பள்ளிக்கூடம்..! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2021
பார்வையிட்டோர்: 11,654 
 

“எதுக்கு நம்ம பெண்ணை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்காமல் அரசாங்க பள்ளியில் சேர்க்கனும் என்கிறீங்க…? “கண்ணகி கணவனைக் காட்டமாகக் கேட்டாள்.

பதில் பேசாமல் இருந்தான் சந்திரன்.

“தாய் மொழி பாசமா..?”

“ம்ம்ம்ம்……”

“எனக்கும் தாய் மொழி பாசம், தமிழ் மேல விருப்பம் இருக்கு. ஆனாலும்….கால நிலவரத்துக்குத் தகுந்த மாதிரி நாமும் மாறனும். தமிழைத் தாண்டி நம்ம நாடு நகரங்களில் ஆங்கிலம் பரவல் மொழியாய் இருக்கு. பெரும்பாலும் அயல்நாடுகளிலும் இதே நிலை. அப்புறம் படிப்பைப் பொறுத்து +2த் தாண்டினால் பெரும்பாலும் ஆங்கிலம். அதனால் எதிர்க்காலத்தை முன்னிட்டாவது பெண்ணுக்கு ஆங்கில கல்விதான் சரி. “சொன்னாள்.

“கண்ணகி ! மாற்றம் உன் கண்ணுக்குத் தெரியாம நம்ம தலைமுறையை மனசுல வச்சு பேசுறே..”என்றான்.

“அப்படியா..?! “வியப்பாய்ப் பார்த்தாள்.

“ஆமாம். முன் அரசங்கப் பள்ளிகள் என்ன நிலையோ… இப்போ அதே நிலை ஆங்கிலப்பள்ளிகளில் அப்படியே இருக்கு..! ..”

“புரியல..?!”

“கண்ணகி ! ஆங்கிலப்பள்ளி ஆசிரியர்கள் ஓய்வறையில் உட்கார்ந்து வீண் கதைகள் பேசுறாங்க. பள்ளிக்கூடப் பாடத்தைப் பத்திப் பேசாம…வீடு கட்டுதல், பணத்தை வட்டிக்கு விடுதல்ன்னு பிற தொழில்களில் சம்பாதிப்பு பற்றி அலசி ஆராய்றாங்க. அப்புறம் பசங்களை வகுப்பில் படிக்கச் சொல்லிவிட்டு பக்கத்து வகுப்பு ஆசிரியைகளிடம் ஜாலியா பேசிக்கிட்டிருக்காங்க. தலைமை ஆசிரியர் அலுவலக ஊழியை ஒருத்தியிடம் பேசி ஜொள்ளு விடுறார். வகுப்பறை பெஞ்சுகள் முழுக்க இதயம் அம்புகள் ஓவியங்கள் நிறைஞ்சு கிடக்கு. கழிப்பறை சுவர்களில் ஆபாச எழுத்து, படங்கள், ஆசிரியர், ஆசிரியைகள் பெயர்களெல்லாம் நாறுது. அப்புறம்… இதையெல்லாம் தாண்டி பாலியல் தொல்லை, சீண்டல்கள்.. அப்புறம் கல்வித்தரம், கட்டுப்பாடுகள் பெயரில் மக்களுக்கு மற்ற பொது அறிவுகள் தெரியாமல் படிப்பு பற்றியே முகக்கவசம்..வேதனை ! .”நிறுத்தினான்.

கேட்ட கண்ணகிக்குத் தலை சுற்றியது.

“இப்போ அரசு பள்ளிகள் இதெல்லாம் மாறி சுத்தமா இருக்கு. அரசாங்கம் பள்ளிகளை ஆரோக்கியமாய் செயல் பட வைக்குது. தமிழ் எல்லா நாடுகளிலும் பரவி கிடக்கு. சில நாடுகளில் ஆட்சி மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டு இருக்கு. தமிழ் படிச்சா எதிர்காலம் பிரகாசம் என்கிற நிலை வந்திருக்கு. அதான் அப்படி ஒரு முடிவு!” சொன்னான்.

கண்ணகி மலர்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *