காய்கறி சந்தையின் இரைச்சலைத் தாண்டி மடத்துத்தெரு பக்கமாக நடக்கத் தொடங்கினான் கோவிந்தன் அவனது நடையில் என்றும் இல்லாத ஒரு நிதானமும் உறுதியும் கூடியிருந்தது அந்த நள்ளிரவின் அசதியிலும் அவனது கண்கள் இரண்டும் பொலிவுடன் அசைந்து கொண்டிருந்தன.இன்று யாரைத் தேர்ந்தெடுப்பது என்று அவன் நேற்றே முடிவு செய்துவிட்டான். நேற்று நடந்த பேருந்தில் தவறவிட்டவளின் முகம்போல் கலங்காமல் அப்படியே நினைவில் ஆடிக்கொண்டிருக்கிறது அவளது முகம் முருகன் கடைக்குள் நுழைவதற்கு முன்பாக ஒருமுறை மடத்தின் வாசலில் நிற்கும் வேப்ப மரத்தடியை கூர்ந்து பார்த்தான் யாருமில்லை. நேற்று இந்நேரம் தான் இருக்கும் அந்த மரத்தடியில் அவ்வளவு பேரும் நின்றுகொண்டிருந்தார்கள்.இன்று ஏன் ஒருவர் கூட இல்லை. எல்லோரும் எனக்கு முன்பாகவே வந்து எனக்கு முன்பாகவே சென்றுவிட்டார்களா? அல்லது இனிமேல்தான் வருவார்களா?
என்ற குழப்பம் தோன்றியதும் சரிபார்க்கலாமென்று என்ற எண்ணத்தோடு உள்ளே சென்று முகத்தில் நீரை அள்ளித் தெளித்துக் கொண்டான். அந்த நேரத்திலும் முருகன் ஹோட்டல் பரபரப்பாகவே இருந்தது.இட்லியும், பொங்கலும் சாப்பிடும் லோடுமேன்களும், காபி மட்டுமே சாப்பிடும் வியாபாரிகளின் கூட்டமும் நிறைந்த சத்தத்தில் கோவிந்தன் ஒரு காப்பியை வாங்கி வைத்துக் கொண்டு நிதானமாக உறிஞ்சத் தொடங்கினான். நேற்றைய அவளது முகமும், மைதீட்டிய புருவமும் அவனை இன்று மீண்டும் இங்கே வரவைத்துள்ளது. ஏதோ ஒரு அலட்சியத்தில் நேற்று அவளைத் தவறவிட்டுவிட்டேன். இன்று மட்டும் அப்படி நடந்துவிடக்கூடாது.எப்படியும் அவளிடம் பேசி அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணமே அடிக்கடித் தோன்றி அவனைத் தடுமாற வைத்துக்கொண்டிருந்தது.
காப்பியை முழுவதுமாக குடித்து முடித்தவன் கல்லாவிற்கு வந்து காசு கொடுக்கும்போதுதான் கவனித்தான் கல்லாவிற்கு பின்புற சுவற்றில் பழனிமுருகன் ராஜ அலங்காரத்தோடு நின்று கொண்டிருந்தான். அவனது படத்திற்கு கீழே மகிழம்பு வாசம் கொண்ட ஊதுபத்திகள் எரிந்துகொண்டிருந்தது. கல்லாபெட்டியின் விளிம்பில் இரண்டு சில்வர் கிண்ணங்களில் திருநீறும், குங்குமமும் நிறைந்து கீழேவும் சிதறிக்கிடந்தது. அந்த ஒருநொடியில் மனம் உள் ஒடுங்கி மீண்டு வந்தது.இந்த பித்துநிலைக்கு நீயும் ஒரு காரணம்தானே? முருகா .என்று அந்த ஒரே நொடியில் கடையை விட்டு வெளியே வந்துவிட்டான் உள்ளே சென்ற காப்பியின் சூடு இன்னும் ஆறவில்லை, மேல் உடம்பு மட்டும் சற்று குளிர்வது போல் இருந்தது. கோவிந்தன் மனம் இன்னும் கூடுதலான உற்சாகத்தோடு தளும்பிக் கொண்டிருந்தது.
வீட்டிலிருந்து கிளம்பும்போது நேற்று தடுமாறிய அவனது முகம்தான் இன்றும் சங்கரியின் நினைவுக்கு வந்தது.வழக்கமான சில வாடிக்கையாளர்களிடம் பேசும்போதுகூட சங்கரி தனது பேரையோ அல்லது சொந்த ஊரையோ முழுமையாக சொல்வதில்லை.இரவில் . நெருங்கிவரும் அவர்களிடம் ஒரு தொழில் முறை இயந்திரம் போல்தான் நடந்து கொள்வாளேத் தவிர மனம் ஒட்டி எப்போதும் பழகியதில்லை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சங்கரியின் அழகில் மயங்கி கைகாட்டும்போதெல்லாம் ராணி அக்காதான் ஆள் மாற்றி அனுப்பி வைப்பாள் .இந்த தொழிலுக்கு வருவதற்கு ராணி அக்காவும் ஒரு வகையில் காரணம்.ஆனால், அவள் மட்டுமே முழுக்காரணம் அல்ல. தள்ளிப்போன திருமணம், குடும்பச் சூழல், சங்கரியை முழுவதுமாக அனுபவித்துவிட்டு தாலிகட்டாமல்கூட ஓடிப்போன அந்த தறுதலை பயலும்தான் மற்ற எல்லோரையும்போல சங்கரியும் சில வசதிகளின் பொருட்டு இங்கே வந்துவிட்டாள். இங்கே வருவதற்கு முன்புகூட இதே தொழிலை தனியாகத்தான் செய்துவந்தாள். ஆரம்பகாலங்களில் கண்ணன் மாமா கொடுக்கும் முகவரிக்கு பகலில் சென்றுவிட்டால் போதும்அங்கே வெளியூர் ஆட்கள் யாராவது இருப்பார்கள். அவர்களிடம் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும் சாயங்காலம் வீட்டிற்க்கு வந்துவிடலாம் யாருக்கும் எதுவும் தெரியாது.பெரும்பாலும் இவையெல்லாம் எப்போதாவது அக்ரஹாரத்தின் எதோயொரு வீட்டில்தான் நடக்கும் அந்த நாட்களில் போதுமான உணவும்,கேட்கும் அளவிற்கு பணமும் கிடைத்துவிடும். இந்த தொடர்பெல்லாம் கண்ணன் மாமா மூலமாகத்தான் அறிமுகம். கண்ணன் மாமா ஏதோ ஒரு அரசு அலுவலகத்தில் புரோக்கராக வேலைபார்த்து வந்தார். அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் கும்பகோணம் வரும்போதெல்லாம் எனக்கு ஆள் அனுப்பிவிடுவார். ஒருநாள் முழுவதும் அந்த அதிகாரி கேட்கும் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டிய வேலையை கண்ணன் மாமா நிறைவாகவே செய்துமுடிப்பார். அதிகாலையில் அதிகாரியை அழைத்துக் கொண்டு கோயில் குளங்கள் அழைத்துச் செல்வதும், மதியநேரத்தில் பாண்டியன் மெஸ்ஸில் கரிக்கோலாவோடு அசைவ சாப்பாடு வாங்கிக்கொடுப்பதும் இரவு நேரத்தில் தேவைப்பட்டால் பெண்களை அழைத்துவருவதும் மாமாவின் வேலையாக இருக்கும்.சமயத்தில் பகல் நேரங்களில் பெண்கள் கேட்கும் அதிகாரிகளுக்கு என்னைபோன்ற பெண்களை ஏற்பாடு செய்து கொடுப்பார். ஆச்சாரக் குடும்பத்தில் பிறந்த அவருக்கும், எனக்கும் தலையெழுத்து என்பது ஒரே மொழியில் இப்படியாக எழுதப்பட்டுவிட்டது.
கோவிந்தன் கொஞ்ச கொஞ்சமாக நடந்து மரத்தடிக்கே வந்து நின்றுவிட்டான். துணிச்சலாக வந்துவிட்டானேத் தவிர தனியாக நிற்பதில் ஒரு பதட்டம் அவனுக்குள் உருவாகத் தொடங்கிவிட்டது மெயின் ரோட்டில் செல்பவர்களுக்கு கோவிந்தன் அங்கே நிற்பது அவ்வளவு எளிதாகத் யாருக்கும் தெரியாது ஆனால் கோவிந்தனால் ரோட்டில் செல்பவர்களை பார்க்கும் அளவிற்கு விளக்கு வெளிச்சம் துல்லியமாக அடித்துக் கொண்டிருக்கிறது. நின்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியிலும் நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டிருக்கிறது. அவள் தனியாக வருவாளா?அல்லது கூட்டத்தோடு வருவாளா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த இடத்தில வேறு சில ஆண்களும் என்னைப் போல் ஒதுங்கத் தொடங்கினர். கூட்டம் கூடுவதற்குள்.அவள் வந்துவிட வேண்டும், அவள் வந்த வேகத்தில் அவளிடம் பேசி அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற தவிப்பு பெருகத்தொடங்கி ஒரு இடத்தில் நிற்கமுடியாமல் அந்த இடத்திலேயே அசைந்துக்கொண்டிருந்தான். ஆனால் அவனைப்போல் அங்கே வேறு யாரும் தவிக்காமல் நிதானமாக பேரூந்துக்கு காத்திருப்பதை போலவே அமைதியாக நின்றுக்கொண்டிருந்தனர். அங்கே நின்றுகொண்டிருக்கும் ஒவ்வாருவரும் மற்றவர் முகத்தை பார்க்காமல் பேருந்திற்கு காத்திருப்பதைப்போல் வீதியை மட்டும் அடிக்கடி பார்த்துக் கொண்டு கடிகாரத்தையும் ஒருமுறை பார்த்துக்கொண்டனர். மனித குலத்திற்கு பொதுவான காமம் ஒன்று அங்கே தனித்தனியாக நின்று எரிந்துகொண்டிருந்தது.ஆனால் கோவிந்தனின் மனதில் மட்டும் முருகன் கடையில் புகைந்து கொண்டிருந்த ஊதுபத்தியின் மனம் போல மெல்லிய புகையொன்று அவனது உடையைச் சுற்றி அலைந்துகொண்டிருந்தது.நேற்று அந்தக் கூட்டத்தில் அவளைப் பார்த்த அதே முகம்தான் கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு அவன் அன்றாடம் பார்த்து பரவசப்பட்ட முகம்.
இந்த இருபது வருடத்தில் கல்லூரி முடிந்து ஒருவேளையிலும் நிலை கொள்ளாமல் பல்வேறு வேளைகளையும் பார்த்துவிட்டான் ஒருவேளையும் அவனுக்கு நிரந்தரமில்லை, அவன் மனம் எதிலும் ஒன்றவில்லை. பணம் மட்டுமே அவனுக்கு எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடவில்லை. கொஞ்சநாட்கள் மருந்துக் கம்பெனிகளில் ஊர் ஊராக மருந்துப்பெட்டிகளை தூக்கி அலைந்தான். சிலவருடங்கள் ஆடிட்டரிடம் சேர்ந்து வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களின் கடைகளுக்குமாக அலைந்து கொண்டிருந்தான் சில மாதங்கள் கோயில் வாசலில் அர்ச்சனைக் கடையிலும் வேலை பார்த்தான் எந்த வேலையிலும் மனம் ஒட்டவில்லை. ஈடுபாடு இல்லாத வேலைகளை எவ்வளவு நாட்கள் பார்க்கமுடியும். ஒவ்வொரு வேலையிலும் அதிகபட்சம் ஒரு வருடம்தான். அதோடு அந்த வேலை முடிந்துவிடும்.அடுத்த வேலையை தேடிமுடிக்கவே ஒருமாதம் கடந்துவிடும்.இந்த ஓட்டத்தின் நடுவே யாராவது ஒருவன் அவளை நினைவுபடுத்தி விடுவான். அன்று எரியத்தொடங்கிவிடும் ஒரு நெருப்பு மெல்ல மெல்ல அணைந்து ஊதுபத்தியின் மணமாக மட்டுமே சிலகாலம் உடலில் ஒட்டியிருக்கும். அவள் எப்போது தன்னைவிட்டு பிரிந்துபோனாள் என்ற நினைவற்ற காலத்தில் இருபது வருடங்கள். ஓடிவிட்டது அவளைப்போல் ஒருத்தியை இதே கடைத்தெருவில் நேற்று பார்த்துவிட்டேன். ஏன் இப்போது அவளைத் தேடவேண்டும் ஏன் இந்த மரத்தடியில் இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்! இந்த விதியை யார்தான் இத்தனை அழகாக பின்னிக்கொண்டிருக்கிரார்கள்? இதிலிருந்து எப்படி வெளியேறுவது? இரண்டு நாட்களாக கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் அவள் நினைப்பாகவே உள்ளதே.உடம்பின் உள்ளே பற்றியெரிவது அவளைப்பற்றிய நினைவா? அல்லது பழகிப்போன காமமா ?என்று ஒன்றையொன்று புரியாமல் உடல் தன்னிலையில் தடுமாறிக் கொண்டுள்ளது என்பது மட்டும்தான் தற்போது தெரிகிறது. தூரத்தில் ஒரு பெண்கள் கூட்டம் மரத்தடியை நோக்கி வருவதுபோல் தோன்றியது.
ராணி அக்காவும் என்னைப்போல் ஒரு சந்தர்ப்பத்தில் நல்ல வாழ்க்கையை வாழ்ந்தவள்தான். ராம விலாஸ் கம்பெனியில் ஃபோர் மேனாக வேலை பார்த்துவந்த ராணியக்காவின் கணவர் நல்ல மனிதர்தான் அவருக்கு வந்த தீராத காசநோயால் ஒரு கட்டத்திற்குமேல் கம்பெனிக்கு சென்று அவரால் வேலை பார்க்கமுடியாமல் வீட்டிலேயே முடங்கிவிட்டார்.கம்பெனியில் கொடுத்த கொஞ்சநஞ்ச ரூபாயும் அவரது வைத்திய செலவிற்கே போதாமல் போய்விட்டது. ஒருவழியாக இழுத்துபிடித்து வாழ்க்கையை ஒட்டியவள் அதற்குமேல் தாக்குபிடிக்க முடியாமல் சித்தாள் வேலைக்கு போக ஆரம்பித்துவிட்டாள். மேஸ்திரி மதியழகனுக்கும் ராணியக்காவை பிடித்துவிட இருவரும் சில வருடங்கள் அதன்போக்கிலே வாழ்ந்து வந்தார்கள். ஒருபக்கம் அவளுக்கு சந்தோஷமும் கிடைத்தது கூடுதலாக பணமும் கிடைத்துக் கொண்டிருந்தது. மேஸ்திரிக்கு ராணியக்காவும் சலித்து போய்விட்டாள். வேலைக்கு வரவேண்டாம் என்ற குறையாக அவளை விரட்டவும் ராணியக்காவும் வேறு வழியின்றி தெரிந்தவர்கள், கூட வேலை பார்த்தவர்கள் கூப்பிடும் இடங்களுக்கு கூப்பிடும் நேரத்திற்கு போய் வரத் தொடங்கிவிட்டாள்.நோய்க்கு தாக்குபிடிக்க முடியாத கணவன் ஒருநாள் இறந்தபோது ராணியக்காவை பார்க்க மிகவும் பாவமாகத்தான் இருந்தது அதே வருடம் தான் கண்ணன் மாமா கூப்பிடும் இடங்களுக்கு மட்டுமே போய்வந்த எனக்கு அவரது சாவிற்குப் பிறகு புதியதாக யாரையும் தேடிப்பிடிக்க தெரியவில்லை. ஆனால் தொழிலுக்கு கட்டாயம் போய்த்தான் ஆகவேண்டும் பழகிப்போன உடல் ஒருபக்கம் சுகம் தேடுகிறது, ஒருபக்கம் பணம் தேடவைக்கிறது. அப்போதுதான் ராணியக்கா தனக்கு தெரிந்தவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைக்கத் தொடங்கினாள். ஆரம்ப காலங்களில் தஞ்சாவூர், மாயவரம் போன்ற வெளியூர்களுக்குதான் நாங்கள் இருவரும் சென்று வந்தோம். காலையில் புறப்பட்டால் வீடுவந்துசேர சாயங்காலம் ஆகிவிடும்.தினசரி இப்படி வெளியூர் சென்றுவருவதை எட்டநின்று வேடிக்கையாக பேசிய தெருப்பெண்கள், ஜாடையில் திட்டத்தொடங்கவும் ராணியக்காதான் இவளுகளுக்காக நாம் ஏன் பயந்துகிட்டு வெளியூர்போய் தொழில் பண்ணனும், உள்ளூர் விடுதிகளுக்கே போவோம்.என்று துணிச்சலாக என்னையும் அழைத்துச் சென்றாள். என்னோடு சேர்த்து ராணியக்காவின் கூட்டம் பத்துக்கு மேல் தாண்டிவிட்டது. அவரவரின் வருமானம் அவரவருக்குத்தான் என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டாள். சொன்னதைப்போல் ராணியக்கா யாரிடமும் ஒரு ரூபாய் கூட தனக்கான கமிசனாக வாங்கிக் கொண்டதில்லை.
அப்பா அம்மா உயிரோடு இருந்தவரை கல்யாணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். என்னால் அப்படியொரு பந்தத்தை கற்பனை செய்யவே அச்சமாக இருந்தது. ஒருவேளை அவளுக்கு திருமணம் ஆகாமல் இருந்து அவளே என் மனைவியாக வரநேர்ந்திருந்தால் சம்மதம் தெரிவித்திருப்பேனோ என்பதும் தெரியவில்லை. அவளை சந்திக்கும் போதெல்லாம் அப்படியொரு எண்ணமும் அப்போது தோன்றவில்லை. அவளுக்கு திருமணம் ஆனபோது நான் எங்கே போய்த் தொலைந்தேன் என்பதும் கூட இப்போது எனக்கு நினைவில்லை. ஒருநாள் முழுவதும் வடலூர் சத்திய ஞானசபை எதிரே அமர்ந்திருக்கிறேன்.சபைக்கு வருவோர் போவோரெல்லாம் நிழல்போல் என்னை கடந்து சென்றார்கள். அணையாஅடுப்பின் ஜோதியில் எல்லா உயிர்களும் உணவருந்தி ஓய்ந்திருக்கும் அந்த மாலையில் எனது உடல், எனது பிராணன் என்ற எந்த பிரக்னஞயும் இன்றி ஓய்ந்துகிடந்தேன். எங்கும் நிறைந்திருக்கும் அருட்பெரும்சோதியை என்னுள் உறைந்துவிட்டு இருளை அகற்று இவ்வுடலில் துடித்துக் கொண்டிருக்கும். நாடியை நிறுத்து.எண்சான் உடலை இந்த பூமிக்கு தானமிடு என்று இராமலிங்கதின் முன்பாக மண்டியிட்டேன்.கண்ணிலிருந்து உதிரத்தொடங்கிய நீர்மையில் எனது பாவங்கள் யாவும் ஒவ்வொன்றாக கரையத்தொடங்கின. ஊரன் அடிகளார் மேடையிலிருந்து என்னையே பார்த்தபடி சன்னதமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அண்ணாந்து பார்த்தேன் முழு பௌர்ணமியாக நிலவு ஒளிர்ந்து கொண்டிருந்தது.முழு உடலும் எடையற்றது போல் காற்றில் அசைந்து வானத்தை நோக்கி பறக்கத் தொடங்கியது. இரண்டு நாட்கள் கழித்து வீடுவந்து சேர்ந்தபோது எஞ்சியிருந்த அம்மாவும் அப்பாபோன திசைக்கே சென்றுவிட்டாள். வீடு ஓய்ந்துவிட்ட மைதானம் போல் இருண்டு கிடந்தது. இந்த இருளிலிருந்து வெளியேற, இந்த உடலிலிருந்து வெளியேற ஒரு வழியைத்தேடி கண்டடைய வேண்டும். அதையும் உடனடியாக செய்திடவேண்டும் என்ற வேகத்தில் நடக்கத் தொடங்கிய கால்கள் பாலக்கரையில்தான் வந்து நின்றது.
சங்கரியும், கோவிந்தனும் சுமாமிமலை வந்தபோது இரவு ஒன்பது மணியிருக்கும் கடைத்தெருவில் பெரிய கூட்டமில்லை,கோயிலில் ஒவ்வொரு நடையாக சாத்திக்கொண்டுருந்தார்கள். பக்தர்கள் சிலர் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தனர் சன்னதித் தெருவில் நின்றபடியே சுவாமிநாத சுவாமியை நினைத்துக்கொண்டு இருகைகளையும் கூப்பி அப்படியே தரையில் தரையில் விழுந்து எழுத்தான் கோவிந்தன். அவனுக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது. இருபது வருடமாக உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்த ஆற்றாமையெல்லாம் ஒரே நொடியில் தீர்ந்ததுபோல் இருந்தது. இதே சுவாமிமலைக்கு எத்தனையோமுறை வந்துபோயிருப்பேன் அப்போதெல்லாம் ஓயாத தவிப்பு இன்று இந்த இரவில் தீர்ந்துவிட்டது. நினைத்து பார்க்க முடியாத மாற்றம் ஒன்று உருவாகிவிட்டது. இனிவரும் நாட்கள் மட்டுமே போதும் இந்த மகிழ்ச்சியை கொண்டாடவும் வாழவும், சங்கரியின் முகத்தைப் பார்த்தான் புதுப்பெண்ணின் நாணம் அவள் முகத்தில் படரதொடங்கியிருந்தது. அவளும் என்னை அதிசயமாக பார்க்கத் தொடங்கினாள். இருவரின் ஆடையிலும் மகிழம்பூவின் வாடை மேலெழுந்து வந்தது.