பாட்டி கொடுத்த பரிசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 6,922 
 
 

ஊருக்குப் போவதென்றால் அதனை வட மகிழ்ச்சியான ஒரு சம்பவம் வாழ்வில் இருக்க முடியாது.

அங்கே தான் எனது தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அந்தை, மாமாவின் பிள்ளைகள், அருண், தேவி, தாருண்யா எல்லாம் இருக்கிறார்கள்.

அங்கிருக்கும் மலை, அருவி, ஆறு, குருவிகள், மைனாக்கள் இப்படி எல்லாமே எனக்குப் பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல அங்கே யார் வந்தாலும் திரும்பிப்போக விரும்பமாட்டாங்க.

ஆத்துக்குப் போனால் மீன்பிடிக்கலாம் தெப்பம் விடலாம், நீச்சல் அடிக்கலாம் நாள் முழுதும் விளையாடலாம்.

ஆனால் இவற்றையெல்லாம் விட ஊரில் எனக்கு பிடித்த ஒருத்தங்க இருந்தாங்க.

அவுங்க தான் என்னோட பாட்டி. நான் வருவேன்னு தெரிஞ்ச ஒடனே எனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அவற்றையெல்லாம் சேகரிச்சு வச்சிருவாங்க.

நான் போன ஒடனேயே “வந்துட்டியாடா பேரான்டிப் பயலே” என்று கட்டிப்பிடிச்சி மடியில் தூக்கி வச்சிக்கிட்டு கொஞ்சுவாங்க எனக்கு ஒருபோதும் அவங்களோட அன்புத் தொல்லையில இருந்து விடுபட மனம் வராது.

அவுங்க தொன்னுத்தொராவது வயசு வரை வாழ்ந்தாங்க. அண்மையில தான் அவங்க சாமிக்கிட்ட போய்ட்டதாக அம்மா சொன்னாங்க. அவுங்க செத்துப்போய்ட்டாங்க என்று சொன்னதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியல. நான் ஊர்ல இருந்த எல்லாப் பூக்களையும் பிச்சிக்கிட்டு வந்து கலர் கலரா பெரிய மலர்வளையம் செய்து அவர்களுக்கு சாத்தி என் மனதைத் தேத்திக்கிட்டேன்.

இப்ப நான் திரும்பவும் ஊருக்கு வந்திருந்தேன் ஆனால் இங்கு எனக்கு பிரியமான எங்க பாட்டி இல்ல.

இருந்த இடத்தை யாராலேயும் நிரப்ப முடியாது. அதோட இன்னிக்கு என்னோட பொறந்தநாள் வேற. பாட்டியிருந்தா ஏதாவது பரிசு ஒன்று தரமாட்டாம இருக்க மாட்டாங்க. அவங்களுக்கு தையல் வேலை செய்யிறது, ரேந்தை, ஸ்வெயிட்டர் பின்னுறதுன்னா ரொம்ப பிடிக்கும். நேரம் கிடைக்கிற போதெல்லாம் தையல் வேலை யும் பின்னல் வேலையும் செஞ்சிக்கிட்டே இருப்பாங்க. அவங்க தைக்கிற போதும் பின்னுற போதும் வல-து கையின் நடுவில் ஊசிகுத்திவிடாமல் இருப்பதற்காக வெள்ளியால் செய்யப்பட்ட அங்குசம் ஒன்று அணிந்திருப்பாங்க.

மத்த இரண்டு விரல்ல ஒன்றில் தங்க மோதிரமும் இன்னொரு விரல்ல ஒரு வெள்ளி மோதிரமும் மின்னிக்கொண்டிருக்கும் அது அவங்களுக்கு தனியான மரியாதையை எங்கள்ள ஏற்படுத்தும் அவங்க அப்படி கண்ணுங்கருத்துமா கவனிச்சி கவனிச்சி தைக்கிற உடுப்புங்களையும், ஸ்வெட்டர்களையும் எங்களுக்கே பரிசாகக் கொடுத்திடுவாங்க. நாங்க ஓடனேயே அவங்க முன்னுக்கே அதையெல்லாம் போட்டுக்கிட்டு மினுக்கி குலுக்கி லாத்திக்கிட்டு திரிவோம். அத பாத்து அவங்க சந்தோசப்படுவாங்க நாங்க டவுன் பாடசாலைல படிச்சிக்கிட்டிருக்கிறப்ப மூனு மாசத்துக்கு ஒருக்காத்தான் விடுமுறை விடுறப்ப ஊருக்கு போவோம். நாங்க போன ஒடனேயே ஒரு ஞாயித்து கிழமையில ஒரு தடிச்ச சதை உள்ள பருத்த பொட்டைக் கோழியா பார்த்து அன்னைக்கி சமைக்கிறதுக்கு அம்மா ஒதுக்கி வச்சிருவாங்க நாங்க வீட்டுல இருந்து ஒரு ஒரு கிலோ மீட்டர் தூரத்திலதான் விளையாடிக்கொண்டிருப் போம். அப்ப ஒரு பதினொரு மணிபோல கமகமன்னு ஒரு வாசம் வந்து நாசிய தொளைச்சிக்கிட்டே போகும். எல்லோருக்கும் தெரிஞ்சிடும். அம்மா, கோழிய சமைக்கிறாங்கன்னு ஒடனே ஓடிப்போய் சாப்பிடனும்னு தோணும். ஆனா சாப்பாடா வெளையாட்டான்னு நெனக்கிறப்ப வெளையாட்டுதான் முக்கியம்னு மனசுக்குப் படும். நாங்க நல்லா வெளையாட்டுட்டுக் களைச்சுப் போனதும்தான் வீட்டுக்குப் போவம்.

ஆனா நாங்க எப்ப வருவோம்ன்னு பார்த்துக்கிட்டே இருப்பாங்க. எங்கள கண்ட ஒடனே அவங்க முகத்தில அப்படி ஒரு மலர்ச்சி தோன்றும். “என் செல்லப் பேராண்டி இங்க வாடா செலல்மே” அப்படீன்னு என்னை அமுக்கிக் கூட்டிக் கொண்டு அப்புறமா அழைச்சிட்டுப் போவாங்க. என்ன எதுக்கு அப்படி கூட்டிட்டுக் போறாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். ருசியா சாப்பிறதுக்கு ஏதாவது ஒளிச்சி வைச்சிருப்பாங்க. அவுங்க அந்த சாப்பாட்டு சாமானத்த யாருக்கும் தெரியாம கடுதாசிய வைச்சு மடிச்சு முந்தானையில் முடிஞ்சி இடுப்புல சொருகி வைச்சிருப்பாங்க. ஆனா எனக்கு விசயம் வௌங்கிரும். நானும் மத்தவங்கள விட்டுட்டு அவுங்க இழுத்த இழுப்புக்கு போவேன். அவுங்க நெனைப்பாங்க பாட்டிக்கிட்ட மாட்டிக்கிட்டேன்னு.

ஆனால் பாட்டி கொடுக்கிற சாப்பாட்டு சாமானங்கள் விசேசமாக தாயாரிக்கப்பட்டவையாக இருக்கும். அவை அமுதத்தை விட ருசியாக இருக்கும்.

என்பது எனக்கு மட்டுந்தான் தெரியும். அண்ணைக்கும் அப்படித்தான். என்னை அருகே இருந்த மரத்தடிக்கு மறைவாகக் கூட்டிக் கொண்டு போய் கல்மேடையில் அமரச்செய்து அவங்களும் என் தோள் மீது கைபோட்டு குந்திக்கிட்டாங்க.

பொறகு மெதுவா தன் இடுப்பில் சொருகி வைச்சிருந்த சாமானங்களை உருவியெடுத்து பிரிச்சு ஒன்னொன்னா என் வாய்க்குள்ள போட்டாங்க.

அது என்னான்னு தெரிஞ்சுக்க இப்ப ஒங்களுக்குகெல்லாம் ரொம்ப ஆர்வமாயிருக்குமில்ல. சொல்லிப்புடுறேன். அது வேற ஒன்னுமில்ல அம்மா அன்னைக்கு சமைக்கிறதுக்கு நல்ல தடிச்ச கோழியா பாத்து வெட்டுனாங்கல்ல, அந்த கோழியில் இருந்து அதன் ஈரல், கல்லீரல், இரப்பை, கர்ப்பப்பை, போடாம இருக்கிற சின்ன சின்ன முட்டைகள், கொடலு இவை எல்லாத்தையும் தனியா எடுத்து இளஞ்சூட்டுதண்ணியில் கொஞ்சம் எலுமிச்சை சாறுவிட்டு நல்லாக் கழுவி உப்பு, மொளகுத்தூள், கொச்சிக்காத் தூள், மசாலா, இஞ்சி, வெள்ளைப்பூண்டு அரைச்சு இன்னும் என்னன்னமோ போட்டு ஊறவைச்சு அது பதமானதும் ஒவ்வொரு துண்டா எடுத்து, நீண்ட கம்பி வைச்சிருப்பாங்க, அதுல வரிசையா குத்தி வீட்டுக்கு வெளியில ஒதுக்குப்புறமா மூணு கல்லு நட்டு, பொறுக்குன மிலாறுகளப் போட்டு நெருப்பு மூட்டி எறைச்சிய நல்ல பதமா வாட்டி வதக்கி எடுப்பாங்க. இந்தமாதிரித்தான் வேடர்கள் முந்திய காலத்தில் செஞ்சி சாப்பிடுவாங்க. பொறகு மீந்து இருக்கிற எறைச்சிய அவுங்க தேனுல போட்டு ஊறவைச்சி வச்சிருவாங்களாம். பொறகு சாப்பிடுறதுக்கு தேனுல போட்டுவச்ச எறச்சி எத்துன நாளுக்கும் கெட்டுப் போகாதாம்.

எனக்கு இந்தமாதிரி தேனுல போட்டு ஊறவச்சிருந்த எறச்சிய தின்னுறத்துக்கு ரொம்ப நாளா ஆசையா இருந்துச்சி. ஆனால் அந்த ஆசை நெறவேரல. பாட்டி அத செஞ்சி கொடுக்காமலேயே செத்துப் போய்ட்டாங்கிறதுல எனக்கு கொஞ்சம் கவலதான். ஆனா அதுக்காக பாட்டி மேல எனக்கு கோபங்கூடகெடையாது. அவுங்க எப்போதும் எனக்குப் பிடிச்ச பாட்டிதான்.

ஆனா இன்னைக்கு எனக்கு பொறந்த நாளும் அதுவுமா பாட்டியின் ஞாபகங்கள் வந்து என்னோட மனதை வாட்டி வதைக்குது. அவுங்க இதுக்குமொதல்ல எனக்குப் பரிசுப் பொருட்களையும் கொடுத்த எல்லாப் பொருட்களையும் என்னோட கட்டிலோரம் போட்டுருக்கிற ராக்கையில நான் அடுக்கி வச்சிருக்கிறேன்.

அப்பப்ப பாட்டியின் நெனப்பு வர்றப்பெல்லாம் அந்த ராக்க கிட்ட போயிருந்து ரொம்ப நேரம் அழகு பார்த்திட்டிருப்பேன்.

அன்னைக்கும் கூட அப்படித்தான் அவுங்க தச்சுக் கொடுத்த பூப்போட்ட உறை போட்டிருந்த அந்த தலையணையை பாட்டியின் நினைவாக நெஞ்சில வைச்சி அணைச்சிக்கிட்டிருந்தேன். அப்போ என் விரல்கல்ல ஏதோ நெருடுற மாதிரி இருந்துச்சி. எனக்கு ஆவல் அதிகமாக நான் லேசாக பிரிச்சிப் பார்த்தேன்.

எனக்கு ஆச்சரியம் தாங்க முடியல. அது வந்து அவுங்க தையல் வேலை செய்யும் போது நடுவிரல்ல போட்டிருக்கிற அந்த வெள்ளி அங்குசம். அது இப்பவும் நல்லா மின்னிப் பிரகாசித்தது. எனக்கு ஆச்சரியம் தாங்க முடியல. அத அவுங்க தவறுதலா தலையாணியில வைச்சு தச்சிருக்கணும்.

அப்படின்னா எங்க பாட்டி உசுறோட இல்லாட்டினாலும் இந்த பேராண்டிக்கு பொறந்த நாளுக்கு கொடுக்க வேண்டிய பரிசை கொடுத்துட்டாங்க.

ஒங்களுக்கெல்லாம் பாட்டிமார்களும் ஆச்சிமார்களும், அப்பாயிகளும் இருந்திருக்கலாம். ஆனா என்னோட பாட்டி மாதிரி பாசமுள்ள பாட்டி எங்கேயும் இருந்திருக்க மாட்டாங்க. அவுங்கல நெனைக்க எம் மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு.

இலங்கையின் மூத்த தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் கவிஞருமான இரா.சடகோபன் அவர்கள் நாவல் நகர் என்று சிறப்பாக அழைக்கப்படும் மலையகத்தின் மத்தியில் இருக்கும் சிறு நகரமான நாவலபிட்டியின் அருகில் அமைந்துள்ள மொஸ்வில்ல தோட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர். மொஸ்வில்ல தோட்ட பாடசாலை,நாவலப்பிட்டிய கதிரேஷன் கல்லூரி ஆகியவற்றில் கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப்பட்டத்தை பெற்றதோடு இலங்கை சட்டக்கல்லூரிக்கும் பிரவேசித்து சட்டத்தரணியாகி தன் உழைப்பால் உயர்ந்தவர். கவிஞராக,பத்திரிகை ஆசிரியராக,மொழி பெயர்ப்பாளராக,சமூக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *