ஜனவரி பதிமூன்றாம் தேதி, வெள்ளிக்கிழமை.
காலை ஏழுமணி. குளிர் காலம். பெங்களூர் நகரம் மெல்ல எழுந்து சோம்பல் முறித்தது.
பெங்களூரின் வடக்கே இருக்கிறது காகலிபுரா. நல்ல கல்வி கற்று ஒரு சிறந்த பணக்கார குடும்பமாக அங்கு வசிக்கும் ராஜேஷ்-ஸ்ருதி தம்பதியினர் அன்று காலை எப்போதும்போல் சுறுசுறுப்பாக எழுந்தனர்.
ஸ்ருதி தங்களின் இரண்டு பெண் குழந்தைகளையும் “குட் மார்னிங்” சொல்லி எழுப்பிவிட்டு அவர்களை பள்ளிக்குச் செல்ல தயார் படுத்திக் கொண்டிருந்தாள். குழந்தைகளுக்கு முறையே பன்னிரண்டு, ஆறு வயது. படிப்பில் இருவரும் கெட்டிக்காரர்கள்.
ஸ்ருதியின் எழுபத்தியெட்டு வயது மாமனார் எழுந்து வாஷ்பேஸின் முன்பு நின்று பல் துலக்கிக்கொண்டிருந்தார். குழந்தைகள் யூனிபார்ம் அணிந்து எட்டு மணிக்கு தயாரானதும், ராஜேஷ் அவர்களை தன் பென்ஸ் காரில் ஏற்றி பள்ளிக்கு கூட்டிச் சென்றான்.
ஸ்ருதி குழந்தைகளுக்கு சிரித்துக்கொண்டே டாட்டா காண்பித்தாள். பாவம், அதுதான் அவள் அவர்களுக்கு காட்டும் கடைசி டாட்டா என்பதும், அடுத்த சில மணி நேரங்களில் அந்த அழகான குடும்பமே சின்னாபின்னமாக சிதறிப்போகும் என்பதும் அப்போது அவளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
ஸ்ருதிக்கு வயது முப்பத்தி இரண்டு. ராஜேஷுக்கு 33. அவள் மாமனார் கோபால கிருஷ்ணாவுக்கு 78. அவர் காகலிபுராவில் மிகப் பெரிய பில்டிங் டிவலப்பர். ராஜேஷ் அப்பாவுக்கு உதவியாக இருந்தான். ஸ்ருதி அருகே இருக்கும் கோலஹல்லி கிராமத்தின் பஞ்சாயத்து டிவலப்மென்ட் ஆபீசர்.
சந்தோஷமான அந்த சிறிய குடும்பத்தில் முதன் முதலில் சலனம் ஏற்படுத்தியது ஸ்ருதிதான். கடந்த வருடம் ஜூலை மாதம் அவர்கள் பெங்களூரில் ஒரு குடும்ப விழாவுக்கு சென்றபோது அங்கு மற்றொரு பெரிய பணக்கார குடும்பத்துடன் பழக நேர்ந்தது. ஒரு விதத்தில் அவர்களும் இவர்களுக்கு தூரத்து உறவினர்கள் என்பது தெரிந்ததும் நெருக்கம் சற்று அதிகமானது.
அந்தக் குடும்பத்தில் இருந்த 34 வயது அமீத்துக்கும் ஸ்ருதிக்கும் நட்பு ஏற்பட்டது. அமீத் ஒரு வளர்ந்து வரும் லாயர். துடிப்பானவன். திருமணமாகி மூன்று வயதில் ஒரு பையன் இருக்கிறான். மனைவி சென்னபட்னாவில் ஒரு பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள். அவனுடைய அப்பாவும் பெங்களூரில் மிகப் பிரபலமான லாயர்.
வீட்டில் மூன்று கார்கள் இருந்தாலும், ஸ்ருதிக்கு மோட்டார்பைக் ஓட்டத் தெரியும். அதில் ஆரோகணித்து வேகமாகச் செல்வதென்றால் அவளுக்கு கொள்ளை ஆசை. அமீத் மோட்டர்பைக் வேகமாக ஓட்டிச் செல்வதில் நிபுணன். சில வேகப் பந்தயங்களில் பரிசும் வாங்கினவன்.
ஸ்ருதிக்கும் அமீத்துக்கும் வேகமாக பைக் ஓட்டுவதில் ஆரம்பித்து, மற்ற பல விஷயங்களிலும் ஆர்வங்கள் ஒத்துப்போக, இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். ராஜேஷிடம் வற்புறுத்தி ஸ்ருதி தனக்கென பதினைந்து லட்சத்தில் ஒரு டுகாட்டி பைக் இத்தாலியிலிருந்து இம்போர்ட் செய்து கொண்டாள். அமீத் டுகாட்டியில் சொக்கிப்போனான். ஸ்ருதி அமீத்துடன் அடிக்கடி நைஸ் எனப்படும் ரிங் ரோட்டில் மிக வேகமாக டுகாட்டியில் பயணித்து வீரம் காட்டினாள். முகநூலிலும், வாட்ஸ் ஆப்பிலும் அடிக்கடி இருவரும் தகவல் பரிமாறிக் கொண்டார்கள். இந்த நெருக்கம் ஸ்ருதி குடும்பத்தில் எவருக்கும் – குறிப்பாக ராஜேஷுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
ராஜேஷ் மனதை, ஸ்ருதியுடன் அமீத்தின் நட்பு அரித்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு நண்பர், ஸ்ருதியை அமீத்துடன் மைசூரில் பார்த்ததாக ராஜேஷிடம் சொன்னபோது, அன்று இரவு அவன் மிகுந்த கோபத்துடன் அதுபற்றி ஸ்ருதியிடம் சண்டையிட்டான். அவள் டுகாட்டியில் அமீத்துடன் மைசூர் சென்றதாக சொன்னாள். தான் அமீத்துக்கு ஒரு சிறந்த நண்பர் என்றும், தன்னை எவரும் சந்தேகப்பட வேண்டாம் என்றும் குரலை உயர்த்தினாள். அந்தச் சண்டையில் குழந்தைகள் தூக்கத்திலிருந்து முழித்துக் கொண்டு கலவரமடைந்தன. அதன்பிறகு ராஜேஷின் அப்பா தலையிட்டு அவர்களை அமைதிப் படுத்தினார்.
போன டிசம்பரில் ஸ்ருதி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது அவளுக்கு வாட்ஸ் ஆப்பில், “சின்னா, நீ என்ன பண்ணிகிட்டு இருக்க?” என்று ஒரு மெசேஜ் வந்தது.. அதை மொபைல் ஸ்க்ரீனில் ராஜேஷ் படிக்க நேர்ந்தது. எனினும் மொபைல் லாக் செய்யப் பட்டிருந்ததால், மேற்கொண்டு எதுவும் படிக்க முடியவில்லை. ஆனால் அந்த நம்பரை குறித்து வைத்துக்கொண்டு, மெசேஜ் அனுப்பியது அமீத் என்பதை பிறகு தெரிந்து கொண்டான்.
ஸ்ருதி வீட்டில் இல்லாத சமயம் தன் அப்பாவிடம் “தான் அவள் நடத்தையில் சந்தேகம் கொள்வதாக” ஆதரங்களுடன் எடுத்துக் கூறினான். இதற்கு ஒருமுடிவு கட்டவேண்டும் என்று நினைத்த அவர், ஸ்ருதியின் பெற்றோர்களை கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்தினார்.
ராஜேஷ், ஸ்ருதியின் நிழலான நடவடிக்கைகளை அவர்களிடம் விளக்கி, தான் அவளை விவாகரத்து செய்ய தயார் என்றான். நிலமையின் தீவிரத்தை உணர்ந்த ஸ்ருதி, பேச்சு வார்த்தையின் முடிவில், இனிமேல் அமீத்துடன் எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டேன் என்று பூஜையறையில் அனைவரின் முன்பும் சத்தியம் செய்தாள். அதைத் தொடர்ந்து அவளுடைய முகநூல் நட்பிலிருந்து அமீத்தின் பெயரை ராஜேஷ் டெலிட் செய்தான். அவளின் வாட்ஸ் ஆப்புக்குச் சென்று அவனை ரிமூவ் செய்தான். தன் குழந்தைகளுக்காக இனி அமீத்தின் நட்பை விட்டுவிடுவதாக அவள் செய்த சத்தியத்தை அனைவரும் நம்பினர்.
ஆனாலும் அவள் சத்தியத்தை மீறி அமீத்தை அவ்வப்போது சந்தித்துக் கொண்டிருப்பதை ராஜேஷ் உணர்ந்தான். அப்பாவிடம் கலந்து ஆலோசித்து, ஸ்ருதியின் வெள்ளைநிற மாருதி காரில் அவளுக்குத் தெரியாமல் ஒன்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு ஜிபிஎஸ் கருவியை வாங்கிப் பொருத்தினான். அந்தக் கருவிமூலம் அவள் எங்கெங்கு செல்கிறாள் என்பதை துல்லியமாக நோட்டமிட்டான்.
ஜனவரி பதிமூன்றாம் தேதி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ஸ்ருதி தன் லேப்டாப்பில் அமர்ந்தாள். பிறகு மதிய உணவு சாப்பிட்டாள். சரியாக ஒன்றரை மணிக்கு தான் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்து செல்வதாக ராஜேஷிடமும், மாமனாரிடமும் சொல்லிவிட்டு தன் மாருதி காரில் தனியாக கிளம்பிச் சென்றாள்.
ஆனால் அவளுடைய கார் அலுவலகம் செல்லாமல், வேறு திசையில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்த ராஜேஷ் பதட்டத்துடன் தன் அப்பாவிடம் போய் சொன்னான். அவர் வெகுண்டார். லைசென்ஸ் உள்ள தன்னுடைய ரிவால்வாரை பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டார். வீட்டில் தயாராக நின்றிருந்த இன்னோவாவில் ராஜேஷ் முன்னாலும், அவன் தந்தை பின் சீட்டிலும் ஏறி அமர்ந்தனர். டிரைவர் குமார் ஓட்ட, ஜிபிஎஸ் கருவி காட்டிய திசையில் விரைந்தனர்.
சரியாக இரண்டு மணிக்கு மதனயாக்கனஹல்லி ஜங்ஷனில் தன் வெள்ளைநிற மாருதி காரை நிறுத்தி, தனக்காக காத்திருந்த அமீத்தை பிக்கப் செய்து கொண்டு ஹெசர்கட்டா மெயின்ரோடுக்கு காரை செலுத்தினாள் ஸ்ருதி.
இதை சற்று தூரத்திலிருந்து பார்த்த ராஜேஷுக்கு ரத்தம் கொதித்தது. தன் டிரைவர் குமாரிடம், சிறிது இடைவெளியில் அவர்களை தொடரச் சொன்னான். பின்னால் திரும்பி தன் அப்பாவிடமிருந்து ரிவால்வாரை வாங்கி தன்னிடம் வைத்துகொண்டான்.
ஸ்ருதி தன் காரை ஆச்சார்யா கல்லூரிக்கு அருகில், ஹெசர்கட்டா மெயின் ரோடில் ஒரு நிழலான பகுதியில் நிறுத்தினாள்.
அவள் காரை நிறுத்திய இரண்டாவது நிமிடத்தில் இன்னோவா கார் அவர்களுக்கு முன் வந்து சீறி நின்றது. முன் சீட்டிலிருந்து கடுங்கோபத்துடன் துள்ளி இறங்கிய ராஜேஷ், மாருதியை நோக்கிச் சென்று, தன் புறங்கையால் காரின் முன்பக்க கதவைத் ஓங்கித் தட்டி, அமீத்தை கீழே இறங்கச் சொன்னான்.
இதை கிஞ்சித்தும் எதிர்பார்க்காத அமீத்தும், ஸ்ருதியும் அதிர்ந்தனர். காரின் கதவைத் திறக்கவில்லை. ஸ்ருதியின் கையில் பாதி கடிக்கப்பட்ட பைவ் ஸ்டார் சாக்கலேட் இருந்தது. ராஜேஷின் கோபத்தை பார்த்து மிரண்ட அவன் தந்தை, பின்னாலேயே ஓடி வந்து அவனைத் தடுத்தார்.
ஆனால் அவரையும் மீறி, தன்னிடமிருந்த ரிவால்வாரை எடுத்து அமீத்தை நோக்கி இரண்டுமுறை ராஜேஷ் சுட்டான். காரின் கண்ணாடிகளை துளைத்துக்கொண்டு இரண்டு குண்டுகள் அமீத்தின் மார்பிலும், கழுத்திலும் சீறிப் பாய்ந்தன. அமீத் ரத்த வெள்ளத்தில் மிதந்தான்.
இருவரும் திரும்பி ஓடிச் சென்று இன்னோவாவில் ஏறிக்கொண்டனர்.
துடித்துப்போன ஸ்ருதி உடனடியாக காரை ஓட்டிச்சென்று அருகே இருந்த சப்தகிரி ஹாஸ்பிடலில் அமீத்தை எமர்ஜென்சியில் சேர்த்தாள். டூட்டியில் இருந்த அனைத்து டாக்டர்களும் அமீத்தை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. மூன்று முப்பது மணிக்கு அவர்கள் ஸ்ருதியிடம் அமீத் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
உடனே ஸ்ருதி அவர்களுக்குத் தெரியாமல் அங்கிருந்து நழுவி, ஹாஸ்பிடல் எதிரே இருந்த ராஜ் விஸ்டா எனப்படும் பெரிய ஹோட்டலுக்குச் சென்றாள். ஹாஸ்பிடலில் தன் உறவினர் ஒருவர் அட்மிட் செய்யப் பட்டுள்ளதாக பொய் சொல்லி, இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயில் தன் கிரிடிட் கார்டை தேய்த்து ஒரு டபுள் ரூம் எடுத்தாள். ஹோட்டலின் மூன்றாவது அடுக்கில் ரூம் நம்பர் 301 ல் அவளுக்கு அறை
ஒதுக்கப்பட்டது.
ரூமில் கதவைச் சாத்திக்கொண்டு, தன் தம்பியின் மொபைலுக்கு போன் பண்ணி பதட்டத்துடன் திட்டு திட்டாக நடந்ததைச் சொல்லி அழுதாள். பாதியில் அவள் பேசுவது நின்றதும், அவள் தம்பிக்கு ஏதோ ஒரு விபரீதம் நடந்து விட்டது புரிய, உடனே தன் நண்பர்களுக்கு போன் செய்து ஹோட்டலுக்கு வரச்சொல்லி தானும் அங்கு விரைந்தான்.
ரூம் நம்பர் 301 முன்பு அனைவரும் கூடி கதவைத் தட்டியபோது ஸ்ருதியிடமிருந்து பதில் இல்லை. அவசரமாக டூப்ளிகேட் சாவிபோட்டு கதவைத்திறந்து உள்ளே சென்றனர்.
அங்கு ஸ்ருதி கண்களும், நாக்கும் வெளியே தள்ளப்பட்டு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள்.
ராஜேஷும், கோபாலகிருஷ்ணாவும் ஏற்கனவே போலீசில் சரணடைந்து விட்டனர். .
தற்போது ஸ்ருதியின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் அம்மா கிடையாது. அப்பாவும், தாத்தாவும் ஜெயிலில்.
ஒரு மூன்று வயது ஆண் குழந்தைக்கு அப்பா கிடையாது. ஒரு பாவமும் அறியாத அமீத்தின் மனைவி விதவையாகி விட்டாள்.
தவறான நடத்தையினால் இரண்டு குடும்பங்கள் சின்னாபின்னமாகி அசிங்கப் பட்டுவிட்டன.
இது ஜனவரி 13 அன்று பெங்களூரில் நடந்த உண்மைக் கதை. கதையில் வரும் அனைவரும் படித்தவர்கள், நாகரீகமானவர்கள், செல்வந்தர்கள்.
இருந்தும் ஏன் இப்படி? இதுமாதிரி சமீப காலங்களில் நாம் நிறைய பார்க்கிறோம்.
ஒரு காலத்தில் சிகரெட் புகைப்பது, குடிப்பது போன்றவை மிக அசிங்கமான கெட்ட பழக்கங்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் தற்போது அவைகளை ஒரு நாகரீகமான செயலாக ஏற்றுக்கொண்டு விட்டோம். பெங்களூர் பப்களில் ஏராளமாக பெண்கள்தான் ஜாஸ்தி.
தற்போது பெண்களை ஈ மெயில், மொபைல், வாட்ஸ் ஆப், பேஸ் புக், பேஸ் டைம் போன்றவைகளின் மூலம் எளிதில் அணுக முடிகிறது. வீட்டுக்குள் அடைந்து கிடந்த பெண்கள் சுதந்திரமாக வெளியே வர முடிகிறது.
கணவர்கள், அடுத்தவனின் மனைவியுடன் நட்பு பாராட்ட முடிகிறது. மனைவிகள், அடுத்தவளின் கணவனுடன் ஒட்டிக்கொள்ள முடிகிறது. இரண்டுபேரின் புரிதலில் எதுவுமே தப்பில்லை என்கிற சித்தாந்தம் நம்மிடையே அதிகம் வளர்ந்துவிட்டது.
ஒழுக்கமான நல்ல கணவர்களுக்கும், ஒழுக்கமான நல்ல மனைவிகளுக்கும் இவர்களின் தடம் புரண்ட அவலட்சணங்கள் தெரிந்திருந்தாலும், அதை சண்டைபோட்டு பெரிது பண்ணாமல் அமைதியாக நாகரீகம் காக்கின்றார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.
இன்னும் ஐந்து வருடங்களில் இதுவும் நம்மால் ஒரு அங்கீகரிக்கப்பட்ட செயலாகி விடுமோ என்பதுதான் தற்போது நம்மை பயமுறுத்தும் உண்மைகள்.