பாய்மனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2023
பார்வையிட்டோர்: 2,916 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிங்கப்பூரர்களுக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதவில்லை. சிங்கப்பூரர்கள் வாழ்க்கையில் வேகம் கூடியிருந்தது. ஆனால் பழனியப்பனுக்கு மட்டும் கடந்த ஒரு மாதமாக நாட்கள் நகரவில்லை. காரணம், ஒரு மாதத்திற்கு முன்தான் ஏஜெண்ட். அவன் 5 வருட காண்ட்ராக்ட் ஒரு மாதத்தில் முடிவடைவதால் அவன் இந்தியா திரும்புவதற் கான விமான டிக்கெட்டையும் அளித்திருந்தான். அன்றி லிருந்து நாட்களை எண்ண ஆரம்பித்தான் பழனியப்பன். ஒவ்வொரு நாளையும் பிடித்துத்தள்ள வேண்டியிருந்தது. இன்னும் 3 நாள், இன்னும் 2 நாள், இன்னும் ஒருநாளாகக் குறைந்து புறப்பட வேண்டிய அந்த நாளும் வந்து விட்டது. இன்னும் சற்று நேரத்தில் அவன் உற்ற நண்பர்கள் அவனை கைகுலுக்கி ‘டேக் கேர்’ சொல்லி வழியனுப்ப வந்து விடுவார்கள்.

பழனியப்பன் மணிபார்த்தான். இன்னும் நேரமிருந்தது. சீக்கிரம் எழுந்து தயாராகி விட்டோமோ என்று தோன்றியது. பழனியப்பனோடு தங்கியிருந்த மற்ற மூவரும் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நினைவாகி விடுவார்கள். கட்டிலில் ‘ஹேண்ட் கேரி’யுடன் சேர்த்து மூன்று சுமைகள் குத்துக்கல்லாய் உட்கார்ந்திருந்தன. அவை அவனுடன் பயணிக்கப் போகின்றன. மாமா, அம்மா, பிள்ளைகளுக்கு துணி மணிகளும், சாக்லேட், பிஸ்கெட், விளையாட்டுச் சாமான்கள் என்று வாங்கிச் சேர்த்ததில் 20 கிலோ வந்துவிட்டது. ஹேண்ட்கேரியில் இவன் உடைமைகளைச் சேர்த்தாகிவிட்டது. சமைத்து சாப்பிட்ட சாமான்கள் பழனியப்பனுக்கு விடைகொடுத்துவிட்டு கமுத்துக்கிடந்தன. பக்கத்தில் அதிலிருந்து வடிந்த தண்ணீர் தரையில் விரித்துப்போட்ட ஒரு மேப்பைப்போல ஓடிக்கிடந்தது.

வேலை செய்கிற சைட்டுக்கு அருகிலேயே இருந்தது அந்த 20 அடி கண்டைனர் ரூம்.

உள்ளே இரண்டு அடுக்காய் இரும்புக் கட்டில்கள் போடப்பட்டிருந்ததன. ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டிலும், பெட்டி வைத்துக் கொள்ள, உட்கார, புழங்கக் கொஞ்சம் இடமும் இருந்தது. அந்தக் கொஞ்ச இடத்தில் கூட்டு சமையல் செய்து சாப்பிடுவார்கள்.

இப்படிக் கட்டுச்செட்டாய் இருந்து ஓவர்டைமும் நிறையச் செய்து, சிராங்கூன் சென்று பீரடித்து ஆட்டம் போடாமல், பெண்சதை தேடாமல், நாலுசீட்டில் தொலைத்து விடாமல் சேமித்தால்தான் மாதம் 900 முதல் 1000 வெள்ளி வரை சேமிக்க முடியும். அப்படிச் சேமித்தே ஏஜெண்டுக்கு வாங்கிய கடனை அடைக்க இரண்டு வருடம் ஆகிவிடும். மீதி இருக்கிற மூன்று வருடச் சம்பாத்தியம்தான் மிஞ்சும்.

பழனியப்பனுக்கு அவன் தாய்மாமா மாணிக்கம் தனக்குத் தெரிந்த இடத்தில் ஏஜெண்டுக்குக் கட்ட வேண்டிய பணத்தைக் கடன் வாங்கிக் கொடுத்து ‘இது என் மகளுக்கு நான் கொடுக்கிற சீதனம் மாப்பிள்ளை, திருப்பித் தரவேண் டாம். நான் கட்டிக் கொள்கிறேன்’ என்று சொல்லியிருந்தார். ஆனால் பழனியப்பன் வேண்டாம் என்று சொல்லி விட் டான். “அப்பா இறந்ததும் நீங்க மேப்பாத்து என்னப் படிக்கவச்சு ஆளாக்கினீங்க. போதும் மாமா, நீங்க இவ்வளவு பணத்துக்கு எங்க போவீங்க, நானே கட்டிவிடுகிறேன். வட்டிக்கு உறக்கமில்லை” என்று மாதாமாதம் அடைத்து வந்தான்.

மசக்கையிலே எழுந்து புறப்பட்டு வந்து கொண்டிருந் தார்கள் சின்னானும், குமாரும், வரதனும்.

‘பழம் ரெம்பொ மாறிட்டாருல்ல’ என்றான் சின்னான்.

‘சோகத்துலேர்ந்து பழம் எப்படி மீண்டு வரப் போறாருன்னுதான் எல்லாரும் நெனச்சோம். ஆனா பழம் தெளிவா மாறிட்டாரு’ என ஆமோதித்தான் குமார்.

‘ஆமாப்பா…ஆச்சரியந்தேன், அந்த இன்சிடெண்ட்டுக்கு முன்ன யார்ட்டயும் பேசமாட்டாரு. வேலையெடத்துல இருப்பாரு. இல்ல ரூம்ல இருப்பாரு. சிரிக்கக்கூட மாட்டாரு. கடைகண்ணின்னு சுத்தப்போக மாட்டாரு. பசங்க ஞானப்பழம்பானுங்க. அதுக்கப்புறம் எல்லார்ட்டயும் பேசிப்பழக ஆரம்பிச்சாரு. ஆனாலும் இப்பவும் எந்தக் கெட்ட சகவாசமும் இல்லப்பா’ என்றான் வரதன்.

ரூம்பசங்க சொல்லுவாங்க முன்னல்லாம் ராத்திரியில ன்னுக்கு எழுந்திரிக்கயில பாத்தாக்க இவரு தூங்காமெ கையில புள்ளைங்க போட்டோவை வச்சி பாத்துக்கிட்டு ட்கார்ந்துருப்பாராம். குமார் சொன்னதும் வரதன் சொன்னான் ‘ஆமாப்பா அவரு ரெம்பொ ஃபேமிலி அட்டேச்சுடுப்பா.’

‘என்ன பழம், ரெடியாயிட்டிங்களா?’ கீழே இருந்து குரல் கொடுத்துக் கொண்டே வந்தார்கள் வரதனும் குமாரும், சின்னானும்.

‘ம்… வாங்க மேல வாங்க’ என்றான் பழனியப்பன்.

மூவரும் மேலே வந்தார்கள். சுமைகள் கட்டிலின் மீது இருந்தன.

‘உட்காருங்க, ஜமக்காளம் எல்லாம் உள்ளே வச்சு பேக் பண்ணிட்டேன்’

‘அட பரவால்ல’

‘கொஞ்சம் இருங்க’ என்று மூலையில் சுருட்டியிருந்த பாயை எடுத்து விரித்தான் பழனியப்பன். அது பல நாட்களாகச் சுருண்டே இருந்தபடியால் மீண்டும் சுருண்டு கொண்டது.

குமார் அதனை வாங்கி ‘இங்க கொண்டாங்க அதற்கு ஒரு வழியிருக்கு’ என்று திருப்பி சுருட்டி பின், விரித்துப் போட்டான். வரதன். ‘எதற்கும் ஒரு எதிர்வினை தேவைப்படுகிறது’ என்றான்.

பாய் இப்போது சுருண்டு கொள்ளாமல் அலை அலையாக நீட்டிக் கிடந்தது. எல்லோரும் உட்கார்ந்தார்கள். மனமும் பாய் மாதிரித்தானே என்று தோன்றியது பழனியப்பனுக்கு.

‘ஹேண்ட்கேரி 7 கிலோ இல்லாமெ 20 கிலோ லக்கேஜ் தான் அலோ பண்ணுவாங்க. எடையெல்லாம் பாத்துட் டீங்களா?’ சின்னான் கேட்டான்.

‘ம். கரெக்டா இருக்கு’

புன்னகைக்கும் இயந்திரங்கள்

‘பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் சரிபார்த்து எடுத்து வச்சுக்கிட்டீங்களா?’

‘ம் எல்லாம் என் கைப்பையில இருக்கு’

சற்று நேர அமைதிக்குப்பிறகு ‘புறப்படலாமே’ என்றார்கள். தூங்கிக்கொண்டிருந்தவர்களும் எழுந்து கொண்டார்கள். பழத்தோட வத்தக்கொழம்பு இனி கெடைக்காது என்றான் முத்து, தூக்கம் கலையாமல் ஜீன்சை மாட்டிக்கொண்டு.

‘முத்து சாப்பாட்டையே நெனச்சிக்கிட்டு இருக்காம்பாரு’ என்று எல்லாரும் சிரிக்கிறார்கள்.

“அட அதுமட்டுமில்லப்பா எங்களுக்கு அக்கவுண்ட் வச்சிக்கிறது, இந்த வீட்ட சுத்தமா வெச்சிக்கிறதுன்னு எல்லாத்துலயும் ரெம்பொ உதவியா இருந்தாருங்க பழம். இப்ப ஒரு முக்கியமான கை கொறையுதுங்க” என்றான் இன்னொரு ரூம்மேட் சிவா.

இரண்டு டேக்ஸிகளில் ஏர்போர்ட் வந்தடைந்தார்கள். டெர்மினல் இரண்டு. 2004 டிசெம்பர் 27 அன்றைக்கும் இதே கவுண்ட்டர்தான். ‘அவசரம் புறப்பட்டு வா கடல் கொந்தளிப்பு’ என்று தகவல் வரவும் அரக்கப்பரக்க ஓடிவந்து மூச்சுவாங்க அங்கு இருக்கிற ஏர்லைன்ஸ் மேலதிகாரியிடம் எப்படியாவது ஒரு சீட் வேணும் சார். என் குடும்பமே எங்கிருக்குன்னு தெரியலை சார், பிளீஸ் சார்’ எப்படி மறக்கமுடியும்? மயங்கிச் சரிந்தது, கண்ணீர் கொட்டியது, ‘ஒன்றும் ஆகியிருக்காது, தைரியமாகப் போங்கள்’ என்று இதே வரதனும் சின்னானும் தேற்றியது, அந்த அதிகாரி பிசினெஸ் கிளாசில் சீட் கொடுத்தது… என எல்லாம் அங்கிருக்கிற வாட்டர் ஃபவுண்டனைப் போல பழைய நினைவுகளை பீய்ச்சி அடிக்கிறது பழனிக்கு. வரதனுக்கும் சின்னானுக்கும் கூட. எவ்வளவு தவிர்க்கப் பார்த்தும் முடியாமல் முழிக்கிறார்கள். பழனிதான் முதலில் மீண்டும் ‘சரி போய் வருகிறேன்’ என்கிறான். எல்லோரிடமிருந்தும் பழனியப்பனுக்குச் சொல்ல வேண்டிய செய்தி இருக்கிறது. பழனியப்பனை தைரியமாய் இருக்கச் சொல்கிறார்கள். கண்கலங்கி கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். அவனைப் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கச் சொல்கிறார்கள். பழனியுடன் படம் எடுத்துக் கொள்கி றார்கள்.

‘நான் தைரியமாய் இருக்கிறேன். எல்லோருக்கும் என் நன்றி’ கைகுலுக்கி விடைபெறுகிறான் பழனியப்பன். செக்-இன் முடிந்து உள்ளே சென்ற பழனியப்பன் கண்ணாடிச்சுவர் வழியாகக் கையசைக்கிறான். அவர்களும் கை அசைத்து மறைகிறார்கள். சற்று நேரத்தில் பயணிகள் விமானத்தினுள் அனுமதிக்கப்பட்டு விமானம் புறப்படத் தயாராகிறது.

விமானம் ஓடு பாதையில் மெதுவாக ஓடி பின் வேகமெடுத்து வானில் ஏறிப் பறக்கிறது.

ஜன்னலைத் திறந்து பார்க்கிறான். கீழே ஊதாக்கடல் சின்ன வரைபடமாய்க் கிடக்கிறது. அதிலிருந்து சங்கீதாவும், பிள்ளைகள் சரணும், மீனுவும் வெளியே வந்து நிற்கிறார்கள். சங்கீதா ஒன்றும் பேசாமல் சிரித்துக் கொண்டிருக்கிறாள். சரண்தான் கேட்கிறான் ‘அப்பா எனக்கு சாக்லேட் வெளையாட்டு சாமான்லாம் வாங்கிட்டு வார்றியா?’ பழனியப்பன் தலை ஆடுகிறது. பொண்ணை பார்க்கிறான். என்னம்மா வேணும் உனக்கு என்பது போல இருக்கிறது அந்தப் பார்வை. ‘அப்பா எனக்கும் ட்ரெஸ், சாக்லேட், வெளையாட்டுச்சாமான்லாம் வாங்கிட்டு வருவியா’ என்கிறாள் மீனு. ‘ம் ஆமாண்டா செல்லம்’ பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் எனத்தோன்றுகிறது. விட்டு வரும் போது சின்னவன் இன்னும் பால்குடித்துக் கொண் டிருந்தான். மீனுக்கு 2 வயது. அதற்கப்புறம் போனில் பேசியதுதான். சங்கீதா வாராவாரம் போனில் பேசும் போதெல்லாம் ‘வந்து விடுங்கள் அத்தான், நீங்கள் படிச்ச ஐ.டி.ஐ. எலக்ட்ரிகல் படிப்புக்கு இங்கயே நல்ல வேலை கெடைக்கும்’ என்பாள். “கொஞ்சம் பொறுத்துக்கொள் வந்துவிடுகிறேன். கடனை அடைக்க வேண்டுமே.” யாரோ கூப்பிடுவது போலிருக்கிறது. ஜன்னலிலிருந்து முகத்தைத் திருப்புகிறான். ஏர்ஹோஸ்டஸ் சாக்லேட் தட்டுடன் நின்று கொண்டிருக்கிறாள். சாக்லேட் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம் என்று எடுத்து வைத்துக் கொள்கிறான்.

மீண்டும் ஜன்னலுக்குத் திரும்புகிறது முகம். கடலைத் தேடுகின்றன கண்கள். பக்கத்தில் வெள்ளைப்பஞ்சு போல மேகங்கள். ஊதாக்கலரில் விரித்துப் போடப்பட்ட வானம் தெரிகிறது. கடல் எங்கே? கடலை விட்டு உயரமாய் மேலேறிவிட்டது விமானம். இனி சங்கீதாவையும் பிள்ளை களையும் பார்க்க முடியாது. கடல் திரும்பவும் இறங்கும் போது பார்க்கலாம். அப்போது அதனிடம் எனக்குக் கேட்க நிறைய இருக்கின்றன. நினைத்தவாறே ஜன்னலிலிருந்து வெளிவருகின்றன பழனியப்பனின் எண்ணங்கள்.

“என்ன சார் டிரிங்ஸ் சாப்பிடலிங்களா?” என்கிறார் பக்கத்திலிருப்பவர். புன்னகைத்து விட்டு ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் கொள்கிறான் ஏர் ஹோஸ்ட்டசிடமிருந்து. அவன் ரூம் நண்பர்களும் அவனை டிரிங்ஸ் சாப்பிட அழைப்பார்கள். பழக்கமில்லாததை வற்புறுத்தாதீர்கள் என்று மறுத்து விடுவான் பழனியப்பன். அவர்கள் உடல்பசியை ஆற்றிக் கொள்ள விலைமாதர்களிடம் போய் வருவார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் சிராங்கூன் போய் குழுமி, குடித்து சுற்றி விட்டு வருவார்கள். ஆறுநாள் கடின உழைப்புக்கு ஒரு நாள் ஜாலியாக இருப்பதில் தப்பில்லை என்பார்கள்.

லீவு நாட்களிலும் கண்டைனரே கதி என்று இருந்து விடுவான் பழனியப்பன். தனிமை கொன்றது. தவறான முடிவெடுத்து விட்டதாகத் தோன்றியது. குடும்பம் பிரிந்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று நினைத்தான். ஒன்றைப்பெற இன்னொன்றை இழக்க வேண்டியிருக்கிறது என்றால் எதை இழக்கிறோம் என்பது முக்கியம் அல்லவா? களி தின்னவில்லை, கம்பி எண்ணவில்லை; ஆனாலும் இதுவும் ஜெயில் வாழ்க்கைக்கு ஒன்றும் குறைவில்லைதான்.

‘போனிலும் கடிதத்திலுமே வாழ்ந்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா அத்தான்?’ என்கிற சங்கீதாவின் சொற்கள் அவன் நெஞ்சு குத்தும். மாமாதான் மகளுக்கு ஆறுதல் சொன்னார் ‘நம்ப குடும்பம் முன்னேறத்துக்குத்தானே மாப்ள சீமக்கி போயிருக்கு. ஒனக்குத் தொணைக்கி நான் இருக்கேன். அத்தை இருக்கு. பிள்ளைக இருக்கு. மாப்புளைக்கு அங்கே யாரு இருக்கா? தனியா மாப்ள கஷ்ட்டப்படுமில்ல? நீ வேறே ஆறுதலாப் பேசுவியா? அதெ விட்டுப் புட்டு அவனப் போட்டுப் புடுங்காதெ புள்ளே’ என்று.

அதன் பிறகு போனில் சங்கீதாவின் குரல் குழையும். பத்தரமா வேலை பாருங்கத்தான் எனச்சொல்லும். நல்லா சாப்பிடுங்கத்தான் எனக் கெஞ்சும். அவன் அம்மாவும்தான் நல்லா சாப்புடுறா தம்பி என்பாள். போறது வாறது சாக்கிரதை என்பாள். அப்புறம் பிள்ளைகள் பேசுவார்கள். வாராவாரம் ஒரு போன் அட்டை வாங்கி எல்லோருடனும் பேசித்தீர்க்க வேண்டும் பழனியப்பனுக்கு. அந்தச் சந்தோஷத்திலேயே அடுத்த ஒரு வாரத்தை ஓட்டிவிடுவான்.

நாம் சென்னைக்கு அருகிலே வந்துவிட்டோம். இன்னும் சற்று நேரத்தில் தரையிறங்கப் போகிறோம் என்கிற அறிவிப்பு அவனை நிகழ்வுக்குக் கொண்டு வருகிறது.

பழனியப்பனின் ஜன்னலில் கடல் தெரிகிறதா? ஆம் தெரிகிறது ஊதாக்கடல். கடலிடம் கேட்க வேண்டும். என்று நினைத்திருந்தது நினைவிலிருக்கிறது. எங்கே சங்கீதாவைக் காணோம். பிள்ளைகளையும் காணோமோ? கடலே அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்? உன்னிடம் கேட்க வேண்டும் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேட்க வேண்டும். உன் கோரப்பசி என்ன அவ்வளவு கொடூரமானதா? என் குடும்பத்தையே வாரிச்சுருட்டி முழுங்கி விட்டாயே? அவர்களை மட்டுமா முழுங்கினாய் நாகப்பட்டிணத்தில் இன்னும் ஆறாயிரம் பேரையுமல்லவா முழுங்கினாய். உலகம் பூரா ஆயிரமாயிரமாய் முழுங்கினாய். எத்தனை ஆசையுடன் இருந்திருப்பாள் என் சங்கீதா? மகனைக்காண எவ்வளவு ஆசையாய் இருந்திருப்பாள் என் அம்மா? எத்தனை ஆசையாய் இருந்திருப்பார்கள் என் செல்லங்கள்? வளர்ந்திருந்த என் பிள்ளைகளைப் பார்க்க காத்திருந்த எனக்கு அவர்களின் பிரேதங்களைக் கூட காட்டாமல் மறைத்து விட்டாயே? பழனியப்பன் கண்களில் நீர் சுரக்கிறது. மூன்று வருடச் சோகம், காலம் தின்றும் இன்னும் மீதமிருந்தது.

நம்பிக்கையோடு நாகையை அடைந்தவனுக்கு அவன் மாமா வந்து கையை விரித்துப் புலம்பிய போதுதான் உண்மை தெரிந்தது. மயங்கினான். அழுது புரண்டான். யாராவது வந்து இதோ உன் குடும்பத்தினர் உயிரோடிருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டார்களா? வீடு கூரையைப் பிய்த்துக் கொண்டு போய்க்கிடந்தது. பிள்ளைகளின், சங்கீதாவின், அம்மாவின் உடல்களையாவது பார்க்கமாட்டோமா என்று பிணம் பிணமாகப் புரட்டிப்பார்த்து கொண்டிருந்தான். திரும்பிய பக்கமெல்லாம் சோகம். பார்த்தவர்கள் எல்லாம் யாரையாவது பறிகொடுத்திருந் தார்கள். யாருக்கு யார் ஆறுதல் சொல்ல? மாமாதான் அவனுடன் இருந்து காரியங்களைச் செய்ய உதவினார். பிறகு யோசித்து அவன் சோகச்சுமை குறைக்க திரும்பவும் சிங்கப்பூர் அனுப்பி வைத்தார்.

சிங்கப்பூர் வந்தான் பழம் எல்லோரையும் கடலுக்குக் காவு கொடுத்துவிட்டு. தெரிந்தவர் தெரியாதவர் என்று அனைவரும் அவனுக்காகச் சோகமானார்கள். தற்காலப் பிரிவையே தாங்கமாட்டாத பழத்திற்கா இப்படி வரவேண்டும்? இவன் எப்படித்தாங்கப் போகிறான் என்று வருந்தினார்கள். ஆனால் பழம் தெளிவடைந்தான். அவனுக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. தன் பிள்ளைகள் இறக்கவில்லை இன்னும் உயிரோடிருக்கிறார்கள் என்பான். அவன் தெளிவாய் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாய் இருந்தது.

விமானம் இந்திய மண்ணில் கால் பரப்பியபோது ‘நங்’ என்றது. காது அடைக்கிறது. ஓடு பாதையில் ஓடி வேகம் குறைத்துத் திரும்பி நிற்கிறது. பைலட் சென்னையின் வெப்ப நிலை, லோக்கல் நேரம், நன்றி சொல்கிறார். பயணிகள் பெட்டிகளுடன் வெளியேறுகிறார்கள். பழனியப்பன் தன் லக்கேஜ் வரக் காத்திருந்து எடுத்துக் கொண்டு கஸ்டம்ஸ் கடமைகளை முடித்து வெளியே வரும்போது மணி 11.30 ஆகிறது. கூட்டத்தை அவன் கண்கள் துழாவுகின்றன. அவன் மாமா முன்னே வந்து கட்டித் தழுவிக் கொள்கிறார்.

‘வாங்க மாப்ளே எப்படி பிரயாணம் எல்லாம் சௌகரியமா?’

‘ஒன்னும் பிரச்சினை இல்லை மாமா’ என்கிறான்.

‘கார் எடுத்தாந்திருக்கேன் மாப்ள. வழியில எங்காவது நல்ல ஓட்டலா நிறுத்தி சாப்பிட்டுக்கலாம்’ சொல்லிக் கொண்டே காரை நோக்கிப் போகிறார்கள்.

‘சரி மாமா’.

பெட்டிகளை டிக்கியில் வைத்துப் பூட்டிவிட்டு ஏறிக்கொள்கிறார்கள். கார் புறப்படுகிறது.

“உன் விருப்பப்படியே எல்லா ஏற்பாடுகளும் பண்ணியிருக்கேன் மாப்ள’.

‘ரொம்ப நன்றி மாமா’ அழுகை வருகிறது அவனுக்கு. காட்டிக்கொள்ளாமல் இருக்கிறான்.

‘அழாதெ மாப்ள’ அவன் கண்களைப் பார்த்து விடுகிற மாணிக்கத்தையும் சோகம் பற்றிக்கொள்கிறது.

வழியில் ஓர் ஓட்டலில் காரை நிறுத்தி சாப்பிட்டு விட்டு மறுபடி புறப்படுகிறார்கள். பேசிக்கொண்டே வந்ததில் கார்ப் பயணம் அலுக்கவில்லை.

நாகைக்குள் கார் நுழைகிறது. மாணிக்கம் காட்டிய வழியில் சென்று ‘அன்னை தெரசா’ அனாதை இல்ல வாசலில் கார் நிற்கிறது. அங்கிருந்தவரிடம் பழனியப்பனை அறிமுகப்படுத்துகிறார் மாணிக்கம். அங்கிருக்கிற குழந்தைகளுக்கெல்லாம் சாக்லேட் கொடுக்கிறான் பழம். பிள்ளைகள் சந்தோஷமாய்ச் சாப்பிடுவதைப் பார்த்து சந்தோஷப்படுகிறது பழனியின் மனம். அங்கிருக்கிற அதிகாரி பழனியப்பனிடம் சில பேப்பர்களில் கையொப்பம் வாங்கிக் கொள்கிறார். அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு மீண்டும் புறப்படுகிறார்கள். சற்று நேரத்தில் ஒரு புது வீட்டின் முன்னே காரை நிறுத்தச் சொல்கிறார் மாணிக்கம்.

‘இதுதான் மாப்ள உன் வீடு’ அரசாங்கம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்த இடத்தில், மானியத்தில் எழும்பியிருந்தது அந்த வீடு.

கதவு திறந்து ஒரு வயதான அம்மா எட்டிப்பார்க்கிறார். ‘வாப்பா’ என்கிறார் வாஞ்சையோடு.

‘ஆமாம்மா. எப்படி இருக்கீங்க?’ பழனியப்பன்.

அந்த அம்மாள் தலையசைத்துப் புன்னகைக்கிறார். உள்ளிருந்து நான்கு சிறுவர்கள் எட்டிப் பார்க்கிறார்கள்.

ஒரு குட்டிப்பையன் சரணைப்போல, அவனுக்குக் கொஞ்சம் பெரிசா ஒரு பொண்ணு மீனு போல. அவளுக்குப் பெரிசா இன்னும் இரு பையன்கள். பழனியப்பன் அவர்களைப் பார்க்கிறான்.

‘உள்ளே போய் உட்காரு மாப்ள’.

பழனியப்பன் உள்ளே நுழைகிறான். ஹாலில் பாய் விரித்திருக்கிறது. பிள்ளைகள் ஓரமாய்ப் போய் நின்று பழனியையே பார்க்கிறார்கள். மாணிக்கமும் ட்ரைவரும் சுமைகளை எடுத்து வந்து வைக்கிறார்கள்.

மாணிக்கம் யாரையும் அறிமுகப்படுத்தவில்லை.

பழனியே அழைக்கிறான். “ராமு, சீதா, நீ குமார், நீ ரவிதானே? வாங்க வாங்க எல்லாரும் வாங்க. உங்களுக்கு சாக்லேட், வெளையாட்டுச் சாமான், ட்ரெஸ்லாம் வாங்கியாந்திருக்கேன்.”

எல்லோரும் தயங்கியபடியே நிற்கிறார்கள். பெட்டியைப் பிரித்து வைக்கிறான். சாக்லேட் டப்பாவை எடுத்து நீட்டுகிறான். முதலில் குட்டிப்பையன் பக்கத்தில் வருகிறான். அவனைத் தொடர்ந்து குட்டிப்பெண்ணும் வருகிறாள். இருவரையும் இழுத்து மடியில் அமர்த்திக் கொள்கிறான். மற்றவர்களும் வருகிறார்கள். எல்லோரும் பாயில் வந்து அமர்கிறார்கள்.

‘வாங்க அம்மா, வாங்க, மாமா இந்தாங்க, எல்லாரும் எடுத்துக்குங்க’.

குடும்பத்தை இழந்து தனிமரமாய் நிற்கிற அந்த அம்மாவின் கண்கள் குளமாகின்றன.

‘அழாதீங்கம்மா, மாமா எல்லாம் சொன்னார். இனி நான்தான் உங்க மகன். உங்கள ஒரு குறையும் இல்லாமெ பாத்துக்குவேன்.’

அம்மா முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.

‘தங்கமான என் மாப்ள கூட வாழ குடுத்து வக்கலியே என் மகளுக்கு’ மாணிக்கம் பொறுக்கமுடியாமல் குலுங்கிக் குலுங்கி அழுகிறார்.

‘அழாதீங்க மாமா. உங்க மக இன்னும் இறக்கலை. அவதேன் எனக்கு வழிகாட்டுறா. இங்க பாருங்க உங்க பேரப்புள்ளைகளை’.

பிள்ளைகள் சாக்லேட்டை சுவைத்துக் கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். விரித்துக் கிடக்கிற பாயில் பிள்ளைகள் ஒன்றாய்ச் சேர்ந்து விளை யாட்டுப் பொம்மைகளை எடுத்து வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

– தமிழ் முரசு, புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *