பரிகாரம்

7
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 9, 2013
பார்வையிட்டோர்: 10,964 
 

மூன்று மணி நேரப் பயணத்துக்குப் பின் அந்த தனியார் பஸ் கோவிலருகே வந்து பெருமூச்சு விட்டு நின்றது. பயணக் களைப்பிலும், காலை சாப்பிட்ட டிபன் செரிக்காமல் பஸ் மலை ஏறும்போது எடுத்த வாந்தியிலும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பஸ்ஸின் குலுக்கலுக்கேற்ப்ப திடுக்கிட்டு எழுந்தார்கள்.

கணேசன், ரமா தம்பதியரும் எழுந்து குழந்தை வைசாலியைப் பார்த்தால் அவள் தூங்கி எழுந்து கண் விரித்துச் சிரித்தாள். மூன்றே வயதானாலும் இந்த சிரமமான பயணத்தை அவள் சமாளித்த விதம் அவர்களுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. ஆச்சு, அஞ்சு நாள் சுற்றுலாவில் இந்தக் கடைசி கோவிலைப் பார்த்தப்புறம் ராத்திரி ரயிலேற வேண்டியதுதான். ஆனால் ரமாவைப் பொருத்தமட்டில் இது தான் முக்கியக் கோவில்.

வைசாலி சின்னக் குழந்தையாய் இருந்ததிலுருந்து, தொட்டதுக்கெல்லாம் ஜலதோஷம், மூச்சுத் திணறல்.எவ்வளவோ டாக்டர்கள், எத்தனையோ டெஸ்டுகள்- ஓன்றும் பலனில்லை. மூன்று, நாலு நாள் குழந்தை அவஸ்த்தைப் பட்டுத்தான் தீரும். யாரோ சொன்னார்கள் இந்தக் கோவிலுக்குப் போனால் எல்லா வியாதிகளும் தீருமென்று. அதுதான் பிடிவாதமாக பிகு பண்ணிய கணேசனை லீவு போடச்சொல்லி இங்கு வந்து விட்டாள்.

பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் ஒரு கூட்டம் இவர்களைச் சூழ்ந்து கொண்டது – கைடுகள், வியாபாரிகள் மற்றும் பிச்சைக் காரர்கள். அதில் ஒரு சின்னப் பெண் பல நாள் எண்ணை பார்க்காத பரட்டைத் தலையுடன், கிழிந்த பாவாடையோடு நசுங்கிய அலுமினியத் தட்டை நீட்டியது. இந்த ஐந்து நாட்களில் எத்தனையோ பிச்சை போட்டாயிற்று. போ போ என்று விரட்டியும் விடாப்பிடியாக வந்த அந்தப் பெண், வைசாலி கையில் உள்ள பிஸ்கட் பொட்டலத்தைப் பார்த்தவுடன், இன்னும் கெஞ்ச ஆரம்பித்தது ” அம்மா- சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. பசிக்குது” என்று சொல்லி ஆர்வத்தில் வைசாலியின் கையைத்தொட்டது. அதுவரை அந்தப் பிச்சைக் குழந்தையின் அழுக்கான உருவத்தை அருவருப்புடன் பார்த்து வந்த கணேசன், அது வைசாலியைத் தொட்டதும், அருவருப்பு கோபமாக மாறியது. “தொட்டால் பிச்சுப்புடுவேன். போ அந்தண்டை” என்று அவளைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினான். தள்ளிய வேகத்தில் அந்தக் குழந்தை கீழே விழுந்து எழுந்து முழங்கை சிராய்ப்பிலுருந்து வந்த லேசான ரத்தக் கசிவைப் பார்த்து மேலும் பலமாக அழ ஆரம்பித்தது. ஓடி வந்த ரமா “ஏங்க இப்படி வெறி பிடிச்ச மாதிரி தள்ளரீங்க, ஏதாவது பெரிய அடிபட்டு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா” என்றாள். கணேசனோ ” ஆமாம், அந்த அழுக்குப் பிடிச்சவள் இவளைத்தொடரா. ஏதாவது இன்ஃபெக்ஷன் ஆச்சுன்னா” என்றான்.

ஒருவழியாக விடுவித்துக் கொண்டு கோவிலுக்குப் போனால் நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமி தரிசனத்துக்க்ப் பின் யாரோ சொன்னார்கள்- அங்குள்ள சாமியார் எல்லா வித உபாதைகளுக்கும் நிவர்த்தி சொல்வாரென்று.

அந்தச் சாமியார் முன் நமஸ்காரம் பண்ணி கண்ணில் நீர் ததும்ப தன் பெண் படும் அவஸ்த்தையை வைசாலி சொன்னவுடன், அவர் சற்றே கண்ணை மூடி சில வினாடிகளுக்கப்புறம் ” பித்ருக்கள் தோஷம் நிரைய இருக்கு. எப்போ குல தெய்வம் கோவிலுக்குப் போனேள்” என்று கேட்க , அவள் விழித்தாள். கணேசன் சமாளித்து ” ஆபீஸ் பிசியில் எங்க சாமி போறது” என்றான்.

சாமியார் லேசாகச் சிரித்து விட்டு “இருக்கட்டும். ஆனால் கண்டிப்பாகப் பரிகாரம் செய்ய வேண்டும். ஒரு பொம்மனாட்டியைக் கூப்பிட்டு, துணி வாங்கிக் கொடுத்து வயிராரச் சாப்பாடு போடுங்கள். இந்த அம்பாள் மனம் குளிர்ந்து நல்லது செய்வாள்” என்றார். முடிந்தால் இன்றே , இந்த ஸ்தலத்தில் ஏதாவது உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்” என்றார். ரமா கணவனை ஏறெடுத்து ஒரு பார்வை பார்த்தாள்.

ப்ரமை பிடித்த நிலையில் வெளியே வந்து ஏதாவது பெண் குழந்தை கண்ணில் படுமா என்று தேடினால் யாரையும் காணவில்லை. வந்த வழியே ஓடி வந்து அந்தப் பிச்சைக்காரக் குழந்தையைத் தேடினால், அவளையும் காணோம். களைத்துப் போய் அருகிலுள்ள ஹோட்டலில் சாப்பிட்டு வந்தவுடன் பார்த்தால் அந்தச் சாமியார், காலையில் தள்ளி விட்ட பிச்சைக்காரக் குழந்தைக்கு பிஸ்கட் கொடுத்துக் கொண்டிருந்தார்- அதன் முழங்கையில் ஒரு புது ப்ளாஸ்த்ரி தெரிந்தது. “எதுக்கு இப்படி குழந்தையை புண்படுத்தி பாபத்தைச் சம்பாதிக்கறங்களோ தெரியல்ல” என்று புலம்பிக் கொண்டிருந்தார். கணேசன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்- அந்தக் காட்சியாய்ப் பார்க்காமலிருப்பதற்க்காகவா அல்லது ரமாவின் அனல் பார்வையைத் தவிர்ப்பதற்க்கா என்று தெரியவில்லை.

தூரத்தில் உச்சி காலத்துக்காக அடித்த கோவில் மணி அம்பாள் புன்னகைப்பது போலிருந்தது.

Print Friendly, PDF & Email

7 thoughts on “பரிகாரம்

  1. . . . . . .Very happy to read your maiden attempt short story. Very good attempt. Keep on writing. Wish you all the best.

  2. கபாலி நான் எழுதியதில் சில விட்டு போய் உள்ளன .ஏன் என்று தெரியவில்லை .மிகவும் யதார்த்தமான கதை. அருமையாக உள்ளது . உங்கள் முதல் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் . உங்கள் பணி மேலும் தொடர கடவுள் துணை நிற்பார் .

  3. கபாலி நான் உங்கள் சிறுகதை படித்து ரசித்தேன்..அருமையான தத்துவம்.நாம் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடுவதைவிட இன்னுமொரு பாவத்தை செய்யாமலிருப்பதே ஒரு சிறந்த பரிகாரம் அல்லவா!

  4. கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள் . நன்றாக வந்திருக்கிறது.
    இன்றைய நடைமுறையை உள்ளது உள்ளபடி பிரதிபலிகிறது கதை

  5. Well written. Short and to the point. Typical of a short story, conforming to the set standards of a short story. Very good, maiden attempt. Expecting more such. V Rajendran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *