவளுக்குப் பிள்ளை பிறக்குமென்று சொன்னா லும், அந்த கர்ப்பம் பொய்யாகி, மகோதரமாய் முடிகின் றது ; கர்ப்பத்திலிருக்கிற பிள்ளைகூட என்னை ஒரு தரம் மோசம்செய்து விட்டது. எப்படியென்றால், நான் நெடு நாளாக ஆசிரதம் செய்துவந்த ஒரு பிரபு, என்னை அழைத்து, கர்ப்பணியா யிருக்கிற தன் மனைவிக்கு, என்ன குழந்தை பிறக்குமென்று கேட்டார்: நான் ஆண் பெண் இரண்டில் ஒன்றுதானே பிறக்கவேண்டுமென்று நினைத்து ஆண் குழந்தை பிறக்குமென்று அவரிடத்தில் தனிமையா கச் சொன்னேன்; அவருக்குத் தெரியாமல், அவர் மனைவி யிடத்திலேயே போய், பெண்குழந்தை பிறக்குமென்று அதிக ரகசியமாய்ச் சொல்லிவைத்தேன், கடைசியாய்ப் பிறந்த குழந்தை ஆணுமல்லாமல், பெண்ணுமல்லாமல், அலியா யிருந்தது. சாஸ்திர விஷயத்தில் சகலருக்கும் இருந்த நம்பிக்கையும், நாளுக்குநாள் குறைந்துவிட்டது. மேல் இந்தத் தொழிலை விட்டுவிடுகிறதென்று நான்  யோசித்துக்கொண்டிருக்கும்போது, உங்களுடை ய நாயே எனக்கு நல்ல புத்தி கற்பித்துவிட்டபடியால், இனி மேல் சாஸ்திரத்தைக் கட்டி, தூரத்தில் எறிந்துவிடச் சித்த மாயிருக்கிறேன்” என்றார். அவர் நிசம் சொன்னதற்காக, அவருக்குத் தகுந்த பிரயோசனம் செய்யவேண்டுமென் று எங்கள் போதகர் சொன்னதினாலே, அவருக்கு நானும் ஞானாம்பாளும் பத்து ரூபாய் கொடுத்து அனுப்பினோம். இவ்விதமாக ஜோசியர் காரியம் ஆசியமாக முடிந்தது; எனக்குச் சோதிட விஷயத்திலிருந்த பைத்தியமும் தீர்ந்தது. 

சாஸ்திரியார் போனபின்பு, உபாத்தியாயர் எங்களைப் பார்த்து, ‘சோதிடம் பொய்யென்று அந்தச் சாஸ்திரியே ஒப்புக்கொள்வதால், இனிமேல் உங்களுக்கு வேறே சாக்ஷி யம் வேண்டுவதில்லையே. இனிமேல் வரும் காரியங்கள் நமக்கு முந்தித் தெரியாதபடி,நம்முடைய நன்மைக்காகவே, சுவாமி மறைத்து வைத்திருக்கிறார்; இனிமேல் வரப்போகிற துன்பம், நமக்குத் தெரியாமலிருப்பதால், அந்தத் துன்பம் வருகிற நிமிஷம் வரையில் நாம் துக்கமில்லாமலிருக்கிறோம். அது முந்தி நமக்குத் தெரிந்திருக்குமானால், முந்தியும் துக்கம், பிந்தியும் துக்கம்; எக்காலத்திலும் துக்கமாக முடியும் அல்லவா? அப்படி நன்மை வருகிறதும் நமக்கு முந்தித் தெரியாமலிருந்து வந்தால், நமக்கு அதிக சந்தோஷத்துக்கு இடமாகும். அப்படியில்லாமல், முன்னமே தெரிந்திருக்குமானால், சந்தோஷம் மிகவும் குறைந்து போகும். தீர்க்கதரிசனம் என்பதே, இப்போது உலகத்தில் இல்லை. அந்த மேலான வரத்தை, எத்தனையோ புத்திமான்களும் பக்திமான்களும் இருக்க, அவர்களுக்குக் கொடாமல், இந்தச் சாஸ்திரியைப் போலொத்த சர்வ மூடர்களுக்கும், குடுகுடுப்பைக்காரர்களுக்கும், கோணங் கிக்காரர்களுக்கும், குறத்திகள் முதலானவர்களுக்கும், சுவாமி கொடுத்திருப்பாரா? பின்னும் நமக்கு வருகிற நன்மை தீமைகள், நமக்குத் தெரியாமலிருக்க, அசேதன ஜந்துக்களாகிய பல்லிகளுக்கும் பட்சிகளுக்கும் தெரிந்து, அவைகள் நமக்குத் தெரியப்படுத்தக் கூடுமா?” என்று உபாத்தியாயர் செய்த பிரசங்கத்தைக் கேட்டவுடனே. என்னைட் பிடித்திருந்த சாஸ்திரப் பேய் பறந்தோடி விட்டது. 

எங்கள் கொல்லைக்குப் பின்புறத்தில் இருக்கிற சிங்காரத் தோட்டங்களின் மதில்களுக்கு அப்பால், கொஞ்ச தூரத்தில், ஒரு பாழ் மண்டபமும், அதற்குப் பின், ஒரு விஸ்தாரமான காடும் இருந்தன. அந்தக் காட்டுக்கு, அந்தப் பாழ் மண்டபத்தின் வழியாகத்தான் போக வேண்டும். சில காலத்துக்குமுன், அந்தப் பாழ் மண்டபத்தில், யாரோ ஒருவன் கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு இறந்துபோன தாகவும், அவன் பிசாசு ரூபமாகி அந்த மண்டபத்தில் வாசம் செய்வதாகவும், பின்னும் ஒரு சங்கிலிக் கறுப்பன் ஒரு மரத் திலிருப்பதால், எப்போதும் சங்கிலி ஓசை கேட்பதாகவும், அந்த மண்டபத்துக்குப் போன ஆடு மாடு முதலான ஜீவ ஜந்துக்கள் திரும்பி வராமல், பிசாசுகளுக்கு இரை யாகிவிடுவதாகவும், ஒரு வதந்தி பிறந்து, வெகு காலமாக அந்த மண்டபத்துக்காவது காட்டுக்காவது ஒருவ ரும் போக்குவரவு இல்லாமல் நின்றுபோய் விட்டது இராக் காலங்களில், அந்த இடத்தில், பயங்கரமான பல சப்தங்கள் கேட்கிறதும் உண்டு. உபாத்தியாயரிடத்தில் அதைப் பற்றித் தெரிவித்தேன், அவர், “மனப் பேயே தவிர, வேறு பேயில்லை; நீ என்னுடன் கூட வந்தால்- காட்டுகிறேன்’ என்றார். அவருடைய விவேகமும் தைரியமும் எனக்குத் தெரியுமானதால், வேட்டை நாயையும் கையில் பிடித்துக் கொண்டு, அவரைத் தொடர்ந்து போனேன்; மண்டபம் சமீபித்த வுடனே, நான் பயப்படுவேனென்று, அவர் என் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தார். உபாத்தியாயர் கை முன்னே இழுக்க, பயம் பின்னே இழுக்க, கொலைக் களத்துக்குப் போகிறவன்போல, திகில்கொண்டு நிர்ஜீவ னாய் நடந்தேன்: மண்டபத்துக்குள் நுழையும்போது நமனுடைய வாய்க்குள் – நுழைவது போலிருந்தது; நாங் கள் மண்டபத்தில் நுழைந்தவுடனே, கணக்கில்லாத பல பட்சிகள் “கா, கூ,” என்று சப்தித்துக் கொண்டு புறப்பட் டன; அந்தப் பட்சிகளுடைய எச்சங்களால், மண்டபத்தில் கால் வைக்க இடமில்லாமல், துர்நாற்றம் எங்கள் குடலைப் பிடுங்க ஆரம்பித்தது; உடனே காட்டைப் பார்க்கிற தற்காக, மண்டபத்தை விட்டுக் கீழே இறங்கினோம்; எங் களுக்கு முன் எங்கள் வேட்டை நாய் மிருக வாசனை பிடித் துக் கொண்டு, காட்டுக்குள் ஓட ஆரம்பித்தது; அதைக் கண்டவுடனே நரிகளும், ஓநாய்களும், காட்டுப் பூனை முத லான பல மிருகங்களும், நாலு பக்கங்களிலும கத்திக் கொண்டு ஓடத் தலைப்பட்டன. நாங்கள் போகும்போது ஒரு ஓநாய் ஒரு ஆட்டைப் பிடித்துத் தின்றுகொண்டிருந் தது. அந்த ஓநாய்மேல் எங்கள் வேட்டை நாய் பாய்ந்து, பிடித்துக் கொண்டு, எங்களுக்குப் பாதகாணிக்கை கொண்டு வருவது போல், எங்கள் முன்பாக ஓடிவந்தது; உடனே உபாத்தியாயர், என்னை நோக்கிச் சொல்லுகி றார்:- “இந்த காட்டைப் பார்த்தால், உலகம் உண்டானது முதல் மனுஷ சஞ்சாரம் இல்லாதது போலத் தோன்று கிறது; யாரோ ஒருவன, துர்மரணமாய் இறந்து போனா னென்கிற பயப் பிராந்தியினால் வெகு காலமாய் ஒருவரும் இவ்விடத்தில் சஞ்சரிக்காத படியால், பட்சிகளும் பல மிருகங்களும் அந்த மண்டபத்தையும் காட்டையும் தங்கள் கொண்டன; அவைகளால் வாசஸ்தலங்களாக ஆக்கிக் இரவில் உண்டாகிற சப்தங்களை பிசாசுக்களுடைய சப் தங்க ளென்று, மௌட்டியமாக நினைத்துக் கொண்டார் கள். இந்தக் கானகத்துக்குள்ளே பிரவேசிக்கிற ஆடு மாடு களை மிருகங்கள் தின்றுவிடுவதை அறியாமல், பிசாசுகள் தின்றுவிடுவதாக நினைத்தார்கள். இவ்விடத்தில் இருக்கிற பலவகையான மரங்களின் இலைகள் காய்ந்து போய்க் காற்றினால் அடிபட்டுக் கலகலவென்று சப்திப்பதைச் சங் கிலிக் கறுப்பன் என் ன்று நினைத்தார்கள். அறிவில்லாது மிருகங்களும் பட்சிகளும் நிர்ப்பயமாய் வசிக்கிற இந்த இடத்தில், அறிவுள்ள மனுஷர் சஞ்சரிக்கப் பயப்படுவது எவ்வளவு மௌட்டியம்!” என்று போதித்தார். அதற்கு முன் சோதிடப் பேய் பறந்தது போல், அன்று முதல் மனப்பேயும் பறந்து விட்டது. அந்தக் காட்டை, எங்களி டத்தில் உபாத்தியாயர் சாசுவதக் குத்தகையாக ஒப்புக் கொண்டு, அதை வெட்டித் திருத்திச் சாகுபடி செய்து பயிரிட்டு அநுபவிப்பதும் தவிர, அந்த மண்டபத்தில் அவரே குடும்ப சகிதமாய்க் குடியிருந்து வருகிறார். 

எங்கள் உபாத்தியாயரிடத்தில், நான் பல புத்திகளைக் கற்றுக்கொண்டது போலவே, என் தாயாரிடத்திலும் ஞானாம்பாளிடத்திலும் அநேக நற்குணங்களைக் கற்றுக் கொண்டேன். எந்தக் காலத்திலாவது அவர்களிடத்தில் கோபம், குரோதம், மூர்க்கம் முதலான துர்க்குணங்களை நான் கண்டதே யில்லை. எப்போதும் அவர்கள் பேசுவது மிருது பாஷையே தவிர, கடூர வார்த்தைகளை அவர்களி டத்தில் நான் கேட்டதே யில்லை.அவர்கள் வாயிலிருந்து வருவ தெல்லாம் உண்மையே தவிர, பொய் யென்பது மருந்துக்குக் கூடக் கிடையாது. ஒருநாள் என் முகத் தைக் கடுகடுத்துக் கொண்டு, பல்லைக் கடித்துக்கொண்டு என் வேலைக்காரனைக் கோபித்தேன். அப்போது கூட இருந்த ஞானாம்பாள், ஒன்றும் பேசாமல் எழுந்து போய் விட்டாள். பிறகு அவளை நான் கண்டு, “ஏன் போய் விட்டாய்?” என்று கேட்க, “உங்களுக்குக் கோபம் வரும் போது, உங்களைப் பார்த்தால், எனக்குப் பயமாயிருக் கிறது; நீங்கள் கோப முகத்தோடு கண்ணாடியைப் பார்த் தால் உங்களுக்குத் தெரியும்” என்று சொன்னாள். நான் தனிமையாகப் போய், கோப முகத்துடனே, கண்ணாடியைப் பார்த்தேன்; அப்போதிருந்த கோரம் எனக்கே சகியாமல், அன்று முதல் கோபத்துக்கு விடை கொடுத்து விட்டேன். ஞானாம்பாள் எனக்கு இளையவளா யிருந்தாலும், அவளு டைய விநய காம்பீரியமும், நாகரீகமும், சுசீல ஒழுக்கமும், எப்படிப்பட்டவை யென்றால், பெரியோர்கள் சமூகத்தில் இருக்கும் போது எவ்வளவு மரியாதையும் சிரத்தையும் உண்டாகுமோ, அவ்வளவு மரியாதை அவளிடத்தில் இருக் கும் போதும், என்னை அறியாமலே உண்டாகும். 

அவள் ஸ்தோத்திரப் பிரியை அல்ல வென்று, சில திருஷ்டாந்தங்களால் நான் அறிந்து கொண்டேன். எப்படி யெனில், ஒருநாள் சிங்காரத் தோட்டத்திலிருந்து ஒரு ரோஜா புஷ்பத்தைப் பறித்து, அவள் கையிலே கொடுத்து, “உன்னுடைய முகம் இந்தப் புஷ்பத்துக்குச் சமானம்” என்றேன். அவள், அந்த புஷ்பம் சீக்கிரத்தில் வாடிப் போகிறது போல அழகும் சீக்கிரத்தில் அழிந்துபோகும்” என்றாள். “அந்தப் பூவை உபமானித்தது சரியல்ல, உள் முகம் சந்திரனுக்குச் சமானம்” என்றேன். அவள் சற்று நேரம் சும்மா இருந்து, பிற்பாடு சொல்லத் தொடங்கினாள்: ”சந்திரனுக்கு ஸ்வயம் பிரகாசம் இல்லை யென்றும், சூரிய னுடைய ஒளியினால் சந்திரன் பிரகாசிக்கிற தென்றும் நாம் புஸ்தகங்களில் வாசித்திருக்கிறோம். அப்படியே மனுஷர் களுடைய வடிவெல்லாம் சூரிய சூரியனாகிய கடவுளிடத்தி லிருந்து உண்டாவதால், அவரே ஸ்தோத்திரத்துக்குப் பாத்திரர்” என்று சொல்லிக்கொண்டு அப்பாற் போய் விட்டாள். அன்று முதல் அவளை ஸ்தோத்திரம் செய்கிற தில்லையென்று பிரதிக்ஞை செய்து கொண்டேன். 

அதற்குச் சில நாளுக்குப் பின்பு, நானும் ஞானாம் பாளும் வழக்கப்படி சிங்காரத் தோட்டத்துக்கு விளையாடப் போனோம். நான் கொஞ்ச தூரத்தில் புஷ்பம் பறித்துக் கொண்டிருந்தேன். அவள் ஒரு மரத்து நிழலில், ஒரு சின்ன வாத்தியப் பெட்டியை வைத்து, வாசித்துக்கொண் டிருந்தாள். அந்த சப்தம் கேட்டவுடனே, அவ்விடத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஒரு துஷ்டக் காளை, அரண்டு ஞானாம்பாளை முட்டத் துரத்திற்று; அவள் அலறிக் கொண்டு சமீபத்திலிருக்கிற சித்திர மண்டபத்துக்கு நேரே ஓடினாள். அவ்விடத்தில் மேய்ந்துகொண் டிருந்த ஒரு பெரிய ஆட்டுக்கடா. இந்தப் பக்கத்தில் துரத்த ஆரம் பித்தது; இப்படி, இரண்டுக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டு அவள் அவஸ்தைப்படும்போது, நான் ஒரே ஓட் டமாய் ஓடி, ஞானாம்பாளைத் தூக்கி சித்திர மண்டபத்து வெளித் திண்ணையின் மேல் வைத்து விட்டு, நானும் ஒரே தாண்டாய்த் தாண்டி அந்தத் திண்ணையின் மேல் ஏறிக் கொண்டேன். அந்தச் சித்திர மண்டபத்துத் திண்ணை அதிக உயரமானதாலும், அதின் படிகள் அந்தப் பக்கத் தில் இல்லாமல் வேறே பக்கத்தில் இருந்தமையாலும் அந் தச் சமயத்தில் நான் இல்லாமல் இருந்தால் அவளுக்குப் பெரிய அபாயம் நேரிட்டிருக்கும். இந்தச் சமாச்சாரம் ஞானாம்பாள் மூலமாக எங்கள் இரண்டு வீட்டாருக்கும் தெரிந்து அவர்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செய்த ஸ்தோத்திரம் அபரிமிதமே. இராவணாதி அசுரர்களை நாசம் செய்து சீதையைச் சிறைமீட்டுக்கொண்டு போன இராமருக்கு எவ்வளவு பிரதாபம் கிடைத்ததோ அவ்வளவு பிரதாபம் எனக்கும் வாய்த்தது. 

8-ஆம் அதிகாரம் 

கற்பலங்காரி சரித்திரம்

ஒருநாள் எங்களுக்குப் பள்ளிக்கூடம் இல்லாத விடு முறை நாளா யிருந்த படியால், நாங்கள் பழைய பாடங் களைப் படித்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது, என் தாயார் வந்து, எங்களுடைய படிப்பைப் பரிசோதித்தார் கள். பிறகு ஞானாம்பாள், என் தாயாரைப் பார்த்து, “அத்தை யம்மா உங்களுக்கு அநேக சரித்திரங்கள் தெரியுமே! யாதொரு பதிவிரதையி னுடைய சரித்திரம் தெரிந்திருந்தால் சொல்ல வேண்டும்” என்று பிரார்த்தித் தாள். “அப்படியே சொல்லுகிறேன்” என்று என் தாயார் சொல்லத் தொடங்கினார்கள். 

“சில காலத்துக்கு முன் திரிசிரபுரத்தில் அரசு செய்து வந்த விஜயரங்க சொக்கலிங்க நாயகர் சந்ததி யில்லாமல் இறந்துபோன படியால், அவருடைய பத்தினியாகிய மங்கம்மாளுக்குப் பட்டாபிஷேக மாகி, அவள் துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனம் செய்து, மநுநீதி தவறாமல், அரசாட்சி செய்து வந்தாள். அவளுக்கு காமியப்ப காயக்கன் என்கிற பெயரை யுடைய தம்பி ஒருவன் இருந் தான். மங்கம்மாளுக்குத் தம்பிமே லிருந்த பிரியத்தினால். தன்னுடைய நாட்டில் சில ஊர்களைப் பிரத்தியேகமாய்ப் பிரித்து, அவனுடைய ஸ்வாதீனப்படுத்தி, தனக்குள்ளாக அவன் சிற்றரசாயிருந்து அரசாட்சி செய்யும்படி திட்டம் செய்தாள். அவன் புதுக்கோட்டையைத் தனக்கு ராஜ தானி ஆக்கிக் கொண்டு, அரசாட்சி செலுத்தி வந்தான். அவனுக்கு மகோன்னத பதவி கிடைத்த உடனே மதி மயங்கி, சமஸ்தான காரியங்களை எவ்வளவும் கவனிக்காமல், காமாதுரனாய்ப் பரஸ்திரீ கமனம் முதலிய துர் விஷயங்களிற் காலத்தைச் செலவழிக்கத் தலைப்பட்டான். அவனுக்கு ஆஸ்தான உத்தியோகஸ்தர்களில் ஒருவனாகிய மங்களா கரம் பிள்ளையி னுடைய பத்தினி கற்பலங்காரி என்பவள் திவ்விய சுந்தரமும், அவளுடைய பெயருக்குத் தகுந்த சுகுணமும், உள்ளவளா யிருந்தாள். அவளிடத்தில், அந்தத் துஷ்ட ராஜனுக்கு மோகம் உண்டாகி, அவளைத் தன் கைவசப்படுத்தும் பொருட்டு, அவளிடத்துக்குச் சில ஸ்திரிகளைத் தூதாக அனுப்பினான். அவர்கள் அவளுடைய புருஷன் வீட்டி லில்லாத சமயம் பார்த்து, அவளிடம் சென்று, ‘அம்மா! நீ செய்த தவ மகிமையினால், உனக்கு ராஜ யோகம் வந்து விட்டது; உன்னைப் போல் அதிர்ஷ்ட சாலிகள் உண்டா? நம்முடைய அரசரே உன்னுடைய அழகை விரும்புவாரானால், உன்னுடைய பாக்கியத்துக்கு ஒரு வரம்பு உண்டா? அவருடைய தயவைப் பெற எத் தனையோ ஸ்திரீகள் தவம் செய்கிறார்கள்; அவர்களுக்கெல் வாம் சிந்திக்காமல், உனக்கு அவருடைய கிருபை கிடைத் தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்! இனி இந்த நாட்டுக் கெல்லாம் நீயே அரசி! சமஸ்தான காரியங்க ளெல்லாம். உன்னுடைய ஏவலின்படியே நடக்கும். ஆகையால், அவ ருடைய இஷ்டபூர்த்தி செய்து, அஷ்ட ஐசுவரியங்களையும் கைக்கொள்ளு’ என்றார்கள். இதைக் கேட்டவுடனே பலங்காரிக்குக் கோபமுண்டாகிச் சொல்லுகிறாள்: ‘எனக்கு அரசரும், குருவும், தெய்வமும், என்னுடைய பர்த்தாவே அன்றி வேறல்ல. அவருடைய கிருபையே எனக்கு அஷ்ட ஐசுவரியம். அவருக்கு முன்பாக மற்ற அரசர்கள் எல்லாரும் அஜகஜாந்தரம், உங்கள் அரசருடைய கிருபைக்காகத் தவம் செய்கிற ஸ்திரீகளே அந்தக் கிருபையைப் பெற்றுக் கொள்ளட்டும். எனக்கு வேண்டாம்! வேண்டாம!” என்றாள். 

மறுபடியும், அவர்கள், அந்த உத்தமியின் புத்தியைக் கலைக்கிறதற்கு, சகல தந்திர வித்தைகளை உபயோகப் படுத்தியும், அவள் இசைய வில்லை. அவர்கள் உடனே புறப் பட்டுப் போய், அரசனுக்கு நடந்த காரியங்களைத் தெரி வித்தார்கள். அவள் நிராகரித்த சங்கதி தெரிந்தவுடனே, அவனை அதிகம் அதிகமாக ஆசைப் பேய் பிடித்து ஆட் டத் தலைப்பட்டது. அவளைப் பலாத்காரமாய்க் கொண்டு போகிற பத்தில் தன்னுடைய சகோதரி மங்கம்மாளுக் குத் தெரிந்தால் ‘தன்னைச் சிரசாக்கினை செய்வா ளென்று பயந்து’ அவன் பலாத்காரம் செய்யத் துணியவில்லை. பண மென்றால் பிணமும் வாயைத் திறக்கு மான படியால், பணத்தைக் கொண்டே அவளை வசியம் செய்ய வேண்டு மென்று நினைத்து, அவன் ஒரு பெரிய பெட்டியில் தங்க நாணயங்களையும், வேறொரு பெட்டியில் இரத்நா பரணங் களையும் நிரப்பி, அந்தத் தூதிகள் கையில் கொடுத்து, அவ ளிடத்திற்கு அனுப்பினான். அவர்கள் அந்தப் பெட்டிகளைக் கற்பலங்காரி வீட்டுக்குக் கொண்டுபோய்த் திறந்து- காட்டி, அவளுடைய புத்தியை மயக்கப் பிரயாசைப்பட் டார்கள். அவள் அவர்களைப் பார்த்து, ‘ஸ்திரீகளுக்குக் கற்பே சிறந்த ஆபரணம்; அந்த ஆபரணம் போய்விட்டால், இந்த ஆபரணங்களினால் வரும் பிரயோசனம் என்ன? என்று சொல்லி, அந்த ஆபரணங்களை உதைத்துத் தள்ளி, அவர்களையும் தூஷித்துத் துரத்தி விட்டாள். அவர்கள் போய்ச் சற்று நேரத்துக்குப் பின்பு, வீட்டுக்கு வந்த தன் பர்த்தா விடத்தில் சகல சங்கதிகளையும் தெரிவித்து, ‘இனி மேல் இந்த அரசனிடத்தில் உத்தியோகம் செய்வது முறை யல்ல; உத்தியோகத்தை விட்டுவிட்டுப் பிச்சையெடுத்தா யினும் பிழைப்பது உத்தமம்’ என்றாள். அவளுடைய வார்த்தையைப் புருஷன் அங்கீகரித்துக் கொண்டு, உத்தி யோகம் வேண்டாமென்று ஒரு பத்திரிகை எழுதி அனுப்பி விட்டு, அவரும் அவருடைய பத்தினியும் ஊரை விட்டுப் புறப்பட்டு, அடுத்த கிராமத்துக்குப் போய், ஒருவருக்கும் தெரியாமல் அந்தரங்கமாக வசித்தார்கள். உத்தியோக வரும்படியைத் தவிர, வேறே சீவனத்துக்கு மார்க்கம் இல்லாத படியால், உத்தியோகம் போன பிற்பாடு, அவர்கள் பட்ட கஷ்டம் சொல்லி முடியாது. அவர் களுடைய நகைகள் பாத்திர சாமான்கள் முதலியவைகளை விற்று, சிலநாள் சாலக்ஷேபம் செய்தார்கள். பிற்பாடு, கையில் ஒரு காசும் இல்லாமல், கடன் கொடுப்பாருமில்லா மல், கைப்பாடு படவும் தெரியாமல், இராப்பட்டினி பகற் பட்டினியாயிருக்கவும் ஆரம்பித்தார்கள். அந்த அரசனுக்கு அவர்கள் போயிருக்கிற இடம் சில நாள் தெரியாமலிருந்து, பிற்பாடு தெரிந்தது. சாம பேத தான தண்டம் என்கிற நாலு உபாயங்களில், முந்தின மூன்று உபாயங்களைச் செய்து விட்டோம். இனிமேல் நாலாவது உபாயமாகிய தண்டத்தை உபயோகிப்பதே காரியமென்று அவன் நிச்சயித்து,தானாயிறந்து போன ஒரு அநாதப் பிரேதத்தை நடுச்சாமத்தில் அவர்கள் இருக்கிற வீட்டில் போட்டுவிடும் படியாயும்,மங்களாகரம் பிள்ளை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டிப் பிடிக்கும் படிக்கும், ஜாக்கிரதை செய் தான். அந்தப் பிரகாரம் சேவகர்கள் வந்து, மங்களாகரம் பிள்ளையைப் பிடித்துக்கொண்டு போய் விட்டார்கள்; கற்பலங்காரி வெளியே போகாதபடி வீட்டைச் சுற்றிப் யாரா வைத்து விட்டார்கள். 

“உத்தியோகம் போன பிற்பாடு, தரித்திர முதலிய சகல கஷ்டங்களையும் தைரியமாகச் சகித்த அந்தக் கற்பலங் காரி, தன் புருஷனைக் குற்றவாளியாக்கி, சேவகர்கள் பிடித்துக் கொண்டு போனதைச் சகிக்க மாட்டாதவளாய், நெருப்பிலே போட்ட புஷ்பம்போல வாடிப் பதைத்து, விம்மி அழுதாள். அந்தச் சமயத்தில், அந்த கொடுங்கோல் மன்னனுடைய தூதிகள் வந்து, கற்பலங்காரியை நோக்கி, “தானாய் வருகிற சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளுவது” போல், நீயே உன்னுடைய வாழ்வைக் கெடுத்துக் கொள்ளு கிறாய். உன் புருஷன் கொலை செய்ததாகச் சாட்சிகளால் குற்றம் ஸ்தாபிக்கப்படுகிறபடியால், மரண த தண்டனை கிடைக்குமென்பது நிச்சயம். ஆனால், நாங்கள் சொல்லுகிற படி நீ கேட்டால்,உன் புருஷனுக்கு ஜீவ லயம் நேரிடாது. நீயும், எப்போதும் சுமங்கலியாகவும், பாக்கியவதியாகவும் இருப்பாய். எங்களுடைய வார்த்தையை நீ தள்ளி விட்டால், நீ அமங்கலிதான்” என்றார்கள். இந்த வார்த்தை களைக் கேட்டவுடனே, அந்தப் பதிவிரதையினுடைய சித்தம் சிறிதும் சலனப்படாமல், அவர்களைப் பார்த்துச் சொல்லுகிறாள்: “எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் தண்டியாமல் விடாது”, மானம் பெரிதே அல்லாமல் ஜீவன் பெரிதல்ல; என்றைக்கிருந்தாலும், மனுஷ தேகம் எடுத்தவர்கள் சாவது நிச்சயமேயல்லாது, சாகாத வரம் வாங்கிக்கொண்டு வந்தவர்கள் ஒருவரும் இல்லை.எப்படி யும் ஒரு நாள் சாகப் போகிறவர்கள், சிலநாள் முந்திச் செத்தால் பாதகம் என்ன? நான் என் புருஷளைக் காப் பாற்றுகிறதற்காகக் கற்பை இழந்து, பாவத்தையும், வழியையும், நரகத்தையும் சம்பாதித்துக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், பதிவிரதா பங்கமில்லாமல் நானும் என் புருஷ ரும் இறந்து, நித்திய மோக்ஷ சாம்பிராஜியத்தை அடைவது உசிலம் அல்லவா?’ என்றாள், ”அப்படியானால், வருகிறதை நீ அனுபவித்துக்கொள்’ என்று அந்தத் துஷ்டர்கள் சொல்லிப் போய்விட்டார்கள். இனிமேல் கடவுளைத் தவிர வேறு திக்குத் திசை இல்லாதபடியால், அந்த உத்தமி கடவுளை நோக்கிப் பிரலாபித்துத் தன் குறைகளைச் சொல்லி முறையிடுவாள் ஆயினாள். 

“அவளுடைய வீட்டைச் சுற்றிப் பாரா இருக்கிறவர் களில் ஒருவன், அவளுடைய புருஷனுக்கு மித்திரன் ஆன படியால் குற்ற விசாரணை எப்படி நடக்கிறதென்று விசா ரித்துத் தெரிவிக்கும்படி, அவனுக்குச் சொல்லியிருந்தாள். அதிர சியமாய் விசாரணை நடந்தபடியால், அவனுக்குக் கூடச் சில நாள் வரைக்கும் சங்கதி வெளியாகாமலிருந்து, பிறகு பிரகடனம் ஆயிற்று. மங்களாகரம் பிள்ளை கொலை செய்ததாகக் குற்றம் ஸ்தாபிக்கப்படுகிறதாகவும், ஆனால் மங்கம்மாளுடைய உத்தரவு இல்லாமல், மரண தண்டனை செய்ய, அந்த சிற்றரசனுக்கு அதிகாரமில்லாதபடியால் மங்களாகரம் பிள்ளையை மரண தண்டனை செய்ய உடனே உத்தரவு அனுப்ப வேண்டுமென்று, அந்தக் கொடியன் மங்கம்மாளுக்கு இரகசியமாக எழுதிக்கொண்டிருப்பதாக வும், அந்தக் காவற் சேவகன் மூலமாகக் கற்பலங்காரி கேள்விப்பட்டு, அவளுக்கு உண்டான மனக் கிலேசம் இவ்வளவென்று யார் விவரிக்கக்கூடும்? அம்பு பட்டு விழுந்த மயில்போல், அவள் கீழே விழுந்து, புரண்டு, “ஐயோ தெய்வமே!நான் என்ன செய்வேன!! இந்த அநியாயத்தை யாரிடத்தில் சொல்லுவேன்? பிரஜைகளால் துன்பத்தை அடைந்தவர்கள் அரசனிடத்தில் முறையிடுவார்கள். அரசனே அக்கிரமம் செய்தால், உம்மைத் தவிர வேறே யாரிடத்தில் சொல்லுவேன்? என் புருஷனை இரக்ஷித்தருளும் ஸ்வாமி” என்று முறையிட்டாள். பிறகு கடவுளது கிருபை யால், அவளுக்குத் திடச் சித்தம் உண்டாகி, மங்கம்மா ளிடத்திலிருந்து உத்தரவு வருகிறதற்கு முன், அந்த அரசி யிடத்திற்குத் தான் எப்படியாவது போய், தன் புருஷனைக் காப்பாற்றுகிறதற்கு மார்க்கம் தேட வேண்டுமென்று நினைத்து, அந்தக் காவற்காரனுடைய சகாயத்தினால், அவள் நடுச்சாமத்தில் வீட்டை விட்டு வெளிப்பட்டு, திரிசிரபுரத்தை நோக்கி, ஓட்டமும் நடையுமாகப் போக ஆரம்பித்தாள். ஓடும்போதே, தபாற்காரன் எதிரே வரு கிறானா வென்று பார்த்துக்கொண்டு ஓடினாள். தங்க விக் கிரகம் போல் அவளுடைய மேனி பிரகாசிக்க, அவளு டைய கூந்தல் அவிழ்ந்து சோர, ஜலப்பிரவாகமாய்க் கண்ணீர் வடிந்து கொண்டு, அவள் ஓடுவதைப் பார்த்த வர்கள், ‘இவள் தேவ ஸ்திரீ யோ! அல்லது ராஜ. ஸ்திரீயோ!’ என்று மயங்கி, அவள் துக்கத்துக்காக இரங்கி அழாதவர்கள் ஒருவருமில்லை. அவள் நடு வழியில் தபாற்காரன் வருகிறதைக் கண்டு, அவனுக்கு நமஸ் காரம் செய்து, “ஏதாவது விசேஷம் உண்டா?” என்று வினாவ, அவன் மகாராணியிடத்திலிருந்து மரண தண்டனை உத்தரவைக் கொண்டு போவதாகத் தெரிவித்தான். அவள் உடனே தபாற்காரனுக்குத் தீர்க்க தண்டம் சமர்ப் பித்து, மரண தண்டனை உத்தரவை மாற்றுவதற்காகவே தான் மங்கம்மாளிடத்துக்குப் போவதாகவும், எப்படியும் அனுகூலம் கிடைக்குமென்றும், ஆகையால் அவன் புதுக்கோட்டைக்குப் போகாமல் தாமதிக்க வேண்டுமென்றும், மிகவும், பரிதாபமாய்க் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். இரக்க சுபாவமுள்ள அந்தத் தபாற்காரன், தேவ ஸ்திரீக்குச் சமானமாகிய அந்த ஸ்திரீயினுடைய பிரார்த்தனையை மறுக்க மாட்டாமல், ஒரு நாள் தாமதம் செய்வதாக ஒப்புக் கொண்டான். அந்தப்படி அவனி டத்தில் பிரமாணம் வாங்கிக் கொண்டு, வேடனுக்குப் பயந்து ஓடும் மான் போல, ஒரே ஓட்டமாக ஓடித் திரி சிரபுரத்தை அடைந்து, மங்கம்மாளுடைய அரண்மனைக் குள்ளே பிரவேசித்தாள். அரண்மனைக் காவற் காரர்கள், இவள் யாரோ தேவி யென்று, அவளைத் தடுக்க மனம் வராமல், உள்ளே விட்டுவிட்டார்கள். 

“அவள் மங்கம்மா ளுடைய கொலு மண்டபத்தை நோக்கி. ‘மகா ராணியே, அபயம்! மண்டலேஸ்வரியே, அபயம்!! மங்கர்யர்க் கரசியே, அபயம்!!! உலக நாயகியே, அபயம்!!!!’  என்று ஓலமிட்டு, சிம்மாசனத்தின் அடியிற் போய் விழுந்தாள். சில நாளாய் அன்னம் ஆகார மில்லாத டியாலும், நாற்காத வழியும் ஒரே ஓட்டமாய் ஓடி வந்தபடியாலும், தேக ஸ்மரணை தப்பி மூர்ச்சையாய் விட்டாள். அப்போது, சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்த மங்கம்மாள், உடனே கீழே இறங்கி, அவளைக் கட்டித் தழுவி, அவளுடைய மூர்ச்சை தெளியும்படி சைத்தியோபசாரங்கள் செய்வித்து,  மூர்ச்சை தெளிந்த உடனே, அவள் கையைப்பற்றி, அழைத்துக் காண்டு போய்த் தன் பக்கத்தில் சிம்மாசனத்தில் இருத்தி, அவளுடைய குறையைத் தெரிவிக்கும்படி உத் தரவு செய்தாள். கற்பலங்காரி, அந்தச் சிற்றரசன் செய்த கொடுமைகளை வியக்தமாக விக்ஞாபித்த உடனே, மகாராணிக்குத் தன் தம்பி மேலே உக்கிர கோபாக்கினி மூண்டு, அவனையும் சாட்சி முதலானவர்களையும் உடனே கொண்டுவரும்படி, குதிரைப் பட்டாளத்தைச் சேர்ந்த அனுப்பி நூறு போர் வீரர்களைப் புதுக்கோட்டைக்கு அனுப்பினாள். அந்தத் துஷ்ட அரசன், மங்களாகரம் பிள்ளையைக் கொல்வதற்காகக் கொலைக் களத்திலே கொண்டு போய் வைத்துக் கொண்டு, இராணியினுடைய உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான். அந்தச் சமயத்தில், நூறு போர் வீரர்களும் போய்ச் சேர்ந்து, இராணியினுடைய உத்தரவைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்டவுடனே, அந்த அரசனுக்குக் கோபமுண்டாகி, அந்தப் போர் வீரர்களின் மேல் பாய்ந்து, அவர்களில் இரு வரை வெட்டிக் கொன்றுவிட்டான். மற்றவர்கள் எல்லா ரும் அவனைப் பிடித்து, நிராயுதபாணி ஆக்கி, பின்கட்டு முறையாகக் கட்டி, அவனையும் சாட்சிகள் முதலானவர்களை யும் கொண்டு போய், மகாராணி சமூகத்தில் விட்டாகள். மகாராணி சாட்சிகளைப் பார்த்து, ‘மங்களாகரம் பிள்ளை கொலை செய்தது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க, அவர்கள் தங்களுக்கு யாதொன்றும் தெரியாதென் றும், ஆனால், அரசனுடைய ஆக்கினைக்குப் பயந்து, தங்க ளுக்குத் தெரிந்தது போல் பொய் வாக்குமூலம் எழுதி வைத்திருப்பதாகவும் சொன்னார்கள். உடனே இராக் கிளி, தன் தம்பியைப் பார்த்து, ‘நீ என்ன சொல்லு கிறாய்?’ என்று கேட்க, அவன் இராணியைக்கூட மதிக் காமல், சகோதரி என்கிற தைரியத்தினால், அலட்சியமாக மறுமொழி சொன்னான். மகாராணிக்கு அடங்காத கோப முண்டாகி, கிங்கரர்களைப் பார்த்து, ‘இவனை நான் உன்னத ஸ்தானத்தில் வைத்திருக்க, அந்த ஸ்தானத்துக்குத் தன்னை அபாத்திரன் ஆக்கிக் கொண்டபடியால், இவனை உன்னத ஸ்தானத்திலிருந்தே தள்ள வேண்டியது நியாயமா யிருக்கிறது. ஆகையால், இவனைத் தாயுமான ஸ்வாமி மலைச் சிகரத்தின் மேலே ஏற்றி,அங்கே இருந்து, கீழே தள்ளிவிடுங்கள்’ என்று உத்தரவு கொடுத்தாள். அந்தப் பிரகாரம் அவனை மலை மேல் ஏற்றித் தள்ளிவிட்டார்கள். அவனுடைய யோகமும், தேகமும், மோகமும் இவ்வகை யாக ஒரு நிமிஷத்துக்குள் முடிவு பெற்றன. பிறகு மங்கம் மாள், தன்னுடைய நியாய சபையில் மங்களாகரம் பிள்ளைக் குப் பெரிய உத்தியோகம் செய்து கொடுத்து, அவனைக் குபேர சம்பத்து உடையவன் ஆக்கினாள். என்றைக் கிருந் தாலும், பரஸ்திரீ கமனம் செய்கிறவர்களுடைய கதி அதோகதி என்பதற்கு, அந்தக் காமியப்ப நாயக்கனே சாட்சி. கற்புள்ள ஸ்திரீகள் மேன்மை அடைவார்கள் என் பதற்குக் கற்பலங்காரியே சாட்சி” என்று, என் தாயார் சொல்லி முடித்தார்கள். இந்தச் சரித்திரத்தைக் கேட்டு, நானும் ஞானாம்பாளும் அளவற்ற வியப்பும் களிப்பும் அடைந்தோம். 

9-ஆம் அதிகாரம்

இம்மை மறுமையைப் பற்றிய விடுகதையும், அதன் பொருளும்

கருணானந்தம் பிள்ளை தன் மகளையும் மருமகனையும் நம்பி மோசம் போன சரித்திரம் 

ஒருநாள் எங்கள் உபாத்தியாயர் ஒரு விடுகதை சொல்லி, எங்களை விடுவிக்கும்படி சொன்னார். அஃது என்ன வென்றால்:- 

“இங்குண்டு, அங்கில்லை; அங்குண்டு இங்கில்லை; இங்கும் உண்டு, அங்கும் உண்டு; இங்கும் இல்லை, அங்கும் இல்லை” என்பதுதான். உடனே நான், இங்குண்டு. அங்கில்லை” என்பதற்கு, ஒருவன் ஆஸ்தி வந்தனா யிருந்து, புண்ணியம் செய்யாமலிருப்பா னானால், அவனுக்கு இந்த உலகத்தில் மட்டும் சுகமே தவிர, அந்த உலகத்திலே சுத மில்லை என்றும்; “அங்குண்டு, இங்கில்லை” என்பதற்கு, ஒருவன் தரித்திரவானாயும் புண்ணியவானாயும் இருப்பா னானால், அவனுக்கு மறுமையிலே சுகமே தவிர, இம்மைச் சுகம் இல்லையென்றும், ‘இங்கும் உண்டு, அங்கும் உண்டு” என்பதற்கு, ஆஸ்தியும் தர்மமும் உடையவனுக்கு இகபரம் இரண்டிலும் சுகமென்றும், ”இங்கும் இல்லை, அங்கும் இல்லை” என்பதற்கு, செல்வமும் இல்லாமல், புண்ணியமும் இல்லாமல் இருப்பவனுக்கு, இவ்வுலகத்திலும் சுகமில்லை, பரலோகத்திலும் சுகமில்லை என்றும், பொருள் விடுவித்தேன். 

இதைக் கேட்டவுடனே உபாத்தியாயர் என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்: “அந்த விடுகதைக்கு நீ சொன்ன அர்த்தம் தகுதியானதுதான். ஆனால், அதில் சில காரியங் களைக் கவனிக்க வேண்டியது முக்கியம். இகலோக சுகத்தை அனுபவிப்பதற்குக் கூடச் செல்வப் பொருள் மட்டுமே போதாது. செல்வத்துடன் புண்ணியமும் சேர்ந்திருக்க வேண்டியது முக்கியம். சில ஆஸ்தி வந்தர்கள், தாங்களும் அநுபவியாமல், பிறருக்கும் உபகாரம் செய்யாமல், பொருள்களை, பூட்டி வைத்துக் கொண்டு, லோபம் செய் கிறார்கள். அவர்களுக்கு இகத்திலும் பரத்திலும் என்ன பாக்கியம் உண்டு? இன்னும் சிலர், எவ்வளவு தனம் இருந் தாலும் திருப்தி அடையாமல், மேலும் மேலும் ஆசைப் பட்டு, நித்திய தரித்திரர்கள் போல் துக்கத்தை அனுபவிக் கிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகத்தில் என்ன சுகம் உண்டு? இன்னும் பல ஆஸ்தி வந்தர்கள் பரஸ்திரீ கமனம், சூது, மதுபானம், பரஹிம்ஸை முதலான துர்விஷயங்களில் பொருளைச் செலவழித்து, பல வியாதிகளையும், துன்பங்களை யும், அபகீர்த்திகளையும், பாவத்தையும், நரகத்தையும் சம்பாதித்துக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய தனம் அவர்களுக்குக் கேடாக முடிந்ததே தவிர, நன்மையைக் கொடுக்கவில்லை. ஆகையால், இம்மையின் சுகாநுபவத் துக்குக் கூடப் பு ண்ணியம் அவசியமாயிருக்கின்றது. ஒருவன் ஏழையாயிருந்தாலும் பொய் புரட்டு இல்லாமல், தேகப் பிரயாசைப்பட்டு, தன்னையும் தன்னை அடுத்தவர்களை யும் சம்ரக்ஷித்து, தெய்வ பக்தியும் தர்ம சிந்தையும் உள்ள வனாயிருப்பானானால், அவனுக்கு இகத்திலும் பரத்திலும் என்ன குறை இருக்கின்றது? 

தனம், உத்தியோகம், அதிகாரம் முதலிய செல்வங்கள் அற்பமாகவும், நிலை அற்றதாகவும், முன்னே நான் சொன்னபடி துன்ப ஹேதுவாகவும், இருக்கின்றன. அந்தச் செல்வங்களுக்கு அதிகாரிகளாலும், திருடர்களாலும், நெருப்பு முதலிய காரணங்களாலும், அநேக அபாயங்கள் உண்டு. பின்னும் வார்த்திக தசையிலும், நாம் வியாதியா யிருக்கும் போதும், அந்தச் சுகங்களை அனுபவிக்கச் சக்தியில்லாதவர்களாய்ப் போகிறோம். நாம் இறந்த பிற்பாடு, அந்தச் செல்வங்கள் கூட வருகிறது மில்லை. புண்ணியமோவென்றால், நிலைமை உள்ள தாகவும், ஆத்ம சந்தோஷத்தை உண்டுபண்ணுவதாகவும், அந்நியரால் அபகரிக்கக் கூடாததாகவும், பரலோகத்திலும் நம்மைத் தொடர்ந்து வருவதாகவும், இருக்கின்றது. இந்த உலகத்திலே துன்பம் கலவாத சுகமில்லை யா லால், அந்த அற்ப சுகத்தை மதிக்காமல், புண்ணியப் பயனாகிய நித்திய சுகத்தையே நாம் தேட வேண்டும்” என்றார். 

என்னுடைய உபாத்தியாயர் சொன்ன விடுகதையை என் தாயாருக்குத் தெரிவித்தபோது, என் தாயார் என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்: 

”உன்னுடைய உபாத்தியாய ராகிய கருணானந்தம் பிள்ளையைச் சாதாரண மனுஷனாக நினைக்க வேண்டாம். அவர் புத்தியிலும் நற்குணங்களிலும் சிறந்தவர். அவர் பெரிய திரவிய வந்தராயிராவிட்டாலும், அவர் வேண்டிய மட்டில் ஒரு குறைவு மில்லாமல், சில நிலங்கள், வீடுகள் முதலிய பூஸ்திகள் உடையவராயிருந்தார். அவருக்கு ஒரு பெண்ணைத் தவிர வேறே சந்ததியில்லை. அந்தப் பெண்ணை மிகவும் அன்பாக வளர்த்து, அவளுக்குப் பக்குவ காலம் வந்தவுடனே, ஒரு தகுந்த புருஷனைத் தேடி, கலியாணம் செய்வித்தார். அவருக்குச் சில காலத் துக்கு முன் க்ஷயரோகம் கண்டு, பிழைப்போ மென்கிற நம்பிக்கை இல்லாமையினால், ஒரு மரண சாதனம் எழுதி வைத்தார். அதில், தமது சொத்துக்கள் முழுமையும், அன்று முதல் தம்முடைய மகளும் அவள் புருஷனும் அநு பவித்துக் கொண்டு, தமக்கு உத்தரக் கிரியை செய்து, தம்முடைய பெண்சாதியையும் சம்ரக்ஷித்து வருகிறதென றும், சில விசை தாமும் பிழைத்துக் கொள்ளுகிற பட்சத் தில், தம்மையும் அவர்களே ஆதரிக்க வேண்டுமென்றும், நிபந்தனை செய்யப்பட்டது. அந்த மரண சாதனப்படி, சகல ஸ்திதிகளும் உடனே அவருடைய மகளுக்கும் மரு மகனுக்கும் ஸ்வாதீனமாகி, மிராசும் அவர்கள் பெயரால் பதிவாகி, அனுபவிக்கத் தொடங்கினார்கள். பிற்பாடு, தெய்வா நுகூலத்தால் கருணானந்தம் பிள்ளை தேச சௌக் கியம் அடைந்து, பிழைத்துக் கொண்டார். அவரையும், அவருடைய பத்தினியையும், சிலநாள் மட்டும் அவர்களு டைய மகளும் மருமகனும் சம்ரக்ஷணை செய்து, பிற்பாடு அவர்களே : வீட்டை விட்டு வெளிப்படும்படியான விதமா கக் கொடுமை செய்ய ஆரம்பித்தார்கள். கருணானந்தம் பிள்ளை மறுபடியும் தம்முடைய சொத்தை அடைகிறதற்குப் பல பிரயத்தனங்கள் செய்தும், அவர் எழுதி வைத்த மரண சாதனமே அவருக்கு விரோதமாயிருந்ததால், அவரு டைய பிரயத்தனம் பலிக்கவில்லை. அவரும், அவருடைய பத்தினியும், அன்ன வஸ்திரத்துக்கு மார்க்கமில்லாமல், மிகவும் துன்பப்பட்டார்கள். அவர் யோக்கியரென்பதும், அவர் மருமகனை நம்பி மோசம் போனதும், சகலருக்கும் தெரியுமானதால், அவருக்குப் பொருள் உதவி செய்ய வேண்டுமென்று பலர் நினைத்தார்கள். ஆனால், தேகத்தில் சக்தியுள்ள வரையில் உழைத்து ஜீவிக்கவேண்டுமே தவிர, யாசகத் தொழில் ஈனத் தொழிலென்பது அவருடைய சிந்தாந்த மாகையால், அவர் பிறருடைய உதவியை அபேஷிக்கவில்லை. என் தகப்பனாராகிய சந்திரசேகர முதலி யாருக்கும் இவருக்கும் சிநேகமானபடியால், அவருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் இவர் வாடகைக்குக் குடியிருந்து கொண்டு, அவரிடத்தில் சொற்பத் தொகை கடன் வாங்கி, முதலாய் வைத்து வியாபாரம் செய்து, காலக்ஷேபம் செய்து வந்தார். 

அவர் இழந்துபோன சொத்து, மறுபடியும் அவருக்குச் சித்திக்கும்படி உபாயம் செய்யவேண்டுமென்று, என் தகப்பனாரும் உன் தகப்பனாரும் யோசித்துக் கொண்டு, ஒரு நாள் அவரை அழைத்துச் சொன்னதாவது?- “ஒரு பெரிய பெட்டியில் நாலாயிரம் வராகன் வைத்துப் பூட்டி, அதை உம்முடைய வீட்டில் இரகசியமாய்க் கொண்டு வந்து வைக்கிறோம். நீர் நாளையத் தினம் எங்களுக்கும் உமது மகள் மருமகன் முதலியோர்களுக்கும். விருந்து செய்வதாகச் சொல்லியனுப்பும். உம்முடைய வீட்டில் நாங்கள் வந்து போஜனம் செய்து முடிந்தவுடனே நாங்கள் இருவரும் ஆளுக்கு இரண்டாயிரம் வராகன் வீதம் கடன் கொடுக்கும்படி உம்மைக் கேட்கிறோம். உடனே நீர் பெட்டியைத் திறந்து, எங்களுக்குக் கடன் கொடுப்பது போலப் பாவனை பண்ணி,எங்களுடைய பணத்தை எடுத்து எங்களுக்குக் கொடுத்துவிடும். அதைப் பார்த்தவுடனே, உமது மகளும் மருமகனும் உம்மிடத்தில் இன்னமும் பொரு ளிருப்பதாக எண்ணி, அதையும் கிரகிப்பதற்காக உம் முடைய தயவைச் சம்பாதிக்கப் பிரயாசைப்படுவார்கள். அந்தச் ‘சமயத்தில் அவர்கள் கையிலிருக்கிற மரண சாத னத்தை எப்படியாவது கைப்பற்றிக் கொள்ளலாம்” என்றார்கள். கருணானந்தம் பிள்ளை ‘உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்’ என்றார். உடனே, என் தகப்பனாரும் உன் தகப்பனாரும் ஒரு பெட்டியில் நாலாயிரம் வராகன் வைத்துப் பிள்ளை குடியிருக்கிற வீட்டுக்கு பூட்டி, கருணானந்தம் இரகசியமாய் அனுப்பினார்கள். அவர் மறு நாள் தம்முடைய மகள் மருமகன் முதலானவர்கள் விருந்துக்கு வரும்படி சொல்லியனுப்பினார். அவர் விருந்து செய்வதற்கு வகை யேதென்று மகளும் மருமகனும் ஆச்சரியப்பட்டுக் கொண்டு, அதையும் போய்ப் பார்க்கலாமென்று, அவர் வீட்டுக்குப் போனார்கள். என் தகப்பனாரும் உன் தகப்பனாரும் விருந் துக்கு வேண்டிய சாமக் கிரியைகளை அனுப்பி, தங்களுடைய பரிசாரகர்களைக் கொண்டு விருந்து செய்விதது, அவர்களும் விருந்து சாப்பிடப் போனார்கள். விருந்து முடிந்தவுடனே, என் தகப்பனார் எழுந்து, இரண்டாயிரம் வராக தமக்குக் கடன் கொடுக்கவேண்டுமென்று கருணானந்தம் பிள்ளையைக் கேட்டார். உன் தகப்பனாரும் இரண்டாயிரம் வராகன் கடன் கேட்டார்கள். கருணானந்தம்பிள்ளை ஒரு அறைக் குள்ளே போய், பெட்டியைத் திறந்து, நாலாயிரம் வராகன் எடுத்துக் கொண்டு வந்து, கலகலவென்று கொட்டினார். அவர்கள் எண்ணி, ஆளுக்கு இரண்டாயிரம் வராகன் வீதம் எடுத்துக் கொண்டு, போய் விட்டார்கள். இதைக் கண்டவுடனே, மலத்தைக் கண்ட நாய்க்கு வாயூறுவதுபோல, கருணானந்தம்பிள்ளை மகளும் மருமகனும் வாயூறிக்கொண்டு, மலைத்து ஸ்தம்பித்துப் போயிருந்தார்கள். ‘ஒரு நிமிஷத் தில் நாலாயிரம் வராகன் கடன் கொடுப்பாரானால், இவரு டைய செல்வம் எவ்வளவு பெரிதாயிருக்க வேண்டும்? இதை நாம் அறியாமற் போய்விட்டோமே’ என்று பெருமூச்சுவிட ஆரம்பித்தார்கள். அந்தப் பணத்தைக் கண்டவுடனே. அவர் மேலே பகளுக்கும் மருமகனுக்கும் அத்தியந்த விசுவாசமுண்டாய்விட்டது. அவர், அந்தச் சமயத்தில், அவர்களை ஆயிரம் செருப்பாலே அடித்தாலும், பட்டுக் கொள்வார்கள். 

மாமனாருக்குக் குல்லாப் பொடும்படி மருமகன் தன் பெண்சாதிக்குக் கண் சாடை காட்டிவிட்டுப் போய் விட் டான். அவள் தகப்பனுக்குத் தூபம் போட ஆரம்பித்தாள். எப்படி யென்றால், தகப்பனைப் பார்த்து, ‘ஐயாவே? எங்களுடைய வாழ்வுகளெல்லாம் உங்களால் வந்த வாழ்வு தானே; நீங்கள் கிருபை செய்யாவிட்டால் நாங்கள் இந் நாள் மட்டும் ஜீவித்திருப்போமா? தாயும் தந்தையும் கண் கண்ட தெய்வமென்று சகல சாஸ்திரங்களும் சொல்லு கின்றனவே! நீங்கள் சொல்லாமல் எங்களை விட்டுப் புறப் பட்டு வந்த நாள் முதல், எங்களுக்கு நல்ல நித்திரை இல்லை. அன்னம் ஆகாரமில்லை. எங்களை நாங்கள் மறந் திருந்தாலும் இருப்போமே யல்லாமல், உங்களை மறந்த தேர மில்லை. உங்களுடைய தேகம் இளைத்திருப்பதை நான் பார்க்கும் போது, என்னுடைய மனம் பதைக்கின்றது” என்று பல வகையாகத் தப்பு ஸ்தோத்திரம் செய்தாள். இவ்வளவும் பணம் செய்கிற கூத்தென்று அவர் நன்றாய்த் தெரிந்து கொண்டு, மகளைப் பார்த்து, விசனப்பட வேண்டாம். அம்மா! உனக்கு ஏதாவது பேக்ஷையிருந்தால் தெரிவி’ என்று நய வஞ்சகமாய்ச் சொன்னார், அவள், ‘உங்களுடைய மரண சாதனத்தில் எல்லா ஸ்திதிகளையும் குறிக்க வில்லையே’ என்றாள். அவர், ‘ஆம், அந்த மரண சாதனத்தைக் கொண்டு வா’ என்றார் அவன் ஒரு நிமிஷத்தில் பட்சி போற் பறந்தோடி. மரண சாதனத்தைக்கொண்டு வந்து தகப்பனுக்குக் காட்டினாள். அவர், ‘அதைக் கிழித்து விடு, நான் வேறே சாதனம் எழுதிக் கொடுக்கிறேன்’ என்றார்; அவள் அந்தச் சீட்டையும், சீட்டினால் வந்த பாக்கியத்தையும் கிழித்து நாசம் செய்து விட்டாள். அவர். ‘நான் தகுந்தபடி எழுதி வைக்கிறேன். நீயும் உனது நாயகனும் இருட்டின வுடனே வந்து அந்தப் பெட்டியை உங்கள் வீட்டுக்குக் கொண்டு போங்கள்’ என்றார். அவள் கம்பிர ஜன்னி கொண்டவள் போல எழுந்து புருஷனுக்குச் சந்தோஷ சமாச்சாரம் சொல்வதற்காக ஓடினாள். இருட்டின வுடனே புருஷனும், பெண்சாதியும், அந்தப் பெட்டியைக் கொண்டு போவதற்காக வந்தார்கள். எத்தனை பேர் கூடினாலும் தூக்கக் கூடாத பளுவாயிருந்த தால், அநேகர் கூடி முக்கி முரண்டி, ஒரு வண்டியின் மேலே ஏற்றினார்கள். அதை வீட்டுக்குக் கொண்டுபோய்ப் புருஷனும் பாரியும் பேராசையுடனே திறந்து பார்த்தார்கள். பெட்டிக்குள்ளாக மண்ணும் கல்லும் நிறைக்கப் பட்டிருந்ததும் தவிர. இரண்டு ஓடுகளும், இரண்டு கயிறுகளும்,ஒரு காகிதத் துண்டு மிருந்தன. அந்த காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது என்ன வென்றால்!- “நீங்கள் என் வாயில் மண் போட்ட படியினாலே, உங்களுடைய வாயிலே போட்டுக் கொள்வதற்காகப் பெட்டியில் மண் வைத்திருக்கிறேன். நீங்கள் என்னைப் பிச்சை எடுக்கும் படி விட்டுவிட்ட படியால், நீங்கள் பிச்சை எடுக்கும்படி இரண்டு ஓடுகள் வைத்திருக்கிறேன், பிச்சை எடுக்க உங்களுக்குச் சம்மதம் இல்லா விட்டால், நீங்கள் கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு சாகும்படி, கயிறும் வைத்திருக்கிறேன்’ என்பதுதான். இதைப் பார்த்தவுடனே, அவர்களுடைய ஸ்திதி எப்படி யிருந்திருக்கும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? கருணானந்தம் பிள்ளை செய்தது, சரி சரியென்று அவர்களுடைய மனமே பறை யடிக்க ஆரம்பித்தது. மரண சாதனம் பரிகரிக்கப்பட்டுப் என் தந்தையார் தம்முடைய ஆட்களைக் போனதால், கொண்டு, பூஸ்திகளை யெல்லாம் கருணானந்தம் பிள்ளை வசப்படுத்தி விட்டார். அவருடைய மகளுக்கும் மருமக மரண சாதனமே, மரண னுக்கும் ஆதாரமா யிருந்த மரண மாய்ப் போய்விட்ட படியாலும், அதிகாரிக ளெல்லாம் நியாய பக்ஷத்திலே இருந்த படியாலும், அவர்கள் மறுபடி யும் அந்தச் சொத்தை அபகரிக்கிறதற்குச் செய்த பிரயத் தனங்கள் நிஷ்மலமாய்ப் போய் விட்டன. மகளும் மரு மகனும் புத்தி கெட்டுப் பேசுவதற்கு, இந்தச் சொத்து தானே காரணமாயிருந்த தென்று கருணானந்தம் பிள் ளைக்கு வெறுப்புண்டாகி, அவர் தமது குடும்ப சம்ரக்ஷ ணைக்கு வேண்டிய சொற்ப ஸ்திதிகளை வைத்துக்கொண்டு, மற்ற ஸ்திதிகளை யெல்லாம் பல பாகமாய்ப் பிரித்து, தம் முடைய எளிய சுற்றத்தார் முதலானவர்களுக்குத் தானம் செய்து விட்டார். அவருடைய மகளும் மருமகனும் ஏழைகளாய்ப் போனதால், அவர்களையும் தம்முடைய குடும்பத்தில் சேர்த்துக் கொண்டு, ஆதரித்து வருகிறார். மனுஷ தேகம் எடுத்தவர்கள், அவர்களாற் கூடிய பரோப காரம் செய்ய வேண்டு மென்றும், பரோபகார மில்லாத வர்கள், பூமிக்குச் சுமையென்றும் நினைத்து, அவருடைய வீட்டில் தர்மப் பள்ளிக்கூடம் வைத்துக் கொண்டு, எண் ணிக்கை யில்லாத பிள்ளைகளுக்கு வித்தியா தானம் செய்து வருகின்றார். அப்படியே, உனக்கும் ஞானாம்பா ளுக்கும் தர்மத்துக்காகக் கல்வி போதிக்கிறாரே யல்லாது, யாதொரு பிரயோஜனத்துக்காக அல்ல. அவர் மகாத்மா வானதால், அவர் சொல்லுகிற ஒவ்வொரு புத்தியையும், ஒவ்வொரு மாணிக்கம்போல, உன்னுடைய மனதில் பதித் துக் கொள்” என்றார்கள். உபாத்தியாயர் சரித்திரத்தை நான் கேட்ட பிற்பாடு, அவரிடத்தில் எனக்கு அதிக பூஜிதையும், கொளரவமும் உண்டாகி, அவருடைய வாக்கை வேத வாக்காக எண்ணி, அந்தப் பிரகாரம் அனுஷ்டிக்கத் தொடங்கினேன். 

10-ஆம் அதிகாரம்

கடவுளின் நித்தியத்துவம், கல்வியின் பிரயோ ஜனம், கடவுளை அறிதல் 

அரசனுக்கும் கடவுளுக்கும் உள்ள பேதம்

உபாத்தியாயர் ஒருநாள் எங்களுக்குப் பாடங் கொடுத்த பிறகு, என்னைப் பார்த்து “கடவுளுக்கு ஒரு சொன்னதா நிமிஷம் எப்படி?” என்றார். நான் உடனே வது: “ஒரு பெரிய மணல் மலை இருக்கிறது; அந்த மலையி லிருந்து, பதினாயிரம் வருஷத்துக்கு ஒரு தரம், ஒரு மணல் பிரிந்து கெட்டுப் போகிறது. பதினாயிரம் வருஷத்துக்கு ஒரு மணல் வீதமாகக்கெட்டு, அந்த மலை முழுவதும் நாச மாவதற்கு எத்தனை காலம் செல்லுமோ, அத்தனை காலங் கூட சுவாமிக்கு ஒரு நிமிஷம் ஆகமாட்டாது,” என்றேன். நான் சொன்னதை குரு அங்கீகரித்துக் கொண்டு, ஞானாம் பாளைப் பார்த்து “நீயும் ஒரு திருஷ்டாந்தம் சொல்லு” என்றார். உடனே ஞானாம்பாள், “இலட்சம் வருஷத் துக்கு ஒவ்வொரு துளியாக வற்றி” சமுத்திர ஜலம் முழு வதும் வற்றுவதற்கு எவ்வளவு காலம் செல்லுமோ அவ் வளவு காலங்கூடச் சுவாமிக்கு ஒரு நிமிஷம் ஆகாது,’ என்றாள். உடனே உபாத்தியாயர் எங்களைப் பார்த்து, “சுவாமிக்கு ஒரு நிமிஷம் அப்படி இருக்குமானால், அவருடைய நித்திய காலத்தை யார் அளவிடக் கூடும்? நாம் புண்ணியம் செய்வோமானால், முடிவில்லாத நித்திய பாவம் செய்வோமானால், சுகத்தை அனுபவிக்கலாம். முடிவில்லாத துன்பத்தை அனுபவிக்க வேண்டும்” என்றார். 

இவ்வகையாக, நானும் ஞானாம்பாளும் அவளுடைய வீட்டிலே படித்துக் கொண்டு வரும்போது, எங்களுக்கு வயது அதிகரித்ததால், இனிமேல் நாங்கள் இருவரும் ஓரிடத்திலே படிக்கக் கூடாதென்று என் தாயார் அபிப் பிராயப்பட்டு, என்னை வீட்டுக்கு வரவழைத்துக் கொண்டார்கள். அதுமுதல் ஞானாம்பாளைப் பார்க்கும் படி யான சந்தர்ப்பம் நேரிடாத படியால், எனக்கு மகத்தா விசனகரமா யிருப்பது, எங்கள் உபாத்தியாயர், முந்தி ஞானாம்பாள் வீட்டுக்குப் போய் அவளுக்குப் பாடம் கொடுத்த பிறகு, என் வீட்டுக்கு வந்து எனக்குப் பாடம் சொல்லிக்கொண்டு வந்தார். அவர், ஞானாம்பாளைப் பார்த்து வருகிறவ ரானபடியால் அவருடைய முகத்தைப் பார்க்கும் போதெல்லாம், ஒருவாறு எனக்குத் திருப்தியா யிருந்தது. அவர், ஒருநாள் என்னைப் பார்த்து, “ஞானாம்பாளை நல்லவள் என்று நினைத்தேன். அவள் உன் தாயாருக்கு ஒரு துரோகம் செய்து விட்டாள்” என்றார். இதைக் கேட்ட வுடனே, நான் மலைத்துப் போய், பேசாமல் இருந்தேன். அவர் உடனே சிரித்துக் கொண்டு சொல்லுகிறார்: ஞானாம்பாள் பிறக்கிறதற்கு முன் குணத்தில் உன் தாயாருக்குச் சமானமான ஸ்திரீகள் ஒருவரும் இல்லை ; ஞானாம்பாள் பிறந்த பிற்பாடு அவள் உன் தாயாருக்குச் சமானம் என்று சொல்லும் படியாகப் பிரகாசிக்கிறாள்; இதுதான் ஞானாம்பாள் செய்த துரோகம்’ என்றார். இதைக் கேட்ட வுடனே, என் கவலை தீர்ந்து, அக மகிழ்ச்சி அடைந்தேன். 

இவ்வண்ணமாகச் சில நாள் என் வீட்டில் நான் தனி மையாய்ப் படித்த பிற்பாடு, ஒரு நாள் உபாத்தியார் என்னை நோக்கி வசனிக்கிறார்: “ஆசான் மாணாக்கனுக்கு எவ்வளவு கற்பிக்கலாமோ, அவ்வளவு நான் உனக்குக் கற்பித்து விட்டேன். இனி, நீயே படித்து கல்வியைப் பூரணம் செய்ய வேண்டும். ஆசானுடைய போதகம் முடிந்த உடனே, கல்வியும் முடிந்து போனதாகச் சிலர் நினைக்கிறார்கள். அப்படி எண்ணுவது தப்பு. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பாடசாலையை விட்ட பிற்பாடு தான் படிப்பு ஆரம்பிக்கினறது. ‘பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது’ என்பது போல், பள்ளிக்கூடத்தில் படிக்கிற படிப்பை அபிவிருத்தி செய்யாவிட்டால், அந்தப் படிப்பு ஒன்றுக்கும் உதவாது. பாடசாலையிலே படிக்கிற படிப்பு அஸ்திவாரமாகவும், பாடசாலையை விட்ட பிற்பாடு, தானே படிக்கிற படிப்பு மேற் கட்டடத்துக்குச் சமானமாயுமிருக்கின்றது. ஒரு ஊருக்குப் போகிற மார்க்கத்தைக் காட்டுவது போல, கல்வி கற்க வேண்டிய மார்க்கத்தை மட்டும் உபாத்தியாயர் போதிப்பதே அல்லாது கல்வியையே பூரணமாய்க் கற்பிப்பது சாத்திய மல்ல. உபாத்தியாயர் காட்டிய வழியைப் பிடித்துக் கொண்டு, அகோராத்திரம் படித்துக் கல்வியைப் பூர்த்தி செய்ய மாணாக்கனுக்குக் கடன். வித்தையை அபிவிர்த்தி செய்யாமல் பாடசாலைப் படிப்பே போதுமென்று இருக் கிறவன், மாளிகை கட்டாமல் அஸ்திவாரமே போதுமென்று இருக்கிறவனுக்குச் சமானமாகிறான். பூட்டி வைத்திருக் கிற பொக்கிஷத்திற்குத் திறவுகோல் கொடுப்பது போல எந்தப் புஸ்தகத்தை வாசித்தாலும் அர்த்தம் தெரிந்து கொள்ளும் படியான ஞானத்தை உனக்குப் போதித்து, கையிலே வித்தியா பொக்கிஷத்தின் திறவுகோலை உன் கொடுத்து விட்டேன். இனிமேல், நீ உன்னுடைய முயற்சி யால், அந்தப் பொக்கிஷத்தைத் திறந்து அனுபவிக்க வேண்டுமே அல்லாது, நான் செய்யத்தக்கது ஒன்றுமில்லை. அரும் பதங்களுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமானால், அகராதி, நிகண்டு முதலிய வியாக்கியான நூல்களும் இருக்கின்றன. திருவள்ளுவர், கம்பன் முதலிய மகா வித்வான்கள், தங்களுடைய முயற்சியால் கவி சிரேஷ்டர்கள் ஆனார்களே தவிர, அவர்களுடைய உபாத்தியாயரிடத்தில் அவர்கள் கற்றுக் கொண்டது அற்பமாகவே யிருக்கும். அந்த வித்வான்களெல்லாரும் மனுஷப் பிறப்பே அல்லாமல், தெய்வீகம் அல்லவே. அவர்களைப் போல நீயும் பிரயாசைப் பட்டுக் கல்வி பயின்றால், அவர்களுக்குச் சமானம் ஆவதற்கு ஆடங்கம் என்ன? 

 ”கல்வியின் பிரயோஜனம் எல்லாம் கூடி, கடவுளைஅறிவதுதான். சகல சாஸ்திரங்களும் வேதங்களும், வேதாகமங்களும், சமய கோடிகளும் சொல்லுவதெல்லாம், கடவுளே அல்லாமல் வேறல்ல. கல்விமானுக்குத் தெய்வ பக்தியே சிறந்த பூஷணமாயிருக்கின்றது. ஒருவன் கல்வி மானாயிருந்தாலும் தனவானாயிருந்தாலும் அவனிடத்தில் தெய்வ நேசம் இல்லாவிட்டால், அவனைப்போல் நிர்ப்பாக்கியர்கள் ஒருவருமில்லை. ஒருவன் தரித்திரனாயிருந்தாலும், பக்திமானாயிருப்பானானால், அவனைப்போல் பாக்கியசாலிகள் ஒருவருமில்லை. ஒவ்வொரு நிமிஷமும் கடவுளிடத்தில் நாம் பெற்றுக் கொள்ளுகிற உபகாரங்களுக்குக் கணக் குண்டா? நாம் உண்பது அவருடைய அன்னம்; உடுப்பது அவருடைய வஸ்திரம்; குடிப்பது அவருடைய ஜலம், நாம் வசிப்பது அவருடைய வீடு; சஞ்சரிப்பது அவருடைய பூமி; நாம் சுவாசிப்பது அவருடைய சுவாசம்; நாம் காண்பது அவருடைய பிரகாசம்; நாம் அனுபவிப்பது அவருடைய சுகம்; அந்தச் சுகங்களை அனுபவிக்கிற நமது தேகமும் பஞ்சேந்திரிங்களும் ஆத்துமாவும் அவருடைய கொடை. அவருடைய கிருபை இல்லாவிட்டால், ஒரு நிமிஷம் நாம் சீவிக்கக்கூடுமா? அவர் நம்மை அசைக்காமல் நாம் அசையக் கூடுமா? அவர் நம்மை நட்பிக்காவிட்டால், நாம் நடக்கக் கூடுமா? பூமியைப் பார்த்தாலும், ஆகாயத்தைப் பார்த்தாலும், எங்கே பார்த்தாலும், அவருடைய உபகார மயமே அன்றி, வேறுண்டா? ஆகாயம் நம்மைச் சூழ்ந்திருப்பது போல், அவருடைய உபகாரங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. சமுததிரத்திலே பிறந்து, சமுத்திரத்திலே வளர்ந்து, சமுத்திரத்திலே சீவிக்கிற மீன்களைப் போல, கடவுளது கிருபா சமுத்திரத்துக்குள்ளாகவே நாம் ஜனித்து, வளர்ந்து, சீவிக்கிறோம். 

“அரசனுடைய ஊழியத்திற்கும் தெய்வ ஊழியத்திற் கும் இருக்கிற பேதத்தைப் பார். அரசனுக்கு நாம் நின்று சேவிக்க வேண்டும். கடவுளைத் தியானிக்க நாம் நிற்க வேண்டுவதில்லை. நாம் பசியாயிருக்க அரசன் உண்ணு கிறான். கடவுள் தாம் உண்ணாமல், நம்மை உண்பிக்கிறார். அரசன் தூங்கும்போது நாம் தூங்காமல், அவனைக் காக்க வேண்டும். கடவுள் தாம் தூங்காமல், நம்மைத் தூங்க வைத்துக் காவலாயிருக்கிறார். அரசன் ஓயாமல் நம்மிடத் தில் வேலை கொள்ளுகிறான். கடவுள் நம்மிடத்தில் ஒரு வேலையும் வாங்காமல், அவரே சகலவேலைகளையும் செய்கிறார். அரசன் நம்மிடத்தில் வரி யாசகம் செய்கிறான். கடவுள் நம்முடைய அன்பைத் தவிர, வேறொன்றும் அபேக்ஷிக்க வில்லை. அரசன் அற்பக் குற்றத்தையும் க்ஷமியான். கடவுள் நாம் தினம்தோறும் செய்கிற எண்ணிறந்த குற்றங்களையும் பொறுத்துக் கொண்டு, சாகிற வரையில் நம்மைத் தண்டி யாமல், சகல உபகாரங்களும் செய்து வருகிறார். 

அரசன் சுய புத்தி இல்லாதவன் என்பதற்கு, அவ னுடைய மந்திரிகளே சாக்ஷி. அவன் சுய சூரன் அல்ல என்பதற்கு, அவனுடைய படைகளே சாக்ஷி. அவன் யாசகஸ் தன் என்பதற்கு, அவன் வாங்கும் குடி இறையே சாக்ஷி. அவன் நியாய பரிபாலனம் செய்யத் தெரியாதவன் என்பதற்கு, அவனால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதிகளே சாக்ஷி. இப்படிப்பட்ட குறைவுகளில்லாமல், சர்வக்ஞத்துவ மும், சர்வ சக்தியும், சர்வ சாம்பிராச்சியமும் உடைய கடவுளை, எப்போதும் தியானிக்க வேண்டும். அவரைத் தியானிப்பது நமக்கே ஆத்மானந்தமாகவும், அவரைப் புகழ்வது வாய்க்கு மாதுரியமாகவும், அவருடைய நாமத்தைக் கேட்பது காதுக்கு இனிமையாயுமிருக்கின்றது” என்று அமிர்த வருஷம் போற் பிரசங்கித்தார். அது முதல் உபாத்தியார் தினந்தோறும் வராமல், வாரத்துக்கு ஒரு முறை வந்து, எனக்குள்ள சந்தேகங்களைத் தெளிவித்து விட்டுப் போவார். அவர் ஆஞ்ஞாபித்தபடி, நான் ஒரு நிமிஷம்கூடச் சும்மா இராமல், எப்போதும் கிரந்த கால க்ஷேபம் செய்து வந்தேன். 

– தொடரும்…

– மாயூரம் மாஜி டிஸ்டிரிக்ட் முன்சீப் ச.வேதநாயகம் பிள்ளையவர்கள் (1826-1889) இயற்றியது, முதற் பதிப்பு: 1879.

– பிரதாப முதலியார் சரித்திரம், நூற்றாண்டு விழா புதிய பதிப்பு: அக்டோபர் 1979, வே.ஞா.ச.இருதயநாதன் (வேதநாயகம் பிள்ளை மகன் பேரர்), ஆவடி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *