கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 2,129 
 
 

(1879ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். அதுவரை செய்யுள் வடிவ புனைகதை இலக்கியங்களே இருந்துகொண்டிருந்த தமிழிற்கு உரைநடை வடிவிலான புனைகதை இலக்கிய வகை இந்நூல் வழியாக அறிமுகமானது. அவ்வகையில் இது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

அதிகாரம் 1-5 | அதிகாரம் 6-10

முதல் அதிகாரம்

பிரதாப முதலியார் பிறப்பும், வளர்ப்பும், வித்தியாப்பியாசழம், கலாப்பிரசங்கழம்

இந்தத் தேசம் இங்கிளீஷ் துரைத்தனத்தார் ஸ்வாதீனமாகிச் சில காலத்திற்குப் பின்பு சத்தியபுரி என்னும் ஊரிலே, தொண்டைமண்டல முதலிமார் குலத்திலே நான் பிறந்தேன். என் பாட்டனாராகிய ஏகாம்பர முதலியார் இந்தத் தேசத்தை ஆண்ட நபாபுகளிடத்தில் திவான் உத்தியோகம் செய்து, அளவற்ற திரவியங்களையும் பூஸ்திதிகளையும் சம்பாதித்தார். என் பாட்டனார் படித்ததும், அவருக்குத் திவான் உத்தியோகம் கிடைத்ததும், எல்லாரும் அதிசயிக்கத்தக்க விஷயமானதால், அதை நான் கேள்விப் பட்ட பிரகாரம் விவரிக்கிறேன். என் பாட்டனார் சம்பளம் கொடுத்துப் படிக்க நிர்வாகம் அற்றவராயிருந்தபடியால், அவர் சில உபாத்தியாயர்களை அடுத்து அவர்கள் ஏவின் வேலைகளைச் செய்து, கல்வி கற்றுக்கொண்டார். அவர் கல்வியில் பூரண பாண்டித்தியம் அடைந்து, யௌவன புருஷனாயிருக்கும்போது, ஒருநாள் ஒரு துலுக்கன் குதிரையின்மேல் ஏறிக்கொண்டு, சத்தியபுரிச் சாலைமார்க்கமாகச் சாரிபோனான். அவனுடைய குதிரை எதையோ கண்டு வெருண்டு, மார்க்கத்தை விட்டுக் காட்டிலும் மேட்டிலும் ஓடி, அவனைக் கீழே தள்ளிவிட்டது. அவன் காயப்பட்டு பிரக்ஞா பங்கமாய், விழுந்த இடத்திலே பிரேதம் போலக் கிடந்தான். அப்போது அவ்விடத்திலிருந்தவர்கள், “அவன் யாரோ பக்கிரி, அவனைத் தொட்டால் ஜாதிப் பிரஷ்டத்துவம் உண்டாகும்” என்று சொல்லிக் கொண்டு, அப்பால் விலகிப் போய்விட்டார்கள். என் பாட்டனார் மட்டும் “அவன் யாராயிருந்தாலும் ஆபத்து வேளையில் உதவவேண்டும்” என்று நினைத்து அவனைத் தூக்கி மடிமேல் வைத்துக்கொண்டு, அவனுடைய காயங்களைக் கட்டி, அவன் மூர்ச்சை தெளியும்படியான பக்குவங்களைச் செய்தார். அவன் மூர்ச்சை தெளிந்து எழுந்தவுடனே என் பாட்டனாரைப் பார்த்து, “நீர் செய்த உபகாரத்துக்கு, ஏழைப் பக்கிரியாகிய நான் என்ன பிரதி உபகாரம் செய்யப் போகிறேன்” என்று பலவாறாக ஸ்தோத்திரம் செய்தான். உடனே என் பாட்டனார் “பிரதி உபகாரத்தை விரும்பி இந்த உபகாரத்தை நான் செய்யவில்லை, ஆபத்துக் காலத்தில் ஒருவருக்கு உதவுவது எவ்வளவோ பெரிய சுகிர்தம்; அந்தச் சுகிர்த பலனே எனக்குப் போதும்; இம்மையில் நான் வேறு பிரதி பிரயோஜனத்தை அபேக்ஷிக்கவில்லை” என்றார். அந்தத் துலுக்கன் என் பாட்டனாரைப் பார்த்து, “இம்மையிலும் உமக்கு அல்லா கிருபை செய்வார்”என, என் பாட்டனார் “நித்தியமான மறுமைப்பலனை நான் அபேக்ஷிக்கிறேனே தவிர இம்மைப் பலனை அபேக்ஷிக்கவில்லை” என்றார். உடனே அந்தத் துலுக்கன் எழுந்து, “நான் சொல்வதை நீ ஆக்ஷேபிக்கிறாயா” என்று கோபித்து என் பாட்டனார் கன்னத்தில் பளீரென்று அறைந்துவிட்டு, குதிரையின் மேல் ஒரே தாண்டாய்த் தாண்டி ஏறிக்கொண்டு போய்விட்டான். அவ்விடத்தில் இருந்தவர்கள் எல்லாரும் என் பாட்டனாரை நோக்கி, “அந்தத் துஷ்ட துலுக்கனுக்கு நீர் உபகாரம் செய்ததற்குக் கைமேலே பலன் கிடைத்ததே” என்று பரிகாசம் பண்ணினார்கள். என் பாட்டனார் வெட்கத்தினால் தலை குனிந்துகொண்டு வீட்டுக்குப் போனார். 

அதற்குச் சில தினங்களுக்குப் பின்பு, நபாபினிடத்திலிருந்து அநேக சேவகர்கள் உருவின கத்திகளுடனே வந்து, என் பாட்டனாரைப் பிடித்துக் குற்றவாளிபோற் பின்கட்டு முறையாகக் கட்டி, நபாபு சமூகத்திற்குக் கொண்டு போனார்கள். அதற்குக் காரணம் தெரியாமையினாலே, என் பாட்டனார் சித்தங் கலங்கி “நான் ஒரு பாவத்தையும் அறியேனே” என்று அழுதுகொண்டுபோனார். எங்கள் பந்துக்களும், அவரைத் தொடர்ந்து, பரிதபித்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது, சிங்காதனத்தின் மீது வீற்றிருந்த நபாபு என் பாட்டனாரைக் கண்டவுடனே எழுந்து, ஓடிவந்து, என் பாட்டனாரைத் தழுவிக்கொண்டு சொல்லுகிறார் – “நான் பக்கிரி போல மாறுவேஷம் போட்டுக் காண்டு பல ஊர்களைச் சுற்றிப்பார்த்து வருகையில், சத்தியபுரியில் எனக்கு நேரிட்ட பிராணாபத்தைத் தீர்த்து இரக்ஷித்தீரே; அந்த உபகாரத்திற்காகவும் உம்முடைய அபார யோக்கியதைக்காகவும் உம்மைத் திவான் உத்தியோகத்தில் நியமித்திருக்கிறோம்; உமக்குச் சம்மதமா?” என்று கேட்டார். உடனே என் பாட்டனார் “இம்மைப் பலன் வேண்டாமென்று முன்னே நான் சொல்லி பட்ட பாடு என் ஞாபகத்திலிருக்கிறது; அதை நான் மறந்தாலும் என் கன்னம் மறவாது; ஆகையால் உங்கள் சித்தப்படி நடக்கக் காத்திருக்கிறேன்” என்றார். இதைக் கேட்டவுடனே நபாபு சிரித்துக்கொண்டு, “நீர் ஆக்ஷேபிக்காம லிருக்கும்பொருட்டு, உம்மைப் பலவந்தமாகக் கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தோம்” என்று சொல்லி உடனே என் பாட்டனாரைத் திவான் உத்தியோகத்தில் நியமித்துச் சன்னதும் கொடுத்தார். 

“இப்படிப்பட்ட திவான்கள் முன்னும் இல்லை பின்னும் இல்லை” என்று ஜகப்பிரக்கியாதியாய் யாவரும் சொல்லும்படியாக என் பாட்டனார் அதிகாரம் செலுத்தி வந்தார். ஒவ்வொரு நபாபும் அவருக்குப் பல சமயங்களில் கனகாபிஷேகம் செய்ததும் தவிர, எண்ணிக்கையில்லாத கிராமங்களையும் பூமிகளையும் சர்வ மானியமாகக் கொடுத்தார்கள். என் பாட்டனார், விருத்தாப்பியம் மேலிட்டவுடனே, அவருடைய திரவியங்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு, சத்தியபுரியில் வந்து வசித்தார். அவர் காலம் சென்றபிறகு, அவருடைய ஸ்திதிகளெல்லாம் என் பிதாவுக்குக் கிடைத்தது. அவர் அனுபவித்து வந்தார். என் தகப்பனார் பெயர் கனகாசல முதலியார். என் தாயார் பெயர் சுந்தரத்தண்ணி. என்னுடைய பெயரைச் சொல்ல எனக்கே சங்கோசமாயிருக்கின்றது. ஏனென்றால் அந்த நாமத்துக்குத் தகுந்த குணம் என்னிடத்தில் இல்லை; மேலும் என்னுடைய பெயரை எழுதி நீட்டினால் காதவழி தூரம் நீளும்; இந்தப் புஸ்தகமும் அந்தப் பெயருக்கே சரியாயிருக்கும்; ஆகையால் என்னுடைய பெயரைச் சுருக்கி, “பிரதாப முதலி” என்று என்னை எல்லாரும் கூப்பிடுகிறது வழக்கம். என் தாய் தந்தைகளுக்கு நான் ஏக புத்திரனாதலால், என்னை மிகவும் அன்பு பாராட்டி அருமையாக வளர்த்தார்கள். என் தகப்பனாருடைய பிரியத்துக்கும் தாயாருடைய பிரியத்துக்கும் பேதம் என்ன வென்றால், என் தகப்பனார் நாளை வருவதை யோசியாமல், இன்றைக்கு நான் சந்தோஷமாயிருந்தாற் போதுமென்று, நான் என் இஷ்டப்பிரகாரம் கொட்டம் அடிக்கும்படி விட்டுவிடுவார். என் தாயார் எப்போதும் நான் க்ஷேமமாயிருக்க வேண்டுமென்கிற நோக்கத்துடன், என்னை நயமும் பயமுமாக நடத்தி வந்தார்.

எனக்கு அஞ்சாம் பருவம் ஆரம்பமானது முதல் வித்தை கற்பிக்க வேண்டுமென்று என் தாயார் சர்வப் பிரயத்தனம் செய்தும் பலிக்கவில்லை. எனக்கு வயது போதாது போதாது என்று என் தகப்பனார் காலஹரணம் செய்துவந்தபடியால், என்னை எட்டாம் வயது எட்டிப் பார்க்கிற வரையில், நான் சுத்த நிரக்ஷர குஷியாயிருந்தேன். என் மாதாவினுடைய அலட்டைப் பொறுக்க மாட்டாமல், என் தந்தையார் என்னை ஒரு நாள் தனியே அழைத்து, “உன் தாயார் உன்னைப் பள்ளிக் கூடத்தில் வைக்கவேண்டுமென்கிறாளே, நீ என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டார். உடனே நான் தந்தையை நோக்கி, “ஐயா, நானும் படிக்க வேண்டுமா? எனக்கிருக்கிற சுய புத்தி போதாதா? ஏழைகள் ஜீவனம் செய்து பிழைக்க வேண்டியதற்காக அவர்களுக்குக் கல்வி அவசியந்தான்; நான் படிக்க வேண்டிய அகத்திய மென்ன? ஏதாவது வாசிக்கவேண்டியிருந்தால் வாசிக்கவும், எழுதவேண்டியிருந்தால் எழுதவும், நமக்குக் காரியஸ்தர்கள் இல்லையா? கணக்கர்களில்லையா?” என்றேன். இது நான் சுயமாகச் சொன்னதல்ல; என் பாட்டியார் அடிக்கடி அந்த வார்த்தைகளைச் சொல்ல நான் கேள்விப்பட்டிருந்ததால் அந்தப் பிரகாரம் நான் பாடம் பண்ணிக்கொண்டு சொன்னேன். அந்த வார்த்தைகள் என் சொந்த வார்த்தைகளென்று என் பிதா எண்ணி, ஆனந்த சாகரத்தில் மூழ்கினார். இவ்வளவு சாதுரியமாய் நான் பேசின சமாச்சாரம் வீடு முழுவதும் பரவி, எங்கள் காரியஸ்தர்கள், கணக்கர்கள், பந்துக்கள், பணி விடைக்காரர்கள் முதலான சகலரும் ஒவ்வொருவராய் வந்து, என்னுடைய சாமர்த்தியத்தைப் புகழ ஆரம்பித்தார்கள். என்னுடைய பாட்டியாரும் தம்முடைய உபதேசம் என்பதை மறந்துவிட்டு, என்னைக் கட்டித் தூக்கிக் கொண்டு, “என் கண்ணே! பொன்னே! இவ்வளவு சாமர்த்தியமாய்ப் பேச யாருக்காவது வருமா?” என்று சொல்லிக்கொண்டு, நான் சுவாசம் விடுவதற்கு இடமில்லாமல் வாயாலும் பல்லாலும் அநேக முத்தங்கள் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த ஒவ்வொரு முத்தமும் எனக்குப் பிராணாவஸ்தையாயிருந்தது. அப்போது அவ்விடத்திலே கட்டியிருந்த ஒரு கருங்குரங்கு, என் பாட்டியார் என்னை ஏதோ உபத்திரவம் செய்வதாக எண்ணிக் கொண்டு, அவர்கள் மேலே தாவி விழுந்து, அவர்களைக் கடிக்க ஆரம்பித்தது. அந்த வேதனை பொறுக்கமாட்டாமல், என் பாட்டியார் என்னைக் கீழே விட்டுவிட்டார்கள். நானும் அவர்கள் பற்கடிக்குத் தப்பிப் பிழைத்தேன்.

இவ்வளவு நடந்ததும் என் மாதாவுக்குத் தெரியாது. பிற்பாடு எவ்விதமாகவோ தெரிந்துகொண்டு, துயர முகத்தோடு வந்து என் பிதாவை நோக்கி, “ஏன் இவ்வளவு கூக்குரல்?” என்று வினாவ, “கல்வி விஷயத்தைப்பற்றி உன் பாலன் சொல்வதைக் கேள்” என்று என் பிதா ஆக்ஞாபித்தார். உடனே என் தாயார் என் முகத்தைப் பார்த்தாள். நான் முன் சொன்னபடி என் பாட்டியாரிடத்திலே கற்றுக் கொண்ட பாடத்தை என் தாயாருக்குச் சொன்னேன். அதைக் கேட்டவுடனே என் தாயாருக்கு முகம் மாறிவிட்டது. பிறகு சற்று நேரம் பொறுத்து, என் தாயார் என்னை நோக்கி, “என் கண்மணியே, நீ சொல்வது எவ்வளவும் சரியல்ல. கல்வி என்கிற பிரசக்தியே இல்லாதவர்களான சாமானிய பாமர ஜனங்களைப் பார். அவர்களுடைய செய்கைகளுக்கும் மிருகங்களுடைய செய்கைகளுக்கும் என்ன பேதமிருக்கின்றது? கல்வியை உணராவிட்டால் கடவுளது யதார்த்த சொரூபத்தையும், அனந்த கல்யாண குணங்களையும், தர்மாதர்மங்களின் பேதங்களையும், ஞான சாஸ்திரங்களையும், பூகோளம், ககோளம், கணிதம் முதலிய சாஸ்திரங்களையும், இகபர சுகங்களை அடையத்தக்க மார்க்கங்களையும் நாம் எப்படி அறியக்கூடும்? நமக்கு முகக் கண்ணிருந்தும் சூரியப் பிரகாசம் இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்? முகக் கண்ணுக்குக் பிரகாசம் எப்படி அவசியமோ அப்படியே ஹக் கண்ணுக்கு கல்வியாகிய ஞானப்பிரகாசம் அவசியம் அல்லவா? சாணைக் கல்லில் தேய்க்கப்படாத நவரத்தினங்கள் பிரகாசிக்குமா? பிருதிவி ரூபமாயிருக்கிற பொன், வெள்ளி முதலான பஞ்ச லோகங்களை எடுத்துக் காய்ச்சித் திரட்டாவிட்டால் அவைகளுக்கு ஒளி உண்டாகுமா? வெட்டித் திருத்திச் சாகுபடி செய்கிற நிலம் மட்டும் பலன் கொடுக்குமேயல்லாது, சீர்த்திருத்தம் செய்யப்படாத நிலம் பலன் கொடுக்குமா? வெட்டித் திருத்தாத நிலம் கல்லும், முள்ளும், புல்லும் மண்டிக் கெட்டுப்போவதுபோல் கல்விப் பயிற்சியில்லாத மனம் துர்க்குணங்கள் நிறைந்து கெட்டுப்போகாதா? கல்வி ஏழைகளுக்குத்தான் முக்கியம் என்கிறாய்? பல தொழில்களைக் கற்றுக் கொண்டு, கைப்பாடுபட்டுப் பிழைக்க வேண்டியவர்களான ஏழைகளுக்குப் படிக்க நேரமேது? கல்வி விஷயத்தில் செலவளிக்க அவர்களுக்குப் பொருளேது? அவர்கள் படித்தாலும், அரைப்படிப்பு, காற்படிப்புப் படிக்கலாமேயல்லாமல், பூரணமாய்ப் படிக்கக் கூடுமா? நாம், காரியஸ்தர்களுக்கு மேல் அதிகமாய்ப் படித்திராவிட்டால், அவர்கள் நம்மை மதிப்பார்களா? அவர்களுடைய கணக்குகளிலிருக்கிற பிசகுகளை நாம் எப்படிக் கண்டுபிடிக்கக்கூடும்? வேலைக்காரர்கள், கிராமக்குடிகள் முதலானவர்களை நாம் எப்படி ஆளக்கூடும்? தனவான்கள் படித்தவர்களாயிருந்தால் மட்டும், அவர்களுடைய பொருள்களை சத்விஷயத்தில் உபயோகிப்பார்களே தவிரப் படியாதவர்கள் கையில் அகப்பட்டு தனமானது, பைத்தியக்காரர்கள் கையில் இருக்கிற கத்திபோல், தங்களுக்கும் பிறருக்கும் துன்பம் விளைவிக்கும். ஆதலால் கல்வி, தனவான்களுக்கே முக்கியம்” என்று என் தாயார் கர்ணாமிர்தமாகப் பிரசிங்கித்தார்கள். அதைக் கேட்ட என் தகப்பனார் “நல்லது பெண்ணே! உன் மனதுப் பிரகாரம், பிள்ளைக்கு வித்தியாப்பியாசம் செய்விக்கவேண்டிய முயற்சி செய்கிறேன்” என்றார். கல்வி அனாவசியமென்று என் பாட்டியார் எனக்குப் போதித்த போதம், என் தாயாருடைய பிரசங்கமாகிய பிரசண்டமாருதத்தின்முன் பஞ்சாய்ப் பறந்து விட்டது.

உடனே என் தகப்பனார் ஒரு உபாத்தியாயரை நியமனம் செய்து, எங்கள் வீட்டில் தினந்தோறும் வந்து எனக்குக் கற்பிக்கும்படி திட்டம் செய்தார். எங்கள் கிராம காரியங்களையும், குடும்ப காரியங்களையும், என் தகப்பனார் எவ்வளவும் கவனிக்காமல், என் தாயாரே வகித்துப்பார்த்து வந்தபடியால், என் படிப்பைக் கவனிக்க என் தாயாருக்கு ஒரு நிமிஷமாவது ஒழிகிறதில்லை. ஆகையால் என் பாட்டியாரும் தகப்பனாரும் என் கல்வி விஷயத்தில் கவனம் வைக்கத் தலைப்பட்டார்கள். அது எனக்கு அநர்த்தமாய் முடிந்தது. எனக்குப் படிக்க இஷ்டமானபோது நான் படிக்கிறதென்றும், படிக்க இஷ்டமில்லாதபோது நான் விளையாடுகிறதென்றும், என்னை உபாத்தியாயர் கண்டனை தண்டனை செய்யக்கூடாதென்றும், ஆனால் நான் படிப்பில் சுக்கில பட்சத்துச் சந்திரன்போல், தினேதினே விருத்தி ஆகவேண்டுமென்றும் நிபந்தனை செய்தார்கள். இந்த நிபந்தனைகளின் பிரகாரம், சரியாய் நடக்கவில்லை யென்றும் சில உபாத்தியாயர்கள் நீக்கப்பட்டார்கள். என்னை மரியாதையாக அழையாமல் “வா, போ” என்று ஏகவசனமாகக் கூப்பிட்டதற்காகச் சில போதகர்கள் தள்ளப்பட்டார்கள். ஒரு உபாத்தியாயர் மாசமுழுவதும் பிரசாயப்பட்டுச் சொல்லிக் கொடுத்துச் சம்பளம் வாங்குகிற சமயத்தில், சம்பளமில்லாமல் நீக்கப் பட்டார். உபாத்தியாயர்களைத் தள்ளுகிற அதிகாரம், என் தகப்பனாருக்கும் பாட்டியாருக்கும் இருந்ததுபோலவே, நானும் அந்த அதிகாரத்தைச் சில சமயங்களில் செலுத்திவந்தேன். இவ்வகையாக நான் பன்னிரண்டு உயிர் எழுத்துங் கற்றுக்கொள்வதற்குமுன் தள்ளுபடியான ஆசிரியர்களும் பன்னிரண்டு பேருக்கு அதிகமாயிருக்கலாம். இவ்வளவு ஆபத்துக்கும் தப்பி ஒரு உபாத்தியாயர் மட்டும் நிலைத்திருந்தார். அவர் குடும்ப சகிதமாய் எங்கள் வீட்டில் இருந்து கொண்டு எனக்கும் அவருடைய பிள்ளை கனகசபை என்பவனுக்கும் பாடம் சொல்லிக்கொண்டுவந்தார். ஒரு நாள் என் பாட்டியார் உபாத்தியாயரைப் பார்த்து, “நம்முடைய பிள்ளையாண்டான் படித்துப் படித்துத் தொண்டை வறண்டுபோகிறதே! இனி மேல் உம்முடைய மகன் கனகசபை பாடம் படிக்கட்டும். அவன் படிக்கிறதைக் கேட்டு, என் பேரன் கல்வி கற்றுக்கொள்ளட்டும். பிற்பாடு என் பேராண்டிக்குப் பாடந்தெரியாவிட்டால், அவனுக்குப் பயம் உண்டாவதற்காகக் கனகசபையைப் பலமாக அடியும்” என்றார்கள். உபாத்தியாயருடைய வயிற்றுக் கொடுமையினால், இந்த அநியாயமான நிபந்தனைக்கும் சம்மதித்தார். எனக்குப் பாடம் தெரியாத போதெல்லாம், உபத்தியாயர் கனகசபையை அடிப்பார். அவன் இல்லாதபோது உபாத்தியார் தன் முதுகிலும் அடித்துக்கொள்வார், நான் பாடத்தைச் சரியாய்ப் படித்த நேரமுமில்லை; கனகசபை அடிபடாத நேரமுமில்லை. ஒரு நாள் உபாத்தியாயர் கனகசபையை முதுகில் அடித்தபோது, அவன் அழுதுகொண்டு “ஐயா! என் முதுகு ஒரு அபராதமும் செய்யவில்லையே! இவ்வளவு பாடும் வயிற்றுப்பிழைப்புக்காகத்தானே! ஆகையால் வயிற்றில் அடியுங்கள்” என்றான். அதைக் கேட்டவுடனே எனக்கு இரக்கம் உண்டாகி, என் கண்ணில் ஜலம் ததும்ப ஆரம்பித்தது. நான் ஒரு அட்சரம் கற்றுக்கொள்வதற்குக் கனகசபை அநேகம் அடி படுவான். இப்படியானால் தமிழ் நெடுங்கணக்கு முழுவதும் எனக்குப் பாடம் ஆவதற்கு முன், அவன் எத்தனை அடிபட்டிருப்பானென்று புத்திமான்கள் கணக்கிட்டுத் தெரிந்துகொள்ளப் பிரார்த்திக்கிறேன். அவன் உயிருக்கும் உடலுக்கும் அபாயம் வரும் படியாக அவனுக்கு அடிவாங்கிக்கொடுத்த அட்சரங்களுக்கு, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்று பெயர் வந்தது கிரமமல்லவா?

2-ஆம் அத்தியாயம்

பாலா லீலை

நான் படிப்பு விஷயத்தில் மந்தமாயிருந்தாலும், விளையாடுகிற விஷயத்தில் அதிக முயற்சி உள்ளவனாக இருந்தேன். என்னுடைய பாலிய சேஷ்டைகள் யாவருக்கும் வியப்பாயிருக்கு மானதால், அவைகளை அடியில் விவரிக்கிறேன்.

என் வீட்டில், என்னைத் தவிர, மற்றவர்கள் எல்லாரும் சுரத்தினாலும் அம்மையினாலும் உபாதைப்பட்டார்கள். அவர்களைப் பல பேர் வந்து விசாரிக்கிறதும் உபசாரம் செய்கிறதுமாயிருந்தார்கள். என்னை ஒருவரும் விசாரிக்காதபடியால், நான் ஒரு மூலையில் அழுது கொண்டிருந்தேன். எல்லோரும் ஓடிவந்து, “ஏன் அப்பா! அழுகிறாய்?’ என்று கேட்டார்கள். “எனக்குச் சுரமாவது அம்மையாவது வரவில்லையே!” என்று தேம்பித் தேம்பி அழுதேன். 

நானும் சில பிள்ளைகளும் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும்பொழுது, அவர்களில் ஒரு பையன் என்னைப் பார்த்து. “நான் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு ஒரு வித்தை செய்கிறேன்; நீ அந்த வித்தையை இரண்டு கண்ணையும் திறந்துகொண்டு செய்வாயா?” என்று கேட்டான். அதற்கு நான், “நீ இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு செய்கிற வித்தையை, நான் கண்ணைத் திறந்துகொண்டு செய்யக் கூடாதா? அப்படி நான் செய்யாவிட்டால், உனக்கு நான் இவ்வளவு பந்தயம் கொடுப்பேன்” என்று ஒப்புக்கொண்டேன். உடனே அந்தப் பையன், நடுத்தெருவில் உட்கார்ந்து, இரண்டு கண்ணையும் மூடிக்கொண்டு, மண்ணை அள்ளி அள்ளித் தன் கண் மேலே போட்டுக்கொண்டான். பிற்பாடு அவன் என்னைப் பார்த்து, “நீ இரண்டு கண்களையும் திறந்துகொண்டு இந்த வித்தையைச் செய்,” யென்று மண்ணை அள்ளி என் கையில் கொடுத்தான். நான் கண்ணை இழந்து போவதைப் பார்க்கிலும் காசை இழப்பது நலமென்று நினைத்து, பந்தயக் காசை அவனுக்குக் கொடுத்துவிட்டேன். 

எங்கள் வீட்டு மேல்மாடியில். அதிக விலைபெற்ற பெரிய நிலைக்கண்ணாடிகள் மாட்டியிருந்தன. ஒரு கண்ணாயில், நானும் சில பிள்ளைகளும் எங்களுடைய முக அழகைப் பார்த்தபோது, எல்லோருடைய முகமும் அழகாயிருக்க என் முகம் மட்டும் எனக்கே பார்க்கச் சகிக்காமல் விகாரமாயிருந்தது. அது கண்ணாடியினுடைய பிசகென்றெண்ணிக் கையை ஓங்கிக்கொண்டு அந்தக் கண்ணாடியில் பலமாக ஒரு குத்துக் குத்தினேன். அந்தக் கண்ணாடி ஆயிரம் துண்டாக உடைந்து போயிற்று. 

எந்த வேலையிலும் சோம்பலாயிருக்கக் கூடாதென்றும், தொட்ட காரியத்தை உடனே முடித்துவிடவேண்டுமே தவிர, நாளைக்கென்று நிறுத்திவைக்கக் கூடாதென்றும், என் தாயார் எனக்கு அடிக்கடி புத்தி சொல்லி வருவார்கள். நான் அந்தப் புத்தியை, பக்ஷண விஷயங்களில் உபயோகப்படுத்தி, எத்தனை பக்ஷணங்கள் அகப்பட்டாலும், நாளைக்கென்று வையாமல், உடனே சாப்பிட்டு, மந்தப்பட்டு, வைத்தியர்களுக்கு ஓயாத வேலை கொடுத்துவந்தேன். 

எல்லாரிடத்திலும் மரியாதையாய்ப் பேசவேண்டுமென்றும், யாராவது வந்தால் அவர்களுக்கு உடனே ஆசனம் கொடுத்து உபசாரம் செய்ய வேண்டுமென்றும் என் தாயார் எனக்கு அடிக்கடி சொல்லி வருவார்கள். நான் அந்தப்படி வண்ணான், அம்பட்டன், தோட்டிக்குக்கூட ஆசனம் கொடுத்து, மரியாதை செய்யத் தலைப்பட்டேன். 

தினமும், பொழுது விடிந்தவுடனே, உபாத்தியாயர் வந்து படிக்கச் சொல்லித் தொந்தரவு செய்தபடியால், பொழுது விடியாமலிருப்பதற்கு, என்ன உபாயமென்று யோசித்துப் பார்த்தேன். கோழி கூவிப் பொழுது விடிகிற படியால் கோழி கூவாவிட்டால் பொழுது விடியாதென்று நினைத்து, கோழி வளர்க்க வேண்டாமென்று, அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களுக்கு உத்தரவு செய்தேன். 

ஒரு நாள், ஒரு பையனிடத்தில் நான் இரண்டு வராகன் கடன் வாங்கினதாகவும், அவன் என்னை அடித்ததாகவும், சொப்பனம் கண்டு விழித்துக்கொண்டு, அந்தப் பையனை மறுநாள் நான் பார்த்தபோது, அந்தச் சொப்பனத்தை அவனுக்குத் தெரிவித்தேன். உடனே அவன் “அந்தக் கடனைக் கொடு” என்று என் மடியைப் பிடித்துக்கொண்டான். நான் அவனுடைய கன்னத்தில் பளீர், பளீர் என்று இரண்டு, மூன்று அறைகள் கொடுத்தேன். அவன் “ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டான். “இராத்திரி நீ என்னைச் சொப்பனத்தில் அடித்தபடியால், அதற்காக இப்போது நான் உன்னை அடித்தேன்” என்றேன். அவன் “கடனுக்கும் அடிக்கும் சரியாய்ப் போய்விட்டது” என்று சொல்லிப் போய்விட்டான். 

ஒருநாள். நான் வீதியில் விளையாடிக்கொண்டிருந்த போது, ஒரு துஷ்டன் அவனுடைய மாட்டை ஓங்கி ஓங்கி அடித்து ஓட்டிக்கொண்டு போனான். நான் “ஏன் அடிக்கிறாய்” என்று கேட்டதற்கு, அவன் “என் மாட்டை எப்படியாவது நான் உபயோகிக்கிறேன். உனக்கென்ன?’ என்றான். நான் உடனே என் கையில் இருந்த கழியால் அவனை அடித்து, “என் கழியை நான் எப்படியாவது உபயோகிக்கிறேன். உனக்கென்ன?” என்று சொல்லிப் போய்விட்டேன். 

எங்கள் வீட்டில், ஒரு பெரியவருக்கு அசாத்திய ரோகம் நேரிட்டு, வைத்தியர்களும் கைவிட்டுவிட்டார்கள். எமன் வந்து உயிரைக் கொண்டுபோகிறதென்று நாள் கேள்விப்பட்டிருந்தபடியால், கதவை மூடி வைத்திருந்தால், எமன் எந்த வழியாய் வருவான் என்று நினைத்து, அந்தப் பெரியவர் படுத்திருந்த அறையின் கதவை மூடி, துவாரங்களையெல்லாம் துணியினால் அடைத்துவிட்டேன்: அப்படிச் செய்தும் அந்த துஷ்ட யமன், எந்த வழியாகவோ வந்து பிராணனைக் கொண்டுபோய்விட்டான். 

நான் ஒரு நாள், கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்த பிறகு, முதுகின் அழகைப் பார்க்கும்பொருட்டு, கண்ணா டியை எனக்குப் பின்புறத்தில் வைத்து, முதுகாலே பார்த்தேன். ஒன்றும் தெரியாமல் மயங்கினேன். 

என்னுடைய நேசன் ஒருவன், ஒரு புஸ்தகம் அனுப்ப வேண்டுமென்று எனக்குத் தபால் வழியாய்க் கடிதம் அனுப்பினான். நான் அந்தப் புஸ்தகத்தை அனுப்பவில்லை. சில நாளைக்குப் பிறகு நான் அவனைக் கண்டபோது, “புஸ்தகம் அனுப்பும்படி நீ எழுதிய கடிதம் என்னிடத்தில் வந்து சேரவில்லை” என்றேன். “கடிதம் வந்து சேராவிட்டால், நான் புஸ்தகம் வேண்டுமென்று எழுதிய சமாச்சாரம், உனக்கு எப்படித் தெரிந்தது?” என்று அவன் கேட்க, நான் ஆடு திருடின கள்ளன்போல் விழித்தேன். 

ஒரு முக்கியமான சங்கதியைப்பற்றி, ஒரு சிநேகிதனுக்கு நான் கடிதம் எழுதி, அதில் கடைசியில், “இந்தக் கடிதம் வந்து சேராவிட்டால், உடனே எனக்குத் தெரிவி” என்று எழுதினேன். கடிதம் போய்ச் சேராவிட்டால் என்ற அதன் கடைசி வாக்கியத்தால், என்ன பிரயோசன மென்பதை, நான் கவனிக்கவில்லை. 

ஒரு பிரசித்தமான பொய்யன், என்னிடத்தில் வந்து, தன்னுடைய ஆயுசு முழுமையும், தான் ஒரு நிசம் சொன்னதில்லை என்றான். “நீ ஒரு நிசம் சொல்லியிருக்கிறாய்!” என்று நான் சொல்ல, அவன் “இல்லை! இல்லை!” என்றான். “ஆயுசு முழுவதும் நிசம் சொன்னதில்லையென்று நீ சொல்வது நிசம் அல்லவா” என்றேன். அவன் சரியென்று ஒப்புக்கொண்டு, என்னைப் பார்த்து, “நீ ஒரு பொய் சொல்ல வேண்டும்” என்றான். நான் உடனே “நீ யோக்கியன்” என்றேன். 

ஒரு நாள் இராத்திரி, நான் தங்கக் காப்புக்களும் கொலுசுகளும் போட்டுக்கொண்டு நித்திரை செய்தேன். திருடன் எவ்விதமாகவோ உள்ளே நுழைந்து, எல்லாரும் தூங்குகிற சமயத்தில், என்னுடைய ஒரு கைக்காப்பையும் கொலுசையும் கழற்றிக்கொண்டு ஓடினான். நான் உடனே “திருடரே! திருடரே! இன்னொரு கைக்காப்பையும் கொலுசையும் மறந்துவிட்டீரே!” என்று கூவினேன்; அந்த அரவம் கேட்டு, எல்லாரும் விழித்துக் கொண்டார்கள்; திருடனும் ஓடிப்போய்விட்டான். 

என் பாட்டியாருக்கு, மூன்றாம் முறை சுரம் வந்து கொண்டிருந்தது. எங்கள் வீட்டிலிருந்த கடியாரம், மத்தியானம் இரண்டு மணி அடித்தவுடனே, சுரம் வருவது வழக்கமாயிருந்தபடியால், கடியாரம் ஓடாமல் நின்று விட்டால், சுரமும் வராமல் நின்றுபோகுமென்று நினைத்து, கடியாரத்தை நிறுத்திவிட்டேன். அப்படிச் செய்தும், அந்தத் திருட்டுச் சுரம் வராமலிருக்கவில்லை. 

நானும் கனகசபையும் கனகசபையும் பின்னும் சில பிள்ளைகளும் எங்களுக்குத் தேகபலம் உண்டாவதற்காகச் சில நாளாய்ச் சிலம்பம் பழகிக்கொண்டு வந்தோம். ஒரு நாள் இராத்திரி வெகுநேரம் வரையில், நாங்கள் சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்து, வீட்டுக்கு வந்த போது, எங்கள் வீட்டுக்கு எதிரே யிருக்கிற மைதானத்தில், கூத்தாடிகள் வேஷம் போட்டுக்கொண்டு, இராம நாடகம் ஆடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வந்தபோது இராமரும், சீதையும் இலட்சுமணரும் நகரத்தை விட்டுப் புறப்பட்டுக் காட்டுக்குப் போகிற சமயமாயிருந்தது; அப்போது தசரதர், கௌசலை முதலான சகல ஜனங்களும், அழுது பிரலாபித்துக்கொண்டிருந்தார்கள். அதைக் கண்டவுடனே, நான் கனகசபையைப் பார்த்து, “அந்தப் பொல்லாத கைகேசியினாலே இராமர் பட்டத்தை இழந்து ஆரணியம் போகவும், அதனால் சகல ஜனங்களும் மனமுருகி வாடவும் சம்பவித்திருக்கின்றதே! இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருப்பது தர்மமா?” என்று கேட்க, அவன் “இந்த அக்கிரமத்தைத் தடுக்க முயற்சி செய்யாமல், நாம் சும்மா இருப்பது அழகல்ல” என்றான். நானும், அவனும், மற்றப் பிள்ளைகளும், எங்கள் கைகளிலிருந்த சிலம்பக் கழிகளுடனே சென்று, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஜனங்களின் தலைமேல் ஏறி மிதித்துக்கொண்டு, நாடகசாலைக்குள்ளே பிரவேசித்து விட்டோம். அங்கே தன் பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் ஆகுமென்கிற அகக்களிப்புடன் உட்கார்ந்துகொண்டிருந்த கைகேசியை வளைத்துக்கொண்டு, எங்கள் கை சலிக்கிற வரையில் அடித்தோம்; அவள் “பரதனுக்குப் பட்டம் வேண்டாம்! வேண்டாம்!” என்று சொல்லிக்கொண்டு ஓட்டம் பிடித்தாள். அப்போது கூனி அகப்பட்டிருந்தால், அவளை எமலோகத்துக்கு அனுப்பியிருப்போம். அவளுடைய அதிர்ஷ்டவசத்தால், அகப்படாமல் தப்பித்துக் கொண்டாள்; காட்டுக்குப் போகிற இராமரிடத்திற்குப் போய், நகரத்துக்குத் திரும்பும்படி சொன்னோம். அவர் ”பிதூ வாக்கிய பரிபாலனம் செய்வதற்காக நான் காட்டுக்குப் போகவேண்டியது அகத்தியம்” என்றார். நீர் போனால் காலை ஓடித்துவிடுவோமென்று, வழி மறித்துக் கொண்டு, அவருக்கு நியாயத்தை எடுத்துக் காட்டி மெய்ப்பித்தோம். எப்படி என்றால், “சும்மா இருந்த உம்மை உம்முடைய தகப்பனார் அழைத்து, உம்மைப் பட்டம் கட்டிக் கொள்ளும்படி சொல்லி, நீரும் அதற்குச் சம்மதித்து, ஊரெங்கும் முரசறைவித்த பிற்பாடு, உமக்குக் கொடுத்த இராச்சியத்தை பரதனுக்குக் கொடுக்க, அவருக்கு அதிகாரம் உண்டா? அப்படி அவர் கொடுத்திருந்தால், அது அசத்தியமல்லவா? உனக்குப் பட்டாபிஷேகம் ஆனால் தான, உமது தந்தையாருடைய சத்தியம் நிலைக்கும். 

“என்னே யரச ரியற்கை யிருந்தவா 
தன்னே ரிலாத தலைமகற்குத் தாரணியை
முன்னே கொடுத்து முறைதிறம்பத் தம்பிக்குப்
பினனே கொடுத்தாற் பிழையாதோ மெய்யென்பார்” 

என்று கம்பரும் சொல்லியிருக்கிறபடியால், ஊருக்குத் திருமபும்” என்றேன். இராமர் நான் சொன்ன வாய் நியாயத்தைப் பார்க்கிலும், தடியடி நியாயத்துக்குப் பயந்து, உடனே நகரத்துக்குத் திரும்பினார். நான் உடனே வசிஷ்டர் முதலானவர்களை அழைத்து, இராமருக்கு மகுடாபிஷேகம் செய்வித்தேன். இந்தப் பிரகாரம் இராமாயணம் சப்த காண்டத்தை ஒன்றரைக் காண்டத்துக்குள் அடக்கி, இராமரும், அவருடைய தம்பியும், சீதையும் வனத்துக்குப் போகாமலும், தசரதர் இறவாமலும், இராவணன் சீதையைச் சிறை எடுத்தானென்னும் அபவாதம் இல்லாமலும், இராவணாதிகளை இராமர் கொலை செய்தார் என்கிற இழிச்சொல் இல்லாமலும், சிறு பிள்ளையாகிய பரதன் இராஜ்யபாரம் தாங்கி வருந்தாமலும் செய்து, பிரதாப முதலி என்னும் என் பேரையும் நிலை நிறுத்தினேன். 

ஒருநாள் எங்கள் குடும்ப வைத்தியர் வீதியில் வருகிற தைக் கண்டு, அவர் கண்ணிலே படாமல் நான் ஓடி ஒளிந்துகொண்டேன். கனகசபை “ஏன் ஒளிகிறீர்கள்?” என்று கேட்டான். “நமக்குச் சில நாளாய் வியாதி வரவில்லையே! வைத்தியருக்குக் கோபமாயிருக்கு மென்று பயந்து, ஒளிந்துகொண்டேன்,” என்றேன். மறுபடி ஒரு நாள் அந்த வைத்தியர் என்னைக் கண்டு, “பூர்வீக மனுஷர்களெல்லாரும் தீர்க்காயுசா இருந்தார்கள். இந்தக காலத்து மனுஷர்களுக்கு ஆயுசு குறைந்து போனதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார். நான் அவரைப் பார்த்துப் “பூர்வீகத்தில் வைத்தியர்கள் இல்லாதபடியால், பூர்வீக மனுஷர்கள் நீடிய ஆயுசு உள்ளவர்களாயிருந்தார்கள். இந்தக் காலத்தில் வைத்தியர்கள் அதிகமாயிருப்பதால், ஆயுசு குறைந்துபோய்விட்டது” என்றேன். 

நானும் சில பிள்ளைகளும் நீந்தக் கற்றுக்கொள்வதற்காக, ஒரு குளத்துக்குப் போனோம்; “நான் நீந்தக் கற்றுக் கொள்வதற்கு முன் தண்ணீரில் இறங்கமாட்டேன்” என்று கரையில் உட்கார்ந்தேன். “தண்ணீரில் இறங்காமல் எப்படி நீந்தக் கற்றுக்கொள்ளுகிறது” என்று எல்லோரும் என்னைப் பரிகாசம் செய்தார்கள். 

நானும் சில பிள்ளைகளும் குதிரைப் பந்தயம் விட்ட போது, என் குதிரை எல்லாருடைய குதிரைகளுக்கும் பிந்திப்போய்விட்டதால், எல்லாரும் என்னைப் பார்ததுக் கைகொட்டிச் சிரித்தார்கள். நான “என்னுடைய குதிரை எல்லாருடைய குதிரைகளையும் துரத்துகிறது” என்று சொல்லி, அவர்களுக்குமேல் அதிகமாகச் சிரித்தேன். 

ஒருநாள் நானும் கனகசபையும் பின்னும் சிலரும் எங்களுடைய வீரப் பிரதாபங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் கனகசபையை நோக்கி, “அநேக சத்துருக்களை நான் ஓடும்படி செய்தேன் என்றேன். அவன் “எப்படி ஓடச் செய்தீர்கள்?” என்று கேட்க, “நான் சத்துருக்களைக் கண்டவுடனே ஓட ஆரம்பித்தேன்; அவர்கள் என்னைத் துரத்திக்கொண்டு ஓடி வந்தார்கள்; இப்படியாக நான் சத்துருக்களை ஓடச் செய்தேன்” என்றேன். கனகசபை என்னுடைய சௌகரியத்தை மெச்சிக்கொண்டு, “நீங்கள் சத்துருக்களை எப்படி வெல்லுவீர்கள்?” என்று கேட்க, “நான் ஓட்டத்தினால் வெல்லுவேன்” என்றேன். அவன் ‘ஓட்டத் தினால் எப்படி வெல்லுவீர்கள்?” என்று கேட்க, “நான் சத்துருக்களைக் கண்டவுடனே, அதிவேகமாக ஓடு வேன்; என்னுடைய ஓட்டத்தைப்பிடிக்க அவர்களாலும். அவர்கள் பாட்டர்களாலும் முடியாது; இவ்வகையாக அவர்களை நான் வெற்றிகொள்வேன்” என்றேன். அப்போது கூட இருந்த ஒரு சிப்பாய், தான் ஒரு சண்டையில் எதிரியினு டைய காலை வெட்டினதாக வீரம் பேசினான். நான் அவனைப் பார்த்து, “எதிரியினுடைய தலையை வெட்டாமற் காலை வெட்டின காரணம் என்ன?” என்று கேட்சு, அந்தச் சிப்பாய், “நான் என்ன செய்வேன்? எதிரியினுடைய தலையை வேறொருவன் முன்னமே வெட்டிக்கொண்டு போய் விட்டான்; பிறகு நான் காலை வெட்டினேன்,” என்றான். 

சில காலத்துக்குமுன் நானும் கனகசபையும் சேர்ந்து சில கவிகள் உண்டுபண்ணினோம். அந்தக் கவிகளை இந்தக் கிரந்தத்திலே சேர்க்கலாமென்று யோசித்து, அவைகளைப் பார்வையிட்டோம். சில கவிகளின் அர்த்தம் எனக் மட்டும் தெரிகின்றது; கனகசபைக்குத் தெரியவில்லை. சில கவிகளின் அர்த்தம் கனகசபைக்கு மட்டும் புலப்படுகின்றது; எனக்குப் புலப்படவில்லை. சில கவிகளின் பொருள் அவனுக்கும் விளங்கவில்லை; எனக்கும் விளங்கவில்லை. அன்றியும், அநேக கவிகளுக்குச் சந்தமே தெரியவில்லை, சந்தம் தெரிகிற கவிகளுக்குப் பொருள் தெரியவில்லை, பொருள் தெரிகிற கவிகள். இலக்கண விதிக்கு ஒத்திருக்க வில்லை. ஆகையால், அந்தக் கவிகளை, இந்தப் புஸ்தகத்திற் சேர்க்காமல் விட்டுவிட்டேன். 

ஒரு புலவர், நான் பாடின ஒரு கவியைப் பார்த்து, அதை நான் கம்பராமாயணத்திலிருந்து திருடிக்கொண்டதாகக் குறை கூறினார். “நான் திருடவேயில்லை” என்றேன். அவர், அந்தக் கவி, கம்பராமாயணத்திலிருப்பதாகக் காட்டினார். நான் உடனே அவரைப் பார்த்து, “நான் அந்தக் கவியைக் கம்பராமாயணத்திலிருந்து திருடி எடுத்துக் கொண்டிருப்பேனானால், பிறகு அந்தக் கவி கம்பராமாயணத்தில் எப்படி இருக்கக்கூடும்? ஆகையால் நான் திருடவில்லை யென்பதற்கு, அந்தக் கவி கம்பராமாயணத்திலிருப்பதுவே சாக்ஷி’ என்று மெய்ப்பித்தேன். 

ஒரு மூடன்,என்னைப் பார்த்து, “சகல மனுஷர்களும், பிழை செய்வது சகஜம்; இந்த விஷயத்திவ் விவேகிக்கும் அவிவேகிக்கும் என்ன பேதம்?” என்றான். நான் அவனை நோக்கி, “அவிவேகியின் குற்றம், அவனுக்கு மட்டும் தெரியாது; உலகத்துக்கெல்லாம் தெரியும்; விவேகியின் குற்றம், அவனுக்கு மட்டும் தெரியும்; உலகத்துக்குத் தெரியாது,” என்றேன். 

3-ஆம் அதிகாரம் 

ஞானாம்பாளுடைய குணாதிசயங்களும் கல்வித் திறமையும் 

எனக்காகக் கனகசபை படிப்பதும், எனக்காக அவன் அடிபடுவதும், என் தாயாருக்குச் சில நாள் வரைக்கும் தெரியாமலிருந்து, பிற்பாடு தெரிந்ததாகத் தோன்று கின்றது. ஒருநாள். அவர்கள் என்னையும் கனகசபையையும் அழைத்து, இருவருக்கும் இலைபோட்டுக் கனகசபை இலையில் மட்டும், அன்னம் பட்சணம் முதலியவைகளைப் படைத்து, என்னுடைய இலையில் ஒன்றும் படையாமல் வெறுமையாய் விட்டுவிட்டார்கள் என் மாதாவைப் பார்த்து, எனக்கும் அன்னம் படைக்கும்படி வேண்டினேன். அவர்கள் “கனகசபை அமுது செய்கிறதைப் பார்த்துக்கொண்டிரு”, என்றார்கள். “அவன் அமுது செய்கிறதைப் பார்த்துக் கொண்டிருந்தால், எனக்குப் பசி அடங்குமா?” என்றேன். “அவன் படிக்கிறதையும் அடிபடுகிறதையும் நீ பார்த்துக் கொண்டிருந்தால், உனக்கு வித்தை வருமா?” என்றார்கள். நான், உடனே நாணம் அடைந்து, என் மாதாவின் முகத்தைப் பார்க்கிறதை விட்டு, பூமிதேவி முகத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். அன்றைய தினம், எனக்கு அன்னப்பிடி வெல்லப்பிடியாய் விட்டது. எனக்காக ஒரு ஏழைப் பிள்ளையை அடிபடும்படி செய்வித்தது பெரிய அக்கிரம மென்று, என் தாயார், விஸ்தாரப் பிரசங்கம் செய்தது மன்றி, என்னைப் பார்த்து, “நீ பட வேண்டிய அடியைக் கனகசபை ஏற்றுக்கொண்டதால், நீ அனுபவிக்கிற சுகங்களிலும் அவனுக்குப் பங்கு கிடைக்க வேண்டியது நியாயம்” என்று சொல்லி, அன்று முதல் அன்ன வஸ்திர பூஷணாதி விஷயங்களில் எனக்கும் கனகசபைக்கும் யாதொரு பேதமுமில்லாமல், இருவரையும் ஒரே தன்மையாய் நடத்தி வந்தார்கள். இனிமேல் நான் என் வீட்டில் படிப்பது சரியல்லவென்று என் மாதா அபிப்பிராயப்பட்டு, எங்களுடைய சம்பந்தி முதலியார் வீட்டில், அவருடைய மகளோடுகூட வேறொரு தகுந்த உபாத்தியாயரிடத்தில், நானும் கனகசபையும் படிக்கும்படி திட்டம் செய்தார்கள். அன்றுமுதல் என் படிப்பும் பிழைத்தது; கனகசபை முதுகும் பிழைத்தது. கனகசபையின் தகப்பனார் சாந்தலிங்கம் பிள்ளையை என் தாயார் கைவிடாமல், அவரை எங்கள் குடும்பத்தில் பிரதான காரியஸ்தராக நியமித்து, அவரை யும் அவருடைய குடும்பத்தையும் சம்ரட்சணை செய்து வந்தார்கள். 

சம்பந்தி முதலியார் யாரென்றால், அவர் என் தாயுடன் பிறந்த அம்மான். அவருடைய பாட்டனார். என்னுடைய பாட்டனாரைப் போலவே, கருநாடக ராஜாங்கத்தில் உத்தியோகம் செய்து, அநேக திரவியங்களை ஆர்ஜித்துக் கொண்டு, சத்தியபுரியில் வந்து வசித்தார். அவருடைய குமாரன் சந்திரசேகர முதலியாருக்குச் சம்பந்தி முதலி யாரும் என் தாயாரும் சந்ததிகள். அவர்களுக்கும் எங்களுக்கும் நெடுங்கால அநுபந்தம். மேற்படி சம்பந் முதலியாரும். எங்களைப் போலவே தனத்தில் மிகுந்தவர். அவருக்கு வெகுகாலம் பிள்ளையில்லாமலிருந்து, பிற்பாடு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண்ணுக்கு. ஞானாம்பாள் என்று நாமகரணம் செய்தார்கள். உலகத்தி லிருக்கிற அழகுகளெல்லாம் கூடி ஒரு பெண் வடிவம் எடுத்து வந்தாற்போல, அவள் அதிரூபலாவண்ணியம் உடையவள்; அவளுடைய குணாதிசயங்களை யோசிக்கு மிடத்தில், ஞானாம்பாள் என்கிற பேர் அவளுக்கே தகும் அவளுடைய பிதா சம்பந்தி முதலியார் பிரபலமான திரவியவந்தராயிருந்தும், செலவழிக்கிற விஷயத்தில் அவருக்குச் சமானமான தரித்திரர்கள் ஒருவருமில்லை. அவர் பிராணத்தியாகம் செய்தாலும் செய்வாரே அல்லது பணத்தியாகம் செய்யமாட்டார். “கொடு” என்கிற வார்த்தையைக் கேட்டால், அவர் காதில் நாராசம் காய்ச்சி விட்டதுபோல இருக்கும். சங்கீதம் வாசிக்கிறவர்கள் “தா, தா” என்று தாளம் போட்டாலும், அவர் சண்டைக்கு வருவார்; யாராயினும் ஒருவர், தாதனைப்பார்த்து “தாதா” என்று கூப்பிட்டாலும், அவர் சகிக்க மாட்டார். இப்படிப் பட்ட கிருபண சிரோமணியை ஞானாம்பாள் ஐந்து வயதுக் குழந்தையா யிருக்கும் போது, ஒரு வார்த்தையி னாலே திருப்பிவிட்டாள். எப்படி யென்றால், அவருடைய கிராமக் குடிகள் செலுத்தவேண்டிய குத்தகைப் பணத்தை எடுத்துக்கொண்டு, ஒருநாள், அவருடைய வீட்டுக்கு வந்தார்கள்; அவர்களை, அவர் தம்முடைய பொக்கிஷ அறைக்குள் அழைத்துக்கொண்டு போய், அவர்கள் கொண்டுவந்த பணத்தைத் திருப்பித் திருப்பிப் பத்துத் தரம் எண்ணி, வாங்கி வைத்துக்கொண்டு அவர்களுக்குச் செலவு கொடுத்து அனுப்பினார். அவர்கள் வெளியிலே போகும்போது, “அந்த லோபியின் பணப் பெட்டிகளை நாம் பார்த்துவிட்டோம்; ஆதலால், நாமும் இனிமேல் பணக்காரர்கள்தான்; அவரும், பணத்தைப் பார்க்கிறதே தவிரச் செலவழிக்கிறதில்லை. நாமும் அப்படித்தான்” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு போனார்கள். அப்போது, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஞானாம் யாள், அதைக் கேட்டு, உடனே அழுதுகொண்டு, தகப்பனாரி டம் போய், “ஐயா! லோபி என்றால் என்ன அர்த்தம்?” என்று கேட்டாள். அவர் “லோபி என்றால் ஈயாதவன்” சொன்னார். அவள், “அப்படியானால், உங்களைப் பல பேர்கள், லோபி, லோபி என்று சொல்லுகிறார்கள். உங்களுக்கு மகளாயிருக்க, எனக்கு வெட்கமாயிருக்கிறது.” என்று மழலைச் சொல்லால் உளறிக்கொண்டு சொன்னதைக் கேட்டவுடனே, சம்பந்தி முதலியாருக்கு வெட்கமுண்டாகி, அன்றுமுதல், அவர் லோப குணத்தை விட்டுவிட்டு, ‘தாதா’ என்று பல பேரும் சொல்லும்படி புது மனுஷனாக மாறிவிட்டார். 

ஞானாம்பாளுடைய புத்தி தீக்ஷண்ணியம் தெரியும்படியாக, இன்னொரு விசேஷம் தெரிவிக்கிறேன். ஒரு நாள், தமக்குச் சமானமானவர்கள் ஒருவருமில்லை என்கிற கர்ணத் தோடும் கூடிய ஒரு பெரியவர், சம்பந்தி முதலியார் வீட்டுக்கு வந்திருந்தார்; அப்போது, அவ்விடத்திலிருந்த வர்கள் ஞானாம்பாளைக் காட்டி “இந்தக் குழந்தை இவ்வளவு சிறு பிராயத்தில், அதிக தீக்ஷண்ணியம் உள்ளதாயிருக்கி றது` என்றார்கள். அதைக் கேட்ட அந்தப் பெரியவர், “சிறு வயதிலேயே புத்திசாலியாயிருக்கிற பிள்ளை, பிற்பாடு மட்டி யாய்ப் போகிறது சகஜம்,” என்றார். உடனே ஞானாம்பாள் அவரைப் பார்த்து, “அப்படியானால், தாங்கள் சிறுபிராயத் தில் அதிக புத்திசாலியிருந்திருப்பீர்களென்று நினைக்கி றேன்” என்றாள்.உடனே அவர் நாணம் அடைந்து அவ ருடைய கர்வத்தை விட்டுவிட்டார். 

என் தாயார் உத்தரவுப்படி, நானும் கனகசபையும் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போய், ஞானாம்பாளுடைய உபாத்தியாயராகிய கருணாநந்தப் பிள்ளையிடத்தில் கல்வி கற்க ஆரம்பித்தோம். எங்களுடைய படிப்பைப் பரிசோதிக் கிறதற்காக, அந்த உபாத்தியாயர் எங்களைப் பார்த்து, ”உயிரெழுத்து எத்தனை? மெய்யெழுத்து எத்தனை?” என்று கேட்டார். அதற்கு உத்தரவு சொல்லத் தெரியாமல், நான் கனகசபை முகத்தைப் பார்த்தேன். அவன ஆகாசத்தைப் பார்த்தான். பிற்பாடு, ஏதாவது சொல்லித் தொலைக்க வேண்டுமே என்று நினைத்து, ”உயிரெழுத்து 50, மெய்யெழுத்து 100″ என்றேன். 

உடனே உபாத்தியாயர் அதிகாரம் செய்து, ”நீ சொல்வது சரியல்ல, ஞானாம்பாளை அழைத்து வா” என்று உத்தரவு கொடுத்தார். நான் ஞானாம்பாளிடத்திலே போய் “உயிரெழுத்து எத்தனை மெய்யெழுத்து எத்தனை?” என்று கேட்க, அவள், “உயிரெழுத்துப் பனனிரண்டு, மெய்யெழுத்துப் பதினெட்டு” என்று சொன்னாள். “நான் ‘உயிரெழுத்து ஐம்பது, மெய் யெழுத்து நூறு’ என்று அவ்வளவு அதிகமாய்ச் சொல்லியும் உபாத்தியாயர் ஒப்புக்கொள்ளவில்லையே! நீ குறைத்துச் சொல்லுகிறதை அவர் ஒப்புவாரா?” என்று சொல்லி, அவளை அழைத்துக்கொண்டு போய், உபாத்தியாயர் முன்பாக விட்டேன். அவள், அவரிடத்தில் முன் சொன்னபடியே சொன்னாள். உபாத்தியாயர், அவள் சொன்னதுதான் சரியென்று, எங்களுக்குத் தெரிவித்தார். இவ்வகையாக, நாங்கள் ஞானாம்பாளுக்கு வயதில் மூத்தவர்களாயிருந்தாலும், கல்வியில் அவளுக்குக் கனிஷ்டர்களாயிருந்தோம். நாங்கள் அவளுடன் வாசிக்க ஆரம்பித்தபோது, அவள் எடுத்த புஸ்தகம் வாசிக்கவும், அர்த்தம் சொல்லவும், பிழை யில்லாமல் எழுதவும், கூட்டல், கழித்தல், பெருக்கல் முதலிய கணக்குகள் பார்க்கவும், திறமையுள்ளவளாயிருந்தாள். “பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி பெருமூச்சு விட்டது போல்” ஞானாம்பாளுடைய கல்வித் திறமையை அறிந்தவுடனே, எங்களுக்குப் பொறாமையும் வெட்கமு முண்டாகி,அன்று முதல் நாங்கள் கல்வியில் அதிக கவனம் வைக்கத் தொடங்கினோம். சீக்கிரத்தில் அவளை வித்தையில் வெல்ல வேண்டுமென்பது, எங்களுடைய மனோரதமா யிருந்தது. நாங்கள் எவ்வளவு பிரயாசைப்பட்டுப் படித்தாலும், அவளும் மேலும் மேலும் படித்துத் தினந்தோறும் கலவியில் அபிவிர்த்தி அடைந்து வந்தபடியால், அவளுடைய ஓட்டத்தைப் பிடிக்க, எங்களால் முடியவில்லை.எட்டி எட்டிப் பார்த்தும் எட்டாமையினால், கொட்டாவி விடத் துவங்கினோம். ஆயினும், அவளுடன் சேர்ந்து படிக்கும்படி யான பாக்கியம், எங்களுக்குக் கிடைத்த பிற்பாடு, நாங்கள் கல்வியில் முயன்று, கல்விமான்களென்கிற பெயரும் பிரதிஷ்டையும் பெற்றோம்.

ஞானாம்பாள் அதிகமாகப் படித்திருக்கிறோமென்கிற வித்தியா கர்வமில்லாமல், சுத்த நிகர்வ சிரோமணியா யிருந்தாள். நாங்கள், கல்வியில் தனக்குக் குறைவாயிருப் பதற்காக வருத்தப்படுகிறோமென்று தெரிந்துகொண்டு, அந்த வருத்தத்தை நீக்கும்பொருட்டு எங்களைப் பார்த்து ஞானாம்பாள் சொல்லுகிறாள்: “ஸ்திரீகள் எவ்வளவு படித் தாலும், புருஷர்களை வெல்ல மாட்டார்கள். ஸ்திரீகள் சொற்ப காலத்தில் வளர்ந்து புஷ்பித்து, சீக்கிரத்தில் கெட்டுப்போகிற சிறு செடிகளுக்குச் சமானமாயிருக்கிறார் கள். புருஷர்களோ என்றால், வெகுநாள் தாமதப்பட்டு வளர்ந்து, நெடுநாள் வரைக்கும் பலன் கொடுக்கிற விருஷங் களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். ஸ்திரீகளுக்கு யெள வனமும் புத்தியும் சீக்கிரத்தில் வந்து, சீக்கிரத்தில் மாறிப் போகின்றன; புருஷர்களுக்கு யௌவனம் தாமதித்து வருகிறபடியால், நெடுங்காலம் நீடித்திருக்கிறது” என்றாள். அதைக் கேட்டவுடனே எங்களுடைய வெட்கம் நீங்கி, நாங்கள் மேலும் மேலும் கல்வியில் முயல மனோற்சாகம் உண்டாயிற்று. 

4-ஆம் அதிகாரம்

பிரதாப முதலியின் தாயார் கன்னிப் பருவமாயிருக்கும்போது நடந்த வர்த்தமானம் நல்ல மருமகள்

ஒருநாள் நானும் ஞானாம்பாளும் படித்துக்கொண்டிருக் கும்போது, என் பாட்டியார், என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்களைக் கண்டவுடனே, ஞானாம்பாள் அவ்விடத்திலே கிடந்த பிரம்பை எடுத்து, ஒளிப்பதுபோல் ஜாலம் செய் தாள். “என்னைக் கண்டவுடனே ஏனம்மா பிரம்பை எடுத்து ஒளிக்கிறாய்?” என்று, என் பாட்டியார் கேட்க, ஞானாம்பாள் “உங்களுடைய பேரனுக்குப் பாடம் தெரியா விட்டால் என்னை அடிப்பீர்களென்று பயந்து பிரம்பை ஒளித்தேன். அடிபடுவதற்குக் கனகசபை அண்ணலும் இங்கே இல்லையே!” என்றாள். உடனே, என் பாட்டியார் ஞானாம்பாளைக் கட்டிப் பிடித்து, “என் புத்தியுள்ள செல்வமே!” என்று, ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் பிறகு, என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்கள். 

“விளையும் பயிர் முளையிலே தெரியும்,” என்பது போல ஞானாம்பாள் இவ்வளவு சிறு பிராயத்தில் நடக்கிற கிரமத் தையும் ஒழுங்கையும் யோசிக்கு மிடத்தில், அவள் அறிவிலும் நற்குணங்களிலும், உன் தாயாருக்குச் சமானம் ஆவா ளென்று நினைக்கிறேன்; உன் தாயாருக்குக் கல்யாணம் ஆவதற்குமுன் நடந்த ஒரு அதிசயத்தைத் தெரிவிக்கிறேன், கேள்” என்று என் பாட்டியார் சொல்லத் தொடங்கினார் கள். “உன் தாயார், கன்னிகையாயிருக்கும் போது. அவளுடைய குண அழகையும் ரூபலாவண்ணியத்தையும் கேள்வியுற்று, அவளை மணம் செய்வதற்கு நம்முடைய பந்துக்களில் அநேகர் விரும்பியும், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல. அவர்களுடைய எண்ணம் நிறைவேறாமற் போயிற்று நமக்கு நெருங்கின பந்துத்துவம் உடைய பேராவூர் நீலகண்ட முதலியும் உன் தாயாரைக் கொள்ள பகீரதப் பிரயத்தனம் செய்தான்; அந்தப் பிரயத்தனம் பலிக்காமற் போய்விட்டதால், உன் தாயாரை எவ்வகையிலாவது சிறை எடுத்துக்கொண்டு போய், பல வந்தமாய் செய்துகொள்ளுகிறதென்று தீர்மானித்துக்கொண்டு, அதற்குத் தகுந்த சமயம் தேடிக் கொண்டிருந்தான்; அவனுக்கு ஒரு சமயமும் வாய்த்தது; எப்படியெனறால், உன்னுடைய மாதா மகர் முதலான புருஷர்களெல்லாரும், இரு காத வழி தூரமான மங்கனூருக்குப் போயிருந்தார்கள்; வீட்டில், உன் தாயார் முதலான சில ஸ்திரீகளும், சில வேலைக்காரர்களும் மட்டும் இருந்தார்கள்; அந்தச் சமயத்தில் மேற்படி நீலகண்ட முதலி, அவனுடைய இரண்டு குதிரைகள் கட்டின நாலு சக்கர ரதத்தையும், சாரதியையும் சத்தியபுரிக்கு அனுப்பி. மங்கனூருக்குப் போயிருந்த உன் மாதாவின் தகப்பனாருக் குத் திடீரென்று மார்பு அடைத்துப் பேச்சு மூச்சு இல்லா மல், அத்தியாவஸ்தையாயிருப்பதாகவும், அதற்காக உன் தாயார் உடனே வரும்படி பண்டி அனுப்பியிருப்பதாகவும், அபாண்டமாய்த் தெரிவிக்கும்படி திட்டம் செய்தான்; அந்தப் பிரகாரம் சாரதி வந்து தெரிவித்தவுடனே, உன் தாயார் நிஜமென்று நம்பி, உடனே அவளும், அவளுடைய தோழியும், அந்தப் பண்டியின் மேற்கொண்டு புறப்பட்டார் கள்; அந்தப் பண்டி நீலகண்ட முதலியினுடைய பண்டி என்பது, உன் தாயாருக்குத் தெரியாது; தன் தகப்பனா ருடைய பண்டிகளில் ஒன்றென்று நினைத்தாள்; இரண்டு குதிரைகள் கட்டின பண்டியைத் தொடர்ந்துகொண்டு ஓடுவது அசாத்தியமாகையால், வேலைக்காரர்கள் ஒருவரும் பண்டியுடன் கூடப் போகவில்லை; அந்த பண்டியைச் சாரதி அதிவேகமாய் நடத்திக்கொண்டு, தெற்கு ரஸ்தா வழி யாகப் போனான். தெற்கு ரஸ்தாவில், ஒரு காத வழி தூரம் போய், பிறகு மங்கனூருக்கு, மேற்கு ரஸ்தா வழியாகத் திரும்பவேண்டியதாயிருக்க, அந்தப்படி மேற்கு ரஸ்தாவில் திரும்பாமல், பேராவூருக்குப் போகிற கிழக்கு ரஸ்தா வழி யாக பண்டியை நகர்த்திக்கொண்டு போனான். 

பண்டியின் பலகணிகள் மூடப்பட்டிருந்தமையாலும், தகப்பனார் வியாதியாயிருக்கிறாரென்கிற துயரத்தினாலும், பண்டி கிழக்கு ரஸ்தா வழியாகப் போகிறதை உன் தாயார் கவனிக்கவில்லை; அந்தச் சாரதி சாராயப் பெட்டியைக் கிட்டத்தில் வைத்துக்கொண்டு, வழியிற் போகும்போதே சாராயத்தைக் குடித்துக் குடித்துக் கொண்டு போனதால், அவன் அறிவு மயங்கி, அவனுடைய வெற்றிலை பாக்குப் பையைக் கைநழுவிக் கீழே விழும்படி விட்டுவிட்டான்; அது விழுந்து வெகு நேரத்திற்குப் பிற்பாடு அவனுக்குத் தெரிந்து, அதைத் தேடிப் பார்ப்பதற்காக, அவன் பண்டியை நிறுத்திக் கீழே குதித்தான். பண்டி நின்றவுடனே, அது நிற்க வேண்டிய காரணம் என்னவென்று விசாரிப்பதற்காக, உன் தாயார் ஜன்னலைத் திறந்தாள்; உடனே, அந்தச் சாரதி குடிவெறியுடனே வந்து, “வெற்றிலை பாக்குப் பை கீழே விழுந்துவிட்டது. அதைத் தேடிக்கொண்டு வருகிறேன், அம்மா!” என்று சொல்லி விட்டு, வந்த வழியைப் பார்த்துக்கொண்டு போனான்; அவன் போன பிற்பாடு, கிழக்கு ரஸ்தா வழியாக வண்டி போகிற விவரம் உன் தாயாருக்குத் தெரிந்து, உடனே வண்டியை விட்டுக் கீழே குதித்தாள். அந்தப் பண்டியில் ஒரு பக்கத்தில் “நீலகண்ட முதலி”யென்று பெயர் வரையப் பட்டிருந்தபடியாலும், அந்தக் கிழக்கு ரஸ்தா அவனுடைய ஊருக்குப் போகிற மார்க்கமென்பது உன் தாயாருக்குத் தெரியுமானதாலும். சகலமும் அவனுடைய கபட நாடக மென்று உன் தாயார் ஒரு நிமிஷத்திற் கண்டுபிடித்துக் கொண்டாள்; அவள் சிறு பருவ முதல், குதிரை கட்டின பண்டிகளில் ஏறி, சில சமயங்களில் சாரத்தியம் செய்வதும், அவளுக்குப் பழக்கமாயிருந்தபடியால், அவள், ஒரு நிமிஷத்தில், அந்தப் பண்டியின் சாரதி ஸ்தானத்தில் ஏறி உட்கார்ந்து, குதிரைகளை மேற்கே திருப்பி, வாயு கதியாகப் பண்டியை நடத்த ஆரம்பித்தாள்; பையைத் தேடிப் போன சாரதி, பண்டி திரும்பி வருகிறதைக் கண்டு, குடி மயக்கத் தினால் தள்ளாடித் தள்ளாடி விழுந்துகொண்டு, வண்டியை மறிக்க ஓடி வந்தான். அவன் கிட்ட நெருங்காதபடி, உன் தாயார் குதிரைச் சவுக்கினால் அவனை ஓங்கி ஓங்கி அடித் தாள்; அந்த அடியும், அவனுடைய குடியும், அவனைக் கீழே தள்ளிவிட்டன; உன் தாயார், மனோகதியும் பிந்தும்படி மங்கனூர்ச் சாலைமார்க்கமாகப் பண்டியை நடத்திக் கொண்டு போகும்போது, நீலகண்ட முதலி ஒரு குதிரையின் மேல் ஏறிக்கொண்டு, பண்டியைத் தொடர்ந்து வந்து, பண்டிக்கு முன்னே வந்து மறித்தான்; பண்டியிலே பூட்டிய இரண்டு பரிகளும் நிற்காமல், நீலகண்ட முதலி மேலே தாவிப் பாய்ந்து ஓடினபடியால், அவன் ஏறிய குதிரை வெருண்டு, மார்க்கத்தை விட்டுத் தாண்டிக் குதித்து, அவனை ஒரு படுகுழியில் வீழ்த்திவிட்டுப் பக்ஷிபோல் பறந்து போய்விட்டது. இவ்வண்ணமாக, உன் தாயார் தெய்வானுகூலத்தால் தப்பி, மங்கனூர் போய்ச் சேர்ந் தாள்; அவ்விடத்தில் அவளுடைய தகப்பனார், அவளைக் கண்டவுடனே, ஓடி வந்து தழுவிக்கொண்டு, “அவள் ஊரை விட்டு இவ்வளவு சடுதியில் வந்ததற்குக் காரணம் என்ன?” வென்று கேட்க, அவள், நடந்த காரியங்களையெல்லாம் ஆதியந்தமாய்த் தெரிவித்தாள்; அதைக் கேட்டவுடனே, அவள் தகப்பனாருக்கும் மற்றவர்களுக்கும் நீலகண்ட முதலிமீது பிரமாதமான கோபம் உண்டாகி, அவனைச் க்ஷிக்கத் தொடங்கினார்கள். எப்படி என்றால், நம்முடைய ஜாதியார் எல்லாரும் ஏகமாய்க் கூட்டம் கூடி, அவனை ஜாதிப்பிரஷ்டன் ஆக்கி, சுபாசுபங்கள் இல்லாமலும், நீர் நெருப்பு இல்லாமலும் விலக்கிவிட்டார்கள். அவனுக்கு ஜாதியார் ஒருவரும் பெண் கொடாதபடியால், அவன் இன்னமும் பிரமசாரியாகவே இருக்கிறான். பிள்ளை யாருடைய பிரமசாரித்துவம் நீங்கினாலும், அவனுடைய பிரமசாரித்துவம் நீங்காதென்பது நிச்சயம். 

மேற்படி சங்கதி நடந்த பிறகுதான், உன் தாயாரை உன் தந்தையாகிய எனது மைந்தனுக்கு, விவாகம்செய்து வைத்தது; உன் தாயாரைப்போலச் சர்வகுணாலங்கிருத பூஷணிகள் உலகத்தில் இருப்பார்களா? அவள் எனக்குச் செய்யும் அன்பும், ஆதரவும், வணக்கமும், மரியாதையும் யாருக்காவது வருமா? எனக்கு நூறு புத்திரிகள் இருந்தா லும், இந்த விருத்தாப்பிய காலத்தில் என் மருமகளைப் போல, என்னை ஆதரிப்பார்களா? நான் வியாதியாயிருக்கும் காலங்களில், எனக்குப் பத்திய பாகங்கள் செய்து கொடுத்து, உன் தாயாரே எனக்குச் சகல பணிவிடைகளும் செய்துவருகிறாள். அவள் இல்லாவிட்டால், நான் செத்த இடம் புல் முளைத்துப் போயிருக்கும். அவள் அன்னமில்லாதவர்களுக்கு அன்னமும், வஸ்திரமில்லாதவர்களுக்கு. வஸ்திரமும் கொடுத்து, எத்தனையோ ஏழைக் குடும்பங் களைக் காப்பாற்றி வருகிறாள். அவளுக்காகத்தான் மழை. பெய்கிறது; அவளுக்காகவே வெயில் எரிக்கிறது; அவளுக்குக் கடவுள் நீடிய ஆயுசைக் கொடுத்து, உனக்கும் எனக்கும் என்னுடைய மகனுக்கும் மற்ற ஏழைகளுக்கும் அவள் ஆதரவாயிருக்கும்படி கிருபை செய்யவேண்டுமென்பது, என்னுடைய இடைவிடாத பிரார்த்தனையாயிருக்கின்றது என்றார்கள். மாமியார் மெச்சிய மருமகள் இல்லை. என்கிற பழமொழிக்கு விரோதமாக, என் தாயாருடைய சுகுணப் பிரபாவங்களை என் பாட்டியார் எடுத்துப் பிரஸ்தாபித்த வுடனே, இப்படிப்பட்ட புண்ணியவதி வயிற்றிலே பிறந்தோமே என்கிற சந்தோஷத்தினால், நான் புளகாங்கித மாகி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்தேன். என்னுடைய மாதாவை உலக மாதாவென்றே நினைத்து, நித்தியமும். நான் பக்தி பண்ணிக்கொண்டு வந்தேன். 

5-ஆம் அதிகாரம்

சிங்காரத் தோட்டம், கனகசபை சரித்திரம், ஜலகண்டம்

எங்கள் வீடுகளுக்குப் பின்புறத்தில் எண்ணிக்கையில் லாத பல விருக்ஷங்கள் நிறைந்த சிங்காரத் தோட்டமும், பூஞ்சோலைகளும், தாமரைத் தடாகங்களும் இருந்தன. நாங்கள் படிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில். இந்திரனுடைய கற்பகச் சோலைக்குச் சமானமான அந்தக் சிங்காரத் தோட்டத்தில் விளையாடுகிறது வழக்கம். அவப்பொழுதிலும் தவப்பொழுது என்பதுபோல், விளை யாடுகிற நேரத்தையும் ஞானாம்பாள் தர்ம விஷயங்களில் உபயோகப்படுத்து வருவாள். எப்படியென்றால், சிங்காரத் தோட்டத்தில் பழுத்திருக்கிற மாங்கனிகள், தேங்கனிகள், வாழைக்கனிகள், பலாக்கனிகள், விளாங்கனிகள் முதலிய வைகளைப் பறித்து, ஏழைகளுக்குக் கொடுத்து வருவாள். அந்தத் தோட்டத்தில் இருக்கிற பக்ஷிகளை, ஒருவரும் பிடிக்காமலும், உபத்திரவம் செய்யாமலும், ஞானாம்பாள் பாதுகாத்து வந்தபடியால், அவைகள் மேன்மேலும் பெருகி, அவளைக் கண்டவுடனே ஆடிப்பாடிக் குதித்து விளையாடி. மகோற்சவம் கொண்டாடும். சாதுக்களைக் கண்டால் சந்தோஷப்படாதவர்கள் யார்? 

ஒரு நாள் நாங்கள் தோட்டத்தில் விளையாடிக்கொண் டிருக்கும்போது, ஒரு மரத்தில் அபூர்வமாய்ப் பழுத்திருந்த இரண்டு பழங்களை, ஞானாம்பாள் பறித்துக்கொண்டு வந்து, என் முன்பாகவும் கனகசபை முன்பாகவும் வைத்துப் புசிக்கும்படி சொன்னாள். நான், கணக்கில் என் வல்லமையைக் காட்டுவதற்காக, அவளைப் பார்த்து, “இவைகள் எத்தனை பழங்கள்?” என்றேன்; அவள், “இரண்டு பழம்” என்றாள்; நான் மூன்று பழம் என்றேன். அவள் எப்படி என்று கேட்க, அந்தப் பழங்களை வரிசை யாய் வைத்து எண்ணும்படி சொன்னேன். அவள் ஒன்று, இரண்டு என்று எண்ணினாள். நான் உடனே ‘ஒன்றும் இரண்டும் மூன்றல்லவா?” என்றேன். அவள் ஆம் ஆம், என்று, கனகசபையைப் பார்த்து “அண்ணா! நீங்கள் ஒரு பழம் தின்னுங்கள், நான் ஒரு பழம் எடுத்துக்கொள்கிறேன்; அத்தான் ஒரு பழம் அருந்தட்டும்,” என்று சொல்லி, அவள் ஒரு பழத்தைத் தின்றுவிட்டாள்; கனகசபை ஒரு பழத்தை விழுங்கிவிட்டான். நான் ஒன்றுமில்லாமல் வெறும் வாயைச் சப்பினேன்; இவ்வகையாக என் கணக்கின் சாமர்த்தியத்தைக் காட்டப்போய்க் கனியை இழந்து ஏமாறினேன். 

கனகசபை, நற்குணமும் நற்செய்கையும் உடையவனா யும், விவேக விற்பன்னனாயும்,சர்வஜன ரஞ்சகனாயும் இருந்தான். அவனுடைய புத்தி நுட்பம் தெரியும் பொருட்டு அவனுடைய இளமைப் பருவத்தில் நடந்த ஒரு காரியத் தைத் தெரிவிக்கிறேன். அஃதென்னவெனில், சென்னை புரி கவர்னர் தேச சஞ்சாரம் செய்துகொண்டு 

வருகையில், சத்தியபுரியில் கூடாரம் அடித்துக்கொண்டு, அவருடைய பரிவாரங்களுடன் சில நாள் தங்கி இருந்தார். அப்போது ஒருநாள் அவர் மட்டும் தனிமையாய்ப் புறப்பட்டு, வாகனா ரூடராய், ஊரைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வரும்போது, அவருக்கு மறுபடியும் கூடாரத்துக்குப் போக மார்க்கம் தெரியாமையினால், வழியில் நின்றுகொண்டிருந்த கனக சபையைக் கூப்பிட்டுக் கூடாரத்துக்குப் போகிற மார்க்கத் தைக் காட்டும்படி கேட்டுக்கொண்டார். அவர் கவர்னர் என்பது கனகசபைக்குத் தெரியாதாகையால், “நான் அவ்வளவு தூரம் எப்படி நடந்து வந்து வழி காட்டுவேன், என்று ஆக்ஷேபித்தான். உடனே கவர்னர், தம்முடன் கூட வண்டியில் ஏறிக்கொள்ளும்படி சொன்னபடியால். அந்தப் பிரகாரம் கனகசபையும் வண்டியில் ஏறி வழி காட்டிக்கொண்டு போனான். அவர்கள் வழியிற் போகும் போது கனகசபை கவர்னரை நோக்கி, “ஐயா! கவர்னர் அவர்களுடைய கூடாரத்தில் பல துரைமார்கள் இருப்பார் களே! அவர்களுக்குள் கவர்னர் இன்னாரென்று தெரிந்து கொள்வதற்கு விசேஷ அடையாளம் என்ன?” வென்று கேட்க, கவர்னர், கனகசபையைப் பார்த்து ‘கவர்னரைக் கண்டவுடனே, எல்லாரும் எழுந்து, தொப்பியைக் கழற்றி நின்றுகொண்டு வணங்குவார்கள். கவர்னர் மட்டும் உட்கார்ந்தபடியே இருப்பார், இதுதான் அடையாளம், என்றார். இவ்வகையாகச் சம்பாஷித்துக்கொண்டு அவர்கள் கூடாரத்தைச் சமீபித்தவுடனே, கூடாரத்தில் இருந்தவர்கள் எல்லாரும் எழுந்து, தொப்பியைக் கழற்றிக் கொண்டு, கவர்னர் வருகிற வண்டியை நோக்கி, வந்தனம் செய்தார்கள். அப்போது கவர்னர் கனகசபையைப் பார்த்து, “இப்போது கவர்னர் இன்னாரென்று உனக்குத் தெரிகிறதா?” என்று கேட்சு, உடனே கனகசபை. “நீங்களாவது கவர்னராயிருக்கவேண்டும். அல்லது நானாவது கவர்னராயிருக்க வேண்டும். ஏனென்றால், நாமிருவர் மட்டும் உட்கார்ந்தபடி இருக்கிறோம்; நம்மைக் கண்டவுடனே, எல்லாரும் எழுந்து, தொப்பியைக் கழற்றிக் கொண்டு, நமக்கு வந்தனம் செய்கிறார்கள்” என்றான். சமயோஜிதமாகவும் சாதுரியமாகவும் கனகசபை சொனை மறுமொழியைக் கவர்னர் விந்துகொண்டு, அவனுக்குக் கனகாபிஷேகம் செய்து அனுப்பினார். 

எப்போதும் விநோத சல்லாபப் பிரியனான கனகசபை, சில நாளாக நன்றாய் விளையாடாமலும், பேசாமலும், துக்காக்கிராந்தனாய் மௌனம் சாதித்தான். “அதற்குக் காரணம் என்ன?” வென்று, அவனை நான் பல முறை கேட்டும், அவன் தக்க மறுமொழி சொல்லாமல் மழுப்பி விட்டான். ஒருநாள், சிங்காரத் தோட்டத்தின் கடைசி யில் இருக்கிற ஒரு பெரிய தாமரைத் தடாகத்தின் ஓரத் தில், நானும் ஞானாம்பாளும் கனகசபையும் விளையாடிக் கொண்டிருந்தபோது, கனகசபை கால் தவறி அந்தத் தடாகத்தில் விழுந்துவிட்டான். அவன் நீந்தத் தெரியாத வனானதால், தண்ணீரில் முழுகுகிறதும். கிளம்புகிறது மாகத் தத்தளித்துக்கொண்டிருந்தான; நானும் நீந்தத் தெரியாதவனாதலால், இன்னது செய்கிறது என்று தோன் றாமல் மலைத்துப் போய், ஸ்தம்பாகாரமாய் நின்றுவிட்டேன். ஞானாம்பாள் அலறிக்கொண்டு, அங்கும் இங்கும் ஓடிப்பார்த்தும், உதவி செய்யத் தக்கவர்கள் ஒருவரும் அகப்படவில்லை; எங்கள் வீடு வெகு தூரமானதால், அங்கே போய் யாரையாவது அழைத்துக்கொண்டு வருவ தும் அசாத்தியமாயிருந்தது இதையெல்லாம் ஞானாம்பாள் ஒரு க்ஷணப்பொழுதில் ஆலோசித்துக்கொண்டு, சிங்காரத் தோட்டத்தின் கடைசியிலிருக்கிற திட்டிவாசலைத் திறந்து கொண்டு, வெளியே ஓடினாள். அவ்விடத்திலும் ஒருவரும் சமீபத்தில் இல்லாமையால், தூரத்தில் ரஸ்தாவில் நடந்து கொண்டிருந்த ஒரு சந்நியாசியாரை ‘ஐயா! ‘ஐயா!? வென்று கூப்பிட்டுக்கொண்டு, மான்போலவும் மயில் போலவும் அதிவேகமாக ஓடினாள். அவள் தனிமையாக ஓடுகிறதைப் பார்த்து நானும் கூட ஓடினேன். ஞானாம் பாள் சந்நியாசியாரை நோக்கி, ‘ஐயா! ஒரு சிறுவன் குளத்தில் விழுந்துவிட்டான்; தாங்கள் தயவு செய்து வந்து, அவனைக் கரையேற்றவேண்டும்” என்று, மிகவும் வணக்கத்துடனே பிரார்த்தித்தாள். அந்தச் சந்நியாசி யாரும் உடனே திரும்பி, எங்களுடன் ஓடிவந்தார். அவர் ஞானாம்பாளைப் பார்த்து, ஓடிவரும்போதே “அந்தப் பிள்ளையை நான் கரையேற்றினால், நீ காதில் போட்டிருக்கிற வயிர ஓலைகள் முதலிய நகைகளைக் கொடுப்பாயா?” வென், அவள், “அப்படியே தருகிறேன்” என்றாள். நாங்கள் வரப் பின்னும் சற்று நேரம் தாமதப் பட்டிருக்குமானால், கனகசபை ஜலத்தில் மூழ்கி இறந்து போயிருப்பானென்பது நிஸ்ஸந்தேகம். ஞானாம்பாளுடைய அதி தீவிர முயற்சியினால். அவன் பிழைத்தான். எப்படி யென்றால், சந்நியாசியார் ஒரு நிமிஷத்தில் தடாகத்தில் குதித்துக் கனகசபையைக் கரையேற்றிவிட்டார். அவன் ஜலத்தைக் குடித்து மூர்ச்சையாயிருந்ததால், அவன் குடித்த ஜலம் வெளிப்படும்படி, சந்நியாசியார் தகுந்த பக்குவங்கள் செய்து, அவன் பிராணனை ரக்ஷித்தார். உடனே ஞானாம்பாள், தன் காதில் இருந்த பூஷணங்களைக் கழற்ற ஆரம்பித்தாள். சந்நியாசியார் “வேண்டாம்! வேண்டாம்!!” என்று கையமர்த்தி, ஞானாம்பாளைப் பார்த்து, ”உன்னுடைய மனோதர்மத்தை அறிவதற்காக, அந்த நகைக ளக் கேட்டேன். அவைகளை நீ கொடுத்தாலும், நான் அங்கீகரிப்பேனோ? ஒரு பிராணனை ரக்ஷித்த புண்ணியம் எனக்குப் போதாதா? எனக்கு இயற்கையாக இல்லாவிட்டாலும், உன்னைப் பார்த்த பிறகாகிலும், எனக் குத் தர்ம சிந்தனை இல்லாமற்போகுமா? இவ்வளவு சிறு பிராயத்தில், ஒரு பிராணனைக் காப்பாற்ற நீ எவ்வளவோ முயற்சி செய்தாயே; உனக்குச் சமானமான புண்ணிய வதிகள் உலகத்தில் இருப்பார்களா? இம்மையிலும் மறு மையிலும் சகல பாக்கியங்களையும், கடவுள் உனக்குத் தந்தருள்வாராக” என்று ஆசீர்வாதம் செய்து, “சந்நியாசி பயணம் திண்ணையில்’ என்பதுபோல், ஒரு நிமிஷத்தில் போய்விட்டார். நாங்கள் ஒன்றும் பேச நாவெழாமல், பிரமித்துப்போய் நின்றோம். பதினாயிரம் பொன் பெற்ற ஆபரணங்களைக் கொடுக்க சம்மதித்த ஞானாம்பாளுடைய குணம் பெரிதா, அவைகளை வேண்டாமென்று நிராகரித்த சந்நியாசியாருடைய குணம் பெரிதாவென்று நான் சற்று நேரம் ஆலோசித்து, ஞானாம்பாளுடைய குணமே விசேஷ மென்று தெளிந்துகொண்டேன். 

இதுவரையும் பேசச் சக்தி இல்லாமல், களைத்துப் போயிருந்த கனகசபைக்குக் கொஞ்சம் திடம் உண்டாகி, அவன் எங்களைப் பார்த்து, “தாய் தகப்பன் இல்லாமல் நிராதரவாயிருக்கிற எனக்கு, இவ்வளவு பெரிய உபகாரம் செய்து, பிராணனைப் பிரதிஷ்டை செய்தீர்களே! அதற்கு நான் என்ன பிரதி உபகாரம் செய்யப் போகிறேன்!” என்று பல விதமாக உபசார வார்த்தைகள் சொல்லத் தொடங்கினாள். எனக்கு ஆச்சரியம் உண்டாகி, “உனக்குத் தாய் தந்தைகள் இருக்கும்போது, தாய் தகப்பனற்ற பிள்ளையென்று நீ சொன்ன தற்குக் காரணமென்ன?” என்று நான் வினாவ, கனகசபை கண்ணீர்விட்டு, அழுது கொண்டு சொல்லுகிறான்: “என் பிரியமான அண்ணனே! தங்கையே! என் பிராணனைக் காப்பாற்றின உங்களுக்கு இனிமேல் நான் உண்மை சொல்லாமலிருக்கலாமா? உங்க ளுடைய முந்தின ஆசான் ஆகிய சாந்தலிங்கம் பிள்ளையையும், அவருடைய பத்தினியையுமே, நான் தந்தை தாய் என்று நினைத்திருந்தேன். அவர், சில நாளைக்கு முன், கடின வியாதியாயிருந்தபோது, இனிமேல் ஜீவதசைக்கு ஏதுவில்லையென்று நினைந்துகொண்டு, என்னை ரகசியத்தில் கூப்பிட்டு, “அப்பா! குழந்தாய்! உனக்குத் தெரியாமல் இந்நாள் மட்டும் நான் மறைத்து வைத்திருந்த ஒரு ரகசியத்தை, உனக்கு வெளிப்படுத்துகிறேன்; அஃதென்ன வென்றால், நானும் என் பெண்சாதியும் உன்னைப் பெற்ற வர்கள் அல்ல; இதற்குப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன், நீ ஆறு மாதக் குழந்தையா யிருக்கும்போது, ஒருவன் உன்னைக் கொண்டுவந்து, பிள்ளைக்குப் பால் வேண்டு மென்று கேட்டான்; அதற்குக் கொஞ்ச நாளைக்குமுன், என் பெண்சாதிக்கு ஒரு குழந்தை பிறந்து, இறந்து போய், பால் வற்றாமல் இருந்ததால், அவள் உன்னை வாங்கி மார்பிலே வைத்து அணைத்தாள்; உடனே அவளுக்குப் பால் சுரந்து, நீ சம்பூரணமாகப் பால் குடித்தாய்; உன்னைக் கொண்டுவந்தவன், மறுபடியும் உன்னை எடுத்துக் கொண்டு போவதற்கு அவனாற் கூடியமட்டும் பிரயாசப்பட்டும். நீ என் பெண்சாதியை விடாமல், அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அமுதாய்; அவன், “இந்தப் பிள்ளை உங்களுக்கு வேண்டுமானால், நீங்களே வைத்துக்கொள்ளுங் கள்,” என்று சொல்லிப் போய்விட்டான். இப்படிப் பட்ட அதிசெளந்திரியமான பிள்ளை நமக்குக் கிடைத்ததே என்கிற ஆனந்தத்தினால், நீ யாருடைய பிள்ளையென்று அவனை விசாரியாமல், உன்மேல் நோக்கமாயிருந்து விட்டோம்; ஆனால், அவன் கேவலம் சாமானியன் ஆனதால், அவனுக்கு நீ பிள்ளை அல்லவென்பது நிச்சயம்; அதுமுதல் உன்னைக் கண்ணுக்குக் கண்ணாகவும், பிராணனுக்குப் பிராணனாகவும் வளர்த்தோம்; நீயும் சொந்தப் பிள்ளையைப் பார்க்கிலும், நூறு பங்கு அதிகமாகச் சகலவிதத்திலும் திருப்தியாக நடந்து வந்தாய்; இனி நான் பிழைப்பே னென்கிற நம்பிக்கை இல்லாமையினாலும், சில விசை உன் மாதாபிதாக்கள் உன்னைத் தேடிவந்தால், உனக்கு உண்மை தெரிந்திருக்கவேண்டிய தானதினாலும், இந்தக் காரியத்தை உனக்குத் தெரிவித்தேன். இப்போது நம்மை ஆதரிக்கிற சுந்தரத்தண்ணியாரும், அவருடைய பர்த்தாவும்,உன்னை யும் உன்னுடைய செவிலித் தாயையும் கைவிடாதீர்கள்: நீ மனம் வருந்தாதே” என்றார். 

பிற்பாடு, ஏதோ கடவுளுடைய அனுக்கிரகத்தால், என்னை வளர்த்த பிதாவாகிய சாந்தலிங்கம் பிள்ளை. ஆரோக்கியம் அடைந்து, பிழைத்துக்கொண்டது உங்க ளுக்குத் தெரியுமே. அவர் சொன்ன விருத்தாந்தத்தைக் கேட்டது முதல், எனக்கு உண்டாயிருக்கிற கிலேசமும். துக்கமும் கடவுளுக்குத்தான் தெரியும். அந்தக் காரணத் தைப் பற்றித்தான் சில நாளாக நான் சரியாய் விளையாடா மலும், பேசாமலும் இருந்தேன். என்னைப்போல நிர்ப் பாக்கியர்கள் உலகத்தில் இருப்பார்களா? தாய் தகப்பன் ன்னாரென்று தெரியாத பிள்ளைகளும் இருக்குமா? பால் குடிக்கிற குழந்தையைக் கைவிடுகிற தாய் தந்தைமார் களும் பூமியில் இருப்பார்களா? அவர்கள் எப்படிப்பட்ட வர்களா யிருக்கவேண்டும்? லோகாபவாதத்தை யார் தடுக்கக்கூடும்? தடாகத்தில் விழுந்த என்னைக் கரை யேற்றி, ஏன் என்னைப் பழிக்கும் நிந்தைக்கும் ஆளாக்கி னீர்கள்? நான் அப்போதே இறந்துபோயிருந்தால், என் னுடைய துக்கமும், அவமானமும் என்னுடன் இறந்து போயிருக்குமே,’ என்று சொல்லிக் கனகசபை, தாரை தாரையாய்க் கண்ணீர்விட்டு அழுதான். அவனுடைய துக்கத்தைப் பார்த்து நானும் ஞானாம்பாளும் கூட அழுதோம். பிற்பாடு எங்கள் மனதைத் தேற்றிக்கொண்டு, எங்களாலே கூடிய வரையில் அவனுக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லியும், அவன் மனம் தேறவில்லை. அவனுடைய மனோ வியாகுலத்தால், அவன் நாளுக்குநாள் இளைத்துத் துரும்புபோல் ஆனான். அவனுடைய சங்கதியை வெளிப்படுத்தினால், அவனுக்கு அவமானம் உண்டாகும் என்று நினைத்து அதை நாங்கள் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை. ஆனால் என் தாயார்மட்டும், அந்த இரகசியத்தை எப்படியோ தெரிந்துகொண்டு, கனகசபை யிடத்தில் அத்தியந்த கிருபையும் அன்பும் பாராட்டி வந்தார்கள்.

– தொடரும்…

– மாயூரம் மாஜி டிஸ்டிரிக்ட் முன்சீப் ச.வேதநாயகம் பிள்ளையவர்கள் (1826-1889) இயற்றியது, முதற் பதிப்பு: 1879.

– பிரதாப முதலியார் சரித்திரம், நூற்றாண்டு விழா புதிய பதிப்பு: அக்டோபர் 1979, வே.ஞா.ச.இருதயநாதன் (வேதநாயகம் பிள்ளை மகன் பேரர்), ஆவடி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *