பின் புத்தி – 2.0

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2018
பார்வையிட்டோர்: 10,107 
 
 

நீண்ட நாட்களாக மனைவி ஜானகிக்கு அடையாள அட்டை இல்லாத காரணத்தாலும், ரேஷன் கார்டில் இன்னமும் பெயர் சேர்க்கப்படாத காரணாத்தாலும், பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை. (பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை, அது வேறு விஷயம்!)

இன்னிலையில் ஒரு நாள் செய்தித்தாளில் இனி அனைவரும் தங்கள் பகுதி அலுவலகத்திலேயே ‘அடையாள அட்டை’ பெறலாம் என்ற அரசு அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அந்த செய்தி அவனுக்குப் புதிய உற்சாகத்தைத் தந்தது. காரணம் அந்த பிரிவு இயக்குனர் அவனுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.

ஜானகியிடம் அந்த அறிவிப்பைக் காட்டியவாறே, “பாத்தியா அரசு அறிவிப்பு, நாளைக்கே அப்ளை பண்ணிறலாம், சீக்கிரம் கிடைச்சுடும், அடையாள அட்டை வந்தவுடனே பாஸ்போர்டுக்கு அப்ளை பண்ணலாம் ” என்றான்.

“எனக்கென்னவோ நம்பிக்கையில்லைங்க அரசாங்கம்னாலே ஒரு மாமாங்கமாவது ஆகும் என்றாள்” சலிப்புடன்.

“இந்த டிபார்ட்மென்ட் டைரக்டர் எனக்குத் தெரிஞ்சவர்,. நல்லவர், நேர்மையானவர், ‘ட்ரை’ பண்ணிப் பார்க்கலாம்” என்றான்.

“என்னது டைரக்டரையே உங்களுக்குத் தெரியுமா!?” என்றாள் வியப்புடன்.

“ஆமா ஒருதடவை, ஒரு விளம்பரம் கொடுக்கணும்னு எங்க பத்திரிக்கை ஆபீசுக்கு வந்திருந்தார். எதாவது ப்ரச்சனைன்னா அவர் பேரைச் சொன்னாலே போதுமாம்” என்றான் உற்சாகத்துடன்.

அடுத்த நாள் வீட்டு வேலைகளை விரைந்து முடித்து, மகன் வருணை பள்ளிக்கனுப்பி, அந்தப் பகுதி அலுவலகத்தை அடையும் போது மணி ஒன்பது.அலுவலகம் தாளிடப்பட்டிருந்தது. சுமார் முப்பது பேர் அங்குக் குழுமியிருந்தனர்.

ஜானகி அவர்களிடம் விசாரித்தாள். டோக்கன் சிஸ்டமாம்! முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமையாம்!!.

“ஏங்க டைரக்டரைத்தான் உங்களுக்குத் தெரியுமே நமக்கு இந்த டோக்கன்லாம் தேவையா? ” என்றாள்.

“சேச்சே, நான் தான் சொன்னேன்ல அவர் நேர்மையான அதிகாரின்னு, நேர்வழியிலேயே போவோம்.” என்றான் அவளைச் சமாதானப்படுத்துவது போல்.

“உங்க இஷ்டம்” என்று ஜானகி சலிப்புடன் வரிசையில் இணைந்தாள். அவனும் அவள் அருகில் நின்று கொண்டான்

கூட்டம் மெல்லக் கூடிக்கொண்டே போனது. அலுவலர் யாரும் வருவதாகத் தெரியவில்லை.

பதினோரு மணியளவில் வந்த அலுவலர், அங்கிருந்த கூட்டத்தை ஒரு சுற்றுப் பார்த்துவிட்டுத், தன் அறைக்குச் சென்றார்.

ஜானகி தன்னுடைய வாட்சை ஒரு முறை பார்த்துவிட்டு அவனை நக்கலாக திரும்பிப் பார்த்தாள்.

அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவன் “என்ன ஒரு நாள் அரை நாள் நாம பர்மிஷன் எடுக்கிறதில்லை அது மாதிரி தான் இதுவும்..” என்று சமாளித்தான்.

உள்ளே சென்ற அலுவலர், ஒரு இருபது பேருக்கு மட்டும் டோக்கன் கொடுத்து விட்டு மற்றவர்களை அடுத்த நாள் வருமாறு கூறினார்.

“இதுக்குத்தான் நாம் அப்பவே சொன்னேன் எனக்கு அடையாள அட்டையே வேண்டாம்னு” என்றாள் ஜானகி வெறுப்புடன்.

“பொறுமையை எப்பவும் இழக்கக் கூடாது ஜானு! நாளைக்கு ஒரு நாள் பார்ப்போம், எதுக்கும் நான் அந்த அதிகாரியை நேரில் பார்த்துட்டு வறேன்” என்று அவள் பதிலுக்கு காத்திராமல் உள்ளே சென்றான்.

அவன் உள்ளே சென்ற போது “யாருங்க அது, உள்ளாரல்லாம் வரக்கூடாது, என்ன வேணும் உங்களுக்கு?” என்று அலுவலர் சிடுசிடுத்தார்.

“இந்த அடையாள அட்டை என்பதற்குள்”

“அதான் நாளைக்கு வாங்கன்னு சொன்னமே?” என்று எரிந்து விழுந்தார்.

“இல்லைங்க .. .. எனக்கு உங்க டைரக்டரைப் பர்ஸ்னலா தெரியும்” என்று இழுத்தான்.

“அவரையா…..? தெரியுமா….? எங்க கால் பண்ணுங்க,? என்றார் நம்பிக்கையில்லாமல்.

முதலிலேயே அவரிடம் சென்றிருக்க வேண்டும், இதுபற்றி சொல்லியிருக்கவேண்டும், இப்போது திடீரென்று சொன்னால் அவர் அலுவலகத்தைப் பற்றி அவரிடமே குற்றம் சொல்வது போல் இருக்கும், நன்றாக இருக்காது என்று நினைத்து, “தேவையில்லைங்க, நாளைக்கு வந்தா கட்டாயம் டோக்கன் தருவீங்கல்ல?” என்றான்.

அவர் உறுதியாக எதுவும் சொல்லாமல், “எதுக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும்னெல்லாம் மிரட்றீங்க? இது மாதிரி தினம் நாங்க எத்தனை பேரைப் பார்க்கிறோம்? நாளைக்கு வாங்க பார்க்கலாம்”.

அடுத்த நாள் இன்னமும் முன்னமே எழுந்து, பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பி எட்டு மணிக்கே அந்தப் பகுதி அலுவலகத்தை அடைந்தனர். அவர்களுக்கு அன்றும் டோக்கன் கிடைக்கவில்லை.

சலித்துப்போனவன், யாரோ இருவர் பேசிகொண்டிருந்ததை உற்று கவனித்துக்கொண்டிருந்த ஜானகியிடம் “நான் ஆபீசுக்கு போறேன், நீ வீட்டுக்கு போயிடு ஜானகி, அடையாள அட்டையைப் பின்னால பாத்துக்கலாம்” என்று விரக்தியுடன் சொல்லி அவளை வீட்டில் விட்டு அலுவலகம் சென்றான்.

அன்று முழுதும் அவனுக்கு பணியில் கவனமே செல்லவில்லை.

சாதாரணமாகவே தன்னை நக்கலடிக்கும் ஜானகி இன்று என்ன சொல்வாளோ!, அதுவும் மிக உயர் பதவியில் இருக்கும் ஒருவர் தெரிந்திருந்தும், ஒரு சிறு வேலையைக் கூட அந்த அலுவலகத்தில் தன்னால் செய்ய இயலவில்லை என எண்ணத்துடன் வழகத்தைவிட காலதாமதமாகவே அன்று வீட்டுக்கு சென்றான்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் மேஜை மீது எதோவொறு பேப்பர் நான்காக மடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு, ஆவலுடன் பிரித்து பார்த்தான்.

ஜானகி அடையாள அட்டை எடுத்ததற்கான சான்று!. அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் அருகில் வந்த ஜானகியிடம் “எப்படி?, அதுவும் டைரக்டர் பேரைச்சொல்லியே முடியலை” என்றான். என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

“அதுவா, மூணு மணிக்கு மேல அந்த ஆபீஸ்ல நூறு ரூபாய்க்கு பவர் ஜாஸ்தியாம்!, உங்க டைரக்டரை விட!! என்று நிறுத்தியவள், ”நாம அங்கிருந்து கிளம்பும்போது பியூன் ஒருத்தரிட்ட சொல்லிட்டிருந்ததை கேட்டேன், மதியம் போனேன், வேலை முடிஞ்சிருச்சு.” என்றாள் ஓரப்பார்வையில் அவனை நக்கலாகப் பார்த்துக்கொண்டே!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *