பாம்ப்ரெட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 4,375 
 
 

(இதற்கு முந்தைய ‘அதிர்ச்சி வைத்தியம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

கோமதி கணவர் மச்சக்காளையின் தீவிர பக்தை. தாய்க்குப் பின் தாரம் என்கின்ற பாணியில் சொன்னால் மணாளனுக்குப் பின்தான் மகன்!

ஆனால் இதெல்லாம் சம்சுதீன் கடைக்குப்போய் இனிமேல் பீடி வாங்கிக்கொண்டு வரமாட்டேன் என்று கதிரேசன் சொல்வதற்கு முன்னால் வரைதான்! அதற்குப் பிறகு கோமதியின் கதையிலும் திருப்பம்.

இந்தக் கோமதி என்று இல்லை; எல்லா கோமதிகளுக்குமே புருஷன்மார்களிடம் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பயம் மன ஆழத்தில் இருக்கும். அந்தப் பயம் ஒரு குறிப்பிட்ட வயதுவரை பெற்ற பிள்ளைகளிடம் இருக்காது.

ஆனால் அந்தக் குறிப்பிட்ட வயதில் வரவேண்டிய பேச்சு இப்போதே இப்போதே கதிரேசனுக்கு வந்துவிட்டதால், கோமதிக்கும் இப்போதே அந்தப் பயமும் வந்துவிட்டது. அதனால் அவள் மச்சக்காளை கொடுத்த மாதிரி பொய்யான அதிர்ச்சி வைத்தியத்தைச் செய்து பார்க்கக்கூட துணியவில்லை.

எப்போதுமே கோமதிகளுக்கு புருஷன்மார்களின் எதிர்கால ஆயுள் தீர்க்கம் பற்றி ஒரு பயமும் சந்தேகமும் நடந்துவிட்டால் அப்போது கோமதிகளுக்கு பெற்ற பிள்ளைகளின் ஆதரவும் பாதுகாப்பும் தேவை. அந்த எச்சரிக்கை உணர்வின் பயம் இல்லாத கோமதிகள் கிடையாது. மச்சக்காளையின் பெண்டாட்டி கோமதியும் இதற்கு விதிவிலக்கு கிடையாது!

ஆனால் மற்ற கோமதிகளிடம் இல்லாத ஒரு விசேஷம் இந்த கோமதியிடம் தற்போது ஏற்பட்டுவிட்டது. அது இன்னும் பத்துப் பன்னிரண்டு வருஷம் கழித்து கதிரேசனிடம் வரவேண்டிய பயம் இப்போதே அவளிடம் வந்துவிட்டது! முந்திரிக்கொட்டை மாதிரி!

அதனால் தகப்பனுக்கு பீடி வாங்கித் தருகிற வேலையைச் செய்ய முடியாது என்று சொன்ன கதிரேசனைப் பார்த்து கோமதி எகிறிக் குதிக்கவில்லை. மகன் எதுவுமே சொல்லாத மாதிரி, வேற்றுமையாக அவன் நடந்தே கொள்ளாத மாதிரி முகத்தை ரொம்ப ரொம்ப இயல்பாக வைத்துக்கொண்டு எப்போதும்போல சகஜமாக இருப்பதுபோல் இருந்து கொண்டிருந்தாள்.

ஆள் கண்ட சமுத்திரம் மச்சக்காளை. கோமதியின் கண்ணுக்குப் புலப்படாத இத்தனை தடுமாற்றங்களையும் கவனிக்காமல் இருந்து விடுவாரா? உடனே கவனித்துவிட்டார்! ஆனால் கவனிக்காதவர் மாதிரி இருந்துவிட்டார்!

இப்படி வீட்டில் முக்கியமான மூன்று பேர் ஒருத்தரை ஒருத்தர் கவனித்தும் கவனிக்கதவர்கள் மாதிரி, கண்டும் காணாதவர்கள் மாதிரி, முதலில் கொஞ்சம் செயற்கையாக இருந்து கொண்டிருந்தார்கள். போகப்போக அதுவே இயல்பு என்பதுபோல அப்படியே வாழ்ந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். கதிரேசன் மட்டும் கூடுதலான இயல்புடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

பத்து வருடங்கள் இப்படியே ஓடிப்போய் விட்டன. முதல் ஐந்து வருடங்கள் மச்சக்காளையேதான் அவருக்கான பீடி ‘எழவை’ தினமும் கடைக்குப்போய் வாங்கி வந்துகொண்டிருந்தார். ஆனால் ‘ஒரு பீடி வாங்கித்தர இந்த வீட்டில் ஆள் இல்லை’ என்று அடிக்கடி புலம்புவார். இந்தப் புலம்பலை கதிரேசன் வீட்டில் இல்லாத நேரத்தில்தான் வைத்துக்கொள்வார். அவன் வீட்டில் இருக்கும்போது மூச்சுக் காட்டமாட்டார்! இருந்தாலும் அவர் அப்படிப் புலம்புவது அவனுடைய காதுக்கு வரத்தான் செய்தது. அந்தக் காரியத்தை செய்தது கதிரேசனின் தம்பி முருகேசன்!

பார்த்தார் மச்சக்காளை. ஐந்து வருடங்கள் அவர் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம். அதற்கு அப்புறம் கதிரேசனின் தம்பி முருகேசனை தினமும் அவருக்குப் பீடி வாங்கித் தருகிற வேலையைச் செய்ய ஏற்பாடு பண்ணிவிட்டார். முருகேசன் தன் அண்ணன் மாதிரி கிடையாது. தகப்பனுக்கு பீடி வாங்கித் தருவதற்கு அவன் தயார்! ஆனால் ஒரேயொரு விஷயம், பீடி வாங்கிக் கொடுப்பதற்கு அவ்வப்போது மச்சக்காளை முருகேசனுக்கு ‘கமிஷன்’ வெட்டினார் என்றால் ரொம்ப உத்தமம்!

முருகேசன் அவருக்கு எத்தனை பீடிக்கட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொடுப்பான். அதில் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மச்சக்காளைக்கும் பிரச்சினை இல்லாமல் போய்விட்டது. இதனால் முருகேசனே அவருக்கு ஓசி பேப்பரும் ஓடிஓடி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான். நல்லவேளை; கதிரேசனுக்கு அந்தப் பாடும் இல்லை.

பத்து வருட வாழ்க்கை எல்லாவித விடுதலையோடும் அவனுக்கு ஓடிப்போய் விட்டது ஓடி…

இருபத்தியிரண்டு வயது இளைஞனாக உயர்ந்துவிட்ட கதிரேசனுக்கு கருகருவென மீசையும் நன்கு வளர்ந்துவிட்டது. தகவல் தொடர்புத் துறையில் பாளையங்கோட்டையில் இருந்த தூய சவேரியார் கல்லூரியிலேயே நன்கு படித்து முதுகலைப் பட்டம் வாங்கிவிட்டான்.

வேலை தேடி சென்னைக்கோ அல்லது பெங்களூருக்கோ செல்ல யோசனை செய்து கொண்டிருந்தான்.

ஆனால் அவன் அதை செயலாக்குவதற்குள், நினைத்தே பார்க்கமுடியாத விஷயங்கள் கதிரேசனின் வாழ்க்கையில் வேகமாக நடைபெற்றுவிட்டன.

அன்று ஞாயிற்றுக்கிழமை…

கோமதி மதிய உணவிற்கு கோழிக் குழம்பும், கோழி ரசமும் செய்திருந்தாள். தவிர, தொட்டுக்கொள்ள தூத்துக்குடியில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட பாம்ப்ரெட் (pomfret) வகை மீன்களையும் ஸ்டீமில் நன்றாக அவித்து வைத்திருந்தாள். பாம்ப்ரெட் மீன்களை முழுதாக வேகவைத்து அப்படியே அவற்றில் எலுமிச்சைச் சாறைப் பிழிந்து; சிறிது மிளகு தூவி; கை விரல்களால் மெதுவாக மீனை நீவி நீவி எடுத்து ரசித்துச் சாப்பிடுவார் மச்சக்காளை. மீன்களை புரட்டிப்போட்டு சாப்பிட்டதும், அதன் மத்திய எலும்புகளை அலுங்காமல் அப்படியே இன்னொரு சிறிய தட்டில் எடுத்து வைத்துவிடுவார். Omega 3 சத்து மீன்களில் அதிகம் என்று கேள்விப் பட்டிருக்கிறார்.

கோழிக் குழம்பின் வாசனை சமையல் அறையிலிருந்து கமகமவென வந்து கொண்டிருந்ததில், மச்சக்காளைக்கு கபகபவென ஊருக்கு முந்தி பசியெடுத்து விட்டது. வட்டிலை எடுத்து வைக்கச் சொன்னார்.

தான் ‘சாப்பிட வாங்க’ என்று கூப்பிடுவதற்கு முந்தியே புருஷன்காரன் வந்து சாப்பிட உட்கார்ந்துவிட்டால் அதற்கு மேற்பட்ட அங்கீகாரம் ஒரு பெண்டாட்டிக்காரியின் சமையலுக்கு வேறு எது இருந்துவிட முடியும்…?

கோமதி அவசர அவசரமாக மச்சக்காளை உட்கார பாயை விரித்துப்போட்டு அவரின் பிரத்யேக வட்டிலையும் எடுத்து வைத்தாள். மின்விசிறியை மெதுவாகச் சுழல விட்டாள்.

சட்டையின் வலது கையை நன்றாகச் சுருட்டிவிட்டுக்கொண்டு மச்சக்காளை வசதியாக உட்கார்ந்தார், கோழிக்கறி குழம்பு எப்போது வைத்தாலும் கோழியின் தலை குடும்பத் தலைவரான மச்சக்காளைக்குத்தான்! கோழித் தலையை எத்தனை விதங்களில் எப்படியெல்லாம் சுவைத்துச் சாப்பிட முடியுமோ, மச்சக்காளை அப்படியெல்லாம் சாப்பிட்டார்! குழம்பையே இரண்டு தடவைகள் ஊற்றிச் சாப்பிட்டார். அதற்கே ஏப்பம் வந்து விட்டதென்றால் பார்த்துக் கொள்ளலாம், எவ்வளவு குழம்புச்சோறு உள்ளே போயிருக்கிறதென்று…

மறுபடியும் வந்த ஏப்பத்தை சோற்றை விழுங்குவதுபோல விழுங்கிக்கொண்டே அடுத்து கோழி ரசத்திற்கு வந்தபோது தொண்டை ஒரு மாதிரியாகக் கமறியது. செருமிவிட்டு அதையும் விழுங்கினார். சற்று உப்புக் கரித்தாற் போல இருந்தது.

ஒரு நிமிடம் யோசனை செய்துவிட்டு கொழிரசம் ஊற்றிய சோற்றை வேகமாகப் பிசையத் தொடங்கியபோது திரும்பவும் அவருக்கு தொண்டையை கமறிக்கொண்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் வாய்க்குள் அழுகிய முட்டையின் நெடிபோல வந்தது.

‘என்னடா இது எழவு’ என்று முனங்கிக்கொண்டே எழுந்துபோய் குழாயடியில் நின்று மச்சக்காளை காறித் துப்பினார். அவர் துப்பிய அத்தனையும் ‘செக்கச் செவேல்’ என்ற ரத்தம்! திரும்பத்திரும்ப அவருக்குத் தொண்டை கமறிக்கொண்டே இருந்தது. காறித்துப்பத் துப்ப சிகப்பாக ரத்தம்தான் ஏராளமாக வந்து கொண்டிருந்தது.

பயந்து நடுங்கி வேர்த்து விறுவிறுத்துப் போய்விட்டார் மச்சக்காளை…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *