“அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு?’ என்றான் அக்காலக் கவிஞன். ஒரு கால கட்டத்தில் அவன் பேச்சை தலை மீது தாங்கிய சமுதாயம், காலப் போக்கில் நிலைமையை உணர்ந்து, அவன் வார்த்தைகளை மீறி, பெண்களைப் படிக்க வைத்தது. கல்வி வந்தது; கூடவே வேலையும் வந்தது! ஆனால், இன்று வரை ஒரு பெண் வெளியே சென்று சம்பாதித்து, வீட்டிற்குள் வருவதற்குள், அவள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு இந்தச் சமூதாயம் தீர்வு காணவில்லையே!
“குடும்பச் சூழல் கருதி வெளியே சம்பாதிக்கச் செல்லும் ஒரு பெண், பிரச்னைகளையும் அல்லவா சம்பாதிக்கிறாள். குழந்தை பெறுவது அவள்தான்; பாலூட்டுவதும் அவள்தான்; பராமரிப்பதும் அவளே! அலுவலகம் சென்று திரும்பும் கணவன், வீட்டிற்கு வந்ததும் ஹாயாக உடைமாற்றி சேரில் அமர்ந்து, “டிவி’யை ஆன் பண்ணிக் கொண்டே, “காபி கொடு’ என்று கேட்பான். பெண்ணால் எப்படி முடியும்? ஆபிசிலிருந்து வந்ததும் சமையல்கட்டிற்குத் தானே ஓட வேண்டியிருக்கிறது.
“என் குழந்தை எப்போது முதல்முதலாக என்னை, “அம்மா…’ என்று அழைக்கப் போகிறதோ என்று அந்த பொன்னான நாட்களுக்காக காத்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு நாள், நான் ஆபிசில் பைலுடன் போராடிக் கொண்டு இருந்த போது, வீட்டு ஆயா அல்லவா பரபரப்பாக போனில் சொன்னாள்… “அம்மா… உங்க குழந்தை, அம்மா…என்று இப்போது சொன்னது!’ என்று. அதைக் கேட்டதும் எனக்கு கண்ணீர் தானே வந்தது. “என் செல்லமே… நீ என்னை முதல் முதலாக, அம்மா… என்று அழைக்கும் போது, உன் அருகில் இல்லாத பாவியாகி விட்டேனடா! என்று, என்னால் விம்மத்தானே முடிந்தது?’
“டிவி’யில் பட்டிமன்றப் பேச்சாளராகிய அந்தப் பெண்மணி சொன்னதை கேட்ட கல்பனா கண்கலங்கி விட்டாள். அவள் நிலமையும் இப்போது அப்படித்தானே இருக்கிறது! “டிவி’யை ஆப் செய்து விட்டு, ஒரு ரோஜாப் பூ போல தூளியில் தூங்கிக் கொண்டிருந்த ஷாலுவைத் தூக்கினாள்; தூக்கத்திலேயே சிரித்தது!
“”செல்லக்குட்டி… அம்மாவுக்கு ஆபிசிற்கு டயமாச்சாம். நீ டெய்சியம்மா தர்ற புட்டிப்பாலை குடிச்சுட்டு, சமத்தா விளையாடுவியாம்… தூங்குவியாம்… அம்மா சாயங்காலம் ஏழு மணிக்கு உன்ன டெய்சி ஆன்ட்டிக்கிட்டேயிருந்து வாங்கிட்டு வந்துருவேனாம்… சரியா?”
பரபரப்பாக ஒரு கூடையில் ஷாலுக்கு வேண்டிய பால் பவுடர், பிளாஸ்க், பாட்டில், நாப்கின், மருந்து வகைகள் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, கிரச்சில் விட்டுவிட்டு ஆபிசிற்கு வந்தாள்.
ஆபிசிற்கு வந்தபிறகும் ஷாலுவின் ஞாபகம் வந்தது. கண்முழித்ததும் சுற்றும் முற்றும் பார்க்கும். அம்மா எங்கே? என்று விழியிலேயே கேட்கும்; ஏமாற்றமடையும். சோர்வாகத் தூங்கிப் போகும். என்ன பாவம் பண்ணிற்று அது?
மொபைல்போன் ஒலித்தது. “சுந்தரேசன்’ என்றது வெளிச்சம். எடுத்துப் பேசுவதற்குள் கட்டாகி விட்டது. சுந்தரேசனுக்கு என்ன கவலை? ஹாயாக டில்லி கிளம்பி விட்டார். ஏதோ, கான்பிரன்சாம்; நாலு நாளாகுமாம். அட்டகாசமா இருக்காம். சாப்பாடு செம டேஸ்டாம். சப்பாத்தி, புலாவ், பாலக் பனீர், மலாய் கோப்தா என்று தூள் கிளப்புகின்றனராம்.
என்ன கவலை?
மீண்டும் ஒலித்தது; எடுத்தாள்.
“”ஹாய் கல்ப்ஸ்… எப்படியிருக்கே? ஷாலுகுட்டி எப்படியிருக்கா? நான் வரவரைக்கும் நீலாங்கரை சைட்டிற்கு போய், நீ பார்த்துட்டு வந்துட்டு இரு. இந்த கான்ட்ராக்டரை நம்ப முடியாது. கடல் மணல்ல கலவைய போட்டுறப் போறான்! தேக்குமர கதவுக்கு ஆர்டர் பண்ணியிருக்கேன். அவன் நம்பர் ஷெல்புல இருக்கு. போன் போட்டு போய் பாத்திட்டு வந்திரு! நான் வர லேட்டானாலும் ஆகும்… பை!”
“”சரி…”
கட கடவென்று சொல்லி முடித்தாகி விட்டது. “ஆணும், பொண்ணும் சமமாம். ஒரு பெண்ணால் இப்படி வெளியூர்ல போய் நாட்கணக்கில தங்கிட்டு வரமுடியுமா? விடத்தான் செய்வரா? ம்…’
யோசனையிலேயே ஆழ்ந்து விட்டவளை படக்கென்று தட்டியெழுப்பியது பாகீரதியின் குரல். பாகீரதி கம்பெனியின் நிர்வாகி. சிறப்பான நிர்வாகி என்று பெயர் பெற்றவர். ஊழியர்களிடம் கனிவுடன் இருப்பார். கல்பனாவின் பிரச்னைகள் நன்கு தெரியும்.
“”என்ன… ஷாலுவின் நினைப்பா? நான் தான் சொல்றேன், நீ கேட்க மாட்டேன்கிற… நம்ம கம்பெனியின் ரிக்ரியேஷன் ஹாலில் ஒரு மூலையில் துணியை கட்டிக்க. கொழந்தைய கொண்டாந்திரு… நிம்மதியா இரு. வேலை செய்! இப்படி குழந்தைய நினைச்சிட்டே இருந்தா உன்னோட கிரியேடிவிட்டி போயிடும் கல்பனா; திறமையும் குறைஞ்சிடும்!”
“”எனக்கு தயக்கமா, வெட்கமா, கூச்சமா இருக்குது மேடம்!”
“”இதில் என்ன வெட்கம். பெண்ணாய் பிறந்தாயிற்று. உன் கடமைகளை வீட்டிலும் சரி… வெளியிலும் சரி, சரிவர நிறைவேற்ற வேண்டும் தானே? உனக்கு ஆபிஸ்ல பிரச்னை வராம பாத்துக்கறேன்,” என்றவள், ஆறுதலாகத் தோளைத் தட்டிவிட்டு சென்றாள்.
எல்லாம் கணவனால் வந்த வினை. கல்யாணத்திற்குப் பிறகு, “வேலையை விட்டுவிடு…’ என்று சொன்னான். இவள், “சரி…’ என்றாள். ஆனால், வயிற்றில் குழந்தை உண்டான நேரம், மாமனாருக்கும், மாமியாருக்கும் திடீர் என ஞானோதயம் வந்திருச்சாம். “கல்பனாவை வேலைக்கு அனுப்பு!’ என்று சொல்ல, சுந்தரேசனும் தலையாட்டி… கஷ்டப்பட்டு மறுபடியும் ஒரு வேலை வாங்கி… அது தனிக் கதை!
இப்போது குழந்தையை வீட்டிலோ, கிரச்சிலோ தனியாக விட்டுவிட்டு வரும் போது மனதை ஏக்கம் பிராண்டுகிறது.
பாகீரதி சொல்வது போல், குழந்தையை ஆபிசிற்குக் கொண்டுவர ஏதோ தடுத்தது; ஆனால், வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. சக ஊழியர்கள் பிரவீணா, பார்கவி, அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். இரண்டு பேருமே தனியாக இருக்கும் குழந்தைளை நினைத்து, நடைப் பிணங்களாகத் தான் இருக்கிற விஷயம், விசாரித்த பின்தான் தெரிய வந்தது.
சாயங்காலம் நீலாங்கரை சென்றாள் கல்பனா. வீடு கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. நல்ல தனி இடம். நிழல் தரும் மரங்கள். வேலை நேரம் முடிந்து விட்டபடியால், அமைதியாக இருந்தது. கல்பனா போகும் போது, இரண்டு பெண்கள் மட்டும் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சற்று தள்ளி மர நிழலில், தூளியில் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தன.
“”வணக்கம்மா… என்ன பாக்கிறீங்க… எங்க குழந்தைகள் தான்… இங்கேயே எடுத்துட்டு வந்துட்டோம். வீட்ல மாமியார், மாமனார் எல்லாரும் பார்க்கறேன்னுதான் சொன்னாங்க; ஆனா, எங்களுக்கு மனசு கேட்கல. பச்சப்புள்ள கண்முழிச்சா நம்மளத்தான் தேடும்… நமக்கு அதுகள விட்டுட்டு வந்தா, வேலையும் ஓடமாட்டேங்குது… கஷ்டமோ, நஷ்டமோ, நம் கண் முன்னாடியே இருந்துட்டுப் போகட்டும். மேஸ்திரிகிட்ட கேட்டேன். சரின்னு சொல்லிட்டார்…” சிரித்துக் கொண்டே சொன்னாள்.
கல்பனாவிற்கு பொட்டிலடித்த மாதிரி இருந்தது. இந்தப் படிப்பறிவில்லாதவளுக்கு எப்படிப்பட்ட சிந்தனை.
“”இந்த குழந்தை, எங்க கண் முன்னாடியே உண்டு, உறங்கி, விளையாடிக்கிட்டு இருக்குற போது, அதுக்கும் மனசு நல்லா இருக்கு… எங்களுக்கும் மனசு லேசா இருக்கு… வேலையும் நல்லா ஓடுது… இப்ப நாகரிக காலத்துல வேலைக்கு போற பெண்கள், இத மறந்துடறாங்க… ஒன்று பிள்ளைய தனியா விட்டுட்டு வந்திடறாங்க அல்லது பிள்ள பெத்துக்கறத தள்ளிப் போடறாங்க… ரெண்டுமே தப்புமா… பாசத்தைக் காண்பிக்க வேஷம் எதுக்கும்மா?”
சித்தாள் வேலை செய்யும் அந்த பெண் சொன்ன வார்த்தைகள், கல்பனாவுக்கு சுரீர் சுரீர் என்று உரைத்தன. மனதால் குழம்பிப் போயிருந்த அவளுக்கு எப்படி ஒரு தீர்க்கமான முடிவைச் சொல்லி விட்டாள்!
இனி, அவள் மனதில் எந்தக் குழப்பமும் இல்லை!
குழந்தை ஷாலுவை ஆபிஸ் எடுத்துச் செல்ல முடிவெடுத்து விட்ட செய்தியை, பாகீரதி மேடம் கேட்டால், சந்தோஷப்படுவார் என்று நினைத்துக் கொண்டாள் கல்பனா!
– ஆகஸ்ட் 2010