கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2022
பார்வையிட்டோர்: 4,806 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கல கல வென்ற அவர்களது சிரிப்பொலி அந்த அருவியின் ஒலியோடு கலந்து அந்தக் கானகமெங்கும் வியாபித்தன.

அருவி விழும் இடத்தில் தண்ணீர் தேங்கி நிறைந்து வழிந்து ஆற்றில் மெல்லப் பாய்ந்து சென்று கொண்டிருக்கின்றது. அந்த நீர்த்தேக்கத்தில் அவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர்.

தோழிகள் பூங்கூவின் மீது கைகளால் நீரை வீசியடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். நீர்த்துளிகள் அவளது உடம்போடு ஒட்டாமல் முத்துக்களாய் உருண்டு சரிந்து நீரில் கலந்தன. அவள் மூழ்கி எழும்போது முடிக்கற்றைகள் அவளின் பாதி உடம்பை மறைத்தன. அதைக் கையால் விலக்கிப் பின்புறம் ஒதுக்கியதும் அதிகாலையில் மஞ்சு விலகியதும் பளிச்சென ஒளி வீசும் விரிந்த மலர்போல அவள் முகம் பிரகாசித்தது கூர்ந்து தேடும் பெரிய விழிகள் கொய்யாப் பழக்கன்னங்கள், நாகவல்லி இதழ்கள் போன்ற உதடுகள், பப்பாளி மணிகளாய்ப் பற்கள், இள மஞ்சள் புதுநிறங்கலந்த திரண்ட புஜங்களும் உடைய பூ உடம்பு. மொத்தத்தில் அவள் ஒரு சௌந்தர்ய வன தேவதையாகவே காட்சியளித்தாள்.

அவள் தோழிகளும் அழகிகள் தான் என்றாலும் அல்லிக் கூட்டத்திற்கிடையே ஒரு அரவிந்த மலர்போல அவள் தோன்றினாள்.

ஆற்றுத் தண்ணீர் அந்த இடத்தின் அழகை வளமாக்க உதவிவிட்டு மேலும் பாய்ந்து கொண்டிருந்தது. தண்ணீர் உரசி ஓடிய கற்கள் மாங்கனிகாய், மான் முகங்களாய், நட்சத்திரங்களாய் இன்னும் பெரிய பாதி வெட்டிப் பதித்த உலக உருண்டைகளாய் நதி எங்கும் காட்சியளித்துக்கொண்டிருந்தன. கரையெங்கும் மூங்கில் புதர்கள், தாழம் புதர்கள், பசுமையை அள்ளித் தெளித்து நதிப் பெண்ணுக்குச் சாமரங்கள் வீசிக்கொண்டிருந்தன. தாழம் பூக்களின் மணம் எங்கும் பரவி அங்கு ஒரு சுகானுபவத்தை ஊட்டிக்கொண்டிருந்தன.

வனக்கன்னி, செடிகொடிகள், குறு மரங்கள் பெருமரங்களால் தன்னைப் போர்த்திக் கொண்டிருந்தாள். வளமை வற்றாத இருப்பாக அங்கே வியாபித்திருந்தது.

மரங்களின் கிளைகள் வானவெளியை பனி நீர்த்துளிகளைத் தெளித்து அலசிவிட்டுக் கொண்டிருந்தன. குன்றுகளின் சிகரங்கள் வானத்தைத் தொட்டுவிட்டு துடித்துக்கொண்டிருக்க மேகக் கன்னிகள் அவற்றைத் தட்டி விட்டு ஓடி வேடிக்கை செய்து கொண்டிருந்தன.

மரங்களில் அலர்ந்த மலர்கள் கொள்ளை விருந்தளித்துக் கொண்டிருக்க தளிர் இலைகளும் பல வண்ணக் கோலங்களைத் தீட்டிக்கொண்டிருந்தன. மலர்கள் கிளைக்குக் கிளை தாவி விளையாடுவதைப் போன்று தேன் சிட்டுப் பறவைகள் பறந்து அமர்ந்து தன் சின்னக் குரலால் குறிஞ்சியின் அழகைக் கூவிக்கூவி வியந்து கொண்டிருந்தன.

மஞ்சுத்திரள்கள் குபுகுபுவென வந்து படிந்து அந்த இடத்தை மறைத்தது. அந்த நேரம் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை மேகங்கள் மெல்ல மெல்ல விலகும் போது வானத்து மேக மண்டலத்தில் விளையாடும் தேவகன்னிகள் போல அவர்கள் தோன்றினர்.

“பூங்கூ அதோ பாரு நீலன் – மரத்து மறவுல ஒளிஞ்சுகிட்டு நம்மளைப்பாத்துக்கிட்டு இருக்கான்.”

தோழிகளில் ஒருத்தியான கூந்தலி கூறியதும் அவர்கள் சடாரென எழுந்து கரையேறி ஆடைகளை உடுத்திக்கொண்டனர்.

“இந்தப் பயலுக்கு வேற வேல இல்லே பொட்ட நாயகத்துற ஆண் நாய் மாதிரி எப்பவும் சுத்திகிட்டுருக்கான். த்தூ” என்று அவனை ஏசிவிட்டு பூங்கூ வேகமாக நடந்தாள் தோழிகளும் திரும்பிப் பார்த்துக்கொண்டே அவளைப் பின் தொடர்ந்தனர்.

“போயிட்டான் போல ஆளக் காணோம்” என்று ஒருத்தி கூறியதும் அனைவரும் கொல் லென்று சிரித்தனர்.

செடிகளை விலக்கியவாறே, ஏதோ ஒரு பாட்டைப் பாடிக்கொண்டு பூங்கூ மானைப்போல ஓடினாள்.

“எங்களால் ஓட முடியல்லே; மெல்லப் போ” என்றவாறே மற்றவர்களும் ஓடினர்.

“ஏய்! அங்கே பாருங்கடி! காட்டெருமை பாதையில் வந்துகிட்டுருக்கு எல்லாரும் பாறை மறைவுல ஒளிஞ்சுக் கோங்கடி.”

பூங்கூ சொன்னதும் எல்லோரும் முன்னால் பார்த்தனர். ஒரு பெரிய காட்டெருமை மெல்ல அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தது. அவர்கள் அனைவரும் பாறையின் மறைவில் ஒளிந்துகொண்டனர்.

அது அருகே வந்ததும் பூங்கூ ஒரு பெரிய கல்லை சிரமப்பட்த் தூக்கி அதன் முன்னர் வீசினாள்.

திடீரென்று முன்னால் விழுந்த கல்லைக் கண்டதும் காட்டெருமை அதிர்ந்து நின்றது. பின், கோபமுடன் முன்னங்காலால் தரையை உதைத்து எதிரேயிருந்த மரத்தை ஒரு முட்டு முட்டியது. மரத்தின் பட்டை பிய்ந்து தொங்கியதும் “ஊம்” என்று உறுமியவாறே திரும்பி ஓடியது.

அவள் சிரித்துக்கொண்டே வெளியே வந்தாள்.

“ஒனக்கு எல்லாமே விளையாட்டுத்தானா? காட்டெருமை நம்பளக் கண்டிருந்தா நெலமெ என்ன ஆகும்” என்று கூந்தலி கடிந்து கொண்டாள். மை

“போங்கடி, எதையும் விளையாட்டாத்தான் பார்க்கணும். ஆபத்து வந்தா வரட்டுமே? அதுக்காக நம்ம பளியங்க பயந்து கிட்டே வாழணுமா?”

“ஆமா, அதுக்காக மிருகங்க முன்னே விழுந்து சாகணுமாக்கும்!”

eஅதற்கும் சிரித்துவிட்டு ஓடினான் அவள்

அவர்கள் ‘மந்து ‘வை அடைந்தனர்.

வனத்தில் அந்த வெட்டவெளி பகுதியில் அவர்கள் குடியிருப்பான மந்து அமைந்திருந்தது. சுற்றிலும் மூங்கிலிலான குடிசைகள், மேலே ஈத்தை இலைகளால் வேயப்பட்டு இருந்தன.

நடுவில் ஒற்றை மரத்தின் மேலே ஒரு பரண் அமைந்திருந்தது. தொங்கிய கயிற்றேணியில் ஏறி பூங்கூ மேலே சென்று பரணை அடைந்தாள்.

பளியர் தலைவன் சாத்தானின் வீடுதான் மரத்தின் மேல் பரண். பூங்கூ சாத்தானின் செல்ல மகள், அந்த இனத்தின் இளவரசி அழகோடு துடுக்கும் வீரமும் இணைந்தவள். அந்த வட்டார மலைகளில் வாழும் எந்த இனத்திலும் பூங்கூவிற்கு இணையான அழகி இல்லை என்பதே அனைவரின் கருத்தாகும். ஆகவே எல்லா இளைஞர்களும் அவளை மணக்கத் துடித்துக்கொண்டிருந்தனர்.

அடுத்த மலையில் வாழும் நீலன் நல்ல வீரன்தான். எப்படியும் அவளை அடைந்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டிடு அவளின் கடைக்கண் பார்வையைப் பெற வேண்டும் என்று அவள் போகுமிடமெல்லம் பின் தொடந்து, ரசித்து ஏங்கித் வங்கிடந்தான்.

அவளுக்குத் திருமணத்தில் விருப்பமே இல்லை. தந்தை திருமணப் பேச்சை எடுத்த போதெல்லாம் தட்டிக் கழித்தான்.

“நீ யாரை விரும்புறயோ சொல்லு, அவனையே உனக்கு மாப்பிள்யைா ஆக்குறேன்” என்று சாத்தான் எவ்வளவோ கெஞ்சினான்.

“எனக்கு கல்லாணமே வேண்டாம்பா” என்றாள் அவள்.

“இதோ பாரு, ஒனக்கும் வயசாயிடுச்சி. எங்ககாலத்துக்குள்ளே ஒரு நல்ல வீரனாப் பாத்துக் கையில் புடிச்சுக் கொடுத்தாதான் எனக்கு நிம்மதி. நம்ம காட்டு சாதிக்காரங்களும் அடுத்த மலை ஆளுகளும் நித்தம் நாலு பேரு ஒன்ன கேட்டு வாராங்க எனக்குப் பதிலு சொல்ல முடியல்லே .”

“அப்பா! அடுத்த பௌர்ணமிக்கு எல்லோரையும் வரச் சொல்லுங்க அதுல ஒரு முடிவு பண்ணி நான் யாரையாவது கெட்டிக்கிடுவேன்” பூங்கூ கூறியதும் சாத்தான் மிகவும் மகிழ்ந்து போனான்.

பௌர்ணமியன்று முன்னிரவு. அந்த மந்துவைப் சுற்றி எல்லா மலைவாழ் இனத்து இளைஞர்களும் உற்சாகமுடன் கூடியிருந்தனர். பெரியவர்கள் பாறையில் அமர்ந்திருந்தனர். மரங்களுக்கடியில் பெண்கள் குழுக்களாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். பூரண நிலாவொளி பாலாக ஒளியைப் பரப்பினாலும் அடர்ந்த மரங்களினுள் இடைவெளிகளில் மட்டுமே வெளிச்சம் தந்தது. மனதிற்கு இதமான ஒளியாக வெள்ளிச் சரங்கள் குத்திட்டு நின்றன. அவர்களைப் பொறுத்தவரையில் அந்த இரவும் பகல் நேரம் போலத்தான்.

சாத்தான் நடுவே ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தான். பூங்கூவும் தோழிகளும் அவளுக்குப் பின்னே நின்று கொண்டிருந்தனர். அனைவருக்கும் தேனும் தினைமாவும் வழங்குமாறு சாத்தான் உத்தரவிட்டதும் சிலர் எழுந்து தயாராக இருந்த பானைகளில் உள்ள தேனை தொன்னைகளில் முக்கி எடுத்து அதில் தினைமாவும் போட்டு அனைவருக்கும் அளித்தனர்.

விருந்து முடிந்ததும் தோழிகள் பூங்கூவைச் சுற்றிக் கும்மியடித்துப் பாட்டுக்களைப் பாடினர். அதற்கு இசைய இளைஞர்கள் கைதட்டித் தாளமிட்டனர்.

“மாசி நிலாவாய்
மருவில்லா வெள்ளிநிலா
பூசி உருக்கிட்ட
பொன்னுசிலை எங்க பூங்கூ
மாத்தூரான் அவ்வூரான்
மாவீரன் எவனிருக்கான்
பாத்துருவோம் அவன் வீரம்
பருவமக காத்திருக்க!”

பாடி முடிந்ததும் எல்லோரும் ஆரவாரம் செய்தனர்.

“சரி, அடுத்து நடக்குற காரியம் என்னன்னு சொல்லுங்க” என்றார் ஒரு பெரியவர்.

அனைவரும் சாத்தானின் முகத்தைப் பார்த்தனர். அவன் மகளின் முகத்தைப் பார்த்தான்.

“தோழிகள் சொல்லு பூங்கூ” என அவளை உற்சாகப்படுத்தினார்கள். சிறிது நேரம் அங்கே பேரமைதி நிலவியது.

“எல்லோரும் சாவுப் பாறைக்கி வாங்க சொல்றேன்.”

பூங்கூ கூறியதும் அனைவரும் ஏதும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“ராவு நேரத்தில் அங்கன எதுக்கம்மா?” வாங்கப்பா, சொல்லுதேன்!”

அவளின் உறுதியைக் கண்ட இளைஞர்கள் சரி, அந்த இடத்தில் நமக்கு ஏதோ போட்டி நடத்தப் போகிறாள் என நினைத்து விரைந்து சென்றனர்.

மரங்கள் அதிகமில்லாத ஒரு வெளியாக அந்த இடம் காட்சியளித்தது. ஓரிடத்தில் மலை அப்படியே முடிந்து போனதுபோல் மிகப் பெரிய பள்ளம். அங்கே மூவாயிரம் அடி உயரத்திற்குக் கோட்டை போல மலையைச் செலுக்கி விட்டதைப் போன்ற வழு வழுப்பான பாறை சுவர் போலக் குத்திட்டு நின்றது.

எட்டிப் பார்த்தாலே மயக்கம் வந்து விழுந்து இறந்துவிடுகின்ற பெரும் பள்ளம். அதன் வழி யாரும் இறங்கவும் முடியாது, ஏழுட்டு மைல் சுற்றி வந்தால் பள்ளத்தை அடையலாம். ஆனால் அங்கிருந்து மேலே ஏற முடியாது. ஆகவே அந்த இடத்தை சாவுப் பாறை அல்லது சாவுப் பள்ளம் என அவர்கள் அழைத்து வந்தனர்.

அந்த கரைக்குப் பத்தடி தள்ளியே எல்லோரும் நின்றனர். “சரியம்மா, என்ன சொல்லப் போறே” எனக் கேட்டான். பூங்கூவின் வேண்டுகோளை எதிர்நோக்கி அனைவரும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

“எல்லோம் கேட்டுக்கோங்க. எனக்கு வர்ர புருஷன் இந்த வட்டாரத்திலேயே பெரிய பெரிய வீரனா இருக்கனும்முன்னு நான் ஆசைப்படுதேன். அதனால், நான் சொல்றபடி யாரு செய்யிறாங்களோ அவங்க கழுத்துல நான் மாலையைப் போடப் போறேன். இந்த சாவுப் பாற பள்ளத்துல எந்த மனுசனும் எறங்க முடியாது. கீலே கூடி ஏறி வரவும் முடியாது. இது நடுவுல ஒரு பெரிய தேனடை இருக்கு. அத யாரு எறங்கி எடுத்துட்டு வர்ராங்களோ அவனுக்குத்தான் நா மாலை போடுவேன்.”

பூங்கூவின் சுயம்வரப் போட்டி அனைவருக்கும் திகிலையும் ஆத்திரத்தையும் ஊட்டின.

“என்னம்மா சொல்லுதே நீ. மனுசங்க எறங்க முடியாதுன்னு நீயே கூட சொல்லிட்டே அப்புறம் எறங்கி தேனடை எடுத்துட்டு வர்ரவனக் கெட்டிக்கிடுவேங்க. இது நடக்கற காரியமா?”

சாத்தான் சிறிது கோபத்தோடுதான் கூறினான்.

“இப்ப! நாந்தா சொல்லிட்டேனில்லே அப்படி செய்யிர வீரனைத்தான் நான் கெட்டிக்காடுவேன். இல்லேன்னா எனக்குக் கண்ணாலமே வேண்டாம்.”

“சரி, சரி! நீ கொஞ்சம் இரு. எல்லோரும் கேட்டுக்கோங்கப்பா இது ஒரு கஷ்டமான காரியந்தா, ஆனா மனுசன் நெனச்சா முடியாத காரியமா இருக்கு? நான் எளவட்டமா இருக்கும் போது இதுல எறங்கியிருக்கேன். இதுவரக்கி யாரிட்டயும் நான் இதச் சொல்லல்லே என்னா இது பெரிய ஆபத்தான காரியமுன்னுதா.”

“இப்ப யாரு எறங்கப் போறவனோ அவனுக்கு எம்பொண்ணு மாலை போடுவா, அது மட்டுமில்லே அவந்தா இனிமே நம்ம எல்லோருக்கும் ராசா சொல்லியாச்சி, யாரு எறங்கப் போறீக? ஒங்க வீரத்தைக் காட்டுங்க பாப்போம்!”

அனைவரும் ஏதும் புரியாமல் நின்றனர். பல இளைஞர்கள் கூடி யோசித்தனர். சிலர் வேகமாகச் சென்று காட்டுக் கொடி வகைகளை நிறைய அறுத்துக் கொண்டு வந்தனர்.

அவற்றை வாங்கிக் கயிறாகத் திரித்து இடையில் முடிச்சுகளைப் போட்டு தூரத்தில் மரத்தில் ஒரு முனையைக் கட்டி அந்த கொடி வடத்தைப் பள்ளத்தில் விட்டான் சாத்தான்.

“சரி, இது வழியா எறங்கலாம். யாரு மொதல்ல எறங்கப் போறீக?” என்றதும் சில இளைஞர்கள் அதனைப் பிடிப்பதும் பின் விட்டு விட்டு வருவதுமாக இருந்தனர்.

நீலன் தனியான ஒரு பக்கம் நின்றவன் தீரயோசித்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் மகிழ்ச்சியும் பயமுமான சஞ்சலப் புயல் வீசி அவனைத் தத்தளிக்கச் செய்தது.

ஏதோ முடிவில் வேகமாக வந்து வடத்தைப் பிடித்தான். இளைஞர்கள் ‘ஹோ’ வென்று ஆராவாரம் செய்தனர். அவன் கையில் ஒரு பந்தத்தைக் கொடுத்தான் சாத்தான். அதனை நீலன் வாயில் கவ்வியபடி மெல்ல அதில் இறங்கினான்.

மெல்ல தலையைச் சாய்த்துக் கீழே பார்த்தான். நிலவொளியாக இருந்தாலும் பாறை மறைவில் ஒரே இருட்டாக இருந்ததனால் ஒன்றும் தெரியவில்லை.

அடேங்கப்பா நூறுயான ஒசரம் இருக்குமே நம்மால் முடியுமா? தேன் கூடு கூட தெரியலியே? ஒரு வேளை கூட்டுலேயே கால் வச்சிட்டா முன்னக்கூட தேனீக்க கொட்டியே செத்துப்போயிடுவோமோ?

நீலனின் கைகால் கிடுகிடுவென நடுங்கியது. சிறிது நேரம் மிகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நின்றான். மேலே உள்ளவர்களும் பார்வைக்குத் தெரியவில்லை.

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். கயிறு ஆடியது. அவன் மேலே வந்து கொண்டிருந்தான்.

கையில் தேன்கூடு இல்லாததைக் கண்ட அனைவருக்கும் ஏமாற்றமாக இருந்தது. ஏளன ஒலிகள் சிரிப்புகள் எங்கும் நிறைந்தது அவன் மேலே வந்து பந்தத்தைக் கீழே போட்டுவிட்டு ஓடி மறைந்தான்.

“சரி, நீலனால முடியல்லே. அடுத்து யாரு?”

அடுத்து ஒரு இளைஞன் விடுவிடு என்று வந்து கயிற்றைப் பிடித்து இறங்கினான். கூட்டம் அமைதியாக இருந்தது.

நேரம் ஆகிக் கொண்டிருந்தது. கீழே இறங்கினவன் மேலே வரவில்லை என்பதை அறிந்த சாத்தான் கயிற்றை மெல்ல இழுத்துப் பார்த்தான். அது லேசாக இருந்தது.

போனவன் கயித்துல இல்ல விழுந்திட்டான் போலருக்கு வேற யாரு இறங்கப் போறீங்க?

சாத்தானின் அறைகூவலுக்கு யாரும் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. நோமும் ஆகிக் கொண்டிருந்தது

“ஏய் பூங்கூ ஒன்னும் நடக்கல்லே. இனி என்னம்மா – செய்யப்போறே?”

அவள் எல்லோரையும் ஒரு முறை பார்த்தாள். “அப்பா, நான் எறங்கப் போறேன்பா.” சாத்தானுக்கு அதிர்ச்சியாய் இருந்தது அவள் பேச்சு. “நீ எதுக்கும்மா எறங்கணும்? ஒன்னால் முடியாதும்மா.”

“அப்பா! நம்ம காட்டு எளவட்டக்காரங்களுக்கு இல்லாத வீரம் எனக்கு இருக்குன்னு காட்டப் போறேன். நான் ஒங்க மகதானுட்டு காண்பிக்கப் போறேன்.”

வேண்டாம்மா பூங்கூ! நம்ம போவோம் என்றவன் கூட்டத்தைப் பார்த்து “ஏய் எல்லோரும் கலஞ்சி போங்கப்பா” என்றான்.

“யாரும் போக வேண்டாம். என்னான்னு பாத்திட்டுத்தான் போங்களேன்” என்றவள் பந்தத்தை வாங்கிக் கொண்டு கீழே இறங்லானாள்.

எல்லோரும் திகிலடைந்துபோய் நின்றனர். சாத்தான் ஏதும் புரியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.

“பெரிய ராங்கிக்காரியா இருக்காளே! இவ எங்க மேலே வரப்போறா” என்று பலரும் முணுமுணுத்தனர்.

மரத்தில் கட்டியிருந்த கயிற்றருகே பூங்கூவின் தோழிகள் காவலாக நின்றனர். நேரம் ஆக ஆக அனைவரின் மனதும் ‘திக் திக்’ கென அடித்துக்கொண்டிருந்தது.

கயிறு மெல்ல அசைந்தது. எல்லோரின் பார்வையும் அங்கேயே இருந்தது.

பாறையில் அவள் தலை தெரிந்ததும் அனைவரும் ஹோ வென மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனர். சாத்தான் ஓடிச் சென்று ஒரு கையைக் கொடுத்தான். அவளின் ஒரு கையில் பெரிய தேனடை இருந்தது.

திமுதிமுவென்று சத்தம் வரவே எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். கையில் அரிவாளோடு ஓடிய நீலன் கயிற்றை ஒரே வெட்டாக வெட்டினான். சர்ரென்று கயிறு பள்ளத்தில் விழுந்தது.

“பூங்கூ! போயிட்டியா கண்ணே என்று அலறினான் சாத்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் அழுகைக் குரல்களும் அவனைப் பிடிங்கடா என்ற ஓசைகளும் அடங்குவதற்கு முன் நீலன் ஓடிச்சென்று சாவுப் பாறைப் பள்ளத்தில் திடீரென்று குதித்துவிட்டான்.

தன்னால் முடியாத காரியத்தை ஒரு பெண் செய்வதா என்ற ஆண்மைத் தனம் பலிவாங்கிவிட்டு காதலில் ஐக்கியமாகி மறைந்து இணைந்தது. ஒரு பெரியவர் எழுந்தார்.

“யாரும் அழக்கூடாது! நம்ம யாரையும் செய்ய முடியாத காரியத்தை ஒரு பளிச்சி பொண்ணு செஞ்சி காட்டிட்டா, பூங்கூ சாதாரணமானவ இல்லே. அவ நம்ம தெய்வம். எல்லோரும் அவளைக் கும்பிடுங்க என்று சொல்லி அந்தத் திசை நோக்கித் தொழுதார். அனைவரின் கைகளும் வணங்கின. அவர்களின் கண்ணீர் அந்தக் கைகளை நனைத்தது.

– கதை இலக்கியமும் உரைநடையும், இளநிலை பட்டப்படிப்பு, முதற் பதிப்பு: 2008, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *