(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
டிபுடி கலெக்டர் ஷேக் பஷீர் சாஹேப் பள்ளி கொண்டா ‘காம்பி’லிருந்து திரும்பியவுடன், முதல் காரிய மாக டபேதார் முனுசாமியைக் குஞ்சுமணி ஐயரின் பங்களாவிற்கு விரட்டிய பிறகுதான் தம் சிவப்பு நிறத் துருக்கிக் குல்லாவை வெடுக்கென்று கழற்றி அலமாரியில் வைத்தார் ! அணிந்திருந்த ‘அல்பாக்கா’ ஷேர்வானியின் பத்துப் பொத்தான்களை அவர் விடுவிப்பதற்குள் அவர் விரல்கள் நொடிந்து தளர்ந்து விட்டன. ‘கம்மிஸ்’ஸைக் கழற்றுவதற்குள் சாஹேபிற்கு நெடுமூச்சு வாங்கியது. தொள தொளவென்று சுடிதார்’ பைஜாமாவுடன் அவர் நின்ற எழில் மிகுந்த கோலம் அசல் ஒரு சோளக்கொல்லைப் பொம்மையை நேருக்கு நேராகப் பார்ப்பது போன்ற பிரமையை உண்டாக்கியது! “யா அல்லா!” என்று சொல்லிய வண்ணம் சாய்வு நாற்காலியில் சாய்ந்தார் ஷேக் பஷீர்.
தன் மணவாளனின் வருகையினால் பூரிப்பில் திளைத் திருந்த பல்கீஸ் ஒரு பீங்கான் தட்டில் ‘பெவுஸ்’ பணியா ரத்தையும் கோப்பை நிறையக் கரம் சாயா’ வையும் எடுத் துக்கொண்டு அடக்க ஒடுக்கத்துடன் ஷேக் பஷீர் முன் வந்து நின்றாள்.
“அப்புறம் என்ன சேதி கிடைச்சுச்சு பேகம்?” என்று வினவினார் சாஹேப், ஒரே ஆவலுடன்.
“இடம் என்னமோ நமக்கு ஏற்ற இடந்தான். அதில் ‘பில்குல்’ (துளிகூட சந்தேகமில்லே. மால் பைஸா புரளற வீடுன்னு வேறே கேள்விப்பட்டேன்” என்றாள் பல்கீஸ், சிரத்திலிருந்து நழுவிய தாவணியைச் சட்டென்று திருத்திக்கொண்டவளாய்.
“பொண்ணு எப்படியாம்?”
உங்க ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பக்கிரி முகம்மதின் பீவீயை அந்த வீட்டுக்கு ஒரு நாள் சும்மா அனுப்பி வச்சேன். பொண்ணு ‘கடல் பாசி’ போல நல்ல அளகாக் கொழு கொழுன்னு வாட்டசாட்டமாய் இருக்குன்னு அது பார்த்து வந்து சொல்லுச்சு. நம்ம புள்ளேக்குச் சரியான ஜோடியாம். சித்துக் கோழி மாதிரி அடக்கமா வேறு இருக்காம்”
“எந்த ஊராம்?” – மீசையின் வலது விளிம்பில் ஒட்டிக்கொண்ட பாலாடையை விரலினால் சுண்டி விட்டார் ஷேக் பஷீர்.
“விழுப்புரம் சொந்த ஊராம். மச்சுவீடும் மாந்தோப் பும் இருக்காம். முக்கியமான சமாசாரந்தான் இன்னும் நமக்கு வந்து சேரல்லே. அவங்களும் நம்ம போல் ஷேக் குடும்பந்தானா அல்லது சைய்யதா மொகல்லா பட்டாணா என்று துப்புத் துலக்குக் கிடைக்கணுமே”
கணவனுக்கும் பேகத்திற்கும் நடந்துகொண் டிருந்த இந்த உரையாடல் மேலும் தொடராதபடி, ”எசமான், ஐயரு வந்துட்டாருங்க” என்று வராந்தாவில் எழுந்த முனுசாமியின் குரல் ஒரு தடையாகக் குறுக்கிட்டது. அவ்வளவுதான் ! பல்கீஸ் அவ்விடத்தை விட்டுப் புழக் கடைப் பக்கம் முயல் குட்டியைப் போல் ஓடிவிட்டாள்!
“என்ன சாஹேப்! காம்ப் கீம்ப் எல்லாம் ஒரு தினுஸாக முடிஞ்சுடுச்சா?” என்று கேட்டுக்கொண்டே சிரித்த முகத்துடன் அறைக்குள் பிரவேசித்தார் குஞ்சு மணி ஐயர். அவர் ஓர் ரிடையர்டு இன்ஜினீயர்.
“அல்லாஹுத்தாலா மெஹராலே எப்படியோ ‘இன்ஸ்பெக்ஷனை’ முடிச்சுட்டு வந்து சேர்ந்தேன்” என்றார்
ஷேக் பஷீர் , நண்பரின் கையைப் பலமாகக் குலுக்கிவிட்டு.
பல்கீஸின் பதற்றம்
“இந்தத் தடவை ‘காம்ப்’ எப்படி? அதே நவாப் தர்பார்தானே!” – கல கலவென்று உரக்கச் சிரித்தார் குஞ்சுமணி.
“மிஸ்டர் ஐயர் ! நான் சொன்னால் நீங்க நம்ப மாட்டீங்க. என் வாரிசு பரேஷானி (கவலை) என்னை சைத்தான் போல் புடிச்சுக்கிட்டு ஆட்டிடுச்சு. பேஜாராய்ப் போய் அரை குறையாகக் காம்ப்’ முடிச்சுட்டு ஓடி வந்துட் டேன்!” என்றார் ஷேக் பஷீர். ஏமாற்றமும் ஏக்கமும் அவர் தொனியில் நெளிந்தாடின.
‘வாரிசு’ என்று சாஹேப் குறிப்பிட்டது தம் ஒரே மகனான ஷேக் மஜீதைத்தான். கரகரத்த அவர் குரலில் திக்குமுக்காடிக் கிளம்பிய ‘பரேஷானி’ என்ற சொல் மைந்தனுக்குச் செய்ய வேண்டிய வதுவை பற்றிய கவலை யைச் சுட்டிக் காட்டியது.
“என்ன சாஹேப்! ஒரு பிள்ளையை வைத்துக் கொண்டு இப்படித் தத்தளிக்கிறீர்? என் நிலைமையை ஒரு நிமிஷமாவது நினைத்துப் பார்த்தீரா? மூன்று குட்டிகள், மூன்று தடியன்கள். அரை டஜன் சாஹேப் போன ஜன்மத்திலே நான் ராமேச்வரம் போகாத பாவந்தானோ என்னவோ? அந்த ஸ்ரீ ராமசந்திரப் பிரபு மூன்று ‘அல்சே ஷியன்’ மாப்பிள்ளைகளைச் செயினோடு என் கழுத்திலே கட்டி வேடிக்கை பார்க்கிறார் சாஹேப்! ஒருத்தன் குர் ரன்னா மற்றவன் ளொள் ளொள்னு மேலே விழுந்து பிடுங்கறான். கடைக் குட்டியின் கையைப் பிடித்தவன் மாத்திரம் சமயா சமயங்களில் வாலை ஆட்டிக் குழை கிறான்!”
குஞ்சுமணியின் சாந்தம் பொலியும் வதனத்தில் லேசா கப் படர்ந்த மாமனார் ரோதனை’ ரேகைகளைக் கண்ட ஷேக் பஷீர் திரு திருவென்று விழித்தார். தொடர்ந்தார் குஞ்சுமணி. “சரி, நீங்க சொன்ன இடத்தைப் பற்றி நன்றாக விசாரித்து விட்டேன். பஸ்ட் கிளாஸ் சம்பந்தம் சாஹேப் அந்த வீட்டிலே நிலவுகிற கரன்ஸி இன்பிலே ஷனைப் பார்த்தால் அதற்குக் கன்டிரோலே கிடையாது போல் இருக்கு ! பெண் அசல் பஞ்சவர்ணக் கிளி மாதிரி – என் கடைக்குட்டி சரோ மாதிரி – இருக்கிறாள் என்று என் வீட்டிலே சர்டிபிகேட் கொடுத்துட்டாள்னா பாருங்களேன்!”
“என் பேகமுக்குக்கூட இந்தச் சம்பந்தம் பிடிச்சுப் போயிடுச்சு.”
‘பின்னே ஏன் தாமதம்? சட்பட்ணு மேலே நடக்க வேண்டிய காரியங்களைப் பார்க்கக் கூடாதோ?”
“ஒரு முக்கியமான நாசுக்கான விஷயந்தான் தெரிந்து ஆகணும், மிஸ்டர் குஞ்சுமணி.”
“அது என்ன வாம்?”
:பெண் வீட்டுக்காரங்க ஷேக் தானே?”
:அப்படீன்னா?” – வியப்பின் மேலீட்டால் வாயைப் பிளந்து கொண்டு நின்றார் குஞ்சுமணி.
:ஒண்ணுமில்லை. நாங்க ஷேக் குடும்பமாதலால், ஷேக் குடும்பத்தாரோடதான் கல்யாண சம்பந்தம் வைத் துக்கொள்வது வழக்கம்.:
இதைக் கேட்டதும் குஞ்சுமணி ஐயர் அந்தரத்திலே ஓர் அந்தர் பல்டி அடித்தார் !
:அட ராமசந்திரா! உங்க சமூகத்திலேயும் இந்த உபத்திரவம் ஏதாவது கூத்தடிக்கிறதோ?” என்றார் குஞ்சு மணி ஒரே பரபப்புடன்.
“இந்த விஷயம் வேறு. என்னைப் போன்ற உருது பாஷை பேசுகிற தமிழ்நாட்டுப் பட்டாணி சாயபுமாருங்க இருக்காங்களே, அவர்களில் நாலு ‘வகுப்பு’ உண்டு: ஷேக், சைய்யத் . மொகல், பட்டாண் என்று. அவைகளை ‘கான்தானுக்குத் (குடும்பத்துக்குத்) தகுந்தாற்போல் வரிசைப் படுத்திச் சொல்லுவாங்க. கல்யாண விஷயத் திலே மாத்திரம் ஷேக் வீட்டுக் காளை ஷேக் வீட்டைத் தேடித்தான் உள்ளே நுழையும்! சையத் வீட்டுப் பூனை சைய்யத் இல்லத்தில் தான் தாவிக் குதிக்கும்! இப்படியே தான் மற்ற இரண்டும்” என்றார் ஷேக் பஷீர் முறுவலித்துக்கொண்டே.
“அப்படியா சமாசாரம்?”
“இந்த விஷயத்திலே நான் ரெண்டு விரற்கிடை விட்டுக்கொடுத்தாலும், நம்ப வீட்டுக்காரி இருக்கிறாளே…அட அல்லாரே?…ரொம்ப ஜபர்தஸ்த்! படே படே ஷேக் குடும்பத்திலிருந்து வந்த பேகம் அவள்!”
“சரிதான்!”
“புரிஞ்சுதில்லே”
“பேஷாகப் புரிஞ்சுது! சரி ………. நீங்க சொன்னபடி அந்தக் கோல்’ வீட்டுக்கு ஈவினிங்’ ஒரு வாக்’ போட்டுக் கிட்டு இந்த விஷயத்தைக் கேட்டு வர்ரேன் … என்ன ………. வரட்டுமா” என்று சொல்லிவிட்டு, கையிலிருந்த வாக் கிங்-ஸ்டிக் குடன் சேஷ்டைகள் புரிந்துகொண்டே அவ் விடத்தை விட்டு நீங்கினார் குஞ்சுமணி.
மணமகள் வீட்டுக்காரர்களும் ஷேக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குஷ் கபர் (நல்ல செய்தி) ஊர்ஜிதம் ஆனவுடன் ஷேக் பஷீரும் அவர் இல்லக்கிழத்தி பல்கீஸும் நிக்காஹ்விற்கு ‘குபுல் (சம்மதம் ) என்று சொல்லித் தங்கள் சம்மதத்தை அறிவித்துவிட்டார்கள். அந்த வாரமே துல்ஹன் – மணமகள் – வீட்டிலிருந்து நிக்காஹ் பத்திரிகைகள் எண் திசைகளும் பறக்கலாயின.
புதுச்சேரி பாண்டு ‘ ஜாம் ஜாமென்று முழங்க, ஆர்க் காட்டு நௌபத்’ சங்கீதம் சக்கை போடு போட , துல்ஹன் வீட்டு விருந்தின் மனோகரமான சுகந்தம் தெருவெங்கும் அள்ளி வீச. அல்லாஹுத்தாலாவின் பேரருளால் நிக் காஹ் – மணம் – விமரிசையுடன் நிறைவேறியது.
துனியா – உலக – வழக்கப்படி மணத் தம்பதியின் ”கண்ணாமூச்சி விளையாட்டு’ அதன் பிறகு ஆரம்பமாகத் தவறவில்லை தன் துணைவியை உடன் அழைத்துக்கொண்டு நாகூர் சென்று காதர் வலி அவுலியா தர்க்காவிலே பாத்தியா ஓதினான் ஷேக் மஜீத். முத்துப்பேட்டைக்குப் போய் அங்கே தர்க்காவிலே நடக்கும் பேயாட்டத்தைக் கண்டு களித்தான். அந்த உருஸ், இந்த உருஸ், அந்தச் சந்தனக் கூடு, இந்தச் சந்தனக் கூடு என்று ஒன்று விடாமல் ஊர் ஊராக ஜல்ஸா (மகிழ்ச்சி)வுடன் திரிந்த அந்த ஜோடிப் புறாக்கள் புனலோடு புனல் கலந்தாற்போல் ஐக்கியமாகி விட்டன.
தனக்கு மருமகளாக வந்த குல்ஸும் அணிந்திருந்த விலையுயர்ந்த நகைகள் : செவிகளில் ஜிம்கீகள், புகு டோக்கள், நுதலை அலங்கரித்த ‘டீலா’ பதக்கம், கழுத் தில் சவின்ஸரா மாலை, கரங்களில் கங்கன், புஹுன்ச்சி வளையல்கள் – பல்கீஸுக்கு அவ்வளவு ஆனந்தத்தை அளிக்கவில்லை. மாட்டுப் பெண்ணின் மதி போன்ற வத னத்தில் துளும்பிய மோகன முறுவல் கூட அவளுக்குக் களிப்பைக் கொடுக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவளை ஆனந்த வாவியில் மூழ்கடித்து விட்டது! தன்னைப் போலவே தன் மருமகளும் ஷேக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்ற பெருமையினால் அவளுக்குத் தலைகால் புரியவில்லை. சதா அதைப்பற்றித்தான் எல்லோரிடமும் மிக்க ‘ஷானோடு (பெருமையுடன்)’ தலையை நிமிர்த்துப் பேசிப்பேசித் தில் குஷ் (சந்தோஷம்)’ அடைந்தாள் பல்கீஸ்!
இந்தச் சூழ்நிலையில் ஜீகாயிதா , ஜீ ஹஜ், மொஹரம், சவ்வர் ஆகிய மாதங்கள் விடைபெற்றுக்கொண்டன.
டிபுடி கலெக்டர் ஷேக் பஷீர் தம் அலுவலக ‘பைல்’ களில் இரவும் பகலுமாக மூழ்கிக் கிடந்தார்.
“கேட்டீங்களா சங்கதியை? நாம் மோசம் போயிட் டோம் !” என்று அலறிப் புடைத்துக்கொண்டு, ஒரு நாள் அவர் அறைக்குள் பல்கீஸ் எதிர்பாராத வேளையில் திடீ ரென்று நுழைந்ததும், ஷேக் பஷீர் பலத்த அதிர்ச்சியுடன் எழுந்து நின்றுவிட்டார்.
“உங்க சம்பந்தி வீட்டுக்காரங்க நம்ம தலைகளை நல்லா மொட்டையடிச்சுக் குல்லா போட்டுட்டாங்க” என்றாள் பல்கீஸ், கைகளை உதறிக்கொண்டு.
“என்ன நடந்தது பேகம். ஆற அமரச் சொல்லேன்” என்றார் ஷேக் பஷீர் நிதானத்தை இழக்காமல் .
“ஷேக் ஷேக்குன்னு ஷேக் குடும்பத்துப் பொண்ணை நம் புள்ளேக்காக இத்தனை வருஷங்களாக நாம் தேடி அலைந்தோமே? கடைசியில் என்ன ஆயிடுச்சுன்னு பாத் தீங்களா? இந்த வனா வாகிற உதவாக்கரைக் குட்டியை நம்ம மஜீத் தலையிலே நாம் கட்டிவிட்டோம்!” என்று சொல்லி, தன் தலையில் ஓங்கி அடித்துக்கொண்டாள் பல்கீஸ். சூறாவளியில் சிக்கிய காற்றாடி போல் அவள் மனம் அலைக்கழிந்தது. பாரியாளின் மனப்பதற்றத்தைக் கண்ட ஷேக் பஷீர் திடுக்கிட்டார்.
“என்ன தப்பு நடந்துடுச்சு பேகம்?” என்றார் வியப் பும் அச்சமும் கலந்த தொனியில் .
“அட கேளுங்களேன், பூரா சமாசாரத்தை! நமக்கு மருமகளாக வந்த அந்தக் குட்டி ஷேக் குடும்பத்துப் பொண்ணு இல்லையாம். நல்லா மோசம் போயிட்டோம்! அட அல்லாரே!” – அவள் இதயத்தைக் கீறிக்கொண்டு மேலேழுந்த சொற்கள் பிரலாபமாகப் பிரவாகம் எடுத்தன.
“இந்தக் கஹானி’ (கதை) யெல்லாம் உன் காதிலே யார் போட்டார்கள்?”
“என் தங்கச்சி புருஷனை இப்போ விழுப்புரத்துக்கு மாற்றி விட்டாங்க. அங்கே போன பிறகு நம்ப சம்பந்தி வீட்டாரைப்பற்றி நல்லா விசாரிச்சாங்களாம். அப்போ தான் குட்டு வெளிப்பட்டு தாம்; அவங்க ஷேக் குடும்பம் இல்லை யென்று. இதோ பாருங்களேன் அவங்க எழுதின கடுதாசியை.” – கையிலிருந்த லிகிதத்தைத் தன் ‘காவிந்தி (நாயகனிடம்)டம் நீட்டினாள் பல்கீஸ்.
கடிதத்தைப் படித்து விட்டுத் தம் பேகத்தை உற்று நோக்கினார் ஷேக் பஷீர்.
“விஷயம் இப்படியா இருக்கு” என்ற அவர், மனம் ஒடிந்தவர் போல் தோற்றமளித்தார்.
“ஆடு போல வளர்த்த நம்ம மஜீதை இந்தப் புளுக்கைக் குடும்பத்திற்குக் குர்பானி ‘ – பலி – கொடுத்துட்டோமே! நம்ம இஜ்ஜத் – கௌரவம் – பெயர் எல்லாம் பாழாய்ப் போயிடுச்சே. இனி யார் வீட்டிலே நான் காலடி வைக்க முடியும்? யார் முகத்திலே நான் விழிக்க முடியும்? அல்லாரே ” என்று விக்கி விக்கி அழத் தொடங்கினாள் அந்தப் பேதை.
கண்யமும் கௌரவமும் கீர்த்தியும் கொண்ட தன் குடும்பத்தின் அந்தஸ்துக்குக் களங்கம் ஏற்பட்டதைச் சிந்திக்கச் சிந்திக்கப் பல்கீஸின் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது. அவள் மதி ஊசலாடியது. இதயம் பிர லாபித்தது. பொல பொலவென்று சாரலாக அடித்த கண்ணீரைத் துடைத்துத் துடைத்து அவள் தாவணி முழு வதும் ஈரமாகி விட்டது.
நல்ல வேளையாக இந்தப் பொல்லாத சமயத்தில் அவள் மகனும் மருமகளும் வீட்டில் இல்லை. நூறு மைல் களுக்கு அப்பாலுள்ள சென்னையில் கலங்கரை விளக்கத் தின் உச்சியில் அத்தம்பதி ஒருவரோடு ஒருவர் அணைந்த வாறு அமர்ந்துகொண்டு, விழிகள் சல்லாபிக்க, இந்தப் பிரபஞ்சத்தை அறவே மறந்து ஆனந்த வாரிதியில் நீந்திக் கொண்டிருந்தார்கள்!
ஒரு வாரம் கழிந்தது. ஏதோ ஒரு ஹிஜ்ரி வருஷம் மறைந்தது போல் ஷேக் பஷீர் உணர்ந்தார் . வையம் பகலை இழந்து, வானம் ஒளியை இழக்கும் நேரத்தில் ‘மக்ரீப்’ நமாஸை முடித்துக்கொண்டு மசூதியின் தூண் ஒன்றில் சாய்ந்த வண்ணம் வீற்றிருந்தார் ஷேக் பஷீர். இல்லாளின் மனவேதனை அவர் இதயத்தைப் பிழிந்து கொண் டிருந்தது. இமைகளை இறுக மூடிக்கொண்டு தஸ்பீ’ மணிகளை உருட்டிக்கொண்டு அருளாளனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தும் அவர் இதயப் படபடப்பு அடங்கின பாடு இல்லை. ரெவின்யூ இலாகாவின் எத்தனையோ பிரச் னைகளையும் சிக்கல்களையும் சின்னபின்னப்படுத்திய அந்த ‘இரும்புத் தலைச் சிங்கம் தம் பேகத்தின் விவகாரத்தைக் கண்டு மலைத்துப் போயிற்று! அவர் நெற்றிச் சுருக்கங்கள் நெளிந்தாடின. அதரங்கள் சுளித்துச் சுளித்து பற்பல கோணங்களைக் காட்டலாயின, இந்த அறிகுறிக ளெல் லாம் அவர் அறிவில் ஏதோ ஒன்று உருவாவதைப் பிரதி பலிக்கத் தவறவில்லை.
மசூதியின் சுவர்க் கடிகாரம் டங்கென்று ஓசையை எழுப்பியதும் டிபுடி கலெக்டரின் சிந்தனைத் தொடர் அறுந்தது. வெண்மையான தாடியை வெகு நாசுக்காக உருவிக்கொண்டார். ‘தஸ்பீ’ ஜபமாலையைக் கோட்டுப் பைக்குள் உதறிவிட்டு, பிஸ்மில்லாஹ் என்று சொல்லிக் கொண்டே துள்ளி எழுந்தார்.
வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் ஷேக் பஷீர் அங்கே கண்ட காட்சி அவரை அதிர வைத்துவிட்டது. மின்சார விளக்குகள் எங்கும் பொருத்தப்பட்ட தமது மனையில். ‘பெட்ரூம்’ விளக்கு ஒன்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு தன்னை வரவேற்றதைக் கண்டதும் ஷேக் பஷீர் தடுமாறிப் போனார். விழிகள் ரங்க ராட்டினம் போல் சுழன் றன. சோகமே உருவெடுத்தாற்போல் கண்ணீரும் கம் பலையுமாக அலங்கோலமாய் அவ்சோஸுடன் – கவலையு டன் – நாடாக் கட்டிலில் சயனித்திருந்த தம் மனைவியின் மீது அவர் திருஷ்டி திரும்பியதும், சாஹேபின் சப்த நாடி களும் ஒடுங்கிவிட்டன. ‘ஸ்வீட் சைப் போடுவதற்குச் சுவரை நோக்கி அவர் நகர்ந்ததும், “போடாதீங்கோ . எனக்கு வேண்டாம்” என்ற பல்கீஸின் கர்ஜனையைக் கேட்டு, நின்ற இடத்திலே நெடுமரம்போல் திகைத்து நின்று விட்டார்!
‘பேகம்… உன் ‘ஹுக்கும் – கட்டளை’ப் – படியே . உளுத்துப்போனதை நினைச்சு நினைச்சு இப்படி நீ பிக்கிர்’ பண்ணினால் – கவலைப்பட்டால் – மீதி ஜிந்தகி – வாழ்க்கை – யில் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை எப்படித்தான் நீ சமாளிக்கப் போகிறாயோ ! உன் மகனும் மருமகளும் இன்று வந்து சேருவதாகச் சென்னையிலிருந்து தந்தி வேறு வந்திருக்கு” என்றார் ஷேக்பஷீர், தம் அருமைத் துணைவியின் குழலை அன்புடன் தடவிக்கொண்டே.
முதுகை நிமிர்த்தி உட்கார்ந்தாள் பல்கீஸ். கண்ணி ரின் பீரிட்டெழுச்சியினால் அவள் அணிந்திருந்த ஜரிகைப் பூக்கள் போட்ட மஞ்சள் நிற வெல்வெட் சோலி நன்றாக நனைந்து நிறம் மாறியது.
“நீங்கள் என்னதான் சொன்னாலும் என் நொந்த மனசு ஆறவே ஆறாது. என் ஷேக் குடும்பத்துக் கௌரவத்துக்காக என் பாட்டனார் தம் உசிரைக்கூட விட்டிருக்கிறார். ஆ … மாம்! நம்மை நல்லா ஏமாற்றி மோசம் செஞ்ச உங்க சம்பந்தி குடும்பத்து மேல் வஞ்சம் தீர்த்தால் தான் என் நெஞ்சு ஆறும். என்னை அப்போது தான் உசிரோட நீங்க பார்ப்பீங்க” என்றாள் பல்கீஸ் மிக்க ஆவேசத்துடன். அவள் மேனியில் மின்னலின் வேகம் துவண்டது.
கைகளைப் பிசைந்து கொண்டு ஷேக் பஷீர் நின் றிருந்த கோலம் பார்க்கப் பரிதாபமாயிருந்தது.
மேலும் ஆர்ப்பரித்தாள் பல்கீஸ் . ” இனிமேல் உங்கள் மூதேவி மருமகளின் முகத்தில் நான் விழிக்கவே மாட் டேன். நம்ப ஷேக் குடும்பத்துக்குப் ‘பத்னாம் – கெட்ட பெயர் – கொண்டுவந்த போக்கிரி’ அவள். சரி… இனி நான் சொல்லப்போவதையாவது நீங்க காது கொடுத்துக் கேட் பீங்களா?” – அவள் தொனியில் பாசமும் பரிவும் எதிரொ லித்தன. பார்வையில் ஆர்வம் சுடர் விட்டது.
“சரி …சொல்லேன்.”
“இழந்த நம் குடும்ப கௌரவத்தைத் திரும்பக் காப் பாற்ற ஒரே ஒரு வழிதான் இருக்கு.” அவள் அகன்ற மார்பை மேலும் கீழுமாக அழுத்தியது பெருமூச்சு.
“சொல்லு….பேகம்…சொல்லு.”
“நம்ம மஜீத் அவன் பெண்சாதிக்குத் தலாக்’ கொடுத் துவிட வேண்டும்”
இந்தப் பயங்கர வேண்டுகோளைச் செவிமடுத்த ஷேக் பஷீர் ஸ்தம்பித்து நின்றுவிட்டார். அவர் அறிவு சூன்ய மாகிவிடவே, கண்களில் அந்தகாரம் சூழ்ந்து கொண்டது.
“என்ன! வீட்டிற்கு விளக்குப் போல வந்த பெண்ணை உன் மகன் விவாக ரத்துச் செஞ்சு விரட்டி விடவா சொல்றே பல்கீஸ்! உணர்வோடதான் நீ பேசுறியா! இந்தத் துனியாவிலேதான் நீ இருக்கிறீயா” என் றார் ஷேக் பஷீர் ஒரே படபடப்புடன்! அவர் மேனியில் வேர்வை ஜலப் பிரளயமாக வழிந்தோடியது.
“நான் சொன்னபடிதான் ஆகணும். அந்தக் கேடு கெட்டவளை வீட்டை விட்டுத் துரத்தினால் தான் நம்மை ஏமாற்றிய அவள் தகப்பன் – உங்க சம்பந்தி. அந்தத் திருடன், ‘தகல்பாஸ்’ – முகத்திலே கரி பூசினாப் போல இருக்கும். அப்போதான் என் மனசுக்கு ஆராம்’ (அமைதி) வரும்” என்று உணர்ச்சியுடன் சொல்லிக்கொண்டே தன் நாயகனின் இரு கரங்களையும் இறுகப் பிடித்து இழுத்து தன் மாம்பழக் கன்னங்களில் மாறி மாறி ஒற்றிக்கொண்டு, அவரை விழுங்கி விடுபவள் போல் கருவிள மலர்களைப் போன்ற கண்களை அகல விரித்து வெறிக்கப் பார்த்தாள் பல்கீஸ்.
“இது நடக்கக்கூடிய காரியமா!” – நாத் தழுதழுக்க மன்றாடினார் ஷேக் பஷீர்.
‘என்ன தடை வந்துடுச்சாம், கேட்கிறேன் ! இந்தக் குட்டி தொலைஞ்சா எத்தனையோ ஷேக் குடும்பத்து ராசாத்திகள் வெள்ளிக் காசோடும் அழகோடும் நம்ம மஜீத் காலிலே விழக் காத்துக் கிடக்குது. அந்தப் ‘பொறுக்கி ‘ இன்னேக்கு ஊருக்குத் திரும்புதுன்னு நீங்க சொன்னீங்க. அதுக்குள்ளே பள்ளி வாசல் இமாமை வரவழைச்சு , ஊர் ஜமாத்தைக் கூட்டி, உங்க சம்பந்தி வெட்க மில்லாமல் பொய் சொல்லிச் செஞ்ச இந்த அயோக் கியத்தனமான நயவஞ்சக, பேமானி’ வேலையைத் தம்பட் டம் அடிச்சு , இந்தத் தலாக்கைச்’ சட்டுப்புட்டுனு இந்த வாரமே முடிச்சுடுங்கோ . சொல்லிவிட்டேன் ….. ஆமாம். என் நெஞ்சைப் பிளந்து என் விருப்பத்தைக் காட்டி விட் டேன் ” – பல்கீஸ் ஆக்ரோஷத்துடன் கர்ஜித்த குரலில் ஆவேசமும் கண்டிப்பும் கொடூரமும் கொழுந்துவிட் டெரிந்தன.
சிரம் கவிழ்த்து நின்ற ஷேக் பஷீர் பெரும் யோசனை யில் ஆழ்ந்துவிட்டார். அவர் நெற்றிக் கோடுகள் சுருங்கியும் விரிந்தும் நெளிந்தாடின. வெடுக் வெடுக்கென்று கழுத்தை நெரித்து, நெடுமூச் செறிந்துவிட்டு, ”பல்கீஸ் உன் வேண்டுகோளை நிறைவேற்ற நான் தயங்கவில்லை” என்று பகர்ந்துவிட்டு, தலையைத் தொங்கப் போட்டார்.
பல்கீஸின் வதனத்தில் களிப்பின் வெறி தாண்டவ மாடியது. தன் முன் நிற்பவரை இறுகத் தழுவிக்கொள்ள வேண்டும் என்ற விபரீத ஆசை அவள் நரம்புகளை முறுக்கி விடவே, மது அருந்தியவள் போல் அவள் தடுமாறினாள். நிலவிய கண நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு கிளம்பியது ஷேக் பஷீரின் குரல் -‘ பல்கீஸ் உன் மகன் தன் மனைவிக் குத் தலாக்’ கொடுப்பதற்கு முன்னால், உனக்கும் எனக்கும் விவாகரத்து நடந்தாக வேண்டும் ; ஆமாம் ” என்றது.
இதைக் கேட்டதும் கோடானு கோடி பேரிடிகள் ஒன்று சேர்ந்து ஊழிக்காலத்துக் கோஷத்துடன் தலைமீது விழுந்தன போல் பல்கீஸ் உணர்ந்தாள். குருதி ஓட்டம் நின்று விட்டது போல் செயலற்று வாயடைத்து நின்று விட்டாள்.
“என்னாங்க, இப்படிப் பேசுறீங்க” என்றாள் அவள் ஜீவனற்ற தொனியில்.
“நான் சொன்னதில் குற்றம் ஒன்றுமில்லை! நம் நிக் காஹ் ஆகி இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக என் இத யத்தில் புகைந்து கொண் டிருந்த ரகசியத்தை உன் காதில் நானே போடும்படியான தருணம் இப்போது வந்து விட்ட து.”
“என்ன?”- கம்மிய குரலில் வினவிக் கைகளைப் பிசைந்தாள் பல்கீஸ்.
“அந்தக் காலத்தில் நடந்த தமாஷான கதையைத் தான் நான் சொல்லப்போகிறேன். ஷேக் குடும்பத்தில் பிறந்தவள் நீ உனக்காக உன்னைப் பெற்றெடுத்தவர் ஒரு ஷேக் குடும்பத்துக் காளையை எங்கெங்கேயோ தேடி அலைந்தார். தம் ஷேக் குடும்பத்தின் கௌரவத்தையும் கீர்த்தியையும் நிலை நிறுத்த அவர் பட்ட தொல்லைகள் என் தந்தையின் காதில் விழத் தப்பவில்லை.
அந்த வேளையில் நாங்கள் வாலாஜாபாத்தில் வசித்து வந்தோம். நான் ஸ்கூல் பைனல் முடித்துவிட்டு ரெவின்யூ இன்ஸ்பெக்டராக உள்ளூரிலே வேலை பார்த்து வந்தேன். நீ பெரிய பணக்கார வீட்டு ஒரே பெண் என்றும், நல்ல அழகானவள் என்றும், ஷேக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றும் அறிந்த என் தந்தை, உன்னை என் கழுத்தில் கட்டி விட்டால், என் எதிர்கால வாழ்வு கவலையின்றி இன்பமயமாகக் கழியும் என்று திடமாக எண்ணினார்.
“எந்தத் தகப்பனும் இப்படி நினைப்பது உலக வழக் கந்தானே / தன் எண்ணத்தை ஒருவருக்கும் வெளியிடா மல், குடும்பத்தை அழைத்துக்கொண்டு இரவோடு இர வாக ஊரை விட்டுக் கிளம்பி உன் ஊரான கன்னியம் பாடிக்கு வந்து சேர்ந்தார் அவர்.
“நாங்கள் அந்நியர்” என்று கல்யாணப் பேச்சு வார்த்தைகளை நடத்த உன் தந்தை முதலில் மறுத்துவிட் டார். ஆனால் என் அருமை ‘அப்பா ஜானின்’ மனம் தளர்ந்துவிடவில்லை. என்ன என்னவோ சக்கர் மக்கர்’ தந் திரங்களையும் கோல்மால்களையும் தைரியமாகக் கையாண்டு நம் இருவர் கல்யாணத்துக்கும் உன் தந்தை தலை ஆட்டும் படி எப்படியோ அவர் செய்துவிட்டார் ! அதன் பின் நம் நிக்காஹ்வையும் நடத்தி, உன்னை மருமகளாகத் தன் கண்க ளாலேயே பார்த்து மகிழ்ந்தும் விட்டார். அப்படி அவர் செய்த ஒரு மங்கள காரியத்தின் பலனாக பெரிய பாவ மூட் டையை அவர் சுமந்து கொண்டு ஆண்டவனிடம் செல்லும்படியாகிவிட்டது, பல்கீஸ்!”
“பாவமா!” – பல்கீஸின் நேத்திரங்கள் ‘ராட்டினம்’ போல் சுழன்றன. சித்த சலனம் வாட்டியது.
“பாவம் மாத்திரம் அல்ல. என் பொருட்டுப் பெரிய துரோகங்கூடப் புரிந்துவிட்டு என் தந்தை ‘மௌத்’ ஆனார் (இறந்தார்)”
“துரோகமா? யாருக்கு?” – பல்கீஸின் உதடுகள் உலர்ந்து விட்டன. பீதி அவள் நெஞ்சில் புரையோ டிற்று.
“உனக்கும், உன் தந்தைக்கும். உன் சிறப்பான ஷேக் குடும்பத்துக்குந்தான் !”
“ஆ’ வேன்று அலறிவிட்டாள் பல்கீஸ். அவ்வனி தையின் மனம் படக் படக் என்று கௌளி அடித்துக் கொண்டது.
தொடர்ந்தார் ஷேக்பஷீர்: “உன் ஊரான கன்னியம் பாடியில் குடியேறுவதற்கு முன்னால் நாங்கள் வாலாஜா பாத்தில் வசித்து வந்ததை உனக்கு முன்பே நான் சொல்லி விட்டேன். அப்பொழுது என் தந்தையின் பெயர் ‘ஷேக்’ அன்வர் அல்ல. வெறும் அன்வர்தான் ! என் பெயர் ‘ஷேக்’ பஷீர் அல்ல. வெறும் பஷீர்தான்! உன்னை வலை யில் சிக்க வைத்து உன் சொத்தை அனுபவிக்க உன் ஊரிலே நாங்கள் காலடி வைத்த பிறகுதான் என் தந்தை ‘ஷேக்’ என்ற பட்டத்தை எங்கள் பெயர்களுடன் சேர்த் துக்கொண்டார். உன்னைப் பெற்றவரை மோசம் செய்ய, ‘ஷேக்’ அன்வரின் மகனான நான் ‘ஷேக்’ பஷீராக மாறி விட்டேன். உண்மையில் நாங்கள் உன்னைப்போல் ஷேக் குடும்பத்தைச் சேர்ந்த பாக்கியசாலிகளே அல்ல “
வாயை இறுகப் பொத்திக்கொண்டு பேந்தப் பேந்த விழித்தாள் பல்கீஸ்.
“நீங்கள் … ஷேக்… இல்லையா?” என்று நடுங்கிய வண் ணம் ஹீனக் குரலில் கேட்டாள் அப் பேதை. முகம் விகாரமாகி ஏதோ கசையடி வாங்கியவள் போல் அவள் தோற்றம் அளித்தாள்.
“சில்லறை வியாபாரம் செய்துகொண்டு நாடோடிக ளாகத் திரியும் சாயபுமாருங்க நாங்கள். என் எதிர்கால வாழ்வைக் கருதி என் அருமைத் தந்தை செய்துவிட்ட இந் தப் புரட்டல் ‘ உன் தந்தையின் காதில் கடைசிக்காலத்தில் எப்படியோ வீழ்ந்து விட்டது.
“ஆனால் இந்த விஷயம் தாம் காலமாகும் வரையில் வெ ளிவராத வண்ணம் காப்பாற்றி விட்டார் அவர். அந்த ‘மர்ஹுமி’ன் ஆத்மா சாந்தியடைய நான் அல்லாஹுத்தா லாவிடம் ‘துவா’ செய்கிறேன்! எல்லாவற்றையும் வெட்ட வெளிச்ச மாக்கிவிட்டேன்.. அதே மாதிரியான சம்பவம் தான் நம் வாழ்க்கையில் இப்போதும் நடந்துவிட்டது! இனி உன் மருமகளை நீ என்ன செய்யத் தீர்மானித்தாலும் சரி…சொல்லி விடு.”
முகத்தை இரு கைகளினாலும் மூடிக்கொண்டு சிறு குழந்தைபோல் விக்கி விக்கி அழலானாள் பல்கீஸ். தன் ஷேக் குடும்பத்து ஆசைச் சுடர்’ தன் கண் முன்பே அணைந்ததைக் கண்டு அவள் நெஞ்சு ‘ஓ’ வென்று ஓலமிட்டது. இதயப் படபடப்பு ஓங்கார மிட்டது. கண்கள் பஞ்சடைந்தன. கால்கள் நிலைதடுமாறின. அடிபட்ட வேங்கை கறுவுவது போல் ஏதோ முணு முணுத்துக்கொண்டே தாரை தாரை யாகக் கண்ணீர் வடித்தாள்.
வெளிவாசலில் மாடுகளின் சதங்கை ஒலி எழுந்தது. அதைத் தொடர்ந்து வாசற் கதவை யாரோ இடிக்கும் அர வம் பலமாகக் கிளம்பியது. ஷேக் பஷீர் கதவைத் திறந் தார். கையில் மிட்டாய்க் கூடையுடன் மஜீதும் அவன் துணைவி குல்ஸுமும் வீட்டிற்குள் நுழைந்தார்கள். காலை யில் அனுப்பிய தந்தியின்படி அவர்கள் அன்றைக்கே ஊருக்குத் திரும்பிவிட்டார்கள்.
தன் அருமை மாமியாரின் பாதார விந்தத்தைத் தொட்டு வணங்கிய குல்ஸும் நிமிர்ந்ததும், அத் தளிர்க் கொடியை அப்படியே இறுகத் தழுவிக்கொண்டு பாசத் தின் பாஷ்பத்தைப் பொழிந்தாள் பல்கீஸ். இந்தத் திவ் யக் காட்சியை கண்களை அகல விரித்துக் கண்ட ஷேக் பஷீர் புரிபடாத புன்னகையை அதரங்களில் எழுப்பிக் கொண்டு, சுவரை நெருங்கி மின்சார விளக்குகளின் ‘ஸ்விட்’சுகளைத் தட்டி விட்டதும் பேரொளி எங்கும் பரவி நின்றது.
தம் சஹதர்மிணியின் மேல் மறுமுறை திருஷ்டியைச் செலுத்திவிட்டு, கோட் ஸ்டாண்டிலாநந்த காப்பியைத் தரித்துக்கொண்டு தம் பிரத்யேக அறையில் புகுந்தார் பஷீர். உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். கடந்த ஒரு வாரமாகத் தம் இல்லத்தில் தாண்டவமாடிய பயங்கரச் சூறாவளி ஓய்ந்து மடிந்ததற்கு நன்றியாக அல்லாஹுத் தாலாவிடம் இரண்டு ரக்காத்’ நவ்வில் நமாஸ் தொழுது விட்டுக் கைகளை உயரே நிமிர்த்திப் பிரார்த்தனை செய்தார்.
“யா ரஹ்மான்! அமீர், பக்கீர் என்ற ஏற்றத்தாழ்வை அகற்றியும், வகுப்புப் பிரிவு என்ற பாகுபாட்டைக் களைந் தெறிந்தும் விளங்கும் இஸ்லாம் சமூகத்தில் குறுகிய மனப்பான்மை கொண்ட ஒரு பேதையை எனக்குத் துணை வியாக நீ அளித்துவிட்டாய்! பாவம் அறியாத ஒரு கன்னியின் இல்லற வாழ்க்கையைக் குலைத்துவிடத் துணிந்த மற்றொரு பெண்ணின் கொடூர எண்ணம் நிறைவேறாது தடுக்க நான் கையாண்ட முறை பாவமும் பாதகமும் ஆகும் என்று என் நெஞ்சுக்குத் தெரியாமல் இல்லை. என் வீட்டிக்குள் காலடி எடுத்து வைத்த அந்தக் கொழுந்தைக் காப்பாற்ற இந்த முதுமைப் பருவத்தில் என் வாழ்க்கைத் துணைவி யிடம் பொல்லாத பொய்யைக் கூறி, புரட்டுக் கதையைப் புனைந்து, கபட நாடகம் ஆடிய இந்தக் கிழவனை மன்னித்து விடு! யா அல்லா!” என்று மிக்க உணர்ச்சியுடன் கூறி விட்டு இடத்தைவிட்டு எழுந்து, இலவம் பஞ்சு போன்ற மீசையை நாஸுக்குடன் நெருடிக்கொண்டே வெளி வராந்தாவிற்குச் சென்றுவிட்டார் டிபுடி கலெக்டர் ஷேக் பஷீர் சாஹேப்!
– பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.
– ‘ஆனந்த விகடனில்’ தோற்றமளித்தன.
மிகவும் சரளமான நடையில் , அருமையான கதை…