அன்று ஞாயிற்றுக்கிழமை, சாப்பிட்டுவிட்டு ஓய்வாக அமர்ந்திருந்தார் சுப்பிரமணியரன்.
மகள் அஜிதாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பது பற்றி பேச்சு எழுந்தது. நம்ம பொண்ணுக்கு மாமியார், மாமனார் இல்லாத இடமா பாருங்க அப்ப தான் நம்ம குழந்தை போற இடத்திலேயும் என்னை மாதிரி அடிமை மாதிரி இருக்கமாட்டா.
இரண்டு வருஷமாத்தான் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். இல்லாத போனா இத்தனை வருஷம் உங்க அம்மா வைச்சது தானே சட்டமா இருந்தது இந்த வீட்டிலே’’ என்றார் மனைவி கமலா.
‘’சரி, சரி, ஆரம்பிச்சுட்டாயா. போயி சேர்ந்த எங்கம்மாவை பற்றி சொல்லலைன்னா உனக்கு தூக்கமே வராதே. நம்ம பொண்ணுக்கு நீ சொல்றா மாதிரியே வரனை பார்க்கிறேன்.’’
இதை கேட்ட அஜிதா, ‘’அப்பா, அம்மா சொல்றாங்களேன்னு மாமியார் இல்லாத இடமா பார்க்கதீங்க. எனக்கு கண்டிப்பா மாமியார் இருக்கிற இடமாத்தான் பார்க்கணும். பாட்டி இருந்தால் தானே நீங்க என்னை விட்டுட்டு எல்லா இடத்திற்கும் போனீங்க. ஒரு கல்யாணமும் விட்டதில்லை. ஒரு டூரும் விட்டதில்லை. பிளஸ்டூ எக்ஸாம் போது கூட பாட்டி இருந்தாங்கன்னு தைரியமா விட்டுட்டு நீங்க போனீங்க. உங்களை மாதிரி நானும் ஹாப்பியா, பிரீயா, எல்லா இடத்திற்கும் போக வேண்டாமா? என் குழந்தைக்கும் பாட்டி இருந்தா சௌகரியம் தானே’’ என்றாள்.
தன் பெண்ணின் தரப்பு வார்த்தைகளை கேட்ட கமலா வாயடைத்து போனாள்.
-பத்மா ஹரி கிருஷ்ணன் (ஒக்ரோபர் 2010)