வீட்டுப்பாடம் எழுத அமர்ந்த பாலன்,தனது புத்தகப்பையைத் தலைகீழாகக் கவிழ்த்து கீழே கொட்டினான். அதிலிருந்து ஏராளமான பென்சில்கள், ரப்பர்கள், பேனாக்கள் கீழே விழுந்தன.
அவதைப் பார்த்த பாலனின் அம்மா,”ஏதுடா இதெல்லாம்” என்று கேட்டார்.
“இது கோபிகிட்ட அடிச்சது. இது சுரேசு கிட்ட அடிச்சது” என்று பெருமையுடன் வரிசையாக சொல்லிக்கொண்டே சென்றான்.
தன் மகன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. அன்று இரவே பாலனின் தந்தையிடம் இந்த விஷயத்தைச் சொன்னார்.
“இவனுக்கு வீட்டுல என்ன குறைச்சல்? நம்ம மானத்தை வாங்கணுமின்னே பிறந்திருக்கான். வாங்குற சம்பளத்துல பாதிய இவனுக்குத்தானே செலவழிக்குறோம். இவனால ஸ்கூல்ல எனக்குத் தான் கெட்டப்பெயர் வரப் போகுது” என்று கோபப்பட்டார் ஆசிரியரான பாலனின் தந்தை.
மறுநாள் பாலனும், அவன் தந்தையும் அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
“என்னங்க, நம்ம தெருவில நடக்குற கோலப் போட்டியில சேர்ந்திருக்கேன். ஸ்கூல் விட்டு வரும்போது ஸ்கூல்ல இருந்து கலர் சாக்பீஸ் டப்பாவ எடுத்துக்கிட்ட வாங்க” என்றார் பாலனின் தாய்.
பாலன் அம்மாவை ஏறிட்டுப் பார்த்தான். அவர் தலைகுனிந்து கொண்டார்.
– ஜேம்ஸ் (ஒக்ரோபர் 2013)