அவர் இப்போது ஓர் அந்திமந்தாரை பூ. காலையில் பூக்க மறந்து விட்டார்.
அவருக்கு ஒரு சீப்பு கிடைத்தது. பாட்னாவில் வேலை பார்த்து வரும் மகன் ஒரு வாரத்திற்கு முன் ஊருக்கு வந்தபோது கொண்டு வந்த சீப்பு அது. எவரும் பயன்படுத்தாமல் புதிதாய் இருக்கிறது. பெட்டியை திறந்து மருமகள் சாமான்களை கலைத்துக் கொண்டிருந்த போது தட்டுத்தடுமாறி வீட்டினுள் போனவர் அந்த சீப்பை பார்த்ததும் எடுத்துக்கொண்டு திருட்டுப் பொருளைப் போல் ஒளித்துக் கொண்டு ஷெட்டுக்கு வந்து தன் படுக்கையின் அடியில் போர்வைக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்.
அவரின் அச்செயல் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு வியப்பாய் இருந்தது. மொட்டை மண்டைக்கு எதற்கு சீப்பு?
அதை பார்க்க, அவருக்கு வித்தியாசமாய் இருந்தது. அது என்ன நிறமென்று உறுதி செய்ய முடியாது. உண்ட உணவு செரிக்காமல் திங்கள் கிழமை அதிகாலை பிச்சைக்காரன் எடுத்த வாந்தியின் நிறம் போல எல்லா வண்ணங்களும் நிறைந்து, கலந்து, கரைந்து நீரோட்டம் போல ஓடி நின்றன. கச்சிதமாக ஒரு பக்கம் கைப்பிடி. இறுதியில் மேலும் கீழும் வளைந்து கூர்மையாக இல்லாமல் மழுங்கி முத்தமிடலாம் போன்ற முனைகள். சீவும் பகுதி இரு புறமும் பற்களில் ஒரு பக்கம் நெருக்கமாக மறு பக்கம் இடைவெளி விட்டு பருத்து கிராமங்களில் சொல்வதுபோல மண்வெட்டி பற்களாய் வீற்றிருந்தன. பற்களின் நுனிப்பகுதி தோலை கீறாதவாறு வழுவழுப்பாய் இருந்தன. சற்று கெட்டியான பிலாஸ்டிக் பேப்பரை கொண்டு உரையிட்டு மோல்டு செய்யப்பட்டிருந்தது.
தலை வழுக்கையான அந்த பெரியவரை வேடிக்கை மனிதரென்று சொல்லலாம். முடியெல்லாம் கொட்டி ஒரு முடிகூட தலையில் இல்லை.
தலைமுடி தான் அவருக்கு எப்போதுமே பிரச்சனை. பள்ளி நாட்களில் ஆசிரியர்கள் அவரை பரட்டை என்பார்கள். எண்ணை தடவி படிய வாரிக்கொண்டு வாடா என ஆசிரியர் அடித்து சொன்னாலும் கேட்க மாட்டார். அவர் படித்த காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கலாம். கருப்பும் பழுப்பும் கலந்த தடித்த கோரை முடி. சீவினாலும் படியாது. முடியின் மீது வெறுப்பு. ஏன் சீவ வேண்டும் என்ற ஒரு கோப மனப்பான்மை. நாளடைவில் அதை ஒரு ஸ்டைல் என்று கூட நினைத்துக் கொள்ளத் தொடங்கினார். நம்மிடம் என்ன இருக்கிறதோ என்ன நினைக்கிறோமோ அதுதான் சரி என்ற தர்க்க நியாயம் கற்பிக்கத் தொடங்குவது இயல்பாகவே எல்லோருக்கும் ஏற்படுவது போல. வேறு வழி. மேலும் மற்றவர் சொல்வதை நாம் ஏன் கேட்கவேண்டும் என்ற குட்டி மமதை. எல்லா ஒழுங்க நெறிகளையும் கூட இப்படி மாறி இருந்தால் என்ன, இது ஒழுங்கு இல்லையா என தனக்கு தானே கேள்வி கேட்பார். கேட்பவரிடம் வாதம் செய்வார். அதை வெட்டி வாதம் என்று பலர் விலகி விடுவார்கள். ஒரு நாள் ஆறாம் வகுப்பு கணக்கு வாத்தியார் ஸ்கேலால் தலையில் அடித்து இது என்டா தலை என்று நீதிபோதனை வகுப்பெடுப்பார். “பரட்ட தலை சார். படியாது. என்ன பண்ண சொல்றிங்க” என எகிறிவிட்டார். பாவம் அவர் பயந்தே போய்விட்டார். அந்த கணக்கு வாத்தியார் யார் யாரை கணக்கு பண்ணினார் என அவருக்கு அந்த வயதிலே துப்பறிந்து அதைச் சுட்டிக் காட்டி அவர் சொல்வதை நான் ஏன் கேட்கவேண்டும் என சக மாணவர்களிடம் வாதம் செய்வார்.
நன்றாகத்தான் படித்தார். சனியன் குடுப்பச் சூழல் மற்றும் இவரின் குரும்புத்தனம் ஏழாம் வகுப்பு காலாண்டு தேர்வு எழுதியதோடு பள்ளியின் பக்கம் போகவில்லை. ஒரே ஒரு முறை Xட்டுப்போட போனார். பின்னர் காசும் வாங்கவில்லை, Xட்டும் போடவில்லை. ஜனநாயகத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை.
பதினைந்து வயதாகும்போதே கொஞ்சமாய் இருந்த சொந்த வயலில் விதைத்தார், நாற்று நட்டார், நீர் பாய்ச்சினார். கதிர் அடித்தார். கட்டப்பொம்மன் வசனமெல்லாம் இழந்து போய் ஊமை துரையாகிக் கொண்டிருந்தார். தாயாரும் இறந்து போனார். மானாவாரி நிலத்திலும் சரியான மகசூல் இல்லாததால் கூலி வேலைக்குப் போனார். எந்த வேலை செய்தாலும் அதில் ஏதேனும் ஒன்றையாவது கற்றுக்கொள்வார்.
பிறகு ஒரு மெக்கானிக் ஷாப் வேலைக்கு போனார். சில நாட்களிலேயே இயந்திரத்தின் இயக்க சூட்சமங்களை கண்டறிந்து முப்பது வருஷமாய் தொழில் நடத்தும் முதலாளியின் திறமையை விட கூடுதலாக தேர்ச்சியை காண்பித்தார். இவர் திறமைக்கு நல்ல வேலை கிடைத்தால் வேறு எங்கேனும் ஓடி விடுவார் என முதலாளி கவலை அடைந்தார். ஆனால் பட்டறையை பெரிதாக்கி கூடுலாக லாபம் ஈட்டித்தந்தார். வேறெங்கும் போகவில்லை. கணிசமான ஊதியத்தை பெற்றார். அதில் ஓர் ஆத்ம திருப்தி. ஜாப் செட்டிஸ்பக்ஷன் அடைந்தார்.
பெற்றோர் இல்லாத குறையை முதலாளி தீர்த்து வைத்தார். கட்டிப்போட்டு ஒரு கல்யாணத்தை செய்து வைத்தார். அந்த சரஸ்வதி என்கிற மகாலெட்சுமி வந்த பிறகுதான். குடும்பம் முன்னுக்கு வர தொடங்கியது. முதலாளி தவறிய பிறகும் அவரது மகனோடு சேர்ந்து உழைத்து வந்தார். தன் மகன் படித்து பாட்னாவில் ஒரு பெரிய கம்பெனியில் நல்ல உத்யோகம் கிடைத்ததும் தன் வேலையை விட்டுவிட்டார். தள்ளாத வயதும் இயலாமையும் கூட காரணம்தான்.
மகன் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் யாரோடேனும் தொலைபேசியில் நுனி நாக்கால் ஆங்கிலத்தில் பேசும் போது பரட்டைக்கு ஆனந்தமாக இருக்கும். ஒரு வார்த்தை கூட புரியாது. உச்சரிப்பு மாறி “அமாரே ஹே கொமாராகே” என ஏதோ வார்த்தைகள் காதில் விழும்போது. இந்தியில் பேசுகிறான் என நினைத்து தனக்குள்ளே புளகாங்கிதம் கொள்வார்.
பெரிதாய் ஒன்றும் சாதிக்கவில்லை என்றாலும் பரட்டையின் காலம் உருண்டோடி வந்துவிட்டது. பத்து பதினைந்து அடிக்குமேல் நடக்க முடியாத கால் சோர்வு. உடல் உபாதை. வீட்டின் முன்புற ஷெட்டில் மரக்கட்டிலே இப்போது அவருக்கு உலகம். ஒருவார காலமாக ஒளித்து வைத்துள்ள சீப்பை அடிக்கடி எடுத்து பார்த்து மீள போர்வைக்குள் ஒளித்து வைத்துக்கொள்வார். இதை கவனித்து விட்ட பேரன் எப்போது சீப்பை எடுக்கிறார் என அடிக்கடி ஒளிந்திருந்து பார்த்து சிரிப்பை அடக்க முடியாது ஓடிப்போய் விஷயத்தை தாயிடம் சொல்வான்.
அன்று ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணி வாக்கில் மகனை கூப்பிட்டு “எப்பப்பா ஊருக்கு போறே?” என்றார்.
“நாளை காலையில போறேம்பா” என பதிலளித்தான் மகன்.
“ஒரு வாரம் தள்ளி போகலாமாப்பா “
“ஏப்பா ? “
“ஏதோ தோணிச்சி கேட்டேன். சாப்டியா?”
“சாப்டேம்ப்பா”
“அம்மா பாப்பா எல்லாரும் “
“தெரியலப்பா”
“சாப்டலன்னா உடனே சாப்டச் சொல்லுரியா”
“சரிப்பா”
“நீங்க சாப்டிங்களாப்பா”
“சாப்டுட்டேன்” என காலியாக இருந்த தட்டை காண்பித்தார்.
வீட்டினுள்ளே போய் தந்தையின் நடவடிக்கையில் காணும் மாற்றங்கள் குறித்து தாயிடமும் மனைவியிடமும் முணுமுணுத்தான்.
பதினோரு மணிவாக்கில் மருமகள் காப்பி கொண்டுபோய் மாமனாரை எழுப்ப அவர் எழும்ப வில்லை. சீப்பை பத்திரமாக பிடித்தவாறு சிரித்த முகத்தோடு போய் சேர்ந்துவிட்டார்.
எல்லோரும் முன்னதாகவே காலை உணவை எடுத்திருந்தனர்.
மாலைகள், மலர் வளையங்கள் வாங்கி வந்து ஊரார்கள் பரட்டையை கௌரவித்ததிலிருந்து அவர் மீது மக்கள் வைத்திருந்த மரியாதை தென்பட்டது. அவர் நல்லவர். வயது ஏற ஏற பண்புள்ளவராக தன்னை செதுக்கிக் கொண்டார். யாரையும் ‘வா, போ’ என்றுகூட பேச மாட்டார். சிறிய பையனாக இருந்தால் கூட வாடா தம்பி என்பார். எல்லோரது வீட்டு விசேஷத்திலும் முதல் ஆளாய் நிற்பார். இழுத்துப் போட்டு உழைத்து விசேஷ வீட்டாருக்கு உதவி செய்வார்.
இறுதி ஊர்வலத்தில் சீப்பும் புஷ்ப பல்லக்கில் பயணித்தது. அவிழ்த்து எறிய அரைஞாண் கயிறை தவிர வேறேதும் இல்லை. சிதைக்கு தீ மூட்டும் முன், சீப்பை மட்டும் அவரிடமிருந்து பிரிக்க வேண்டாம் என்றார் மகன்.
பரட்டையின் கட்டையோடு சீப்பின் ஆன்மாவும் சேர்ந்து தகனமானது.