(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பல் ஒன்று போய்விட்டது. பல் விழுகிற வயசில்லை இது. விபத்தொன்றில் ஒரு பல் போய்விட்டது. சாலை விபத்தல்ல. காலை விபத்து.
மருமகள் நாஷ்டாவுக்குப் பாசத்தோடு பரிமாறிய பொங்கலில் வேகாமல் கிடந்த கல் ஒன்று பல்லைப் பதம் பார்த்து விட்டது. பொங்கல் என்ற பெயரிலேயே கல்லும் இணைந்திருக்கிறது என்கிற ஞானோதயம், அதைக் கடித்துப் பல்லை உடைத்துக் கொண்ட பின்னால் தான் எனக்கு உதித்தது.
கல் உடைத்தது பாதிப் பல். தள்ளாடிக் கொண்டு ஹிம்சை பண்ணிக் கொண்டிருந்த மீதிப்பல்லை பிடுங்கப் பல் டாக்டரிடம் போனேன். பல்லைச் சுற்றி ஈறுப்பகுதிக்குள் மயக்க ஊசி போட்டு மரத்துப் போகச் செய்து பூப்போல பல்லைப் பிடுங்கி விட்டார். வலியே தெரியவில்லை.
ஃபீஸ் எவ்வளவு என்று டாக்டர் சொல்லும் வரை வலியே தெரியவில்லை!
உடைந்து போன பல்லைப் பிடுங்கியாச்சு. சரி, அந்தக் கணவாயில் ஒரு பொய்ப்பல்லைப் பொருத்த வேண்டுமே! பிடுங்குவதற்கே இவ்வளவு ஃபீஸ் என்றால் பொருத்துவதற்கு இன்னும் அதிகமாயிருக்குமே என்று கிலியெடுத்தாலும், மெதுவாய் மிக மெதுவாய் டாக்டரிடம் கேள்வியை வைத்தேன். பொய்ப்பல் கட்டுகிற நடைமுறைகளைப் பிரஸ்தாபிப்பதற்கு முன், ஒரு உண்மையை டாக்டர் புட்டு வைத்தார்.
ஒரு பல்லை இழந்து விட்ட பல்வரிசை, கோர்வையிழந்து, வேர்கள் ஆட்டங் கண்டு போகுமாம். ஈறுகளும் வலுவிழந்திருக்குமாம். மாற்றுப்பல் பொருத்து முன் பல்வரிசையை எக்ஸ்ரே எடுக்க வேண்டுமாம். அதற்கொரு இருநூற்றைம்பது ரூபாயாம். லபக்கென்று நான் வாயை மூடிக்கொண்டேன்.
“பயப்படாதீங்க. எக்ஸ்ரே இங்க இல்ல. வெளியதான் எடுக்கணும்” என்று என் காலிப் பல்லுக்கும் காலிப் பர்ஸுக்கும் மூச்சுவிட அவகாசங் கொடுத்தார் டாக்டர்.
“அண்ணா நகர்ல நம்ம ஆத்துக்குப் பக்கத்திலேயே டென்ட்டல் எக்ஸ்ரே லாப் ஒண்ணு இருக்கு டாக்டர்” என்றதற்கு, டாக்டர் பலமாய்த் தலையாட்டி மறுத்தார்.
அவ்வளவு வேகமாய் நான் தலையாட்டிருந்தால், ஆதாரமில்லாமல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிற என் மிச்சப் பற்களெல்லாம் கலவரமடைந்திருக்கும்.
சென்னை மாநகரத்தின் வடக்குக் கோடியில், கிட்டத்தட்ட ஆந்திரப் பிரதேசத்தின் பார்டரில் ஓர் இடத்தைச் சொன்னார். அங்கேதான் கலைநயத்தோடு எக்ஸ்ரே எடுப்பார்களாம்! டாக்டருக்குக் கப்பம் கட்டுகிற இடமாயிருக்கும்.
மாநகரப் பேருந்தில் பாதியும், பொடிநடையில் மீதியுமாய் வடசென்னையை அடைந்து, நிழற்பட ஸ்டூடியோவைக் கண்டுபிடித்து, முப்பத்தோரு பற்களையும் படம் பிடித்துக் கொண்டு வந்து டாக்டரிடம் காட்டியபோது அவர் அதை ஆர்வத்தோடு ஆராய்ந்தார்.
ஆராய்ச்சியின் முடிவில் என்மேல் ப்ரயோகிப்பதற்கென்று சில அணுகுண்டுகளை ரெடியாய் வைத்திருந்தார்.
“கம்ஸ் எல்லாம் ரொம்ப வீக்கா இருக்கு சார். கம்ஸையெல்லாம் ஸ்ட்ராங் ஆக்கறதுக்கு சர்ஜரி செய்யணும். தையல் போட வேண்டியிருக்கும். நாலு ஸிட்டிங் தேவைப்படும். ஒவ்வொரு ஸிட்டிங்குக்கும் ஆயிரத்தைநூறு ரூவா ஆகும்.”
“அப்ப நாலு ஸிட்டிங்குக்கு….” என்று நான் தடுமாறிக் கொண்டிருந்தபோது, “ஆறாயிரம் ரூவா” என்று முகம் மலர்ந்தார் டாக்டர்.
கணிதத்திலும் கில்லாடி !
“ஆறாயிரம் ரூவாயா டாக்டர்?” என்று நான் வாயைப் பிளந்ததற்கு, “நோ நோ” என்று என்னை சாந்தப்படுத்தினார்.
“இது இனிஷியல் சர்ஜரி தான். அப்புறம் இன்னொரு எக்ஸ்ரே எடுக்கணும்.”
“அதுக்கு இன்னொரு இருநூத்தியம்பது ரூவா!”
“அவ்வளவு தான் சார். அதுக்கப்புறம் பல் கட்டிர வேண்டியது தான்”
“அதுக்கு…. தனி… சார்ஜா…. டாக்டர்?”
“தனி சார்ஜாவா? மெய்ன் ஐட்டமே அதுதானே சார்!”
“மொத்தமா எல்லாத்துக்கும் சேத்து எவ்வளவு ஆகும்னு சொன்னிங்கன்னா….”
“என்ன, மொத்தமா ஒரு பதினஞ்சாயிரம் ஆகும் சார்.”
பட்டப்பகலில் பல் கட்டப் பதினஞ்சாயிரம் என்றதும் எனக்குப் பல்ஸ் விழுந்து விட்டது. ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு பல் டாக்டரிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு கிளம்பினபோது, டாக்டர் இன்னுமொரு முக்கியமான சங்கதியைச் சொன்னார்.
“பல் புடுங்கின எடம் பள்ளமாயிருக்கும். நாக்கை வச்சு அங்க துளவாதீங்க.”
இதை அவர் சொல்லாமலிருந்திருக்கலாம். வைத்தியரிடம் மருந்து வாங்க வந்த வியாதியஸ்தன் ஒருவன், வாயை வைத்துக் கொண்டு சும்மாயிருக்காமல், “பத்தியம் ஒண்ணும் இல்லியா?” என்றானாம்.
“பத்தியம்னு எதுவும் இல்ல, ஆனா ஒண்ணே ஒண்ணு, மருந்து சாப்பிடறபோது கருங்கொரங்கை மட்டும் நினைக்கவே கூடாது” என்றாராம் வைத்தியர்.
அப்புறம் என்ன, மருந்துப் புட்டியைத் திறக்கும் போதெல்லாம் உள்ளேயிருந்து கருங்குரங்கு உர்ர்ர் ரெனத்தானே செய்யும்!
துளையைத் துளாவக் கூடாது என்று டாக்டர் சொன்னதிலிருந்து நாக்கு நமக்கு நமநமக்கத் தொடங்கிவிட்டது. நாக்கின் கவனத்தைத் திசை திருப்ப, நான் ரிட்டயர் ஆன அன்று ஆஃபீஸில் கொடுத்த பார்ட்டியில் டபுள் டபுளாய் சுவைத்த மைசூர்ப்பாகை அதற்கு நினைவூட்டினேன். ரிட்டயர் ஆனபின் கையில் வந்த தொகை நம்ம தவப் புதல்வனை இஞ்சினியரிங் காலேஜில் சேர்க்க வாங்கின கடனை அடைக்கச் சரியாய்ப் போனது.
“அப்பா, நீங்க பென்ஷன் வர்ற ஒரு வேலையாப் பாத்து அந்தக் காலத்துலயே சேந்திருக்கக்கூடாதாப்பா” என்று அடிக்கடி விசனப்படுவான் மகன்.
அடிக்கடி என்றால் ரொம்ப அடிக்கடி இல்லை. நான் ட்ரான்ஸிஸ்டருக்கு பாட்டரி வாங்க, ஜட்டி பனியன் வாங்க, ஷேவிங் க்ரீமுக்கு, பிளேடுக்கு என்று அவனிடம் விண்ணப்பம் வைக்கிறபோது மட்டும்.
“ஒங்க மூஞ்சிக்கு தாடி ரொம்ப அழகா இருக்கும் மாமா. என்னக் கேட்டா, நீங்க டெய்லி ஷேவ் பண்ணிக்கிறது அநாவசியம்” என்று என் முக வசீகரத்துக்கு டிப்ஸ் கொடுப்பாள் மருமகள்.
அவள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் வசீகரன்தான். எக்ஸஸ்ஸைஸ் பாடி வேற.
அறுவத்தி மூணு வயசு என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். குறிப்பாக ரெயில்வே டிக்கட் பரிசோதகர்.
எதுக்கடா வம்பு என்று, ஸீனியர் ஸிட்டிஸன் மமதையையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு ஐம்பத்து மூணு வயசு என்று போட்டு முழு டிக்கட்தான் எடுப்பேன்.
ரயில்வேத் துறைக்கு லாலு பிரசாத் கோடி கோடியாய் லாபம் ஈட்டித் தந்திருக்கிறார் என்றால், அதற்கு அடியேனுடைய பங்களிப்பு ஒரு மிக முக்கிய காரணம். என்னுடைய அந்த முகத் தோற்றத்துக்கு இப்போது ஒரு பங்கம் வந்துவிட்டது.
பிடுங்கப்பட்டது கடவாய்ப் பல்லானதால், இடது கன்னம் உள்வாங்கி, டொக்கு விழுந்து விட்டது போன்ற ஒரு மினி கிழட்டுத் தோற்றம். இந்த இழுக்குக்கு ஒரு முடிவு கட்டி, நான் பழைய அழகைத் திரும்பப் பெற வேண்டுமானால், உடனடியாய்ப் பல்லைக் கட்டியே ஆக வேண்டும். அதற்கு, மகனிடம் பல்லைக் காட்டியே ஆக வேண்டும். காட்டினேன்.
“பதினஞ்சாயிரமா!” என்று பதறிப்போனான்.
“நீங்க ஜி ஹெச்சுக்குப் போயிருந்தீங்கன்னா ஃப்ரீயாவே பண்ணியிருப்பாங்களே அப்பா” என்று ஒரு கண்டு பிடிப்பை என் கவனத்துக்குக் கொண்டு வந்தான்.
“நேத்துக் கூட இலவசப் பல் சிகிச்சை முகாம்னு ஒரு பானர் பாத்தேன். ரோட்டரி க்ளப்ல நடத்தறாங்களாம். அங்க கூட நீங்க போகலாம்….”
“பதினஞ்சாயிரம் ரூவாக்கி இவ்வளோ யோசிக்கிறியேடா, எத்தனை லச்சம் செலவழிச்சி ஒன்ன இஞ்ஜினியரிங் படிக்க வச்சேன்” என்று என் தரப்பு நியாயத்தை அவனுக்கு உணர்த்தத் தலைப்பட்டபோது, அவனுடைய எதிர்வாதத்தால் என் நியாயத்தைத் தவிடுபொடியாக்கினான்.
“அந்த நன்றிக்கித் தானேப்பா, எம் மகனுக்கு, அதாவது ஒங்க பேரனுக்கு ஒங்க பேர வச்சிருக்கேன்!”
“பேர் வச்சாத்தாண்டா பேரன்” என்று நான் முணுமுணுத்தது அரவமில்லாமல் அடங்கிப் போனது, கணவனின் பேச்சு சாதுர்யத்துக்கு சபாஷ் போட்ட என் அருமை மருமகள் எழுப்பிய கரவொலியில்.
தாய் கைதட்டுவதைப் பார்த்து என் பேரனும் கை கொட்டிச் சிரித்தான், பொக்கை வாயைப் பிளந்தபடி.
அவன் பக்கம் திரும்பிய மருமகள் முன்னிலும் அதிகமாய்க் குதூகலித்தாள். “என்னாங்க, என்னாங்க, இங்க வந்து பாருங்களேன். இவனுக்கு ஒரு பல் மொளைச்சிருக்குங்க!”
பெற்றவர்கள் ரெண்டு பேரும் குழந்தைக்குப் பல் முளைத்திருக்கிற விசேஷத்தைப் பார்த்துப் புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருக்கிறபோதே, மருமகள் மீண்டும் திருவாய் மலர்ந்தருளினாள்.
“இது மாமாவோட பல் தாங்க! அதே பல் தான்! மாமாவுக்கு விழுந்த பல், அவரோட பேரனுக்கு மொளைக்கிது! என்ன அதிசயம் பாருங்க!”
அந்த “அதிசயம்” என்னைச் சுருக்கென்று தைக்க, “எல்லாம் அவன் செயல்டீ” என்று விட்டத்தை சுட்டிக்காட்டி என் மகன் அதிசயத்துக்குப் புதுப்பரிமாணம் கொடுத்தான்.
மொத்தத்தில் என்னிடம் இறந்து போன பல், என் பேரனிடம் மறுபிறவி எடுத்து விட்டது என்பது சந்தேகத்துக்கிடமின்றி ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது.
ஆகவே, இதனால் அறியப்படுவது என்னவென்றால், எனக்குப் பல் கட்டக் காத்துக் கொண்டிருக்கிற டாக்டருக்கு ஒரு வேலை மிச்சம். பதினஞ்சாயிரம் நஷ்டம். பல் இருந்த இடத்தில் ஒரு பள்ளம் எனக்கு நிரந்தரம். டொக்கு விழுந்த கன்னத்தைத் தடவிப்பார்த்த போது, மனசு வேதனைப்பட்டது. என் கையாலாகாத்தனத்தை நினைத்துக் கண்கள் பனிக்கப் பார்த்தன.
வேதனைப்பட்டோ, கண்ணீர் விட்டோ என்ன செய்ய? எல்லாம் அவன் செயல்!
நாக்கு நமநமத்தது.
நாக்கை நாப்பத்தஞ்சு டிகிரி வளைத்து, பல்லிருந்த பொந்தை ஆசைதீரத் துளாவினேன்.
– கல்கி, “வாய் மாறிய பல்”, 08.07.2007.
– ஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் (பகுதி-1). முதற் பதிப்பு: டிசம்பர் 2012, நிலாச்சாரல் லிமிடெட், சென்னை.