காலையில் தேநீரை அருந்தியபடி வானொலியில் சூரியன் எப். எம். கேட்டுக்கொண்டிருந்த எனக்கு கிரியின் ஞாபகம் வந்தது. நாங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஒன்றாக இருந்து படித்தது. கிரி நன்றாகப் படிக்கக் கூடியவன் இருந்தும் அவனது குடும்ப வறுமை அவனை நிழல்போல் துரத்தியபடி இருந்தது. அவனது நிலையறிந்து எமது நண்பர்கள் எவரும் அவனிடம் இருந்து எந்தவொரு விடயத்துக்கும் பணத்தினை எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும் கிரி தன்னால் முடிந்தவற்றை எல்லாம் செய்து விடுவான்.
காலங்கள் சுழல நாமும் பட்டதாரிகளாக பட்டங்களைப்பெற்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை, குடும்பம் என்று ஒவ்வொரு இடத்தில் இருந்தாலும் இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் அருகில் இருப்பதாகவே உணரும் வேளையில் நேற்றைய தினம் கிரியினது நேரடி வீட்டுத் தரிசனம், அவனுக்கு இருக்கும் தேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. பட்டமேற்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் அதனைத் தொடர்வதா? வேண்டாமா? எனும் திரிசங்கு நிலையில் நிலையில் இருந்தான். திருமண வயதில் இரு தங்கைகள் எப்பவும் திருமணம் பொருந்தி வரலாம் என்கின்ற நிலையில், அவ்வாறு ஒரு நிலை வந்தால் அதற்குப் பணம்? இருக்கும் பணத்தில் பட்டமேற்படிப்புக்கு சென்றால் தங்கைகளின் திருமணத்துக்கு பணம் இல்லை.
இன்று தங்கைகள் இருவரினதும் திருமணம், தனது பட்டமேற்படிப்பு இவைகளை தொடர பல வழிகளில் சிந்தித்துக்கொண்டிருந்தோம். சிந்தித்ததன் விளைவாக இறுதியில் ஞாபகத்துக்கு வந்தவன் எனது பாடசாலை நண்பன் அனந்தன். தற்பொழுது தனியார் வங்கியொன்றில் வேலை பார்க்கின்றான். அவனிடம் வங்கியில் இருந்து கடன் எடுத்து தங்கைகளின் திருமணத்துக்காக நிலையான வைப்பிலிட்டுவிட்டு கிரி படிப்பதற்கு செல்லலாம் என்பதுதான் எமது ஐடியா. கடனை இலகுவாக அனந்தனின் மூலமாக முடிக்க எண்ணினோம். எனவே அனந்தனின் கைபேசி இலக்கத்தைத் தேடி தொடர்பினை ஏற்படுத்தினேன்.
ஹலோ! சொல்லு மச்சான்? என்ன திடீரென்று? அனந்தனின் “சொல்லு மச்சான்” நம்பிக்கையைத் தர, ஒன்றுமில்லை, உனக்குத்தெரியும்தானே கிரியை அவனுக்கு கொஞ்ச காசு வேனும். அதுதான் உங்கட வங்கியில கடன் எடுக்கலாமோ என்று கேட்கத்தான்…
அட இதுக்கேன் இவ்வளவு யோசனை! கிரி அரசாங் உத்தியோகம்தானே? அவனைக் கடனாளியாக்கிறது என்ர பொறுப்பு.
என்னடா சொல்கிறாய்?கடனாளி ஆக்கிறதோ? இல்லை மச்சான்! கடன் னெகாடுக்கிறது என்ர பொறுப்பு. அவன்ர சம்பளத்தைச் சொல்லு. அவனை எவ்வளவு பெரிய கடனாளி ஆக்கலாம் என்று நான் சொல்கின்றேன்.
வழமையாகவே அனந்தன் கொஞ்சம் நக்கல் நளினத்தோடுதான் கதைப்பான். “இல்லையடா… அரசாங்க வங்கியில கேட்டனாங்கள் … என்று சொல்லி முடிப்பதற்குள்; டேய் அவங்கள் டொக்குமென்ற்ஸ் கேட்டே சாகடிச்சுடுவாங்கள், நான் ஒரு கையெழுத்தோடு தருகின்றேன், வேறு ஒருவரிடமும் போயிடாதே.
அனந்தன், பிரச்சினை என்னவென்றால் இவன் இந்தியாவுக்கு புதன் கிழமை போகவேணும். இன்று சனிக்கிழமை, புதன் கிழமைக்குள் விசயம் முடியவேணும். இவன் வேற நாளைக்கு கொழும்புக்கு போகின்றான். அதுதான்…… என்று நான் இழுத்தேன். அவனோ அது பிரச்சினை இல்லை. நான் நாளைக்க அவன்ர வீட்டுக்குப் போய் விசயத்தை முடிக்கறேன். பயப்படாம மற்ற அலுவல்களைப் பார்க்கச் சொல்லு.
என்னடா இது ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தே கடன் தருகிறேன் என்கின்றான். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தெரியுமோ? ஒரு சந்தேகத்துடன் நான் கேள்வியைப் போட, எங்களுக்கு கஸ்டமர்தான் முக்கியம். மக்களுக்கு சேவை செய்ய வேணும் அதுதான் எங்கட நோக்கம்.
அனந்தனிடம் நான் கூறினேன், ஞாயிற்றுக்கிழமை தொடங்கினால் எந்த வேலையும் இழுபடும் என்று சொல்லுகின்றார்கள்…. அதுதான்….
எடேய்! இழுபடும்தானே, எப்படியும் கடனை முடிக்க ஏழு வருசம் ஆகும். பார் மச்சான் கிரியின்ர விசயத்தில் சாத்திரமும் சரியாயிற்று. நான் கிரியுடன் கதைத்து விசயத்தை முடிக்கின்றேன் நீ “போனை” வை, என்றவன் எனது அனுமதியின்றியே “போனை” வைத்துவிட்டான்.
ஞாயிற்றுக்கிழமை உருசியான மதிய உணவு உண்ட மயக்கத்தில்தொலைக்காட்சியை ரசித்தபடி இருக்கும்பொழுது கைபேசி சினுங்கியது. கைபேசியை அழுத்தி சொல்லுடா? என்றேன். மச்சான் உன்ர ஆளுடைய கணக்குக்கு நாளை பணம் போயிடும். எல்லாம் சரி என்ற அவனது வார்த்தைகள் என் நெஞ்சில் பால் வார்த்ததைப் போலிருந்தது. மீண்டும் அனந்தனின் குரல், மச்சான் உன்ர ரெலிகொம் போன் நமபரைச் சொல்லு என்றான்.
ஏன்? என்ற எனக்கு, இல்லையடா அவனுக்கு பிணையாக உன்ர பெயரைத்தான் போட்டிருக்கின்றேன். அதுக்கு உன்ர நிலையான இணைப்புடைய போன் நம்பர் தேவை. பிறகு வந்து டொக்குமென்ற்ஸ் இல் கையெழுத்து வேண்டுகின்றேன். என்றான்.
காலச்சக்கரமும் தன் கடமையை சரிவர செய்ய மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில் கிரியின் அம்மா எனது வீட்டுக்கு வந்திருந்தார். அவரை வரவேற்று கிரியின் விபரங்களை கேட்டறிந்து கொண்ட நான் அவன் மேற்படிப்புக்கு இந்தியா போகும்பொழுது ஒரு போன்கூட பண்ணாமல் போய்விட்டான். அதுதான் எனக்கு கவலை என்றேன். ஓ! அது கிரியும் சொன்னவன்தான். கடைசியில ஒரே வேலை. அதனால் போன் பண்ண முடியவில்லை. அங்கே போயும் படிப்பு, அங்கேயிருந்து இங்கே போனுக்கும் காசு கூட, அதுல போன் பண்ணவில்லை என்று சொன்னவன் குறை நினைக்காதே தம்பி.
ஐயோ! நான் குறை நினைக்கவில்லையம்மா. நீங்க சொல்லுங்கோ என்ன விசயமா வந்தனீங்கள்?
இவள் தங்கச்சிக்கு வரன் வந்திருக்குது. நல்ல இடம். அதுதான் வருகிற மாசமே திகதி வைத்திருக்கின்றோம். உங்களுக்கு நேரில் போய்ச் சொல்ல சொன்னவன். அதுதான் வந்தனான். எல்லோருமாக குடும்பத்தோட வந்துவிடுங்கோ தம்பி.
சந்தோசமான விசயம் கட்டாயம் வருவோம் என்ற என்னிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார் கிரியின் அம்மா.
மனைவியிடம் விடயத்தை சொன்னேன், கிரியின் தங்கச்சிக்கு கலியாணமாம். கிரியின் அம்மா வந்து சொல்லிவிட்டுப் போனவர். வேலையால் சற்றுக்களைத்து வந்திருந்த மனைவி சிறிது கடுப்புடன் ஏன் அவருக்கு ஒரு போன் பண்ணி சொல்ல முடியாதோ? என்று கேட்டாள். என்னவோ தெரியவில்லை எனது மனைவிக்கு கிரியை அறவே பிடிப்பதில்லை. சரியப்பா கலியாணத்துக்கு குடுக்க ஏதாவது வேண்ட வேணும், நாளைக்கு வரும்பொழுது வங்கியில் காசு எடுத்துக்கொண்டு வாங்கோ என்றேன். மனைவிதான் பணவிடயம் எல்லாம். இப்பவும் வங்கிப்புத்தகத்தை கொண்டுபோய்த்தான் பணம் எடுப்பா. “ஏ.ரி.எம் கார்ட்” எல்லாம் பாவிப்பதில்லை. நான் சொன்னதுக்கு மனைவி சற்று எரிச்சலுடனேயே சரியப்பா என்றுவிட்டு தன் வேலையில் மும்மரமானாள்.
அலுவலகத்தில் மதிய உணவை உண்டு கொண்டிருந்த எனக்கு மனைவியின் கைபேசியில் இருந்து அழைப்பு வர அதனை எடுத்து “சொல்லுங்க” என்ற என் வார்த்தை அவளின் கைபேசிக்கு போக முன்னரே மனைவியின் குரல் என்னை வந்தடைந்தது. என்னப்பா எங்கட எக்கவுன்டில் இருந்து பதினையாயிரத்து முன்னூறு உரூபா வெட்டிக்கிடக்கு. அனந்தனுக்கு ஒருக்கா போன் பண்ணி கேளுங்கோ என்னவென்று? மனைவியின் குரலில் அவசரம், பயம் எல்லாமே தெரிந்தது. சரி சரி பயப்படவேண்டாம் நான் அனந்தனிட்ட விசாரிக்கின்றேன் என்று மனைவிக்கு கூறினாலும் யோசனையுடன் அனந்தனின் கைபேசிக்கு அழைப்பினை எடுத்தேன்.
ஆ… சொல்லு மச்சான் யாருக்கும் லோன் வேணுமோ? என்றவனை மறித்து என்னிடம் இப்ப ரெலிக்கொம் போன் இல்லையடா என்றவாறு…. விடயத்தை சுருக்கமாக சொல்லி ஒரு தரம் என்னுடைய கணக்கினை சரிபார்த்து சொல்லச் சொன்னேன். ஒரு நிமிடம் லைனில் இரு என்றவன் கணனியில் தட்டுவது கைபேசியினூடு கேட்டது. கூடவே எனது இதயத்துடிப்பும் சேர்ந்து கேட்டது எனது காதில்.
அடே மச்சான் உன்ர மாப்பு வைச்சிட்டாண்டா ஆப்பு உனக்கு! என்றான். என்னடா சொல்கின்றாய்? அதிர்ந்து கேட்டேன். உன்னுடைய ஆள் கிரி இரண்டு மாதமாக தவணை கட்டவில்லை. சம்பளப்பணமும் எங்கட வங்கிக்கு வரவில்லை. அவனுக்கு நீதானே பிணை வைத்தது. அதனால்உன்னுடைய கணக்கில் இருந்து கழிக்கிறாங்கள். அனந்தனின் “கழிக்கிறாங்கள்” என்ற சொல் அவனுக்கும் அந்த வங்கிக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்பதுபோல காட்டியது. தொடர்ந்த அவன், இனியும் ஒரு பிரச்சினை இல்லை அவனுடன் கதைத்து காசைக் கட்டச்சொல்லு. உன்ர கணக்கில வெட்டின காசையும் கேட்டு வேண்டிக்கொள். அனந்தனின் வார்த்தைகள் என்னுள் “கஸ்டமர் கெயாரை” ஞபாகப்படுத்தியது. அதைவிட அவனது விட்டேத்தியான இன்னும் மோசமாக தாக்கியது என்னை.
அலுவலகத்தில் அரைநாள் விடுப்புப் பெற்று கிரியின் வீடு நோக்கி பயனமானேன். வா தம்பி! பிள்ளை வெளியில வா … சிறி அண்ணா வந்திருக்கின்றார். கிரியின் அம்மாவின் வரவேற்பும், உபசரிப்பும் என்னை கவரவில்லை. இருந்தும் புன்முறுவலுடன் கதிரையில் அமர்ந்தபடி கிரி போன் கதைச்சவனோ? என்றேன். எங்க தம்பி! இப்ப ஒருமாதமாக ஒரு தொடர்புமில்லை. கலியாணநாள் வேற கிட்ட வருகிறது. கையில் காசும் இல்லை. என்ன செய்யிறது என்றுதான் தெரியவில்லை.
கிரியின் அம்மாவின் புலம்பல்கள் உண்மையானவையா? பொய்யானவையா? ஒன்றும் விளங்கவில்லை. திருமண ஆசையில் நிற்கும் தங்கையைப் பார்க்க பாவமாக இருந்தது. குழப்பத்தில் எதையும் சொல்வது நன்றல்ல என்ற எண்ணத்துடன் கிரியின் போன் நம்பரை மட்டும் வேண்டியபடி வீடு கிளம்பினேன்.
என்னப்பா? அனந்தனோட கதைச்சனீங்களோ? வீட்டுக்கு வந்ததும் வராததும் ஆக மனைவியின் கேள்விக்கணை தாக்க வாறன் கொஞ்சம் பொறுங்கோ என்றபடி மௌனமாக சென்று உடைமாற்றி முகங்கழுவச் சென்றேன்.
குளியலறையில் யோசனையுடன் முகத்தைக் கழுவிக்கொண்டிருக்கும்கொழுது, மனைவியின் குரல் யோசனையைக் குழப்பியது. இஞ்சேரப்பா போன் அடிக்குது கேட்கவில்லையோ? இது வேற தொல்லை எப்ப பார்த்தாலும்… “வைபரில்” யாரோ கோல் பண்றாங்கள் வெளிநாட்டுக்கோலாகத்தான் இருக்கும் என்ற யோசனையுடன் பார்த்தேன். ”கிரிகிரி” என்ற பெயரில் இருந்து அழைப்பு வந்திருந்தது. மனதில் ஒரு மின்னல் கிரியாக இருக்குமோ என்ற யோசனையுடன் அவசரஅவசரமாக அழுத்தினேன் வைபரை.
ஹலோ… ஹலோ நான் கிரி கதைக்கிறேன். ஏதேதோ சிந்தனைகளில் அலைக்கழிக்கப்பட்ட மனம் பெருமூச்சொன்றை விட.. சொல்லடா எங்கேயடா இருக்கிறாய்? ஏன் ஒரு தொடர்பும் இல்லை? லோன் காசும் கட்டவில்லை? எனது கேள்விகளிலேயே என்னைப் புரிந்துகொண்டவன், மன்னிச்சுக்கொள். இவ்வளவு நாளும் ஒரு தொடர்பும் இல்லாம இருந்ததுக்கு. ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது லண்டனுக்கு வர. ஒரு மாதிர லண்டன் வந்திட்டன். அந்த வேலையில் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. பயப்படாதே! இப்ப காசு கொஞ்சம் அனுப்பியிருக்கின்றேன். அதை வீட்டுக்கு கொண்டுபோய்க் கொடு கலியாணச் செலவுகளுக்கு. அடுத்த மாதத்தில் இருந்து லோன் காசையும், உன்ர காசையும் கொஞசம் கொஞ்சமாக அனுப்புகின்றேன். வீட்டுக்காரருக்கு எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லு. தங்கச்சியின் கலியானத்தை போய் நின்று நடாத்திக் கொடு என்றவாறு வெஸ்டேர்ன் யூனியனுக்கான இரகசிய இலக்கங்களைத் தந்து, நான் பிறகு எடுக்கின்றேன். என்றவாறு தொடர்பைத் துண்டித்தான்.
மனம் நினைத்தது, நல்ல காலம் தாயாரிடம் அவசரப்பட்டு எதையும் கேட்டுவிடவல்லை. கேட்டிருந்தால் அநியாயமாக ஒரு நட்பினை இழந்திருப்பேன். என்று நினைத்தவாறு, மனைவியை நோக்கி என்னப்பா இன்னும் ரீ போடவில்லையோ? நான் ஒருக்கா வெஸ்டேர்ன் யூனியனுக்கு போகவேணும். என்றவாறு கொஞ்சம் நிமிர்ந்து இருந்து மனைவிக்கு விளக்கமளிக்கத் தொடங்கினேன்.
– 22.05.2016 அன்று வலம்புரி பத்திரியின் ஞாயிறு பதிப்பான “சங்கு நாதம்” வாராந்திர இதழில் வெளியானது.