பிரசவ வேதனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 145 
 
 

(2001 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தெய்வமே… எனது கணவன் நாளைப் பொழுதாகிலும் வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும்!”

சிவந்தினி பிறமாவட்டத்தில் அரசபணிபுரியும் தனது கணவனின் நினைவுகளுடனேயே படுக்கைக்குப் போனாள்.

எத்தனை வாக்குறுதிகளைத் தந்தார்…”உற்றார் துணையோ ஊரார் அரவணைப்போ இல்லாத உன்னை இப்படியான நேரத்தில் தவிக்க விடுவேனா?’ என்று அடித்துக் கூறினாரே…..அப்படி அவர் கூறிய வார்த்தைகளெல்லாம் வெறுமனே என்னைச் சமாதானம் செய்யத்தானா?- அவள் கண்களிலிருந்து நீர் பெருகியது.

குஞ்சு குருமன்களாக அவளுடைய மூன்று குழந்தைகளும் கட்டிலை சூழ்ந்துபடுத்திருந்தன. அவளது தாய்கிழவி நால்வருக்கும் காவலாக வாசலில் பாயைப் போட்டு துாங்கிவிட்டிருந்தாள்.

மூன்று குழந்தைகளையே வளர்க்கவக்கற்ற எமக்கு மேலும் குழந்தைகள் எதற்கு? சிவந்தினி அலுத்துக் கொண்டாள். உடற்பாரம் நன்கு அதிகரித்துவிட்டது. கால்களில் வீக்கம். மூச்சு விடவே கஷ்டம். சிறிய வேலைகளைக் கூட செய்ய முடிவதில்லை.

நிறை மாதம்…!

சிவந்தினிக்கு துாங்கிவிடுவேன் என்ற நம்பிக்கை போய்விட்டது. நாரிகொதிப்பது போல உணர்ந்தாள்…. திரும்பி…. புரண்டு படுத்தாள். இயலவில்லை…”அம்மா….எனக்கு கஷ்டமாக இருக்குது…”

தாய் திடுக்குற்று தூக்கத்திலிருந்து எழுந்தாள் வீட்டில் மணிக்கூடு இல்லை. ஆனாலும் கிழவி நேரத்தை அனுமானித்தாள்.

“நடுச் சாமம் பின்ளை !”

மூத்தவள் வசந்திக்கு பத்து வயது இருக்கும். எழும்பி நின்று கண்களைக் கசக்கினாள்.

“வசந்தி….நீ அம்மாவுக்கு மேல் கழுவ சுடுநீர் வைத்துக் கொடு. நான் செல்வனுடைய ஒட்டோவை பிடித்துக் கொண்டு வந்து விடுகிறான்.”

”அவ்வளவு துாரம் நீங்கள் தனியே போக வேண்டாம் அம்மா. வசந்தி நீயும் போ” சிவந்தினி அறிவுறுத்தினாள். கிழவி ஏற்றுக்கொள்ளவில்லை.

விசர்க் கதையெல்லே பிள்ளை கதைக்கிறாய். நாடு கிடக்கிற கிடையிலை காவாலிகள் என்னை தள்ளிப் போட்டு பிள்ளையை இழுத்துக் கொண்டு போய்விடுவான்கள். நான் நாலு எட்டு எட்டி உதிலை போயிற்று வந்துவிடுவன்.”

கிழவி நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்லவும் “உண்மைதான். உதவிக்கென்றால் ஆளில்லை. உபத்திவரம் கொடுப்பதற்கென்றால் ஏமசாமம் என்று

இல்லாமல் அலைந்து திரியிறான்களாக்கும்.” என்று சிவந்தினி அலுத்துக் கொண்டாள்.

செல்வன் வீட்டுநாய்கள் சாமத்து அமைதியை தகர்த்து எறிந்து சாதனை புரிந்தன. கிழவி கூப்பிடாமலே முற்றத்து மின் விளக்கு ஒளிர்ந்தது. செல்வனின் மனைவி எட்டிப் பார்த்தாள்.

“யார்…பாக்கியம் ஆச்சியா…? பிள்ளைத் தாச்சியினுடைய விசயம் என்று விளங்குது… உவர் நல்லாய் குடிச்சுப் போட்டு வந்து விழுந்து கிடக்கிறார்….” என்று கூறி அவள் இழுக்கும் போதே கிழவி இரு கைகளையும் உயர்த்தி கும்பிட்டு…

“உன்னை தெய்வமாக நினைத்து கைகூப்பி தொழுகிறன் பிள்ளை…என்னை கைவிட்டு விடாதை” என்று இரந்தாள். பெண்ணின் நிலைமை பெண்ணுக்குப் புரியாமல் போய்விடுமா? சரி நீங்கள் போய் ஆயத்தப்படுத்துங்கோ ஆச்சி. நான் எப்படியும் அவரை எழுப்பி விடுகிறன்.”

செல்வன் வீட்டு நாய்கள் தமது முயற்சியால் தான் கிழவி திரும்பிப் போனாள் என நினைத்தவை போல மீண்டும் உறங்கிப் போயின. பாக்கியம் வீட்டு வாயிற் படலையில் ஓட்டோ திரும்பும் சத்தம் கேட்டது. “பிள்ளை .. உன்னுடைய பாரம் இறங்குவது யாருடைய உதவியிலையும் தங்கி இருக்கேல்லை. தெய்வம்தான் உனக்குத் துணை என்று நினைத்துக் கொள். மனதிலை ஒரு நேர்த்திக் கடனையும் வை.”

கிழவி தானும் ஒரு நேர்த்திக்கடனை நினைத்த படியே மகளுக்கு துணையாக வசந்தியையும் ‘ஓட்டோவில்’ ஏற்றி அனுப்பி வைத்தாள்..

ஓட்டோ ஆசனத்தில் செல்வன் இல்லை. அவனது மனைவி சாரதி ஆசனத்தில் இருந்தாள். கிழவி திரும்பவும் கைகூப்பி அழுதாள்.

“பேசாமல் போய் படணை ஆச்சி” ஓட்டோ உறுமியது.

சிவந்தினிக்கு நிலைமை விளங்கியது. பாதையில் எதிர்பாராத விதமாக சந்திக்கும் சமயங்களில் செல்வன் அவளுடன் கேலி வார்த்தைகள் பேசுவான்.

“எங்கே போகிறாய்?” என்று கேட்டு அவ்விடம் வரை அழைத்துச் செல்வான். இப்போ உதவி தேவைப்படும் நேரத்தில் ஆளில்லை.

வைத்தியசாலை வாங்கில் சிவந்தினி அனுங்கிய படி அமர்ந்திருந்தாள். நாரி அப்படி கொதித்தது. வசந்தி தாய்க்கு அனுசரணையாக கலங்கிய கண்களுடன் நாரியை தடவிக் கொடுத்தாள். துாரத்தில் அன்னப் பட்சிகள் போல இரண்டு பெண் தாதிமார்கள் தங்களுக்குள் பேசி சிரித்த படி வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்களில் ஒருத்தி…

‘ஏய் நாரியை தடவாதே!” என்று அதட்டி வசந்தியின் கையை தட்டி விட்டாள். அந்த நேரத்தில் நாரியை தடவிக்கொடுத்தால் பிரசவ வேதனை எழும்பாது என்ற உண்மை சகலருக்கும் தெரிந்தவிடயமல்லவே! வசந்தியில் பிழை இல்லை. ஆனாலும் அவள் தான் ஏதோ தவறு செய்து விட்டேனோ என எண்ணி முழித்தாள்.

அடுத்தவள் சிவந்தினியின் நாடியோட்டத்தைப் பரீட்சித்தாள். நான்கு கேள்விகள் கேட்டாள். குறும்பாக சிரித்தாள்…

“நேரம் இருக்குது!” என்றாள். பெயர், வயது, விலாசம், எல்லாம் கேட்டு பதிந்தாள். பிரசவ வார்ட்டுக்கு அழைத்துச் சென்று கட்டிலைக் காட்டினாள். வசந்தி உயரமான அந்த கட்டிலில் படுத்து விட்டாள்.

காலைவரை சிவந்தினி பிரசவதேனையில் துடித்தாள். டாக்டர் வந்தார். கட்டிலில் படுக்கவைத்து பரிசோதித்தார்.

“குழந்தை சரியான ‘பொஸிசனில்’ இல்லை . பக்கவாட்டில் இருக்கிறது” கூறினார். அந்த டாக்டர் கைராசிக்காரர் என்று பெயர் பெற்றவர். ‘கிளினிக்’ வரும் சமயங்களில் சகஜமாக கதைத்து பகிடி பேசி பழக்கம். சிவந்தினியின் அழகிய பெரிய கண்கள் அவரை ஏதேச்சையாக மயக்கும்.

அடுத்த கட்டிலுக்குப் போனார். அந்த வார்டில் நோயாளிகள் இல்லை. எல்லோருமே தாய்மார்தான். ஒரு ‘நர்ஸ்’ இரகசிய தொனியில் சிவந்தினியிடம் கூறினாள்.

“டாக்டருக்கு டியூட்டி முடியும் நேரமாகி விட்டது. உனது நிலையில் டாக்டரின் ஒத்துழைப்பு இன்றி நாங்கள் மட்டும் சாமளிப்பது கஷ்டம். அவரை நிற்கும்படி கேட்டுப்பார்” ‘வார்ட் ரவுண்ட்” முடிந்து திரும்பிய டாக்டரை சிவந்தினி கெஞ்சி கேட்டாள்….” ஐயா… நீங்கள் எனது தெய்வம். ஆபத்தான நிலையிலை இருக்கிற என்னை காப்பற்றுங்கோ.”

“பார்க்கலாம்” என்று கூறி வசந்தியின் கன்னத்தை செல்லமாக கிள்ளிச் சென்றார். இன்னொரு நாஸ்…எப்போதும் கிண்டல் பேசுபவள்…’ஹெட் நேர்சுடன்’ மெட்னிபார்க்க இருப்பதை கூறி இருப்பார்” என்று கூறி களுக் என்று சிரித்தாள். சிவந்தினியின் நம்பிக்கை தகர்ந்தது.

“பயப்படாதே. ‘லேடி டாக்டரை’ அழைக்கலாம்” என்று கூறி அடுத்தவள் தேற்றினாள். சிவந்தினியின் எண்ணம் கணவன் பக்கம் திரும்பியது. இன்னமும் கூட வர வில்லையே….. ஆண்களுக்கு இந்த விடயத்தில் பொறுப்பு எங்கே? ஆலுவலகத்தில் இடர் கடன் ஒன்றினைப் பெற்று வருவதாக எழுதியிருந்தார். அவருடைய அதிகாரியும் ஆண்தானே! மறுத்துவிட்டார். உயர் அதிகாரிகளுக்கு மோட்டார் வண்டி வாங்குவதற்கு கொடுக்கப்படும் முக்கி யத்துவம் இப்படியான தேவைகளுக்கு வழங்கப்படுமா? கலங்கினாள்.

அடியெடுத்து வைக்க முடியாதபடி நோவு அதிகரித்தது. குளியலறை சென்று நான்றாக குளித்தாள்..”கெட்டிக்காரி” என்று நர்ஸ் பாராட்டியதுடன் பிரசவ அறைக்கும் அழைத்துச் சென்றாள். நவீன வசதிகள் அத்தனையும் அங்கு இருந்தது. நேற்று மட்டிலும் ஒன்பது சிசுக்களை தாயாரிடமிருந்து பிரித்து அனுப்பிய இடம் அது.

அனைத்து தாய்மார்களும் அழுவார்கள்…கத்துவார்கள்…கணவனைத் திட்டுவார்கள். நர்ஸ்…கேட்பாள். உனக்கு என்ன குழந்தை வேண்டும்? ஆண் என்று கூறினால் இதோ பிறப்பது ஆண் என்பாள். பெண் என்றால் அடுத்த விதம். ஐம்பதுவீதம் ‘கரெக்டாக’ இருக்கும் தானே. இல்லாவிட்டால் கூட என்ன…குழந்தை பிறந்து விட்டால் அந்த மகிழ்ச்சியில் எல்லாமே மறந்து போகும்.

“லேடி டாக்டர்!” வந்துவிட்டார். சிவந்தினியின் மனக்கண்முன் பொறுப்பற்ற அவள் கணவன்…கடன் கொடுக்கமறுத்த அதிகாரி…’ஓட்டோ ‘ செல்வன்… தனது வேண்டுகோளை காதில் வாங்கிக் கொள்ளாத ‘டாக்டர்’…எல்லோரும் தோன்றி தோன்றி மறைந்தார்கள். கண்ணால் நீர் ஆறாகப் பெருகியது. அனைத்து தாய்மாரைப் போலவே அவளும் அழுதாள்..குழறினாள்…திட்டினாள். கணவனை நிந்தித்தாள் இறுதியில்..ஆண் சமுதாயமே தயங்கி நிற்கும் வண்ணம் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தாள்…

இதையெல்லாம் பெண்தாதிமார் பெரிதுபடுத்தி வெளியே சொல்வதில்லை!

– தினமுரசு செப். 28-2001, ஸ்திரீ இலட்சணம், முதற் பதிப்பு: அக்டோபர் 2002, ஈழத்து இலக்கியச் சோலை, திருக்கோணமலை.

ந.பார்த்திபன் விரிவுரையாளர் தேசிய கல்வியியற் கல்லூரி வவுனியா இலங்கை நீண்டகால வாசிப்பு முதிர்ச்சியும் நிதானமான எழுத்து முயற்சியும் சேர்ந்து இவரது கதைகளினூடு பிரதிபலிப்பதைப் பார்க்கிறோம். இலக்கியம் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டும். இவரது சிறுகதைகள் அதனை செய்கின்றன. சமூகத்தில் காணப்படும் புரையோடிப்போன பல விடயங்களை படிப்பினையூட்டும் வண்ணம் எழுதியிருக்கிறார். கற்பனை உலகில் சஞ்சரிக்காது நிஜவாழ்வில் கண்டவற்றை மனதை தொடும் படியும் மனதில் படியுமாறும் சொல்லியிருக்கிறா ரென்றே கூறவேண்டும். பெரும் பாலான கதைகளில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *