பறவைகள் கத்தின பார்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 20,171 
 
 

தான் வசிக்கும் ஊரில் இருந்து காரில் குடும்பத்துடன் வந்த ராமு மாமா, எங்கள் ஊரில் காரை நிறுத்தி அதில் என்னையும் அம்மாவையும் ஏற்றிக்கொள்கிறார். அங்கிருந்து கிழக்கு சென்று, வடக்கு திரும்பி மேலும் மேற்கு நோக்கிப் போகிற கார், 10-ம் நாள் காரியத்துக்குப் போகும் அஞ்சலி மௌனத்தை அவ்வப்போது சுமக்கிறது. அம்மாவின் ஊரைச் சமீபித்தாயிற்று. வேலுச்சாமி மாமாவின் இழவுக்குப் போக முடியாத நான், 10-ம் நாள் காரியத்துக்குப் போகிற விதமாக இந்தப் பயணம் நேர்ந்திருக்கிறது.

”அண்ணன எரிச்சது இந்த இடத்துலதான்” – கார், கணக்கன்பரப்பைக் கடக்கும்போது ராமு மாமா காரை ஓட்டிக்கொண்டே வலது பக்கம் கையைக் காட்டுகிறார். இந்த ஊரின் மாந்தர்கள், கடைசியில் எரியூட்டப்படுவது இந்த இடத்தில்தான்.

கணக்கன்பரப்பை, கொச்சை வழக்கில் ‘கணக்குமறைப்பு’ என்றோ, ‘கணக்குமறப்பு’ என்றோ இந்த ஊர்க்காரர்கள் சொல்வது உண்டு. அதை, மரணத்தோடு எந்த வகையில் இணைத்துப் பார்த்தாலும் பொருத் தம் உடையதுதான். கணக்கு மறைப்பு தார்சாலைக்கு வடக்குப் பக்கமாகவும், காடு ஒன்றின் தனியார் வேலிக்குத் தெற்குப் பக்கமாகவும் சரளைக்கற்கள் விரவிக் கெட்டித் தட்டிய நிலமாக இருக்கும். அதில், மார்கழிக் கடைசி நாளில் காப்புக் கட்டுவதற்காகப் பயன்படும் ஆவாரம், பீளைப் பூ ஆகியவற்றுடன் நாயுருவி, குப்பைமேனி ஆகியனவும் விளைந்துகிடக்கும். அதுவல்லாது கிழுவை. வேலி ஓரங்களில் வேப்பமரங்களும் உண்டு. ஊரின் மக்கள்தொகை குறைவு. ஆகையால், அந்திமக் காரிய நாட்களில், ஊர் முழுக்கக் கூடி நிற்க, கணக்கன்பரப்பு போதுமானது. பெண்கள், ஈமக்காட்டின் காரியங்களில் பங்கெடுப்பது இல்லை என்பதால், கடைசித் தறுவாயில் அந்த இடத்தில் பங்கு எடுத்துக்கொள்ளும் ஒரு பெண், பிணமாக மட்டுமே இருக்கக்கூடும்.

வெளியூரில் இருந்த எனக்கு, மாமா இறந்த அன்றைக்கு போனில் செய்தியைத் தெரிவித்தி ருந்தார் அப்பா.

”மாமா ஊர்லடா… வேலுச்சாமி மாமன்…” என்று அப்பா சொல்லத் தொடங்கும்போதே அம்மா குறுக்கிடுவது கேட்கிறது, ”யாருனு கரெக்டாச் சொல்லீருங்க… இல்லைன்னா குழம்பிடப்போறான்!”

அம்மாவின் சொல் கருதியோ அல்லது தன் சுய தீர்மானத்திலோ அப்பா தெளிவாகச் சொன்னார், ”கோயிலுக்கு எதுத்தாப்ல வீட்டு மாமன்டா…”

உண்மையில் அப்படித் தெளிவாகச் சொல்லாவிட்டால் குழம்பிப்போகும் நிலைதான் எனக்கும். தாய்மாமாவின் ஊர் என்பதைவிட தாய்மாமன்களின் ஊர் இது என்பதே பொருத்தம்.

ஊரில் தாலி ஏற்றிய ஆண்கள், தாலி ஏறிய பெண்கள் தவிர்த்தும் வயது கூடிய அவ்வளவு ஆறறிவும் என்னை, ‘மாப்ள’ என்றே கூப்பிட்டார்கள். கன்றுகாலிகள் ‘மா’ என்று மட்டும் கூப்பிட்டன.

தலைவாசலில் கார் நிற்கிறது. காரில் இருந்து ஆறு பேர் இறங்குகிறோம். கார் சென்று நிற்கும் நேரம், எதிர்த் திசையில் இருந்து டவுன் பஸ்ஸும் வந்து நிற்கிறது. வேப்பமரக் கல்லுக்கட்டும், அதன் தெற்குப் பக்கம் பிள்ளையார் கோயிலும் இருக்கிற இடம்தான் ஊருக்குத் தலைவாசல். அதுவே பேருந்து நிறுத்தமாகவும் இருக்கிறது. ஒருவிதத்திலான உண்மையில், ‘ஊர் தலைவாசல்’ என்று செல்வக்குமார சுவாமியின் கோயில் முகப்பைத்தான் சொல்ல வேண்டும். இந்த இடத்தை தலைவாசலாக அங்கீகரித்தது, வெளியூர்க்காரர்களின் வேண்டு கோளுக்கு இணங்கியதாக இருக்க லாம். எல்லா ஊரின் தலைவாசல்களும் வெளியூர்க்காரர்களால் அறுதியிடப்படுகின்றன.

பேருந்தில் இறங்கியவர்களுடன் இணைந்து கோயில் வரை போகும் தார் சாலையில் நடக்கிறோம். கோட்டை மதிற்சுவரை நினைவூட்டும் பொத்தியக் காட்டுவளவு வீட்டின் சுவர் வடக்குப் பக்கமாகவும், கோயில் நந்தவனத்தின் குற்றுமதில் தெற்குப் பக்கமாகவும் 40 மீட்டர்களுக்கு நீளும்.

‘நந்தவனம்’ எனக் குறிப்பிடும் காம்பவுண்ட் உள்ளிட்ட பகுதியில் எனது குழந்தைக் காலத்தில் செவ்வரளி, நித்ய கல்யாணி, மல்லிகை, கனகாம்பரம்… ஆகிய மலர்களைப் பார்த்திருக்கிறேன். இரும்பு ஏணி வைத்த ஒரு தகரத்துச் சறுக்கும் அங்கு உண்டு. கீழ்நோக்கி வரும்போது அது பறத்தலின் சுகம் தரும். கவனம் தடுமாறும்போது சிலவேளை கீழ் முனைத் தகர நீட்டம் சிறுவர் – சிறுமியரின் துணிகளைக் கிழிக்கும். பிற்பாடு ஊரக விளையாட்டு மேம்பாட்டில் ஊன்றப்பட்ட இரும்புக் கழிகளும் சறுக்குகளும் இப்போது ஊனப்பட்டு அதற்குள் உள்ளடங்கிக் கிடக்கின்றன. வனத்தின் ஓரத்து வடக்கு மதிலின் மடுவில் வேர்பிடித்து ஒற்றை மரம் எழுந்து நிற்கிறது. வேலுச்சாமி மாமனுக்காக 10-ம் நாள் பரிவு தெரிவிக்கப்போகும் தலைகள் மீது அந்தப் பூமரம் நிழல் விரவி நிற்கிறது. கனிகளுக்காக எழாமல் பூக்களுக்காக எழுகிற மரங்கள், பெண்களுக்கு அபூர்வம்.

”இது செண்பகமா?” என்று பேருந்தில் இருந்து இறங்கி வந்து நடந்துகொண்டிருக்கிற பெண் கேட்கிறார். மரத்தின் பூக்கள், குப்புறக் கவிழ்த்த ஐம்பச்சை இதழ்களின் நுனிகளை மாத்திரம் சூரிய ஈர்ப்பு விசை நோக்கி, மேல் வளையமாகத் துருத்திக்கொண்டிருக்கின்றன. அவை செண்பகப் பூக்கள் அல்ல என்பது எனக்கே தெரியும். செண்பகம், வெண்மையின் பொன் முயற்சி!

”செண்பகம் இல்லைங்க!” இந்தப் பதில் எங்கள் காரில் வந்த கீதா அக்காவினுடையது. பக்கத்தில் ஆறு இல்லாததால் அங்கே தாழம் பூக்கள் பூத்திருக்கவில்லை. செடியும் கொடியும் மரமும் அல்லாத தாழை அங்கு இருந்திருப்பின் அது பேச்சை வேறோர் இடத்துக்கு இட்டுச்சென்றிருக்கும். அந்த ஊரில் இருந்து ஆற்றுக்கு நான்கு கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். ஆற்றின் கரையில் ஊராருக்குக் குலசாமி வீற்றிருப்பாள். வடக்கு வாசற்செல்வி!

பேருந்தில் வந்த பெண், ”செண்பகம் இல்லீனா, மனோரஞ்சிதமா இருக்குமா? மனோரஞ்சிதம்னா இந்நேரம் வாசம் வந்திருக்கணுமே!” என்கிறார். இப்போதைக்குப் பூவை வைக்க முடியாவிட்டாலும், பூவுக்குப் பேராவது வைத்துவிடவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

அம்மா, இந்த உரையாடலில் தலையிட்டுக் கொள்ளவில்லை. ஏதேனும் உவமைகள் கிடைத்தால் பேசியிருப்பாளாயிருக்கும். ஏதோ ஒரு நண்பனின் வீட்டுக்கு நாங்கள் போக நேர்ந்தபோது இரண்டு கறுப்பு பூட்ஸ்களைப் பார்த்து, ‘வாசல்ல… ரெண்டு பெருச்சாளி நிக்கற மாதிரியே இருக்குடா’ என்றவள் அவள். செண்பகமா, மனோரஞ்சிதமா என வரைவுக்கு வருவதற்குள்ளாக , ‘பந்தல்’ சமீபித்துவிட்டிருந்தது. இனி ஆட்களையும் சடங்குகளையும் அதனினும் அதிகமான பாவனைகளையும் எதிர்கொள்ள வேண்டும். அந்த அளவில் நான் பூமரத்தின் தாவரவியலில் இருந்து என்னைத் துண்டித்துக்கொண்டு சுயமாக ஒரு முடிவுக்கு வந்தேன்.

‘செண்பகமும் மனோரஞ்சிதமும் ஓர் அத்தையாக, சகோதரியாக, மதனியாக, யாராகவேணும் இருந்துவிடக்கூடும். ஆகவே, இந்த மரம் அவற்றில் ஒன்றல்ல. ‘மகிழ்ச்சி’ எனப் பேர் வைத்து ஒரு பெண் இருக்க முடியாது என்பதால், ஒருக்கால் இந்த மரம் மகிழம்பூவாக இருக்கலாம்’ என நினைத்தேன். திரும்பிப் போகும்போது இந்தப் பூ ஒன்றைப் பறித்துக்கொண்டுபோய் யாரிடமாவது பேர் கேட்டு, எனது பூவுலக அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். அதேபோல, அந்த நாளில் தனசேகர மச்சான் வீட்டின் தோட்ட மதில் ஓரம் உள்ள நந்தியாவட்டைப் பூ ஒன்றையும் பறித்துப்போக நினைத்திருந்தேன். வெள்ளை நிறமுள்ள பூ ஒவ்வொன்றும் நட்சத்திரங்களுக்கு ஈடாகவும், ஞாபகங்களுக்கு ஊடாகவும் இருக்கின்றன.

கை தொட்டு, கையொற்றி இழப்பின் துயரத்தைப் பகிர்ந்துகொள்வது வழக்கம். பாஸ்கர மச்சான் எங்களை எதிர்கொண்டு நிற்கிறார். கீற்றுப் பந்தலின் இடுக்குகளில் வழியே பகல் வெப்பம் அவர் மீது ஒளியாகத் தெறித்துக்கொண்டிருக்கிறது. தகப்பனாரின் இன்மைச் சுமை தலையில் இறங்க, அவர் மொட்டை போட்டுக்கொண்டு நிற்கிறார். இனிமேல் குடும்பத் தலைமையாக நின்று அவரே முடிவு எடுப்பது என்பது, அவர் முடி எடுப்பதில் தொடங்கியிருக்கிறது,

மச்சானை எதிர்கொள்வது எனக்குச் சிரமமாக இருக்கிறது. லேசாகத் தலையசைத்துக் கும்பிடு போட்டுவிட்டு வீட்டின் முகப்படி நோக்கிச் செல்கிறேன். ஷாமியானா பந்தல் இல்லாமல் தென்னங்கீற்றில் பந்தல் வேய்ந்த கிராமமாக இருக்கிறது இது. பாஸ்கர மச்சான் என்னைப் பார்த்துவிட்டார் என்பது போதுமானதாக இருக்கிறது. வீட்டின் முகப்பைத் தொடும் இடத்தில் ரகுநந்தன் நிற்கிறான். பாஸ்கர மச்சானுக்குப் பங்காளி. எனக்குப் பள்ளித் தோழன். நாங்கள் பிறப்பதற்கு முன்பே, எங்களுக்குக் கதைகள் உண்டு. ரகுவை அருகில் நெருங்கிச் செல்கிறேன்.

சட்டெனப் போய் கைகுலுக்க அவனிடம் கை நீட்டியபோது, அவன் இடது கையை நீட்டிவிட்டு பிறகு வலது கையை நீட்டுகிறான். அவன் இடதுகைப் பழக்கமுள்ளவன். அவனும் நானும் கபடி விளையாடிய 10-ம் வகுப்புப் பருவம் நினைவுக்கு வருகிறது.

ஊரின் கல்லுக்கட்டில் அப்போதைய வேப்பமரத்தின் தண்டு அதிநிச்சயமாக நுகத்தடியின் பருமனில் இருந்தது. நுகத்தடி வேப்பமரத்தை மையமாக வைத்து நாங்கள் கால் பாதத்தால் கோடு கிழிப்போம். அந்த நாட்களில் ரகுநந்தன் வலது காலால் ஆட்டத்தின் கோட்டைப் போட்டானா அல்லது இடது காலால் கோட்டை வரைந்தானா என்பது எனக்குத் தெளிவில்லை. இப்போது அந்த மரத்தின் தண்டு வட்டம், முற்றிய தென்னை மரத்தின் விட்டம் போலப் பருத்துவிட்டது. எங்கள் தலைகளில் கீற்றுகள் கணிசமாகக் கழிந்திருந்தன.

ரகுவும் நானும் ஒற்றைக்கொற்றை கபடி விளையாடுவோம். அவனே அநேகமாக ஜெயிப்பான். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. கபடி விளையாட்டில் நிறுவனங்கள் துணை இல்லாது, மாநில அளவில் பேர் வாங்கிய அணி கேட்ச்சரின் மகன் அவன்.

”உன்னைய அன்னிக்கு பஸ்ல போயிட்டு இருக்குறப்ப பாத்தேன்டா. நீதானானு கூப்பிடறதுக்குள்ள பஸ் போயிருச்சி!” என்றான் ரகு.

”அவ்வளவு அடையாளம் மாறிப் போயிட்டனா நான்?!” என்று கை குலுக்கினேன்.

பந்தல் போட்டிருந்த பாஸ்கர மச்சானின் வீட்டிலும் முகப்பிலும் சனக்கூட்டம் குழுமுவதும் நகர்வதுமாக இருந்தது. அந்தக் கிழக்குப் பார்த்த வீட்டில் மச்சான் குடியிருக்க, தெரு வளைவுக்குக் கிழக்குப் பக்கம் தெற்கு பார்த்த வீட்டில் வேலுச்சாமி மாமாவும் அத்தையும் குடியிருந்தார்கள். கடைசியாக சடலம் கிடக்கும் இடத்தைத்தான் மனிதனின் சொந்த வீடு எனக் கொள்ளவேண்டுமா எனத் தெரியவில்லை. வேலுச்சாமி மாமாவின் வீட்டுக் கதவு திறந்தால், செல்வக்குமார சுவாமிக்குக் காவல் நிற்கிற மகாமுனியைப் பார்க்கலாம். சிமென்ட்டும் சுண்ணாம்பும் கலந்த ஒரு காவடிப் பீடத்தினுள் கொடுவாள் உயர்த்தி மகாமுனி நிற்கும். மாமா இல்லாத அத்தையை இன்று பார்க்கத் தயக்கமாக இருந்தது. அது முள்ளாகக் குத்தும் வேதனையாக இருக்கும். கொஞ்சம் சுண்ணாம்புச் சத்துள்ள முள். மாமா வீட்டில் வடக்கோட்டில் பாத்ரூம். காம்பவுண்ட் உள்ளிட்ட பகுதியில் எல்லாம் சிமென்ட் பூசி, வாசலின் தோற்றத்தில் இருப்பினும் அந்த ஏரியாவை ‘பொடக்காளிப் பக்கம்’ என்றே அழைப்பார்கள். அங்கேதான் வாழ்வில் முதன்முதலாக மீன் சாப்பிட்டேன்.

கவுச்சியை அத்தை சமையலறையில் சமைப்பது இல்லை. முக்கோணத்துக்குக் கற்களும் விறகும் தீயும் கிடைத்தால், எந்த இடமும் அடுப்படிதான். அமராவதியின் அருங்கரையில் கிடைத்த மீன்கள், முதலாவது மீன் உணவாக எனக்குப் பரிச்சயமாகின. வேலுச்சாமி மாமாவின் நினைவுகளை மீன் உள்ளளவும் நான் உள்ளளவும் மறக்க இயலாது.

அப்பாவுக்கு நெருக்கமான மாமாக்களில் அவரும் ஒருவர். குறிப்பாக, தனது அக்கா மகளான அம்மாவை, அப்பா காந்தர்வ மணம் கொள்ள நேர்ந்தபோது துணை நின்றவர்களில் அவரும் ஒருவர். அந்தக் கல்யாணம் முடிந்ததும் என அம்மம்மாவாகிய அம்மாயிக் கிழவி கோபத்திலும் தாபத்திலுமாக நிலத்தை ரகுநந் தனின் தாத்தாவுக்கு அற்ப விலைக்கு எழுதிக் கொடுத்துவிட்டாள். நுகங்கள், மேழிகள், மாடுகள், சாட்டைகள், ஆட்கள், காக்கித் தொப்பிகள், தாவாரங்களில் பேச்சுகள்… பாத்தியதையைக் கைக்கொண்டுவிட வேண்டும் என்ற பஞ்சாயத்துகள் பகைகொள்ளப் போதுமான சம்பவங்கள், அவமானங்கள், செலவினங்கள் எல்லாம் முடிந்தாயிற்று.

நிலம், கைவிட்டுப் போய்விட்டது. அம்மாயி, கூலிக்காரியாகவே செத்தாள். கடன்கள் தீராத மரத்தொடர்ச்சியில் அவளும் ஒரு கனி. மூச்சுக் காற்றுக் கைவிட்டபோது, மண்ணில் நழுவினாள். கைவிட்டுப்போகாத பொருள் என எதுவும் இல்லை உலகில். விரலும் நகமும் தவிர. உபரி நகங்கள் மற்றும் அழுக்குகள் போவதற்குக் கொஞ்சம் காலம் பிடிக்கிறது அல்லது அதற்குள் காலமே போய்விடுகிறது.

பழைய கதைகள், என்னுடைய ரகுவுடைய கபடி விளையாட்டைப் பாதிக்கவில்லை. ஆனாலும், அவனது வீட்டுக்கு நான் போனது இல்லை நாளது தேதி வரை.

”சாப்பாடு ரகு வீட்லயாம்!”

தார்மீகப் பிரச்னை எழுந்துவிட்டது. சொந்தத் தாய்மாமனின் மகனான ஆனந்தனிடம் கேட்கிறேன். நிலமும் புலமும் பெயர்ந்த பின்னாலும் ‘சீத்தப்பட்டியார் வீடு’ எனப் பெயர் விஞ்சி நிற்கிற மாமாவின் வீட்டில் இருந்து அவனிடம் கேட்கிறேன். புழங்குதலின் வசதி கருதி அப்படி ஓர் ஏற்பாட்டை பாஸ்கர மச்சானும் மற்றவர்களும் சேர்ந்து செய்துவிட்டார்கள் போல.

”வேலுச்சாமிப் பெரியப்பா அங்க சாப்பிட வெச்சிட்டாரே!” என்கிறான் ஆனந்தன்.

பிரச்னை என நான் நினைத்துக்கொண்டிருந்த ஒன்றை, அவனது அந்த எளிமையான வாக்கியம் தீர்த்துவிட்டது.

கை கழுவுவது, மனித இனத்துக்குப் புதிய தொழில் அல்ல. ஆறாம் அறிவின் முதலாவது தொழில்நுட்பம் அது. ரகுநந்தனின் வீட்டில் சாப்பிட்டுவிடுவது என மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். ரகுவின் வீட்டு மதிலுக்கும், செல்வக்குமார சுவாமி கோயில் மதிலுக்கும் சமபாதித் தூரத்தில் வாளியில் தண்ணீர்.

கோயில் மதிலின் உள்ளே இருந்த வில்வமரத்தின் காய்கள் மதிலுக்கு வெளியே தொங்குகின்றன. கையோடு கொண்டுபோக நினைப்பதில் இப்போது வில்வக்காய்களும் தவறுகின்றன. தண்ணீர் வாளிக்குப் பக்கத்தில் தயங்குகின்றன எனது கால்கள். அருகில் இருந்த தனசேகர மச்சான், ”உள்ள போயிச் சாப்பிடுங்க மாப்ள” என்று முதுகில் மிக மெலிதாக வலது உள்ளங்கையால் மெத்துகிறார். ‘டேய்… போய்ச் சாப்பிடுறா மாப்ள’ என்பதற்கு இணையாக அது இருக்கிறது.

பந்தியில் கிழக்கு ஓரத்தில் எனது இடம்.சாப்பாடு எப்போதும் பல கட்டங்களாக நடப்பதுதான். சாப்பாட்டில் அதிரசம் இருந்தது. மாமாக்களின் ஊரில் அது ‘கச்சாயம்’ எனப் பெயர் பெறுகிறது. அதிரசத்தின் மீது பழத்தை உரித்துப்போட்டு, ‘இதன் மீது நெய்யை ஊற்றுங்கள்’ என நான் கோரிக்கை விடுத்த பெண்மணி, ஒருவேளை ரகுநந்தனின் மனைவியாக இருக்கலாம்.

இடையில் ஒரு கட்டத்தில் வெறும் சோற்றை நான் அளைந்துகொண்டிருந்ததைக் கவனித்த ரகு, மோர்க்குழம்பை எடுத்து வந்து ஊற்றினான். இடது கை! இடது கையால் பந்தியில் வைத்துப் பரிமாறப்பட்ட வாழ்நாளின் முதலாவது பதார்த்தம் அது. நான் சிரிப்பதற்கு முன்னமே ரகு சிரித்துவிட்டான்.

ஆனாலும் பாருங்கள், கைகள் பற்றிக் குலுக்கிக்கொள்ளும்போது எது வலது பக்கம், எது இடது பக்கம் எனக் கண்டுபிடிக்கத்தான் முடிவது இல்லை!

– பெப்ரவரி 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *