பறவைகள் பலவிதம்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 14,130 
 
 

“வாங்கோ அத்தை ….. வாங்கோ மாமா; ஸ்கூல் குவாட்டர்லி லீவா…” ஆசிரியரான தன் அத்தையை உற்சாகமாய் வரவேற்றாள் நளினா.

“ஆமாம் . கல்யாணமாகி புகுந்த வீடு வந்து ஒரு மாதம் ஆகி விட்டதே ? உன்னை பார்த்து விட்டு போகலாம் என்று வந்தோம்” சொல்லிய படியே உள்ளே நுழைந்தனர் அவளது அத்தையும், அத்தை கணவரும்.

“எப்படியம்மா இருக்கிறாய்?”

“நன்றாக இருக்கிறேன் அத்தை”

பூக்களை தொடுத்துக் கொண்டிருந்த நளினாவின் மாமியாரும் அவர்களை வரவேற்றார். தொடுத்து முடித்த பூச்சரத்தை நளினாவிடம் கொடுத்து “இந்தா. நம்ம எல்லோருக்கும் தலைக்கு வைத்துக்கொள்ள கொஞ்சம், கொஞ்சம் நறுக்கி வை. பாக்கியை பிரிட்ஜ்ல வை. சுவாமி படத்திற்கு வைக்கணும். நாளைக்கு வெள்ளிக்கிழமை நீ அம்பாளுக்கு பூஜை பண்ணுவியே; மாலையாக கட்டியிருக்கேன். நான் போய் இவர்களுக்கு காபி போடுகிறேன்” என்றபடி சமையலறை பக்கம் நகர்ந்தார் .

நளினாவின் கணவன் விவேக் மற்றும் மாமனார், அத்தையின் கணவருடன் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அத்தையும் நளினாவும் அறைக்குள் சென்று அமர்ந்தனர்.

“என்னம்மா? இந்த வீட்டு நடைமுறைகள் புரிந்ததா ? எப்படி எல்லோரும் நடந்து கொள்கிறார்கள்?”

“நம்ம வீட்டிற்கும் இங்கேயும் பழக்க வழக்கங்கள் நிறைய வித்தியாசம்தான். ஹை ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரும்போது மாற்றங்கள் இல்லையா? மாமியார் மாமனாரை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் மாதிரி நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். இல்ல …. வேலை பார்க்கும் இடத்தில் கெடுபிடியாக இருக்கும் மானேஜரை பொறுத்துப் போவதில்லையா. அந்த மாதிரிதான். பழகிக்கொள்கிறேன் அத்தை” என்றாள் நளினா.

“உன்னுடைய பக்குவமான வார்த்தைகளை கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு”.

“என்னை சுயமாக எதுவும் செய்ய விடுவதில்லை. என்னை சமைக்கவே விடுவதில்லை அத்தை. மாமியார் சமைப்பதை சாப்பிடும் வேளையில் எல்லோருக்கும் பரிமாறுவதுதான் என் வேலை. காபி கூட மாமியார்தான் போட்டு தருகிறார். அவங்க செய்வதுதான் சரி என்பது போல், சொல்வதை மட்டும் செய்தால் போதும் என்கிறார். அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது”.

“அதனால் என்ன இப்போ ? உன்னை மெதுவாக எல்லா வேலைகளுக்கும் பழக்குகின்றார் என்று எடுத்துக்கொள். எந்த ஒரு பெண்ணுமே தன் சமையலறை அதிகாரத்தை சட்டென்று மற்றவரிடம் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்படியே செய்ய சொன்னாலும் தான் வந்து மேற்பார்வை பார்த்துக்கொண்டேதான் இருப்பார்கள். அது சுதந்திரமாக செய்பவர்களுக்கு பிடிக்காமல் போகலாம். அவரவர்களுக்கு அவரவர் செய்வதுதான் சரியாக இருக்கும்”.

“சமையல் மட்டும் இல்லை; எந்த ஒரு வேலையானாலும் சரி….”.

“தினப்படி செய்யாமல் இருக்கலாம். ஆனால் செய்ய தெரியாமல் விழிக்கத்தான் கூடாது. உனக்குத்தான் நன்கு சமைக்க தெரியுமே ; ஒரு அவசியம் என்று வரும்போது செய். போதும்.

அந்தந்த கால கட்டத்திலே நம்ம அன்றாட வாழ்க்கையிலே கூட இருப்பவர்களை சமாளிக்கும்போது, நம் வாழ்க்கை முழுவதும் வரக்கூடிய நம் குடும்ப மனுஷங்களை, அனுசரித்துப்போக யோசிக்கலாமா தப்பில்லையா?”

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.

தொலைக்காட்சியில் பழைய பாடல் ஓடிக்கொண்டு இருந்தது.

“இதோ இந்த பாட்டில் வருவது மாதிரி பறவைகள் மட்டும் பலவிதம் அல்ல. மனிதர்களும் பல விதம்தான்.

பெண் கிளி மாதிரி அழகாக இருக்கிறாள் ; குயில் மாதிரி குரல் ; மயில் மாதிரி நளினம் என்று சொன்னால் போதாது. அன்றில் பறவை போல கணவனுடன் அன்பாக இருக்க வேண்டும். சிட்டுக்குருவி மாதிரி சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். காக்கை போல உறவுகளை ஒன்றிணைத்து வாழ வேண்டும். கொக்கு போல காத்திருந்து யாரும் உன்னை குறை கூறினாலும், வாத்து மாதிரி அதை கண்டுகொள்ளாமல் இருக்க பழக வேண்டும் .

மொத்தத்தில் உன் நடவடிக்கைகள் அன்னம் மாதிரி இருக்க வேண்டும்” என்று சிரித்தாள் அத்தை.

“ஹே….. அத்தை….. இது என்ன புது விதமாக சொல்றீங்க?”

“ஆமாம். அன்னப் பறவையிடம் பாலும் தண்ணீரும் கலந்து வைத்தாலும் அது தண்ணீரை விலக்கி விட்டு பாலை மட்டும் அருந்தி செல்லுமாம். அதைப் போல மற்றவர்கள் முக்கியமாக நெருங்கிய உறவுகள் நம்மை சொல்லும் குறைகளை ஒதுக்கி விட்டு, நமக்கு செய்யும் நல்ல விஷயங்களை மட்டும் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும்”.

“ஏன் அத்தை…… பாலே இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டுமே இருந்தால் என்ன செய்வது?”

“ரொம்ப நல்லது. அதுவும் ஜீரணத்திற்கு உதவும் என்று எடுத்துக்கொள். என்ன புரியலையா ? உன்னை குற்றமே சொன்னாலும் அது உன் திறமைக்கு ஒரு பரீட்சை, உன் முன்னேற்றத்திற்கு உண்டான பாதை என்று எடுத்துக்கொள். வருத்தமே இருக்காது. மாமியாரை இன்னொரு அம்மாவாக நினைத்துப்பார். உன் கணவர் மட்டும் முக்கியம் என்று நினைக்காமல் நம் வீடு, நம் மனிதர்கள் என்று மனதிற்குள் பதிய வைத்துக்கொண்டால் பிரச்சனையே இல்லை.

மாமியார்-மருமகள் பிரச்னைகள் அந்த காலம். இன்றைய காலத்தில், தான் பட்ட கஷ்டங்களை தன் மருமகளுக்கு கொடுக்க கூடாது என்றுதான் ஒவ்வொரு மாமியாருமே நினைக்கிறாள். மருமகளுக்கு விட்டு கொடுத்துதான் நடக்கிறாள். அதை இன்றைய மருமகள்கள் ஈகோ பிரச்னை இல்லாமல் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்

இதோ இப்போ கூட பாரு. உன் மாமியார் நீ செய்யும் பூஜைக்காக என்ன அழகாக ஒரு பூமாலை தொடுத்து வைத்திருக்கிறார். உன் பிறந்த வீட்டு மனுஷி . நான் வந்திருக்கிறேன். பேசிக்கொண்டு இருக்கட்டும் என்று நாசுக்காக நகர்ந்து விட்டார். இயல்பாக இருக்கும் சின்ன விஷயமானாலும் இதையெல்லாம் நீ நல்ல விதத்தில் மனதில் கொள்ள வேண்டும் .

அவ்வப்போது உன்னை உற்சாகப்படுத்த இருக்கவே இருக்கிறது பிறந்த வீடு என்ற வேடந்தாங்கல்”.

“வேடந்தாங்கலா?”

“ஆமாம்மா . கல்யாணத்திற்கு பிறகு ஒரு பெண்ணிற்கு பிறந்த வீடு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வந்து தங்கி செல்லும் இடமாகவே மாறிவிடுகிறது புகுந்த வீடுதான் என்றும், என்றென்றும் உன் கூடு. அதை நினைவில் வைத்துக்கொண்டு நடந்து கொள்ளவேண்டும் . புரிந்ததா?

எங்கள் வீட்டு அழகிய சின்ன வெண்புறா, புகுந்த வீட்டில் மாடப்புறாவாக, அழகிய மணிப்புறாவாக, புத்திசாலி பெண்புறாவாக கணவனின் காதல் புறாவாக மகிழ்வுடன் வாழவேண்டும். அதுதான் எங்க எல்லோரது ஆசைகளும்……., ஏன் ஆசிகளும் கூட” என்று சிரித்தாள் அத்தை.

“இனிமேல் இந்த பாட்டு கேட்கும்போதெல்லாம் உங்கள் அறிவுரைகள் நினைவுக்கு வரும்” என்று சிரித்தாள் நளினா .

“பறவைகள் மட்டும்தான் உதாரணமா அத்தை ? வேறு ஒன்றும் இல்லையா?”

“ஏன் இல்லை ? பெண் என்பவள் பூ மாதிரி. பவித்ரமான துளசி மாதிரி வீட்டுக்கே அழகு ; எல்லோருக்கும் பிடித்தமான அழகான ரோஜாப்பூ. ; கணவனுக்கு மயக்கும் மல்லிகை ; கணவனின் முகம் பார்த்து செயல் படும் சூரியகாந்தி. சிரிப்பில் முல்லை ; தனது பாசமான செயல்களால் வாசம் வீசும் மருக்கொழுந்து. மொத்தத்தில் ஒரு கதம்ப மாலை” என்று புன்னகை புரிந்தாள் அத்தை .

“டிப்ஸ் எல்லாம் மருமகளுக்கு மட்டும்தானா ? மாமியாருக்கு இல்லையா?”

“நிச்சயம் உண்டு. மருமகளை மகளாக நினைத்து அன்பாக இருக்க வேண்டும் ; மாணவியாக நினைத்து எதுவும் சொல்லித்தர வேண்டும் ; சிநேகிதியாக மனம் விட்டு பேச வேண்டும். செய்யும் நல்ல விஷயங்களை ஈகோ பார்க்காமல் பாராட்ட வேண்டும்.

உன் திறமைகளை கூட்டி, குற்றம் குறைகளை கழித்து, அன்பை பெருக்கி, நல்ல குணங்களை, செயல்களை வகுத்து, மூத்த தலைமுறையினரை புரிந்து கொண்டு அதன் படி நீ நடந்து கொண்டால் உன் இல்லற வாழ்க்கை நிச்சயம் 100% சந்தோஷத்தை கொடுக்கும். வாழ்க்கை சுகமாக இருக்கும். உன் நல்ல நடவடிக்கைகள் மூலமாகத்தான் அவர்கள் உன்னை புரிந்து கொள்ள செய்ய வேண்டும்”.

“A teacher is always a teacher” உங்களின் அன்பான அறிவுரைகளுக்கு நன்றி அத்தை. கட்டாயம் அதன்படியே நடந்துகொள்வேன்” என்று அத்தையை கட்டிக்கொண்டாள் நளினா .

“சரி. நாங்கள் புறப்படுகிறோம். அடுத்த வாரம் தீபாவளிக்கு அழைக்க அம்மாவும் அப்பாவும் வருவார்கள். பார்ப்போம்” என்று அத்தையும் அவள் கணவரும் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்கள்..

“சரி அத்தை. தலைதீபாவளியை வேடந்தாங்கலில் சிறப்பாக கொண்டாடி விடுவோம்” என்று சிரித்தாள் நளினா

“என்னது …… தலை தீபாவளி வேடந்தாங்கலிலா….” .என்று புரியாமல் விழித்தான் அவள் கணவன் விவேக்.

3 thoughts on “பறவைகள் பலவிதம்

  1. இரஜகை நிலவன் எழுதிய ” வெற்றி”
    சிறுகதை படித்தேன்.. பிறரிடம் உள்ள
    குறையை , பிடிக்காத பழக்கங்களை
    சுட்டிக்காட்டும் போது அப்பழக்கம்
    நம்மிடம் இல்லையென்பதை
    உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்…நாம் பிறருக்கு அறிவுரை
    கூறும் தகுதி உள்ளதா என்பதை
    உணர்தல் அவசியம் என்பதை மிக
    நாசூக்காக விளக்கியவிதம் அருமை.

  2. பறவைகள் பலவிதம்
    ஜி.ரமேஷ்குமாரின் சிறுகதை சிறப்பு.
    வாழ்வியல் முறைகளுக்கு பறவைகளை உதாரணம் காட்டி எழுதிய விதம் அருமை.

    1. “பறவைகள் பலவிதம்” கதையை பற்றிய தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. ஆனால் ஒரு சிறு திருத்தம்……,,தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த கதையை எழுதியவர் தாங்கள் குறிப்பிட்டபடி ஜி ரமேஷ் குமார் அல்ல. எழுதியவர் திருமதி விஜி ரமேஷ். அவரது மற்ற 16 கதைகளையும் படித்து உங்களது கருத்துக்களை பதிவு செய்தால் மிக்க மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *