கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 14,160 
 
 

மெடிக்கல் ஷாப்’பில் வண்டியை ஓரங்கட்டிய போது, மொபைல்போனில் அழைப்பு வந்தது; வனஜா தான்.

முன்பெல்லாம் இப்படி அன்றாடம் புகுந்து இம்சை செய்யும்போது, கோபம் திகுதிகுத்து வரும். இப்போதெல்லாம் அது இயல்பாய் தோன்றுகிறது. மூப்பென்ற வியாதி முத்திக் கொண்டிருக்கிறதோ?

“ஏழாகுதே இன்னும் காணுமே?”

“மெடிக்கல்ஸ்ல நிற்கிறேன், கூட்டமா இருக்கு; வந்துடறேன். உனக்கு எதுவும் வேணுமா?” இப்படி பதப்படுத்தி பேசிய வார்த்தைகளை, என்னாலேயே ரசிக்க முடிந்தது.

“நீங்க பத்திரமா வாங்க.”

வேண்டியதை வாங்கிக் கொண்டேன். இப்போதெல்லாம் ஒரு ருபாய், இரண்டு ரூபாய்கள், சாக்லேட் வடிவில் வருகிறது போலும். அதிலும், சுகர் மாத்திரை வாங்குபவனுக்கே, சாக்லேட் சில்லரை தரும், மருந்துக் கடைக்காரர்கள் எல்லாம், குசும்பு குற்றவாளிகள்.

எனக்காக வாசலிலேயே நின்றிருந்தாள், வனஜா.

கல்யாணமான, 25 ஆண்டுகளாக எனக்காக நின்று கொண்டே தான் இருக்கிறாள். அப்போது, அவளை நான் பார்த்த பார்வைக்கும், இப்போது பார்த்த பார்வைக்கும் நிறையவே மாற்றம் இருக்கிறது. மொத்தத்தில் நான் தான் சூரியனைப் போல நேரத்திற்கு ஒரு குணம் கொண்டு இருக்கிறேன். அவள் பூமியைப் போல, எப்படி நான் விழுந்தாலும் ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறாள்.

முகம் அலம்பி வருவதற்குள், காபி காத்திருந்தது. டீபாயில் திருமண பத்திரிகை காற்றில் படபடக்க, எடுத்துப் பார்த்தேன்.

அத்தையின் பேத்திக்கு கல்யாணம் என்று சேதி சொல்லியது. யாரென்று அடையாளம் தெரிந்ததால், வனஜாவை நிமிர்ந்து பார்க்க முடியாமல் காபிக்குள்ளேயே வெது வெதுப்பாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னை கூர்ந்து பார்த்தவள், “திங்கட்கிழமை தான். கண்டிப்பா போயிட்டு வரணும். உங்களுக்கும் போன் பண்றதாச் சொல்லி இருக்காங்க. ரொம்ப ஆழமா யோசிச்சா மீள முடியாது. சிந்திக்கிறதை விட, சந்திக்கிறது சுலபமாத்தான் இருக்கும்,” என்று கூறி, காலி டம்ளரை எடுத்து, நகர்ந்து விட்டாள்.

அவள் விட்டுப்போன வார்த்தைகள் மட்டும் என்னை மிரட்டி நின்றது. நினைத்துப் பார்க்கும்போது, கசக்காத நினைவுகளை சேர்த்து வைப்பது தான் சரியான வாழ்க்கை.

இருபது ஆண்டுகளுக்கு முன், இளமை உச்சத்தில் இருந்த சமயம். வனஜாவின் உடலும், உரிமையும் அலுத்துப் போனதால், மனசு சபலப்பட்டது. அடுத்தடுத்து ஆணும், பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் இருந்தபோதும், கழற்றி வீச முடியாத கவசம் போல் சபலம் மனசுக்குள் பொங்கியபடி இருந்தது.

பெண்களின் கண்களைப் பார்த்து பேசியபடியே, கண்ணியம் தவறிக் கொண்டிருந்த கயமை நாட்கள் அவை. அப்போதுதான், நளினாவோடு பழக்கம் உச்சமானது. உச்சத்திற்கு பின் அத்தனையும் நீச்சம் தான்.

உறவுக்கார பெண்களில் ஒருத்தி, நளினா.

சாமு சித்தப்பா, நளினாவை அழைத்து வந்து, கோதையாண்டாள் பொறியியல் கல்லுாரியில் சேர்த்து விட்டு, அடிக்கடி சென்று நலம் பார்த்துக் கொள்ளும்படி, பாலுக்கு பூனையை காவலுக்கு வைத்து போய் விட்டார்.

அடிக்கடி செல்லாமல், அடிக்கொருதரம் சென்று வந்தேன். நெருங்கிப் பழகத் துவங்கி, விடுமுறைகளில் வரையறைகளை மறந்து, 27 வயசில் எனக்கே பக்குவம் இல்லை. 18 வயது நளினாவை குறை சொல்லவதில் அர்த்தமும் இல்லை.

கண்டிப்பும், தண்டிப்பும் பலமாகவே இருந்தது. அதன்பின், என்னோடு பேசுவதையே அடியோடு நிறுத்திக் கொண்டாள், வனஜா. என்னதான் பிடிக்கவில்லை, ரசிக்கவில்லை என்று, நான் அடுக்கடுக்காய் குறை சொன்னாலும், அவள் சட்டென்று விட்டுத்தந்த மட்டில்லாத சுதந்திரம் ஏனோ, ரசிப்பதிற்கு பதில், தகிக்கவே வைத்தது.

கிளையை வெட்டினால் இலையும் தானே போகும். வனஜாவோடு பிள்ளைகளும், என்னை விட்டு ஒதுங்கி நின்றனர். என் சபலமெல்லாம் நெருப்புக்கு மேலே பிடித்த காகிதம் போல, சுருண்டு சாம்பலாய் உதிர்ந்து போனது.

நளினாவை கடந்தாலும், இளமை இருக்கும் வரைக்கும், கண்களால் களவாடிக் கொண்டு தான் திரிந்தேன். இதனால், வனஜாவுக்கு என்ன பெரிய பாதிப்பு என்று, மனசு கேள்வி கேட்கும்.

இதோ, அந்த கல்யாணத்துக்கு நளினாவும் நிச்சயம் வருவாள். அதனால், எனக்கு போக சங்கடம். வனஜாவிற்கு அது புரிந்து விட்டது என்பது, அதைவிட தர்மசங்கடம்.

குடும்பத்தோடு மண்டபத்திற்கு வந்திருந்தோம். மகன், எம்.டெக்கிலும், மகள் பி.எஸ்சி.,யிலும் இருந்தனர். நளினா விஷயம் வந்தபோது, இருவருக்கும் ஐந்தாறு வயசு தான். அந்த நினைவுகள் அப்படியே இருக்குமா, பிரச்னை புரியுமா, அடையாளம் தெரியுமா?

அடுத்தடுத்து தாக்கிய கேள்விகளால், திருமணத்தை ரசிக்கவே முடியவில்லை. 30களின் முடிவில் இருந்தாள், நளினா. ஆண்களின், 30களுக்கும், பெண்களின், 30களுக்கும் உள்ள ஆறு வித்தியாசம் புரிந்தது.

என்னை விடவே குழப்பமும், ஒருவித அசவுகரியமும், அவளுடைய கண்களில் அப்பட்டமாய்த் தெரிந்தது. கண்களாலேயே காமுற்ற என்னால், பெண்களின் கண்களையே சந்திக்க முடியவில்லை என்பது தான், காலம் எனக்குத் தந்த தண்டனையாக தோன்றியது.

அழைத்துப் போய், அனைவருக்கும் குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்தாள், வனஜா. அதில் நளினாவும் இருக்க, மொபைல்போனை பார்ப்பது போல் நடித்துக் கொண்டே, படபடப்பை மறைத்து, தள்ளி அமர்ந்திருந்தேன்.

“இது, நளினா சித்தி,” என, பிள்ளைகளிடம் சொல்லி வனஜா அறிமுகம் செய்ய, ‘வேறு உறவுமுறையே இல்லையா… வனஜா என்றொரு பாதகத்தி…’ என, மனசுக்குள், ‘டைட்டில் கார்டு’ போட்டுக் கொண்டேன்.

‘தெரியும்மா. பார்த்த ஞாபகம் இருக்கு…’ பிள்ளைகள் கூற, எனக்கு மட்டுமல்ல, நளினாவுக்கும் பூகம்பம் வந்திருக்கிறதென்று முகத்தில் பூத்த வியர்வை சொன்னது.

‘என்ன ஞாபகம் இருக்கும்… எதுவரை ஞாபகம் இருக்கும்… அவர்கள் சிந்தனையில் நானென்ன?’ அடுக்கடுக்காய் கேள்விகள் வர, காலையில் போட்ட சுகர், பி.பி., மாத்திரைகள், வேலை நிறுத்தம் செய்தது போல் வியர்த்துப் போனது; சோர்ந்து போனேன்.

சொந்தங்கள் வந்து பேசியபோதும், மனசு அங்கேயே சுற்றி சுற்றி வந்தது. நளினாவும் அதே நெருப்பு வளையத்தில் தான் சுழன்று கொண்டிருக்கிறாள் என்று முகம் சொன்னது.

கல்லுாரிக்கு நேரமாவதாக பிள்ளைகள் கிளம்ப, லேசாய் நிமிர்ந்து அமர்ந்தேன். ஆசுவாசமாய் வைத்த கண் இமைக்காமல் வனஜாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

திடமாய், நிமிர்வாய் அத்தனை பேரிடமும் பேசிக் கொண்டிருந்தாள். நளினாவின் கைகளைப் பற்றி, வேண்டியதை மட்டுமே விசாரித்துக் கொண்டிருந்தாள். என் விழிகள் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.

பெண்ணை ஆண் ரசிக்கும் தருணங்களின் முரண்பாடுகள் அழகாய் புரிந்தது. பெண்ணின் புறநிமிர்வென்ற இளமையில் லயித்துக் கிடந்தபோது, அகத்தின் நிமிர்வு தான் கடைசி வரைக்கும் அப்படியே இருக்கும் என்பதை, நான் சிந்திக்கத் தவறி விட்டேன். வனஜாவை விட, பேரழகாகத் தெரிந்த அத்தனை பெண்களும், இப்போது, எனக்கு அலுத்துப் போயிருந்தனர்.

திரும்பி வரும்போது, “இதுக்குத்தான் அத்தனை பயந்தீங்களா?” என கேட்டாள், வனஜா. குரலில் கேலி இல்லை. அதுவே குற்றவுணர்வாக இருந்தது.

“பசங்க ஞாபகம் இருக்குன்னு சொன்னாங்களே, என்ன ஞாபகம் இருக்கும்ன்னு தெரியலயே. அதே யோசனை தான் அப்பத்திலேருந்து.”

பார்வையை வனஜாவின் புறமாக திருப்பும் தைரியம் இல்லாமல், பாதையிலேயே பத்திரமாக வைத்திருந்தேன். அதே பார்வையை, அவள் என் மீது அழுத்தமாய் பதித்தாள்.

“கண்ணியம்கிறது யாரும் பார்க்காம தப்பு செய்றதும் இல்லை. யார் பார்த்தா என்னன்னு தப்பு செய்றதும் இல்லை. அது ஒரு சுயக்கட்டுப்பாடு. பார்த்தா என்னாகப் போகுது, பழகினா என்னாகப் போகுதுங்கறது எல்லாமே, உங்க கண்ணியத்துக்கு நீங்களே வச்சுகிற விலை.

“வித்துட்ட பிறகு, அதைப் பார்த்து பார்த்து ஆற்றாமை கொள்வதால், எதுவுமே திரும்பாது. அன்றைக்கு, உங்களை தண்டிக்கச் சொல்லி என்னை அத்தனை பேரும் திட்டும்போது, நான் உங்களை கண்டிக்க மட்டும்தான் செய்தேன். ஏன்னா, உங்க மனசாட்சி நிமிர்ந்து உட்காரும் போது, கண்டிப்பா நீங்க குனிஞ்சுதான் நிற்பீங்கன்னு தெரியும்.

“வயசான பிறகு வர்ற பக்குவத்துக்கெல்லாம், வெகுமதி கிடைக்காது. அனுபவிச்சுத்தான் ஆகணும். இப்போ உங்களுக்கு வந்திருக்கிற தவிப்பெல்லாம் நுட்பமான தண்டனை. இதைச் சொல்லி புரிய வைக்க முடியாது. உங்க இடத்துல நின்னு பார்க்கணும்.

“கண்ணியமும், மரியாதையும் கடைச்சரக்கு இல்ல. அது நடவடிக்கை. குழந்தைங்ககிட்ட என்ன தெரியும்ன்னு கேட்கவும் முடியாது; எதுவரை தெரியும்ன்னு விசாரிக்கவும் முடியாது,” என்று சொல்லி, என்னை ஒரு பார்வை பார்த்தாள்.

நான் அவளை பார்க்கவே வழியற்று, பாதையிலேயே பழுதாகிக் கிடந்தேன்.

‘முன்பெல்லாம் எனக்கு பார்க்கவே பிடிக்கவில்லை…’ என்று சொல்லிய வனஜாவை, இப்போதெல்லாம் என்னால் பார்க்கவே முடியவில்லை என்பது தான் இறுதி தீர்ப்பு.

-வாரமலர் (Jun 07, 2022)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *