கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 6,388 
 

குமரேசன் தன் மனைவி கோமதியுடன் வீட்டில் தனித்து விடப்பட்டார்.

கடந்த ஒரு வாரமாக வீடு விசேஷக் களையுடன் அதகளப்பட்டது. பேத்தியின் காதணி விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட்டனர். மகன் வயிற்றுப் பேத்தியும் இன்று காலை ஊருக்குச் சென்றுவிட்டதால் அவள் இல்லாமல் வீடே வெறிச்சென்று காணப்பட்டது.

அவர் தன் மனைவியிடம், “ஏ புள்ள காதணிக்கு வந்த அன்பளிப்பு கவர் எல்லாத்தையும் எடுத்துகிட்டு வா…யார் யார் எவ்வளவு குடுத்துருக்காங்க, மொத்தம் எவ்வளவு தேறுதுன்னு கவுன்ட் பண்ணி இன்னிக்கி மதியமே பேங்க்ல போட்டுறலாம்” என்றார்.

கோமதி பீரோவைத் திறந்து, ஒரு ப்ளாஸ்டிக் பையினுள் இருந்த ஏகப்பட்ட காகித உறைகளை அள்ளி எடுத்து கட்டிலின் மீது வைத்தாள். குமரேசன் ஒரு நாற்பது பக்க நோட்டுப் புத்தகத்தையும், பேனாவையும் எடுத்து வைத்துக்கொண்டு கட்டிலின் மீது அமர்ந்து கோமதி சொல்லச் சொல்ல பெயரையும், அன்பளிப்பாக வந்த பணத்தையும் எழுதிக்கொண்டே வந்தார்.

கலெக்ஷன் மிக நன்றாக இருப்பதை எண்ணி உற்சாகமடைந்தார்.

திடீரென கோமதி, “இது என்னாங்க வெறும் கவர் மட்டும் இருக்கு, கவர்மேல இரண்டாயிரம்னு எழுதியிருக்கு, ஆனாக்க கவர்ல உள்ள பணத்தக் காணோம்” என்று அந்த பிரவுன் நிறக் கவரை உதறிக் காண்பித்தாள்.

“யார் பணம் குடுத்தாங்கன்னு பேர் பாரு…”

“உங்க ப்ரெண்டு தண்டபாணி…. சும்மா இல்லீங்க ரெண்டாயிரம் ரூபாய்”

“மேடையில யார் கவர் வாங்கி வச்சது?”

“நானேதாங்க….”

“அப்ப நல்லா பாரு பணம் கவர்லர்ந்து நழுவி பிளாஸ்டிக் பைல விழுந்திருக்கும்…இப்பதான் ரெண்டாயிரம் ரூயாய்க்கு ஒரு ஒத்த நோட்டு வருதே..”

கோமதி உடனே பிளாஸ்டிக் பையை உதறிக் காண்பித்தாள்.

“என்னாங்க இப்படி வெறும் கவரைக் கொடுத்து உங்க ப்ரெண்ட் இப்படி நம்மள ஏமாத்தியிருக்காறு?”

“அவசரப்பட்டு ஏதும் பேசாத கோமு…பொறுமையா நல்லா பாரு கவரிலிருந்து வெளிய எங்கியாச்சும் விழுந்திருக்கும்.”

“எல்லாம் பாத்தாச்சு, இது ரொம்ப அநியாயம்….இப்படியெல்லாம் கூடவா மனுஷங்க இருப்பாங்க? உங்க ப்ரெண்டு இவ்வளவு மட்டமாவா நடந்துக்குவாரு? நாம போட்ட விருந்தை நல்லா மூக்குப் பிடிக்க தின்னுட்டு, வெறும் கவரை கொடுத்துட்டுப் போயிருக்காரு….எவ்வளவு கேவலம், சீச்சி இதெல்லாம் ஒரு பொழப்பா?”

“கவர் ஓட்டப் படாததுனால யாரவது எடுத்திருப்பாங்க கோமு.”

“சும்மா சப்பைக்கட்டு கட்டாதீங்க, தண்டபாணி முழியே திருட்டு முழி…அந்தாளு நம்மை கண்டிப்பா எமாத்தியிருக்காரு.”

“…………………………….”

“ஏங்க நாலு மாசத்துக்கு முந்தி, போன செப்டம்பர்ல அவரோட பேரன் பொறந்த நாளுக்கு நீங்க சுளையா ஐநூறு ரூபாய் கவர்ல வச்சுக் கொடுத்ததா சொன்னீங்களே! நாம வச்ச பணத்தையாவது அவரு இப்ப திருப்பி வச்சிருக்கலாமே ! மரியாதையாவது மிஞ்சியிருக்குமே…. பொண்டாட்டியோட சும்மா கையை வீசிகிட்டு வந்து நல்லா மூக்குப் பிடிக்க சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டுட்டு போயிட்டாருங்க உங்க ப்ரெண்டு தண்டபாணி !”

கோமதியின் அர்ச்சனை அரைமணி நேரத்துக்கும்மேல் தொடர்ந்தது.

“சரி போகட்டும் விடு கோமு….அவனுக்கு என்ன கஷ்டமோ, அவனைத் திட்டாதே.”

“அந்த ஆளை அடுத்த தடவை நேர்ல பார்க்கும்போது சூடா நாலு வார்த்தை கேளுங்க… நாம ஒண்ணும் முட்டாள் இல்லைன்னு அவருக்குப் புரியணும்.”

‘இப்படித்தான நாலு மாசம் முந்தி தண்டபாணி பொண்டாட்டியும் என்னைத் திட்டியிருப்பாங்க !?’ என்று மனதில் நினைத்துக்கொண்டு கோமதியிடம்

பதில் பேசமுடியாமல் வார்த்தைகளை விழுங்கினார் குமரேசன்.

தன்னுடைய ஈனச் செயலுக்கு, காத்திருந்து நல்ல சமயத்தில் ஒரு தகுந்த பாடம் கற்பித்து விட்டான் தண்டபாணி.

‘கோமதி தன்னிடம் கொடுத்த ஐநூறு ரூபாயை டாஸ்மாக்கில் கட்டிங் போடும் ஆசையில் அமுக்கிவிட்டு, வெறும் கவரை ஐநூறு ரூபாய் என்று எழுதி வைத்துக் கொடுத்ததற்கு, பதிலடியாக தற்போது இரண்டாயிரம் என்று வெறும் கவரில் எழுதி, தன்னை நான்கு மடங்கு சேர்த்து பழி வாங்கிவிட்டான் தண்டபாணி’ என்கிற உண்மை உரைக்க வெட்கிப்போனார் குமரேசன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *