பழைய மனசும் புதிய மூளையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 4,848 
 

தாத்தாவின் பழைய மனசு

தாத்தாவுக்கு எப்பவுமே அலட்டல்தான். இந்தக் கோலாலம்பூரை நினைத்தால் என்னடா பூமியிது என்கிற தீராத வெறுப்பு எப்பவுமே. மண்ணை விட்டு ரொம்பவும் தூரப் போய்விட்டது போன்ற உணர்வு வீட்டின் சன்னல் திரையை விலக்கிவிட்டு விளிம்புவரை நின்று எட்டிப் பார்க்கும்போது மூளையில் ஊறும். மண் ஏதோ தூரத்திலிருக்க தான் ஏதோ அந்தரத்தில் தள்ளாடிக்கொண்டிருப்பது போல தோன்றும் அந்த பதினேழு மாடி அடுக்குமாடி வீட்டிலிருந்து கீழே பார்க்கும்போது.

அந்தக் காலத்தில் இதையெல்லாம் கற்பனைகூட செய்து பார்த்தறியாத முரட்டு சென்மமாய் இருந்திருந்ததை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் இரண்டு முனைகள் கருத்தில் தோன்றும். ஒன்று ஏன்டா என் மூளை புதுச ஏத்துக்கமாட்டேன்ங்குது, இரண்டாவது ஏன்டா பழைய வாழ்க்கையத் தொலைச்சே?

மண்ணோடு உறவாடி பறவைகளோடு பாட்டுப்பாடி தீம்பாரில் சுறுசுறுப்பாக போட்டி போட்டுக்கொண்டு ரப்பர் மரம் சீவியதும், தென்னங்காயை அறுத்ததும் ஆகக் கடைசியாக செம்பனைக் குலையை வெட்டிய ஞாபகமும் என்று நியூ கொக்கணட் எஸ்டேட் நினைவுகள் தாத்தாவின் பழைய மூளைக்குள் அவ்வப்போது ஜாலம் காட்டத் தவறுவதில்லை.

இயற்கையைச் சாகடித்து மனிதன் மட்டும் வாழ நினைக்கும் பூமிதான் இந்த நகரம். இந்தப் பட்டணத்துக் காலைச் சூரியனைக் கூட அவரால் ரசித்து அதனுள் சங்கமிக்க முடியவில்லை. லாவகமாக பாட்டி பின் கம்பியில் உட்கார்ந்துவர, காலையில் சைக்கிளை மிதித்துக்கொண்டு வலது கை சைக்கில் ஹேண்டலைப் பிடித்துக்கொண்டும் இடது கை மூங்கில் குச்சியின் ஜீவனை உருக்கிச் செய்த அலக்கையையும் பிடித்துக்கொண்டு ஓட்டுவார் வேலைக்கு. “உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால்”, அப்புறம் கொஞ்சம் புத்தம் புதிதாய் “மை நேம் இஸ் பில்லா” என்று காலத்துக்குத் தகுந்த மாதிரி பாட்டை மாற்றிக்கொண்டு வாய்க்கு இதமாய் பாடிக்கொண்டே போக கண்ணுக்கு இதமாக இருக்கும் அந்த உயிரோட்டமுள்ள காலைச் சூரியன்.

பேரனின் புதிய மூளை

தாத்தா எப்போது பார்த்தாலும் எஸ்டேட்டின் அருமை பெருமைகளையும் சுகானுபவங்களையும் சொல்லிச் சொல்லி மாய்வது பேரனுக்கு என்னவோ வியப்பாகத்தான் தோன்றியது. விட்டுப் போன பழைய உறவின் கல்யாணத்துக்கு சமீபத்தில் குடும்பத்தோடு போகவேண்டிய பாதகச் சூழ்நிலையைக் கடந்ததும்தான் வியப்பு வெறுப்பாகிப் போயிற்று.

என்ன உலகம் அது? கொட்டாங்குச்சிக்குள் இருந்துகொண்டு இதுதாண்டா உலகம்னு நம்பி ஏமார்ந்துபோகும் எறுப்புகளைப்போல அல்லவா இருக்கிறது இந்தச் சனங்களின் வாழ்க்கை? இதைத்தான் தாத்தா சொர்க்கம் சொர்க்கம் என்று காது பொங்க புகழ்ந்துத் தள்ளினாரா? இன்னும் இந்த எஸ்டேட்டில் இருக்கும் ஐந்தாறு தமிழ்க் குடும்பங்களையும் மீதி எஸ்டேட்டை நிறப்பியிருக்கும் இந்தோனேசிகளையும் அளவிட்டுப் பார்த்தான் கணித மேதையை விழுங்கி வைத்திருந்த பேரன். ஐம்பது வருஷங்களாக இருக்கும் தமிழ்க் குடும்பங்களுக்கும் ஐந்து வருஷங்களுக்குமுன் வந்த இந்தோனேசியர்களுக்கும் வளர்ச்சி விகிதத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என்பது நிதர்சனம்தான்.

நாகரீகத்தை எட்டித்தள்ளும், முன்னேற்றத்தை ஒளித்து வைக்கும் சிறைதான் எஸ்டேட். வெள்ளைக்காரன் நம்மை அடிமைகளாக்கி வெளியுலகம் தெரியக்கூடாது என்று போட்டச் சிறைத் திட்டம்தான் எஸ்டேட். அது தெரிந்தும் அதிலேயே மனம் லயிக்குது தாத்தாவுக்கு. என்னத்தைச் சொல்ல இந்த அடிமை விரும்பிகளை?

தாத்தாவின் பழைய மனசு

அந்தத் திருமணத்துக்குப் போய்த் திரும்புகிற வழியில் பேரன் அம்மாவிடம் அப்படிச் சொன்னது தாத்தாவின் கடுக்கன் போட்டக் காதுகளுக்கும் எட்டியது. ஒரு வேளை தாத்தாவுக்குத் தெரியட்டும் என்று வேண்டுமென்றே விளங்கும்படிச் சொன்னானோ என்னவோ? அதைக் கேட்டதும் தாத்தாவின் ஆன்மாவும் உணர்வுளும் சேர்ந்து சரீரத்தையும் துடிக்கச் செய்துவிட்டன.

வெள்ளைக்காரன் அடிமைப் படுத்தினான்தான். ஆனாலும் அதில் சுதந்திரம் இருந்தது. எங்கள் உலகத்துக்குள் நாங்கள்தான் ராஜாக்கள், ராஜாத்திகள். அதிகாலையில் எழுந்து வேலைக்குப் போய் வியர்வையை விற்று பணத்தைக் கொண்டுவந்து அதில் வாழ்க்கை நடத்துவோமே. எவ்வளவு ஆரோகியமான வாழ்க்கை அந்த எஸ்டேட்டில்? வேலை முடிந்தால் மத்தியானம் எஸ்டேட் திடலில் கூட்டாளிகளோடும் பிள்ளைகளோடும் வயசு பேதமில்லாமல் கால்பந்து விளையாடுவோமே! ராத்திரியில் பழைய கறுப்பு வெள்ளை டீவியில் எதையாவது பார்த்துவிட்டு நிம்மதியாகத் தூங்கி பின் மறுபடியும் அதிகாலையில் சந்தோஷமா எழுந்திருப்போம் அடுத்தநாள் வேலைக்கு.

இந்தப் பட்டணத்தில் யாரும் அடிமைப் படுத்தாமலேயே சுதந்திரம் இழந்து திரிகிறார்களே தெரியவில்லையா? வேலை எட்டு மணிக்குத்தான் என்றாலும் ஆறு மணிக்கே மகனும் மருமகளும் கிளம்பிவிடுவார்கள் ட்ராபிக் நெரிசலுக்குப் பயந்து. வேலை ஐந்து மணிக்கு முடிந்தாலும் ஓ.டியை முடித்துவிட்டு ராவில் எட்டு மணிக்குத்தான் வீடு வந்து சேர்வார்கள். அங்கு நாங்கள் பணத்தை அடிமை செய்து வாழ்ந்தோம்; இங்கு எல்லாரும் பணத்துக்கு அடிமைப்பட்டு வாழ்க்கையை வேலையில் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். யாரைப் பார்த்துச் சொல்கிறான் அடிமை விரும்பிகள் என்று? சின்னப் பயல்!

பேரனின் புதிய மூளை

அன்று திருமணத்துக்குப் போனபோதுதான் எஸ்டேட் என்றால் எப்படி இருக்கும் என்று அறிந்திருந்தான் பேரன். மற்றபடி எஸ்டேட் பற்றிய அவனது அறிவு தாத்தா சொல்லிவைத்தப் பழைய குறிப்புகளும் அவ்வப்போது மலேசிய நாடகங்களில் வரும் காட்சிகளும்தான். நேரடியாகப் போய் பார்க்கும்போதுதானே எஸ்ட்டேட்டுகளின் உண்மை லட்சணம் வெளிச்சத்தில் தெரிகிறது.

அருவருப்போ, ஏளனமோ, கேவலமோ அல்லது இவையெல்லம் கலந்த கலவையோ என்னவோ பேரனது நெஞ்சை அறைந்துகொண்டிருந்தது. அந்த எஸ்டேட் திருமணத்தன்று அப்பா அப்படியொரு வாக்குறுதி கொடுத்திருக்கக் கூடாது அந்த பட்டைச் சாராய வாடை வீசும் மாயாண்டிக்கு. நியூ கொக்கணட் எஸ்டேட் கோவில் திருவிழா வைகாசியில் வருகிறதாம். கட்டாயம் வந்துவிடுவதாகச் சொல்லிவைத்திருந்தார் அப்பா. வைகாசி என்பது அடுத்த மாதம்தான் என்று நாள்காட்டி எச்சரிக்கை செய்தது.

அப்பாவுக்கும் சின்ன வயதில் எஸ்டேட்டைச் சுத்தின ஞாபகம் ஏதாவது வந்து தொலைத்துவிட்டதா? ஐயோ, இப்படிச் சொல்லிச் சொல்லி கடைசியில் மறுபடியும் எஸ்டேட்டுக்கே குடித்தனம் போய்விடுவார்கள் போலிருக்கிறதே! அப்படியென்றால் என் எதிர்காலம் என்னவாகிறது?

திருவிழாவாம் திருவிழா. நாக்கையெல்லாம் தொங்கப்போட்டுக்கொண்டு வாயில் இரும்புக் கம்பியை விட்டுத் தைத்துக்கொண்டும், லொங்கு லொங்கென்று குதிப்பதும்… தைபூசத்தில் இதைப் பார்த்துப் பரிட்சயம் இருப்பதால் முன்கூட்டியே எல்லாவற்றையும் அனுமானிக்க முடிந்தது பேரனால்.

சாமியாடுகிறார்கள்; ஊரை ஏமாற்றுகிறார்கள். ஆடுறவன் பூராவும் படிக்காதவன்தான். எங்கே ஒரு டாக்டர் சாமியடுனார், இன்ஸ்பெக்டர் சாமியாடுனார், மந்திரி சாமியாடுனார்னு ஒரு சேதியாவது கேள்விப்பட்டிருக்கீங்களா? எஸ்டேட் திருவிழாவுக்குப் போகவேண்டாம் என்பதற்காகப் பேரன்தான் அப்படிச் சொல்லி மல்லுக்கு நிற்கிறான் என்று தாத்தாவிடம் அப்பா போட்டுக்கொடுத்திருந்தார்.

தாத்தாவின் பழைய மனசு

தாத்தாவுக்குச் சுறுக்கென்று பட்டது அதைக் கேட்டதும். பேரன் சொல்வதில் நியாயம் இல்லை என்று முழுமையாக கோடுகிழித்துத் தள்ளிவைக்கப்படாது. உண்மைதான்; எந்த காலத்தில் டாக்டரும் மந்திரியும் சாமியாடியிருக்காங்க? எல்லாம் பழம் வெட்டுறவங்களும் காய் உரிக்கிறவங்களும் மருந்தடிக்கிறவங்களும் வெளிகாட்டு வேலை செய்கிறவர்களும்தானே சாமியாடுகிறார்கள்? ஒருவேளை அந்தச் சாமி ஏழை சனங்க எங்க மேலதான் கருணை கொண்டிருக்கோ என்னவோ… ஆனா, அதெல்லாம் ஏமாற்று வேலையா?

அவன் சொல்லுவான் பெருசா! முளைச்சு மூனு இலை விடக்காணோம், பேச்சப் பாரு? என்னமோ இந்த நகரம் தெய்வங்கள் அடிக்கடி சுற்றுப் பிரயாணம் வந்துவிட்டுப் போகிற இடம் மாதிரிதான். நாளிதழைத் திறந்து வைத்தால்தான் நகரத்தின் நாற்றம் கமகமக்கிறதே! என்னென்ன விதமா மதியூகமா ஏமாத்துகிறான்; கொள்ளையடிக்கிறான். இதவிட பொய்யா சாமியடுறது எவ்வளவோ தேவலாம்னு சொல்லிவை உன் பையன்கிட்ட.

தாத்தாவுக்கு பதிலடி கொடுத்துவிட்ட நிம்மதி.

தாத்தாவின் மனசோ அந்த காலத்தில் தவிலை மாட்டிக்கொண்டு டங்குடக்கர டங்குடக்கர என்று தாளமெழுப்பிய ஞாபகம் வருடியது. சுற்று வட்டார எஸ்டேட் மக்கள் முதற்கொண்டு அத்தனைப் பேரையும் கிரங்கடித்துவிடுவார் தவில் அடிக்க ஆரம்பித்துவிட்டால். தாத்தா தவிலை எடுத்தாலே மளமளவென விருதுகள் குவியும். தவில் மாமணி, இசை வித்தகன், தவில் ஞானி என மொத்தம் ஏழெட்டு விருதுகள் அந்த எஸ்டேட் மக்களிடமிருந்து கிடைத்ததாக ஞாபகம்.

பழையது எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர வர தாத்தா தீவிரமானார். எப்படியாவது மீண்டும் ஒருமுறை தனது பழைய எஸ்டேட்டுக்குப் போயே ஆகவேண்டும். தாத்தா முடிவெடுத்துவிட்டார்!

பேரனின் புதிய மூளை

திருவிழா என்று சொன்னாலே பேரனின் வலது பக்க மூளைக்கும் இடது பக்க மூளைக்கும் இடையில் இருக்கிற இடைவெளி பால்வீதியில் பட்டாசு கொழுத்திப் போட்டதுபோல வெடிக்கும். வளர்ந்து வரும் பேரனின் சிந்தனையெல்லாம் சதா அந்தத் திருவிழாவைப் பற்றியதாகவே இருந்தது.

சிறந்த தற்கொலை முயற்சி திருவிழா என்பது படித்த பட்டணத்துப் பேரனின் தத்துவம்! ஒரு திருவிழா என்றால் ஒரு கத்தி வெட்டு, கும்பல் சண்டை, ஆகக் குறைந்தப்பட்சம் வாய்த்தகராறு என்று ஏதாவது ஒரு சமாச்சாரம் கண்டிப்பாக இருக்கும். அந்த எஸ்டேட் திருவிழாவில் தன்னுடைய தலை எந்த திசையில் உருண்டு போகுமோ என்பதை நினைத்துப் பார்த்தாலே ஈரலும் கொலையும் நடுக்கங்கண்டுவிட்டது.

இதே அடுக்குமாடி வீட்டுக்குப் போன வருஷம் குடிவந்த சத்தியமூர்த்தி என்ற தனது க்ளாஸ்மேட் சொன்னது நினைவுக்கு வந்து தகிக்கும் தீயில் டீசல் ஊற்றிவிட்டுப் போனது மாதிரி இருந்தது. சத்தியமூர்த்தியின் பூர்வீகம் ஏதோ ஒர் எஸ்டேட்தான்; பெயர் ஞாபகம் இல்லை. அங்கு நடந்த கூத்துக்களையெல்லாம் சமயங்களில் கதைகதையாக சொல்லிவைத்திருந்தான்.

சத்தியமூர்த்தி இருந்த எஸ்டேட்டில் ஒரு நாளைக்கு ஒரு சண்டையாவது அரங்கேற்றம் கண்டுவிடுமாம். அவனது பக்கத்து வீட்டுக்காரன் தினமும் கள்ளுக்கடையில் மப்பேற்றிக்கொண்டுவந்து தன் அப்பாவை வம்புக்கு இழுப்பதும் அதற்கு பதிலடி கொடுக்க இவரும் தயார் நிலையில்தான் ‘மப்பும் மந்தாரமுமாக’ இருப்பார் என்றும் சொல்லியிருக்கிறான். அவன் இருந்த எஸ்டேட்டில் சண்டை போடாத குடும்பமே கிடையாது என்றும் பீற்றிக்கொள்வான்.

என்ன அநாகரீகம் என்று பேரனுக்குத் தோன்றியிருந்தாலும் தாத்தாவிடம் விளக்கம் கேட்கும் அளவுக்கு போதிய தைரியம் இல்லைதான். பேரனுக்கு அவனது மனசாட்சிதான் எல்லாமும்.

பேரனது மனசாட்சி தீர்ப்பு கூறிற்று. அது அநாகரீகம்தான். சாராயத்தின் கட்டுப்பாட்டுக்குள் நாகரிகம் இல்லாமல் ஒருத்தரை ஒருத்தர் திட்டிகொள்கிறதும், அக்கா ஓடிப் போன கதை, பொண்டாட்டி ஓடிப்போன கதை என்று அனுவனுவாக ஆராய்ந்து அம்பலப்படுத்தி பரிமாரிக்கொள்ளும் கண்றாவியையும் அவனால் சகிக்க முடியவில்லை. இது சத்தியமூர்த்தியிடமும் பிரதிபலிக்கிறது என்பதை அவன் கற்று வைத்திருக்கிற கெட்ட வார்த்தைகளின் எண்ணிக்கையை வைத்து அளவிட்டு மதிப்பீடு செய்திருந்தான்.

எப்படியாவது மறுபடியும் அந்த எஸ்டேட் பக்கம் போகிற திட்டத்தைக் கவிழ்க்க வேண்டும். பேரன் முடிவெடுத்துவிட்டான்!

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *