கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 19,847 
 

பாண்டியன் ஒரு ஸ்டாப்பிங் முன்பாகவே இறங்கிக் கொண்டான். இங்கு இறங்கினால்தான் பூ வாங்க முடியும்.. வாங்கிக்கொண்டு நடந்து விடுவான். என்ன பதினைந்து நிமிட நடை தானே!

ஈஸ்வரிக்கு ஜாதி பூ என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு முழம் வாங்கினான். ’பூ கூடவா உங்களால் தாராளமாக வாங்க முடியாது?’ ஈஸ்வரி தோள்பட்டையில் முகவாய்க்கட்டையை இடிப்பதும் ஒரு அழகுதான்.

’இன்னொரு முழம் கொடும்மா’

சில்லறையைத் துழாவுகையில் பாக்கெட்டில் துருத்திக் கொண்டு நின்ற இன்சுரன்ஸ் செக் விரல்களில் பட்டு சந்தோஷப்படுத்தியது.

ஐந்தாயிரத்து சொச்சத்திற்கான மொரமொரப்பான செலவைச் செக். மணி பேக் பாலிஸியின் ஐந்தாண்டு முடிவு தந்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.

மூன்றாவது வருடமாய் தள்ளிப்போகும் பழைய ஸ்கூட்டர் ரிப்பேருக்கு வழி பிறந்திருக்கிறது. பழைய வண்டிகளுக்கு ரீ-ரெஜிஸ்ட்ரேஷன் என்றெல்லாம் எவன் வைத்தது மத்திய வர்க்கத்தின் வருத்தம் தெரியாமல்!

இந்தப் பணம் மட்டும் வராது இருந்தால் அடுத்த மாதம் ஸ்கூட்டரை விற்றிருப்பான். பெயிண்ட் அடித்து சரி செய்தால்தானே ரீ-ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய முடியும். rஈ ரெஜிஸ்டிரேஷன் மட்டும் தனியே செய்ய முடியுமா என்ன?

கிழிந்த சீட் கவர்களை மறைத்தபடி பழைய ஜன்னல் திரைச்சீலையின் புதுவடிவம், ஈஸ்வரியின் கைவண்ணம். மக்கப் போகும் இரும்பின் இறுதி நிலையில் வண்டி தகரங்கள், வழுக்கை டயர்கள். நல்லவேளை…வழிபிறந்திருக்கிறது. மணிபேக் பாலிசிகள் வாழ்க.

பாண்டியன் வீட்டினுள் நுழைந்ததும் செஸ் விளையாடிக் கொண்டிருந்த செல்வியும் பிரியாவும் ஓடிவந்து அவன் காலைக் கட்டிக் கொண்டார்கள்.

“பூ..ஜாதிதானேப்பா? பார்க்காமலேயே நான் சொல்றேன் பார்….” சின்னவள் பிரியா கேட்க, “ஏய் புடுங்காத. அப்பா அம்மா கிட்ட தான் கொடுப்பார்.. அம்மா….” ஏழாவது படிக்கும் செல்வி அழைத்தாள்.

ஈஸ்வரி சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

”என்ன பெரீசா வாங்கியாந்துட்டார் உங்க அப்பா! நாலணா பூ வாங்கி வந்ததுக்கே இந்த குதி குதிக்கிறீங்க. இன்னும் தங்கம்கிங்கம் வாங்கி வந்துட்டாரோ, உங்களை கையில பிடிக்கவே முடியாது”

பாண்டியனுக்கு கலக்கமாக இருந்தது. என்ன இது மீண்டும் ஆரம்பிக்கிறாள்! கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரம் பற்றிய எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் ஈஸ்வரிக்கு பு’சுபுசு’ வென்று வந்துவிடுமே! ’பொலபொல’வென்று உலுப்பி விடுவாளே! என்ன செய்ய?

அவளுக்கு, இந்த கைக்கும் வாய்க்கும் பிழைக்கும் பிழைப்பு பிடிக்கவே இல்லை. அதுவும் சக்திக்கு மீறி அயனாவரத்தில் ஒரு பிளாட் வாங்கியதிலிருந்து, கடனும் வட்டியும் கழுத்தை இறுக்க, சகிப்புத்தன்மை சுத்தமாய் வறண்டு விட்டிருந்தது.

பாண்டியனுக்கு மாதக் கடைசியில் கொடுக்கப்படும் மரியாதை சந்தேகத்துக்கு இடமாகிவிடும். ஜாடை பேச்சு, குத்தல், எரிச்சல் எல்லாம் எக்காளமிடும். அவனுடைய பிரக்டிகல் பேச்சுக்கள் நகைப்புக்கு இடமாகி, அவமானத்தில் குன்றிவிடுவான்.

சே! பணம்தான் வாழ்க்கையா? இல்லாவிட்டால் மனைவி கூடவா மதிக்கமாட்டாள்! ஈஸ்வரியின் சகோதரிகள் நல்ல இடங்களில் வாழ்க்கைப்பட்டு, விடுமுறைகளில் சந்தித்து, அவர்களது பெருமைகள்ப் பேசி, வயிற்றெரிச்சல் கொட்டிக் கொள்வார்கள்.

ஆகவே, வீட்டில் பாண்டியன் பேச்சுக்கள் பொது விஷயங்களைப் பற்றி மட்டுமே இருக்கும். எத்தனை நாட்கள் இப்படி ஜாக்கிரதையாக ஓட்ட முடியும்? இன்று மீண்டும் துவங்கிவிட்டதே! என்ன காரணமாக இருக்கும்?

ஏழாம் நம்பர் வீட்டுக்காரர் துபாயிலிருந்து வந்து விட்டாராம். ஆறு பவுன்ல ஒரு சங்கிலி விஜயாவுக்கு வாங்கிவந்திருகாராம்.

மௌனமாய் லுங்கிக்கு மாறி, கை கால் கழுவினான். வெதுவெதுவென்றிருந்த தண்ணீர் முகத்தில் பட்டதும் எரிச்சலூட்டியது.

“மலேயா சேலை மூணாம்”

கைகளை துடைத்தபடி கேட்டான், “ தபால் ஏதாவது வந்ததா?” முகத்தை முடிந்தவரை இயல்பாக வைத்துக் கொண்டான்.

கவனமாக பேச்சை மாற்றி பிரச்னை இல்லாமல் வெளி வர வேண்டுமே! வேறு வழி? நாலு தங்க வளையல்கள், மாற்றுத் தாலிச் சங்கிலி, ஒரு ஜோடி தங்கத்தோடு.. எல்லாம் பாழாய்ப் போன பிளாட் வாங்க விற்றிருக்கிறானே!

தங்கம் விலை, ஏறுதல் இறங்குதல், செய்தியாகக் கூட அவன் வீட்டில் பேச இயலாது. பொசுக்கிவிடுவாள் பேச்சாலேயே.

”பேச்சை ஏன் மாத்துறீங்க? என்னமோ தினம் நாலு தபாலும் அஞ்சு மணி ஆர்டரும் வர்ற மாதிரி! நாமதான் வாங்க முடியாது. யாரும் வாங்கியாருவதை, காது கொடுத்து கேட்கக்கூடவா முடியாது!”

காப்பித் தம்ளர் ’லொட்’ டென்று மேசைமேல் வைக்கப்பட்டது. இப்படி, இதைக் குடிக்கவும்தான் வேண்டுமா ? குடிக்கத்தான் வேண்டும். மறுத்தால், இதற்கு பதில் அவள் இரவு பட்டினி கிடப்பாள். பேச்சு வளரும், ஆதியோடு அந்தமாய் பலவும் அலசப்படும். ஏன் வம்பு?

”துபாயில் விலை குறைச்சலாக இருக்கும்..” சாதாரணமாகத்தான் சொன்னான்.

“இங்கே விலை கூடன்னுதான் ஐயா வாங்காமல் விக்கிறீங்களாக்கும்”.

குழந்தைகள் நிலைமையை புரிந்து கொண்டு உள் அறைக்கு சென்றார்கள்.

“அனாவசியமா எதுக்கு இந்த பேச்செல்லாம்? அவர் வாங்கியாந்ததுக்கு நாம என்ன பண்ணும்கிற!” குரல் உயர்ந்தது. பாவம், அவனும் எவ்வளவு நாள்தான் பொறுத்துக்கொள்ள முடியும்?

இரவு இருவரும் பட்டினி. சாப்பிடக் கெஞ்சிய குழந்தைகளுக்கு அடி. அவையும் சரியாக சாப்பிடாமல் படுத்தன.

பாண்டியனுக்கு தூக்கம் வரவில்லை. முதுகைக் காட்டியபடி படுத்திருந்த ஈஸ்வரியும் தூங்கவில்லை என்று அவனுக்குத் தெரியும்.

அவனுக்கு பரவாயில்லை. அவள் உடல் உழைப்பு அதிகம். குழந்தைகள் முதல் அவர்கள் துணி வரை துவைத்து, வீட்டு வேலைகள் முழுவதும் செய்து களைத்திருப்பாள். ஏற்கனவே இரும்பு சத்து பற்றாக்குறை வேறு.

அவளையே பார்த்தான். எழுந்து அமர்ந்தான். அவள் காதுகளிலும் கைகளிலும் கவரிங் விஷயங்கள். நல்ல சேலைகளும் குறைவு. ’பாவம் படித்தவள். நல்ல இடத்தில் பிறந்தவள். போட்டுக் கொண்டு வந்தவள். நாலு பேரோடு புழங்குகையில் தோணாதா என்ன’. அவள் மீது இரக்கம் ஏற்பட்டது. ’பேச்சுத்தான் அப்படியே தவிர, அவன் மீதும் குழந்தைகள் மீதும் அன்பை உழைப்பால் பொழிந்திடுவாள். பாவம் சாப்பிடாமலேயே படுத்துவிட்டாளே!’

மறுநாள் காலை அவன் லீவு போட்டது ஈஸ்வரிக்கு தெரியாது. கிளம்பி சாந்தாராம் ஜிவல்லரிக்குப் போனான். அதன் முதலாளி தெரிந்தவர்தான். இன்சுரன்ஸ் செக் விவரம் சொன்னான். ஒப்புக்கொண்டார். ஒரு பவுனுக்கு தோடு வாங்கினான். ’இது ஆரம்பமாக இருக்கட்டும் இனி எப்படியாவது…’ என்று மனதுக்குள் தீர்மானங்கள்.

மதியம் அவனை எதிர்பார்க்க மாட்டாள். ஒரு பவுன்தானே என அலட்சியப்படுத்துவாளோ! என்ன இருந்தாலும் தங்கம் அல்லவா! அசல் தங்கம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு. அவனுக்கே கூட சந்தோஷமாக இருந்தது.

வீடு வந்தான். வீட்டினுள் பேச்சுக் குரல். அவள் அப்பா குரல்.

வீட்டுக்குள் நுழைந்தான். “என்ன மாப்பிள்ளை. எனக்கு பென்ஷன் அரியர்ஸ் வந்திருக்கு. மூன்று பெண்களுக்கும் சமமாப் பிரிச்சிட்டேன். ஈஸ்வரிக்கு இருபதாயிரம்”

ஈஸ்வரி ஹாலுக்கு வந்தாள்.

”நீங்க இன்னும் கிளம்பலையாப்பா? அதெல்லாம் அவரைக் கேட்க வேண்டாம். நீங்களே போய் வாங்கி வந்திருந்திருங்க”

’என்ன வாங்கப் போகிறார்கள்?’ பாக்கெட்டுக்குள் கையை விட்ட படி யோசித்தான். ’வேறு என்ன? பெரிய நகையாய் தான் இருக்கும். பரவாயில்லை…வாங்கிக் கொள்ளட்டும். ஆனால்?’ பாக்கெட்டுக்குள் இருந்த விரல்களில் தட்டுப்பட்டது தோடு டப்பா. ’அவர்கள் வாங்கப்போகும் நகை முன், இந்த ஒரு பவுன் தோடு பரிகசிக்கப் பட்டுவிடுமோ!’

கலக்கமும் குழப்பமும் மேலிட, மாமனாரை பார்த்தான்.

“மாப்ளே. அவ உங்களுக்கு ஒரு நல்ல ஸ்கூட்டராப் பார்த்து வாங்க சொல்லியிருக்கா ..எந்தக் கடைக்குப் போகலாம்?

(ஜூன் 1996 மங்கையர் மலர் மாத இதழில் வெளிவந்தது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *