கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 3,321 
 
 

(1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேட்டுப்பாக்கம் குடியான \வர்கள் நிறைந்த ஒரு சிறு கிராமம். ஆற்றுப் பாய்ச்சலால் வளம் பெற்று நான்கு பக்கங்களிலும் வயல்களால் சூழப் பெற்றது. அவ்வூர்க் கீழண்டைக் கோடியிலிருந்து இரண்டு வீதிகள் மூன்று தாண்டிச் சென்றால் பனை ஓலை வேய்ந்த குடிசை ஒன்று தென்படும். அச்சிறு குடிசையில் தான் கண்ணம்மாளும் அவள் பாட்டியும் வசித்து வந்தார்கள். நிமிர்ந்து ஆடிக்கொண்டும் சாய்ந்து வீழ்ந்துங்கிடந்த கீரையைப் பிடுங்கி முடிமுடியாகக் கட்டி வரிசையாக வைக்கும் அவ்விருவரது உருவங்களும் அவ்வீதியின் வழியாகச் செல்லும் ஒருவர் கண்ணிலும் படாமல் போகா. அக்கிராமத்திலேயே கண்ணம்மாளைப் போன்ற உத்தம குணமுடைய வேறொருவரைக் காணமுடியாது.

மேட்டுப்பரக்க வாசிகளுக் கண்ணம்மாளின் தந்தையரைப்பற்றி ஒன்றுமே தெரியாது. சுமார் ஐந்து ஆறு வருஷங்களுக்கு முன்பு, அவன் சிறு பெண்ணாக இருந்தபொழுது தன் பாட்டியுடன் அக்கிராமத்திற்கு வந்தாள். கிரையைக் கொண்டு போய்த் தெருத் தெருவாக விற்றாள். சாப்பாட்டு நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் அவள் சுறுசுறுப்புடன் உழைத்து வந்தாள். அற்ப சம்பரதனையைக் கொண்டு அவளும் அவள் பாட்டியும் திருப்தியாகவே வயிற்றை வளர்த்து வந்தனர்.

அவ்வேழ்மை வாழ்க்கையில் அவர்களுக்கு வெறுப்புண்டாகவில்லை; விருப்பமே பட்டது. அவர்கள் குடிக்கும் கூழில் கைலாசத்தைக் கண்டு வந்தார்கள்;குடியிருந்த குடிசையை மாளிகையாக மதித்தார்கள்; கீரைத் தோட்டத்தையே பரம பொக்கிஷமாகப் பாவித்தார்கள். பொதுவாக அவ்விருவரும் சுகவாழ்வு நடத்தி வந்தார்கள். ஆனால் காலச் சக்கரத்துக்கு ஓய்வு எது? கண்ணம்மாளுக்கு இப்பொழுது பதினாறு வயதாகிறது. இன்னும் கலியாணம் ஆகவில்லை. ஆதலாள். அவளுக்கு வாழ்க்கையில் வெறுப்பும் அதிருப்தியும் ஏற்பட்டுவிட்டது. முன்பு இருந்த உழைப்பில் ஊக்கமும் உள்ளக் கிளர்ச்சியும் இப்பொமுது இல்லை.

கண்ணம்மாள் என்ன கீரை கொண்டு வந்தாலும் சரிதான்; தொப்புளான் வீட்டில்தான் ‘போணி’, பண்ணி விட்டுப் போவாள். தொப்புளானும், தன் தாயார் கீரை வேண்டாமென்று சொனனாலுங் கேளாமல் காலணாவுக்குக் வாங்கிவிடுவான். பிரதி தினமும் அவன் கீரை வாங்குவது அவனுக்குக் கீரை மேலுள்ள வாஞ்சையாலல்ல; கண்ணம்மாளின் மேலுள்ள அளவு கடந்த ஆசாபாசங்களால் தான். கண்ணம்மாளும் பிரதி தினமும் பனம் பழம், வெள்ளரிப் பிஞ்சு, பனை நுங்கு முதலியவைகளில் ஏதாவதொன்றைக் கூடைக்கடியில் ஒளித்து வைத்திருந்து அவனுக்குக் கொடுத்து விட்டுத்தான் போவாள். தொப்புளானும் அவைகளை மஹத்தான ஐசுவரியமாகப் பாவித்துப் புன்னகையுடன் வாங்கிக் கொள்வான்.


ஊரெங்கும் மேள வாத்தியம் முழங்கும் சித்திரைமாதம். நொப்புளானுக்கு எப்படியாவது அம்மாதத்தில் விவாகத்தை முடித்துவிடவேண்டு மென்ற எண்ணம். ஆனால் கண்ணம்மாள் தன்னை நிச்சயமாகக் கட்டிக்கொள்வாளா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால் ஒரு நாள் கண்ணம்மாள் வீட்டிற்குச் சென்றான். அவள் பாட்டியிடம் அவளைத் தனக்குக் கட்டிக் கொடுக்கும்படி கேட்டான். அவள் பாட்டிக்கு இஷ்டந்தான். ஆனாலும், ”கண்ணம்மாளுக்கு எது இஷ்டமோ அதுவே எனக்கும் இஷ்டம்” என்று பதில் சொல்லிவிட்டாள்.

“என்னெதிரிலேயே, இப்பொழுதே கூப்பிட்டுக் கேட்டு விடுங்கள்” என்று சொன்னான் தொப்புளான். கண்ணம்மாள் எதிரில் வந்ததும், “இவனைக் கலியாணம் பண்ணிக்கிறாயா?” என்று கேட்டாள் பாட்டி.

“ஒனக்குப் புடிச்சா எனக்கும் புடிச்சாப்போலத் தான்” என்று சொல்லிக்கொண்டே, வெட்கத்தால் சிவந்த முகத்துடன் நாணிக் கோணித் தலை குனிந்தபடி உள்ளே ஓடிவிட்டாள் கண்ணம்மாள்.

தொப்புளானுக்கு உடனே கலியாணத்தை முடிக்க வேண்டுமென்ற ஆசைதான். ஆனால், செலவுக்குப் போதிய பணமிராததால், “இன்னும் காசு சேரட்டும்; நாலைந்து மாதங்கள் கழித்துப் பண்ணிக் கொள்ளலாம்” என்று தனக்குள் எண்ணிக்கொண்டே பணம் சேர்ப்பதில் கண்ணுங் கருத்துமாயிருந்தான்; சுறுப்புடன் உழைத்தான்.


ஒரு நாள் திடீரெனக் கண்ணம்மாள் வீட்டுக்குச் சென்றான் தொப்புனான். அப்பொழுது அவள் பாட்டி வீட்டிலில்லை. வாடிய முகத்துடன் தாழ்ந்த குரவில் கண்ணம்மாளை அருகே கூப்பிட்டான். கலங்கிய கண்களால் கண்ணம்மாளை நோக்கியபடிச்சொல்லத் தொடங்கினான். “என் மனச் சாக்ஷிக்கும் எனக்கும் சிலநாட்களாக ஒரு பெரிய சண்டை – நீண்ட வாக்குவாதம். என்னைப் பற்றிய சில ரகஸ்ய விஷயங்களை ஒன்றுமே சொல்லிக் கொள்ளாமல் உன் சம்மதத்தைப் பெற்றுச் சென்றேன். அது முதல் என் சித்தம் ஒரு நிலையிலில்லை, மன அமைதியும் குலைந்துவிட்டது.

“நான் சிறு பிராயத்தை சிலோனில் கழித்தேன். அங்கு சுமார் ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு ஏழு வயதுடைய பெண்ணை எனக்குக் கட்டிக் கொடுத்தார்கள். பெற்றோர் பேச்சைக் கேளாமல் ஒரு வைப்பாட்டியுடன் காலங் கழித்தேன். சேமித்து வைத்திருந்த பொருளையும் அவளுக்காகச் செலவழித்தேன். தாலி கட்டிய பெண்டாட்டி, என்னைப் பெற்று வளர்த்த தாய் தந்தையர்கள் அனைவரையும் கைவிட்டு அவளுடன் வேற்றூருக்குச் சென்றுவிட்டேன். தலை கால் தெரியாமல் அவளுடள் கூடி ஆடிக் கொந்தளித்தேன். என்கையிலிருந்த பொருளை எல்லாம் வசீகரித்துக்கொண்டாள். என்னை உதாசினம் செய்ய ஆரம்பித்தாள். கறவை மலடானால் மேலும் கறக்க முடியுமா? அப்பாதகி என்னை விட்டுவிட்டு நள்ளிரவில் எனக்குத் தெரியாமல் எங்கேயோ ஓடிவிட்டாள்.

“எனக்குக் குடிக்கக் கூழுக்கும் தகராறு ஏற்பட்டுவிட்டது. அலைந்து திரிந்து கடைசியாக என் பெற்றோரை விட்டுச் சென்ற இடத்திற்குத் திரும்பி வந்தேன். அங்கு ஒருவரையுங் காணோம். விசாரித்ததில் என் தாய் தந்தையர்கள் கடுஞ் ஜுரத்தால் பிடிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டதாகவும், கடைசியில் என் தாய் தேறி விட தந்தை இறந்துவிட்டதாகவும், அவர்களுக்குப் புக்கிடம் வேறில்லாததால் மூவரும் (என் தாயாரும், மனைவியும், மாமியாரும்) இந்தியாவுக்குத் திரும்பிவிட்டதாகவும் கேள்விப்பட்டேன்.

“உடனே இந்தியாவுக்குத் திரும்ப என் மனம் ஒப்பவில்லை. ஏழெட்டு வருஷங்கள் சிலோனிலேயே வேலை
செய்தேன். கையில் சிறிது பொருள் சேர்ந்த உடனே சென்ற வருஷந்தான் இவ்வூர் வந்து சேர்ந்தேன். என் தாயார் உயிருடன் இருந்ததைப் பார்த்து உள்ளம் குளிர்ந்தேன்.

“ஏன் விருத்தாந்தம் முழுதும், என் மனதைத் திறந்து உனக்குச் சொல்லிவிட்டேன். இனி என்னைப் பூஜிப்பாயோ, தூஷிப்பாயோ உன் சித்தம். என்னை இரண்டாந்தாரமாக மணக்கச் சம்மதமிருந்தால் உடனே தெரிவி. முகூர்த்தத்திற்கு நாள் வைத்து விடுவோம்” என்று சொல்லி முடித்தான் தொப்புளான். அவனுக்குத் தன் கடமையைப் பூர்த்தி செய்து விட்டதில் பரம திருப்தி ஏற்பட்டது. கண்ணம்மாளுக்குத் தலைசுழல வாரம்பித்தது. தொப்பளானின் குணாகுணங்கள்ப் பற்றிச் சிறிது நேரம் சிந்தித்தாள். கடைசியாக, “எதற்கும் என் பாட்டி வரட்டும், கலந்து யோசித்துக் கூறுகிறேன்” என்று தீர்ப்பு சொல்லிவிட்டாள்.

“என்ன பாட்டி! சமாச்சாரம் தெரியுமா? அன்றைய தினமே என்னைத் கட்டிக் கொடுக்க என்னென்னவோ பேசினீர்களே, அவர் முழு விஷயமும் தெரியுமா? முதலில் ஒரு பெண்டாட்டி கட்டி தெருவில் விட்டுவிட்டாராம். இப்பொழுது என்னையும் கெடுக்கப் பார்க்கிறார். நான் அவரைக் கட்டாயம் கட்டிக்கமாட்டேன்” என்று பாட்டி திகிலுறும்படி அழுத்தந் திருத்தமாகச் சொல்லிவிட்டாள்.

உடனே பாட்டிக்கு அழுகை வந்துவிட்டது. அவள் தலை சுழலவாரம்பித்தது. அவள் மனம் ஒரு நிலையிலில்லை. கண்ணீரைத் துடைத்துக்கொண்டே எழுந்திருந்தாள். திடீரென அவள் மனதில் மாறுதல் ரற்பட்டது. தன் பேத்தியை நோக்கி, “கண்ணம்மா, அவன் நல்லபையன். அவன் உன்னை நன்றாக வைத்துக் கொண்டிருப்பான். பேசாமல் அவனைக் கட்டிக்கொள்” என்று சொன்னாள்.

ஆனால், கண்ணம்மாள் அவள் வார்த்தைகளைக் கேட்பதாகக் காணோம். கண்டிப்பாக அவனை மணந்துகொள்ள முடியாதென்று சொல்லிவிட்டாள்.

கண்ணம்மானின் தீர்மானம் கிழவியின் நெஞ்சைப்பிளப்பது போலிருந்த, ஓவென்று வாய் விட்டு அழுது கொண்டே, தன்னுடைய சிறு அறையை நோக்கி நடந்தாள். கூடவே தன் பேத்தியை அழைத்துச் சென்றாள். அறைக்குள் ஒரு பழைய கிழிந்த போன ஓலை பெட்டி மூலையில் கிடந்தது. அதைச் சற்றி வெளிச்சத்தில் எடுத்து வந்தாள். அதனுள் கிடந்த ஓட்டை உடைச்சல் சாமான்களையெல்லாம் ஒன்றொன்றாக வெளியில் எடுத்து வைத்தாள். கடைசியில் அடியிலிருந்து ஒரு மஞ்சள் நூல் சுருணையை வெளியிலெடுத்தாள். அதைப் பிரித்தாள். அதன் மத்தியில் ஒரு தாலிதொங்கிக் கொண்டிருந்தது.

கிழவிக்கு வாய்விட்டுப் பேச முடியவில்லை. துக்கம் செஞ்சை அடைக்கிறது, சற்று சமாளித்திக் கொண்டே, “இதுதாண்டி உன்தாலி. உன்னைக் கூடத்தான் ஒரு நாடோடிக்குக் கட்டிக் கொடுத்தார்கள். அவன் உன்னை அடிவயதிலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டான். இவ்விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை யாரும் மறுபடி கட்டிக்கொள்ள மாட்டார்கள். அதனால்தான் தாலியைக் கழற்சிப் பெட்டியில் வைத்துவிட்டேன். உனக்கும் ஒன்றும் சொல்லவில்லை” என்று சொல்லிவிட்டு, விம்மி கொண்டே அழ ஆரம்பித்தாள்.

கண்ணம்மாள் துன்பமே உருவெடுத்தரத்போன்று மௌனம் சாதித்துச் சற்று நேரம் நின்றாள். அவள் மனம் யோசனையில் ஆழ்ந்திருந்தது. அவயவங்கள் அசைவற்றிருந்தன. திடீரென அவள் முகத்தில் ஒரு புது ஜோதி பிறந்தது. இமையாதிருந்த கண்கள் ஜ்வலிக்கவாரம்பித்தன. தன் பாட்டியை கோக்கி, “என்னைத் தாலிகட்டித் தெருவில் விட்ட புருஷர் அங்க அடையாளங்கள் உனக்குத் தெரியுமா? கல்லியாணத்தின் போது நீ மாப்பிள்ளையை நேரில் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டாள்.

அதற்குக் கிழவி, “உனக்குக் கல்லியாணம் இங்கு ஆக வில்லை. கண்டியில் உன் தாயார் யாருக்கோ கட்டிக்கொடுத்தாளாம். அவன் தன் தாயையும் விட்டுவிட்டு ஒருதாசியுடன் ஓடிவிட்டானாம். உடனே அவள் தாயும், உன் அம்மாளும் நீயுமாக முவரும் நம் தேசத்திற்கே திரும்பி வந்துவிட்டீர்களாம். திரும்பிப்பொழுது அப்புருஷன் ஊருக்கு வந்து அவன் தாயாருடன் அவள் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தீர்களாம். உடனே புறப்பட்டு நம் ஊருக்கு என்னிடம் வந்து சேர்த்தீர்கள். சில மாதங்கள் சென்று உன் தாயார் காலரானால் இறந்துவிட்டாள். நம்மிருவருக்கும் அவ்வூரில் பிழைப்புக்கு வழியில்லாததாலும் இரண்டு மூன்று வருஷங்களாக மழையை இல்லாததாலும் ஊர் ஊராக அலைந்து, பசியால் மெலிந்து வெயிலால் வாடி வதங்கி யுலர்ந்து இவ்வூர் வந்து சேர்ந்தோம். கீரை விற்று அன்று முதல் வயிற்தை வளர்த்து வருகிறோம். உன்னை விட்டோடிய உன் புருஷனுடைய தாயார் தங்கியிருக்கும் ஊர் பெயரை மாத்திரம் உன் அம்மாள் சொல்லியிருந்தாள். இப்பொழுது கூட உன் புருஷனைப் பற்றித் தகவல் தெரிந்து கொள்ளலாம். உன் துரதிர்ஷ்ட வசத்தால் அவ்வூர் பெயரை என்னிடம் சொல் மறந்துவிட்டாள். அதினால்தான் தாலியை மறைத்து வைத்திருந்து மறுவிவாகம் செய்ய எண்ணியிருந்தேன்” என்று தன் மருமகள் தன்னிடம் சொல்லியிருந்த விருத்தாந்தங்களை யெல்லாம் தனக்கு ஞாபகம் இருந்தவரையில் சொல்லி முடித்தாள். கண்ணம்மாளுக்கு இவ்விஷயங்களை யெல்லாம் சொன்னால் மனமுடைந்து விடுவாள் என்று இதுவரை மறைத்து வைத்திருந்ததாகவும் சொன்னாள்.

கிழவி சொன்ன விருத்தாந்தம் தம் கண்ணம்பாளின் மனதை வசீகரித்தது. உடனே இன்பச் களவுகள் காணவாரம்பித்து விட்டாள். உடம்பு சிலிர்த்தது. தொப்புளான் தன் வாழ்நாளைத் துர் விநியோகப்படுத்தி அழிந்த காலத்தையும் இப்பொழுது நடத்தும் தூய வாழ்க்கையையும் நினைத்து மனம்பூரித்தாள். தொப்புளான் தன்னைத் தொட்டுத் தாலி கட்டிய கணவனே என்ற முடிவான தீர்மானத்திற்கு வந்துவிட்டாள். ஆனால் ஊர் ஜனங்கள் சும்மாவிருப்பார்களா? இவ்விஷயத்தைக் கேட்டு எல்லோரும் நகைப்பார்களே ஒழிய நம்ப மாட்டார்கள்.

பாட்டி மூலம் சகல விஷயங் களையும் அறிந்த தொப்புளானுக்குப் பரம சந்தோஷம் ஏற்பட்டுவிட்டது. கண்ணம்மாள் தன் மனைவியே என்று நிச்சயித்தான். இருந்தாலும் அவளைத் தன்னால் கண்டுகொள்ள முடியயில்லையே என்று தவித்தான். இளவயதில் பார்த்த அவளை இப்பொழுது பார்த்தால் எப்படி அடையாளம் கண்டுபிடிக்க முடியும்? மொட்டு மலரானால் எவ்வளவு விபரீத மாறுதல்களைப் பெறுகின்றது? தவிர, கன்னியம்மான் என்ற பெயர் பிடிக்காமல் கண்ணம்மாள் என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டு விட்டாள்.

மூவரும் கூடி, – ஏன் தொப்புளான் தாயார் கூடத்தான் – ஆலோசித்து மறுமுறை விவாகம் செய்வதென ஏக மனதாக நிச்சயித்துவிட்டார்கள். பழைய தாலி பழைய கழுத்தை விடமாட்டேனென்கிறது போலிருக்கிறது!

– நமது சிறுகதை, சுதேசமித்திரன் வாரப் பதிப்பு 1936 வஹு செப்டம்பர் மீ 20௨

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *