பாசம் பத்தும் செய்யும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2019
பார்வையிட்டோர்: 24,381 
 
 

வாழ்க்கை என்றால் ஒன்பது இருக்குமாம். பாலகிருஷ்ணனுக்கு இரண்டு சேர்த்து பதினொன்று போல் தோன்றியது. வீட்டினுள் மின்சாரம் போனதும் மின்விசிறி வினோத சப்தமுடன் நின்றவுடன் இவனுக்கு தூக்கம் போயிற்று. மனைவி ரம்யா சமையல் அறையில் இருந்தாள் போலிருக்கவே படுக்கையிலிருந்து எழுந்தான்.

அருகில் படுத்திருந்த வினோதினி ‘பிறந்த நாளுக்கு ரெட் கலர் சுடி வேணும்ப்பா’ என்று பேசிக் கொண்டே புரண்டு தூங்கினாள். பாலகிருஷ்ணன் பெருமூச்சு விட்டபடி சமையல் அறைக்கு வந்தான்.

மனைவி ரம்யா நூறுநாள் வேலைத் திட்டத்தில் சேர்ந்து சாலைப் பணிக்காக மம்பட்டி, சட்டியோடு போய் வந்து கொண்டிருந்தாள். இவனோ உள்ளூர் அச்சாபீஸில் மிஷின்மேனாக போய் வந்து கொண்டிருந்தான். இந்த நிலையில் வீதியில் இருக்கும் பிள்ளைகள் பள்ளி வாகனம் ஏறி தங்கள் அம்மாக்களுக்கு டாட்டா காட்டியபடி தெரஸா வித்யாலயாவிற்கு செல்வதைக் கண்டவர்கள் பிரியம் மிகுதியில் விநோதினியையும் சேர்த்து விட்டு விழி பிதுங்கி ஒரு வருடத்தில் நிறுத்திக் கொண்டார்கள்.

விஜயமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் விநோதினி சேர்ந்து இப்போது இரண்டாம் வகுப்பு தேறி விட்டாள். மூன்றாம் வகுப்பு செல்லும் ஆர்வத்தில் புது புத்தக பேக், புது டிரஸ் வேண்டும் என்றாள். எல்லாமும் வாங்கித் தருவதாக இவன் வாக்குறுதி தந்திருந்தான். சென்ற வாரமே கரண்ட்பில், சந்தைச் செலவு, கேஸ் சிலிண்டர் என்று கண்விழி பிதுங்கி விட்டது பாலகிருஷ்ணனுக்கு.

போதாதிற்கு சிறுவலூர் அரசு மருத்துவமனையில் இவன் தங்கை மஞ்சு பெண்குழந்தை பிரசவித்திருக்கிறாளாம். தகவல் நேற்று மாலையே இவனுக்கு வந்து விட்டது. வெறும் கையை வீசிக் கொண்டு போய் ‘மாமா வந்துட்டேன்’ என்று குட்டிப் பாப்பா முன் நின்றுவிட முடியுமா?

டிவிஎஸ்ஸுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி என்று அரைக்கிலோவாவது வாங்கிப் போக வேண்டும். அப்பா, அம்மா உயிரோடு இருந்தபோது இப்படியான விஷயங்களை அவர்களே பார்த்துக் கொண்டார்கள். நாற்பது வயதில் வாழ்க்கையை வாழப் பழகிக் கொண்டிருந்தான் பாலகிருஷ்ணன்.

’நீங்களும் விநோதினியும் போய் பார்த்துட்டு வந்துடுங்க… மஞ்சு வீட்டுக்கு குழந்தையை எடுத்துட்டு வந்த பிறகு திங்களூர் போய் நான் பார்த்துக்கறேன்’ என்று ரம்யா நேற்றிரவே சொல்லி விட்டாள். வீட்டில் ஒரு வாரத் துணிமணிகள் துவைக்காமல் கிடக்கிறதாம். இதே அவள் வீட்டில் அவள் தங்கைக்கு என்றிருந்தால் நேற்று மாலையே வாரிச் சுருட்டிக் கொண்டு பறந்திருப்பாள். சொல்லிக் காட்டலாம் என்றால் ஒரு வாரத்திற்கு முகத்தை தூக்கி வைத்துக் கொள்வாள் என்று விட்டு விட்டான்.

ரம்யாவின் முடிவுப்படிதான் ஆயிற்று. விநோதினியும் இவனும் தான் டிவிஎஸ்ஸில் கிளம்பியிருந்தார்கள். எங்கே டாடி நாம போறோம்?” என்றவளுக்கு, ’திங்களூர் மஞ்சு அத்தைக்கு பாப்பா பிறந்திருக்கு விநோதினி, குட்டிப் பாப்பாவை பார்க்கப் போறோம் நாம இப்ப’ என்றான்.

“அத்தைக்கி குடுக்கத்தான் ஆப்பிள் ஆரஞ்சு எல்லாம் மேக்கூர் பழக்கடையில வாங்குனியாப்பா? நாம திங்கறதுக்கு இல்லியா? குட்டிப் பாப்பாவே பழம் பூராத்தியும் தின்னுடுமா?” என்றாள். இவன் சிரித்தான். ‘திரும்பி நாம வீடு வர்றப்ப வாங்கிக்கலாம்’ என்றான்.

“அதோப்பா, என்னோட ஸ்கூலு.. இல்ல நான் .. முன்னெப் படிச்ச ஸ்கூலு” என்று விநோதினி தெரஸா வித்யாலயா கட்டிடத்தைப் பார்த்து சப்தமிட்டாள். இவனுக்கு சங்கடமாய்த்தான் இருந்தது. இங்கு படிக்க வைக்க வக்கில்லாமல் போய் விட்டதே என்று!

சிறுவலூர் அரசு மருத்துவமனை, மரங்கள் அடர்ந்து சூழ்ந்திருக்க துப்புறவாய் இருந்தது. காசு பணம் உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பெறுவது தான் பெருமை போலும். தனியார் மருத்துவமனை கவனிப்புகளில் சற்றும் சோடை போகாதவைகள் தான் அரசு மருத்துவமனைகளும் என்பது ஏழை பாழைகளுக்குத்தான் தெரியும்.

தனி அறையில் பிள்ளை பெற்ற வாட்டத்துடன் களைப்பில் சோர்ந்து படுத்திருந்தாள் இவன் தங்கை மஞ்சு. ஜூஸ் டம்ளரை கையில் வைத்திருந்த அவள் மாமியார் அவளிடம் நீட்டி, ‘குடி மஞ்சு’ என்று சொன்னபடி, சம்பிரதாய வார்த்தையாக ‘வாங்க’ என்று இவனை அழைத்தார்.

“மச்சான் எங்கீங்க காணமே?” என்று மஞ்சுவின் கணவரை அவ்விடத்தில் காணாமல் ஒரு வார்த்தை கேட்டு வைத்தான் பாலகிருஷ்ணன். மஞ்சு படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து ஜூஸ் டம்ளரை வாங்கிக் கொண்டாள்.

“அவன் இப்பத்தான் எங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வர்றேனுட்டு திங்களூர் கிளம்பிப் போனான்” என்றார் மஞ்சுவின் மாமியார்.

”மாமன் வர்ற நேரம் பார்த்து தூங்கிப் போயிட்டாள். இன்னா வரைக்கிம் முழிச்சுட்டு பார்த்துட்டே தான் இருந்தாள். பால் குடிச்சுட்டு தூங்குறாள். வினோதினிக்குட்டி ஏன் பேசாம உம்முன்னு பாப்பாவை பார்த்துட்டே நிக்குது? அப்பா மிரட்டிக் கூட்டிட்டு வந்துச்சா?” என்றாள் மஞ்சு.

மஞ்சுவின் மாமியார் சாக்லெட் தட்டம் எடுத்து நீட்டவும் இவன் இரண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டான். விநோதினி நான்கைந்து எடுத்துக் கொண்டாள். “காகிதத்தை கீழே வீசக்கூடாது சாமி. நர்ஸ்சோ, டாக்டரோ பார்த்தாங்கன்னா உனக்கு ஊசி போட்டுடுவாங்க, அதா மூலையில டப்பா இருக்குது பாரு, அதுக்குள்ள போடு” என்றாள் மஞ்சு. ‘மிட்டாயின்னா சிறுசுங்களுக்கு உசுரு’ என்றார் மஞ்சுவின் மாமியார்.

பாலகிருஷ்ணன் கையில் இருந்த பழப்பையை மூலையில் இருந்த ட்ரே மீது வைத்தான். அப்போது பார்த்து நான்கைந்து பெண்கள் அறைக்குள் நுழைந்தனர். “சுகப்பிரசவம் தான். நான் தான் அப்பவே சொன்னேன்ல, அவ்ளோ சீக்கிரம் இந்த ஆஸ்பத்திரியில கத்தி வைக்க மாட்டாங்கன்னு” என்று வந்த பெண் ஒன்று மஞ்சுவிடம் பேச, இவன் அறையை விட்டு வெளியே வந்தான்.

வெளிவந்தவன் சுவரோரமாய் இருந்த சின்ன ஷெல்ப்பில் கலர் கலராய் இருந்த நோட்டீஸ் தாள்களில் ஒன்றை எடுத்து விரித்தான். காச நோய்க்கான குறிப்புகள் அதில் இருந்தன. இன்னொரு தாளில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறிப்புகள் இருந்தன. மருத்துவமனைச் சூழலே திடீரென இவன் மனதில் பீதியைக் கிளப்புவது போல தோன்றியது.

வாயிலில் கம்பெளண்டர் ஒருவர் நோயாளிகளுக்கு டேபிளில் அமர்ந்தபடி டோக்கன் சீட்டு கொடுத்தபடி இருந்தார். ஒரு அறை முன் நர்ஸ் ஒருவர், ‘சத்தம் போடாமல் வரிசையா நில்லுங்க’ என்று சப்தமிட்டபடி இருக்க, இவன் ஒரு டீ சாப்பிட்டு விட்டு வரலாமென மருத்துவமனை முகப்பு வாயிலைத் தாண்டினான்.

ரம்யா தன் சம்பளப் பணத்தில் ஐநூறு ரூபாயை பாப்பா கையில் வைத்துப் பார்த்து விட்டு வரச் சொல்லி தந்திருந்தாள். இருக்கும் சிரமத்திற்கு அவ்வளவு வைக்க வேண்டுமா? என்று மனதில் தோன்றியது. ‘ட்ரஸ் வேணும்ப்பா’ விநோதினியின் குரல் வேறு காதுக்கு அருகில் கேட்டது பாலகிருஷ்ணனுக்கு.

மருத்துவமனை முகப்பில் இருந்த டீக்கடையில் இவன் ஒரு டீக் குடித்து முடித்து விட்டு கிளம்பலாம் என்று வெளிவருகையில் மஞ்சுவின் மாமியார் அந்தப் பெண்களுடன் சிறுவலூர் பஸ் ஸ்டாப் நோக்கி சென்று கொண்டிருந்தார். கூடவே விநோதினியும் சென்றாள். சரி அவர்களை அனுப்பி விட்டு வருவார்கள் என்று நினைத்தவன் சாலையைக் கடந்தான்.

மீண்டும் அறைக்குள் இவன் வந்த போது மஞ்சு கண்மூடி அரைத் தூக்கத்தில் இருந்தாள். மின்விசிறி வேகமாக சுற்றியபடி இருந்தது. தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பாப்பாவின் அருகில் போய் நின்றான். தொட்டிலில் நான்கைந்து ஐநூறு ரூபாய்த் தாள்கள் குழந்தையைச் சுற்றிலும் கிடந்தன. இவன் மேல் பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாய் தாளை எடுத்து குழந்தையின் கைவிரல்களைப் பிரித்து வைத்தான். மாமன் காசு என்று தெரிந்ததோ என்னவோ குழந்தை நாம்பிக் கெட்டியாய் பிடித்துக் கொண்டது ரூபாயை.

மஞ்சுவைத் திரும்பிப் பார்த்தான். அவள் உறக்கத்தில் தான் இருந்தாள். தொட்டிலுக்குள் கைவிட்டவன் குழந்தை அருகே கிடந்த வேறு ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்து தன் மேல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். மின்விசிறி வேகமாய் சுழன்றும் அவனுக்கு முகம் வியர்த்து விட்டது.

“பாப்பா என்னோட சாடை இல்லையாமா, அவராட்டமே கண்ணு, மூக்கு வாயின்னு சொல்றாங்கண்ணா” மஞ்சு இவனிடம் சொல்லவும் சற்று தடுமாறியவன், ‘அப்படித்தான் இருக்கிறாள்’ என்றான். திடீரெனப் பேசுகிறாளே! திருட்டுத்தனத்தை பார்த்திருப்பாளோ? ச்சே! இருக்காது!

“பாப்பா நேற்று நாலு மணிக்கு சாயந்திரம் பிறந்தாள்ணா. அப்பவே ஜோசியரைப் பார்த்து சாதகம் எழுதிட்டாரு. சிம்மராசியாம், அதும் மகம் நட்சத்திரமாம் பாப்பாக்கு. அண்ணா இங்க வாயேன்” என்றவள் தன் படுக்கைக்கு அடியில் கைவிட்டு நூறு, ஐம்பது என்று ரூபாய்த் தாள்களை எடுத்து இவனிடம் நீட்டினாள். ‘பிடி இதை’ என்றாள் மஞ்சு.

“இது எதுக்கு? உன்னைப் பார்க்க வந்ததுக்கு நீ எனக்கு கூலி குடுக்குறியா?” என்றான் பாலகிருஷ்ணன்.

“நீ எத்தனை சிரமத்துல இருக்கேன்னு எனக்குத் தெரியாதாண்ணா? பார்க்க வர்றவங்க எல்லோரும் பணமாத் திணிக்கறாங்க. என் அத்தை வந்துட்டா உனக்கு தரமுடியாமப் போயிடும். பிடி!” என்றதும், வாங்கி பேண்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.

“இன்னும் எத்தனை நாள் ஆஸ்பத்திரியில இருக்கோணுமாமா? ரம்யா வேற நீ வீடு வந்த பிறகு தான் பார்க்க வர்றதா சொல்லிட்டு இருந்தாள்” என்றான். ‘இன்னும் ரெண்டு நாள் இருந்தால் போதும்னு டாக்டர் சொல்லிட்டார்ணா” என்றாள் மஞ்சு.

அடுத்த அரைமணி நேரத்தில் மஞ்சுவிடமும், அவள் அத்தையிடமும் விடைபெற்று விநோதினியுடன் கிளம்பி விட்டான் பாலகிருஷ்ணன் மருத்துவமனையிலிருந்து. திங்களூருக்கு அருகாமையில் டிவிஎஸ்ஸில் வருகையில் சாலையோரமாய் நின்றிருந்த புளியமரத்தினடியில் வண்டியை நிறுத்தினான் பாலகிருஷ்ணன். பாண்ட் பாக்கெட்டில் மஞ்சு கொடுத்திருந்த பணத்தை எடுத்து எண்ணினான். ஆயிரத்தி முன்னூற்றி ஐம்பது ரூபாய் இருந்தது அதில். ‘ட்ர்ஸ் எடுக்கலாமாப்பா?’ என்றாள் பார்த்துக் கொண்டிருந்த விநோதினி. ‘எடுக்கலாம் சாமி’ என்றவனுக்கு மேல் பாக்கெட்டில் இருக்கும் ஐநூறு ரூபாய்த்தாள் கனப்பதாய் தோன்றியது.

என்னதான் சிரமம் என்றாலும் பாப்பாவுக்கு யாரோ வைத்த நோட்டை இவன் எடுத்துக் கொள்வதா? பாப்பாவை வாழ்நாள் முழுக்க பார்க்கும் போதெல்லாம் ஞாபகப் பிசாசு தோன்றித் தோன்றிக் கொல்லுமே!

பாலகிருஷ்ணன் டிவிஎஸ்ஸை மறுபடியும் சிறுவலூர் மருத்துவமனைக்கே செல்ல திருப்பினான்.

நன்றி : குமுதம் 13-3-2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *