பாறாங்கல்லும் ஒரு பனிக்கட்டியும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 7,470 
 
 

தயங்கித் தயங்கிப் பக்கத்து வீட்டுப் பெரியவரிடம் வந்தார்கள் விபின் தம்பதி.

‘‘மறுபடி மறுபடி உங்க ளுக்குச் சிரமம் கொடுக்கிறதுக்கு மன்னிக்கணும். ரேவதிக்கு இன்னிக்கு ஒரு இன்டர்வியூ. அதான், குழந்தையைக் கொஞ்ச நேரம் உங்ககிட்ட விட்டுட்டுப் போக லாம்னு… ஃபீடிங் பாட்டில், நாப்கின், வெந்நீர் எல்லாம் இதோ இருக்கு. மூணு மணி நேரத்துக்குள்ள வந்துடுவோம்..!’’

‘‘அவசரமே இல்ல… நிதானமா வாங்க! சுசிதான் என்கிட்ட ஒட்டிக்கிட்டாளே! சமர்த்தா இருப்பா!’’ என்றார் பெரியவர்.

அடுத்த அரை மணியில், அவர்கள் ஒரு தியேட்டர் வாசலில் வந்து இறங்கினார்கள்.

‘‘இப்படி இன்டர்வியூ இருக்கு, டாக்டரைப் பார்க்கணும்னு அடிக்கடி பொய் சொல்லி, நம்ம குழந்தையை அவர்கிட்ட தள்ளிட்டு சினிமாவுக்கு வர்றது கொஞ்சமும் சரியில்லீங்க. பாவம் அவரு… ஏற்கெனவே நொந்துபோயிருக்காரு…’’

‘‘தெரியும். அவர் பொண்ணு யாரையோ காதலிச்சு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு வந்து நின்னா. இவர் ஏத்துக்கலே. அவ இப்ப கணவனோட எங்கேயோ கண்காணாத இடத்துல இருக்கா..!’’

‘‘மக பிரிஞ்சு போய் ரெண்டு வருஷம் ஆகப்போகுது. இந்த மனுஷருக்கு துக்கத் தைப் பகிர்ந்துக்கப் பெண்டாட்டியும் இல்ல. எத்தனை ஆறுதல் சொல்லியும் அவரைத் தேத்த முடியலே… அவரைப் போய் நாமளும் இப்படிச் சிரமப்படுத்தணுமா?’’

அடுத்த வாரத்தில் ஒருநாள்…

‘‘என்ன விபின், இன்னிக்கு வெளியே எங்கும் போகலையா நீங்க? குழந்தை சுசித்ராவை வேணா எங்கிட்ட விட்டுட்டு சினிமாவுக்குப் போறதானா போயிட்டு வாங்களேன்…’’ என்றார்.

‘‘இல்லீங்க, ஏற்கெனவே உங்களுக்கு ரொம்பவாட்டி சிரமம் கொடுத்திருக்கோம்!’’

‘‘இதுல என்ன சிரமம் இருக்கு? இட்ஸ் எ ப்ளஷர்!’’ என்று சிரித்தவர், ‘‘அடுத்த வாரம் டெல்லியிலேர்ந்து என் மகள் குடும்பத்தோடு இங்கே வரா!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமா, மாப்பிள்ளை சென்னைக்கு மாற்றல் வாங்கிட்டார். இனிமே இங்கேதான் இருப்பாங்க’’ என்றவர், ‘‘நான்தான் போன் பண்ணிக் கூப்பிட்டேன். எல்லாத்தையும் மறந்துறலாம்னு தீர்மானிச்சுட்டேன். அவளுக்கும்தான் வேற யார் இருக்கா? ஸோ, அடுத்த வாரம் என் குட்டிப் பேரன் வந்துடுவான். அவனுக்கு நல்ல விளை யாட்டுத் துணையாச்சு உங்க குட்டிப் பாப்பா!’’ என்று குஷியாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார் பெரியவர்.

பெரிய பாறாங்கல்லை ஒரு சின்ன பனிக்கட்டி கரைத்த அதிசயத்தை நிகழ்த் தியது தெரியாமல், பொக்கை வாய் திறந்து சிரித்துக்கொண்டு இருந்தாள் சுசித்ரா.

– 29th ஆகஸ்ட் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *