பாச்சாவின் வஞ்சம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2022
பார்வையிட்டோர்: 3,248 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அரசியலும் தத்துவமும் விவகாரமும் பிரதிபலிக்கும் சொற்களைத் தன் வாடிக்கைக்காரர்களிடம் தாராளமாகப் பரிமாறிக்கொண்டு, ஒன்பது வருஷ காலமாகக் கசாப்புக் கடையை நிம்மதியாக நடத்தி வந்த பாச்சாவின் வாழ்க்கை , தடம் புரண்டது. தனிக்காட்டு நவாபாக அவன் தர்பார் நடத்தி வந்த இடத்தில் ஓர் ‘ஜபர்தஸ்த்’ சுல்தான் படையெடுக்கலானான்! என்றைக்கு மஜீத் கசாப்புக் கடையை அந்த மார்க்கெட்டில் திறந்தானோ அன்றைக்கே பாச்சாவின் வியாபாரத்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டு விட்டது.

பாச்சாவோ முரடன். அவனுக்கு முற்றும் மாறு பட்டவன் மஜீத். கலகலவென்று சிரித்த வண்ணம், எல்லோருடனும் நையாண்டியாகப் பேசிக் காலத்தைக் கழிக்கும் குஷிப் பேர்வழி. தன் கடையில் பண்டம் வாங்குபவர்களுக்குப் பீடிகளைக் கொடுத்து உபசரித்தும், கடனாகக் கொடுத்தும் அவன் வியாபாரத்தைப் பெருக்கி வந்ததனால், பாச்சாவின் வாடிக்கைகாரர்கள் ஒவ்வொருவ ராக மஜீத்தை ஒட்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். மஜீத் கையாண்டு வந்த ‘தில்லுமுல்லு’களைக் கண்ட பாச்சாவின் உள்ளம் கொந்தளித்தது. அவனுடன் வலுவில் ‘லடாய்’ செய்யப் பல தடவைகள் முயன்ற போதிலும் பாச்சாவின் பாச்சா பலிக்காமல் போயிற்று! நாளொன்றுக்கு மூன்று ரூபாய் லாபத்தைக் கண்ட மஜீத் தின் கடை, நாளடைவில் பத்து ரூபாய்க்கும் மேல் ஏறி விட்டது.

இந்த ஒரே கவலையினால் அங்கோரா ஆடுபோல் இருந்த பாச்சா அம்மாப்பேட்டைச் செம்மறியாடு போல் உருமாறி இளைத்துவிட்டான். பிரம்மசாரிகளாக இருந்த இந்த இரண்டு ‘கிடாக்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொள் ளாத வண்ணம் அந்த மார்க்கெட்டிலிருந்த சில கிழ ஆடுகள்’ கண்காணித்து வரத் தவறவில்லை.

தான் வசிக்கும் அபுல்கலாம் ஆஸாத் சந்திலே மஜீதும் குடியேறி விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் பாச்சாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது. தன் வியாபா ரத்திற்குப் பாதகம் விளைவித்த அந்தப் பத்மாஷ்’. தான் வசிக்கும் சந்திலும் நுழைந்துவிட்டதால் மேலும் என்ன ‘ஜுலும்கள் (அக்கிரமங்கள்)’ பண்ணப் போகிறானோ என்ற கிலி அவனை ஆட்டி வைத்தது.

புதிதாகக் குடிவந்த வீட்டு முற்றத்தில் ஹாய்யாக உட்கார்ந்துகொண்டு, மேல் அட்டை கிழிந்த ஒரு பழைய நாடகப் பாட்டுப் புத்தகத்தைப் பிரித்து ஏதோ ஒரு பாட்டை மிக்க சுவாரஸ்யமாகப் பாடிக்கொண் டிருந் தான் மஜீத். அந்தப் பாட்டின் மெட்டு அவனைக் கவர்ந்து விட்டது. கைகள் வெகு ஜோராக ஓலைப்பாயில் தாளம் போட, அந்த ஒரே பாட்டை ஏழாவது தடவையாக அவன் மிக்க குஷியாகப் பாடிக்கொண் டிருந்தபோது. கொல்லைப்புறக் கதவின் வழியாக உள்ளே புகுந்த ஆட் டுக் குட்டி ஒன்று அவன் மேல் திடீரென்று துள்ளிக் குதித்தது. சட்டென்று அதன் மீது தாவி அதைப் பிடித் துக்கொண்டான் மஜீத்.

“அந்தக் குட்டியை இங்கே கொடுங்களேன்” என்று கொல்லைப்புற வாசலிடமிருந்து தவழ்ந்து வந்த மெல்லிய குரலைச் செவி மடுத்த மஜீத் திடுக்கிட்டான். பூக்கள் போட்ட மஞ்சள் நிற ஜிமிக்கி தாவணி காற்றில் தவழ்ந் தாட , வெல்வெட் ‘சோலி’ விழிகளை வௌவ, ஒரு சௌந்தர்யப் பிழம்பு அங்கே நிற்பதைக் கண்டதும், மஜீ தின் ரத்த ஓட்டம் நின்று விட்டது.

“யாரும் புள்ளே . நீ?” என்று வினவினான் மஜீத் தயக்கத்துடன்.

“எங்க வூட்டு ஆட்டுக்குட்டி, இங்கே நுழைஞ் சுடுச்சு. அதைப் புடிச்சுப் போக வந்தேன்” என்று சங்கோஜத்துடன் சொல்லிச் செம்பவழ இதழ்களை விரித் தாள் அவ்வனிதை.

‘நீ முதெல்ல யாருன்னு சொல்லேன்?” என்று பீடிகை போட்டான் அந்த நம்பி .

“ஹும்” என்று உறுமி விட்டு, தாவணியின் தலைப்பை இழுத்து முகத்தை மூடிக்கொண்டாள் அவள்.

“சரி, நீ சொல்ல வேண்டாம். அங்கேயே நில்லு; நான் இந்தக் குட்டியை இளுத்துக்கிட்டு அங்கே வர்ரேன்” என்று சொல்லி, ஆட்டுக் குட்டியைச் சிரமப்பட்டுத் தூக்குவது போல் பாவனை செய்தான் மஜீத்.

“அடி ஆத்தோ இது ஆட்டுக் குட்டியா… ஆனைக்குட்டியா இளுத்தாச் சண்டித்தனம் பண்ணுது. தூக்கினா முது கெலும்பு முறியுது. நீயே உள்ளே வந்து இதை அழைச் சுட்டுப் போயேன்!” என்றான் சுவாதீனமாக.

மேலெழுந்த சிரிப்பை அடக்க முடியாது ‘களுக்’ கென்று கொட்டிவிட்டாள் அவள். மஜீதின் கட்டுமஸ் தான உடலமைப்பும், பரிகாசப் பேச்சும் அவள் உள் ளத்தை ஈர்த்தன.

“சும்மா , பயப்படாமே உள்ளே வா” என்று ஆசை யுடன் வரவேற்றான் மஜீத். கட்டை விரலைத் தரையில் தேய்த்துக்கொண்டும், நகங்களைக் கதவிலே உராய்ந்து கொண்டும் நின்ற அந்தப் பாவை, பார்வையை அக்கம் பக்கங்களில் ஓட்டிவிட்டுச் சரேலென்று வீட்டிற்குள் புகுந்தாள்.

“சட்டுனு கொடுங்க கயிற்றை ! நான் போவணும்” என்று துரிதப்படுத்திய அக் காரிகையின் குரல் மஜீதின் செவிகளில் வீழ்ந்தனவோ இல்லையோ!

“என்ன சொன்னே?” என்று கேட்டான் மஜீத் கலக்கத்துடன்.

“கயிற்றை நீங்க புடிச்சிக்கிட்டுருந்தா ஆட்டைக் கூட்டிக்கிட்டு நான் எப்படிப் போகிறது?”

“ஓஹோ…கயிறா கேட்டே? இந்தா” என்று சொல் லிக் கயிற்றை நீட்டினான். அதை அவள் பெறும்போது அவன் கையை அவள் காந்தள் விரல்கள் தீண்டி விட்டன. மறு கணத்தில் மஜீதின் பிடியில் சிக்கித் தவித்தது அவள் கரம்.

“ஐயோ, அல்லாவே! உடுங்கோ கையை” என்று அலறிப் புடைத்து, கையை உதறி விடுவித்துக்கொண்டு அவனை எரித்து விடுபவள் போல் கண்களை அகல விரித் துப் பார்த்தாள்.

“இந்தாம் புள்ளே. உன் ஆட்டுக் குட்டி மாதிரி நீயும் ஏன் குதிக்கிறே? உன் கையை அறுத்து கசாப்புக் கடை யிலே விக்கவா போறேன் ” என்று சொல்லி, “சரி..நீ எங்கே இருக்கே?” என்று கேட்டான் மஜீத் தாழ்ந்த குரலில்.

“பக்கத்து வீடு.”

“உன் பெயரைச் சொல்லேன்?”

“குல்ஸும்.”

“இந்தா, இந்தக் குட்டியைப் புடிச்சுட்டுப் போ.”

“நம்மை யாராச்சும் பார்த்துட்டாங்களா?” என்றாள் அவள் ஒரே பீதியுடன்.

“சே… இங்கே ஒருத்தரும் வரவுமில்லை, உன்னைப் பார்க்கவுமில்லை” என்றான் மஜீத், லேசாக முறுவலித்த வண்ணம்.

“நான் போறேன்.”

“யாரு உன்னைத் தடுத்தது? பேஷாப் போ. ஆனால் இந்த ஆட்டுக் குட்டியை மாத்திரம் தினமும் இங்கே அனுப்பிச்சிட்டிரு!” என்று சொல்லி உரக்கச் சிரித்தான் மஜீத்.

தாவணியைச் சரிப்படுத்திக்கொண்டு, கருவிள மலரைப்போன்ற கண்களால் அவனை மருள மருளப் பார்த்துக்கொண்டவாறே பின் கதவைத் தாண்டி மறைந் தாள் குல்ஸும்.

ஒன்றும் தோன்றாது சஞ்சல மனத்துடன் மஜீத் ஸ்தம்பித்து நின்றுகொண் டிருந்தபோது வாசற் கதவை யாரோ பலமாகத் தட்டும் அரவம் அவன் செவிகளில் வீழ்ந்தது.

மஜீத் கதவைத் திறந்தான். “எப்போ பிடிச்சுக் கூப் பிடுகிறேன். என்ன செஞ்சுட்டிருந்தே?” என்று கூறிக் கொண்டே உள்ளே பிரவேசித்தாள் அவன் தாய் காத்தூன் பீ.

“ஆட்டுக் குட்டியொன்று உள்ளே வந்து கடப்படா பண்ணிடிச்சு. அதை விரட்டியடிக்கிற சந்தடீலே உன் குரலைக் கேட்கலே” என்று மழுப்பினான் மஜீத்.

“பக்கத்து வீட்டுக் குட்டியாயிருக்கணும்.”

“பக்கத்து வீடா!”

“அதான். நம்ப ஷேக்மீரா ராவுத்தர் வூட்டேச் சொல்றேன்.”

“அவர் யாரம்மா?”

“ஆட்டு வியாபாரம் பண்றாரு. அவர் பொஞ்சாதியை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு, தங்கமான மனசு. அவங்களுக்கு ஒரே பொண்ணுதான் இருக்கு.”

மஜீத் மௌனம் சாதித்தான். தொடர்ந்தாள் காத் தூன்பீ : ‘பொண்ணு ராசாத்தி மாதிரி இருக்கும். அது பெயரு குல்ஸும்!”

“சரிதான்!”

“உன் கடைக்குப் பக்கத்துலே கடை வச்சிருக்கானே. பாச்சா” என்று காத்தூன் பீ தொடங்கியதும் மஜீத் திடுக்கிட்டான்.

“ஆமாம்.”

“அந்தப் பாச்சாவோட மாமாதான் ஷேக்மீரா ராவுத்தர். அவனுக்குத்தான் குல்ஸுமைக் கொடுக்கணும்னு, அது பொறந்த நாளாச் சொல்லிக்கிட்டிருக்காங்களாம்.”

“இதெல்லாம் உனக்கு எப்படியம்மா தெரியும்?”

“இதுவரைக்கும் அவங்க வூட்லேதான் இருந்தேன். குல்ஸும் என் முன்னாலே வரவேயில்லை. ரொம்பப் பயந்த சுபாவம்!”

அந்தப் ‘பூனை’யின் குணாதிசயத்தை அன்னையின் வாயினால் கேட்ட மஜீத் தனக்குள் சிரித்துக்கொண்டான். தொடர்ந்தாள் காத்தூன்பீ: “பேசிக்கிட்டே இருந் தோம். திடும்னு பாச்சா வந்தான்.” மஜீதின் மனத்தைப் பயம் வௌவ்வியது.

“அவன் வந்தவுடனே துப்பட்டியைப் போட்டுக் கிட்டு ஓடியாந்துட்டேன். முறை மாப்பிள்ளை. அதான் தாட்பூட்னு அந்த வூட்டுக்கு வர்ரான், போறான்.”

மஜீத் வாயடைத்து நின்றான்.

“முறை மாப்பிள்ளைக்கு முடிச்சுப் போட்டுட்டாங்களா, அம்மா?” என்று கேட்டான் தயக்கத்துடன்.

“பரிசம் போடக் கொஞ்ச நாள் ஆகுமாம். குல்ஸும் அம்மா சொல்லிச்சு. யார் நஸீப் – விதி – எப்படி இருக்கோ? அல்லாவுக்குத்தான் தெரியும்.”

குல்ஸுமுடன் மஜீதின் முதல் சந்திப்பு இப்படி ஓர் அதிர்வெடியுடன் ஆரம்பித்தது!

ஷவ்வால் மாதம் கழிந்தது. காத்தூன் பீ வீட்டில் இல்லாத வேளைகளில் ஷேக் மீரா ராவுத்தர் வீட்டு ஆட்டுக் குட்டி மஜீத் வீட்டிற்குள் நுழைவதும், அதைத் தொடர்ந்து ஒரு மான் குட்டி துள்ளி ஓடி வருவதும், இந்த இரண்டுடன் வீட்டிற்குள்ளிருந்த ஓநாய் உறவாடுவதுமான நிகழ்ச்சிகள் ‘ஜல்ஸா – மகிழ்ச்சி – வுடன் நடந்துகொண்டுதான் இருந்தன!

“மஜீத்… கேட்டியா சங்கதி!” என்று பேச்சை ஆரம்பித்தாள் காத்தூன் பீ. வாயருகே அன்னத்தை எடுத்துச் சென்ற மஜீதின் கை மரத்து நின்றுவிட்டது.

“நம்ம பக்கத்து வூட்டுக் குல்ஸுமை அந்தப் பாச்சா வுக்கே கொடுத்துவிடப் பேச்சு வார்த்தை நடந்தது; அல்லா ஹுத்தாலா தயவாலே காரியம் முடிஞ்சுடுச்சாம்!” என்று அவள் சொல்லி முடித்ததும், மஜீதின் தலையில் பேரிடி வீழ்ந்தது போல் ஆயிற்று. மதி மருண்ட. அவ னுக்கு, தான் இருண்ட பாதாளத்தில் உருண்டு வீழ்ந்தது சட்டென்று எழுந்தான்.

“ஏன் அதுக்குள்ளே எழுந்திட்டே? இன்னும் கொஞ்சம் ஏதாவது சாப்பிடேன்” என்று கெஞ்சினாள்

அப்போதை.

“வயிறு நிரம்பிடுச்சம்மா”

“கை களுவரத்துக்கு முன்னாடி எல்லா விசயத்தையும் கேட்டுட்டுப் போயேன். களுத்துக்கு ஆறு பவுன்லே அவத்திக்காய்ச் சுவடி மாலையும், மூணு பவுன்லே சிகப்புக் கல் போட்ட கிள்ளட்டிகையும், கைக்கு நாலு நாலு பூட்டுக் காப்பும் பொண் வீட்டுக்காரங்க போடறதாகப் பேசி முடிச்சாங்களாம் பாச்சா நல்ல ராசிக்காரன் போ..!”

நீண்ட பெருமூச்சொன்று மஜீதின் இதயத்தைக் கீறிக்கொண்டு வெளிக் கிளம்பியது.

“அடுத்த வாரம் பரிசம் போடப் போறாங்கொ . மாசக் கடெசிலே நிக்காஹை வச்சுடப் போறாங்கோ. மஜீத்…. நீ வீட்டைப் பார்த்துக்கோ. நான் கொஞ்சம் வெளியே போய் வர்ரேன்” என்று சொல்லிவிட்டு. குல்ஸும் கல்யாணச் செய்தியைத் தன் சகாக்களிடம் டமாரம் அடிக்கச் சென்றுவிட்டாள் காத்துன்பீ .

வெளிக் கதவைப் பலமாகச் சாத்திவிட்டு முற்றத்தில் வந்து உட்கார்ந்தான் மஜீத். அவன் கண்கள் எங்கும் அந்தகாரம் சூழ்ந்திருப்பதைக் கண்டன. அவன் தன் மருங்கில் காலடி யோசையைக் கேட்டுச் சிரத்தையின்றி விழிகளை மேலே ஓட்டினான். குலுங்கிக் குலுங்கி விம்மி அழுதுகொண்டு நின்ற குல்ஸுமைக் கண்டதும் அவன் உள்ளம் ஊசலாடிற்று.

“என் மனசுக்கு விரோதமா அப்பாவும் அம்மாவும் இப்படிச் செஞ்சுட்டாங்க” என்றாள் அவள், தழுதழுத்த குரலில் .

“உனக்கு வரப் போறவன் உன் அத்தை மவன் தானே? முறை மாப்பிள்ளை கூட” என்றான் மஜீத்.

“என் மனசை நோக வைக்காதிங்க. அந்த முரடன் யாருக்கு வேணும்.”

“ஹய்வானா (மிருகம்) ச்சே.”

“நல்லா அறிஞ்சு தான் பேசறியா குல்ஸும்?”

“இத்தென நாளா என்னோடு பழகிட்டு, இன்னுமா என்னை நீங்க தெரிஞ்சுக்கில்லே?”

“பாச்சா வேண்டாமென்றால் உன் வாப்பாகிட்டேச் சொல்றதுதானே?”

“என் புலம்பலை யார் கவனிக்கப்போறா? வாய் தவறி வந்துட்டா, கன்னத்துலே அறைதான் வுளும். பொண்

ணாப் பொறந்துட்டா வாயைத் தைச்சுடுறாங்களே”

“இப்போ என்னை என்ன செய்யச் சொல்றே?”

“நீங்க ஆம்புளே, உங்களுக்கு ஒரு பொண்ணா சொல்லணும் யோசனை?”

“எனக்கு ஒண்ணுமே விளங்கலே குல்ஸும்.”

“என் மனசையும் உசிரையும் ஒண்ணாப் பறிச்ச நீங்க என்னைக் கைவிடாதீங்க.”

“எல்லாம் முடிஞ்சுடுச்சே குல்ஸும்.”

“உங்களோட நான் வாழ முடியாட்டிப்போனா கொல்லெப்புறக் கிணத்துலேதான் என் பிணத்தைப் பார்க்கப் போறாங்கொ.”

அவளுடைய இதயத்தின் அடித்தளத்திலிருந்து உணர்ச்சியுடன் வெளிக்கிளம்பிய அச் சொற்களைக் கேட்ட மஜீத் மதி மருண்டு நின்றான். அவள் பேசிய தோரணையும் வீசிய பார்வையும் அசைக்க முடியாத மனத் திண்மையை எடுத்துக் காட்டின.

“இந்த வூட்டையும் ஊரையும் விட்டுக் கிளம்பிடுவோம்” என்றாள் குல்ஸும்.

“எங்கே?” என்றான் மஜீத் திகில் அடைந்தவனாய்.

“எந்தக் காட்டுக்கோ, கபரஸ்தானுக்கோ ! (மயானத் துக்கோ “)

“குல்ஸும்…”

“இத்தென நாளா உங்க மனசுக்குள்ளே என்னைக் குடிவச்ச நீங்க என்னை அழைச்சுக்கிட்டு எங்கேயாச்சும் போயிடுங்கோ” என்று மிக்க உணர்ச்சியுடன் சொல்லி, அவன் இரு கைகளையும் இறுகப் பிடித்துக்கொண்டு போல பொலவென்று கண்ணீர் சொரிந்தாள் அவள்.

மஜீதின் மனக்கதவு திறந்து கொண்டது!

கோணிகளாலும் படுதாக்களாலும் மறைக்கப் பட்ட கதவுகளையும் ஜன்னல்களையும் கொண்ட கூடத் தில், சுதந்தரத்தையும் காதலையும் எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்த மாடப்புறா. தெருக்கோடியிலுள்ள பஞ்சாயத்து லாந்தரை ஏற்றிவைத்த சமயத்தில் பறந்தோடிவிட்டது.

மறுநாள் அபுல்கலாம் ஆஸாத் சந்து அலமந்து காணப்பட்டது. ‘ஷேக் மீரா ராவுத்தர் மகளை மஜீத் கடத்திச் சென்ற விஷயத்தை ஊரார் ஓயாது பேசிக்கொண்டிருந்தார்கள்.

இந்த அவச் செய்தி பாச்சாவின் செவிகளில் வீழ்ந்த தும் அவன் ஸ்தம்பித்துவிட்டான். அவமானம் அவன் நெஞ்சைத் துண்டு துண்டாக நறுக்கித் தள்ளியது. பழி வாங்கும் எண்ணம் பேய்போல் அவனைப் பிடித்துக் கொண்டது.

“மாமூ எந்தச் சண்டாளன் என் மானத்தை வாங்கி னானோ, எந்தப் பேமானிப்பயல் எனக்கு வரவேண்டிய வளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினானோ அந்தப் பாதகனின் இரண்டு கைகளையும் துண்டித்து விட்டுத்தான் மறுவேலை ” என்று ஷேக் மீரா ராவுத்தர் முன்பு ஆவேசத்துடன் அலறிவிட்டு மறைந்தான் பாச்சா.

நிக்காஹ் செய்துகொண்டு கற்பொழுக்கத்தில் இறங்கி வாழ்க்கை நடத்த விரும்பி மறைந்த காதலர் களைத் தேடிக்கொண்டு பழிவாங்கும் யாத்திரையைத் துவக்கினான் பாச்சா. எங்கெங்கேயோ வெறிபிடித்த நாய் போல் அலைந்துவிட்டு, உடலின் களைப்பினாலும் உள்ளத் தின் சோர்வாலும் உருமாறி, பெருத்த ஏமாற்றத்துடன் இரண்டு மாதம் கழித்து ஊருக்குத் திரும்பினான்.

அன்று வெள்ளிக்கிழமை. பாச்சா தன் கடையில் வெகு மும்முரமாக வியாபாரம் செய்து கொண் டிருந்தான்.

“பாச்சா ! கொஞ்சம் வர்ரியா” என்று அவன் தோழன் தோஸ்த் முகம்மது எதிர்பாராத வேளையில் அவனைக் கூப்பிடவே, பாச்சா கல்லாப் பெட்டியை விட்டுக் குதித்து அவனிடம் சென்றான்.

“சங்கதி தெரியுமா?” என்றான் தோஸ்த் முகம்மது.

“என்ன “

“அவன் ஊருக்குத் திரும்பிவிட்டான்!”

“அந்தச் சண்டாளனா?”

“நேற்று ராவு ரெண்டு மணி இருக்கும். மூணு சீட்டு முடிச்சுட்டு வந்துட்டிருந்தேன். மாட்டு வண்டி உன் சந்துலே நுழைஞ்சிச்சு. வண்டியெ விட்டு இறங்கினான் மஜீத். அப்புறம் உன் மாமன் மவளும் இறங்கிச்சு. சரி ஒரு பீடி கொடு.”

தோஸ்த் முகம்மது பீடியைப் பற்றவைத்தது மல்லா மல் பாச்சாவின் நெஞ்சிலே சாம்பர் பூத்துக் கிடந்த பழி வாங்கும் எண்ணத்தையும் கொழுந்துவிட் டெரியும்படி கிளறிவிட்டு மறைந்தான்.

வேங்கை போல் கடைக்குள் பாய்ந்தான் பாச்சா. தராசைப் பிடுங்கிப் படிக்கட்டுகளோடு பெட்டிக்குள் வீசி யெறிந்தான். எந்தப் பொருளைத் தன் பரம வைரியின் மீது பழி வாங்குவதற்குப் பக்குவப்படுத்திப் பாதுகாத்து வந் தானோ அந்தச் ‘சத்ருக் கத்தியை வெளியே எடுத்து வைத் தான். வாழ்நாள் முழுவதும் செங்குருதியிலே தோய்ந்த கைகளால் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு குந்தாக் கட்டையின் மீது நன்றாகத் தீட்டினான். அதன் பளபளப்பு அவன் விழிகளைப் பறித்தது. அதை இடுப்பில் செருகி, ஜிப்பாவினால் மறைத்தான். கடையை விட்டு மிக்க வீராப்புடன் அவன் கீழே குதித்தது தான் தாமதம். டமடமவென்று மசூதி நகாராவின் பேரோசை காற்றில் தவழ்ந்து வந்து, அன்றைய வெள்ளிக்கிழமைத் தொழுகையை நினைவூட்டிற்று.

நமாஸை’ முடித்துவிட்டுக் காரியத்தில் இறங்கலா மென்று தீர்மானித்து, பள்ளி வாசலை நோக்கி நடையைக் கட்டினான் பாச்சா.

தொழுகை முடிவடைந்ததும் எல்லோருக்கும் முன்பே இடத்தை விட்டெழுந்து வெளியே செல்ல அவன் காலடி வைத்ததும், “பாச்சா பாய்!” என்று எப்பொழுதோ கேட்ட பரிச்சயமான குரல் பின்புறத்திலிருந்து எழுந்ததைக் கேட்டு, வெடுக்கென்று தலையைத் திருப்பினான். புன்னகை பொலியும் வதனத்துடன் முன் நீட்டிய கரங் களுடன் கூட்டத்தைவிட்டு விலகித் தன்னை நோக்கி வந்த மஜீதைக் கண்டதும் பாச்சாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “உன்னையும் என்னையும் படைத்த அல்லாஹுத்தாலாவின் இல்லத்திலே நாம் சந்திக்கும்படி அந்த அருளாளன் கருணை புரிந்து விட்டான். உணர்ச்சியின் எழுச்சி யினால் நடந்துவிட்ட சம்பவத்தை மறந்துவிட்டு, என்னை மன்னிப்பாய் பாச்சா ” என்று உணர்ச்சியுடன் சொல்லிப் பாச்சாவை மார்போடு இறுகத் தழுவினான் மஜீத்.

பாச்சா ஸ்தம்பித்து நின்றுவிட்டான். அவன் விழிகளில் மிதந்த கொடூரம் அங்கே துளிர்த்த நீரிலே கரைந்து விட்டது. தன் முன் நிற்பவனை நிமிர்ந்து பார்க்க அவன் கண்கள் கூசின. சிரம் தொங்கிக் கவிழ்ந்தது. கால்கள் தள்ளாடின. ஒரு வார்த்தையும் கூறாது அவ்விடத்தை விட்டுத் தத்தித் தத்தி நடந்து, மசூதியின் படிக்கட்டுகளை விட்டு இறங்கி அவன் மறைந்த பின் இருபது வருஷங் களுக்கு மேல் ஆகிவிட்டன. அவ்வூரைச் சூறாவளி இரு தடவை சூறையாடி விட்டது. மஜீத் தன் பேரனை அழைத்துக் கொண்டு கசாப் கடைக்குச் செல்லும் நாட்களும் வந்தன. ஆனால் பாச்சா அவ்வூருக்குத் திரும்பவே வில்லை. அவனைப்பற்றி ஓர் தகவலும் கிடைக்கவேயில்லை!

– பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

– ‘ஆனந்த விகடனில்’ தோற்றமளித்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *