உறவுக்காரப் பெண் ஒருத்தியின் திருமணத்துக்குச் சென்றநிர்மலா, அங்கே வத்சலாவைப் பார்த்ததும் மகிழ்ந்து போனாள்.
இருவரும் பள்ளியில் ஒன்றாய் படித்தவர்கள்.
பத்து வருட இடைவெளிக்குப் பின் இப்போதுதான் சந்திக்கிறார்கள்.
இன்று நிர்மலா ஒரு பெரிய டாக்டர். வத்சலா இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஆகிவிட்ட இல்லத்தரசி. இருவரும் பள்ளிப் பருவ நினைவுகளைப் பேசி மகிழ்ந்தார்கள்.
உள்ளூர வருத்தமாக இருந்தது நிர்மலாவுக்கு. வத்சலாவும் நன்றாகப் படிக்கக்கூடியவள்தான். அவள் மேற்கொண்டு படித்திருந்தால் தன்னைப்போல டாக்டராக ஆகியிருக்க முடியும். ஆனால் படிக்காமல் திருமணம் செய்து கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள் பாவம்.
வத்சலா விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தபின், அவளிடம் போன் நம்பர் கேட்கலாமே என்று சென்ற நிர்மலா துணுக்குற்று நின்றாள்.
“பாவம் நிர்மலா, தினம் ஆஸ்பத்திரி, நோயாளிகள் ஆபரேஷன்னு டாக்டர் ஆகி கஷ்டப்படறா. என்னை மாதிரி படிக்காம இருந்திருந்தா ஹவுஸ் ஒய்ஃபா ஹாயா இருக்கலாமே ”என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள் வத்சலா.
– ஜனவரி 2010