கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 10, 2024
பார்வையிட்டோர்: 995 
 
 

மிருகாங்க மோஹனன் பலவற்றையும் நினைவுகூர்ந்தான்.அஸ்த‌ மனம் இளம் சூட்டினால் தொட்ட பாறைகளை மிதித்து நடக்கும்போது, பள்ளத்தாக்கைத் தாண்டி அம்மன் கோயில் தெரிந்தது.தந்தையின் சிறு விரலை இன்னும் கொஞ்சம் அழுத்திப் பிடித்துக்கொண்டு மிருகாங்க மோஹனன் கேட்டான்.

“அப்பா, நான் கொஞ்சம் அந்தக் கோயில் வரையிலும் போகட்டுமா?”

“எதுக்கு?” அப்பா கேட்டார்.

ஒன்றும் சொல்லாமல் கொஞ்ச நேரம் அப்பாவின் பின்னால் ந‌ட‌ந்தான்.பறவைகள் பரல் மீன்கள் போல வெட்டிப் பறந்து போயின‌. தூசியில் சில‌ ச‌ம‌ய‌ம் சாண‌‌த்தின் வாச‌னை, துள‌சியின் ம‌ண‌ம்.

“மிருகாங்கா!” அப்பா கேட்டார்: “நீ ப‌தில் சொல்ல‌லியே!”

“என‌க்கு” மிருகாங்க மோஹனன் விம்மினான்.

“எனக்கு அந்த தேவியைப் பார்க்கணும்.” அப்பாவின் முகம் இருண்டது.

“அங்கே தேவியொண்ணுமில்லை.” அப்பா சொன்னார்: “வெறும் கல்லில் செதுக்கிவச்ச ஒரு உருவம்தான். ஒரு பாறைத் துண்டைப் பார்க்க‌ அவ்வ‌ள‌வு தூர‌ம் ஏன் போக‌னும்?”

அப்ப‌வுக்குச் சொல்லிப் புரிய‌வைக்க‌ முடியாது.போதாத‌ற்கு அப்பாவின் இருளும் முக‌த்தை மன‌த்துள் காணவே மிருகாங்க மோஹனன் பின்வாங்கினான். பாதுகாப்பு அற்ற‌வனானான்‌.திரும்ப‌வும் பாதுகாப்பிற்காக‌,அப்பாவின் சிறுவிர‌லைத்தான் இறுக்கிப் பிடித்தான். அப்பாவிட‌ம் சொல்ல‌ வேண்டிய‌து, ஆனால் சொல்ல‌ இய‌லாத‌‌து மிருகாங்க மோஹன‌னின் ம‌ன‌தில் தெ‌ளிவ‌ற்ற‌ விருப்ப‌ங்க‌ளாக‌ உருவ‌ம் கொண்ட‌ன‌.தின‌மும் அந்தி நேர‌த்தில் பாறைக் க‌ட்டுக‌ளில் ந‌ட‌க்க‌ப் போகையில், தொலைவில் அம்ம‌ன் கோயில் தெரியும்போது,இற‌ந்து போன‌ தாயைப் ப‌ற்றித்தான் நினைப்பான்.அப்பாவிட‌ம் அதைக் கூற‌ தைரிய‌மில்லை.

“நான் பக்கத்துவீட்டு சுநந்தாவோட போறேன்.” மிருகாங்க மோஹனன் திரும்பவும் சொன்னான்.

“வேண்டாம்.” அப்பா சொன்னார்: “யாரோடவும் போக வேண்டாம்.”

பிறகு இருவரும் ஒன்றும் பேசவில்லை. மிருகாங்க மோஹனன் காலடிகளில் பாறைகளின் ஸ்பரிசம் தவித்தது. இளம் சூடு. குறுங் காலடிகளில் பாறைகள் துடித்தன. அத் துடிப்புகள் காலோடு மேலே ஏறின. அவை அவனுள் முழுதும் நிறைந்தன. மத்யானத்தில் தனியாக வெளியே வர முடிந்தால் மிருகாங்க மோஹனன் வீட்டைச் சுற்றிலுமுள்ள மாந்தோப்புக்களிலும், திறந்த வெளிகளிலும் அலைந்து திரிவான். பழைய பாம்புச் சிலைகளின் முன் அமர்ந்து நாகர்களின் கருங்கல் படங்களைத் தழுவிக் கேட்பான்: “என்னைக் கடிப்பீங்களோ?”

“கண்ணே!” “அவர்கள் சொல்வார்கள்: “நீ எங்கள் தங்க மகனல்லவா!”

“நீங்க என்னோட விளையாட வருவீங்களோ, நாகத்தார்மாரே!”

“நீ எங்களோட வா. மாணிக்கங்களை ஒளித்து வைத்த சுரங்கங்களைக் காட்டுகிறோம். நீல மீன்களுள்ள ஆம்பல் பொய்கைகளைக் காட்டுகிறோம். அந்திநேரத்தின் இளம் வெப்பம் மாயாத கற்பாங்ளகள் மேல் உனக்குப் படுத்து உறங்கலாம்.”


மீண்டும் அவன் அவ்விளம்பருவத்தின் நினைவிலாழ்ந்தான். மறுபடியும் காலடிகளில் பாறைகளில் இளம் சூடு. தூரத்தில் காடுகள் எரிந்து அடங்கியிருந்தன. அதற்குப் பின்னால் விஷம் கலந்த சமுத்திரம். சமுத்திரத்தின் மேலே அணுக்கதிர்வீச்சின் நிறம் மாறும் மேகங்கள். இறந்துபோன ஜீவராசிகளின் எதிரொலிகளோடு சுழற்றியடிக்கும் காற்று. மிருகாங்க மோஹனன் தொலைநோக்கியை எடுத்துக் காட்டின் கருங்கட்டைகளுக்கிடையே தேடத் தொடங்கினான். கடைசியில் அவளைக் கண்டு பிடித்தான். கரிக்கட்டைகளுக்கிடையில் அவள் பதுங்கிக் கிடந்தாள். மிருகாங்க மோஹனன் ஆயுதத்தைப் பாறையின் மேல் வைத்தான். அந்த ஒரு நிமிடத்தில் பாறையின்மேல் உள்ளங்கை பதிந்தது. இளமைக் காலத்தைப்போல பாறைகளிலிருந்து துடிப்புக்கள் மிருகாங்க மோஹனனின் உள்ளங்கைக்குள் ஏறின. அவற்றின் பொருளென்னவென்று புரிந்துகொள்ள அவன் முயற்சித்தான்.

“சின்னப் பையா,” பாறைகள் கேட்டன: “நீ எதற்காக இந்த ஆயுதத்தைக் கையிலெடுத்தாய்? இதுதானா நம் நட்பிற்கு நீ செய்யும் கைம்மாறு?”

மிருகாங்க மோஹனன் சொன்னான்: ” நான் உங்களைத் தொந்திரவு செய்யலியே.”

“நீ எங்க‌ள் ந‌ட்பை வேத‌னை‌க்குள்ளாக்கினாய்” பாறைக‌ள் கூறின; “நீ ஆயுத‌த்தைக் கை‌யிலெடுத்த‌ நிமிஷ‌த்தில் ந‌ம் ந‌ட்பு முறிந்த‌து. எங்க‌ளுடைய அமைதியில் ப‌ங்கு வேண்டாமென்று நீ சொல்கிறாய்.”

மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் வேத‌னையால் நிர‌ம்பினான்.மீண்டும் ஒரு குழ‌ந்தையாக ஆக அவ‌ன் முய‌ற்சித்தான். அம்ம‌ன் கோயிலின் கருங் க‌ற்சிலையை நினைவுகூர்ந்தான். அதைப் பார்க்க‌ முடியாம‌லேயே, தொட முடியாமலேயே குழந்தைப்பருவம் கடந்துபோயிற்று. அக் குன்றுப் புறமும், கோயிலும், அந்திநேரமும் இப்போதும் அங்கேயே இருக்குமோ? ஒருவேளை அழிவார்ந்த கதிர்வீச்சின் அலைகளில் அதெல்லாம் பொடிந்து போயிருக்கலாம். தேவி! மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் சொன்னான். நான் சுநந்தாவுடன் அந்தக் கோயிலுக்கு வந்திருக்கவேண்டியது. மத்யானம் அப்பா தூங்கும்போது, இல்லாவிடில் அப்பா வேட்டைக்குப் போகும் போது சுநந்தாவுடன் ஒளிந்தோடி வந்திருப்பேன்.

மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் விழிப்படைந்தான்.இப்போது பாறைகளின் துடிப்புக் கேட்கவில்லை. அவன் தனது முதுகிலிருந்த பையைத் திறந்து ஒரு வெள்ளைக்கொடியை வெளியே எடுத்தான். குன்றின் சரிவில் உலர்ந்து கிடந்த ஒரு கிளையொடித்து வெள்ளைத் துணியை அதில் கட்டிக் கொண்டு, அவன் பள்ளத்தாக்கில் இறங்கினான். காட்டின் கரிய உடல் நூறாயிரம் வீண் பெருமைகளாக‌த் தெறித்து நின்றது. அந்தியின் இளம் சூடு, துக்கத்தின் இளம் வெப்பம் அவற்றைத் தொட்டது.

கரிக்கட்டைகளுக்கு நடுவில் நின்றுகொண்டு மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் வெள்ளைக் கொடியைத் தூக்கிக் காட்டினான்.அவன் உரக்கக் கூவி யறிவித்தான். “நான் நிராயுதபாணியாக வந்தி ருக்கிறேன். உனக்கு என் வெள்ளைக் கொடி தெரிகிறதா?”

சற்று நேரம் கழிந்துதான் அந்த மெல்லிய குரல் பதில் சொல்லிற்று. “எனக்குப் புரிந்தது. நான் வெளியே வருகிறேன்.ஆயுதமில்லாமல்தான். அங்கே காத்திரு.”

அவள் வெளியே வந்தாள்.

மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் தன்னைய‌றியாமல் சொல்லிவிட்டான். “அய்யோ! உன்மேல் முழுதும் சுட்டுப் புண்ணாயிருக்கிற‌தே.”

அவ‌ள் சிரித்தாள்.

“நீங்க‌ள் ஏன் என்னைப்ப‌ற்றிக் க‌வ‌லைப் ப‌டுகிறீர்க‌ள்?” அவ‌ள் கேட்டாள். “நான் உங்க‌ளுடைய‌ எதிரி அல்ல‌வா?”

அவ‌ன் பேச‌வில்லை. என்ன‌வெல்லாமோ நினைக்க‌வார‌ம்பித்தான். பாறைக‌ளுக்குமேல் செய்த அந்தி நேர‌ப் ப‌ய‌ண‌ம். அப்பாவின் சாம‌ர்த்திய‌த்தின் முன் தாழ்வு ம‌ன‌ப்பான்மையோடு பின்வாங்குவ‌து. அவ‌ள் த‌ன‌து எதிரி என்ற‌ உண்மை அத‌னுடைய‌ அபாரமான சாம‌ர்த்திய‌த்தின் கைக‌ளைப் ப‌ர‌ப்பி மிருகாங்க‌ மோஹ‌ன‌னைத் த‌டுத்த‌து.

அவ‌ள் அருகில் வ‌ந்தாள்.

“ம‌ன‌ந் த‌ள‌ர‌ வேண்டாம்.” அவ‌ள் கூறினாள்: “இதொன்றும் தீப்புண்க‌ள‌ல்ல‌. நான் சும்மா க‌ரியெடுத்து மேலே தேய்த்துக் கொண்ட‌துதான்.”

அவ‌ள் க‌ரியைத் த‌ட்டிவிட்டுக் கொண்டாள். சீனாக்காரியின் ம‌ஞ்ச‌ள் நிற‌ம் ம‌றுப‌டியும் தெளிவ‌டைந்த‌து. சிறிய‌தோர் பிக்கினியின் கீழ்ப்பாதி ம‌ட்டுமே அவ‌ளுக்கு ஆடையாக‌ இருந்த‌து.

“உன‌க்குத் துணிக‌ள் இல்லையா?” அவ‌ன் கேட்டான்.”எல்லாம் போயிற்று!” அவ‌ள் சொன்னாள்: “இதோ இடுப்பைச் சுற்றியுள்ள‌ இந்த‌ நாடா ம‌ட்டும்தான் பாக்கி.”

மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் அவளை ஒட்டி நின்றான். “தான்வான்!” அவ‌ன் கேட்டான்: “நான் உன்னை சுந‌ந்தா என்று கூப்பிட‌ட்டுமா?”

“எத‌ற்காக‌?” அவ‌ள் சொன்னாள்: “ம‌னோக‌ர‌மான‌ பெய‌ராகும் தான்‌வான் என்ப‌து. சீன‌மொழியில் அத‌ன் பொருள் என்ன‌வென்று உங்க‌ளுக்குத் தெரியுமா?”

“உன்னுடைய‌வ‌ற்றின் எந்த‌ அர்த்த‌மும் என‌க்குத் தெரிந்து கொள்ள‌ வேண்டாம்.” அவ்ன் சொன்னான்: “நீ என் எதிரி. எதிரியின் எத‌னுடைய‌த‌ற்கும் அர்த்த‌மும் அழ‌கும் இல்லை.”

“யார் சொன்ன‌து?”

“என் நாட்டின் த‌லைவ‌ர்க‌ள் சொன்னார்க‌ள்.உன் த‌லைவ‌ர்க‌ளும் உன‌க்கு அப்ப‌டித்தான் சொல்லித் த‌ந்திருப்பார்க‌ள்.”

“ச‌ரிதான்” தான்வான் கூறினாள்.

“ஆனால் என் த‌லைவ‌ர்க‌ளும் உன் த‌லைவ‌ர்க‌ளும் இன்று மீத‌மில்லை. அவ‌ர்க‌ள் அத்த‌னைபேரும் இக் க‌திர்வீச்சின் த‌ங்க‌த் தூளில் சிதைந்து குலைந்து இல்லாம‌ல் போய்விட்டிருக்கிறார்க‌ள், பார்.”

அவ‌ள் சுட்டிக் காட்டினாள். அச் சுட்டுவிர‌ல் அடிவான‌ங்க‌ளை வெளிப் புற‌மாக‌ச் சுருட்டிய‌து. அடிவான‌ங்க‌ள் கொழுந்துவிட்டெரிந்த‌ன‌. ப‌ட்டுப் பூச்சியின் ம‌க‌ர‌ந்த‌ம்போல‌ பூத‌ல‌மெங்கும் த‌ங்க‌ப்பொடி நிறைந்திருந்த‌து. ந‌க‌ர‌ங்க‌ளும், நாக‌ரிக‌ங்க‌ளும், சாம்ராஜ்ய‌ங்க‌ளும், இறுமாப்புக்க‌ளுமே அப் பொடி. ப‌ல்வேறுப‌ட்ட‌வைக‌ளும் அப் பொடியில் ஒன்றாயின‌.

“ஆனால்” மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் சொன்னான். “நானும் நீயும் இர‌ண்டு எதிரிப்ப‌டைக‌ளின் க‌டைசிப் போர்வீர‌ர்க‌ள். நாம் அதை ம‌ற‌க்க‌முடியாது.”

தான்வான் அவ‌ளுடைய‌ பிக்கினியை அவிழ்த்து எறிந்தாள். நிர்வாணமாக‌ அவ‌ன் முன் நின்றுகொண்டு சொன்னாள்: “பார்!”

“நீ அழகி!” அவன் கூறினான்.

“அதுவல்ல!” அவள் கூறினாள்: “உங்களுக்கு என் நாபியும் அதற்குக்கீழே பள்ளத்தாக்கும் தெரிகிறதா?”

பாறைகளின் துடிப்புப்போல ஒரு சலனத்தின் அலைகள் அவனுள் ஊடுருவின.

“தெரிகிறது.”அவன் சொன்னான்: “அங்கே இரத்தம் ஒழுகுகிறது.”

“பருவ மழை.” அவள் கூறினாள், “புது மழை, மாதவிடாய், என் கர்ப்பப்பை கண்ணீர் விடுகிறது.”

“கண்ணீர் விடுகிறதா?” இவன் கேட்டான்.

“இந்த வெறுக்கத்தக்க மகரந்தப் படலத்தின் எதிரே” அவள் சொன்னாள்.

“யுத்தத்திற்கெதிரே என்று நீ சொல்கிறாயோ?” அவன் கேட்டான்:
“ஆனால், ஏன்?:

“சொல்லுகிறேன்.” அவள் சொன்னாள்: ” ஆனால் அது உங்களுடைய நாட்டுப் பற்றை ஆட்டிவிட்டால்?”

” சொல்.”

“அப்படியானால் சொல்லுகிறேன். இம் மகரந்தப் படலத்தில்தான் என் இளம் மகன் சிதைந்து சேர்ந்தான். உங்கள் ஆயுதத்திலிருந்து கணை ஏற்றுத்தான் நாலு வயதான என்னுடைய சென் இறந்தான். குஞ்சுக் கால்களிலும் குட்டிக் கைகளிலுமெல்லாம் அக் கதிர்வீச்சு பற்றிப் பிடிக்கையில் அவன் சொன்னான்: “அம்மா எனக்கு வலிக்கிறது”

அவள் அழத் தொடங்கினாள்.

அவள் தொடர்ந்தாள்: “அம்மா எனக்கு வலிக்கிறது. துன்பத்திற்கு இம் மூன்று வார்த்தைகளின் ஆழமேயுள்ளது. அதுதான் அடி மட்டம். அதற்குப் பிறகு வேதனையில்லை. என் மகன் எனக்கு நேராகக் கையை நீட்டினான். ஓய்வு நெருங்கிவிட்டது என்பதேபோல எனக்கு நேராக ஒரு கைவிரல் நீட்டினான். நான் அதைத் தொடவில்லை. தொடக்கூடாதென்று என் நாட்டுப் பற்றும் கடமையுணர்ச்சியும் விலக்கின. ஏனென்றால், நான் எனது நாட்டின் கடைசிச் சிப்பாய். அக் கதிர்வீச்சு என்னுள் ஊடுருவ அனுமதிக்க முடியாது. என் சிறுவிரலைப் பிடிக்காமல் எங்கும் போகாத சென் அப்படியாகத் தனித்துப் பயணமானான்.”

“நான் பிழைத்திருக்க நீ இறந்தால் உன் நாடு தோற்றுவிடுமாயிருக்கும்.” அவன் கேட்டான்: “இல்லையா?”

“ஆமாம்.”

“ஆனால், உன் நாடு எங்கே?”

” என்னுடையவும் உங்களுடையவும் நாடுகள் இன்றில்லை.” தான்வான் கூறினாள்: “யாருடைய நாடுகளும் இன்றில்லை. யாரும் உயிருடனில்லை, உங்களையும் என்னையும் தவிர. அப்படித்தான் கம்ப்யூட்டர்கள் சொல்கின்றன. நீங்களும் நானும் மட்டும் இவ்வுலகத்தில் பாக்கியிருக்கிறோம்.”

சட்டென்று அவளுடைய வார்த்தைகள் அவனுடைய உடையின் மீதங்களை உடம்பிலிருந்து பிய்த்து எறிவதாக அவனுக்குத் தோன்றியது. அவனும் அவளைப்போல நிர்வாணமானான். அந் நிர்வாணத்துடன் அவர்கள் கைகளைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் நடந்தார்கள். சுற்றிலும் யாருமில்லை. அந்தி. நீறுபூத்துக் கிடக்கும் எரிகுழம்பு.செடிகளின், பிராணிகளின், கட்டடங்களின், இயந்திரங்களின் பலவிதமான உருவகங்களும் எரிந்து அடங்கிய சிதிலம். அவற்றிற்கெல்லாம் மேலே அந்தக் கதிர்வீச்சு. தங்கத் தூள்போல மரணத்தின் மகரந்தம்.

மரணத்தின் கட்டற்ற இப் பூந்தோட்டத்தில் அவளும் தானும் தனித்து.

“தான்வான்” மிருகாங்க மோஹனன் சட்டென்று சொன்னான். “என் மகளுக்கு மூன்று வயதாயிருந்தது. அவள் என் பக்கத்தில் படுத்துத்தான் உறங்குவாள். இரவில் நான் படுக்கையில் ஒரு விளிம்பிற்கு நீங்கியதை விடிகாலையில் அவள் கண்டுபிடித்தால் பாதியுறக்கத்தில் அவள் என் பக்கத்திற்கு உருண்டு வருவாள். பிறகு ஒரு கண் பாதி திறந்து நான் அங்கே இருக்கிறேன் என்று தன்னைத்தானே தைர்யப் படுத்திக் கொள்வாள். பாதி யுறக்கத்தில், பாதிக் கனவில் சிரிப்பாள். நான் அவளுடைய மழலை வார்த்தைகளை மீண்டும் கேட்கிறேன். அவளுடைய பெயர் கீதா. முன்பொரு தடவை பக்கத்து வீட்டுக்காரனொருவனின் மகள் அவளிடம் கேட்டாள். உன் பேரு சீதா தானே குழந்தே? என் மகளுடைய உதடு கோணியது; அவள் அழத் தொடங்கினாள். அன்றைக்கு முழுதும் கீதா அழுதாள். பக்கத்து வீட்டுக்காரி அவளை சீதாவென்று கூப்பிட்டுவிட்டாளல்லவா? நான் என் மகளை வாரி யெடுத்துக் கட்டியணைத்தேன். அந்த அழுகையைக் கண்டு நான் சிரித்தேன். பிற்பாடு நிறையத் தடவைகளும் நினைவு வந்து சிரித்தேன். ஆனால், சாகும்போது அவள் அப்படி உதடுகள் கோணித்தான் அழுதாள்.

தான்வான், மிருகாங்கனிடம் நெருங்கி வந்து அவனுடைய கையோடு தன் கையைக் கோர்த்துக்கொண்டாள்.

“ம்ஹூம்” என்றான் அவன். ஆனாலும் அவளுடைய பிடியை விலக்க அவன் முயற்சிக்கவில்லை.

“நீ என் எதிரி.” அவன் சொன்னான்.

“சூரியன் அஸ்தமிக்கிறது.” அவள் கூறினாள்.

கைகோர்த்து நின்றுகொண்டு அவர்கள் அந்திமேகங்களை நோக்கினர். வானம், பார்த்துக்கொண்டிருக்கையிலேயே கருமையடைந்தது. கருக்கும் வான‌த்தடியில் லாவா இன்னும் தெளிவடைந்தது. மரணத்தின் மக‌ரந்தம் தெளிவடைந்தது.

“என் சென்!” அவள் கூறினாள்.

“இருள் சேரும்போது அவனுக்குப் பயமாயிருக்கும். அவன் ஓடிவந்து என் விரலைப் பிடித்துக் கொள்வான். அப்படியிருந்தும் நன் அவனைத் தொடவில்லை.

அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“தான்வான்”, மிருகாங்க மோஹனன் கேட்டுவிட்டான்: “நீ அழுகிறாயோ?”

கொஞ்சமும் நினைக்காமல் கேட்டுவிட்டான். பிறகும், யோசிக்காமல்தான் அவளுடைய பின்னால் கை வைத்தான். யோசிக்காமல்தான் அவளைத் தன்னோடணைத்தான்.

“தான்வான்,அழாதே”

அவள் அவனுடைய தோளில் கன்னத்தை வைத்து அழுத்தினாள். உதட்டை ஒற்றினாள். தோளில் சூடான கண்ணீர் விழுந்தது. அவன் அவளுடைய முகத்தைத் துடைத்துவிட்டான்.

“தான்வான்,” அவன் சொன்னான்: “உன் மார்பு எனக்குப் பிடித்திருக்கிறது.”

அவள் மெல்ல அழுகையை நிறுத்தி, திரும்பி அவனது கண்களை நோக்கினாள்.

“அவை சிறிய‌வை.” அவ‌ள் ம‌ன்னிப்புக் கேட்டாள். “உங்க‌ள் பெண்க‌ளைப் போல‌ என‌க்கும் பெரிய‌ மார்பு இருந்திருந்தால்….என்று நினைத்திருக்கிறேன். கோயில் சிலைக‌ளைப் போல‌ வ‌டிவான‌ பெண்க‌ள். நானும் அப்ப‌டியிருந்தால் –“

“அப்ப‌டியிருந்தால்?” அவ‌ன் கேட்டான்.

அவ‌ள் ச‌ற்று நேர‌ம் ப‌தில் சொல்ல‌வில்லை.

க‌டைசியில் சொன்னாள். “உங்க‌ளுக்கு இன்ப‌ம் த‌ர‌ என்னால் இய‌ன்றிருக்கும்.”

இள‌ஞ்சூடான‌ பாறைக‌ளின் ப‌க்க‌மே அவ‌ர்க‌ள் ந‌ட‌ந்தார்க‌ள்.

“தொட‌ட்டுமா?” அவ‌ன் கேட்டான்.

“எத‌ற்காகக் கேட்க‌வேண்டும்?” அவ‌ள் கூறினாள்.

திர‌ண்ட‌ க‌ன்ன‌ங்க‌ளிலும், சிறு கோடுக‌ள் போன்ற‌ கீற்றுக் க‌ண்க‌ளிலும், மார்பிலும், நாபியிலும், தொடைக‌ளிலும் அவ‌ன் முத்த‌மிட்டான்.

“மிருகாங்கா”, அவ‌ள் சொன்னாள்: “ஆகாய‌ம் இருக்கிற‌து.இப்போது ஒரு செய‌ல்வ‌கைய‌ற்ற‌தான‌ உண‌ர்ச்சி என‌க்கு உண்டாகிற‌து.

என் கர்ப்பப் பாத்திரத்தின் அழுகையில் நான் கட்டுண்டவளாகிறேன்.”

“நீ ஒன்றும் கவலைப்படாதே!” அவன் அதையெல்லாம் அற்பமானதாக ஆக்க முயற்சித்தான்.அவன் கர்ப்பத்தடைச் சாதனங்களை நினைத்தான். மாதவிடாயின் ரத்தக் கடலில்,கர்ப்பத்தடையின் பெட்டகங்களில் பயணம் செய்து அழியும் வெண் விந்துகளை நினைத்தான்.

“இருட்டுகிறது” என்றாள் அவள்.

சட்டென்று அவன் இருளிற்காக அவாவினான். இருளென்ற கடலும் நட்சத்திரங்களென்ற விந்துக்களும்.

“நடசத்திரங்களுக்கடியில் நீ சுந்தரியாக இருப்பாய்” அவன் கூறினான்.

“ஓ” என்றாள் அவ‌ள்.அவ‌ள் க‌ண்க‌ளை மூடினாள். க‌ண்ணைத் திற‌‌ந்து அவ‌னுடைய‌ க‌ண்க‌ளினுள்ளும், அவை வ‌ழியாக‌ மீண்டும் ஆழங்க‌ளினுள்ளும் பார்த்தாள். பார்வையில் ச‌ம‌ர்ப்ப‌ண‌மும் ஆராத‌னையும் இருந்த‌ன‌. அவ‌னில் இதிகாச‌ங்க‌ளை உண‌ர்ந்தாள். உன்னை நான் என்னுட‌மையாக்குகிறேன். ஏதோ நிப‌ந்த‌னையின் வில்லையொடித்து இம் ம‌ண்ணிலிருந்து பிற‌ந்த‌, அழிவில்லாத‌ உன்னை நான் ஏற்கிறேன்.

“மைதிலி” அவ‌ன் அவ‌ளை அழைத்தான்.

“காமுகா”, அவ‌ள் சொன்னாள்:” குழைந்தைத்த‌ன‌மாக‌ என்ன‌ வெல்லாமோ செய்ய‌த் தோன்றுகிறது எனக்கு. நான் உங்களுக்கு முன்னால் மண்டியிடட்டுமா?”

தான்வான் ம‌ண்டியிட்டாள். மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் அவ‌ள்மீது
உயர்ந்து நின்றான். இத்காச‌ அரச‌‌ர்க‌ளைப்போல‌ அவ‌ன் துக்க‌ம் பூண்டான்.

இய‌ந்திர‌ங்க‌ள் அப்போதும் அவ‌ர்க‌ளுட‌ன் உரையாடிக் கொண்டிருந்த‌ன‌. ம‌னித‌ ராசியின் முடிவின் விவ‌ர‌ங்க‌ளை அவை தெரிவித்த‌ன‌. க‌திர் வீச்சின் ஆதிக்க‌த்தில் உருவான‌ க‌ர‌ப்பான்க‌ள் ஒரு வேள்வியைப்போல‌ப் பாறைக‌ளின் மேலாக‌ ஊர்ந்து போய் அந்தப் ப‌க்கத்து எரி குழ‌ம்பில் விழுந்து இற‌ந்த‌ன‌. சில‌ ச‌ம‌ய‌ம். ச‌ற்றுத் தாம‌தித்துப்போன‌ ஒரு விண் வெளிக் க‌ப்ப‌ல் இய‌க்குந‌ரின் உட‌லுட‌ன் நில‌ய‌த்தைய‌டைந்த‌து.

மெத்த‌ன்ற‌ புல்லில் மிருகாங்க‌ மோஹ‌ன‌னும் தான்வானும் கிட‌ந்த‌ன‌ர்.

“இங்கே க‌திர் வீச்சு இல்லை.” அவ‌ள் கூறினாள்.

“இங்கே புற்க‌ள் வ‌ள‌ர்கின்ற‌ன‌.” அவ‌ன் சொன்னான். “இங்கே பூக்க‌ள் ம‌ல‌ர்கின்ற‌ன‌.”

“ந‌ம‌க்காக‌வே இந்த‌ப் புக‌லிட‌ம் காப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌து.” என்றாள் அவ‌ள்.

“யாரால்?”

“க‌ட‌வுளால்”

“எத‌ற்காக‌!”

மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் அவ‌ள‌து உட‌லின் எல்லாவிட‌ங்க‌ளிலும் வ‌ருடினான்

சிருஷ்டி தொடர” என்றான் அவன்.

மேலே ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் வெளிப்ப‌ட்ட‌ன‌.

“எல்லா ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளிலும் ம‌ர‌ண‌மே.”: தான்வான் சொன்னாள்:
“ஒவ்வொரு ஸெல்லிலும் போர். ஒன்று ம‌ற்றொன்றைக் கொன்று, இல்லாவிட்டால் அத‌னுடைய‌ உயிரைத் த‌ன‌க்குள் கொண்டு- அப்ப‌டித்தான் ஜீவ‌ன் தொட‌ர்கிற‌து. ஆத‌ர‌வின்றி ந‌ம்மை நோக்கிய‌ழும் குழ‌ந்தைக்குள்ளும் இந்த‌க் குரூர‌ம் ந‌ட‌க்கிற‌து.”

“என‌க்கு நினைவு ப‌டுத்தாதே” என்றான் அவ‌ன்.


உற‌ங்கியெழுந்த‌போது வெயில் தாங்க‌முடியாம‌லிருந்த‌து.

“ஓடு”, சீனாக்காரி சொன்னாள்.”நான் உங்க‌ளுக்கு ஐந்து நிமிஷ‌ம் த‌ந்திருக்கிறேன்.”

மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் ஓடிப்போய் பாதுகாப்பிட‌த்தைய‌டைந்தான். அங்கே த‌ன் ஆயுத‌ம் இருக்கிற‌து. தான்வான் காட்டில் பெரிய‌ க‌ரிக்க‌ட்டைக‌ளுக்கு ந‌டுவே ம‌றைந்தாள்.

போர் ம‌றுப‌டியும் தொட‌ங்கிய‌து.

ந‌ம்பிக்கையிழ‌ந்த‌ ச‌துர‌ங்க‌ விளையாட்டுப்போல‌ அவ‌ர்க‌ள் போரிட்டார்க‌ள். நேர‌ம் தாழ்ந்த‌ போது மீண்டும் வெள்ளைக் கொடிக‌ளை உய‌ர்த்தினர்.

“காமுகா” ந‌ட்ச‌த்திர‌ விதைக‌ளுக்க‌டியில் அவ‌ள் கேட்டாள். “மீண்டும் ப‌டைப்புத் தொட‌ருமோ?”

“இப் ப‌ர‌ந்த‌ ம‌க‌ர‌ந்த‌க் க‌ட‌லின்மேல் ஒரு ஆலிலையில் க‌ட‌வுள் ப‌டுத்துக் கிட‌ப்பார்!” அவ‌ன் சொன்னான்: “மீண்டும் எல்லாவ‌ற்றையும் ப‌டைப்பார்.”

“இக் குரூர‌ம் தொட‌ர‌” என்றாள் அவ‌ள்.

“ஆமாம்.” அவ‌ன் சொன்னான்: “கொன்று தின்னும் ஸெல்க‌ளை சிருஷ்டிக்க‌.”

“த‌ர்ம‌ப் போரென்று சொல்லி ஜீவ‌ன‌க‌ளைக் குழ‌ப்பி ஏமாற்ற‌” என்றாள் அவ‌ள். “அதை அனும‌திக்க‌லாகாது.”

மிருகாங்க‌ மோஹன‌னின் சூடேறும் உட‌ம்பில் தான்வான் ஏறிப்ப‌டுத்தாள். அவ‌ள் அழுதாள்.

“காமுகா”, அவ‌ள் சொன்னாள்: “ந‌ம‌து தேச‌ங்க‌ள் இன்றில்லை. ந‌ம‌க்கு வேண்டுமானால் ப‌டைப்பின் ப‌ர‌ம்ப‌ரையைத் தொட‌ர‌லாம். ஆனால் எனக்கு என் சென்னைத்தான் நினைவு வருகிறது. நீங்கள் உங்கள் கீதாவை நினைத்துப்பாருங்கள்.

“நினைக்கிறேன்”. அவன் கூறினான்: “அவள் பிறந்த நாள். அவளுடைய குஞ்சுக்கைகள். அவளது அழுகை. மழலை மொழி….”

“இதெல்லாம் குரூரமே” அவள் சொன்னாள்.

“ஆமாம்” என்றான் அவன். “யாரோ நம்மை ஏமாற்றிவிட்டார்கள். வெறுமையின் பெரியதோர் வலையில் மாட்டிவிட்டார்கள்.”

“காமுகா”, அவள் சொன்னாள்: “கவனமிருக்கட்டும். நான் இப்போது நமது நாடுகளைக் குறித்தோ போரைக் குறித்தோ அல்ல சிந்திக்கிறேன். அதெல்லாம் மதிப்பற்றதும் அற்பமானதுமாயிருந்தன. நான் சிந்திப்பது நம் குழைந்தகளைப் பற்றியே. நாம் இதை இங்கே முடிக்க வேண்டும்.

“எதை?” அவன் கேட்டான்.

“குரூரம்” அவள் கூறினாள்: “படைப்பென்ற பொய்.”

“முடிக்கலாம்”. உற்சாகமின்றி அவன் பகன்றான்.

தான்வானுடையவும் மிருகாங்க மோஹனுடையவும் மனங்களில் அவர்களுடைய குழ‌ந்தைக‌ளின் சித்திர‌ங்க‌ள் மீண்டும் க‌டைசியாக‌க் காட்சிய‌ளித்த‌ன‌. குழ‌ந்தைக‌ள் அங்கே விளையாடிக்கொண்டிருந்தார்க‌ள். இட‌றி விழுந்தார்க‌ள். அழுவ‌தும், பிடிவாத‌ம் பிடிப்ப‌தும், சிரிப்ப‌துமாக‌ இருந்த‌ன‌ர்.

தான்வான் அம்பெய்தினாள். மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் வீழ்ந்தான். மீண்டும் க‌திர்வீச்சின் அம்பெடுத்து த‌ன‌து நெஞ்சில் ஏற்றிக் கொண்டாள்.

“காமுகா, போகிறேன்!” என்றாள் அவ‌ள்.

“போகிறேன், மைதிலி!” என்றான் அவ‌ன்.

க‌திர்வீச்சு அவ‌ர்க‌ளின் உட‌ம்புக‌ளினூடே நுழைந்து ப‌ட‌ர‌த் தொட‌ங்கிய‌து. எல்லாம் முடிந்த‌போது த‌ங்க‌ நிற‌மான‌ ம‌க‌ர‌ந்த‌ப் ப‌ட‌ல‌ம் ம‌ட்டும் மிஞ்சிய‌து.


பாறைக‌ளில் காற்று வீசிய‌து.

முன்பு எப்போதோ உப்பு நீரின் அலைக‌ள் பாறைக‌ளில் மோதி மோதியே முத‌ல் உயிர் முளை விட்ட‌து. கொன்றும் தின்றும் அது வ‌ள‌ர்ந்து பெரி‌தாயிற்று. அத‌னுடைய‌ யுக‌ங்க‌ள் கால‌த்தின் நீண்ட‌ அள‌வு கோலில் ஒரு நொ*டி நேர‌ம் ம‌ட்டுமாக‌வே இருந்த‌து. அந் நொடி நேர‌ம் தீர்ந்திருந்த‌து.

த‌வ‌ற்றைத் திருத்தியாகியிருந்த‌து. பாறைக‌ள் அதை அறிந்த‌ன‌. பாறைக‌ள் மீண்டும் ச‌மாதியில் மூழ்கின‌.

– ஓ.வி.விஜயன்

– சமீபத்திய மலையாளச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1980, தொகுப்பு: எம்.முகுந்தன், மொழிபெயர்ப்பு: ம.இராஜாராம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: https://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *