(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘சித்தலவாய்! சித்தலவாய்!” என்று போர்ட்டர் கத்தினான். அவன் அப்படி அறிவிக்கா விட்டால் அவ்வூரின் பெயரோ விசேஷமோ ரெயிலில் பிரயாணம் செய்பவர் களுக்குத் தெரிய நியாயம் இல்லை. ஸ்டேஷனில் வண்டி நின்றது. ஒருவர் இரண்டு பெண்மணிகளையும் ஒரு குழந்தையையும் நான் இருந்த வண்டியில் ஏற்றி விட்டுகள் “ஜாக்கிரதையாகப் போய் வா அம்மா!……. லக்ஷ்மீ, போய் வறயா? மாப்பிள்ளையிடம் சொல், எனக்கு வேலை அதிகமென்று’ என்று சொல்லிக் கீழே நின்றார். “ராஜா, நின்றார்.ராஜா, போயிட்டு வறயா ?…குழந்தை ஜாக்கிரதை. அடிக். காதே-ராஜா, போயிட்டு வறயா?” என்று அந்தக் குழந்தையையும் அதை வைத்துக் கொண்டிருந்த தாயையும் மாறி மாறிப் பார்த்து விடைபெற்றுக் கொண்டார் அந்த மனுஷர்.
லக்ஷ்மி, குழந்தையின் தாய். குழந்தையின் கன்னத்தை மெல்லக் கிள்ளியபடியே, “மாமாவைப் பாரு. ஊருக்கு வான்னு சொல்லு. சமுத்தா அழாமெ இருக் கேன்னு சொல்லு” என்று அதன் மழலைப் பாஷையிலேயே பேசினாள்.
வண்டி ஊதிவிட்டது. புறப்படுவதற்குள் அந்த மனிதர் நூறு தரம் ‘ஜாக்கிரதை’ சொல்லி விட்டார்.
மூன்று பேரும் வண்டியில் அமர்ந்தார்கள் ; இரண்டு பேர் உட்கார்ந்தார்களென்பது தான் நியாயம்; குழந்தை. அம்மா மடியில் இருந்தது.
அவர்கள் உட்கார்ந்த பலகைக்கு எதிர்ப் பலகையில் யாரே ஒரு கு டியானவப் பெண் தன் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தாள். இந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஏறக்குறைய ஒரே வயசுதான் இருக்க வேண்டும்.
வண்டியில் அதிகக் கூட்டம் இல்லை. சின்ன வண்டி : எல்லோரும் சேர்ந்து ஏழு பேர்களுக்குமேல் இல்லை.
அந்த ஸ்டேஷனில் ஏறின ஸ்திரீகளில் ஒருத்தி ஐம்பது வயசுள்ள அம்மாள். குழந்தையின் தாய்க்கு இருபது இருபத்திரண்டு பிராயம் இருக்கலாம்.
அவர்கள் உட்கார்ந்தவுடன் எல்லோருடை கண்களும் அந்தக் குழந்தையின்மேல் பாய்ந்தன. ராஜா என்ற பெயர் அந்தக் குழந்தைக்கு எல்லாவிதத்திலும் தகும் நல்ல களை சொட்டும் முகம். கவலையே அறியாமல் வேண்டிய பொருளை வேண்டிய சமயத்தில் பெற்று வளர்ந் வளர்ச்சி, அழகான கண்கள் ஆகியவை அந்தக் கவர்ச்சிக்குக் காரணம். இவைகளுக்குமேல் அவன் அணிந்திருந்த கால் பூட்ஸு, அதன் வாய்க்கு விளிம்பு இ இட்டவைபோன்ற வெள்ளிக் காப்பும் கொலுசும், வெல்வெட்டு நிக்கர், மேலே நல்ல சட்டை -இந்த ஆடை வகைகளும் அந்தச் சின்னஞ் சிறு உருவத்தைப் பின்னும் அழகுடையதாகச் செய்தன.
அந்தக் குழந்தைக்குத் தாயாக இருக்கும் பாக்கியம் பெற்ற லக்ஷ்மியும் நல்ல அழகிதான். அவள் கழுத்திலும் காதிலும் கையிலும் இருந்த நகைகள் ஆடைகள் எல்லாம் அவள் செல்வம் நிறைந்த குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டவள் என்பதை எடுத்துக் காட்டின.
வண்டி நகர்ந்தவுடன் அந்தக் குழந்தை கீழே நின்ற வரைத் தன் கையால் சுட்டிக்காட்டி, “மாமா மாமா! என்று சொல்லிக் கேள்வி கேட்கும் பாவனையில் தன் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். ‘மாமா ஏன் வர வில்லை?’ என்ற அர்த்தம் அந்தப் பார்வைக்கு இருக்கலாம். மாமா நாளைக்கு வருவா'” என்றுல க்ஷ்மி பதில் சொல்லிக் குழந்தையை ஒரு முத்தமிட்டாள்.
குழந்தையும் தாயும் சேர்ந்து அளித்த காட்சி அழகாக இருந்தது. அந்த வண்டியில் அமர்ந்திருந்த நான் குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
“ஏம்மா, ஆம்புளைத் துணை யாரும் இல்லையா?” என்று ஒரு கேள்வி புறப்பட்டது. அவர்களுக்கு எதிரே குழந்தையோடு உட்கார்ந்திருந்த பெண்தான் அந்த கேள்வியைக் கேட்டாள்,
“நாலு ஸ்டேஷனுக்கு அப்புறம் எறங்கப் போறோம். அதுக்குப் புருஷாள் துணை எதுக்கு? ஸ்டேஷனுக்கு ஐயர் வந்திருப்பார்” என்று வயசு முதிர்ந்த பெண்மணி பதிலுரைத்தாள்.
“எந்த ஊருக்குப் போவணும்?” என்று மறுபடியும் கேள்வி வந்தது.
“நாங்களா?எலமனூருக்குப் போகணும்.”
“அப்புறம் கோட்டைக்கு எத்தனை டேசன் இருக் குது?” என்று கேள்வியினால் அந்தப்பெண் தான் திருச்சிராப்பள்ளிக் கோட்டைக்குப் போவதைத் தெரிவித்துக் கொண்டாள்.
“இந்தக் கொளந்தைக்கு என்ன வயசு ஆவுது?”
“ரெண்டு ரொம்பி மூணாவது நடக்கிறது” என்று லட்சுமி பதில் சொன்னாள்
இந்தச் சம்பாஷணையில் என்னை அறியாமல் நான் ஈடுபட்டேன், ராஜாவைக் கவனித்து அவன் உருவத்தில் ஆழ்ந்திருந்த என் கண்கள் எதிர்ப் பலகையிலிருந்த தாயி டமும் குழந்தையிடமும் சென்றன; கோட்டைக்குப் போகும் அந்தப் பெண்ணும் அவள் தன் அருகில் உட்கார்த்தி வைத்திருந்த குழந்தையும் எதிரே உள்ளவர்களுக்கு நேர் மாறான காட்சியை அளித்தனர். அவள் வறுமை நிலைக்கு ஒரு சித்திரமாக இருந்தாள். அவள் குழந்தையோ தரித்திர நாராயணனது குட்டி அவதாரமாகத் தோன்றியது. கை கால்கள் சூம்பிக் கிடந்தன; வயிறு முன்னுக்கு வந்து இருந்தது. பிறந்த மேனியோடு அரையில் அழுக்குப் படிந்த அரைநாண் கயிற்றையன்றி வேறு ஆடையோ ஆபரணமோ அந்த உடம்பில் இல்லை. அரைநாண் கயிற்றில் ஒரு வெள்ளி நாய்க் காசும் இரண்டு புங்கங் காய்களும் கோத்துத் தொங்கின. கழுத்திலே ஒரு முடிகயிறு அந்தக் குழந்தைக்கு ஏதோ நோயென்பதையும். நோயை நீக்க அந்த ஏழைப் பெண் தெய்வத்தையும் மந்திரத்தையுமே நம்பினாளென்பதையும் விளக்கியது.
“கொளந்தைக்கு என்ன உடம்பு?’ என்று ராஜாவின் பாட்டி – லட்சுமியின் தாய்- கேட்டாள். அவள் குரலில் இரக்கம் தொனித்தது.
“தோசம் தாக்கி இருக்குதாம். பூசாரி முடி கயிறு போட்டிருக்கிறார்” என்று வருத்தத்தோடு சொல்லி விட்டு, தன் ஆசையெல்லாம் சேர்த்து அந்தக் குழந்தை யைப் பக்கத்திலே நெருக்கி வைத்துக் கொண்டு அதன் முதுகைத் தடவிக் கொடுத்தாள் தாய். மேலெல்லாம் அழுக்கு படிந்து எண்ணெய் காணாத தலையும், இன்பங் காணாத வயிறுமுடைய அந்தக் குழந்தை மிகவும் சாதுவாக உட்கார்ந்திருந்தது.
இரண்டு தாய்மார்களும் என்ன என்னவோ பேசிக், கொண்டிருந்த போது இரண்டு குழந்தைகளும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன. ராஜா சட்டென்று திரும்பிப் பார்த்து, ”பாப்பா, அதோ பாப்பா” என்று எதிரேயுள்ள குழந்தையைக் காட்டினான்.
அந்த வார்த்தையைக் கேட்ட அந்தப் பேதைக் குழந்தை தன் தாயின் முகத்தை ஆவலோடு பார்த்தது. அவள் முகத்தில் சந்தோஷம் நிரம்பிக் காட்டியது ; “சின்ன ஐயரு!” என்று தன் குழந்தைக்கு அவள் ராஜாவைப் பழக்கம் செய்து வைத்தாள்.
ராஜா ஒரு நிமிஷம் சும்மா இல்லை ; என்ன என்னவோ தன் மழலைச் சொற்களால் ‘பொரிந்து’ கொண்டிருந்தான் எல்லாரும் கேட்டுக் கேட்டுச் சிரித்தார்கள், அப்பொழுது எல்லாம் லக்ஷ்மிக்கு உண்டான மனத்திருப்தி இவ்வளவு அவ்வளவென்று சொல்ல முடியாது. நடு நடுவே தன் னுடைய சந்தோஷம் எல்லையை மீறி விட்டால், ‘போக்கிரி!* என்று:மெல்ல அவன் கன்னத்தில் ஒரு தட்டுத் தட்டுவாள். பாட்டி தன் கையிலுள்ள பையிலிருந்து ஒரு பிஸ்கெட் எடுத்து ராஜா கையில் கொடுத்தாள். அவன் அதை வாயில் வைத்துக் கடித்தான். எதிரே உட்கார்ந்திருந்த. குழந்தை அங்கலாய்ப்போடு அதைப் பார்த்தது. அந்த அம்மாளுக்குப் பந்தி வஞ்சனை செய்வ வது பாவமென்று தெரியவில்லை. ராஜா அதில் பாதி கடித்து விட்டு மற்றும் ஒரு பாதியை ஏழைக் குழந்தையிடம் நீட்டினான். அக்குழந்தை அதைக் கை நீட்டி வாங்க முயன்றது. விழுந்து விடுமோ என்ற பயத்தால் அதன் தாய் அதை வாங்கித் தன் குழந்தைக்குக் கொடுத்தாள். அதுவரையும் கண்டறியாத ருசியை அது அனுபவித்துக் கொண்டிருந்தது.
இன்னும் ஒரு பிஸ்கோத்தைப் பாட்டி பேரனுக்குக் கொடுத்தாள். அதையும் அவன் பாதி கடித்து மற்றொரு பாதியை நீட்டினான். ஆனால் இப்போது எதிரே இருந்த ஏழைப் பெண் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை.
“போதும் சாமி, நீ தின்னு. இவனுக்குப் பிஸ்கோத்து வாணாம்; எங்கிட்டே வடை இருக்குது. தாறேன் என்று சொன்னாள். பிஸ்கோத்துத் தின்னும் அந்தஸ்து தன் குழந்தைக்கு இல்லையென்று அவள் நினைத்தாள் போலும்!
“போருண்டா, நீ தின்னுடா ; அப்புறம் தானம் பண்ணலாம்” என்று லக்ஷ்மி சிறிது அதட்டிச் சொன்னாள். முதல் தடவை தயா தாக்ஷிண்யத்திற்காக அவள் ஒரு பிஸ்கோத்துத் துண்ட தானத்தை அனுமதித்து விட்டாள். மறுபடியும் தானம் பண்ணினால் அவள் பொறுப்பாளா?
அவள் சொன்ன வார்த்தைகள் பக்கத்தில் இருந்தவர் களுக்கு அவளது ஆணவத்தைக் காட்டின. அது வரையில் அவர்களை முக மலர்ச்சியோடு கவனித்தவர் களுடைய முகத்தில் லேசாக ஒரு அருவருப்புக் குறிப்புப் படர்ந்தது. இதை லட்சுமி எப்படியோ உணர்ந்து கொண்டு விட்டாள்.
“டாக்டர்,குழந்தைக்கு இந்த பிஸ்கோத்துதான் தர வேணும்னு சொல்லியிருக்கார். கோட்டையிலிருந்து இவப்பா வாங்கிண்டு வந்தா” என்று தன் செயலுக்குச் சமாதானம் சொல்லுபவளைப் போல அவள் கூறினாள்.
அந்த ஏழைப் பெண்ணோ தன் குழந்தை ஒரு முறை பெற்ற தானத்தையே பெரிதாக எண்ணி களிப்புற் றிருந்தாள். பின்னும் கொடுக்கலையே என்ற குறை கடுகளவும் அவளுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.
பிஸ்கோத்துத் துண்டைக் கொஞ்சங் கொஞ்சமாகக் குழந்தை மென்று தின்று விட்டது. அப்பொழுது ராஜா இரண்டாவது பிஸ்கோத்தைத் தின்று சுவைத்துக் கெரண்டிருந்தான். வெறும் வாயை மென்று கொண்டிருந்த ஏழைக் குழந்தை, “அம்மா! எனக்கு” என்று மெல்லச் சிணுங்கத் தொடங்கியது.
“ருசி கண்ட பூனையைப் பாத்தாயா அம்மா” என்று குறும்புப் பார்வையோடு தன் தாயிடம் லட்சுமி கேட்டாள்
அந்த அம்மாள் ஒன்றும் சொல்லவே இல்லை.
குழந்தையின் முனகல் பலத்தது; “அது வேணாந் தம்பி; சின்ன ஐயரு திங்கட்டும் என்று தாய் சொல்வது அதன் காதில் விழவில்லை. அழுகைக்கு ஆரம்பம் செய்தது. அடிச்சுடுவேன்” என்று பயமுறுத்தினாள். அது கேட்க வில்லை. வேறு வழி இல்லாமல் தான் வைத்திருந்த சிறு துணி மூட்டையை அவிழ்த்து அதில் ஒரு மூலையில் முடிந் திருந்த வடை ஒன்றை எடுத்துக் குழந்தை கையில் கொடுத்தாள். குழந்தை இரண்டு கையாலும் அதை வாங்கிக் கொண்டு கடிக்கத் தொடங்கியது. ஆரம்பஞ் செய்த அழுகை பிறகு தலை காட்டவில்லை.
ராஜா பிஸ்கோத்தை முக்கால்வாசி தின்றுவிட்டான். ஒரு சிறிய துண்டு கையில் இருந்தது. தன்னுடைய அபிமானத்துக்குப் பாத்திரனான ஏழைக்குக் கொடுப்பதற் கில்லையே என்ற எண்ணமோ என்னவோ, அவன் அடிக் கடி அம்மாவின் முகத்தைக் கையால் திருப்பித் திருப்பி “பாப்பா, பாப்பா, அப்பிச்சி’ என்று சொல்லிக் கொண்டே இருந்தான். அந்தப் பாப்பா முனகத் தொடங்கியதும் அவனுடைய அநுதாபம் அதிகமாகி விட்டது.
“பாட்டீ! பாப்பா” என்று தன் பாட்டியைப் பார்த்து; என்னவோ சொல்ல வந்தான். “பாப்பாக்கு ஆண்டாமாம் நீ தின்னு” என்று தன் அபிப்பிராயத்தைப் பாட்டி வெளிப் படுத்தினாள்.
”ஆண்டாம்?” என்று ஒரு கேள்விக் குரலோடு ராஜா கேட்டு விட்டுத் தன் குட்டிச் சிநேகிதனையும் அவன் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான். பாட்டி சொன்ன வார்த்தைகளில் எவ்வளவு உண்மை என்று தெரிந்து கொள்ள அவன் விரும்பி யிருக்கலாம். ஆனால் அவன் பார்வைப் பாஷையை அர்த்தம் செய்து கொள்ள அவர்களுக்குச் சக்தியும் இல்லை; மனசும் இல்லை.
ஏழைக் குழந்தை வடையைக் கடித்து ருசி பார்க்க ஆரம்பித்தவுடன் ஒருவிதமாக இந்தச் சிக்கல் தீர்ந்து விட்டதாகத் தோற்றியது. உண்மையில் அப்படி நேரவில்லை புயல் வேறு பக்கம் திரும்பி விட்டது.
ராஜா தன்கையில் இருந்த சிறு பிஸ்கோத்துக்:- துண்டை வாயில் போட்டு விழுங்கி விட்டுத் தன் தோழன் பக்கம் கையை நீட்டி, “தா” என்ற போது எங்களுக் கெல்லாம் தூக்கி வாரிப் போட்டது. கொடுத்து வாங்கும் ஸமரஸ குணத்தைக் கடவுள், மனிதர்களுக்கு இயல்பாகவே அமைத்திருக்கிறார் போலும்!
”சீ கழுதை! அது ஒனக்கு ஆண்டாம்” என்று லக்ஷ்மி அந்தச் சிறு கையை இழுத்துக் கொண்டாள். ராஜா மறுபடியும் கையை நீட்டி, “தா” என்றான். ஏழைத் தோழக் குழந்தை தன் தாயின் முகத்தைப் பார்த்தது. “கொடுக்கலாமா?” என்று தான் அதன் உள்ளத்தில் கேள்வி எழுந்திருக்க வேண்டும்.
”உனக்கு வாணாம், சாமி” என்று எதிரே இருந்த பெண் ராஜாவுக்குச் சொன்னாள்.
அவன் கேட்கவில்லை; ”அப்பிச்சி தா” என்று மட்டும் அந்தக் குழந்தையிடம் கை நீட்டினான். இப்போது அவன் குரலில் பிடிவாதம் ஏறியது.
“அது ஆய்; ஆண்டாம்! இந்தா பிஸ்கோத்து” என்று பாட்டி மற்றொரு பிஸ்கோத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.
ராஜா அதை வாங்கி வீசி எறிந்து விட்டு, ”பாப்பா, அப்பிச்சி தா” என்ற பல்லவியை ஆரம்பித்து விட்டான் லக்ஷ்மிக்குக் கோபம் கோபமாக வந்தது.
முதலில், ராஜா கடித்துத் தந்த பிஸ்கோத்தை அவன் தோழக் குழந்தை எவ்வளவு ஆவலாக வாங்கிக் கொண்டது! அதன் தாய் எவ்வளவு பூரிப்படைந்தாள்! இப்போது மாத்திரம் இந்த முரண்டுபாடு எதற்கு? – என் சிந்தனை சுழன்றது.
ராஜா அழுகைக்கு அடியிட்டான். லக்ஷ்மி நல்ல வார்த்தை சொன்னாள்; மிரட்டினாள். பாட்டி என்ன என்னவோ சொன்னாள். எதிரே இருந்த பெண்ணும் சமாதானம் சொன்னாள். அவை யெல்லாம் ராஜாவுக்குப் புரியவே இல்லை. வீரிட்டு அழத் தொடங்கினான்.
லக்ஷ்மிக்குக் கோபம் அதிகமாயிற்று. ராஜாவைக் கொண்டு பெருமிதத்தோடு அதுகாறும் கம்பீரமாக வீற்றிருந்த அவளுக்கு இப்போது இன்னது செய்வதென்றே தெரியவில்லை. அந்த வடையை வாங்கித் தருவதா? – அவள் உடம்பு முழுவதும் அருவருப்பால் குலுங்கிற்று.
”தரித்திரம்! இங்கே எங்கே சனியன் மாதிரி வந்து தொலைஞ்சுது?” – அவளிடமிருந்து கோபத்தில் வெளி வந்த இந்தச் சொற்கள் ராஜாவைக் குறித்தவை அல்ல. எதிரே இருந்த ஏழை உருவங்களைச் சொன்னவை.
யார் முதலில் இருந்தார்கள்? யார் பின்னே வந்தார்கள்? யார் இதற்குக் காரணம்! – இந்த விசாரணைக்கு எதிரே லக்ஷ்மியின் நியாயம் தலைகாட்ட முடியுமா?
“பீடை! குழந்தையைக் கலக மூட்டி விட வந்து ஒக்காந்திருக்கு. நாசமாய்ப் போக!”
ஏழைத் தாயின் இருதயம் படபடத்தது. “என்ன அம்மா சொல்றீங்க? யார் குத்தம்? என் கொளந்தை என்னம்மா செஞ்சுது?” என்று அவள் வாயெடுப்பதற்கு முன் லட்சுமிக்கு ஆத்திரம் தலைகால் தெரியாமல் வந்து விட்டது. “நாயே, உன்னை இங்கே யாருடீ உட்காரச் சொன்னது? பேச வந்துட்டயே: எங்கயாவது கண் காணாமெத் தொலையறது தானே!” என்று அகங்காரமும் ஆங்காரமும் கலந்து பொழியும் வசை மாரியிலே இறங்கி விட்டாள்.
இந்தக் கூச்சலில் ராஜா அழுகை ஓய வில்லை. அழுது அழுது முகம் சிவந்து விட்டது. ஏக இரைச்சல். பாவம்! ஏழைத் தாய் வாய் கொடுக்காமல் பேசாமல் இருந்து விட்டாள். பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானம் பேசியும் கண்டித்தும் லக்ஷ்மியை அடக்கினார்கள். ராஜாவை அடக்க ஒருவருக்கும் வழி தெரியவில்லை. இவ்வளவுக்கும் காரணமான அந்த ஊசல் வடை ஏழைக் குழந்தையின் வயிற்றுக்குள் போய் ஜீரணங்கூட ஆகியிருக்கும். ராஜாவோ விம்மி விம்மி அழுது கொண்டே இருந்தான்.
வண்டிக்குள் நிகழ்ந்தவற்றைக் காணப் பொறுக்காமல் உட்கார்ந்திருந்தேன். குளித்தலை ஸ்டேஷன் வந்தது. ஒருவன் வாழைப் பழம் விற்றுக் கொண்டு வந்தான். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அவனைக் கூப்பிட்டு நான் இரண்டு பழம் வாங்கினேன். ஒ ன்றை ஏழைக் குழந்தையின் கையிலே கொடுத்து ராஜாவைப் பார்த்து, “வாங்கிக்கோ” என்றேன். என்ன ஆச்சரியம்! அவன் ஒரே துள்ளலாகத் துள்ளி அதைத் தன் தோழன் கையிலிருந்து வாங்கிக் கொண்டான். அந்தக் குழந்தையும் மிகவும் ஆசையோடு நீட்டியது; உடனே அதன் கையில் மற்றொரு பழத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பி, “ராஜா அதைத் தின்னட்டும், அம்மா!” என்று லட்சுமியிடம் விண்ணப்பித்துக் கொண்டேன்.
ராஜா அழுகை இருந்தவிடமே தெரியவில்லை. வாழைப் பழத்தைப் பாட்டியிடம் காட்டி, “பாப்பா, பயம்” என்று சொல்லித் தின்னலானான். எதிர்ப்பலகையில் தன் உள்ளத்தே குமுறும் எண்ணங்களைப் பேச்சாலோ செய்கையாலோ காட்டச் சக்தியில்லாத ஏழைக் குழந்தையும் பரம சந்தோஷத்தோடு பழத்தை ருசி பார்க்கத் தொடங்கியது.
அப்போது இன்னதென்று சொல்லத் தெரியாத சங்கடத்தால் கலங்கியிருந்த அந்தக் குழந்தையின் தாய் ராஜாவையும் தன் குழந்தையையும் பார்த்து ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.
– 1932-42, கலைமகள்.
– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.