பார்வைகள் பலவிதம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 22, 2023
பார்வையிட்டோர்: 1,681 
 
 

சிலருக்கு உள் பார்வை. சிலருக்கு வெளி பார்வை. உள் பார்வை உள்ள பெண்களை எடுத்துக்கொண்டால் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது, உறவினர்களை நேசித்து ருசியாக சமைத்து பறிமாறுவது, கணவன், குழந்தைகள், பெரியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நேசிப்பது. கோபம், பொறாமை, பேராசை, குசலம் அறவே இல்லாமல் யதார்த்தமாக தம் முன் உள்ள வேலை எதுவாயினும் தானே செய்வது என்று நல்ல பெயரெடுப்பர்.

வெளியில் செல்லும் போது தம்மை ஓரளவே அலங்கரித்துக்கொள்வர். முக்கியமாக மேக்கப் போடாமல் இயல்பாக காட்சியளிப்பர். வேலைக்கு செல்வதை விட குடும்ப வேலைகளை கவனிப்பது, வேலைக்கு சென்றாலும் சம்பாதிப்பதை எதிர்காலத்துக்காக செலவைக்குறைத்து சேமிப்பது என என்றும் சிரித்த முகத்துடனேயே வலம் வருவர்.

வெளி பார்வை கொண்ட பெண்களைப்பொறுத்தவரை வெளியில் செல்லும்போது சுறு, சுறுப்பாகி அதிகமாக அலங்கரித்துக்கொண்டு பிறர் பார்வை தம்மீது பட வேண்டுமென எண்ணம் கொண்டிருப்பர். புதிய ரக ஆடைகளை முதலில் உலகுக்கு அறிமுகம் செய்யும் மாடல் அழகி போல் தெரிவர். வேலைக்கு செல்வதும் மாத சம்பளத்தை கையில் கிடைத்தவுடன் செலவழித்து விடுவதுமென இருப்பர்.

வீட்டில் சமைப்பதை விட ஹோட்டலில் சாப்பிவதும், வீடு, வாசல் பெறுக்குவதில், துணி துவைப்பதில், சமைப்பதில், பாத்திரம் தேய்ப்பதில் ஈடுபாடு இல்லாமலும் இருப்பர். இவர்களுக்கு அம்மா அல்லது மாமியார் மேற்கண்ட வேலைகளை செய்யும் நிலையோ, அவர்கள் இல்லாத தனிக்குடித்தனம் என்றால் வேலைக்கார அம்மாவோதான் தேவைப்படுவர்.

இன்னும் ஒருபடி மேலே போய் குழந்தைகளைக்கூட தூக்காமல் வேலைக்கார பெண்ணுடன் ஒட்டிக்கொண்டும், அம்மாவிடம் பயந்து கொண்டும் வரும் நிலை பரிதாபமாக இருக்கும். முகத்தை சிடு, சிடு என கோபமாகவே வைத்துக்கொள்வர். அன்பு எந்தக்கடையில் என்ன விலை? என்று கேட்பர். குடும்பத்தில் கணவர் பெயரை விட இவர்கள் பெயரே முன் நிற்கும். எதற்கும் இவர்களே முடிவெடுத்து முன் நிற்பர்.

“பிரகல்யா வீட்ல நேத்தைக்கு ஒரே பிரலயம் தெரியுமோ…?”

“அப்படியா..? அவ சின்ன விசயத்தை பெரிதாக்கிடுவாளே…?”

“அவ மாமியார் மொத்த துணியும் தண்ணில ஊற வச்சுட்டா…இவ சேலைல மாமியாரோட புது சேலை சாயம் பட்டு படிஞ்சிடுச்சு…துவைச்சா இல்லேன்னா ட்ரை வாஸ் போட்டா போயிடும். அதுக்கு போயி சேலைக்கு பதிலா மாமியாரை துவைச்சு காயப்போட்டுட்டா…? அந்தம்மா கோவிச்சுட்டு சாப்பிடாம இருந்து, மயக்கம் வந்து, சுகர் வேற ஏறி, இன்னைக்கு ஹாஸ்பிடல்ல ஐம்பதாயிரம் பில் கட்டிட்டு வந்தவ ஆபீஸ்க்கு லீவு போட்டுட்டு மாமியாரை பார்க்க வர்ற சொந்தங்களுக்கு டீ போட்டு கொடுத்திட்டிருக்கா… பேசாம விட்டிருந்தா இந்த ஐம்பதாயிரத்துக்கு பத்து சேலை எடுத்திருக்கலாம். தவிர லீவு, பழி சொல் வேற. இப்ப இருக்கிற தலைமுறை விளைவை பத்தி சிந்திக்கிறதே இல்லை”என பேசிக்கொண்டனர் பிரகல்யா வேலை பார்க்கும் அலுவலக சக மூத்த ஊழியர்கள்.

‘அதிகம் சம்பாதித்து செலவு செய்கிறவர்களை விட அளவாக சம்பாதித்து சிக்கனமாக செலவு செய்கிறவர்களும், கோபத்தையும், பேராசையையும், பொறாமையையும் சேமிக்காமலும், செலவு செய்யாமலும் இருப்பவர்களே நிம்மதியாக வாழ்பவர்கள்’ என்பதை புரிந்து கொண்டதோடு தன் வெளி பார்வையை உள் பார்வையாக மாற்றிக்கொண்டு நிம்மதியானாள் பிரகல்யா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *