கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2024
பார்வையிட்டோர்: 1,360 
 
 

உயரமான மரங்களும் அடர்ந்த பற்றைகளுமாய் இருந்த அந்தப் பிரதேசத்தை, பிரதான வீதி ஊடறுத்துச் சென்று கொண்டிருந்தது.

நிலத்திலிருந்து மிகவும் உயரத்தில் பிரதான வீதியின் ஒரு சிறு வளைவில் அந்தப் பெரிய பாலம் அமைந்திருந்தது.

இரண்டு லொறிகள் தாராளமாக ஒன்றை ஒன்று விலத்திச் செல்லும் அளவுக்கு நல்ல அகலமான பாலம்.

இரண்டு பக்கங்களும் நீளமான சீமெந்துக் கட்டுடன் இடையே கனமான இரும்புக் கம்பிகளை இணைத்துக் கிட்டத்தட்ட இருபதடி நீளத்துக்குக் கட்டப்பட்ட பாலம்.

அந்தப் பாலத்தின் ஒரு பக்கச் சீமெந்துக் கட்டில் அவன் அமர்ந்திருக்கிறான். இரவு நேரத்து அமைதியைக் கிழித்துக் கொண்டு சில்வண்டுகளின் கிர்… என்ற சத்தம்.

காற்றுக்கூட வீசவில்லை. அமாவாசை முடிந்து இன்றைக்கு ஐந்தாம் நாள். மெல்லிய பிறை நிலவு வானத்தில் நீந்தியது. அந்த நிலவின் மெல்லிய ஒளியில் எதிரே எல்லாம் மங்கலாக இருள் வடிவமாய்த் தெரிந்தது.

இப்போது இரவு ஒன்பது மணிதான் இருக்கும். ஆனால் எல்லாமே அடங்கிப் போன நடுச்சாம நேரம் போல் மயான அமைதியாக இருந்தது.

பாலத்தில் இருந்து கொண்டு அவன் சுற்றும் முற்றும் பார்க்கிறான்.

மனதுக்குள் அலை அலையாய் எண்ணங்கள்…அந்த எண்ணங்களுடே லேசாய்ப் பரவிய சோக உணர்வு…. மிகவும் அருமையாய்ப் போற்றி வந்தது கண்ணெதிரே கலைந்து போனது போன்ற தவிப்பு….

அவனின் பார்வை இருளை ஊடறுத்து உற்று நோக்குகிறது. தெருவின் இரு பக்கங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பற்றைகளும் உயரமான மரங்களும்… நடுவே பாலம் மிகவும் உயரத்தில்….

பாலத்துக்குக் கீழே அகலமான வாய்க்கால்…மழைக்காலங்களில் மார்பளவு தண்ணீர் இதில் ஓடும், பழுப்புப் பச்சை நிறத்தில் சில வேளைகளில் அடர்ந்த நீல நிறத்தில் சருகுகளும் சிறு தடிகளும் புரள வெள்ளம் பாய்ந்தோடுவது எத்தனை அழகு…ஆனால் இப்போது…

இந்த வைகாசி வெய்யில் காலத்தில் வாய்க்கால் காய்ந்து வரண்டு போய் இருந்தது. கரையோர சரிவுகளில் புதர் மண்டிப் போயிருந்தது. மண்ணின் நிறமே மாறிச் சொர சொரப்பாய்ப் போய்விட்டது. அந்தச் சூழ்நிலையைப் பார்க்க அவன் மனதில் துயரம் அதிகரிக்கிறது. என்னமாய் இருந்த பிரதேசம்…

அவனுக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே இந்தப் பாலத்தோடும் இந்த வாய்க்காலோடும் இந்தப் பாலை மரங்களோடும் உறவாடி வளர்ந்திருக்கிறான்.

அதோ…. பாலத்தின் இடது பக்கமாகப் பிரதான தெருவிலிருந்து ஒரு ஒற்றையடிப் பாதை போகிறதே…அந்தப் பாதையால் போனால் கூப்பிடு தூரத்தில் இருக்கிறது அவனது கிராமம்…. அவன் பிறந்து தவழ்ந்து வளர்ந்த கிராமம்… முப்பது குடிமனை வரும். விவசாயம் செய்து மாடுகள் வளர்த்துத்தான் சீவியம். சில வேளைகளில் றால் சீசனில் தட்டுவங்கொட்டிக்கு றால் பிடிக்கப் போவார்கள். கொஞ்சம் இளம் ஆட்கள் சுண்டிக்குளம் போய் மீன் வியாபாரம் செய்வார்கள்.

சைக்கிள் தவிர வேறு வாகனங்கள் பெற்றிராத எளிமையான சனங்கள். ஆசைகளையோ, தேவைகளையோ வளர்த்துக் கொள்ளாததினால் எதிர்பார்ப்புக்களோ ஏமாற்றங்களோ இல்லாத அமைதியான வாழ்க்கை.

கிராமத்தைச் சுற்றிப் பாலை மரங்கள்… இந்த வைகாசி ஆனியில் பாலைப் பழங்கள் பழுக்கும். கிராமத்தவர்களுக்கு இந்த இரண்டு மாதமும் நல்ல உழைப்பு. பச்சை இலைகளின் நடுவே மஞ்சள் நிற மணிகளாய் இனிய வாசனையுடன் பழுத்திருக்கும் அந்தப் பாலைப்பழங்களைப் பிடுங்கிச் சேகரிக்க நண்பர்களுடன் அலைந்த நாட்களின் சந்தோஷங்கள் அவன் மனப்பரப்பில் இனியதொரு கனவாக மிதந்து கொண்டேயிருக்கிறது.

கிராமத்தின் தொடக்கத்தில் தெருவையும் இந்தப் பாலத்தையும் பார்த்தபடி இருக்கும் அம்மன் கோவிலில் ஏற்றப்படும் விளக்கின் வெளிச்சம் இங்கிருந்து பார்க்கும் போதே தெளிவாகத் தெரியும்.

கூரை வேய்ந்த அந்தச் சிறு கோவிலுக்குப் பின்னால் உள்ள கிராமத்தவரின் குடிசைகளின் கூரைகள் மரங்களுக்கிடையே தெரியும். இப்போது அம்மன் கோவில் இல்லை. கிராமத்தில் ஒரு குடிசையும் இல்லை. எந்த ஆட்களும் இல்லை. அம்மன் கூட தன் பரிவாரங்களோடு இடம் பெயர்ந்து போய்விட்டாளா….

அவன் நீண்ட பெருமூச்சோடு எதிரே பார்க்கிறான்.

மெல்லிய இருட்டுக்குள் பற்றைகளும் மரங்களும் ஒவ்வொரு வடிவங்களாகத் தெரிகிறது.

முந்திய காலங்களின் நினைவுகள் மனதுக்குள் வந்து நிரம்பிக் கொள்கின்றன. யாழ்நகரை இலங்கையின் தென்பகுதியுடன் இணைக்கும் ஒரே வீதியான கண்டி வீதி இது.

அதனால் அப்போதெல்லாம் பஸ்களும் லொறிகளும் கார்களுமாய் ஒரே வாகனங்கள் இரவு பகலாய்ப் போய் வந்தபடி இருக்கும். சிறுவனாய் இருந்த காலத்தில் தன் தோழர்களுடன் இந்தப் பாலத்தில் அமர்ந்து கொண்டு வாகனங்களை வேடிக்கை பார்ப்பான்.

மாரி காலங்களில் எந்த நேரம் என்றில்லாமல் இந்த வாய்க்காலே கதி என்று கிடப்பார்கள். இந்தப் பாலத்தின் மீது ஏறி நின்றுகொண்டு ‘தொபீர் என்று வாய்க்காலில் குதித்து நீந்துவார்கள்.

ஒருநாள் அவன், சிவபாலன், மகேந்திரன், துரைராசா, கோணேஸ் எல்லோரும் பாலத்தில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தபோது அவன் பாலத்தின் சீமெந்துக் கட்டில் படுத்து நித்திரையாகி விட்டான். அவனைச் சிவபாலன் விளையாட்டாய் அங்கிருந்து பிடித்துக் கீழே வாய்க்காலுக்குள் தள்ளி விட்டு விட்டான்.

அவன் ஒரு கிழமையாய்ச் சிவபாலனுடன் கதைக்கவில்லை. பிறகு இரண்டு பம்பரம், பன்னிரண்டு போளை, ஒரு எட்டுமூலைப் பட்டம் என்று சிவபாலன் கொடுத்துக் கெஞ்சிய பிறகுதான் அவன் சமாதானமாகினான்.

ஒருதடவை அதிகமான மழை பெய்த மாரி காலத்தில் இரணைமடுக் குளம் நீரால் நிரம்பிவிடக் குளத்தைக் காப்பாற்றுவதற்காகப் பலகை திறந்து விட வெள்ளம் அடித்துக் கொண்டு பல கிராமங்களையே மூழ்க வைத்து விட்டது. அவர்கள் கிராமத்துக்கும் வெள்ளம் பரவிவிட கிராமத்துச் சனம் எல்லாம் இந்தப் பாலத்திலேயே வந்து கூடியிருந்தது. வெள்ளத்தினால் அந்த வீதியில் எந்தப் போக்குவரத்தும் நடைபெறவில்லை. ஒரு கிழமையாய் எல்லோரும் இந்தப் பாலத்தின் ஓரத்திலேயே அடுப்பு மூட்டிச் சமைத்தார்கள். வெள்ளத்தில் நனைந்த ஆடு மாடுகள் கூட இங்கேயே வந்து ஒண்டிக்கொண்டு நின்றன. வாய்க்கால் நிரம்பிப் புரண்டோடிக் கொண்டிருந்தது. வெள்ளம் வடிய ஒரு வாரமாகியது. சிறிய வயதில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் இப்போதும் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது.

சிறிது வளர்ந்த பிறகு அம்மன் கோவில் பக்கத்தில் உள்ள சிறிய வெட்டையில் வேறு இளைஞர்கள் கரப்பந்தாட்டம் அடிக்கும் போது இவர்கள் மட்டும் பாலத்தில் அமர்ந்து கொண்டு வாகனங்களை வேடிக்கை பாhப்பார்கள்.

கிளிநொச்சிக்குப் போய்ப் பார்த்து விட்டு வந்த படங்களைப் பற்றி, நடிக நடிகைகளைப்பற்றி… வாய் ஓயாமல் கதைப்பார்க்ள். சிரித்திரன், மல்லிகை. சுடர், பேசும்படம் என்று அகப்படுகின்ற புத்தங்களையும் புரட்டுவார்கள். மகுடியின் பதில்கள் படிப்பதற்காகவே சிவபாலன் சிரித்திரன் தொடர்ந்து வாங்குவான்.

நிலவுக் காலங்களில் இரவு பத்து மணிவரை பாலத்தில் இருந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த உயரத்தில் நின்று நிலவு வெளிச்சத்தில், சுற்றப்புறத்தைப் பார்த்தால், மலைநாட்டில் நிற்பது போல ஒரு உணர்வு வரும்.

அந்த அழகைப் பார்க்கும் போது மனதில் ஏற்படும் அனுபவம் அபூர்வமானது… அருமையானது…

அந்த அபூர்வமான இனிமையை அவன் வேறெதிலும் அனுபவித்ததில்லை.

இந்த வீதிக்குச் சிறிது தூரத்தில் வீதியோடு சமமாக நீளத்துக்கு ரயில் பாதை. அதற்கும் வாய்க்காலைக் குறுக்கறுத்து இரும்புக் கேடரினால் பாலம் போடப்பட்டிருந்தது. இரவு தபால் ரயில் பெரும் இரைச்சலுடன் பாலம் கடந்து போவதை இங்கிருந்து கொண்டு ஆவலோடு பார்ப்பார்கள்.

அடர்ந்த இருட்டுக்குள் வெளிச்சப் பொட்டுகளுடன் மனித முகங்கள் விர்ரென்று போவதைக் கண் இமைக்காமல் பார்ப்பார்கள்.

தபால் ரயிலும் போய் கடைசி கிளிநொச்சி பஸ்ஸும் கொழும்பு பஸ்ஸூம் போன பிறகுதான் வீடு திரும்புவார்கள்.

“இருட்டுக்க எங்கடா திரியிறாய். பாம்பு பூச்சி கடிச்சா என்ன செய்யிறது. அங்க ஆரை வாய் பார்த்துக் கொண்டு நிற்கிறனீங்களோ தெரியேலை. பாலத்திலதான்ரா உங்களுக்கு உத்தியோகம்” என்று அம்மாவிடம் அடிக்கடி திட்டு வாங்குவதிலும் ஒரு சந்தோஷம் இருந்தது.

“அப்பிடி பத்து மணி வரைக்கும் இவங்கள் என்னத்தைத்தான் கதைப்பாங்களோ…” அம்மாவின் அதிசயிப்பு அவனுக்குள் சிரிப்பைத் தோற்றுவிக்கும்.

கதைக்க…. சிரிக்க எத்தனை விஷயங்கள். சிவபாலன் எப்போதும் பகிடியாயக் கதைப்பான். அவனுடடைய கதைகளைக் கேட்டால் மனம் விட்டுச் சிரிக்கலாம்.

இவனுடைய மனம் ஒரு தடவை குலுங்கி அதிர்கிறது. அந்த இரவில்கூட காற்றின் தன்மை வெம்மையாய் இருக்கிறது. பிடரிக்குள் வேர்க்கிறது.

மனதுக்கள் ஒருவித வேதனை முறுக்கிக் கொள்கிறது. அந்த அன்பான சிவபாலன்… சிரிக்கச் சிரிக்கப் பேசிய சிவபாலன்….

இப்போது இந்த உலகத்தில் இல்லை. பின்னாளில் ஏற்பட்ட மாற்றங்களில் அவனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மாங்குளம் முகாம் தகர்ப்பில் தன் உயிரை அர்பணித்து விட்டான்.

துரைராசா இப்போது கிளிநொச்சிக்கும் கொழும்புக்குமிடையே லொறி ஓடுகிறான். ஆறு மாதத்துக்கு முன் பரந்தன் சந்தியில் கண்டு நீண்ட நேரம் கதைத்துக் கொண்டார்கள்.

கிராமத்தவர் வீடு வாசலைவிட்டு அகதியாய் ஓடியபோது மகேந்திரனும் குடும்பத்தோடு போய்விட்டான். அவனைச் சந்தித்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது.

கோணேஸ் சுண்டிக்குளத்தில் மீன் வியாபாரம் செய்கிறான். எல்லோரும் ஒவ்வொரு திக்கில் சிதறிப் போனார்கள்.

ஆனால் அவர்களும் அவனைப் போலவே இந்தப் பாலத்தையும் வாய்காலையும் கிராமத்து வாழ்க்கையையும் ஒரு போதும் மறக்க மாட்டார்கள்.

முன்பெல்லாம் ஆள் நடமாட்டம் உள்ள இந்த இடங்கள் இப்போது வெறிச்சிட்டுப் போய்விட்டது. கிராமத்தில் இப்போது யாரும் இல்லை. அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி இரண்டு வருடங்களாகப் போகிறது.

தொண்ணூறாம் ஆண்டு ஜுனுக்குப் பிறகு வந்த சண்டையில் இராணுவம் வந்து கிராமத்தையே எரித்து விட்டது. அம்மன் கோவில்கூடத் தப்பவில்லை. கிராமத்துக்குப் போகும் ஒற்றையடிப்பாதையில் இப்போது முள்ளுப் பரவியிருந்தது.

எதிரே ரயில்ரோடு கூட கோலம் மாறிப் போய் இருந்தது. சிலிப்பர் கட்டைகளும் தண்டவாளங்களும் பெயர்த்து எடுக்கப்பட்ட நிலையில் பாதை சிதைந்து போய்க் கிடந்தது. ரயில் பாலத்தைத் தவிர மற்ற இடங்கள் மண் மூடிப் பற்றைகளாய்க் கிடந்தன.

மனதுக்குள் ஆற்றாமை பொங்குகின்றது. பிறந்து வளர்ந்து எத்தனையோ வருஷங்களாய் வாழ்ந்து வந்த வீடு, வாசலைவிட்டு அகதியாய் இன்னொரு இடத்துக்கு ஓடுவதென்றால்…

இதோ பாலை மரங்களில் இலை தெரியாமல் கொத்துக் கொத்தாய்ப் பாலைப் பழங்கள் பழுத்திருக்கின்றன. வெம்மையான காற்றிலும் அந்தப் பாலைப்பழ வாசனை கலந்து வந்து நாசியை நெருடுவது போல ஒரு உணர்வு தோன்றுகிறது. இத்தனை பழங்களும் யாருக்கும் பிரயோசனமில்லாமல் போகப் போவதை நினைக்க வயிறு எரிகிறது. மனம் பதை பதைத்துப் போகிறது.

இந்த நிலை ஏன் வந்தது…? எங்கள் வீடுகளில் வாழ முடியாத சூழ்நிலை எப்படி வந்தது…?

அவன் கவலையுடன் கண்களை மூடித் திறக்கிறான். பார்வையைக் கூர்மைப்படுத்தித் தூரம் வரை துழாவுகிறான்.

வடக்குப் பக்கமாய் மிகவும் தொலைவில் வீதியின் பக்கத்தில் சின்னச் சின்ன மின் வெளிச்சங்கள்… சிறு சிறு பொட்டுக்களாய்…. ஒரு கனமான வாகனத்தின் தேய்வான இரைச்சல்….

இங்கிருந்து இரண்டு மைல் தூரத்தில் இருக்கும் பிரதான முகாமிலிருந்து இராணுவம் இந்தப் பக்கமாய்ச் சிறிது முன்னேறியிருக்கிறது. அதுதான் புதிதாய் முளைத்த வெளிச்சப் பொட்டுக்கள்….

முன்பெல்லாம் இந்த முன் பகுதிக்கு ராணுவம் வந்தால் நாலைந்து நாட்கள் நின்றுவிட்டுத் திரும்பி விடும். இந்தத் தடவை வந்து ஒரு வாரமாய் நிற்கிறது.

இந்த ஒரு வாரமாய் அந்த முகாமில் ஏதோ பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. வாகனங்கள் இதுவரை இந்தச் சிறு முகாமுக்கு வந்ததில்லை. இப்போது மூன்று நாட்களாக வாகன இரைச்சல் தெளிதாய்க் கேட்கிறது.

அவன் பார்வையை மீட்டுப் பாலத்தின் இருபக்கங்களையும் பார்க்கிறான். சிறிது தூரத்தில் வாய்க்கால்க் கரை ஓரங்களில் அடர்ந்த மரங்களின் கீழ்… மண்மூடைகளை அடுக்கிக் காப்பரண்களின் பின்னால் போராளிகள்…

இருள் கண்களுக்குப் பழகி விட்டதனால் அவர்களின் உருவங்கள் அசைவது லேசாய்த் தெரிகிறது.

மீண்டும் தூரத்தில் வாகன இரைச்சல்…

அவன் யோசனையுடன் தலைமயிரைக் கோதிக் கொள்கிறான். தொண்டைக்குழிக்குள் பந்தாக எதுவோ அடைப்பது போலிருக்கிறது. நெஞ்சு வரண்டு நா உலர்ந்துபோக அடி வயிற்றிலிருந்து ஒரு விம்மல் எழுகிறது.

அவனையறியாமலேயே அவனது கை அந்தப் பாலத்தின் சீமெந்துக் கட்டினை வாஞ்சையோடு வருடிக் கொள்கிறது.

வெறும் சீமெந்தாலும் மண்ணாலும் இது கட்டப்பட்டதாக அவன் உணர்வதில்லை. மனதுக்கு மிகவும் பிரியமான ஒன்றைத் திரும்பத் திரும்ப நினைவு படுத்திப் பார்க்கும் போது ஏற்படும் பரவசம் இந்தப் பாலத்தை நினைக்கும் போதெல்லாம் அவனுக்கு ஏற்படும்.

அப்போது பாலத்தை நோக்கி ஒரு உருவம் மெதுவாய் நடந்து வருவது தெரிகிறது.

கிட்ட வந்ததும் கூர்ந்து கவனித்து “நகுலன்?” என்றான்.

“ஓம் அண்ணை! நான்தான்”

நகுலன் ஒரு கையில் ஐந்து லீற்றர் கானுடனும் மறுகையில் சிறு பெட்டியுடனும் நிற்கிறான்.

“எல்லாம் சரியே…நகுலன்?” மெல்லிய குரலில் அவன் கேட்கிறான்.

“ஓம் அண்ணை. சென்ரிப் பெடியளுக்கும் சொல்லியாச்சு”.

சிறுவயதிலிருந்து தன் உணர்வுகளோடு ஒன்றிப் போயிருந்த அந்தப் பாலத்தையும் வாய்க்காலையும் அவன் ஒரு நிமிடம் ஆசையோடு பார்க்கிறான். அடுத்த நிமிடம் தூர முகாமை ஒரு தடவை வெறித்துவிட்டுப் பாலத்துச் சுவரில் இருந்த தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஒரு துள்ளலுடன் பாலத்திலிருந்து தெருவில் குதித்து இறங்குகிறான்.

“பென்டோர்ச் எண்டாலும் அடிக்காதை நகுலன். இவடத்தின்ர ஒவ்வொரு அங்குலமும் எனக்குத் தெரியும் நீ என்னோடயே வா.”

பாலத்தின் சரிவில் புதர்கள் நடுவே சப்பாத்துக் கால்களை மெதுவாகப் பதித்து இறங்குகிறான். நகுலனிடமிருந்து வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட சக்கைக் கானை வாங்கிப் பாலத்தின் அடிப்பரப்பில் கவனமாக வைக்கிறான். அதில் இணைந்த வயர்களை இழுத்துக் கொண்டு பற்றைகளுக்கூடாக நூறு யார் தள்ளிப் போய் பெரிய மரத்தின் கீழ் படுத்துக் கொள்கிறார்கள். கையில் வயர் இணைப்பும்… பற்றரிப் பெட்டியும்… இன்னும் ஐந்து நிமிடங்களில் அவன் நேசித்த அந்தப் பாலம் வெடித்துச் சிதறப் போகிறது. அந்த நினைப்பு நெஞ்சின் ஒரு மூலையில் ஆழமான வலியை ஏற்படுத்துகிறது. ஆனாலும் அன்னியர்களை வாகனங்களுடன் எமது பிரதேசங்களுக்குள் வர விடக்கூடாது அதற்காக…

நிலத்திலிருந்து மிகவும் உயரத்தில் இருள் வடிவமாகத் தெரிகிற அந்தப் பாலத்தை அவன் இமைக்காமல் பார்க்கின்றான்.

ஓன்று…இரண்டு…மூன்று…நாலு…ஐ.

– ஈழநாதம் – 19.06.1992

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *