பிதா மகன்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 8,745 
 
 

அகிலா அப்பாவை நினைத்துக் கொண்டாள். அப்பாவின் அன்பு நினைத்துப் பார்க்கவும் இயலாதது. அவர் ஒருநாளும் தன் மனம் கோனவிட்டதில்லை. அது பிரச்சினையில்லை. தன் மனசில் இருப்பதைத் தெரிந்துதான் சந்தோசப்படும்படி அதை முடித்துத் தருவதில் அவரை மிஞ்ச இன்னொரு அப்பா என்று யாரும் கிடையாது… ஒரு நாள் அப்படித்தான் நடந்தது…

வீட்டுக்கு எதிரில் ஒரு பொட்டல் மாதிரி இருக்கும். மார்கழிக் குளிரில் குடிசைகளில் இருக்கிற சின்னப் பையன்கள் குளிரைப் போக்க குப்பைகளை செத்தைகளை எரிக்கிறதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது அகிலாவின் பொழுதுபோக்கு.

“அம்மா நாம கூட அப்படிக்குளிர் காஞ்சா எப்படி இருக்கும்”

“பைத்தியமே… உன் வயசு என்ன… அவங்க வயசு என்ன.. நாளைக்கு கல்யாணம் ஆகப்போரப் பொன்னோட புத்தியைப் பாரு…. சட்டுன்னு குளிக்கிற வேலையைப் பாரு….

“வீட்டைச் சுத்தி எவ்வளவு பேப்பர் குப்பை… எரிச்சிடலாமா… சுத்தமா அழகா இருக்கும்…”

“நீ குளிர் காயப் போற அதிலே அப்படித்தானே”

“இல்லைம்மா குளிர் காயமாட்டேன்… செத்தை குப்பைகளை எரிக்கறதோட நிறுத்திக்குவேன்…”

“சரியான கிறுக்கு என்னவோ செய்…”

குப்பைகளை எடுத்துச் சேர்;த்து அகிலா ரெண்டு பேப்பரைப் பொறுக்கி குப்பைகளை தீ மூட்ட முனைந்த போது தீ எரியவில்லை: எரிகிறதும் அணைகிறதுமாய் போக்குக் காட்டி அவிந்தது.

“அம்மா கொஞ்சம் கெரசின் கொடேன். நெருப்பே பிடிக்கலை..”

“ஒரு தீப்பெட்டி முடிஞ்சாச்சு… இப்ப கெரசினாக்கும்…போடி போய்க்குளி….”

“கொஞ்சம் கெரசின் போதும்மா…. ப்ளீஸ்ம்மா…. கெஞ்சிக் கூத்தாடி கால் லிட்டர் கெரசின் வாங்கிக் கொளுத்தியும் தீ பிடிக்கவில்லை. கெரசின பட்ட இடம் உடன் திபுக் கென்று பிடிக்கும் அடுத்த ரெண்டு நிமிடத்தில் அவிந்து போய் நீறுப+த்து கண்ணா மூச்சி காட்டும் “பாரும்மா அந்தச் சின்னப்பசங்;க கொளுத்தினா மட்டும் நெருப்பு எரியுது எனக்கு ராசி பாரேன்… எவ்வளவு கெரசின் செலவு…கொஞ்சம் கூட தீப்பிடிக்கலையே…”

“உனக்கும் நெருப்புக்கும் விரோதம் அதான் போடி பைத்தியம்… போய் பல்ல விளக்கி காபி சாப்பிடு…குளிக்கிள வேலையைப் பாரு…”

அகிலா, சரசுவைக் கூப்பிட்டாள் அவள் அவளை விட எட்டு வயசுச் சின்னவள் “பாருடி…அந்தப் பசங்க நெருப்பு வச்சா திகு திகுன்னு எரியிது…நாம வச்சா எரியமாட்டேங்குது…. ரொம்ப வருத்தமா இருக்கு…”

“அந்தப் பசங்க ஏதாவது மந்திரம் போடுவாங்க அக்கா….”

“இருக்கும்…இருக்கும்…நான் பல்லை விளக்கிட்டு வர்ரேன் நாயை கூட்டிப் போற சாக்கிலே போய்ப் பார்க்கலாம்… என்ன”

பல்லை விளக்கிவிட்டு பத்து நிமிடம் கழித்து வந்தபோது அகிலா மூட்டியிருந்த தீ குபு குபுவென்று பிடித்து எரிந்து கொண்டிருந்தது… பக்கத்தில் அண்ட முடியாமல் கனல் வீசியது தகித்தது.

“அக்கா பாரேன்…எவ்வளவு ஜோரா எரியுது…எந்த மந்திரமும் போடாமலே…”

“ஆமான்டி…ரொம்ப சந்தோசமா இருக்கில்லே இதப்பார்க்க” எரியாத அந்தக் குப்பையை எரிக்க மந்திரம் போட்டது யார் என்று ஒரு மணி நேரம் கழித்து தெரிந்தது…

“ஏங்க அந்த கெரசின் டப்பாவை ஏன் கேஸ{க்குப் பக்கத்தில் வச்சீங்க…”

“நான் வக்கலீடி…நான் எங்க எடுத்தேன்….எனக்கும் கெரசினுக்கும் என்ன சம்மந்தம்….”

“எல்லாம் தெரியும் உங்களோட ஜேஸ்ட புத்திரி நெருப்பு பிடிக்கலைன்னு வருத்;தப்பட்டா…ஒரு லிட்டர் எண்ணெய்யைக் கொட்டி பத்த வச்சி அவளைச் சந்தோசப்படுத்திட்டீங்க….என்ன அப்பனோ என்ன புள்ளையோ.” பாத்ரூமில் அம்மாவின் குரல் நச்சென்று கேட்டது.

“ச்சீ…ச்சீ சத்தம் போடாதே…”

அப்பா எனக்காக என் சந்தோசத்துக்கு இந்த சின்ன தீ எரிய வைக்கமுயற்சி செய்தீங்களா….என் சந்தோசம் உங்களுக்கு அவ்வளவு பெரிய திருப்தியா..
அப்புறம் இன்னொரு விஷயம்.

“அம்மா இந்த சுரை விதையை தோட்டத்தில் போடறேன்… முளைக்கும்…”

“அது பிஞ்சு விதையடி முளைக்காது….”

“எல்லாம் முளைக்கும்….தானா விழுந்து முளைக்கிற விதைகள் நெறையக் காய் தருமாம்”.

அகிலா மண்ணைக் கொத்திவிட்டு விதை போட்டு தினமும் பார்க்க ஆரம்பித்தாள்.
“சரசு.. விதை போட்ட எத்தனை நாள்ளே முளைப்பு வரும்…”

“ஒரு வாரத்திற்குள்ளே வந்துரும் அக்கா..”

“அஞ்சு நாள் ஆச்சு ஏண்டி வரல்லேடி…”

“ரெண்டு நாள் பொறு பார்க்கலாம்…”

பதினைந்து நாள் கழித்து சின்ன சின்ன முளைப்புகளாக ஈர மண்ணைப் பிளந்து கொண்டு முளைப்பு வர அகிலாவின் சந்தோசம் பீறிட்டுக் கொண்டது…

“சரசு…அம்மா வந்து பாரேன்… சுரை விதை முளைப்பு விட்டுட்டது…நான் அப்பவே சொல்லலை…நீதான் வராதுன்னே… வந்துட்டது பார்த்தியா..”

அம்மா விசித்திரமாய் அகிலாவைப் பார்த்து விட்டு முளைப்புகளையும் வந்து பார்த்து விட்டு போனாள். பார்வையில் ஒரு நக்கல் தெரிந்தது….

அப்பா நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது நண்பர் கேட்டார்.. “வேலு நீங்க சுரை விதை வாங்கினீங்களே….தோட்டத்தில் போட்டீங்களா… வந்ததா…”

அறைக்குள் உடை மாற்றிக் கொண்டிருந்த போது அந்த பேச்சுக் கேட்டது… ஆக தான் போட்ட பிஞ்சு விதை முளைக்கவில்லை: தன் சந்தோசத்துக்;காக அப்பா எங்கேயோ தேடி வந்து விதை பிடித்துப் போட்டிருக்கிறார்…தன் சந்தோசம் கெடக்கூடாது என்பதற்காக அவர் போட்டதைக் கூட சொல்லவில்லை தான் போட்ட மாதிரியும் அது முளைத்த மாதிரியும் செய்து விட்டிருக்கிறார்.
எப்படிப்பட்ட அப்பா இன்னுமொரு ஜன்மம் வந்தாலும் இதுமாதிரி ஒரு அப்பா எனக்கு கிடைக்கமாட்டார். ஆனால், கிடைக்க வேண்டும்.

இப்போது புகுந்த வீட்டில் நடந்திருக்கிறதை நினைத்தால் ஒரு வினாடியில் சக்தியிருந்தால் ஆண் வர்க்கத்தையே நிர்மூலமாக்கிவிட ஆங்காரம் பறக்கிறது….ஆனால், செய்ய முடியாது… அதிலே அப்பா இருப்பார்…. அவர் மாதிரி நுறாயிரம் அப்பாக்கள் இருக்கலாம்… யாரையும் ஒருத்தரைக் கூட அழிக்கக் கூடாது…”

இப்போது தன் நிலைமை தெரிய வந்தால் அப்பா என்ன செய்வார் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது சம்பத் வந்தான்…

“அகிலா….சாயந்திரம் ஏழு மணிக்கு என் மானேஜர் சாப்பிடவர்ரார்…. தயாரா இரு..”
“தயார் பன்னு” என்றால் சரி… தயாரா இரு என்றால் என்ன அர்த்தம்.. இதுவரை தப்பித்தாகிவிட்டது… இந்த முறை தப்பிக்கலாம்… இன்னும் பலமுறை தப்பிக்கலாம்… உணர்வு உள்ள வரை தப்பிக்கலாம்.. உணர்வில்லாத நிலையில் இந்தப் பாதகன் யாரையாவது கூட்டி வந்து ஏதாவது செய்துவிட்டால்…

ஓரே வழி…. அந்த மாதிரி அவன் செய்ய நேர்ந்தால் ஒரு முடிவாய்த்தூங்கும் போது குழவியைத் தூக்கிப் போட்டு மண்டையை நசுக்கி விடுவதுதான் நல்லவழி…. சாகட்டும்… பெண்ணை விற்பனுக்கு இது சாதராண தண்டனை…

“என்ன அகிலா… நான் சொன்னது புரிஞ்சதா… பொழக்கனும்…. கொஞ்சம் சேர்க்கனும்… குறைந்தபட்சம் ஒரு மாருதி என் லட்சியம்…” கூட ஒரு பெரிய வீடு…”

“இதெல்லாம் கண்டிப்பா என்னாலே முடியாது…”

“என்னடி விளையாடறே..”

அவன் முறைத்துவிட்டு திட்டிக் கொண்டே போனான்… கேட்க
முடியாத வசவு…

தன்னை விற்று இவன் கௌரவம் சேர்க்க நினைப்பது அப்பாவுக்குத் தெரிந்தால் என்ன ஆகும். நரசிம்ம மூர்த்தியாய் ஆகிவிடுவார். வயிறு கிழிந்து கோரமாகத்தான் இவன் சாக வேண்டி வரும். ஆனால்;, எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்க முடியாமல் இவன் மனநிலையையும் தன் சூழ்நிலையையும் அம்மாவிட்ம லேசாகக் கோடு காட்டியாகிவிட்டது. ஆனால், அம்மாவுக்குப் போறாது. சொன்னதைப் புரிந்துகொள்ளும் சாமார்த்தியம் இல்லாதவள். ஒருநாள் அப்பாவுக்குக் கோடு காட்ட வேண்டும்.

அம்மா அப்பாவுக்கு அப்படி லேசாகவாவது காதில் போட்டிருக்கிறாளா தெரியாது…. ஆனால், ஒருநாள் ஒரு செய்தி வந்தது…. அந்த செய்தி ஆபிசில் இருந்து போனாய் வந்தது… ரொம்ப அவசரமாய் – அவலமாய்க் கூட வந்தது… சம்பத் லாரியில் அடிபட்டுவிட்டதாய் தகவல் வந்தது.

அகிலா சம்பத்தைப் பார்த்தபோது சம்பத் நடு ரோட்டில் உருத்தெரியாமல் சிதைந்து கிடந்தான். சிதைத்த லாரி டயரில் ரத்தத்தை, நைந்த சதையைப் ப+சிக் கொண்டு காளிமாதிரி நின்றது.

எல்லாக் காரியமும் முடிந்தபோது கூடத்தில் யாரோ பேச அடுப்படியில் இருந்த அகிலாவுக்கு அதுகேட்டது…

“ஏன் வேலு… உன் மாப்பிள்ளைக்கு விபத்து நடக்கறதுக்கு முதல் நாள் நீ இந்த ஊர்லேதானே இருந்தயாமே… லாரி மார்க்கட்லே உன்னபை; பார்த்ததா ஒருத்தர் சொன்னார். என்ன விஷயம் உனக்கும் லாரி மார்க்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்.
அகிலாவுக்குள் ஒரு வெளிச்சம் பிறந்தது… எதுவும் எப்போழுதும் தானாக நடந்து விடுவதில்லை….

“பிதா மகனே… புருஷர்களிலே உயர்ந்தவனே உன்னைப் போன்ற ஆடவர்களால் எங்களைப் போன்ற பெண் புழுக்கள் என்றுமே வாழ்ந்து நிற்கிறோம்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *