பாசாங்குகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2019
பார்வையிட்டோர்: 8,720 
 
 

அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்களேயாகின்றன. அவன் ஒரு பத்திரிகையாளன். அத்துடன் இலக்கியத்துறையிலும் ஆர்வம் செலுத்தி சிறுகதைகள், கவிதைகள் என எழுதிக் கொண்டிருந்தான். மேலும் புகைப்படத்துறையிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தான். காட்டு வாழ்வை படம் பிடித்து அழகு பார்ப்பதில் அதிகம் ஆர்வமுள்ளவனாக இருந்தான்.

அவன் மனைவி தேனாளியை அவன் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டான். இருந்தாலும் அவன்– அவள் மீது அளவுக்கதிகமான காதலும், அன்பும் கொண்டிருந்தாலும். அவள் பதிலுக்கு தன் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறாள் என்பது தொடர்பில் அவன் சந்தேகம் கொண்டிருந்தான். இப்போதெல்லாம் அவனது சின்னச்சின்னத் தவறுகளுக்கெல்லாம் பெரிதாக சண்டைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டாள். ஆனால் அவன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையைக் கடைப்பிடித்தான்.

அப்போது தான் அவள் அந்த சங்கடமான கோரிக்கையை அவன் முன்வைத்தாள். அவளது நண்பி ஒருவளுக்கு இன்னும் இரண்டு கிழமைகளில் திருமணம் நடக்கவுள்ளதென்றும், அதற்கு அவன் தான் புகைப்படங்கள் எடுத்து அல்பம் தயாரித்துக் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாள். அதற்காக பணத்தினை அவள் கொடுத்து விடுவாள் என்றும் கூறினாள். திலீபன் தனது புகைப்படத்துறை வேலையை ஒரு கலையாக செய்து வந்தானே தவிர பணத்துக்காக அதனை செய்வதில் அவனுக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை.

பாசாங்குகள்அவன் தனக்கு அந்த விடயத்தைத் தவிர்த்துக் கொள்ள வேறு வழி தெரியாததால் அந்தக் கோரிக்கையை தன்னால் நிறைவேற்ற முடியாதென்றும் அதற்கு தனக்கு நேரமில்லை என்றும் கூறிவிட்டான். அவளுக்கு உடனேயே மூக்குக்கு மேலே கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்துவிட்டது. ஆமா யாருமே வாசிக்காத கதை, கவிதை, நாவல் எல்லாம் எழுதுவதற்கு நேரம் இருக்கும். ஆனால் ஒரு நாள் இதுக்கு ஒதுக்க முடியாதா? அவள் சத்தம் போட்டு பேசினாள். தேனாளி அவன் கதைகளையும், கவிதைகளையும் யாருமே படிப்பதில்லை என்று கூறியது திலீபனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இருந்தாலும் அவன் தன் குரலை அவளைப் போல் உயர்த்தாமல் சாதாரணமாகவே பேசினான். “எனது கதைகளை யாரும் படிக்காவிட்டால் பரவாயில்லை. ஆனால் நான் விரும்பாத இந்த திருமண வைபவப்படப்பிடிப்பு வேலையெல்லாம் செய்யமுடியாது”.

“இந்த ஒரு தடவையாவது இதனை செய்து கொடுக்க முடியாதா?” அவள் சற்றே தாழ்ந்த குரலில் கேட்டாள்.

“நான் விரும்பாத வேலையைச் செய்யும் படி கேட்காதே” அவன் ஒரேயடியாக மறுத்துவிட்டான். அவளுக்கு தலைக்குள் கோபம் ஜில்லென்று ஏறியது” இல்லை எனக்காக இதை நீங்கள் செய்துத்தான் ஆக வேண்டும். இன்னும் மூன்று நாட்கள் உங்களுக்கு கால அவகாசம் தருகிறேன். நல்லா யோசித்து “ஆம்” என்று சொல்ல வேண்டும்.

அத்துடன் அவர்களிடையே பேச்சு வார்த்தை முடிந்து போய்விட்டது.

அடுத்த நாள் காலை எழுந்ததும் திலீபன் அடுப்பங்கரைப் பக்கம் சென்று பார்த்தான். டீயோ, சமையல் செய்வதற்கான எந்த வித அறிகுறியையும் காணவில்லை. பகல் சாப்பாடும் கிடைக்கவில்லை. கால் சட்டைப் பொக்கட்டை தடவிப் பார்த்தான். அதில் கொஞ்சம் காசு இருந்ததால் டீயையும், சாப்பாட்டையும் வெளியில் சென்று சாப்பிட்டு வந்தான். அவர்கள் இரவில் கட்டிலில் மாத்திரமே சந்தித்தார்கள். இருவரும் திரும்பிப்படுத்துக் கொண்டு தூங்கிப் போய்விட்டார்கள்.

அடுத்த நாள் நிலைமை இன்னும் கொஞ்சம் மோசமாகியது. அவள் காலையிலேயே எழுந்திருந்து அவன் காட்சட்டை பொக்கட்டில் இருந்த காசையெல்லாம் காலி செய்துவிட்டாள். அதனால் அன்-று அவன் டீ, சாப்பாடு இல்லாமல் பட்டினியாக இருக்க நேர்ந்தது. அன்றிரவு அவர்கள் கட்டிலில் சந்தித்தபோது அவன் அவளை சமாதானம் செய்யப்பார்த்தான். அவள் காலைப் பிடிக்கிறேன் என்றும் சொல்லிப் பார்த்தான். ஆனால் அவள் அவன் இருந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

மூன்றாம் நாளும் அதே நிலைமை தான். ஆனால் திலீபன் ஒரு தீர்மானத்துடனேயே கட்டிலுக்கு வந்தான். அவள் அன்றும் அவனை எதிர்கொள்ளாமல் மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டிருந்தாள். அவன் மல்லாந்து படுத்திருந்தப்படியே மொகட்டு வளையை பார்த்து “நான் உன்னுடன் பேசவேண்டும்” என்றான்.

சில கணங்கள் மெளனத்துக்குப் பின் “பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆமா, இல்லையா என்று மாத்திரம் சொன்னால் போதும்” என்றாள் அவள் கண்டிப்புடன்.

இல்லை இது வேறு ஒரு முக்கியமான விடயம் பற்றியது. அவன் தாழ்ந்த குரலிலேயே பேசினான்.

அதற்கு அவளிடமிருந்து எந்தப்பதிலும் வரவில்லை. அவன் சில கணங்கள் பொறுத்துப் பார்த்து விட்டுத் தானே பேசினான்.

“எனக்கு உன்னிடம் இருந்து விவாகரத்து வேண்டும்… நாம் பிரிந்து விடுவதே நல்லது”. இதை கேட்டதும் அவள் மனதுக்குள் முள் ஒன்று சுருக்கென்று தைத்தது. அவள் மனம் தூக்கிவாரிப் போட்டது. தான் ஏதோ செய்த துடுக்குத்தனத்துக்காக அவன் இப்படி ஒரு தீர்மானத்துக்கு வருவான் என அவள் கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை. அவள் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. அவனே தொடர்ந்து பேசினான்.

எனக்கு கொஞ்ச காலமாகவே ஒரு பெண்ணைத் தெரியும். அழகானவள் எனக்கு அவளைப் பிடித்திருக்கிறது.

அவன் சொல்லச் சொல்ல அவளுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. கண்ணீர் உருண்டோடி அவள் மூக்கு நுனிவரை சென்று கீழே கொட்டுவதற்கு யோசித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு ஒரு பெரிய தடியை எடுத்து அடித்து அவன் மண்டையைப் பிளந்துவிட வேண்டும் போல ஆவேசம் வந்தது. அவள் அவனை அடிக்க சுற்றுப்புறத்தில் ஏதும் கம்புதென்படுகிறதா என்று பார்த்தாள்.

“இவளைத் தான் நான் இரண்டாவது கல்யாணம் செய்துக் கொள்ளப் போகிறேன்” என்று சொன்ன தீலிபன் தன் சட்டைப் பொக்கட்டில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தான். அதனை அவள் இருந்த பக்கம் நீட்டி நீ அவளின் புகைப்படத்தை பார்க்க விரும்புகிறாயா? என்று கேட்டான்.

அவளுக்கு அந்தப் புகைப்படத்தை வாங்கிப் பார்க்கும் மனநிலை இருக்கவில்லை. கட்டிலுக்கு மேலே ஏறி அவன் குரல்வலையை மிதிக்க வேண்டும் போல் ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. ஆனால் தேனாளியின் உள்ளத்தில் புயல் ஒன்று வீசிக் கொண்டிருக்கின்றது. என்பது பற்றி கொஞ்சம் கவலைப்படாமல் அவன் ஏதோவெல்லாம் கூறினான்.

“எனது புதிய காதலி உன்னைப் போல் கோபக்காரி இல்லை. அவள் என்மீது அளவுக் கடந்த காதல் கொண்டிருக்கிறாள். நாங்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு எனது இலக்கிய முயற்சிகளுக்கு பூரண ஆதரவு தருவதாகக் கூறியிருக்கிறாள்”.

அதைக் கேட்டு அவளுக்கு மிகுந்த பொறாமை உணர்வு ஏற்பட்டது. அவனால் எப்படி இன்னொரு பெண்ணின் புகைப்படத்தை அவனது நெஞ்சுக்கருகில் வைத்திருக்க முடியும்? அவளுக்கு தன் முடியைப் பிடித்து கொண்டு ஓவென்று கத்தி ஓலமிட வேண்டும் போல் தோன்றியது.

அவள் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தாள். எழுந்து கட்டிலில் அமர்ந்து கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். அவன் ஒன்றுமே பேசாமல் அவளை அழவிட்டுவிட்டு அப்படியே தூங்கிப் போய்விட்டான்.

அவள் நீண்ட நேரம் விசும்பிக் கொண்டிருந்தாள். ஏன் தன் வாழ்வு இப்படி வீணாய்ப்போய்விட்டது என்று கருதினாள். தான் திலீபனுடன் கோபப்பட்ட எல்லாச் சந்தர்ப்பங்களையும் நினைத்துப் பார்த்தாள். அவளால் திலீபனிடம் எந்தக் குற்றத்தையும் கண்டுப்பிடிக்கமுடியவில்லை. நான் ஏன் இப்படி நடந்து கொள்கின்றேன் என தன்னையே நொந்து கொண்டாள். அவனை எழுப்பி அவனுடன் அன்பாக பேச வேண்டும்போல் தோன்றியது. அவனால் எப்படி தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை விரும்ப முடிந்தது. அவள் மனம் திண்டாடியது.

அவன் தன்னை வெறுத்து யாரைக் காதலிக்கக்கூடும் என்ற சந்தேகம் தோன்றியது. அது யார் என்று பார்த்து விட அவள் மனம் துடித்தது. அவள் மெ-துவாக அவன் சட்டைப் பையில் இருந்த அந்த புகைப்படத்தை உருவியெடுத்தாள். அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. அந்தப் புகைப்படத்தில் அவள் முகம் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. அது அவனால் முன்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படந்தான்.

அவளுக்கு வேறு ஒன்றுமே தோன்றவில்லை. அப்படியே படுத்து அவனை இருக அணைத்துக் கொண்டாள். அவனும் தான் அவன் இதுவரை அசந்து தூங்கியதெல்லாம் வெறும் பாசாங்குதான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *