அஞ்சலை வீட்டுக்குள் நுழையும்போதே ‘வெற்றிலை வாங்கிட்டியா, கொண்டா’ என்று மாமியார் கிழவி கையை நீட்டினாள்.
‘இப்ப என்னா, ஒரு நாள் வெற்றிலை இல்லைன்னா உசிரா போயிடும்?’
ஆமாண்டியம்மா, உன் கிட்ட சிக்க வச்சுட்டு, பாவிப்பய புள்ள போய்ச் சேர்ந்துட்டான் பாரு. எனக்கு நல்லா வேணும். நான் இனி ஒரு நிமிஷம் கூட இங்கிருக்க மாட்டேன்’. தடியை ஊன்றிக்கொண்டு வெளியேறினாள்.
களைப்புத் தீர படுத்து எழுந்த அஞ்சலை வேலை செய்த வீட்டம்மா கொடுத்த பலகாரப் பொட்டலாத்தைப் பிரித்தாள்.
நெய் வாசம் மணக்கும் அதிரசங்கள். பசங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒன்றாக கொடுத்தாள். மீதி இருந்த ஒன்றை வாயில் போடப்போகும் போது மாமியார் ஞாபகம் வர அப்படியே எடுத்து வைத்தாள்.
‘ஏலே பசங்களா, காளி கோயிலில் பாட்டி இருப்பாங்க. போய் கூட்டி வாங்கடா.
கோயிலில் கிழவியும் வருந்தினாள். பாவம் மருமகள். புருஷன்காரனை விபத்தில் பலிகொடுத்தவள். குழந்தைகளோடு என்னையும் சேர்த்து கஷ்டப்பட்டு உழைச்சுக் காப்பாத்தறாளே! நான் அவளை அனுசரிச்சு நடக்க வேண்டாமா? நான் இப்படி தொட்டதுக்கெல்லாம் கோவிச்சுக்க கூடாது இனிமேல். வழக்கம் போல் பேரப்பசங்க வாராங்களான்னு எட்டி எட்டிப் பார்த்தாள்.
– பாமதி நாராயணன் (பெப்ரவரி 2013)