‘ஆயிரம் வேலைப் பளுவுக்கு மத்தியில் கிடைத்ததே இரண்டு மணி நேர லீவு… அதுவும் இந்த ட்ராபிக்ஜாமில் முடிந்து விடும்போல் இருந்தது!.’
அடுத்தடுத்து டென்ஷன் “எப்பதான் போய் சேருவோம்!” என கடுப்பாகி காரின் ஹோர்னை அழுத்திக்கொண்டிருந்தான் உதய்;
பின்னாடி பார்க்கும் மிறரை சரி செய்தவனாக மெதுவாக அதை வளைத்து அதனூடாக பின் சீட்டிலிருந்த அம்மாவை பார்த்தான், அம்மாவோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
‘மனைவியின் டார்ச்சர் தாங்கமுடியாமல் வயதான தன், அம்மாவை முதியோர் இல்லம் ஒன்றுக்கு கொண்டுபோய் விட்டுவிட முடிவெடுத்து, செல்லும் வழியில்தான் இவ்வளவு டென்ஷன் உதய்க்கு.
ட்ராபிக்ஜாம் படிப்படியாக குறைய தொடங்கியதும் அவனது காரும் மெதுவாக நகர்ந்தது.
கார் டோர் கண்ணாடியை யாரோ தட்டிவிட திரும்பி பார்த்தான் உதய்.
மெலிந்த தேகத்துடன், கால் ஒன்று ஊனமுற்ற நிலையில், நொண்டியவாரே காரோடு பின் தொடர்நதான் ஒரு பையன்!…
கார் கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு அவனை கோபமாக பார்த்தான் உதய்.
“ஐயா ஏதாவது உதவுங்கள்… அம்மாவுக்கு சாப்பாட்டுக்கென்று இன்னைக்கு ஒன்னுமில்லை… பசியோடு இருக்காங்க” என்று கெஞ்சிக்கொண்டிருந்தான் அந்த பையன் .
உதய் அவனைத் தாண்டி எட்டி பார்த்தான், ஒரு வீல் செயரில் வயாதன பெண்மணி ஒருவர் அங்கும் இங்குமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார், அந்த அம்மா பார்ப்பதற்கோ மனநலம் குன்றிய பெண்மணி போல் எண்ணத் தோன்றியது உதய்க்கு.
மெதுவாக நகர்ந்த காரை சடாரென பிரேக் போட்டு ஓரமாக நிறுத்தியவன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து அந்தப், பையனிடம் கொடுத்துவிட்டு அவர்களையே கொஞ்சநேரம் வேடிக்கை பார்க்க தொடங்கினான் .
“மிக்க நன்றி ஐயா’னு கூறிக்கொண்டே அந்த பையன் நொண்டியபடி பக்கத்தில் இருந்த கடையில் சாப்பாடு வாங்கிக்கொண்டு தன் அம்மாவிடம் சென்றான். குழந்தை ஒன்றுக்கு ஊட்டுவதுபோல் தன் தாய்க்கு உணவை செல்லமாக ஊட்டி விட பதிலுக்கு அந்த அம்மாவும் அவனது தலையை வருடி விட்டு தன் மகனை பார்த்து அடிக்கடி புன்னகை செய்துகொண்டாள்!…
இவ்வனைத்தையும் வேடிக்கை பார்த்துவிட்டு களைப்போடு வீடு வந்து சேர்ந்த உதய் ஹாலில் கிடந்த ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டான்.
சத்தம் கேட்டு கிட்ச்சனிலிருந்து ஹோலுக்குள் நுழைந்த உதயின் மனைவி ” ஏங்க … அம்மாவை கொண்டுபோய் விட்டுட்டு வந்தாச்சா?” என கேட்டாள்.
எதுவுமே பேசாமல் எழுந்தவன் டைவர்ஸ் பேப்பரை அவளிடம் நீட்டிவிட்டு பக்கத்து ரூமில் இருந்த அம்மாவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போனான் உதய்.!…