கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2016
பார்வையிட்டோர்: 9,672 
 
 

சுப்பிரமணியன் இப்பத்தான்யா அரசு வேலையில சேர்ந்தான். சேர்ந்து ஆறுமாசம் கூட ஆவலப்பா, அதுக்குள்ள ஒரு நர்சு கூட காதல் பண்ண ஆரம்பிச்சிட்டான்னு செய்தி வந்திடுச்சி. இதான இன்னைக்கு நாட்ல சுலுவான வேல?. பெத்தவங்களுக்கு எப்படியிருந்திருக்கும்?. ஒரே புள்ள. முள் வேலியோ, சப்பாத்தி கள்ளியோ, ஆப்புட்றதை புடிச்சி படர்ந்துட்ற வயசாச்சே. எரியறதை புடுங்கிட்டா கொதிக்கிறது அடங்கிப் போவும்னு ஒரு சொலவடை உண்டு. .வூட்ல அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சிட்றதுன்னு அவசரடியா முடிவு கட்னாங்க. இவங்க முடிவு கட்னா ஆச்சா?. புள்ளாண்டான் கூட வேலை செய்ற நர்ஸைத்தான் கட்டிக்குவேன் இல்லேன்னா எனக்கு கல்யாணமே வேணாம்னு பிலாக்கணம் பாட ஆரம்பிச்சிட்டானே. பெத்தவங்க ரகசியமா விசாரிச்சி அது ஒரு கிருஸ்துவப் பொண்ணு, பேரு ஸ்டெல்லான்னு தெரிஞ்சிக்கிட்டாங்க.. தாங்க முடியாம ஒரு பத்து நாளு போல அழுது அழுது புத்தி சொல்லி, நம்ம சொந்தபந்தத்தில யாரும் ஏத்துக்க மாட்டாங்கடா, குடும்ப மானம் பூடும்டா ஊரு காரித் துப்பிடும்டான்னு கதறி ஆர்ப்பாட்டம் பண்ணி, ஊஹும் அவன் அசைஞ்சி கொடுக்கல..

“அருள் நிறைந்த மரியே! வாழ்க. எம்முள் ஆசீர்வதிக்கப் பட்டவர் நீரே. உமது திருவயிற்றினுள் கருவாக உருவாகிய ஏசுவும் ஆரீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சிஷ்ட மரியாயே….”— ஜெபம் தோத்திரங்களை மனனம் செய்யவே ஆரம்பிச்சிட்டான்.

அவர்களுடையது வறுமையான குடும்பம். அப்பா சாமிநாதனுக்கு கூட்டுறவு ஆபீஸ்ல குமாஸ்தா வேலை. குறைவான சம்பளம். தங்கள் சக்திக்கு மீறி புள்ளையை பெரிய படிப்பு படிக்க வைக்க அவர்கள் பட்ட ஒவ்வொரு நாள் கஷ்டங்களையும் பார்த்துப் பார்த்து வளர்ந்தவன் சுப்பிரமணியன். அப்பா உபரி வருமானத்துக்காக வேலையிலிருந்து வந்தப்புறம் ராத்திரியெல்லாம் தறியிலதான் இருப்பார். எந்நேரத்துக்கு படுக்கிறாருன்னே அவனுக்குத் தெரியாது.அம்மாவும் ராத்திரியில ஈடுக்கு ஈடு உட்கார்ந்து கூலிக்கு நூலு இழைக்க, தார் சுத்தன்னு வேலையில்தான் இருப்பாங்க. உணவும் எளிமையான உணவுதான். எப்படியும் ஒருவேளை, ரெண்டுவேளை கூழு இருக்கும். அதனால் பெத்தவங்க மேல பையனுக்கு பாசம் அதிகம். அவங்க கொஞ்சம் சுணங்கிட்டு இருந்தாங்கன்னா நாம இந்த அந்தஸ்துக்கு வந்திருக்க முடியாதுன்ற நெனப்பு அவனுக்கு எப்பவும் உண்டு. வறுமை பாசத்தை ஊட்டியிருந்தது. ஆனாலும் காதல் உசந்தது இல்லையா?. அந்த நர்ஸைத்தான் கட்டிக்குவேன்ற போராட்டம் மட்டும் ரெண்டு மூன்று மாசங்கள் ஆகியும் நீடித்துக் கொண்டிருந்தது. ஒரு ஸ்டேஜுக்கு மேல பெத்தவங்க இயலாமையால மவுனமாயிட்டாங்க. அன்றைக்கு விடியற்காலை அம்மா அவசரமா எதையோ அம்மியில வெச்சி அரைக்கிறத புள்ள பார்த்துட்டான். அப்பா சற்று தள்ளி உட்கார்ந்திருக்கிறார்.மெதுவாகப் போய் எட்டிப் பார்த்தால் ஒட்டந்தழை, விஷச்செடி. ஊரில் சில பேர் அதை அரைச்சிக் குடிச்சிட்டு செத்துப் போயிருக்காங்க,தெரியும். ரெண்டுபேரும் ரகசியமா சாக தயாராயிட்டாங்க என்று புரிந்தது. ஐய்ய்யோ! அலறிக் கொண்டு ஓடிப்போய் அவர்களைக் கட்டிக் கொண்டு அப்படி அழுதான். இவர்களும் அழுதழுது ஓய்ந்த பின்னால், கடைசியாக அன்றைக்குத்தான் அவன் தன் காதலை துறந்து விடுவதாக சத்தியம் பண்ணியது.. அவங்களுடைய இந்த கான்செப்ட் அரதப் பழசானதுதான். ஆனால் உணர்ச்சி மிகுந்தது. பையன் மடங்கிப் போயிட்டான்.

அப்புறம் ஒரு ஏழெட்டு மாசத்துக்கு ஆற போட்டுட்டாங்க. பையன் தேவதாஸ் கணக்கா தாடி வளர்த்து, சோகப் பாட்டுபாடி யாரு கிட்டேயும்பேசாம வெறிச்சிக் கெடந்து, சாமிநாதன் வெவரமான ஆளு காசு போனா போவுதுன்னு உள்ளடியா ஒரு வேலை செஞ்சாரு. கொஞ்சம் செலவு செய்ஞ்சி ரெண்டாம் பெருக்குத் தெரியாம ஆளைப் புடிச்சி, தன்னால நடந்த மாதிரி அந்தப் பொண்ணை எதுக்கு பொண் பாவம்னிட்டு அவ சொந்தஊரு பக்கமாவே மாத்தி வுட்டுட்டார். எரியறதை புடுங்கியாச்சு. பையன் கொஞ்சங் கொஞ்சமா தெளிஞ்சி தாடிய ஷேவ் பண்ணிக்கிட்டு தெளிவா டியுட்டிக்கு போய்வர ஆரம்பிச்சான். அடுத்த வருஷத்தில அவன் சம்மதத்தோட வரன் தேட ஆரம்பிச்சாங்க. இதான் வுட்டுப் புடிக்கிறதுன்றது. பொண்ணு தேட ஆரம்பிச்சப்புறந்தான் அது எவ்வளவு பெரிய சுளுக்கெடுக்கிற வேலைன்னு அந்த குடும்பத்துக்கு தெளிவா புரிய ஆரம்பிச்சிது. நம்ம பையனுக்கென்ன குறைச்சல்?. பொண்ணு குடுக்க நான் நீன்னு ஓடி வரமாட்டாங்க?, என்று ஒரு கெத்தோடதான் திருமண தகவல் மையத்தில் பதிவு பண்ணிட்டு காத்திருந்தாங்க.. ஆனால் சீக்கிரமே நாட்டு நிலைமை புரிஞ்சி போச்சி.. தேடறாங்க… தேடறாங்க… அன்னியிலயிருந்து ரெண்டு வருஷமா தேடிட்டுதான் இருக்காங்க. ஊஹும். நேத்து கடலுருக்குப் போயி பொண்ணு பார்த்துட்டு வந்தது இருவத்திஅஞ்சாவது பொண்ணு. ரெண்டு பேருமே ஓகே சொன்ன மாதிரி தான்.. ஆனாலும் செட் ஆவலியே. என்ன பண்ண?. எல்லா மேட்ரிமோனியல் சர்வீஸ்லேயும்தான் பதிவு பண்ணி வெச்சிருக்கு.

“ ஏன் படிப்பு கம்மியா?.”

“அடத்தூ! அவன் டாக்டர்பா, கவர்மெண்ட் டாக்டரு.”

“டாக்டரா? பின்ன என்ன?..அப்ப நிறம் அட்டக் கரியா?.”

“உத்த செவப்புக்குக் கீழ, மாநிறத்துக்கு மேல. முகம் களையா கார்த்திக் மாதிரி இருப்பான். நிறம் ஒரு மாத்து கம்மியா இருப்பான் ”

“சரி..சரி..வரதட்சணை திருப்தியா அமையல.அதான?.”

“மொதல்ல இருந்தே அவங்களுக்கு எந்த டிமாண்டுமில்ல. பொண்ணுவூட்டுக்காரங்க என்ன முடியுமோ செய்யட்டும்னு சொல்லிட்டாங்க.”

“அட இப்பிடியொரு ஆளுங்களாய்யா?. புரிஞ்சி போச்சி. பையனுக்கு வியாதி. சர்க்கரையா?, சொரியாஸிஸ்?, வெண்குஷ்டம்?.”

“டேய்..டேய்..! நிறுத்து. அவன் டாக்டர்டா. ஆரோக்கியமான ஆளு, எக்ஸைஸ் பாடி. பந்தயகுதிரை மாதிரி சும்மா கிண்னு இருப்பான். அவன் பார்த்த இருவத்திஅஞ்சில ரெண்டு அவனுக்குப் புடிக்கல, ரெண்டு பொண்ணுங்களுக்கு இவனைப் புடிக்கல. மிச்சமெல்லாம் ரெண்டு பேருக்குமே ஒருத்தரையொருத்தர் பார்த்து புடிச்சிப்போயி ஓகே சொல்லி, ரெண்டு பேருமே கனவுலயும், நெனப்புலேயும், டூயட் பாடினவங்கதான்.. என்ன பிரயோஜனம்? எதுவும் நடக்கலியே.

“அப்ப என்னதான்டா அவன் பிரச்சினை?.” “பாழாய்போன அவன் ஜாதகந்தான். நாகதோஷமாம். இதேமாதிரி தோஷமுள்ள பொண்ணைத்தான் கட்டணுமாம். இல்லேன்னா ரெண்டுல ஒண்ணு காலியாயிடுமாம். அப்படித்தான் தேடித் தேடி போய் பாக்கறாங்க. அதே தோஷமுள்ள பொண்ணு கிடைச்சாலும்,பொருந்தாம போறதுக்கு ஜோஸ்யன் ஆயிரம் காரணங்களை கைவசம் வெச்சிருக்கான்யா. அவங்க ஊர் ஊரா தேடித்தேடி வெறுத்து போயிட்டாங்க.. பையனுக்கு முப்பத்திமூணு வயசு முடிஞ்சி போச்சேன்னு கவலை. இன்னும் ரெண்டு வருஷம் போனால் டாக்டராயிருந்தாக் கூட கல்யாண மார்க்கெட்ல மதிப்பு சரிஞ்சிடும்.

அடுத்த வாரத்தில மீண்டும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மாதிரி, சாமிநாதன் மறுபடியும் படையெடுக்க ஆரம்பிச்சாரு. தினசரி காலையில் சாப்டுப்புட்டு கெளம்பினா ஒவ்வொரு மேட்ரிமோனியலா போய் பெண்வரன்களை தேடிப் பிடிச்சி போன்ல பேசறதுதான் அவருடைய முழு நேர வேலை. தேடிப்புட்டு மதியம் காதடைக்க வூட்டுல வந்து விழுவாரு. அன்னைக்கு ஒரு சிநேகிதர் மூலமா அரக்கோணத்தில ஒரு பொண்ணு வீட்டாருடைய போன் நெம்பரு கெடைச்சது. மறுநாள் காலங்காத்தாலயே போன் போட்டாரு. பகவானே! இதையாவது நல்லபடியா முடிச்சிக் குடு. எதிர்முனையில ஒரு பொம்பளை குரல். பொண்ணுக்கு அம்மாவோ என்னவோ. அங்கிருந்து ஒரு வார்த்தை கூட அனாவசியமா வரல. ஸ்ட்ரெயிட்டா மேட்டர். “ உங்க பையன் என்னா படிச்சிருக்காப்பல” “எம்பிபிஎஸ்.” “வெறும் எம்பிபிஎஸ் ஸா?. கவர்மெண்ட் காலேஜா, பிரைவேட் காலேஜா?.— அந்தம்மா வார்த்தைகளை உச்சரித்த விதத்திலேயே படிப்பறிவு இல்லாத புள்ளைய பெத்து வெச்சிருக்காப்பல தான் கேவலப்பட்டுப் போனதை உணர்ந்தார். “மெட்ராஸ் மெடிகல் காலேஜ்மா. மெரிட்ல படிச்சான்.” “நாங்க எம்.டி, எம்.எஸ். டாக்டரா பாக்கறோம். சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக இருந்தாலும் ஓகே.” “பின்ன எதுக்கு கவர்மெண்ட்டா, பிரைவேட்டான்னு கேட்டீங்க?. சரி அப்ப எம்.எஸ். , எம்.டி. ன்னா ஜாதகப் பொருத்தம் அப்படி இப்படீன்னு ஏறக்குறைய இருக்கலாமா?.” “ என்ன பேசறீங்க?. ஜாதகப் பொருத்தம் இல்லாம? தசபொருத்தமும் இருக்கணும்.ஆமாம்.” “போவட்டும், ஏம்மா! உங்க பொண்ணு என்ன படிச்சிருக்கு?.” “ சவிதா காலேஜ்ல பி.டி.எஸ். முடிச்சிட்டு அஞ்சி வருசமா தனியார் கிளினிக்ல வேலை செய்றா.”—-சாமிநாதனுக்கு ஏற்கனவே முன் கோபம் ஜாஸ்தி. முன்ன பின்ன யோசிக்காம கொட்டி தீர்த்துட்ற ஆளு. இருந்தும் அடக்கிக்கிட்டு நிதானிச்சி பேசினாரு.

“ ஆளு மினுக்குத்தான் ;ஆத்தில ஒண்ணுமில்ல, சேல மினுக்குத்தான்; செக்குரலுல ஒண்ணுமில்ல.”– ன்ற கதைதான். ஏம்மா! பிரைவேட் காலேஜ்ல பி.டி.எஸ். படிச்ச பொண்ணுக்கு எம்.டி, எம்.எஸ். மாப்பிள்ளைன்றது உனக்கே ஓவரா தெரியல?.” இதுக்கு மேல சூப்பர் ஸ்பெஷாலிட்டியா இருந்தாலும்ஓகே.யா?. ஓஹோ….ஆஹா சூப்பர். நீ எந்த உலகத்தில இருக்கிறேன்னு தெரியல. ஒரு எம்.எஸ். இன்னொரு எம்.எஸ்.ஸைத்தான் பார்க்கும் தெரியுமா? .பி.டி.எஸ்ஸைப் பார்க்காது. அப்பிடி பார்க்குதுன்னா உம்பொண்ணு ஹவுஸ் ஒய்ஃப்பா வூட்ல போயி கஞ்சி காச்சணும்னு அர்த்தம். தெரியுதா?. உம்பொண்ணு அஞ்சி வருஷமா வேலை செய்றான்னு வேற சொல்ற. எப்படியும் முப்பது வயச தாண்டியிருக்கும்.. வயசு போயிட்டா கல்யாண சந்தையில மதிப்பு காலி. நாமதான் கதி கலங்கி நிக்கணும். உன் நல்லதுக்குத்தான் சொல்றேன், உன் அந்தஸ்துக்கு ஏத்தமாதிரி பாரு, பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கும். போனை வெய்யி. என்னம்மா? ஹலோ!.” —- அந்தப் பக்கம் லைன் டெட். சே! அந்த பொம்பளை இவர் ஆரம்பிச்சப்பவே லைனை கட் பண்ணிட்டு போயிட்டிருக்கு, இவருதான் கவனிக்கல. ஹும்! வரதட்சணை அது இதுன்னு எந்த டிமாண்டையும் நாம வெக்கல. டாக்டருக்கு டாக்டரா இருந்தா நல்லாயிருக்குமேன்னு நெனைக்கிறோம். இது ஒண்ணும் பேராசை இல்லையே. அப்படியிருந்தும் ஒரு பொண்ணு கிடைக்கலியே. “ஏங்க! நாகதோஷந்தான நம்மள இந்த ஆட்டு ஆட்டிவெக்கிது?. பையன் ஜாதகத்தை எழுதி வெக்காம இருந்தாலே நல்லா இருந்திருக்கும். பேசாம ஜாதகமே இல்லைன்னு சொல்லிடுங்க.?.” “ச்சீ! இன்னொரு தடவை அப்படியெல்லாம் சொல்லாத. இன்னா பேச்சு இது?. ஆயிரம் காலத்து பயிர்மா, விளையாடக் கூடாது. அதனால பாதிப்பு நம்ம புள்ளைக்குத்தான். ஜாதகம் பொய்யில்லம்மா. அப்படியே நடக்கும் ஆமாம். தோபாரு ஆணாவட்டும்,பொண்ணாவட்டும் நாகதோஷம்னா சீக்கிரத்தில அமையாதுதான் ஆனா லேட்டானாலும் ரொம்ப நல்ல இடமா அமைஞ்சிடும்.”— மனுஷன் ரொம்ப நம்பிக்கையா சிரிச்சாரு.

அதுக்கப்புறம் அடுத்த ஏழு மாசத்தில குறைஞ்சது ஒரு அஞ்சாறு நாகதோஷ ஜாதகமாவது வந்திருக்கும் சளைக்காமல் போய் பார்த்து, பேசிப்பேசி, பஜ்ஜி, சொஜ்ஜி, தின்னு, காபி குடிச்சி பரஸ்பரம் மிகையாய் சிரிச்சி…., ஊஹும் கங்கான ப்ராப்தம் இன்னும் வரல போல, வெறுத்துப் போயிட்டாங்க. சாமிநாதனுக்கு அழாத குறைதான். எல்லா இடங்களிலும் பாழாய் போன ஜாதகம்தான் பிரச்சினையாயிருக்கு. என்னய்யா கதை சொல்ற, ரெண்டு ஜாதகங்களையும் வெச்சி பொருத்தம் பார்த்த பின்னாலதானே பொண்ணு பார்க்க போறீங்கன்னு கேக்கறீங்களா?. அதிலியும் உள்குத்து இருக்கே. புள்ளவூட்டு ஜோஸ்யன் பொருத்தமா இருக்குன்னு சொன்னான்னு போனா, பொண்ணு வூட்டு ஜோஸ்யன் ஏழாம் வூடு சரியில்லை, எட்டாம்வூடு சரியில்லை, குரு பார்வை இல்லைன்னு வில்லங்கம் சொல்றானே. குத்தம் சொல்றதுக்குன்னே ஜாதகக் கட்டத்தில பன்னிரெண்டு கட்டங்கள வெச்சிருக்காங்களே. ஒரு கட்டத்தில மறுபடியும் மனைவி ஆரம்பிச்சாள்.

“ஏங்க! இப்பவாவது நான் சொல்றதைக் கேளுங்க. ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு வெச்சிருக்கோம், அதுக்கு காலத்தோட நல்லதை நடத்த முடியலையே. கொழந்தை என்ன பாவம்க செஞ்சான்?. அவனோட பாதி வயசு இப்படியே வாழாம விருதாவா போச்சே. இப்பவே பையன் தலையில சொட்டை விழ ஆரம்பிச்சிடுச்சே. அவன் வயசில நமக்கு சுப்பிரமணியன் எட்டு வயசு குழந்தை. மூணாவது படிக்கிறான். பேசாம ஜாதகமே இல்லைன்னு சொல்லிடுங்க.”— சொல்லிவிட்டு அழுதாள்..அவருக்கும் அழுகை வந்திட்டுது. “ஜாதகம் இல்லேன்னு இனிமே சொல்ல முடியாதும்மா. ரெண்டு வருஷத்துக்கு மேல நாம பொண்ணு தேட்றோம் இல்லையா?. தமிழ்நாடு பூரா நம்ம பையன் ஜாதகம் பரவியிருக்குது. எல்லா மேட்ரிமோனியல் சர்வீஸ்களிலும். நம்ம பையன் ஜாதகம் போட்டோவோட இருக்குதே. இப்ப போயி ஜாதகம் இல்லைன்னா நம்பிக்கைக் குறைச்சலா போயிடுமேம்மா. அத்தோட அப்படியெல்லாம் பண்ணா நம்ம பையன் வாழ்க்கைதான கெட்டுப்போவும்?.” —அன்றைக்கெல்லாம் இது பற்றியே பேசிப்பேசி இருவரும் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் ராத்திரி வீட்டுக்கு சாமிநாதனின் பள்ளிக்கூட சிநேகிதர் புரபஸர் சூராண்டி, தன் பிள்ளை கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க வந்திருந்தார். .ராத்திரி சாப்பிட்டப்புறம் உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கையில அத்த தொட்டு இத்த தொட்டு கடைசியில சுப்பிரமணியின் கல்யாணத்தைப் பத்தியும், நாகதோஷத்தைப் பத்தியும் அதனால பொண்ணைத் தேடி நாய் மாதிரி அலைஞ்சி கிடக்கிறதைப் பத்தியும் பிரஸ்தாபம் வந்தது.

“டேய்! நீதான்னு இல்ல, இன்னைக்கு தோஷமுள்ளவங்க, இல்லாதவங்க எல்லாரும் இப்படித்தான் சுத்திக்கிட்டிருக்காங்க. என்ன பண்றது?. ஒவ்வொருத்தனும் தன் தகுதிக்கு மீறிய இடத்திலதான் வரன் தேட்றான். ஓவர் ஜாதகப் பைத்தியம், சாதிப் பைத்தியம், பணப் பைத்தியம். இதெல்லாந்தான் காரணம், அலைஞ்சி அலைஞ்சி கடைசியில எப்படியாவது முடிஞ்சா போதும்னு காடி பானையில விழறான். ஜோஸ்யத்த ரொம்ப நோண்டி நோண்டி பாக்காதடா சொம்மா தொட்டுக்க போதும். சும்மா கிடக்கிறத தூக்கி மடியில போட்டுக்கிணு குத்துது, குடையுதுன்னு புலம்பிக்கிட்டிருக்காதே..” “இன்னா புலம்பறது?. ஜோஸ்யத்த நீ நம்பல போல. அப்படீன்னா உனக்கு அதப் பத்தின தெளிவு இல்லன்னு அர்த்தம்..” “இன்னா பெரிய தெளிவ நீ கண்டுட்ட?.. என் மூணு பசங்களுக்கும் வெறும் பேரு பொருத்தம்தான் பார்த்தேன். வாழாமயா பூட்டாங்க?. ஜம் ஜம்னு வாழறாங்க. காதல் கல்யாணம்லாம் ஜாதகம் பார்த்தா நடக்குது?.” “நீ இன்னா சொன்னாலும், ஜோஸ்யம் பொய்யில்லைபா. அப்படியே பலிக்கும். எனக்கு பலிச்சிருக்குடா. என் பையன் பெரிய டாக்டரா வருவான்னு அவனுக்கு எட்டு வயசா இருக்கும்போதே வள்ளுவப் பண்டாரம் கணிச்சி சொன்னான்டா. அப்படியே நடந்துச்சா இல்லையா?. அவன் நாலு மாச கர்ப்பத்தில இருந்த போதே இது ஆம்பளை குழந்தைன்னு கையடிச்சிச் சொன்னான். நெஜமாச்சா இல்லையா?. ”

“இதுதான் ப்ராபபிலிட்டி, நிகழ்தகவு. பத்துக்கு ரெண்டுமூணு பலிக்கும். நீ கூட எதாவது ஒரு பத்து விஷயங்களை எடுத்துக்கிட்டு அடுத்த நாலைஞ்சி வருஷத்தில என்ன நடக்கும்னு முடிவுபண்ணி ஒரு பேப்பர்ல எழுதி வெச்சிடு. நாலைஞ்சி வருஷங்கள் கழிச்சி எடுத்துப் பாரு. நீ நினைச்சதில குறைஞ்சது அதே ரெண்டுமூணு விஷயங்கள் அப்படியே பலிச்சிருக்கும். இதான் ப்ராப்பிலிட்டி. நிதானமா யோசிச்சிப் பாரு. இதுவரைக்கும் ஜோஸ்யன் சொன்னதுல பலிச்ச ஒண்ணு ரெண்டை மட்டும் தான் நாம மனசில புடிச்சி வெச்சிருக்கோம். அவன் சொல்லி பலிக்காம போயிட்ட பலதை வசதியா மறந்துட்றோம். இதான் நிஜம். ஜாதகமே எழுதி வெக்காத கோடிகோடியான உழைக்கிற அடித்தட்டு ஜனங்க நல்லாத்தான இருக்காங்க?. ” —-எதைச் சொல்லியும் சாமிநாதனை மாத்த முடியல. “சாமிநாதா! ஊரப்பாக்கத்தில அன்பே சிவம் திருமண தகவல் மையம்னு ஒண்ணு இருக்கு ஒரு தடவை அங்க அவசியம் போய் பாரு தெளிவு கிடைக்கும். என் பசங்களுக்கெல்லாம் அங்கதான் வரன் அமைஞ்சது. ஒரு பெரியவர் அத ஒரு தொண்டு மாதிரிதான் நடத்தறார்.”

அதையும்தான் ஒரு தடவை பாத்திட்றதுன்னு ஒரு நாளு சாமிநாதனும் அவர் மனைவியும் கிளம்பிட்டாங்க. அந்த இடம் ஊரப்பாக்கத்தின் விரிவுப் பகுதியில் இருந்தது. சுற்றி காம்பவுண்டுடன் கூடிய பெரிய பங்களா. உள்ளே தெற்குப் பக்கம் சுமார் பதினஞ்சி அடி அகலத்துக்கு இருந்த நீளமான காலியிடத்தை மேலே ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டு திருமண தகவல் மையமாக ஆக்கியிருந்தார்கள். ராமலிங்க அடிகள் போல மேலே நாலு முழ வேஷ்டியை போர்த்திக் கொண்டு ஒரு வெண்தாடிப் பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவர்தான் இதை நடத்துபவராக இருக்க வேண்டும்.

பிள்ளை பற்றிய தகவலை அச்சிட்ட நமூனாவில் நிரப்பி, பையன் போட்டோவை ஒட்டி அவரிடம் கொடுத்தார்கள். அவர் அதை மேலோட்டமாக படித்து விட்டு

“எத்தனை வருசமா பொண்ணைத் தேட்றீங்க?.”

“மூணு வருஷமா..”

“பையனுக்கு நாகதோஷம்.” “ஆமாங்கய்யா.”

“ஜோதிடத்த ரொம்ப நம்புவீங்களோ?.”

“ஆமாங்கய்யா. தப்புங்களா?.” —-அவர் சிரித்தார்.

“அது அவங்கவங்க நம்பிக்கை. அதோஅங்க ரேக்குல நாலு பைண்ட் நோட்டு இருக்குது பாரு.எல்லாம் உங்களுது மாதிரியே தோஷமுள்ள ஜாதகங்க. அஞ்சி வருசமா வரன் தேட்றவங்க ஜாதகம்லாம் அதுல இருக்கு. போய் உக்காந்து நிதானமா படிச்சிட்டு வாங்க.”

“அது எதுக்குங்கய்யா?.”

“ஒவ்வொருத்தரும் எதிர்பார்ப்பு கட்டத்தில் மொதல்ல என்னென்ன எழுதியிருக்காங்க, கடைசியில இன்னைய தேதிக்கு என்ன லெவலுக்கு வந்து நிக்கிறாங்க?. படிச்சிட்டு வாங்க. ஆல்பத்தைப் பார்க்க ஆரம்பிக்கலாம்.”

“நீங்களே என்னன்னு சொல்லிடுங்க.”

“ சரி சொல்றேன்.உங்களுது மாதிரியே ஒரு ஜாதகம். பேரு தினகரன்.எம்.பி.பி.எஸ்., அரசு உத்தியோகம். அப்பாவும் டாக்டர். நாகதோஷம், அதில்லாம எட்டுல செவ்வாய். பரிகாரமோ, குரு பார்வையோ இல்லை. கிரகமாலிகா யோக ஜாதகம். நாலு வருசமா தேட்றாங்க. எதுவும் அமையல. இந்தா இதான் அந்த ஜாதகம்.” —சாமிநாதன் அந்த பைலை திறந்தார். பையன் சிகப்பா அழகா இருந்தான். “ஆரம்பத்தில எதிர்பார்ப்பு ன்ற கட்டத்தில என்ன எழுதியிருக்காங்கன்னு படியுங்க.”—

எதிர்பார்ப்பு– “தேதி—08-03-2012—– பெண்ணின் படிப்பு—எம்.பி.பி.எஸ். மட்டும், பி.ஈ. வரன்கள் அணுக வேண்டாம். அரசுப் பணியில் இருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்க. சாதி—- டேஷ்….முதலியாரு மட்டும். ஜாதகம்—– நாகதோஷமுள்ள வரன் மட்டும். தசபொருத்தங்களும் சரியாகப் பொருந்த வேண்டும். ஆகும் நட்சத்திரங்கள்—— மிருகசீரிஷம்,புனர்பூசம்,சுவாதி, பூரட்டாதி. ஆகாத நட்சத்திரங்கள்—- பரணி, ரோகினி, ஆயில்யம், கேட்டை. வரதட்சணை—- -நூறு சவரன், கார். பெண்—–சிகப்பாக, அடக்கமாய், குடும்பப்பாங்காய் இருக்க வேண்டும்.”

“ எதுவும் செட் ஆகாமபோயி எதிர்பார்ப்புகளை கொஞ்சம் தளர்த்திக்கலாமேன்னு நெனைச்சா, ஆறுமாசத்துக்கு ஒரு தடவை தளர்த்திக்கலாம்னு இங்க நடைமுறைய வெச்சிருக்கேன். ரெண்டு வருசம் கழிச்சி அவங்களே என்ன எழுதியிருக்காங்கன்னு பாரு.”

“10-09-2014— படிப்பு—-எம்.பி.பி.எஸ். அல்லது பி.ஈ., சாதி—-எல்லா முதலியார்கள், உட்பிரிவு அவசியமில்லை. ஜாதகம்—- நாகதோஷ ஜாதகம் மட்டும். அரசு உத்தியோகம்—— கட்டாயமில்லை. வரதட்சனை—– கட்டாயமில்லை.”— அவர்கள் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.

“ இப்படியே ஒண்ணு ஒண்ணா குறைச்சிக்கிட்டே வந்து கடைசியா லேட்டஸ்ட்டா அவங்க என்ன மாத்தியிருக்காங்கன்னு பாரு.” சாமிநாதன் புரட்டினார்.

“ 18-02-2016— படிப்பு—ஏதாவதொரு பட்டப் படிப்பு, ஜாதகம்—– தேவையில்லை. சாதி—சாதி தடையில்லை. வரதட்சணை—வேண்டாம் விருப்பமில்லை. குற்றம்.” —

அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெரியவரைப் பார்த்தார்கள். “கடைசியில போனவாரம் அந்தப் பையன் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டான்.”—–சொல்லிவிட்டு சிரித்தார்.

அப்படியே இருவரும் தீர்மானத்துடன் உட்கார்ந்து அந்த நாலுநோட்டுகளிலும் இருந்த அத்தனை வரன்களையும் மதியம் வரை செக் பண்ணி முடித்தார்கள். எல்லா சாதிகளிலும் ஆணு, பொண்ணு, எல்லாவற்றிலும் பெரும்பாலானவர்கள் நாலைஞ்சி வருஷம் தேடிட்டு கடைசியில கிட்டத்தட்ட ஒரேமாதிரி முடிவுக்கே வந்திருந்தார்கள். வெகுசிலர்தான் விடாப்பிடியாக எதையும் விடாமல் வரனுக்காக காத்துக் கிடக்கிறார்கள். பெரியவர் எழுந்து கிட்டே வந்தார்.

“இதிலிருந்து ஒரு விஷயம் நமக்குப் புரியுது?. பெத்தவங்களுக்கு சாதி, மதம், ஜாதகம், படிப்பு, சம்பாத்தியம், வரதட்சணை, சொந்தபந்தம் இவை எல்லாவற்றையும் விட எப்படியாவது தம் பிள்ளைகள் வாழந்தா போதும் என்கிற பரிதவிப்பு தெரியுது… அதுமட்டுமில்லை. ஐயோ! இப்ப வயசில் அஞ்சி வருஷம் கூடிபோச்சே, இனிமே நம்ம குழந்தைக்கு கல்யாணமே நடக்காம போயிடுமோ?ன்ற பயம்தான் அவர்களை கேஸ்ட் நோ பார் னு சொல்ல வைக்கிது.. ”— தம்பதிகள் ரெண்டுபேரும் இப்போது நெகிழ்ந்து நின்றார்கள். சாமிநாதனின் மனைவி

“ஏங்க! இவ்வளவு பேரும் சாதி, மதம், ஜாதகம், எதுவுமே வாணான்ற நிலைக்கு வந்துட்டாங்க பார்த்தீங்களா?. நாம நாலஞ்சி வருஷம் கழிச்சி இந்த முடிவுக்கு வர்றதுக்கு இன்னைக்கே வந்துடலாமுங்க. நமக்காக அந்தப் பொண்ணை மறந்துட்றேன்னு சத்தியம் பண்ணிட்டு, இன்னைக்கு வரைக்கும் அந்த கோட்டிலேயே நிக்கிறானே நம்ம புள்ள. ஆனா அதுங்க ரெண்டும் இன்னும் ஒண்ணையொண்ணு மறக்க முடியாம மனசில வெச்சிக்கிணு அழுதுக்குணு கிடக்குதுங்க. எனக்குத் தெரியுங்க. அதுங்க ஆசைய நாம முடிக்கணுங்க. அவன் ஆசைப்பட்ட அந்தப் பொண்ணையே அவனுக்கு கட்டி வெச்சிடலாமுங்க. கறிவேப்பிலை கொத்தாட்டம் ஒண்ணே ஒண்ணை வெச்சிருக்கோம்.”—-சொல்லிவிட்டு முந்தானையால் முகத்தைப் பொத்திக் கொண்டு தேம்பினாள். அவருந்தான், உணர்ச்சி வசப்பட்டு தன் மேல்துண்டால் முகத்தை மூடிக் கொண்டார். நடப்பதை பட்டும் படாமல் கவனித்துக் கொண்டிருந்த பெரியவர் கிட்டே வந்து.

“அதுக்காகத்தான் இந்த நோட்டுகளைப் பாக்கச் சொன்னேன். உலகம் எப்படி போவுதுன்னு தெரியணுமில்ல?. இந்த முதல் நோட்டுல இருக்கிற வரன்களில் பெரும்பாலும் கல்யாணமாயிடுச்சி. அதில முக்கால் பாகம் காதல் கல்யாணமா போச்சி. ரொம்ப லேட்டானால் இப்படித்தான் முடியும். மீதிக்கு சாதி, மத, ஜாதக மறுப்போடதான் கல்யாணம் நடந்திருக்கு. நல்லாத்தான் வாழறாங்க. நம்ம புள்ளைக்காக சாதி,மதம்,ஜாதகம், வரதட்சணை எல்லாத்தையும் நாம தள்ளிடலாமே ஒழிய அவைகளுக்காக நம்ம புள்ளையை வுட்ரக் கூடாது. நீங்க உங்க புள்ளையின் காதலை மறுத்ததற்கு இதுதான் பரிகாரம். எப்பவும் ஊரு என்னா மதிக்கும்?, சொந்த பந்தம் என்னா சொல்லும்?. இதுதான் நம்ம பயமே. ஆனா இப்ப சமூகமே மாறிக்கிட்டு வருது என்கிறப்போ நமக்கு இதில எந்த குற்ற உணர்வும் தேவையில்லை. நீங்களே முன் நின்னு அவங்க கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திப் பாருங்க, இந்த சமூகமும், சொந்த பந்தங்களும் கூட ரெண்டு நாளு பேசிட்டு அப்புறம் ஏத்துக்கும். சரி வந்து ஆல்பம் பாருங்க. வர்றீங்களா?.”—சாமிநாதன் அவர் கையைப் பிடித்துக் கொண்டார். கண்கள் ததும்பின

“இல்லீங்கய்யா.கிளம்பறோம். தெளிஞ்சிட்டோம்யா. என் பையனுக்காவ தவற வுட்டதை புடிக்கணும்.”—சொல்லும்போது உணர்ச்சியில் குரல் உதறியது. இருவரும் பெரியவரை கும்பிட்டு விட்டு கிளம்பினார்கள்.

– தினமணி கதிர் 22-05-2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *