பார்க்கவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 8,701 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்தக் கதையைப்பற்றி, வரிக்குவர் ஒரு அலசல் விமர்சனம் சி. சு. செல்லப்பா அவர்கள் தொடராக சுதேசமித்ரன் வாரப்பதிப்பில், மூன்று இதழ்களில் எழுதினார். ஆனால் அதுமட்டும் இந்தக் கதையைப் படிக்க சிபாரிசு ஆகாது என்று அறிவேன். ஆனால், இந்தத் தொகுப்பின் சம்பந்தமாக, முப்பது வருட இடைவெளிக்குப் பின் இந்தக் கதையை மீண்டும் படிக்க நேரிட்ட போது, கலைக்க முடியாத விதியின் கதியே போன்ற, இதன் படிப்படியான முன்னேற்றமும், கதை முடிவில், கதைக்கே முத்தாய்ப்பாக அமையும் இரண்டு வார்த்தைகளும், அவைகளின் எதிர்ப்பாராத தன்மையும் அவைதரும் சாந்தமும்-சாந்தியும்

ஐயா, நானே என்மேல் பூப்போட்டுக் கொள் கிறேன் என்கிற குற்றத்தையும் கேலியையும் இந்தக் கதைக்காக ஏற்கத் துணிந்து விட்டேன் என்பதே இந்தக் கதைக்குச் சிபாரிசு. ஒன்று சொல்கிறேன், நம்பினாலும், கம்பாவிடினும். ஒரு கட்டத்தின் பிறகு கதை தானே தன்னைச் சொல்லிக் கொண்டு போகும் வேகத்தில் எல்லாமே சுயப்பிரக்ஞையின் சாதனை அல்ல, ஸ்ருதி பிசகாமல் இருந்தால், சுயப்ரக்ஞை பிதற்ற வில்லை என்று தெரிகிறது. அதுவே சரி, ஸ்ருதியே கதையைத் தாங்கிக்கொண்டு போகிறது.


“பார்க்கவி! பார்க்கவி!!”

பார்க்கவி அசைந்துகூடக் கொடுக்கவில்லை. தலையணை மீது ஐந்து தலை நாகம் படம் விரித்தாற் போல் கூந்தல் ஐந்து பிரிகளாய் அவிழ்க்து அலை மோதிற்று.

“அடி நாட்டுப் பெண்ணே!”

(நாறப் பொண்னே!)

பார்க்கவி மல்லாந்து படுத்தபடி கால் கட்டைவிரலி லிருந்து கழுத்து வரை தன் உடலைக் கண்ணோட்டம் விட முயன்றாள். தாக்கத்தில் மேலாக்கு இடுப்புவரை இறங்கி விட்டது. ஆனால் இன்னும் அவள் சரி பண்ணிக்கொள்ள ஆரம்பிக்கக்கூட இல்லை. இப்பொழுது கிடக்கையில் அங்கங்கள் தளர்ந்து வீழ்ந்து கிடக்கும் இதவில் ஒரு விரலைக்கூட அசைக்க மனமில்லை.

“அடீ ராணியம்மா காப்பி கலந்தாச்சு. எழுந்திருக்க மனசு பண்ணலாமே!”

கரும் பலகையில் ஆணியால் கோடு இழுத்தாற்போல் கிறிச்சிட்டு, கீழிருந்து அக்குரல் எட்டிற்று. பார்க்கவிக்குச் செவி நரம்புகள் துடித்தன. பல்லைக் கடித்துக் கண்களை இறுக முடிக் கொண்டாள். இன்னிக்கு என்ன வேணுமானாலும் ஆகட்டும்; நான் இறங்கப் போறதில்லை. இந்த வீட்டில் இது வரைக்கும் நான் போடறபோதே, ஆறவெச்ச காப்பி நான் குடிச்சதில்லையாக்கும். இன்னிக்குன்னு நாட்டுப் பெண் மேலே அலாதி அக்குசு வந்திருக்காக்கும்! கத்துங்கோ, கத்துங்கே கன்னாக் கத்துங்கோ. இனி என்ன பயம் பயந்து பயந்து செத்ததுக்கெல்லாம் பலனை அனுபவிச்சாச்சு. இனிமே பயப்படாமே போற ஆபத்தில் போனாப் போறேன்- பார் பார், இதோ வரார்-இந்தச் சரீரத்தைத் தாக்க முடியாமெ தாக்கிண்டு, புஸ் புஸ்ன்னு கொல்லன் பட்றைத் துருத்தி மாதிரி மூச்சு விட்டுண்டு என்னை விரட்டிண்டு வராட்டால்தான் என்ன? மார்க்கபமோ சதங்கையாய்க் குலுங்குகிறது. என் மேலே பரிவுதான்ம் என்ன தட்டுக் கெட்டுப் போச்சு? நான் கூப்பிடறேன், நீ வரவில்லையா என்கிற ஹடம்தானேl-‘

அவசர அவசரமாய் ஆடையைச் சரிப்படுத்திக் கொள்கையிலேயே அறைக்கதவு படிரெனத் திறந்தது. கிலை வாசல் மேல் சாய்ந்தபடி மாமியார் கின்றார் ஏறி வந்த சிரமம் தாளவில்லை. மூச்சு இரைத்தது.

பார்க்கவி எழ முயன்றாள். தள்ளிவிட்டது.

வந்தது வரட்டும், நான் இருக்கறபடிதான் இருக்கப் போறேன் என்றெல்லாம் தனக்குள் வீறாப்பு எண்ண லாமே தவிர, கேரில் காண்கையில் நெஞ்சு அப்படியே சுருங்கி விடறது! ஏனோ தெரியல்லே. பார்க்கவிக்குத் தன் மேலேயே கொள்ளை ஆத்திரம் வந்தது. அம்மாவின் தோற்றத்திற்கே பிறரை வாயடைக்கும் ஒரு ப்ரஸன்னம் இருந்தது. தாண்மேல் சாய்ந்து ஒரு காலை நீட்டி உட்கார்ந்தபடி தயிரைக் கடைந்து கொண்டே, என்னடா சொல்ல வரே, மா விளக்கு மா திங்கற மாதிரி வாயைக் குதப்பிண்டு’ என்று கேட்டதுதான் தாமதம், “ஒண்னுமில்லேம்மா!’ என்று அவள் கணவன் அவசரமாய் வெளியே போய் போய்விடுவான். ஒரு நாளா, இரண்டு, காளா? இம்மாதிரி, அவளுக்கு நினைவு தெரிஞ்சு இந்த அஞ்சு வருஷமா இரும்புக் கோலால் ஆண்டு ஆண்டு, ஈரமும் கயமும் இத்த வீட்டில் வறண்டு போய் முதலுக்கே மோசமா ஆயிடுத்து.

“சேசே இப்பொ அவசரம் என்ன? படுத்திண்டிரு. இன்னும் பொழுது விடியல்லே, சூரியன் புறப்பட்டு ஒரு மணி கேரம்தான் ஆறது-‘

‘இல்லேம்மா, விடிவேளையில்ே கண்ணை அசத் திடுத்து- எழவொட்டாமல் அவள் உடல் மறுபடியும் அவளைக் கீழே தள்ளிற்று.

‘ஊ-ஹாம், நீ சொன்னால் நான் கேட்பேனா என்ன? இன்னும் கொஞ்ச நாழி படுத்திண்டிரு; அதுக்குள்ளேயும் வந்தூடும்.’

“என்னது?’ பார்க்கவிக்குப் புரியவில்லை.

‘சந்தனப் பேலாவும் கொட்டுமேளமும் சொல்லியனுப் பிச்சிருக்கேன், உன்னைப் பள்ளியெழுப்ப.”

காக்கிலிருந்து ஒருங்கே குதிக்க நானூறு வார்த்தைகள் எண்ணங்கள், விஷயங்கள், உணர்ச்சிகள் தவித்தன. ஆனால் பார்க்கவிக்கு வாயடைத்து விட்டது.

“என்னடி, முழி முழின்னு முழிதானிருக்குன்னு முழிக் கறே? கொம்பேறு மூக்கி’ சவுக்கு நுனியில் கட்டிய ஈயக் குண்டுபோல் வார்த்தைகள் திடீரெனத் தெறிந்தன. நீ வந்ததே மொதக்கொண்டு வீடு சுபிக்ஷமா யிருக்கேன்னு மூதேவி வேறு கொண்டாடியாறதோ? இந்தத் தள்ளாத வயசுலே, என்னை ஒக்காத்தி வெச்சுத் தாங்கற நாளுலே, நான் பட்டதெல்லாம் போறாதுன்னு, நான் போட்டுவெச்ச காப்பியைக் குடிக்கறதுக்கு நானே மாடியேறிக் கூப்பிடணு மாக்கும். தவிடு திங்கறதுலே ஒய்யாரம் வேறே!’

சரி, இன்னிக்கு முழிச்ச வேளை சரியில்லே, இன்னிப் பொழுது நல்ல போதாப் போகனும், இன்னிக்குத்தான்னு உடம்பு என் வசத்துலேயில்லே.

பார்க்கவி பதில் பேசவில்லை. படுக்கையைச் சுருட்டி விட்டு எழுந்து கின்றாள். மாமியார் வாயிலை அடைத்துக் கொண்டு கின்றாள். பறங்கிப்பழ மேனி. தாடைச் சதையும் கழுத்துச் சதையும் தளர்ந்து இறங்கி, பேச்சில் வாயசைகை யில் தாமும் ஆடின. சிங்கப்பிடரி போல் கூந்தல், முப்பு மஞ்சள் பூத்து மயிர்க் கால்களிலிருந்து முரடிக்கொண்டு எழுந்து ஓடிற்று. அம்மா மஞ்சள் இழந்து எத்தனையோ வருடங்கள், அவள் இந்த வீட்டுக்குள் புகுவதற்கு முன்னா லேயே- ஆகிவிட்டன. ஆனால் அவள் முகத்தில் இன்னும் லகடிமி பெருகினாள். கைராசி இன்னமும் விளங்கிக் கொண்டுதாணிருந்தது. இன்னமும் அவர் கையில் குழந்தை யைக் கொடுத்து வாங்கிக் கொண்டு போய்க் கொண்டு தானிருந்தார்கள். தன்னைக் கண்டால் தான் இப்படி. அம்மா சின்ன வயதில் ரொம்பவும் அழகாய்த்தானிருந்திருப் பார். ஆனால், பாவம், பற்கள்தாம் நிற்கவில்லை. வெறும் வாயைமென்று கொண்டிருப்பார்.

பார்க்கவி உடம்பை ஒடுக்கிக் கொண்டு சுவரோரமாய் நகர்ந்து வாசலைத் தாண்டினாள். அதாண்டி கேட்டேன்! பல்லைத் தேய்க்காத பவிஷோடு மேலே இடிச்சுண்டே போ! என்னா, உனக்கு இன்னும் பொழுது விடியாவிட்டாலும் வெள்ளி முளைக்கறதுக்கு முன்னாலே நான் ஸ்நானம் பண் னிட்டு நிக்கறேனே, உனக்குப் பொறுக்குமா? இந்த ஒரு வேளை சோத்தைத் தானே பொங்கித் தின்கிற மாமியார், அதையும் காறாமல் ஏன் தின்கணும்? ஊஹூம்-மண்டை வெடிச்சுடாதா?

அவர் மேல் தன் காற்றுக்கூடப் படவில்லை என்று அவளுக்குத் தெரியும். தெரிந்து யார் பதில் சொல்றது? தர்க்கந்தான் மிஞ்சும். படிப்படியாய்ப் பார்க்கவி மாடி இறங்கினாள். பின்னாலேயே அவளை முழுங்கிவிடும் பசியோடு அம்மாவின் பார்வை அவள் முதுகைத் துளைப் பதை அவள் உணர்வாள்.

இந்தப்பார்வைதான் அம்மாவின் வாயைவிட எனக்குத் திகிலாயிருக்கு. என் உடம்பின் ஒரொரு அசைவையும், செய்கையையும் இவர் இப்படித் தொடர்ந்து கவனிக் கறப்போ என்னுடைய தப்புகள் மாத்திரம் என்மேல் ஈட்டிகள் மாதிரி தலை நீட்டிக்கொண்டு கிக்கறதுகள். கான் என்ன செய்வேன்? என்னிக்கு நான் வாய்விட்டு அலறிடுவேனோ உதட்டைக் கடிச்சு அந்த உளறல் கத் தலை உள்ளுக்குத் தள்ளறத்துக்குள்ளே உன் பாடு என் பாடாயிடறது. அந்த அசதி தாங்காமல் ஒவ்வொரு சமயம் சுவத்துலே சாஞ்சுடறேன். இந்த வேட்டைப் பார்வையால் எனக்கு என்னிக்குப் பைத்தியம் புடிச்சுடுமோ? இல்லாட்டா ஏற்கெனவே புடிச்சுடுத்தோ? ஆனால் எனக்குப் புடிச்சால் எனக்குத் தெரியுமோ…?’

தவலையைத் தூக்கிக்கொண்டு பார்க்கவி கிணற் றடிக்குச் சென்றாள்.

என்னிக்குத்தான் எனக்கு விடியுமோ? இன்னிக்கு முழிச்ச வேளை சரியில்லே. எதன் முகத்துலே முழிச்சேன்? வழக்கப்படி பூ முகத்துலே முழிக்கல்லையா? பூ முகத்துலே முழிக்கணும்னு தானே தினம் ஜன்னலோரம் படுக்கையைப் போட்டுக்கறேன். பகவான் பூவைத்தான் பிடுங்கிண்டுட் டார்னா, பூ முகத்துலேகூட முழிக்கக் கூடாதுன்னு இருக்கா? ஆனால் என் மாதிரி ஆயிட்டவாளுக்கெல்லாம் நல்ல சகுனம், கெட்ட சகுனம் எல்லாம் ஏது? நாங்களே தான் பெரிய சகுனமாயிடறோமே, யுேம் கானுமடி, எதிரும் புதிருமடி’ன்னு அம்மா பாடற மாதிரி…’

இருந்தாலும் அவளுக்குப் பூவின் மேல் அபரிமிதமான ஆசைதான். (அதனாலேயே அதை அவள் இழந்துவிட் டாளோ?) இந்த ஆசை சுயம் மாத்திரம் அல்ல: அதில் கொஞ்சம் பரம்பரை வாசனையும் கலந்திருந்தது. அவள் தகப்பனார் ஒரு கந்தவனத்தைப் பார்வையிட்டுக் கொண் டிருந்தார். தோட்டத்தின் கடுவில் பர்ணசாலைபோல் ஒரு ஒலைக் குடிசை. ராத்திரி வேளையில் ஜில் காற்று ஆளைத் தேவலோகத்துக்குக் கொண்டு போய்விடும்.

‘அப்பா கயிற் றுக் கட்டிலைப் போட்டுண்டு உட்கார்க் துடுவார். அப்பா தாடி வளர்த்துண்டிருந்தார். ஏனோ தெரியல்லே. தனக்குள்ளே ரிஷின்னு தியானமோ? கரு கருன்னு தொப்புள் வரையிறக்கி மாலைக் காற்றில், தாடி ஜோரா வெட்டி வேர்த் தட்டிமாதிரி மெதுவா அசைஞ் சுண்டிருக்கும். அப்போ வாத்தியத்தில் ஸ்வரப்பற்களை அமுக்கின மாதிரி ஒரு ஒரு சமயம் விதவிதமான பூ வாசனை ஒண்ணும் பின்னாலே ஒண்னு காற்று வாக்கிலே கிளம்பும். அப்பா தாடியை உருவிக் கொண்டே ஒவ்வொண்ணா ரொம்ப துட்பமான அடையாளம் கூடத் தப்பிப் போகாமல் சொல்வார். பூ விஷயத்தில் அப்பாவுக்கு மிஞ்சித் தெரிஞ்சுக்க ஒண்னுமேயில்லை. பூ மாத்திரம் என்ன? எதைப் பற்றியும் அவரால் அப்படிப் பேச முடியும்.’

அதுமாதிரி ஒரு சமயம்:

“அதோ அந்தப் பூ என்னோடே பேசறதும்மா அதோ, அந்தச் சிவப்புலே வரி வரியா வெள்ளைக்கோடு போட்டிருக்கே ஆ, அதான்’

‘என்னப்பா பேசறது?’ அப்போ எல்லாம் அவளுக்கு அப்பா வாக்கு வேதவாக்கு. போகப் போகத்தானே தெரியறது. யார் யார் வார்த்தை எவ்வெவ்வளவு எடை தாங்கும்னு ஆன்ால் அவர் வாயை வெறுமெனக் கிண்டினா லும் அவர் எப்பவும் சுவாரஸ்யமாயிருப்பார்.

அவள் கேள்வி காதில் விழாததுபோல் அவர் இருக் தார்.

“பூ என்னப்பா சொல்றது?’

“என்னத்தைச் சொல்றதுன்னா என்னத்தைச் சொல்றது?’ ஒரு முறைக்கு மறுமுறை கேட்டால் அவருக்குக் கோபம் வந்து விடும். உங்கள் மாதிரியெல்லாம் உள்நாக்கு தெரிய வாயைத் திறந்து வளவளன்னு வம்பளங் தால் தான் பேச்சா? பேச்சுன்னா பேச்சு என்று அர்த்த மில்லை, பேச்சுன்னா பாஷை என்று அர்த்தம்.’

‘இப்போ இதன் பாஷை என்ன பாஷை?”

“அது அதுக்கு அதனதன் பாஷை உண்டு.’

‘இப்போ இதன் பாஷை என்ன பாஷை?”

‘பூவின் பாஷை அதன் மணம்தான்.’

‘மணக்காத பூக்கள் இருக்கே!”

‘மணக்காத பூக்களின் பாஷை அவைகளின் அழகு தான்.’

‘அழகில்லாத பூக்கள்?”

“அழகில்லாட்டா மணமிருக்கும். மணமில்லாட்டா அழகிருக்கும்.’

‘மணமுமில்லே அழகுமில்லே, அப்போ?’’

‘அது பூத்திருக்கே அதான் அதன் பாவுை.”

“பூக்காத பூக்களைப்பற்றி என்ன சொல்றேள்?”

சட்டென ஒரு ஊமைத்தனம் அவர்களிடையே தீடீ ரெனத் தேங்கிற்று. அதனால் தான் என்னடா அப்பா பதில் பேசலையே என்று அவள் தலை நிமிர்ந்து பார்த் தாள். அவர் அவளை ஒரு தினுசாய்ப் பார்த்துக் கொண் டிருந்தார். விழிகள் தமுலாய் மாறியிருந்தன. சற்று நேரங் கழித்து அவர் வார்த்தைகள் சாதாரணமாய் வந்தாலும் அந்தக் குரலைக் கேட்க அவளுக்குப் பயமா யிருந்தது, ரிஷியின் சாபம் போல்.

‘பார்க்கவி, நீ ஒரு அபஸ்மாரம். ஆமாம், சந்தேகமே யில்லை. ஒரு அபஸ்மாரம்.’

‘ஏம்பா திடீர்னு கோவிச்சுக்கறேள்? நான் என்ன பண்ணிட்டேன்? ‘

‘நீ இன்னும் ஏன்ன பண்ணனும்? பெண்ணாய்ப் பிறக் துாட்டு பூக்காத பூக்களைப்பற்றி உனக்கு முதலில் எண்ணம் தோணித்தே, அது போதாதா? நீ ஒரு அபஸ்மாரம்.’’

“என்னப்பா நீங்கள் எதோ சொல்லிண்டே வந்தேள். நானும் ஏதோ கேள்வி கேட்டுண்டே வந்தேன். இதில் உங்களுக்கும் எனக்கும் என்ன தர்க்கம்? இதில் என்ன தப்பு’-அவள் உதடுகள் கோப அழுகையில் நடுங்கின.

‘பார்க்கவி! உன்மேல் நான் கோபிக்கவில்லை. ஆனால் கேட்கத் தேன்றினாலும் கேட்கக்கூடாத கேள்விகள் இருக் கின்றன. செய்யக் கூடாத காரியங்கள், சொல்லக்கூடாத வார்த்தைகள், கேட்கக்கூடாத கேள்விகள்-இதில் கான் எதையும் மன்னிச்சுடறேன். ஆனால் தோன்றக்கூடாத எண்ணங்களை எண்ணுபவர்கள் தோன்றவே கூடாது. அப்படித் தோன்றினால் அவர்கள் ஒரு சாபக்கேடு, அவர்களுடைய எண்ணங்களுக்கு அவர்கள் பொறுப்பாளிகளல்ல. ஆனால் அவர்களுடைய எண்ணங்களுக்கு மட்டும் எண்ணியபடியே செயலாகிவிடும் வலிமையுண்டு. அப்படிப் பலிக்கையில் அவர்களைச் சுற்றி எப்பவுமே சூன்யந்தான். அபபோது அவர்கள் ஆபத்தான பிறவிகள் ஆகி விடுகிறார்கள்.’

அவர் விசனத்துடன் பெருமூச்செறிந்தார். எழுந்து போய் எதிரே ஒரு செடியிலிருந்து ஒரு பூவைக் கிள்ளிக் கொண்டு திரும்பிவந்து கட்டிலில் உட்கார்ந்தார்.

“பார்க்கவி, பிறந்தாய்; பிறந்து ஒருவாரத்தில் உன் தாயாரை உருட்டிவிட்டாய்.”

வெடுக்கென ஒரு இதழைப் பிய்த்தெறிந்தார். அது காற்றில் சுழன்று சுழன்று சென்றது.

“உன் அம்மா இருந்த வரைக்கும் ஏதோ லக்ஷ்மி மாதிரியிருந்தாள். அவள் இருந்த வரைக்கும் எனக்கும் எல்லாம் சரியாய்த்தானிருந்தது. அவள் போனாள். நீ வந்தாய். புடிச்சுதய்யா எனக்கும் சனியன்! என் ஆஸ்தி யெல்லாம் நாஸ்தியாச்சு.’

இன்னொரு இதழ் காற்றில் பறந்தது. மூன்று இதழ் களுடன் மூளியாய் அவர் விரல்களிடை திரியும் பூவைப் பார்க்கவே அவளுக்குப் பயமா யிருந்தது. அவர் அவளைப் பார்க்கவில்லை. அவர் தன்னோடு பேசிக்கொண்டிருந்தார். இல்லை. தன் கைப்பூவோடு பேசிக்கொண்டிருந்தார். இது தான் பூவின் பாஷையோ?

“உனக்கு முன் பிறப்பு எனக்கு ரெண்டு பெண்கள் உண்டு. இருந்த மாடு, மனை வீடு; சொத்து எல்லாம் விற்று, கடன்பட்டு, அவர்களைக் கட்டிக்கொடுத்து, அவ ரவர் வீட்டுக்கு அவர்களை ஒட்டியும் விட்டேன். அன்னியிலிருந்து அவர்கள் என்னவானார்கள், இருக்காள செத் தாளா என்று இன்னமும் தெரியாது. அவர்களைப் பார்த்து உனக்கு வயஸாகிற வருஷம் ஆகிறது-‘

இதழ்களைப் பிய்த்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ஊதினார். இரண்டும் இரண்டு திக்காய்ப் பிரிந்து மிதந்து மறைந்தன.

இன்னும் ஒரு இதழ் குற்றுயிராய்க் காம்பில் ஒட்டிக் கொண்டு காற்றில் அலைந்து தவித்தது. .

‘லக்ஷ்மி இருந்த வரைக்கும் ஒரு தம்ளர் ஜலத்தை இடம் விட்டு இடம் நான் நகர்த்தினதில்லை. ஆனால் உனக்கு நான் தாயாகவே இருந்திருக்கிறேன். நீ பச்சைக் குழந்தையாய் இருக்கையில் உன்னை என் முழங்காலில் குப்புறப் போட்டுக் குளிப்பாட்டி யிருக்கிறேன். கடை வாயில் பாலாடையை அமுக்கிவைத்துப் பாலும் எண்ணெயும் கஞ்சியும் கஷாயமும் நானே புகட்டியிருக்கிறேன். இப்போ இங்கேயுேம் நானும் உட்கார்ந்து கொண்டு இதெல்லாம் எப்படி நடந்தது, என்னவாய் கடந்தது என்று கேட்டாலும் நினைத்தாலும் எனக்கே திகைப்பாயிருக்கிறது.’

இன்னிக்கு அப்பா பேச ஆரம்பித்ததை அதுவே முடியற வரைக்கும் பேசி முடிப்பார். இன்னிக் குணம் அவருக்கு அப்படியிருந்தது.

“கடன்காரருக்குப் பயந்து முகமறைவாய் தாடி வளர்த்துக் கொண்டு இடமே மாறி வந்துட்டேன். ஆனால் பாம்புப் பிடாரன் கூடவே பாம்புபோல், கான் எங்கு போனாலும் என்னோடு நீ’.

“பாம்புப் பிடாரனுக்குப் பாம்பாலேயே சாவு என்று ஒரு வசனம் உண்டு. அது வீண் போகாமல், நீ பிறந்த உடனேயே என்னைக் கடித்தாய் விட்டது. நான் சாகவில்லை. ஆனால் உயிரோடு இல்லை. இனிமேல்தான் என்ன கடக்கப் போகிறதென்று தெரியவில்லை. நீயும் ஆளாகி விட்டாய் பூக்காத பூக்களைப்பற்றி என்னோடு தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறாய். சே என் பிழைப்பு ஒரு பிழைப்பா’ காம்போடு இதழை வீசி எறிந்தார். பூமியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பாவுக்கு இன்னிக்கு என்னவோ வெறி, தெரியல்லே! தன்னுடைய தோல்விகளுக் கெல்லாம் அவளைப் பொறுப்பாக்கிக் கொண்டிருந்தார். அது தெரிந்தது.

***

உச்சி வெய்யில் கூட அவ்விடத்தில் தெரியாது; அவ் வளவு குளுமை. அது அவளுடைய ரகஸ்ய இடம். ஆற்றுக் கரை மேட்டில் ஒட்டினாற்போல் கின்ற இரு தென்னங் கன்றுகளிடையில், கெருக்கமாய்ச் செக்தாழம் புதர்கள் சூழ ஒரு ஆள் மல்லாந்து படுக்குமளவு இடம் அங்கு யார் கண்ணுக்கும் புலப்படாது பதுங்கியிருந்தது. புதர்களின் நெருக்கத்தில் அங்கு எப்பவுமே தண்மை தரும் இன்ப இருள் தேங்கிற்று. அங்கு அவள் இப்பொழுது ஒரு புற மாய்ப் படுத்து இருக்கையில் பூமியைப் பொத்திய இடது செவியில், பூமிமேல் அதிரும் அத்தனை சப்தங்களும் படுகையில் பூமியின் நாடியே கேட்பது போலிருந்தது.

இப்பொழுது குபீர் குபிர் என்று கிளம்பும் செந்தாழை யின் மணம் சிந்தனையின் போதையுடன் கலக்கையில் நேரம் போக்கற்று நின்று விட்டது.

இன்னமும் சாப்பிடவில்லை. வயிறு காலி. ஆனாலும் இன்று பசிக்கனும் சாப்பிடணும்னு தோணல்லே,

மாமியார்தான் எடுத்துப்போட்டுக் கொண்டு சாப்பிட்டு விட்டு (‘என் கையும் காலும் என் வசமிருக்கிற வரைக்கும் நான் ஒருத்தர் கையையும் எதிர்பார்க்கப் போற தில்லை. ஈசுவரா, நான் காலும் கையோடு கல்லபடியா வளைய வரத்துலேயே என்னைக் கொண்டு போயிடு. இந்தப் பீடைகளிடம்,காட்டிக் கொடுக்காமே!”) கொல்லை ரேழி வாசல்படி மேல் தலைவைத்துக் காலை நீட்டிக் குறட்டையும்விட ஆரம்பிச்சாச்சு. அங்குக் காற்று சொகம்மா வரும். சமையலறையில் போட்ட சாமான் போட்டபடி கிடக்கும். மாமியாரின் எச்சிற்கலை காஞ்சின் டிருக்கும். எந்த சாமானை மூடியிருக்கோ? திறந்து கிடக்கோ? கிடக்கிறது கிடக்கட்டும்; கான் தானே பாக்கி. சாப்பிட்டாலும் போச்சு. சாப்பிடாட்டாலும் போச்சு. இப்படியே சேர்ந்தாப் போலே ஒரு பத்து நாள் சாப்பிடாமல் இருக்க முடிஞ்சா நான்கூட பாக்கியில்லாமல் ஆயிடு வேன். நான் செத்த அப்புறம் எனக்கென்ன தெரியப் போறது?’

அப்படி நினைத்தாலும் அவளால் பசி தாங்கமுடியாது என்று அவள் நின்கு அறிவாள். இந்த வீட்டுக்கு வந்த பிறகு முதல் பகிரங்கத் தகராறே அதில்தான் ஆரம்பித்தது. மாமியார் போர் மாதிரி சோற்றை உள்ளே இறக்கினா லும் சமயத்தில் மூன்று நாள் சேந்தாப்போல், முழுங்கு ஐலம் கூட இல்லாமல் வேலை செய்துகொண்டு சுறுசுறுப் பாய் வளைய வரமுடியும்.

ஒருமுறை அவள் மாமியார் வம்படிக்க (தெரியாதா அவளைப் பற்றிக் குறைப்பட்டுத்தான்!) பக்கத்திலே எங்கோ போனவர், போனார் போனார் போனாரே!… பேச்சு சுவாரஸ்யத்தில் திரும்பியே வரல்லே. (அதென்ன தான் அப்படி ஒரு பேச்சு இருக்குமோ?. சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிண்டு கேக்கறவாளுக்கு அலுத்துப் போகும்படி…அவாதான் அப்புறம் அவள் கிட்டவந்து சொல்லிடறாளே கடுகோ, பருப்போ கடன் வாங்கப் போறாப்போலே கரண்டியை வீசிண்டுவந்து. அம்மா உத்தரவு இல்லாமல் அவள் ஒரு உப்புக்கல்கூடக் கடன் கொடுக்க முடியாதுன்னு அவாளுக்கே தெரியும்-அவர்கள் எதிரிலேயே அவள் எவ்வளவு அவஸ்தைப் பட்டிருக் கிறாள்! போகட்டும் போகட்டும்; அய்யா குடி அப்பன்குடி அவளுது என்ன தட்டுக் கெட்டுப் போச்சு. எல்லாத்துக்கும் போறவேளை வந்துடுத்து.) கலத்தில் சாதத்தை வைத்துக் கொண்டு அப்போதுதான் ஒரு கவளத்தை வாயில் போட்டாள். வெறும் வயிற்றில் விழுந்ததும் விக்கல் கண்டு விட்டது. அதைச் சமாளிக்கத் தீர்த்தத்தை முழுங்கிக் கொண்டிருந்தாள். அம்மா வந்துவிட்டார். கலத்தில் சோற்றை வெச்சுண்டா காசிக்குப்போன கணவன் கூட வந்துவிடுவான் என்கிற வசனம் வீணாய்ப் போகவா ஏற் படுத்தியிருக்கா?

‘பேஷ் பேஷ் ஒஹோ, பசிக்கிறதோ? பொம்மனாட் டிக்கு அப்படி ஒரு பசியா? சரி இனிமேல் எனக்கு எவ்வளவு மரியாதை கிடைக்கும்னு தெரிஞ்சுண்டேன். என் கையள்ளு அரிசியை நானே தனியாக் களைஞ்சு வெச்சுக்க வேண்டியது தான். இந்தாத்து ராஜகுமாரன் அந்த ஊர் ராஜகுமாரி யைத் தேடிப் புடிச்சண்டு வந்துட்டானோன்னோ, கதையும் நாவலும் கடத்தி வீட்டுக்கு வந்ததும் ராஜகுமாரி ராணி யம்மாளாயிட்டா. அப்புறம் இந்தக் கிழம் கட்டைக்கெல் லாம் பேசறதுக்கு என்ன இருக்கு? வேணும் வேணும், எனக்கு கன்னா வேணும்; இதுக்கு மேலேயும் வேணும்!”

தட்டுச் சோறும் அப்படியே விஷமாய் மாறிவிட்டது. முழுங்கி முழுங்கிப் பார்த்தும் உள்ளே செல்ல மறுத்து விட்டது. வாகலிலே கொட்டும்படியே ஆகிவிட்டது. அதற்கு வேறே தனி வசவு!

அவளுக்குப் பசி தாங்கவில்லையென்று எப்போது கண்டு கொண்டாரோ, மாமியார் தன்னிஷ்டப்பட்ட போது தான் சாப்பிட வருவார். அந்தப் போட்டியில் சாதம் ஆறிப் போய் முள்முள்ளாய் விறைத்துக் கொண்டாலும் அவருக்கு அக்கறையில்லை. அவளுக்குக் கண்ணில் உசிர் வந்து கின்ற பிறகு, உதட்டையமுக்கித் தனக்குள் ஒரு சிரிப்பு சிரித்துக் கொள்வார். சரி, இலையைப் போடறது, தட்டை வெச்சுக் கறது; இந்த நாளில்தான் காம் பசிச்சப்போ சாப்பிட முடி யல்லியே. பிறத்தியார் வயத்தைப் பார்த்து, நம்ம வயத்துக் குக் கொட்டிக்க வேண்டியிருக்கு!-’’

பெரியவள எப்பொழுதுமே என்ன வேனுமானாலும் சொல்லலாம். அவர்கள் சொல்வதில் கியாயம் இருக்கோ இல்லையோ, அவாளுக்குப் பெரியவாள் என்கிற அவர்களு டைய ஸ்தானம் மாத்திரம் கெட்டி, அதை வெச்சுண்டு அவர்கள் யார்மேல் இருக்கிற ஆத்திரத்தையெல்லாம் யார் மேலே வேனுமானாலும் தீர்க்க வழி பார்த்துண்டு அட்டம் செய்யலாம். அம்மாவுக்கு யார் மேலே ஆத்திரம் இல்லை? முதலில் அவருடைய கணவன், தன் மாமனார் பேரிலேயே ஆத்திரம் பொங்கி வழிந்தது. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் ஒருநாள் விட்டு ஒரு நாள் நடக்கும் தர்க்கங்களில் அடிபடும் பழைய ஏடுகளிலிருந்து அப்படி இப்படியென்று முன்னும் பின்னுமாய் விஷயங்கள் வெளிவரும்.

கூட்டுக் குடும்பத்தில் வெகுநாள் கஷ்டப்பட்ட பிறகு, எப்படியோ தங்களைப் பிரித்துக்கொண்டு வந்த பிறகு, பத்து மாதம் சேர்ந்தாப்போல் குடித்தனம் கடத்தவில்லை. பஞ்சுப் பொதியில் பொறி வைத்தாற்போல், கண்ணப்பன் சிவதரிசனம் கண்டாற்போல், மாமனாருக்குத் திடீரென்று தேசத் தொண்டில் ஆர்வம் நேர்ந்துவிட்டது. உத்யோகத் தைத் துறந்து இயக்கத்தில் இறங்கினார். எங்கேயோ ஊர் தள்ளி, உள்ளேயும் தள்ளி விட்டார்கள். உள்ளே போனவர் வெளியே வரவேயில்லை. ஒரு மாஸம் இரண்டு மாஸம் கழித்து ஒரு கடிதம்தான் வந்தது. உங்கள் கணவர் திடீ ரென கேற்றிரவு சிறையில் காலமாய் விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்’. இல்லியா, அப்பா அடிக்கடி சொல்லுவா, இங்கிலிஷ் பாகையில் பதவிசுக்குக் கேட்கணுமா? அதுதான் பாகா இழுபடுமே!’ என்று.

அம்மாவுக்கு ஒரே ஆத்திரம். கொண்ட பெண் டாட்டியையும் பெத்த குழந்தையையும் மானத்தோட காப்பாத்த வக்கில்லாதவாளுக்குத் தேசத்தொண்டு என்ன வேண்டிக் கிடக்கு தன்னைக் காப்பாத்திக்க வழியில்லை, தேசத்தைக் காப்பாத்தப் போனானாம். போனானே, போனானே, என்னை நடுச்சந்தியிலே கிக்கவிட்டுட்டு என் வயிறு எரியக் கண்டவாளெல்லாம் விடிஞ்சுடுவாளா?”
.
ஆயிரம் கத்தியும் வயத்தில் அறைஞ்சுண்டும் என்ன பண்றது? சகுந்தலை மாதிரி குழந்தையை ஏந்திண்டு பிரிஞ்ச இடத்திலேயே சேரும்படி ஆயிடுத்து. போன இடத் தில் இடிக்காமல் யார் விடறா? நீ வெச்சுக்கோ நான் மாட்டேன் வேங்கைப்புலி’ என்று ஏலம்போட ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்போதுகூட கினைச்சுண்டு அம்மா ஆத்திரத்தில் அழுவர். அம்மாவுக்கு முனு ஒர்ப்படிகளாம். அஃகன்னா மாதிரி மூன்று பேரும் கொல்லை ரேழியில் உட்காந்திண்டு அம்மா முன்னும் பின்னுமாய்க் காரியமாய் கடமாடுகையில், அவளைப் பார்த்துக் கள்ளச்சிரிப்பு சிரிச்சுண்டே கும்மி படிபபார்களாம.

ஒருத்தி : போன மச்சான்-’ என்பாள்.

இன்னொருத்தி: (பிராசம் கெடாமல்) திரும்பி வந்தான்!”

மூணாவள் ; ‘பூமணத்தோடே!’ என்று தாளத் தோடு முடிப்பாள்.

அம்மா மூத்த நாட்டுப் பெண்.

உலகம் தெரிய ஒரு முறை சறுக்கினால் அப்புறம் ஒரே சறுக்கல்தான்.

‘அப்படி யெல்லாம் சகிச்சுண்டு உன்னை ஆளாக்கினப் புறம் சாக்கடையில் போய் ஸ்நானம் பண்ணிண்டு வந்ததை யேடா’ என்று அம்மா அடிபட்ட மிருகம்போல் கத்து வார்.

இந்த வீட்டில் எதைச் சாக்கிட்டு சண்டைவரும். அது எப்போ எப்படி ஒயும் என்றே சொல்ல முடியாது. வீட்டில் சுழலும் காற்றுக்கே ஒரு விறுவிறுப்பு இருந்தது அதில் சண்டையின் அண்ட கோசங்கள் எந்தச் சமயத்தில் காம் நம் உருவைப் பெறப் போகிறோம் எனக் காத்திருந்தபடி நீந்திக் கொண்டிருக்கும்.

இப்போத்தான் நாலு மாலத்திற்கு முன்னால்-அவர் போறத்துக்கு ரெண்டு மாஸ்த்துக்கு முன்னால்-ஒரு முக் காலணாக் கடிதாசு வீட்டுக்கு வந்தது. விலாசம் விலாசம்ாத் தேடியலைஞ்சு திரிஞ்சுட்டு, தபால் ஆபீஸ் வால் ஒண்ணைத் தாங்கிண்டு, முத்திரையின் உதையெல்லாம் பட்டுண்டு, அது வந்த வேளைக்கும் அதை எழுதின தேதிக்கும் ஆறுமாஸ் இடை நாள் இருக்கும். அவள் தகப்பனார் காலமாகிவிட்ட செய்தி கண்டிருந்தது. யாரோ அக்கம் பக்கத்தில் அரை குறையாகத் தெரிந்த ஒரு மாமி அவளுக்கேதான் எழுதியிருந்தாள், கொச்சை கொச்சையாக:

‘உன் அப்பாவை மூணு நாளா தேடு தேடுன்னு தேடியும் அகப்படல்லே. கந்தவனம் நாத்தம் அடிக்க ஆரம்பிச்சுடுத்து. என்னன்னு பார்த்தா, ஒரு புதர் மறைவில் மனுஷன் விழுந்து கிடக்கான். உடல் முழுக்க லேம் பாரிச்சுகிடக்கு. யாருக்குக் காத்திண்டிருக்கிறது! வெட்டியான் தலையாளி மணியக்காரன் எல்லாம் வந்து ட்டா. நீ வரவரைக்கும்னா, நீ போய் அஞ்சு வருஷமாயும் இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கல்லே. நீ எங்கே யிருக்கேன்னு யார் என்னத்தைக் கண்டா? எனக்கு மனசு கேக்கல்லே. எனக்குத் தெரிஞ்ச விலாஸ்த்துக்கு இதை எழுதிப் போடறேன். இதுவே போய்ச் சேர்றதோ இல்லியோ? சமத்தாயிரு. நான் வ்ேறென்னத்தைச் சொல்லப் போறேன்…?”

அன்று முழுவதும் வீடு ஒரே ரகளை. அவருக்கென்ன. சமாசாரம் கேட்டதற்கு ஸ்நானம்கூடப் பண்ணாமல் வெளியே போயிட்டார். அம்மாதான் கூடத்தில் இரைஞ்சுண்டிருந்தார், பழக்கத்தை யெல்லாம் புதுக் கதையாய்ப் படிச்சிண்டு.

‘நன்னா வேணும் அவனுக்கு! கோவிந்தாக் கொள் ளிக்குத் தானே அவன் லாயக்கு கிடைக்க வேண்டி யதுதான் கிடைச்சிருக்கு. ஏமாந்த கொள்ளி அகப்பட்டான் என் பிள்ளைன்னு அவன் தலையில் தோசியைக்கட்டி யனுப்பிச்சுட்டானே! மறப்பேனோ என்ன? ஒரு கல் யாணம்னா கிள்ளுக் கிரையா? முன்னே பார்த்து, பின்னே பார்த்து ஜாதகம் குலம் கோததிரம் பார்த்து விஜாரிச்சு, பெரியவாளைக் கலந்து யோஜிச்சு, ஆயிரம் யோசனைப் பண்ணி நாலுபேர் நடுவே தாலியைக் கட்டி வீட்டுக்குப் பொண்ணை இழுத்துண்டு வருவா. இந்த மாதிரி அக்ரமம் எங்கே நடக்கும்? யாருக்கு அடுக்கும்? இவதாம்மா பார்க்கவி-(பழிச்சுக் காண்பிக்கிறார்) ஹி ஹீ ஹீ-உன் நாட்டுப் பொண்ணு…அம்மாக்கு வீந்து நமஸ்காரம் பண்ணு’-இவளை முன்னேயின்னே கண்டது யாரு? கோத்ரமே ஒண்ணாயிருந்தாலும் யாருக்கு என்ன தெரிஞ்சுது? எப்படி சப்பந்தம் பண்ணிண்டு வந்தானோ அப்படித்தானிருக்கும் அன்னியிலிருந்து வீடு. என்னிக்கு மகராஜியம்மா படி மிதிச்சாளோ அன்னியிலிருந்து அழிஞ்சுதய்யா என் குடும்பம்! என்னென்னெல்லாமோ ஆசை வெச்சுண்டிருந்தேன்; இப்பவும் என்னை ஏமாத் திப்பிட்டான் என் சம்பந்தி! அவனைக் கண்ணால் மட்டும் கண்டேன்னா கிழிச்சு மாலையாப் போட்டுண்டுட மாட்டேனா, அப்பறம் தாக்கேறினாலும் சரின்னு!”

இன்னும் இதே ரீதியில் என்னென்னெல்லாமோ.

அப்பாவுக்கு அழுவாளா? அம்மாவின் ஆத்திரத்திற்கு பயப்படுவாளா? அதென்னவோ வாஸ்தவந்தான். அம்மா தன் பிள்ளைமேல் என்னன்னவோ ஆசையெல்லாம் தான் வைத்திருந்தார். தன்னுடைய சரியான வயது நாளில் இழந்த பதவி யெல்லாம் மீண்டும் பெற்றுவிடலாம் என்று வயிற்றையும் வாயையும் ஒடுக்கி, படாதபாடெல்லாம் பட்டு, அவனைப் படிக்க வைத்து, யார் மூலமாகவோ சிபாரிசு புடிச்சு உத்யோகம்கூடப் பண்ணி வெச்சு-ஓரொரு நாள் சண்டை வருகையில் இடிச்சுக் காண்பிப்பார்! “என்னமோ உலகத்தில் இல்லாத ஆம்படையானை ஏமாத்திப்புடிச்சட்டேன்னு இறுமாந்துாடாதேடீ! எனக்குப் புள்ளை, அப்புறந்தான் உனக்கு ஆம்படையான். உனக்கு முன்னால் என் வயத்தில் அவன் இருந்த நாளிலிருந்து எனக்கு அவனைத் தெரியுண்டி! நான் இல்லாட்டா அவன் இல்லைன்னு தெரிஞ்சுக்கோl-ஆமாம், சொல்லிப்பிட்டேன்- என்று கறுவுவார்.

அவள் அகமுடையான் இருவருக்கும் இடையில் சப்பளம் கொட்டி உட்கார்த்திருப்பான். கறுப்பு முழி மாத்திரம் இருவரையும் மாறி மாறி நோக்கும். கடைக்கண் பார்வையில், வெள்ளை முழியில் கடையும். அம்மா அசரீரி மாதிரி பேசுகையில் அந்த மனுஷன் யார் பங்கும் எடுத்துக் கொள்ளாமல் பதுங்கிய விலங்கு போல் இருவரையும் மெளனமாய்க் கவனிக்கையில் அவளுக்குப் புரியாத திகிலா யிருக்கும், இன்னும் என்ன இருக்கோ, என்ன வரப் போகிறதோ என்று. ஆமாம், உண்மையில் அவரைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? எப்படியாவது பிறந்த வீட்டை விட்டுக் கிளம்பினால் போதும் என்று வந்துவிட்டாள். ஆனால் இப்போது தான் தெரியறது பொரியற எண்ணெயி லிருந்து எரியற நெருப்பில் விழுந்து விட்டாள். என்னவோ கொட்டிக் கொட்டிக் குளவி விஷத்தை ஏற்றுமாம், அது மாதிரி அம்மா கறுவிக் கறுவி அவளுக்குள் ஏதோ இறுகிக் இறுகிக் கனத்துக் கொண்டு வருவது போல் தோன்றிற்று. அதை எதிர்த்துக் கேட்டுடலாமா, இதை எதிர்த்துக் கேட்டுடலாமா, என்றுதோன்றும். ஆனால் அம்மா பரந்து தளர்ந்து செந்தாழை மேனியோடு எங்கோ பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கையில், என்னவோ யாக குண்டத்தில் நின்றெரியும் நெருப்பைப் போல், கிட்ட அண்டக்கூட நெஞ்சு அஞ்சும். அம்மாவுக்கு அது என்ன சக்தியோ? அதன் பேர் தான் தைரிய லட்சுமியோ? அம்மா சாதாரணமாகக் கீழே உட்கார்ந்திருந்தாலும் ஸிம்ஹாஸ்னத்தில் உட்கார்ந்தாப் போலேத்தான் இருக்கு.

கரிப்பு என்கிறது என்ன நிறமாயிருக்கும்? கறுப்பா? சிவப்பா? பாம்பு விஷத்தைப் போல் பச்சையாயிருக்குமா? இப்பொழுது களைப்பும் சிக்தனையுமாய் அவள் படுத்திருக்கும் அரை உறக்கத்தில் ஒரு கனவு கண்டாள்.

அவளும் அம்மாவும் பாம்புகளாய் மாறிவிட்ட மாதிரி யிருந்தது. இரண்டும் எதிருக் கெதிர் தலையை உயரத் தூக்கிக்கொண்டு, கண்களில் கொடுரம் கொதிக்க ஒன்றை யொன்று சிறிக் கொண்டு உக்கிரமாய்ப் படத்தைத் தரை யில் அடித்து அடித்து விஷத்தைக் கக்குகின்றன. இரண்டு விஷமும் ஒன்று கலந்து திரண்டு-என்ன ஆச்சரியம். ஒரு பூ உருவாகிறது: யானை காது போல் பெரிய கறுத்த இதழ் கள், பச்சைக் காம்பிலிருந்து விரிகின்றன. பூவின் நடுவில் செக்கச் செவேல் என்று ஒரு இரத்தத் தண்டு கிளம்பு கிறது. அதிலிருந்து சொரியும் இரத்தத் துளிகள் பூவின் இதழ்கள் மேலும் தரை மேலேயும் சிந்துகின்றன. சிந்திய இடத்தில் ஒவ்வொரு கண் சிமிட்டிக் கொண்டே திறக் கிறது.

கரிப்பு!

வீல் என்று அலறிக்கொண்டெழுந்தாள்.

பொழுது நன்கு சாய்ந்து, மரங்களின் கிழல்கள் நீள ஆரம்பித்துவிட்டன.

தலைக்கு நேர் வானத்தில் ஒரு கிளிக் கூட்டம் பறக் தது, புஷ்பங்களை ஆகாயத்தில் தூவினாற் டோல், நாமும் ஏன் அது மாதிரி காற்றில் மிதந்து போக முடிகிறதில்லை. சரி சரி, இப்படி யோசனை பண்ணிண்டிருந்தால், இன்னி முழுக்கப் பண்ணிணடிருக்கலாம். வேளையோ முழி பிதுங்கிக் காத்துக் கிடக்கு, நாளைக்கு வெள்ளிக்கிழமை. நமக்கேது வெள்ளிக் கிழமை? வேலைக்குத்தான் வெள்ளிக் கிழமை. வெள்ளிக்கிழமை பண்ணி யாகனும் போறும் போறாததற்கு வேறே- நனைச்சு வெச்சிருக்கு’! நான் ஏதாவது வேண்டாம்னு சொல்லிடுவேனோன்னு அவரே பண்ணிவிடற காரியங்களில் அது சேர்த்தி.

ஆமாம், யாருக்கு என்ன வேண்டியில்லை: பண்டம் கெட்டுப் போனால் பத்து கிமிஷம். மனுஷா தவறினால் பத்து நாள் அவ்வளவுதானே?

இன்னிக்குச் சாப்பிடலாமா, வேண்டாமா? இன்னிக் கென்னவோ அதான் மலைப்பாயிருக்கு. வேண்டியுமில்லை. சரி, ஒரு நாள் சாப்பிடாட்டால்தான் என்ன? உசிர் போயிடாது; அட அப்படிப் போற உசிர் போகட்டுமே!

எல்லாக் காரியத்தையும் முடித்துக்கொண்டு நிமிர்கை யில் நல்ல நேரமாகிவிட்டது. கட்டையை நீட்டிவிட்டால் போறும். இன்றுதான் மாடிப்படிச் சுவரைப் புடிச்சுண்டு படிகளை ஒண்ணொண்ணாய் ஏறினாள். அடேயப்பா என்ன வசதி அறைக் கதவு சாத்தியிருந்தது. மெதுவாய்த் திறந்தாள்.

‘யார் அது விடமுடியாது போ. இன்னியிலிருந்து கான் இங்கேதான் படுத்துக்கப் போறேன். இந்த ரூமை உனக்கு ஒண்னும் குத்தகைக்கு விட்டுடல்லே, இது உனக்கு மாத்ரம்னு-’’

பாக்கி வார்த்தைகள் முடியு முன்னாலேயே கதவை மூடினாள். சிரிப்புக்கூட வர்ரது. அம்மா என் இப்படி தன்னைத் தானே முடுக்கிண்டு கத்தறார்?

மாடியிறக்கத்தின் முதற் படியில் உட்கார்ந்தாள், கன் னத்தைக் கையில் தாங்கிக் கொண்டு. இன்னிக்கு நானே கொஞ்சம் சுருக்க, என்னாலும் தெரு கூட அடங்கிடுத்தே! இருளோடு இருளாய் இந்த மாதிரி இழைஞ்கிருக்கிறதும் இதமாய்த் தானிருக்கு.

என்னவோ நான் என்கிற தன்மையின் பிரிவான தனி மையோ பொறுப்போ இல்லாமல், கர்ப்பத்தில் தாங்கும் சிசுப்போல் ஏகாந்தமான இருள் அவளைத் தன் வயிற்றுள் அடக்கமாய் அடக்கிக் கொண்டாற் போல் இதழ்களுக்குள் பூவுக்கு வயிறு கட்டியிறுப்பது போல்… அப்பா சொல்லுவார், அதுகளுக்கு என்ன கவலை ஆயுசு என்னவோ குறைச்சல்தான். ஆனால் அதுகளுக்கு ஆயிசு வரை அழகும் சிரிப்பும்தான்…னு.

கீழே ஏதோ சாமான் உருண்டு சிந்தனையைக் கலைத் தது. போய்ப் பார்க்கலாமா, வேண்டாமா? என்னவா யிருக்கலாம்? ஒஹோ, சுவாமி பிறையுள் எலி மாட்டிண்டு விக்ரஹத்தைத் தள்ளி விட்டிருக்கு.

அம்மாதிரி அந்த சப்தத்தை அடையாளம் கண்டு கொண்டதுமே அதை யொட்டி அப்பொத்தான் இரண்டு மாதங்களுக்கு முன்னால் கேர்ந்த ஒரு சம்பவம், நினைவு முழுக்கிலிருந்து மேடு எடுத்துக் கொண்டு எழுந்தது. அதை ஆயுசுக்கும் மறக்க முடியாது.

அன்று வெள்ளிக்கிழமை மாலை. வெள்ளிக்கிழமை வந்தாலே நல்ல கிழமையாகப் போகவேண்டும் என்ற கவலையுண்டு. இந்த வீட்டில் வெள்ளிக் கிழமைக்கும் சண்டைக்கும் அவ்வளவு ஏர்வை. அப்போத்தான் விளக் கேற்றிவிட்டு அடுப்பில் ஏதோ காரியமாய் இருந்தாள். திடீர் என்று எதிர் அறையில் ஒரு வீறல்.

“மோசம்! மோசம்!”

“என்ன? என்ன? அவள் கணவன் மாடியிலிருந்து திடு திடுவென இறங்கினான்.

“நூறு ரூபாய் கோட்டு என் பெட்டியில் வெச்சிருங் தேனே? யார் எடுத்தேள்? உண்மையைச் சொல்லிடுங்கோ, யார் எடுத்தேள்?’ ஒரே கர்ஜனை.

அம்மா கையைப் பிசைஞ்சுண்டு சிக்கறார். மூஞ்சியே வெடிச்சுடும் போல், தக்காளிப் பழம்போல் சிவந்து போயிருக்கு.

அவள் கணவன் சிரித்தான். என்னம்மா பேத்தறே: யார் எடுக்க முடியும்? கர்ணகுண்டலம் மாதிரி சாவிக் கொத்தோ உன் இடுப்பில் தொங்கிண்டே இருக்கு. எங்கே யாவது ஞாபக மறதியா வெச்சிருப்பே. சரியா தேடிப் பார்-‘

“அடே, எனக்கா ஞாபக மறதி?”

“யானைக்கும் அடி சறுக்கும் அம்மா. எப்பவுமே நீயே எல்லாம் தெரிஞ்சவளா இருக்க முடியுமா?”

“நிறுத்துடா உன் பிரசங்கத்தை மறுசாவி போட்டுத் திறந்திருக்கு- எனக்கென்னவோ சொல்ல வந்துட்டான் பெரிசா!’

“காக்கா கிக்கா கொத்தி-‘

“ஆமாண்டா! கொத்திண்டுபோய்க் கடையிலே கொடுத்து, செட்டியாரே செட்டியாரே! எனக்கு ஒரு வடை கொடுத்து மீதி சில்லறை தாங்கோ’ன்னு கேட்டுதா? இங்கே என்னவோ சூது நடக்கிறது.டா! தெரியாத்தனமா மாட்டிண்டுட்டோண்டா!’

அவளுக்கு முதுகுத் தண்டு சில்லென்றது. இதுக் கென்ன அர்த்தம்? அம்மா புழுவாய்த் துடிக்கறார். சின்ன இடத்தில் கிற்காமல் பரவாட்டல் ஆடறார். ஒண்ணா ரெண்டா, நூறு ரூபாய்கள். தட்டித் தட்டிச் சுண்டி சுண்டி எண்ணினால் நூறு, அம்மாவுக்குத் தனியாய்ப் பண லேவா தேவி உண்டு. சீட்டுப் பிடிச்சு, தம்பிடிக்குத் தம்பிடி கந்து வட்டி விட்டு ஒண்ணைப் பத்தாக்கி பத்தை நூறாக்கிஅம்மா ஒண்னு சொல்வதில் சந்தேகமில்லை அவர் இல்லாட்டா இந்த வீடு இல்லை.

“இல்லை. இன்னிக்கு இதை நான் சும்மா விடப் போற தில்லை, அடிவரை ஆராயத்தான் போறேன்-‘

மாடிக்கும் கீழுக்குமாய்த் தேடாத இடமெல்லாம் தேடி யாறது. தென்னை மரத்தில் புல் புடுங்கியா றது. வீட்டில் இருக்கிற பெட்டி பேழை, டப்பா, பானை எல்லாம் தலை கீழாகக் கொட்டியாறது. கொண்டாடி உன் சாவியை,’அவள் பெட்டிக்குச் சாவியேது. அத்துக்கு ஒரு கம்பியை வளைத்து மாட்டியிருந்தாள். அவள் பெட்டியில் என்ன இருக்கு முன்னாலே? ஏதோ ஒரு புடவை. நாலு ரவிக்கை, போன வருஷத்துக் காலண்டரிலிருந்து அவளாக ஆசைப் பட்டுக் கத்தரித்து எடுத்த படம், வருஷப் பிறப்புக்கு நமஸ்காரம் பண்ணினதற்காக அம்மா கொடுத்த வெள்ளி காலணாக்காசு; அவ்வளவுதான். ரூபாயா? அடே அம்மாடியோ! ரூபாய் இருந்தாலும் அவளுக்குச் செல் வழிக்கத் தெரியாது.

ஆனால் அம்மாவுக்குப் பதைபதைப்பு அடங்கவில்லை. “இங்கே என்னவோ குது நடந்திருக்கு; சந்தேகமே யில்லை. ஒரு காலணாக் காசு காண, ஒரு சொட்டு ரத்தம் சிந்தறேன், ஒரு பச்சை நோட்டு வெச்ச இடத்திலே காணாம்னா வயிறு எரியறதே-‘ அம்மா சாப்பிடல்லே. ஆனால் அவர் மாத்திரம் இலையைப் போடுன்னு கேட்டு, மூக்கைப் பிடிக்க இழுத்து விட்டு, பேப்பரைத் தூக்கிண்டு வாசல் திண்ணைக்குப் போயிட்டார். புருஷாளே. அப்படிதான்.

அம்மா கூடத்திலேயே, தூண்மேலே சாஞ்சுண்டு எங்கோ வெறிச்சுப் பார்த்துண்டு ரொம்ப நேரம் ஒண்ணுமே பேசாமே உட்கார்ந்திருந்தார். அவளுக்குத் தாக்கங்கூட கண்ணைச் சுத்த ஆரம்பிச்சுடுத்து. எதோ தீர்மானத்துக்கு வந்து அம்மா சட்டுனு எழுந்தார்.

“அம்பீ-“

“என்ன?” அவள் கணவன் உள்ளே வந்தான்.

“நான் ஒரு தீர்மானத்துக்கு வந்துாட்டேன். எல்லோ ருமா கல்பூரத்தை எத்தித் தட்டிடுவோம் எடுக்கல்லேனு. இல்லாட்டா என் மனம் சமாதானமாகாது. பைத்தியம் பிடிச்சுடும் போல் இருக்கு. அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டதும் மாம்பழத்துள் கத்தி யிறங்குவதுபோல் அடி வயிற்றுள்ளே சில்லிப்பு துண்டமிட்டது.

“ஒரு நூறு ரூபாய்க்கு இவ்வளவு ரகளை பண்ணுவது கியாயமாயிருக்கா அம்மா? அப்புறம்-?”

“நியாயம் அநியாயம் எல்லாம் எனக்குத் தெரியுண்டா. எனக்கு அப்புறம், என்னால்தான் நீ பிறந்தே. அதை ஞாபகம் வெச்சுக்கோ எனக்குக் கத்துக் கொடுக்க வேண்டாம். மனசு வெளிச்சமாயிருக்கறவா எதுக்குமே பயப்பட வேண்டாம். எத்தனை ரூபாயிருந்தாலும் அவாளுக்கு ஒண்னுதான்-‘

“சரி, உன்னிஷ்டம்…”

அம்மா கர்ப்பூரத்தை சுவாமி விக்ரஹத்திற்கு எதிரில் ஏற்றிப் பலகையைத்தட்டி ஊதினார். விக்ரஹம் அதிர்ந்து கீழே விழுந்தது. அவள் வயிற்றுள் சுவர் இடிந்தது! அடி வயிற்றை அமுக்கிப் பிடித்துக் கொண்டாள். அம்மாவின் கண்கள் திரிகள் மாதிரி எரிந்தன: விக்ரஹத்தை திமிர்த்தி வைத்துக் கர்ப்பூரத்தை ஏற்றினார்.

“ஊம்-ஆகட்டும்-”

அடுத்தாற் போல் அவர் தட்டினார்; வயிற்றுள் இன்னும் நாலு கற்கள் இடிந்தன. அவர் தட்டிய தினுசைப் பார்த்தால் இன்னும் எத்தனை முறை தட்டச் சொன்னா லும் அவர் தாயார். எப்படியாவது இன்னி ரகளைக்கு முடிவு கட்டினால் சரி. அவளுக்கே அப்படித்தானிருந்தது. ஆனால் சோடாக்கோலி மாதிரி பிதுங்கிய விழிகளுடன் விக்ரஹம் அவளைப் பாாக்கையில், அவளுக்கு என்ன வென்றே தெரியவில்லை.

“ஊம்-ஆகட்டும் ‘

“நான் மாட்டேன் அம்மா-‘

“‘ஆ பாத்தியா, பாத்தியா-பாத்தியாடா அம்பி!’ அம்மா சிரிப்பில் புகை கிளம்பிற்று. “இதுக்குத்தான் சொன்னேன்; இந்த வீட்டில் ஏதோ சூது நடக்கறதுன்னு! இப்போ விளங்கிப் போச்சோன்னே?”

அழுகை, தைரியம், ஆத்திரம் எல்லாம் ஒருங்கே அவளை அழுத்தின. ‘உங்களுக்கு என்ன வேனுமானா லும் விளங்கிக்கட்டும். நீங்கள் என்ன வேணுமானாலும் கினைச்சுக்கலாம். எனக்கு அதைப் பற்றி அக்கறையில்லை. நான் மாட்டேன். அவ்வளவு தான். சாமியே உங்களுக்குத் தானிருக்கிறார். மத்தவாளுக்கில்லைன்னு மூக்கைப் பிடிச் சுண்டு பூஜை பண்ணின்டு தலையில் தூக்கிவெச்சுண்டு நான் கூத்தாடவும் இல்லை. அடுத்த நிமிஷம் காலில் கட்டி இந்த மாதிரி அடிக்கவுமில்லை. ரெண்டுமே எனக்கு வேண் டாம்! மாட்டேன்னா மாட்டேன்-‘

அவள் போட்ட கத்தலில் தொண்டை கிழிந்தது. கால் கட்டை விரலிலிருந்து ரத்தம் பாய் மாதிரி சுருண்டு கொண்டே வந்து தலைக்கேறிற்று. மடேரென்று அப்படியே குப்புற விழுந்துவிட்டாள். அப்புறம் என்ன நடந்ததென்று தெரியாது.

மறுபடியும் விழித்துக் கொள்கையில் அவளைக் கும்மிருள் சூழ்ந்திருந்தது. உடம்பைக் கல்மேல் அறைக் தாற்போல் கணுக்கணுவாய் முறித்து வலித்தது. “அம்மா–“.

நினைவு மெதுவாய்க் கூட ஆரம்பித்தது. அவளோ அவள் தாயாரைக் கண்டதுகூட இல்லை. ஆனால் அதெப்படி அம்மா’ன்னுதான் முதலில் தோண்றது? ‘அம்மா’ என்கிறது ஆதிமூலக் குரலோ:

அந்தச் சமயம் அவள்மேல் ஒருகை பட்டது. ஸ்பரிசக் லிருந்து கணவர் என்று அறிந்தாள்; ஆனால் வாய் திறக்க முடியவில்லை. பல் கிட்டிவிட்டது. அவர் தொடும் தினுசி லிருந்து தான் முழித்துக் கொண்டது அவருக்குத் தெரிய வில்லை எனத் தெரிந்தது. அவர் கை அவள் தோளிலிருந்து மணிக்கட்டிற்கு இறங்கி, கைக் காப்பை கழற்ற ஆரம் பித்தது. முழுத் தங்கம்கூட இல்லை. உள்ளுக்குக் கட்டை கொடுத்து, மேலே அடித்ததுதான்.

நெஞ்சிலேயே சதை உரித்தாற்போல் அவளுக்கு ஒரு புது வெளிச்சம் உண்டாயிற்று. பயங்கர வெளிச்சம். முன்னது பின்னது, தற்போது எல்லாம் ஒருங்கே புரியும் அதிர்ச்சியில் வாயிலிருந்து வார்த்தையும் விடுபட்டது.

“இந்தாங்கோ, நானே தரேன்- சட்டெனக் காப்பை உருவி அவன் கைக்குள் திணித்தாள். கை சட்டெனப் பின் வாங்கிற்று. கால்கள் ஓடின. கதவு மூடிற்று. இப்போ எல்லாம் புரிந்தது. அம்மா இடுப்பில் சதா சர்வ காலமும் (துரங்கும்போதுகூட) சாவிக்கொத்து ஏன் தொங்குகிறது, அவள் கணவனுக்கு திடீர் திடீரென ஏற்படும் பண செளகரியங்கள். அந்தச் சமயங்களில் ஆடு அன்னிக்கு, மாடு மத்தியான்னம்’ என்று அவர் கடத்தும் தர்பார்கள், சேர்ந்தாற் போல் நாள் கணக்கில் காணாமல் போய்விடுவது, ஆட்கள் அவரை அடிக்கடி தேடி வருவது, சில சமயங்களில் எதற்கும் துணிந்த அவருடைய முரட்டு தைர்யங்கள், திடீர் உற்சாகங்கள், அடுத்தாற்போலேயே மூணு நாட்கள் மூஞ்சி யைத் தொங்கப் போட்டுக்கொண்டு யாருடனும் பேசாமல் கூனிக் குறுகி உட்கார்ந்திருக்கும் ஒடுக்கங்கள், குடும்ப விவகாரங்களில் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது, அகியாயங்களுக்குக்கூட அம்மாவுடன் ஆட் சேபிக்காமல் இருப்பது, தன் சிந்தனையே தன்னை யடைத் துக் கொண்டிருப்பதால் பிறரோடு ஒட்ட இஷ்டமோ சக்தியோ இல்லாமல் இருப்பது, உறக்கத்திலும் விழிப் போடு இருக்கும் காட்டு விலங்குபோல் ஒரு சதா உஷார்அவரிடம் எப்போதுமே நேர்ப்பார்வையில்லை, ஒரப் பார்வைதான்-குடும்பச் செலவுக்கு அம்மா ஏன் பிள்ளையை நம்பவில்லை, நூறு ரூபாய் கோட்டு எப்படிக் காணாமல் போயிற்று (அம்மாவுக்குத் தெரிஞ்சிருக்காதா என்ன? உள் மனசுக்கு உள் மனசு ஒண்ணு இருக்கே, அது தெரிஞ்சிண்டிருக்கும்) எல்லாமே, கும்மிருட்டில் திடீர்னு விளக்குப் போட்டாற்போல் புரிஞ்சுது. ஞானோதயம் என்பது இப்படித்தானிருக்குமோ?

அன்றிலிருந்து எதையுமே அவள் காதில் வாங்கிக் கொள்வதில்லை. காதிலே ஒரு சிறு அடைப்பு ஏற்பட்டு விட்டது. யாரோ சொல்றா, எதையோ சொல் றா, யாரையோ சொல்றா, என்ன சொன்னால் எனக்கென்ன?

ஆனால் அன்றிலிருந்து அம்மாவும் முன்மாதிரி அவ்வளவு கோபிப்பதில்லை, அவள் அன்று மூர்ச்சையாய் விழுந்ததில் அவர் கொஞ்சம் மிரண்டுட்டார்னு தோண்றது.

ஆமாம்; எது எப்படிப் போனால் என்ன, அதை நினைக்கக் கூட அவ்வளவு அலுப்பாயிருக்கு!

அதோ அன்னிக்கு-சரியா இன்னியோடே அறுபத்தி மூணு நாளாறது-ரேஸ் மைதானத்திலிருந்து, ஜட்கா வண்டியில் அவரைக் கட்டையாய்ப் போட்டுண்டு வந்து வீட்டில் சேர்த்தார்கள். குதிரை தோத்துப் போச்சாம் மார்த்துடிப்பு பட்டுன்னு கின்னு போச்சாம். எவ்வளவு பணம் கட்டியிருந்தாரோ? யார் யார் பணத்தையெல்லாம் கட்டியிருந்தாரோ? கடைசியில் மனுஷனுக்கு என்ன அவமானமான முடிவு! இப்படியெல்லாம் மனசு எண்ணறதே தவிர, ஐயோ போயிட்டாரே அநியாயமா என்ற உணர்ச்சி பீறிட்டுக் கொண்டு எழமாட்டேன் என்கிறது. எல்லாம் கியாயமாய்த்தான் போயிருக்கான்னுகூட நெஞ்சு, நெஞ்சுக்கு ரகஸ்யமா உண்மையை வெளியிடறது.

கிழவியைப் பார்த்தால்தான் பரிதாபமாயிருக்கு. நல்லதோ கெட்டதோ, ஒரே பிள்ளை. அவன், கைக் கொள்ளியை வாங்கிக்க அவருக்குக் கொடுப்பனையில்லை. ஆனால் அம்மா கூட அதிகம் அமுவில்லை. அம்மா தைரியம் அசாத்தியம். பழைய காலத்து ராஜபுத்ர ஸ்திரிகளைச் சேர்ந்திருக்க வேண்டும். அதென்னவோ தெரியல்லே. கஷ்டத்தில் அவர் கெற்றியில் தேஜஸ் விளையாடற மாதிரி அவளுக்குத் தோணறது.

இப்போ ஒரு சந்தேகம் தோணறது. என் ஆம்படை யானைப்பற்றி கான் கினைக்கிறப்போ அவர்னு கினைக் கிறேனோ, அவன்னு கினைக்கிறேனா, அதுன்னு கினைக் கிறேனா?

எதுவாயிருந்தால் என்ன? இனிமேல் எது எப்படிப் போனால் என்ன? செத்தமாட்டுமேலே எது ஏறினால் என்ன? என்னமோ உயிரோடு இருக்கிற மாதிரி தோணறதே யொழிய நிஜமாகவே கான் உயிரோடிருக் கேனா இல்லியோ? இதை எனக்கு கிச்சயமாச் சொல்ல பாரிருக்கா? ‘கான் இருக்கிறேன்-!’

அவள் திடுக்கிட்டுப் போனாள். அது அம்மா குரல் இல்லை.

“யார் அங்கே?’ எழுந்து நின்றாள். நெற்றியில் வேர்வை முத்திட்டது.

“யார் அங்கே?’ யாருமில்லை. ஸ்ன்னமாய் மூச்சுப் போல் குளிர்ந்த காற்று கிளம்பி முகத்து வேர்வையை ஒற்றியது. அவளுக்குப் புரிந்தது,

“அம்மா! அம்மா’ கதவைப் படீரென்று திறந்து கொண்டே உள்ளே ஒடி, இருளில் அவர்மேல் தடுக்கி விழுந்தாள். அவர் காலைக் கெட்டியாய் மார்போடு தழுவிக் கொண்டாள்.

“அம்மா, அம்மா, நான் உண்டாயிருக்கேம்மாl-‘

அம்மா உடல் பூமிபோல் கிடுகிடென்று ஆடிற்று. மரு மகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள்.

இருளில் அவள் முகத்தின்மேல் இரு இதழ்கள் உதிர்ந்தன.

– புற்று (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1989, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *