–ஹேய் ராஜி, ரெடியா ? பொறப்பட வேண்டியது தான் ? என்னா ராஜி ஒரு மாதிரியா இருக்கே ? அட இது என்னா கண்ல தண்ணி. என்ன நடந்தது ? சொல்லு ராஜி ?
–அத்தான், என் மோதிரம் காணாப் போச்சு.
–மோதிரம் காணாப் போச்சா ? எந்த மோதிரம் ?
–என் நெளி மோதிரம்.
–எப்பிடிக் காணாப் போச்சு ?
–வளையம் கொஞ்சம் பெரிசா இருக்குனு கொஞ்சம் நூல் சுத்திக்கிட்டு இருந்தேன். அப்ப ஏதோ அவசரமா அடுப்படி போனவ,அத எங்க வச்சேனு மறந்துட்டேன்.
–இங்கதான ?
–ஆமா.
–வெளிய ஒண்ணும் போகலையே ?
–இல்ல.
–அப்ப இங்கதான் இருக்கும். கவலைப்படாதே. தேடிப் பார்ப்போம்.
–எல்லா எடத்திலேயும் தேடிட்டேன்.
–எங்க வச்சு நூல் சுத்தினே ?
–இங்க ஹால்ல வச்சுதான்.
–இங்க வச்சு சுத்துனா, அவசரமா உள்ள போறப்ப இங்க மேஜமேலதான கைவாகா வச்சுட்டுப் போயிருக்கணும் ?
–ஆமா, மேஜ மேல வச்ச ஞாபகம்தான் இருக்கு.
–பின்ன எங்க போயிருக்கும் ?
–அதுதான் தெரியல.
–அப்ப யாரும் வந்தாங்களா ?
–இல்லியே,
–அப்ப நிச்சயமா வீட்டுக்குள்ளதான் இருக்கு; கவலைப்படாதே. ராஜி டியர், நீ இப்ப என்ன செய்றேனா, மொதல்ல போயி மொகம் கழுவிட்டு வந்து டிரஸ் பண்ணிக்கிறே. நம்ம ஒரிஜினல் பிளான்படி நாம சினிமாவுக்குப் போறோம். இந்த மோதிரம் விஷயத்தையே அடியோட மறந்துடுறே. ஒரு மணி நேரத்திலேயோ ரெண்டுமணி நேரத்திலயோ திடார்னு கனா கண்ட மாதிரி ஒனக்கு அத எங்க வச்சோம்னு ஞாபகம் வந்துடுது. இது தொலச்ச பொருள கண்டு பிடிக்கிறதுல ஒரு வழி. கமான் கெளம்பு.
* * *
–கருமம். கசாப்புக் கடை வைக்க வேண்டிய ஆளுங்க எல்லாம் சினிமா எடுக்க வந்துடுறானுக, அறுக்குறான்.
–கொஞ்சம் மெதுவா பேசுங்க.
–போலாமா ?
–போலாம், போலாம்.
–உண்மையில் நீங்கள்ளாம் பாக்கியசாலிகள். எப்பிடியாப்பட்ட படமா இருந்தாலும் எப்பிடியும் சுபம் போடுற வரையிலயும் பாத்துடுறிங்களே. எதையும் பார்க்கும் இதயம்.
–சரி சும்மா இருங்க.
–அத்தான், நீங்க சொன்ன மாதிரியே ஒரு விஷயம் ஞாபகம் வந்துடுச்சு.
–என்ன ?
–மோதிரத்த வச்சுட்டுப் போயிருந்தப்ப அங்க யாரும் வரலேனு சொன்னேன் இல்ல. அது தப்பு. நான் வந்தப்ப எதுத்த வீட்டுக் கொழந்தைங்க அங்க வந்து விளையாடிக்கிட்டு இருந்தாங்க.
–யாரு ?
–கெளரியும் பாபுவும். நான் கெளரியோட கவுன் என்னா புதுசானுகூட கேட்டேன்.
–அவங்க எடுத்திருப்பாங்கனா நெனக்கிறே ?
–ஏன் எடுக்கக்கூடாது. வெளையாட்டு போலனாலும் எடுத்திருக்கலாமில்ல.
–கொழந்தைங்க எடுத்தா, அங்க வச்சுத்தான் விளையாண்டுகிட்டு இருந்திருப்பாங்க. அத மறைக்கணுங்கற அளவுக்கு அதோட வேல்யூ எல்லாம் அவங்களுக்குத் தெரியாது ராஜி.
–தெரியாட்டியும் அதக்கொண்டு போயி அவங்க வீட்ல போட்டிருக்கலாமில்ல ?
–ஏங்க அத்தான், நாம அவங்களை விசாரிச்சா ?
–என்னத்தப் போயி அஞ்சு வயசுக் கொழந்தையையும் மூணு வயசுக் குழந்தையையும் விசாரிக்கிறது. அவங்க வீட்ல ஏதாச்சும் தப்பா நெனச்சுக்கப் போறாங்க.
–அதெல்லாம் கொஞ்சம் சாதுர்யமாதான் கேட்டுப் பாக்கணும்.
* * *
–கெளரிக் கண்ணு ஓடியா ஒடியா.
–குட் மார்னிங் ஆன்ட்டி, குட்மார்னிங் அங்கிள்.
–குட் மார்னிங். பாபு ஏன் குட் மார்னிங் சொல்லல;
–குட் மார்னிங்.
–குட். காலையில டிபன் எல்லாம் சாப்டாச்சா ?
–ம்.
–என்னா சாப்டிங்க ?
–தோச, இட்லி
–எத்தினி தோச எத்தினி இட்லி.
–பதினஞ்சு இட்லி பதினஞ்சு தோச.
–அம்மாடி ‘ பெரிய ஆளுதான். பாபு ?
–அவனும் பதினஞ்சு இட்லி, பதினஞ்சு தோசதான்
–ராஜி. நீ இவங்ககிட்டப் போயி விசாரண வச்சு உண்மையைத் தெரிஞ்சுக்கப் போறேனு சொல்றியே.
–நீங்க கொஞ்சம் சும்மா இருங்க, கெளரி நீ நேத்து இங்க வெளையாட வந்தே இல்லே ?
–(உற்சாகமாக)ஆமா.
–எப்ப வெளையாட வந்தே ?
–தெரியலியே,
–மத்தியானம்தான ?
–(மீண்டும் உற்சாகமாக)ஆமா.
–அப்ப இங்க மேஜை மேலே ஒரு மோதிரம் இருந்தது பாத்தியா ?
–ம்… ?
–(சிரிப்புடன்) ஹேய், பாத்த இல்லே ? என்னங்க அத்தான், கெளரி அதெல்லாம் சமத்துக் குட்டி. பாத்திருப்பா. என்னா கெளரி ?
–ம் ?ம். பாத்தேன் ஆன்ட்டி.
–குட் குட், அத எடுத்துக்கூடப் பாத்தே இல்ல.
–ஆமா.
–சரி அப்புறம் அத எங்க வச்சே ?
–வக்கலையே.
–வக்கலியா ? பின்ன என்னா பாக்கெட்ல போட்டுக்கிட்டியா ? (மீண்டும் சிரித்தபடி) அய். பாக்கெட்ல தான போட்டுக்கிட்டே ? நேத்துப் போட்டுக்கிட்டு வந்த கெளன்ல கூட பாக்கெட் இருந்துச்சே.
–ம். இருந்ததே.
–அதுலதான போட்டே ?
–ம்.
–ஐயே அது ஒனக்கு எதுக்காம் ? இப்ப அது எங்கே ?
–தெரியலியே.
–தெரியலியா ? அத யாரு கிட்டவாவது கொடுத்தியா ?
–ம் ?
–யாருகிட்டே கொடுத்தே ?
–ம்…அம்மா கிட்டே.
–(உற்சாகமாக)ம் பாத்திங்களா அத்தான். கெளரி சமத்துப் பொண்ணுங்கறதுனால யாருகிட்டயும் கொடுக்காம அம்மாகிட்ட பத்திரமா கொடுத்திருக்கா.
–ஆமா அங்கிள்.
–சரி ரெண்டு பேரும் வாங்க, உங்களுக்கு ஸ்வீட் தர்றேன்.
* * *
–என்னங்க அத்தான், இப்ப என்ன செய்யறது ?
–நீதான் சொல்லணும்.
–அவங்களக் கூப்புட்டுக் கேட்டுட வேண்டியதுதான். முக்கால் பவுன் தங்கம் ஒண்ணும் சும்மா கெடக்கல.
–இந்தக் கொழந்தைய நம்பி எப்பிடிக் கேக்குறது ராஜி. நாளைக்கி அவங்கள வச்சுக் கேக்குறப்ப இந்தப் பொண்ணு இல்லேனு சொல்லிட்டா என்னா செய்வே ? அப்புறம் அனாவசியமா சந்தேகப்பட்டதுக்காக அவங்க கோபத்துக்கு ஆளாகணும்.
–இதுல என்னா இருக்கு. நாங்க கேக்குறப்ப ஆமா எடுத்தேனு சொல்லுச்சு. அதனால கேட்டோம்னு சொல்லிட வேண்டியது தான ?
–எனக்கென்னமோ பழகுன எடத்துல சங்கடம் வந்துடுமோனு இருக்கு. அவங்களும் நம்மள மாதிரி கெளரவமானவங்க தான். அவரும் ஒரு ஆபீஸர்தான். அப்பிடியே இந்தக் கொழந்தைங்க எடுத்துக்கிட்டுப் போயிருந்தாலும் நம்மளக் கூப்புட்டுக் கொடுக்காம இருப்பாங்களா ?
–ஆமா, கெளரவமானவங்க. வெளுத்ததெல்லாம் பால்தான். அவரு வேண்ணா ஆபீஸரா இருக்கலாம். அந்தப் பொம்பள கெளரவத்த, அது தனியா இருக்கப்பப் பேசுற பேச்சக் கேட்டாதான் தெரியும்.
–சரி இப்ப எப்பிடிக் கேக்குறதுன்னு சொல்லு.
* * *
–சார் குட் மார்னிங் ‘
–அடடே வாங்க சார், குட்மார்னிங். உக்காருங்க. கமலம் எதுத்த வீட்டு சார் வந்திருக்காரு, காபி கொண்டா.
–காபி வேணாம் சார். இப்பதான் டிபன் முடிச்சேன்.
–வாங்க சார்.
–வர்ரம்மா.
–ஆபீஸ் கெடுபிடியெல்லாம் எப்படி இருக்கு.
–இருக்கு சார். அது சிரஞ்சீவியாதான் இருக்கு.
–ஏதோ ஒங்க ஆபீஸருக்குப் புரமோஷன்னு சொன்னாங்களே, அப்பிடியா ?
–சொல்லிக்கிறாங்க. தெரியல. ஆனா ஆசாமி அதுக்குத் தான் அலையற மாதிரி தெரியுது.
–அதெல்லாம் அலையக்கூடிய ஆளுதான்.
–அப்புறம் என்ன சார் விசேஷம் ?
–ம், ஒண்ணுமில்ல…
–என்ன சொல்லுங்க. என்னா என்னிக்கும் இல்லாம இன்னிக்குத் தயங்குறீங்க ?
–இல்ல சார், வந்து…நேத்து நம்ம வீட்ல ஒரு மோதிரம் காணாமப் போச்சு.
–மோதிரம் காணாப் போச்சா. என்ன மோதிரம் சார்.
–ஒரு நெளி மோதிரம் சார் ‘ முக்கால்பவுனு. கொஞ்சம் வளையம் பெரிசா இருக்கேனு நூல் போட்டு சுத்திக்கிட்டு இருந்தவ ஏதோ அவசர வேலையா ஹால்ல மேஜமேல வச்சுட்டு உள்ள போயிருக்கா; அப்புறம் காணோம்.
–அப்புறம் காணோம்னா இடையில யாராச்சும் வந்தாங்களா ?
–பெரியவங்க யாரும் வரல, சின்னக் கொழந்தைங்க மட்டும் வந்து வெளையாடிக்கிட்டு இருந்திருக்காங்க.
–யார் வீட்டுக் கொழந்தைங்க ?
–ரெண்டு மூணு வீட்டுக் கொழந்தைங்க இருந்திருப்பாங்க போல இருக்கு.
–எங்க கெளரியும் பாபுவும்கூட இருந்தாங்களாமா ?
–ம்.
–அவங்களக் கேட்டிங்களா ? கெளரி ‘
–கேட்டோம் சார்.
–என்ன சொல்றாங்க ?
–கெளரி நான்தான் எடுத்தேன்னு சொல்லுது.
–வாட் ? கெளரி ‘
–(வந்து கொண்டே) என்னாங்கப்பா ? குட்மார்னிங் அங்கிள்.
–ஏன் கெளரி, நீ நேத்து இந்த அங்கிள் வீட்டுக்குப் போயிருந்தப்ப அங்க இருந்த மோதிரத்த எடுத்தியா ?
–ஆமாப்பா.
–என்னா எடுத்தியா ? இப்ப அது எங்கே ?
–சொல்லு.
–அம்மா கிட்டே கொடுத்தேம்ப்பா.
–என்னாது அம்மாகிட்டே கொடுத்தியா ? கமலம், கமலம் ‘
–என்னாங்க ?
–இங்க வா.
–(வந்து கொண்டே) என்னங்க ?
–இவ, கெளரி சொல்றதக் கேளு; இவ நேத்து போயி சார் வீட்ல வெளையாண்டு கிட்டு இருந்துருக்கா; அங்க ஒரு மோதிரம் காணாப் போயிருக்கு; கேட்டா இவ நான்தான் எடுத்தேனு சொல்றா.
–ஏண்டி ?
–அத ஒங்கிட்டதான் கொடுத்தேனு வேற சொல்றா.
–அடக் கடவுளே ‘ ஏண்டி அப்பிடியா சொல்றே ?
–ஆமா.
–எங்கிட்டயா கொடுத்தே ?
–(புன்னகையும் அழுத்தம் திருத்தமாகவும்) ஆமா, ஒங்கிட்டதான் கொடுத்தேன்.
–ஏண்டி முண்டே, நல்லா என்னையப் பாத்துச் சொல்லுடி; எங்கிட்டயா கொடுத்தே ?
–சரி அவள அதட்டாதே; அதட்டுன பிறகு அவ பயந்துகிட்டு மாத்திட்டதா ஆயிடும்.
–என்னங்க இது அநியாயமா இருக்கு; ஏண்டி,
–யாராச்சும் இப்பிடிச் சொல்லிக் கொடுத்துச் சொல்லச் சொன்னாங்களா ?
–இல்லியே.
–பின்ன ஒனக்கு என்னாடி வந்துச்சு.
–சரிங்க மிஸ்டர் கணேசன், நீங்க போங்க. நான் சொல்லி விடுறேன்.
–சரிங்க சார். ரியலி ஐயம் ஸோ சாரி சார். ஒங்க பாப்பாவே சொல்லலேனா நான் வந்திருக்கமாட்டேன்.
–அதனால ஒண்ணுமில்ல.
–வர்ரேன் சார்.
* * *
–ராஜி ‘
–இந்தா வந்துட்டேன் அத்தான். அவங்க என்ன சொன்னாங்க ?
–அந்தக் கொழந்த அங்கயும் அப்பிடித்தான் சொல்லுது.
–பின்ன ? கொழந்தைகளுக்கெல்லாம் பொய் சொல்லத் தெரியாதுங்க. அந்தப் பொம்பளைக்கி என்னா திருட்டுத்தனம் பாத்திங்களா ? அப்பிடியே கொழந்த தெரியாம எடுத்துக்கிட்டு வந்துட்டாலும் ‘பெரியவங்க ‘ ஐயையே இது நம்மது இல்லேனு ஒடனே உரியவங்களைக் கூப்புட்டுக் கொடுத்துட வேணாம் ? முக்காப் பவுனப் பாத்ததும் அப்பிடியே முழுங்கிடலாம்னு ஆசை வந்துடுச்சு போல இருக்கு.
–ஆனா அந்தம்மா அதிர்ச்சி அடைஞ்சதப் பாத்ததும் எனக்குச் சங்கடமாப் போச்சு.
–அதிர்ச்சியா ? எல்லாம் நடிப்பு. அது சரி, முடிவு என்னாச்சு ?
–அவரு சொல்லி விடுறேனு சொல்லியிருக்காரு.
* * *
மிஸ்டர் கணேசன். நீங்க நம்பினாலும் சரி நம்பாட்டியும் சரி, நான் உண்மையைச் சொல்லிடுறேன். அந்த மாதிரி எந்தப் பொருளையும் என் மக இங்கக் கொண்டாரல்ல. அப்படியே கொண்டு வந்தாலும் அத வாங்கிப் பதுக்கிடுற ஜென்மம் இல்ல என் மிஸஸ். அவள எனக்கு நல்லாத் தெரியும். அதே நேரத்தில ஒங்களயும் நான் குற்றம் சொல்லல. ஒரு கொழந்தையே, நான்தான் எடுத்தேன், அம்மா கிட்டக் கொடுத்தேனு சொல்றப்ப யார்தான் அத நம்பாம இருக்க முடியும் ? குழந்தை சாட்சிய கோர்ட்கூட எடுத்துக்கும்னு சொல்வாங்க. ஆனா இதுக்காக நான் என் மிஸஸ் மாதிரி அரண்டு போயிடல. எதுலயுமே, சீக்கிரமே ஒரு தீர்மானத்துக்கு வர முடியறவன் நான். நான் இத ஒரு விபத்தா எடுத்துக்குறேன். பிளாட்பாரத்து மேலே கார்ல போய்க்கிட்டு இருக்க எவனோ துப்புனா நம்ம மூஞ்சியில வந்து விழுந்துட்டா என்னதான் செய்துட முடியும் ? ஆனா இத நான் சொல்றது, இதயெல்லாம் சொல்லி உங்கள போயிட்டு வாங்கனு சொல்றதுக்கு இல்ல. சந்தர்ப்ப சாட்சியங்கள் வச்சு நானே ஒரு ஜட்ஜிமெண்ட்டுக்கு வந்திருக்கேன். ஒங்களுக்கு அந்த முக்கால் பவுனுக்கான பணத்தக் கொடுத்துடுறேன்.
–வேண்டாம் சார். சாரி சார். நான் ஒங்ககிட்ட வந்து கேட்டே இருக்கக்கூடாது.
–நோ நோ. உக்காருங்க உக்காருங்க இத நான் உங்களுக்காகக் கொடுக்கல. எங்களுக்காகத்தான் கொடுக்கிறேன். பைபிள்ள ஒரு வாக்கியம் இருக்கு. காரணமின்றி காயம்பட்டவர்கள்னு. அது இப்ப நாங்கதான். இந்தப் பணத்த நீங்க வாங்கிக்கிட்டா எதனாலயோ அந்தக் காயத்துக்குக் கொஞ்சம் மருந்து போட்ட ஃபீலிங் எங்களுக்கு. தயவு செஞ்சு இத ஒரு உதவியா நெனச்சு வாங்கிக்கங்க.
–நோ நோ. எனக்கு ஒங்களாட்டம் விசயத்த அப்பிடியே வார்த்தையில சொல்லிடத் தெரியலதான். ஆனா உணரமுடியுது சார். நான் உங்ககிட்ட வந்து கேட்ட பாவத்துக்கே மன்னிப்புக் கெடையாது. இதுல பணம் வேற வாங்கிக்கிறதா ? நான் வரேன் சார்.
–சார், கணேசன் சார்.
* * *
–ராஜி ‘
–வாங்க அத்தான். எந்த டிரெயினுக்கு வந்தீங்க ‘
–பாண்டியன்ல வந்தேன்.
–அங்க எல்லாம் செளக்கியம் தான ?
–எல்லாம் செளக்கியம்தான். அது சரி, அது என்னா எதுத்த வீட்ல வேற யாரோ இருக்காங்க.
–அது, அவங்க வீட்டக் காலி பண்ணிட்டாங்க அத்தான்.
–காலி பண்ணிட்டாங்களா ?
–ஆமாங்க அத்தான். முந்தா நாள் பாத்தா திடாரென்று லாரி கொண்ணாந்து காலி பண்றாங்க.
–ஏனாம் ?
–தெரியல.
–ஏதாச்சும் சொன்னாங்களா ?
–ஒண்ணும் சொல்லல. எனக்கும் ஒரு மாதிரியா மனசுக்குச் சங்கடமா இருந்ததுனால நான் வெளியிலயே வரல,
–போகும்போதுகூட சொல்லலியா ?
–இல்ல.
–இந்த மோதிரம் விஷயமான சங்கடமா இருக்குமா ?
–தெரியல,
–(பெரு மூச்சுடன்) நல்ல மனுஷன்.
* * *
–அத்தான்
–என்னா ராஜி
–இது என்னங்க ‘
–என்ன ?
–மோதிரம் அத்தான். காணாமப்போன மோதிரம்.
–அடக் கடவுளே, இது என்னா ராஜி.
இப்பதான் அத்தான் ஞாபகம் வருது. மோதிரத்துக்கு நூல் சுத்திக்கிட்டு இருந்தவ, அடுப்படியிலே பால் குக்கர எறக்கப் போனப்ப, மேஜை மேல வச்சுட்டுப் போறதவிட இங்க வக்கிறது பத்திரமா இருக்குமேனு இங்க போட்டோவுக்குப் பின்னால வச்சுட்டுப் போனேன். அத எப்பிடியோ அடியோட மறந்துட்டேன்.
–என்னங்க அத்தான்.
–எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டே ராஜி. அநாவசியமா அவங்கமேல எவ்வளவு பெரிய பழியப் போட்டோம்.
–நான் என்னாங்க செய்றது ? அந்தப் பொண்ணு நான் எடுக்கலேனு சொல்லியிருந்தா ஒண்ணுமில்லே. அது நான்தான் எடுத்தேன், அம்மாக் கிட்டக் கொடுத்தேனு சொன்னதுனால தான இவ்வளவும். அவங்க கேக்கறப்பகூட அது ஆமா ஒங்கிட்டதான் கொடுத்தேனு சொல்லலியா ? கொழந்தைங்க வார்த்தைய எல்லாரும் எடுத்துக்குற மாதிரிதான் நாமளும் எடுத்துக்கிட்டோம்.
–அதென்னமோ வாஸ்தவம்தான். ஆனா அந்தப் பொண்ணு ஏன்தான் அப்படிச் சொல்லுச்சோ.
–நமக்குக் கொழந்தைகளையும் சரியா புரிஞ்சுக்கத் தெரியல. அது எத நெனச்சு அதச் சொல்லுச்சோ. அத நாம நமக்குத் தெரிஞ்ச பாஷையில எடுத்துக்கிட்டோம். ஒருவேள அந்தக் கொழந்த, நீ சிரிச்சுகிட்டே சமத்து கிமத்துனு எல்லாம் தட்டிக் கொடுத்து மோதிரத்தப் பாத்தியா, எடுத்தியானு கேட்டதும் அது, அப்பிடிப் பாக்கறதும் எடுக்கறதும் ஒரு பாராட்டுக்குரிய காரியம் போல இருக்குனு நெனச்சு அந்தப் பாராட்ட வாங்கறதுக்காக ஆமானு சொல்லியிருக்கலாம். யாரு கண்டா, அம்மாவும் பாராட்டுவாளேனு நெனச்சு, அம்மாகிட்டயும் அப்பிடியே சொல்லியிருக்கலாம்.
–என்னமோ போங்க; எனக்கு இப்பதான் படபடனு வருது; நல்லவேள, அவங்க வீடு மாத்திப் போயிட்டாங்க; இல்லேனா நாளைக்கி அவங்க மொகத்துல எப்பிடித்தான் முழிப்பேனோ.
எப்படியோ ராஜி, அவரு சொன்ன மாதிரி, காரணம் இல்லாமலே அவங்களக் காயப்படுத்திட்டோம்.
– ஜனவரி 2001