பரோபகாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 1,359 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வரண்ட பாலைவனம் போன்ற மணல் வெளி. அங்கே சில பனை மரங்கள் நின்றன. ஒரு மரம் சமீபத்திலேதான் கங்குகள் உதிர்ந்து காட் சியளித்தது. இளமை கழிந்து கன்னிப்பருவமடைந்ததற்கு அறிகுறியாக, கங்குகள் உதிர்ந்தும், அவற்றின் சின்னங்கள தெறித்திருந்தன. வாலிப முறுக்கிலும் இளமை நினைவுகள் தோன்றுவது போல அந்தக் கங்குச்சிதர்களொான்றிலே ஒரு பனங் கற்றாளை.

அதன் நடுவிலே இளங் குருத்துகள், சுற்றிவர முதிர்ந்த இலைகள், வாளின் முனையைப் போல, ஒரே ஒரு பனங்கற்றாளைதான். ஆனால்… அது மலடல்ல. பெற்றுப் பெருகிப் பெருவாழ்வு பூண்டது. என்றாலும் அந்தப் பெரிய குடும்பம் இருந்து இல்லறம் செய்ய ஒரு குழி மண்ணையாவது ‘அவன்’ – எல்லாம் வல்லவன் என்று சொல்கிறார் களே, அவன் – கொடுக்கவில்லை . பாவம்! அது என்ன செய்யும்? இந்தப் பனைமரத்தை ஒட்டிக் கொண்டது, நம் நாட்டின் ஏழைச் சகோதரர் களைப் போல்.

ஒட்டுக்குடித்தனம்தான், ஆனாலும் கண்ணியமானது. நம் மலர்களைப் போல் கிள்ளல். சுரண்டல் பழக்கங்களைப் பிறப்பிலும் அறியாதது. என்ன விந்தை! நிலத்திலும் அதன் வேர் இறங்கவில்லை:பனைமரத்தையும் சுரண்டவில்லை; பின் அதற்கு ஊண் எங்கே? ஆம்; அகதிக்கு ஆகாயமே துணை.

ஒரு நாள் மாலை நான் அந்தப் பக்கமாகப் போனேன். கலகலத்த சிரிப்புடன் பேச்சுக் குரல் கேட்டது. கேட்டேன் :

“அக்கா!” என்றது கற்றாளை, கொஞ்சம் குரலில்.

“என்னடி?” என்றது பனை, பாசக்குழைவுடன்.

“நான் உன்னுடன் ஒட்டுக்குடித்தனம் செய்ய ஆரம்பித்து எத்தனை வருஷம் ஆகிறது தெரியுமா? என்றது கற்றாளை.

“ஆமாம்; அதெல்லாவற்றையும் தான் நான் யோசிக்க வேண்டும், விரோதிகளின் நினைவுபோல்!”

“என்னக்கா, இவ்விதமான பாந்தவ்ய வாழ்க்கை இவ்வுலகில்…”

“இந்த உலகிலா!” என்று பனை கலகலத்தது”

‘ஆகவே நாங்கள் மனிதர்களிலும் சிறந்தவர்கள்”

“எப்படி?”

“எப்படியா அக்கா? அவர்களில் ஒரு சிலர் உண்டும் உடுத்தும் சுகித்திருப்பார்கள். அதே சமயத்தில் அவர்களைப் போன்ற எத்தனையோ கோடி ஜனங்கள் பட்டினியால் சாவார்கள்! இந்த ஏழைகளைப் பார்க்கக் கூட பெருந்தீனிக்காரர்கள் அருவருப்பார்கள்: எச்சிற்கையால் அவர்களை விரட்டார்கள்; மனித ஜாதியிடம் ஈவிரக்கம் மறந்தேபோயிற்று. ‘அன்பு’என்ற உணர்ச்சி காற்றுப் பிடித்த கற்பூரக் கட்டிபோல்’ என்றோ குடி போய்விட்டது.”

“அப்படியானால் அவர்கள் வாழ்வில் இன்பம்…”

“இன்பமா? தூய்மையே நிறைய வேண்டிய அவர்கள் உள்ளத்தில், சுய நலமென்ற கள் வன் கோட்டைகட்டி ஆளுகிறான். இதயபீடத்திலே அன்பரசன் ஆட்சி புரியவேண்டும், எல்லோ ரும் ஓர்குலம், எல்லோரும் ஒரினம்; எல்லோரும் உண்ண வேண்டும்; உடுக்க வேண்டும், சீரிய வாழ்வு நடத்த வேண்டும். பரோபகார சிந்தை இருக்கவேண்டும். இந்த நினைவு ஏற்படும் போதுதான் மனிதன் மீது இன்பக்காற்று வீசும்.”

நான் விறைத்துப்போய் நின்றேன். அந்தப் பனங்கற்றாளையின் திருட்டுக்கண்கள் என்னைக் கண்டு விட்டன.

மனோரம்யமான சிறுதென்றலொன்று அசைந்து சென்றது.

அவ்வளவுதான், பனங்கற்றாளை தன் தளிர்க்கரங்களை அசைத்து பனைமரத்தை மெல்லச் சுரண்டியது.

பனைமரமும் என்னைப் பார்த்துவிட்டுக் ‘கல கல’ வென்று சிரித்தது.

அறநனைந்தவனுக்குக் கூதலென்ன? குளிரென்ன?

“ஆகா, இந்த வரண்ட பூபாகத்திலே, அதுவும் இவைகளிடமா, பரோபகாரம்” என்றேன். ஏதோ ஒரு சூன்யப் பிரதேசத்தை நோக்கிக் கொண்டு,

‘ஆமாம்’ என்று சொல்வன போல இரண்டு காக்கைகள் ‘கா, கா’ என்று ஓலமிட்டுக் கொண்டு வந்தன.

வந்த காக்கைகள் தம் கூட்டையடைந்தன. அவைகளின் கூடெங்கே?

அதோ, அந்தப் பனைமர வட்டிலேதான்!

காக்கைகளைப் பனைமரம் தன் தளிர்க்கரங்களால் ஆதரித்து அணைத்தது, பாந்தவ்ய வாழ்வின் எல்லையில்லா இன்ப உணர்ச்சி, பனைமரத்தின் மேனி எங்கும் செறிந்ததோ என்னவோ! ‘கல கல’ வென்று அடுத்த சிரிப்பும் சிரித்தது.

– மறுமலர்ச்சி ஆனி – 1949, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *