எனக்கு கல்யாணம் கைகூடி விட்டது. இனி யாரும் என்னை கேலியாக பார்க்க முடியாது. அடுத்தவர்களுடைய கணவன்மார்கள் தரிசு நிலம் என்று உழமுடியாது. இடக்கு பேச்சுக்கள் எறிய முடியாது. இனி இந்த மீன் மற்றவர்களின் துhண்டிலில் மாட்டாது! என்று இரைந்து கத்த வேண்டும் போல் இருந்தது சுனந்தினிக்கு.
முப்பத்தைந்து வயதிற்கு மேல் அவள் கல்யாண அப்ளிகேசன் பரிசீலிக்கப்பட்டுவிட்டதே.
நேற்று தந்தையுடன் பெண் பார்க்க வந்த மதன்தான் எத்தனை அமைதியானவர் கண்களில் சதா கனவுகளுடன் புன்முறுவலோடு அமர்ந்திருந்தாரே தவிர ஒரு வார்த்தை கூட பேசவில்லையே.
பெற்றவர்களுக்கு அடங்கிய பிள்ளையோ இருந்தால் என்ன, இத்தனை வயதுக்கு மேல் வரதட்சணையே வேண்டாம் என்று சொல்கிற பெருந்தன்மை கொண்ட மனிதர்கள் எங்கே கிடைப்பார்கள்?
இத்தனை நாட்களாக அவள் ஊராரிடமும், உறவினரிடமும் பட்ட அவஸ்தைகளுக்கு ஒரு விடிவு காலம் ஏற்பட்டு விட்டது.
ஒருவித நிம்மதியுடன் எழுந்து குளிக்கச் சென்றாள்.
உடலில் அவளறியாமலேயே ஒரு உல்லாசம். உதட்டில் அதன் வெளிப்பாடு “காவியம் பாடவா தென்றலே.”
மகளின் மகிழ்ச்சியிலே அவள் சம்மதம் அறிந்த பெற்றோர்கள் நிம்மதி அடைந்தார்கள். வசதியான இடமாச்சே விட மனம் வருமா?
“என்னங்க . . நம்ம பையனோட நிலையைப் பற்றி பெண் வீட்டாரிடம் சொல்லித்தானே பேசினீர்கள்’ ஜனகம் கவலையோடு கேட்டாள்.
“இதப் பாருடி, எதையாவது உளறிகொட்டி காரியத்தைக் கெடுத்திடாதே! அதெல்லாம் நான் சொல்லலே. கல்யாணம் ஆனால் குணமாயிடுவான்னுதான் டாக்டரே சொல்லி இருக்காரில்லே” – கோதண்டம் கடுப்படித்தார்.
“அதுக்காக ஆயிரம் ஆயிரமா ஆசைகளை சுமந்துகிட்டு எதிர்பார்ப்போட வர பெண்கிட்டே இந்த விஷயம் எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்துமோ இந்த அதிர்ச்சி.” பயந்து நடுங்கினாள் ஜனகம்.
“ஆமாண்டி, அவளென்ன சின்னஞ்சிரிசா, முப்பத்தைந்து வயதாகிறது யாரும் இதுவரை பெண் கேட்டுக்கூட வரலே. ஏதோ கல்யாணம்னு பேரு போறியா’ அலட்சியமாக கூறினார் மதனின் தந்தை கோதண்டபாணி.
ஜனகத்துக்கு மட்டும் உறுத்தலாக இருந்தது ஏதாவது செய்தாக வேண்டும் என்ற அவசரம் மனதை உந்தியது.
“மிஸ் சுனந்தினி உங்களைப் பார்க்க யாரோ ஒரு அம்மா வந்திருக்காங்க.!” கிளார்க் சுந்தரம் சொன்னபோது சுனந்தினி சிந்தனையோடு எழுந்து போனாள்.
“வாம்மா, நான் மதனோட அம்மா, உன்னிடம் தனியாக இரண்டு நிமிஷம் பேசணும்!”
“வாங்க அம்மா, அந்த மரத்தடியில் போய் பேசலாம்!” அழைத்துப் போனாள் சுநந்தினி.
சிறிது நேரம் யோசனை கலந்த மவுனத்துக்குப் பிறகு ஜனகம் பேச ஆரம்பித்தாள்.
“அம்மா, சுநந்தினி! என் பையன் மதன் ஒரு மன நோயாளி. இது எங்கள் குடும்பத்தின் பரம்பரை நோய். முதலில் அவன் சித்தப்பாவுக்கு இப்படித்தான் இருந்தது. கல்யாணம் ஆனதும் சரியாகி விட்டது. இவனுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எண்ணி என் கணவர் முயற்சிக்கிறார்.
அவர் முயற்சியை நான் தப்புன்னு சொல்ல வரலே. ஆனால் பையனுடைய கண்டிஷனை பெண் வீட்டுக்காரர்களான உங்களிடம் சொல்லித்தான் சம்பந்தம் பேசணும்னு நான் நினைக்கிறேன் ஒரு வேளை திருமணத்திற்கு பிறகும் அவன் சரியாகலைன்னா . . . தெரிஞ்சு மனப் பூர்வமா ஏத்துக்கிட்டா பரவாயில்லை. தெரியாம ” இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா? ஏன்னா நீயும் என்னைப் போல ஒரு பெண். எங்களுக்கு பணம் இருக்கு என்பதற்காக உன் போன்ற அப்பாவி பெண்ணுக்கு துரோகம் செய்யக் கூடாது அல்லவா?
நீ நல்லா யோசிச்சு உன் முடிவை சொல்லும்மா. ஆனால் ஒரு விஷயம் நான் வந்து என் பிள்ளையைப் பற்றிய விவரத்தை சொன்னது பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம் முக்கியமாக என் கணவருக்குத் தெரியக் கூடாது. நான் வரேம்மா.”
சுனந்தினியின் பதிலுக்கு காத்திராமல் ஜனகம் விடுவிடென்று நடந்தாள்.
ஜனகத்தின் மனிதாபிமான மிக்க கவலையைக் கேட்டு அசந்து போய் நின்றாள் சுனந்தினி.
எந்தத் தாயாரும் தன் வயிற்றில் பிறந்த பிறப்பின் குறைகளை தெரிந்து வைத்திருந்தாலும் அதை மறைத்து விட்டுப் பயன் தேட முயல்வார்கள் ஆனால் . . . அந்தக் குறையில் பயன் வேண்டாத ஒரு தாயாக நின்று தன்னை எச்சரித்து விட்டுப் போகும் ஜனகத்தை நேர்மை எண்ணங்கள் கொண்ட சராசரிக்கு மேம்பட்ட பெண்மணியாக நினைத்து வியப்புற்றாள்.
அலுவலகம் முடிந்து வீட்டை அடைந்தாள் சுனந்தினி. உள்ளே பூகம்பம் வெடித்துக் கெண்டிருந்தது.
“என்னத் திமிர், பைத்தியக்கார பிள்ளையை நம் தலையில் கட்டப் பார்த்தார்கள். நல்ல வேளை நாம கும்பிடற சாமிதான் நம்மளை காப்பாற்றி இருக்கிறது. வரதட்சணை வேண்டாம்னு சொன்னப்பவே நான் சந்தேகப்பட்டேன். கல்யாணம் ஆகாவிட்டாலும் பரவாயில்லை. அதற்காக தெரிந்தே கிணற்றில் விழுவதா?” சப்தமிட்டுக் கொண்டிருந்தார் சுனந்தினியின் தகப்பனார்.
“அந்த ஆளை விடுங்க. பிள்ளையை பெற்றவதானே அந்த அம்மா. அவ அன்னைக்கு பெண் பார்க்க வராம இருந்தப்பவே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இன்னொரு பெண்ணோட வாழ்க்கையை பணயம் வைக்கிறோமேன்னு நெஞ்சிலே ஈரமில்லையே சேச்சே! பணம் இருந்துட்டா என்ன வாழ்க்கை நிறைஞ்சிடுமா? இந்த சம்பந்தம் பிடிக்கலேன்னு உடனே எழுதுங்க!” குமுறினாள்.
அதற்குள் சுனந்தினி குறுக்கிட்டாள்.
“அம்மா, அவசரப்படாதே! நான் அந்த மதனைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்றாள்.
“ஏண்டி, உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு அவனைக் கட்டிக்கிட்டு என்ன சுகம் அடைய முடியும்னு நினைக்கிறே வாழ்க்கையை வீணடிச்சுக்காதே வீணா பிடிவாதம் பிடிக்காதே” புத்திமதி கூறினாள் தாய்.
“அம்மா, இனிமேலும் எனக்கு நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி வரன் வரும்னு எதிர்பார்க்கிறீர்களா? வராது. ஏதோ ஒரு குறைபாட்டுடன்தான் கிட்டும் மற்றதை சரிக்கட்டிக்கிட்டுப் போறது தான் என் பொறுப்புன்னு நான் நினைக்கிறேன்.
நீங்க நினைக்கிற மாதிரி தெரிந்தோ, ஏமாந்தோ நான் இதுக்கு ஒத்துக்கலே! தெரிஞ்சுதான் ஒத்துக்கிறேன், மற்றவர்களின் கேலிப் பார்வைகளிலிருந்தும், தவறான பார்வைகளிலிருந்தும் தப்பிக்க இந்த கல்யாணம் எனக்கு போர்வையாக பயன்படட்டுமே என்றுதான் துணிகிறேன்.
என் அதிர்ஷ்டம் அவர் குணமடைந்தால் தியாகத்தின் வெற்றியாக இருக்கட்டுமே!
அந்த மனிதரின் நேர்மை எண்ணம் கொண்ட தாய்க்காக நான் செய்கிற தியாகமாக இருக்கட்டுமே. இல்லை என் சுயநலமாகவே இருக்கட்டுமே என் விருப்பத்தை தயவு செய்து பூர்த்தி செய்யுங்கள் அப்பா!” தீர்மானத்துடன் சொன்னாள் சுனந்தினி.
“சரி, செய் என்று எங்கள் வாயால் சொல்ல பயமாக இருக்கம்மா! உன்னிஷ்டம் எப்படியோ அப்படியே செய். இவ்விஷயத்தில் நீ ஒரு தீர்மானத்தோடு இருக்கிறாய், இதற்கு நாங்கள் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்?”
கனத்த மனத்தோடு தாயும், தந்தையும் கல்யாண ஏற்பாடுகளை கவனிக்க முற்பட்டார்கள்.
– தேவி 7-8-1991