பிரகாசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 2,338 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கழிந்த போர்வைக்குள் சுருண்ட படுத்திருந்தார் காசிம்பாய். நள்ளிரவு மணி பன்னிரெண்டு. சற்று தள்ளி சிறிய விளக்கொளியில் அவரின் மனைவி மைமூன் பீவி திருக்குர்ஆனை ஓதிக்கொண்டிருந்தார். புனித ரமலான் மாதத்தில் இரவு நேரங்களில் மைமூன் திருக்குர்ஆனை மெல்லிய குரலில் ஓதி மன ஆறுதல் அடைந்து வந்தார்.

காசிம்பாய்-மைமூன் தம்பதிகள் கடந்த நாற்பது ஆண்டுகளாக இணை பிரியாத தம்பதிகளாய் இஸ்லாத்தின் கடமைகளை செவ்வனே செய்து வந்தார்கள்.

காசிம்பாய் முப்பது வருடங்களாக புக்கிட்மேரா வட்டாரத்தில் இந்திய உணவுக் கடையை நடத்தி பணம் சம்பாதித்து வந்தார். அவர் மனைவி மைமூன் கோழி பிரியாணி, இறைச்சி பிரியாணியை சுவைபட சமைப்பார். காசிம்பாய் ரொட்டி புரோட்டா போடுவதில் சிறந்த வல்லுனராக திகழ்ந்தார். அவர்கள் கடையைத் தேடி வந்து பல தமிழர்கள் மட்டுமல்ல மலாய், சீன சமூகத்தினரும் வந்து உணவை உண்டு சுவைத்து மகிழ்ந்த னர்.

எந்தக் குறையும் இல்லாமல் எவரும் வாழ்ந்ததில்லையே! மேகங்கள் வைரங்களைச் சிந்தாவிட்டாலும், பூமிக்கு மழையைக் கொடுக்க வேண்டியது கட்டாயம்தானே!

காசிம்பாய் தன் ஒரே மகள் பாத்திமாவை கண்ணியமாக வளர்த்து உயர் கல்வியை படிக்க வைத்தார். பாத்திமாவும் புக்கிட் மேரா தொடக்கப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வந்தாள். திருமண வயதில் பாத்திமாவுக்கு நிறைய வரன்கள் வந்தன. எளிமையில் இனிமையைக் காணும் காசிம் தன் மகள் பாத்திமாவுக்கு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மானுக்கு மணமுடித்து வைத்தார்.

அப்துல் ரஹ்மான் இறைபக்தி நிறைந்தவனாகவும், இஸ்லாத்தை மிகவும் நேசிப்பவனாகவும் விளங்கியதுடன் பள்ளியில் ஆசிரியராகவும் பணி செய்து வந்தான். அழகும் அறிவும் நிறைந்த பாத்திமாவை அன்புடன், கண்ணியத்துடன் நடத்தினான்.

ரஹ்மான்-பாத்திமா அன்புக்குச் சான்றாக ஓர் ஆண்மகனையும் பெற்றெடுத்தாள். அப்போது காசிம்பாய் பட்ட மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

பேரன் அப்துல் ஜலீலை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டதுடன், பேரன் ஜலீலுக்கு நான்கு வயது வந்தவுடனேயே தானே தன் வீட்டில் வைத்து திருக்குர்ஆனை ஓதக் கற்றுக் கொடுத்தார்.

ரெட்ஹில் எம்.ஆர்.டி. நிலையத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தில் மூவறை வீட்டில் ஐந்தாவது மாடியில்தான் காசிம்பாய் குடியிருக்கிறார். அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தான் தொழுகைக்காக செல்லும் போது பேரன் அப்துல் ஜலீலையும் குர்தா அணிந்து, தலையில் தொப்பி அணிவித்து அழைத்துச் சென்று வருவார்.

வாழ்க்கை வசந்தகாலமாக சென்று கொண்டிருந்த அந்த நேரத்தில் காசிமுக்கு பேரிடியாக அந்த செய்தி வந்தது. மருமகன் ரஹ்மான் மாரடைப்பு ஏற்பட்டு காலமாகிவிட்டதாக!

இறைவன் உயரே ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறானா? என்று நினைப்பதற்குள் அனைத்தும் முடிந்து விட்டன. பாத்திமா கண்ணீர் விட்டு அழுதாள். வாழப் போன இடத்தில் வாழ்க்கையை தொலைத்து விட்டால் மிஞ்சுவது மனதில் சோகம்தானே.

கணவனோடு வாழும் பெண்களுக்கே மதிப்பு குறைந்த இந்தக் காலத்தில், ஊரார் நாலைச் சொல்வதற்குள் மகன் ஜலீலை அழைத்துக் கொண்டு பாத்திமா தாய் வீட்டுக்கு வந்து விட்டாள். மகனை இழந்த ரஹ்மானின் தாய் தந்தையர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டனர்.

கலகலப்பாக இருந்த காசிம்பாய் மௌனத்தில் உரைந்தார். சிரிப்பை மறந்தார். காசிம்பாய் தான் நடத்தி வந்த உணவுக் கடையை வேறொரு நண்பரிடம் ஒப்படைத்துவிட்டார். காசிம்பாய் எதிலும் நாட்டமில்லாமல் இருந்தார். நம்பிய இறைவன் நம்மை கைவிட்டு விட்டானே என மைமூன் இறைவன் மீது கோபமடைந்தார். மகள் பாத்திமாவின் சோகத்தை எப்போது இறைவன் மாற்றுவான் என காசிம்பாய் இருகரம் ஏந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்து வந்தார்.

இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இறைவன் எப்போது கண் திறந்து பார்ப்பான்? கோடையில் குளம் வற்றிவிட்டால், மீண்டும் மழைக்காலம் வராமலா போய்விடும்? அந்த மழைக்காக ஏங்கிக் கொண்டிருந்த ஜீவன்கள் காசிம்பாய் உடல் சுருங்கி, நாராக படுத்திருந்தார். மைமூன் பீவி தூக்கம் வராமல் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்தார்.

அடுத்த அறையில் பாத்திமா அருகில் ஜலீலோடு தூக்கம் வராமல் மனம் புழுங்கிக் கொண்டிருந்தாள். தன் கணவன் ரஹ்மானோடு வாழ்ந்த வாழ்க்கையை மறக்க முடியாமல், நெருப்பில் இட்ட புழுவாய் துடித்தாள். “இறைவனின் கருணை ஏன் எனக்கு கிடைக்கவில்லை?” என தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.

தன் மகன் ஜலீலை தான் பணியாற்றும் பள்ளியிலேயே சேர்த்து விட்டாள். தன் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுப்பதிலும், அந்தப் பிள்ளைகளிடம் அன்பு செலுத்துவதிலும் மன ஆறுதல் அடைந்து வந்தாள் பாத்திமா.

காசிம்பாய் லேசாக இருமினார். குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த மைமூன் எழுந்து அருகில் பழைய மேஜை மேல் இருந்த தண்ணீரை குவளையில் ஊற்றி எடுத்து வந்து “இந்தாங்க தண்ணீர் குடிங்க”, என காசிம்பாயிடம் கொடுத்தார். தண்ணீரை வாங்கி அருந்திய காசிம்பாய், மைமூனிடம் “இன்னுமா நீ தூங்கல” என்றார்.

இருளிலிருக்கும் காசிம்பாய்-மைமூன், பாத்திமா மனங்களுக்கும் வாழ்க்கையிலும் பிரகாசம் எப்போது வரும்?

மறுநாள் பெருநாள் என்பதால் பல வீடுகளில் விளக்குகள் வெளிச்சம் பிரகாசமாக எரிந்துக் கொண்டிருந்தது. ஆனால், பாத்திமாவின் வாழ்வில் அந்த வெளிச்சம் பிரகாசமாக வருமா?

பாத்திமா முன் கூட்டியே தன் சம்பளப் பணத்தில் வாப்பாவுக்கு கைலி சட்டையுடன் ஒரு புதுப் போர்வையும் வாங்கி கொடுத்து விட்டாள். அதை வாங்கிக் கொண்ட காசிம் தன் மனதில் எந்த சலனமும் இல்லாமல், தகப்பன் இல்லாத பிள்ளையாகிவிட்ட பேரன் ஜலீலைப் பார்த்து கண்ணீர் விட்டார்.

“இறைவா! என் உயிரை எடுத்துக்கொண்டு இந்தப் பிள்ளைக்கு தகப்பனை உயிருடன் விட்டு வைக்கக்கூடாதா!” என தன் மனதில் அழுதுகொண்டு பேரன் ஜலீலை கட்டி அணைத்து மடியில் வைத்துக் கொண்டார்.

பாத்திமா பெருநாளுக்கு தனக்கு எதுவும் வாங்க மாட்டாள் எனத் தெரிந்து மைமூன் பீவி கேலாங்கில் உள்ள துணிக் கடைக்குச் சென்று முன்கூட்டியே துணி வாங்கி பாத்திமாவுக்கு தன் கையாலேயே ஆடைகளை தைத்து வைத்து விட்டாள். பேரன் ஜலீல்தான் பெருநாளைக் கொண்டாட ஆர்வமுடன் இருந்தான். பேரனுக்காக பெருநாளை கொண்டாட காசிம்பாய் திட்டமிட்டிருந்தார்.

விடிந்தால் பெருநாள். அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்த மைமூன், மகள் பாத்திமாவை, எழுப்பி குளித்துவிட்டு இறைவழிப்பாட்டை முடித்தார். அருகில் உள்ள பள்ளிவாசலில் ‘தக்பீர் முழக்கம்’ கேட்டது. காசிம்பாய் பள்ளிவாசலுக்குச் சென்று இறைவழிப்பாட்டை முடித்ததுடன், இறைவனிடம் இந்த ஆண்டு எல்லோருக்கும் வாழ்க்கை பிரகாசமாக அமைய பிரார்த்தனை செய்தார்.

காசிம்பாய் தன் மனதில் நம்பிக்கை மலர்கள் மலர்ந்திருப்பதை சற்று உணர்ந்தார்.

மைமூன் பீவி தேநீரைக் கலந்து கோழிக்கறியுடன் இடியாப்பம் செய்து காசிம்பாய்க்கும், பேரன் ஜலீலுக்கும் “இந்தாங்க சாப்பிடுங்க” என்று அன்புடன் பரிமாறினாள்.

பேரன் ஜலீல் பெருநாள் புதுசட்டை அணிந்து ‘ஈத் முபாரக்’ என கூறி காசிம்பாய்க்கு ஸலாம் சொல்லி ஆசிர்வாதம் பெற்றான்.

காலை எட்டு மணிக்கு பெருநாள் தொழுகைக்காக காசிம்பாய் பேரனை அழைத்துக் கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார்.

தக்பீர் ஓதி, தொழுகையை முடித்த பின் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லி கை கொடுத்துக் கொண்டனர்.

அப்போது காசிம்பாயின் பழைய நண்பர் அகமது அவர்கள் காசிம்பாயை பார்த்து “என்ன காசிம்பாய் சௌக்கியமா? பார்த்து நாளாயிட்டுது,” என கூறிவிட்டு பள்ளிக்கு சற்று வெளியே வந்து “பேரனா?” என விசாரித்ததுடன் “பாத்திமா எப்படி இருக்கா?” என கேட்க காசிம்பாய் கண் கலங்க “இறைவன் அவளுக்கொரு வாழ்க்கைய அமைக்கனும்,” என்றார். பதிலுக்கு நண்பர் அகமது (பாய்) அவர்கள் “கவலைப்படாதே காசிம் என் தங்க மஹ்முதா மகன் ஜப்பாருக்கு வயசு நாற்பது, அராப் ஸ்டீட்ல துணிக்கடை வச்சிருக்கான், உன் மக பாத்திமாவை திருமணம் செய்ய விரும்பறான், என்ன சொல்றே?” என கேட்க,

காசிம்பாய் “அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே) உடனே போய் மக பாத்திமாகிட்ட பேசி திருமணத்தை செய்துடுவோம்” என ஆணித்தரமாக கூறிவிட்டு வந்தார்.

மகள் பாத்திமாவுக்கு இறைவன் நல்வழி காட்டி விட்டதாக காசிம் உறுதியாக நம்பினார். ஆனால், பாத்திமா கூறிய பதில்தான் காசிம்பாயை கலங்க வைத்தது. பாத்திமா தன் வாழ்க்கைத் தோணியை தானே ஓட்டிச் செல்ல விரும்பினாள்.

நெருப்பு பொன்னை எப்படி ஒளிரச் செய்கிறதோ அது போன்று தன் வாழ்க்கையில் நேர்ந்த துன்பங்கள் மனோசக்தி நிறைந்த பாத்திமாவை தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்க வைத்தது. அவள் தன் மகன் ஜலீலை படிக்க வைத்து உன்னத நிலைக்கு கொண்டு வரவும் திருக்குர்ஆனை மகன் மனப்பாடம் செய்து அதில் சிறந்து விளங்கி இஸ்லாத்திற்கு சேவை செய்ய வைக்க வேண்டும் என்று நினைத்தாள்.

“இன்னொருவர் தனக்கு கணவராக வந்தால் தன் மகன் ஜலீல் வாழ்க்கை வீணாகி விடும், தேவையற்ற பிரச்சனை வேண்டாம்” என்றாள் பாத்திமா.

மறுமணத்தை இஸ்லாம் ஆதரிக்கிறது என காசிம்பாய்-மைமூனா இருவரும் பாத்திமாவுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள்.

திருமணமான எத்தனையோ பெண்கள் பல காரணத்திற்காக கணவரைப் பிரிந்து வாழத்தானே செய்கிறார்கள் என பாத்திமா தன்னை வறுத்திக் கொண்டதுடன், பொறுமையையும் உழைப்பையும் தன் தாய் மைமூனாவிடமிருந்து கற்றுக் கொண்ட பாத்திமா அதே வழியில் சென்று தன் மகன் ஜலீலை வளர்க்க நினைத்தாள். தான் செய்யும் ஆசிரியர் தொழிலை தன் உயிரினும் மேலாக மதித்தாள்.

தான் கற்ற கல்வி, நல்ல நூல்கள், தன்னை வழி நடத்தும் என நம்பியதுடன் தன் வாழ்க்கையில் மறுமணத்திற்கே இடமில்லை என உறுதியுடன் கூறினாள்.

பாத்திமா இப்படி நினைக்க இறைவன் நினைத்தது அன்று மாலையே தெரிந்தது. ஆம், அன்று மாலை ஐந்து மணிக்கு காசிம் நண்பர் அகமது அவர்கள் காலையில் பள்ளிவாசலில் கூறியபடி, அவர் தங்கை மஹ்முதா, காசிம்பாய் வீட்டுக்கு “அஸ்ஸலாமு அலைக்கும், ஈத்முபாரக்” என கூறிக்கொண்டு உள்ளே வந்தார்.

மைமூனா பதிலுக்கு சிரித்த முகத்துடன் “அலைக்கும் ஸலாம்” என அன்புடன் கூறி உள்ளே அழைத்து உட்காரச் சொன்னார். பலகாரத்துடன் தேநீர் கொடுத்து உபசரித்தாள். பாத்திமா முகமலர்ச்சியுடன் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

தேநீரை அருந்திய மஹ்முதா தன் திருவாயால் கூறிய பொன்மொழிகள் “இறைவன் சேர்த்து வைக்கும் உறவுகள் என்றென்றும் நீடித்து நிலைக்கும் ஒரு முறை வாழ்க்கை தவறிவிட்டால் எப்போதும் தவறிக் கொண்டிருக்காது, பாத்திமாவின் அறிவும் அடக்கமும் என் மகன் ஜப்பார் இதுவரை திருமணம் வேண்டாம்னு சொன்னவன் இப்போ பாத்திமாவ நிக்காஹ் (திருமணம்) செய்ய விரும்பறான்.”

“இறைவன் போட்ட பந்தமாத்தான் நான் நினைக்கிறேன். ஜலீலை என் பேரனாத்தான் நினைக்கிறேன்”, என்று தன் அமுத வாயால் மஹ்முதா மென்மையுடன் கூறிய உண்மை அன்பு மைமூனாவை கிரங்க வைத்ததுடன் பாத்திமாவின் மனதையும் கரைத்துவிடும் போலிருந்தது. மஹ்முதா சென்றுவிட்டாள் மீண்டும் வருவதாக கூறிவிட்டு.

தந்தை காசிம்பாய் கூறிய நபிமொழி இதுதான்: திருமணம் எனது வாழ்க்கைமுறை அதனை பின்பற்றுபவர்கள் என்னைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் என்னைச் சாராதவர்கள்.

இறை அச்சம் கொண்டவர்கள் இறைவனால் ஏற்படும் கஷ்டங்களை பொறுத்துக் கொள்கிறார்கள்.

அன்று பாத்திமா திருக்குர்ஆனை எடுத்து ஓத ஆரம்பித்தாள். அதில் கூறியது இதுதான் (இறைவன் திருக்குர்ஆனில்) ‘பிராகாசம்’ என்ற திருவசனத்தில் கூறியிருப்பது.

ஆணாயினும், பெண்ணாயினும் உங்களில் எவருக்கு வாழ்க்கைத் துணையில்லாவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்துவிடுங்கள். அவர்கள் ஏழையாயிருந்தாலும் இறைவன் தன் அருளைக்கொண்டு அவர்களைச் சீமானாக்குகிறான். கொடை கொடுப்பதில் இறைவன் மிக்க விசாலமானவனும், மனிதர்களின் நிலையை நன்கறிந்தோனுமாக இருக்கிறான். திருக்குர்ஆனின் இந்த வசனத்தை ஓதிய பாத்திமாவின் மனம் யோசிக்கச் செய்தது.

காலங்கள் நல்ல மனமாற்றத்தை உண்டாக்கும் என்பதை பாத்திமா உணர்ந்தாள். திருமணத்திற்கு மனப்பூர்வமாக சம்மதித்தாள் பாத்திமா.

தன் வாழ்க்கையை, தன்னைவிட இறைவன் மிக அற்புதமாக, பிரகாசமாக அமைத்துக் கொடுப்பான் என நம்பினாள் பாத்திமா. காசிம்பாய் இறைவனுக்கு மனப்பூர்வமாக நன்றி கூறினார்.

நல்ல நாளில் பாத்திமா-ஜப்பார் திருமணம் இனிதே நடந்தது. இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த உறவை இருவருமே போற்றினர்.

உண்மையிலேயே பாத்திமாவின் கணவன் ஜப்பார் பாத்திமாவை கண்ணுக்குள் வைத்து இதயத்துடன் உறவாடியதுடன், மகன் ஜலீலையும் அன்பு செலுத்தி பாதுகாத்ததுடன், பாத்திமாவின் ஆசிரியர் பணியையும் மிகவும் போற்றினான்.

மகள் பாத்திமாவின் வாழ்வில் பிரகாசம் ஏற்பட்டதால் காசிம்பாய்மைமூனா வாழ்விலும் ஒளிவெள்ளம் மிக பிரகாசமாக இருந்தது.

குடும்பங்கள் பிரகாசமடைந்தால் இந்த நாடே பிரகாசமடையும்.

– நோன்புப் பெருநாள் சிறுகதை, தமிழ் முரசு 03.11.2005, ’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *