பாச தீபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2024
பார்வையிட்டோர்: 490 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வைரக்கண்ணுக்கு மனசு இருப்புக் கொள்ளவே இல்லை. ஆசை மனையாள் பரிமளா ஆணையிட்டு விட்டாளே என்று ஆடாமல் ஆடிக்கொண்டிருந்தான். நண்பர்கள், உறவினர்கள், அலுவலக மேல் அதிகாரிகள் சக ஊழியர்கள் என்று எல்லோரையும் பார்த்து அழைப்புக் கொடுத்து அழைத்து விட்டான். விருந்துக்கான உணவு பட்டியல் கூட பரிமளாவே தயாரித்திருந்தாள். கொஞ்சம் வசதியான குடும்பத்திலிருந்து வந்தவள். பட்டதாரி ஆசிரியையும் கூட.

பரிமளாவின் கடைக்கண் கொஞ்சம் அசைந்தால் போதும். வைரக்கண்ணு பம்பரமாய் சுழல்வான். இப்போதும் அதுதான் நடந்து கொண்டிருந்தது. இந்தத் தீபாவளி அவனுக்கு இரண்டு சந்தோஷங்களைக் கொண்டு வரும் தீபாவளியாக இருந்ததுதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம்.

ஒன்று அவனுக்குத் தலை தீபாவளி, இன்னொன்று அவனாக வாங்கிய புதிய வீட்டின் புதுமனை புகுவிழா. ஒரு ஆண் மகனின் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்கள் அல்லவா.. அதனால்தான் ஆவலாய்ப் பறந்து கொண்டிருந்தான்.

யாருடைய பெயராவது விடுபட்டுப் போயிருக்கிறதா என்று பார்த்தபோது தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு. அவன தன் கையாலேயே தன் தலையில் குட்டிக் கொண்டான்.

“என்ன முட்டாள்தனம் பண்ணவிருந்தேன். யார்யாரையோ நினைத்த என்னால் என் ஆசிரியரை எப்படி மறக்க முடிந்தது” என்று முணகியவனாய் ஆசான் ஆறுமுகத்திற்குக் கொடுக்க அழைப்பு ஒன்றை எடுத்து மிகவும் பயபக்தியுடன் பையில் போட்டுக் கொண்டான்.

அன்பு மனைவியிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். வாசல்வரை வந்த மனைவி “அப்படியே எங்க பெரிய மாமா வீட்லேயும் சொல்லிட்டு வந்துடுங்க” என்று சொல்லி அனுப்பினாள். வைரக்கண்ணுவின் சுசூக்கி பறந்தது. மிகவும் சீக்கிரமே வந்து சேர்ந்தான்.

நீண்ட நாளைக்குப்பின் அவனைப் பார்த்த ஆசிரியர் ஆறுமுகம் அகமும் முகமும் மலர வரவேற்றார். இருக்கையைக் காட்டி அமரச் சொன்னார். இருவரும் கடந்த கால நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டு வந்து பரிமாறிக் கொண்டார்கள்.

அந்த நேரத்தில் ஆசிரியரின் மருமகள் சுவைநீர் கொண்டு வந்து வைத்து விட்டு அவனை அருந்துமாறு வேண்டிக்கொண்டு ஆசிரியரின் பக்கமாய் ஒதுங்கி நின்றாள். கூடவே இரண்டு மூன்று குழந்தைகள் ஓடிவந்து ஒட்டிக்கொண்டனர். ஆசிரியர் அறிமுகப்படுத்தினார்.

“இது என்னோட மூத்த மருமகள் கீதவாணி, சங்கரோட மனைவி. சங்கர் பக்கத்தில இருக்கிற வங்கியில வேலை பார்க்கறார். கீதவாணி பொருளாதாரத் துறையில் பட்டம் வாங்கியிருந்தாலும் குடும்பத்தை நிர்வாகம் பண்றதுக்காக இப்ப வீட்லதான் இருக்கு. இதெல்லாம் சங்கரோட பிள்ளைங்க”

வைரக்ண்ணு ஆச்சர்யமாய்ப் பார்த்தான். கீதாவாணியின் அடக்கமும் குடும்பப் பாங்கும் அவனுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஏதோ ஓர் சிந்தனையில் ஆழ்ந்துபோனான். ஆசிரியர் அவன் கவனத்தை திருப்பினார்.

“வந்தது மறந்து போச்சா வைரக்கண்ணு. என்ன விஷயமா வந்தேன்னு இது வரைக்கும் சொல்லலியே!”

ஆசிரியரின் உரைகேட்டு அவர் பக்கம் திரும்பினான் வைரக்கண்ணு. தன் பையைத் திறந்து அழைப்பை வெளியே எடுத்தான். அவன் கொடுத்த அழைப்பிதழை முகம் மலரப் பெற்றுக் கொண்ட ஆசிரியர் அவனை வாழ்த்தினார். அவனது முன்னேற்றம் அறிந்து பாராட்டினார்.

“உன்னைப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தம்பி. நீ செய்ய வேண்டியவைகளை அந்தந்தக் காலகட்டத்தில் சிறப்பாகச் செய்துவிட்டாய். பதினாறு செல்வங்களையும் குறைவின்றிப் பெற்று நீ நீடுழி வாழ வேண்டும். நீ என் மாணவன் என்பதில் நான் பெருமைப் படுகிறேன். உன் அருமைப் பெற்றோர்கள் நலம்தானே…!”

ஆசிரியரின் மனமார்ந்த வாழ்த்தையும் பாராட்டையும் பெற்றுக் கொண்டவன் அவரின் இறுதி வார்த்தையால் தடுமாறினான். அந்த மரியாதைக்குரிய ஆசான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினான்.

படித்த பணக்காரப் பெண் தனக்கு மனைவியாக வந்தவுடன் அவள் விருப்பத்திற்கு வாழ விரும்பி அவனது பெற்றோர்களைத் தனியாக விட்டு விட்டு அவன் வந்து ஆறேழு மாதங்கள் ஆகிவிட்டன. அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற விபரம் கூடத் தெரியாதவனாய் தெரிந்து கொள்ள நேரமில்லாதவனாகிப் போய் விட்ட இந்த நேரத்தில் எப்படி அவன் பதில் சொல்வான்!

“ஐயா, அவுங்கள நான் பார்த்தே ரொம்ப நாளாச்சி. இப்ப அவுங்கள் லாம் எப்படி இருக்காங்கன்னு எனக்குத் தெரியாது”

மென்று விழுங்கினான் வார்த்தையை. அதைக்கேட்ட ஆசிரியரின் கையிலிருந்த அழைப்பிதழ் தானாக நழுவித் தரையில் விழுந்தது. அவனை ஆச்சரியமாய் பார்த்தார்.

“என்னப்பா சொல்றே நீ.. உங்கப்பா அம்மாவைப் பார்த்தே ரொம்ப நாளாச்சா.. அவுங்கள்லாம் எப்படி இருக்காங்கன்னே உனக்குத் தெரியாதா…என்ன சொல்றே நீ…

வயசான காலத்தில் அவுங்க மனம் கோணாம நடந்து அவுங்க விருப்பத்தை அறிஞ்சு நடக்கிறது தானே பிள்ளைங்க கடமை. இப்படி சிறகு முளைச்சதும் பறந்து போயிடறதுதான் படிச்சவனுக்கு அழகா..?

புதுவீடு வாங்கி அதிலே விழா கொண்டாட நேரமிருக்கு.. விருந்துக்கு நண்பர்களை அழைக்க நேரமிருக்கு.. ஆனா உன்னைப் பெத்து வளர்த்தவுங்க எப்படி இருக்காங்கன்னு போய் பார்த்துட்டு வர்றதுக்கு உனக்கு நேரமில்லாமப் போச்சு.. இல்லியா?”

கொஞ்சம் கடுமையாகவே ஆசிரியர் கேட்டர். தடுமாறிப் போனவன் தலைகுனிந்து நின்றான்.

‘இங்க பாரு தம்பி.. புது வீடு வாங்கி – புது மனைவியோட புதுத் தீபாவளியும் கொண்டாடப்போற! அந்தக் கொண்டாட்டத்தில் உண்மை இருக்கணும். தீபாவளிப் பண்டிகையே ஒரு அன்புத் திருநாள்னுதான் கொண்டாடறோம். அங்கே அன்பு பாசம் மனிதநேயம் எல்லாம் கலந்து இருக்கணும். தீபாவளி அன்றைக்கு உன்னோட புதுவீட்ல ஏற்றப்படும் தீபம். வெறும் திரியும் எண்ணையும் மட்டும் சேர்த்து ஏற்றக் கூடாது. அதிலே உண்மையான அன்பும் பாசமும் கலந்திருக்கணும், அதை நீ புரிஞ்சுக்கப்பா.

ஊரைக்கூட்டி அவங்கள சந்தோஷப்படுத்தி கொண்டாடுறதை விட்டுட்டு உன்னோட தாய் தகப்பனை கூட்டிட்டு வந்து அவுங்க மனசைக் குளிர வைக்கப்பாரு… அவுங்க மனசு குளிர்ந்தாதான் உன்னோட புள்ளகுட்டிங்க நல்லா இருக்கும்”

வைரக்கண்ணு அந்த அடுக்குமாடி வீட்டிலிருந்து இறங்கினான். அவனது சுசூக்கி இப்போது அவனது வீட்டுக்குச் செல்லாமல் அவனது பெற்றோர்கள் வீட்டை நோக்கிப் பறந்தது.

– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.

நூலாசிரியர் பற்றி... - மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005 இலக்கிய வடிவங்களில் சிறுகதை. புதினம், கட்டுரை, உரைவீச்சு போன்ற அனைத்து நிலைகளிலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்கவராக மதிக்கப்படுகின்ற சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களை 1995-ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளேன். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பியம் பெற்றுத் தொண்டாற்றினார். துணைச் செயலாளர் பொறுப்பேற்றுத் துணை நின்றார். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராய்த் தொடர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *